
கோபத்தின் மறுமுனை
எனக்குள் வேறொருவனும் இருப்பதை நம்புகிறேன்
நான் அழும்போது
கண்ணீரிலிருக்கும் உப்பு
வாய் வரைக்கும் இறங்காமல்
அவன்தான் தடுத்து நிறுத்துகிறான்
நான் மகிழ்ந்திருக்கும்போது
உடன் சேர்ந்து
அதைக் கொண்டாடுவதும் அவன்தான்
கோபப்படும்போது
மனதை அமைதிப்படுத்துபவனும்
தவறிழைக்கும்போது
திருத்த முயற்சிப்பவனும் அவன்தான்
எனக்குள் ஒருவன் இல்லையெனில்
கண்ணீரின் சுவைக்கு
என் நாக்கு அடிமையாகியிருக்கும்
என் மகிழ்ச்சி
வெறும் முகச்சுருக்கமாக நின்று போயிருக்கும்
கோபத்தின் மறுமுனைக்கு
நான் பலியாகியிருப்பேன்
குற்றத்தின் சந்தையில்
விலை போயிருப்பேன்
எனக்குள் இருக்கும் ஒருவன்
என்னைக் கைவிடுவதில்லை.
***
ரசவாத சொல்
என்னிடம் ஒரு சொல் இருக்கிறது
ஒருமுறை அச்சொல்லைக் கொண்டு
திருடன் ஒருவனை
காப்பாற்றினேன்
இன்னொரு நாள்
நல்லவன் ஒருவனை
ஆபத்தில் சிக்க வைத்தேன்
அச்சொல் கேட்ட கோபத்தில்
சாமியார் ஒருவன்
விபூதித் தட்டை
என் மீது வீசினான்
அந்தச் சொல்லின் விளைவாக தொடர்ந்து ஏதேனும்
நடந்த வண்ணமே இருக்கிறது
ஒருநாள்
ஒரு பைத்தியக்காரன்
என்னைப் பார்த்து
காறித்துப்பிவிட்டுப் போனான்
ஒரு போலீஸ்காரன்
தன் துப்பாக்கியிலிருக்கும்
ஆறு குண்டுகளையும்
என் உடம்பில் இறக்கி விடுவேன் என
மிரட்டினான்
இன்னும் இதுபோல் சொல்வதற்குண்டு
அந்தச் சொல்லின் பயனாக
தீதும் நன்றும் வளர்கின்றன
போதுமென்று தோன்றுகிறது
யாரேனும் கைமாற்றிக்கொள்ளுங்களேன்.
***
மாயவலை
ஒரு விபரீத எண்ணம் தோன்றியது
உயர்ந்த மலையொன்றை
கீழே,
அடிவாரத்தில் நின்று
பகல் முழுக்க
பார்த்துக்கொண்டேயிருப்பது;
பிறகு,
அந்தி சாய்ந்ததும்
உச்சி வரை ஏறுவது;
பிறகு,
நடுச்சாமத்தில்
உச்சியிலிருந்து இறங்குவது;
விடிய விடிய
தொட்டுத் தடவி தழுவியிருந்துவிட்டு
விடிவதற்கு சற்று முன்
மலையை
ஒரு சிறிய கல்லாக்கி
உள்ளங்கைக்குள் மூடிக்கொண்டு
போய்விடுவது;
தொலைதூரம் போய் நின்று
மலையைத் தொலைத்துவிட்டு
நிற்கும் ஊரைப் பார்த்து
வாய்விட்டு பகடி செய்வது;
இந்த விபரீத எண்ணம்
ஏன் வருகிறதென்று சொல்வார் உளர் எனில்
அவர் பொருட்டு பெய்யும் மழை.
***
அற்புதம்
கோயில் பிரகாரத்தில்
நடந்து கொண்டிருந்தேன்
யாரோ
அற்புதம் நிகழ்வதாய்
சொல்லிவிட்டுப் போய்விட
அந்த
அற்புதத்தைக் காண
எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தார்கள்
கோயில் சுவரைத்
தடவிக்கொண்டே நகர்ந்த நான்
அந்தக் கல்சுவரில் கண்ட
சிறு செடியைத்
தொட்டு வணங்கிக் கொண்டேன்
அற்புதம் அற்புதம் என்று
என் வாய் முனுமுனுத்தது.
***
தரிசனம்
எங்கோ போய்க் கொண்டிருந்தேன்
எங்கென்றே தெரியாத பயணம்
இடைமறித்து
நலம் விசாரித்தவர்
பார்த்தேயிராத போதும்
பார்த்துப் பழகியவர்போல் இருந்தார்
அவர் முகத்தில்
சுனையில் மிதக்கும் மலர்களைப்போல்
இரண்டு கண்கள்
என் முகத்தில்
அனலுக்கு அருகில் விழுந்த
இலைகளைப்போல்
இரண்டு கண்கள்
அவரது கண்களிலிருந்த ஈரத்தால்
என் கண்களிலிருந்த வெப்பத்தை
தணித்துக் கொண்டே பேசினார்
நான்தான் விடைபெற
விரும்பிக் கொண்டிருந்தேன்
அவருக்கு விடைகூற மனமில்லை
நாங்கள் நின்று கொண்டிருந்த
அந்த நீண்ட பாதை
என் கால்களை நகர்த்தியது
அதற்குள் அவரே நகர்ந்தார்
போகும்போது
ஒரு பூவை கையில் கொடுத்து
கொண்டு போய்
திருவிளக்கு ஏற்றி
அதனருகில் வையுங்கள் என்றார்
எங்கோ போனேன் அல்லவா
அங்கே போய் வரும் வரை
உள்ளங்கையில் மூடிவைத்திருந்த
அந்த மலரை
திருவிளக்கின் ஒளியில் வைத்தேன்
எதோவொன்று
மனதில் கரைந்தது போலிருந்தது
அது,
என் மனதின்
பெருங்கவலையாய் இருக்கலாம்.
******