வெள்ளை வேட்டி
சொலவடைகளை மெல்லும் கிழத்தி
அடை பாக்கை ஈரில் வைத்து
நமத்துப் போகும்படி மெல்கிறாள்
ஈ மொய்த்துக் கொண்டிருந்த புருசனின்
உடம்பை அழுக்கில்லா வெள்ளை வேட்டியால்
இறுக்கிக் கொண்டிருந்த பொழுதில்
அவள் கண்களில் வெடித்த நீரில்
எல்லாத் துக்கங்களும் நுரைத்துவிட்டன
வெளியே,
“வண்ணாத்தி புருசனுக்கு எதுக்குடி
ஒப்பாரிப் பாட்டு? எந்துருச்சு வாங்கடி முண்டைங்களா…”
என்ற அந்தக் குரல் கேட்டிருக்க கூடாதுதான்.
*****
இனிப்பு
மிட்டாய் கேட்டு
ஒப்பாரி வைத்த உதட்டில்
வேப்பம் பழத்தை
இழுகி விட்டுப் போகிறாள் கிழத்தி.
*****
குறி
மொசை பிடிக்க இரவெல்லாம்
வேட்டைக்குப் போவோம்
டார்ச் விளக்கு வெளிச்சத்திற்கு
அசையாத பச்சைக் கண்கள்
கீரியும், சாரப் பாம்பும் மல்லுக் கட்டுவதை
கவனித்த நொடியில்
செம்மண் திட்டையைக் கிழித்துக்கொண்டு
பறந்த செவலைக்கு
குறி மொசையின் கழுத்து.
*****
கசப்பு
கூழாங்கல்லை மென்று துப்பியதாய்
பீத்திக்கொள்ளும் மொச்சப் பல் கிழவி
கவுர்மெண்ட் மாத்திரைக்கு
முகம் சுழித்துக்கொள்கிறாள்.
******