
நானெனப்படுவது
எனது பகல்களை முற்றிலும்
மனிதர்களே ஆக்கிரமித்துக்
கொண்டுள்ளனர்
எனது முகஸ்துதிகளும் புன்னகையும்
சம்பிரதாயத்துக்காக மட்டுமே
எனது அடகு வைக்கப்பட்ட
மூளையைக் கொண்டு
வேறு என்ன செய்வது?
வாகன ஓட்டிகள் அனைவரும்
சாலையைக் கடந்துகொண்டிருந்த
நாய்க்குட்டியைப்
பொருட்படுத்தவில்லை
என்னைப் போன்ற
பூஜ்யங்கள்தான்
ஒன்றுக்கு மதிப்பைக் கொடுக்கின்றன
திரௌபதிக்கு மட்டுமே தெரியும்
தன்னைத் துகிலுரித்த
துச்சாதனனின் கைகள் எதுவென்று
உலகம் இப்படி இருப்பதற்கு
ஒருவகையில் நானும் காரணம்
எப்போதாவதுதான்
அவதானிக்கிறேன்
பின்தொடரும் நிழலை
சுமைகளை இறக்கி வைத்து
இளைப்பாறுங்கள்
சுவாரஸியமான இரவினை
நோக்கிப் பகல்
பயணித்துக் கொண்டிருக்கிறது
வெயிலுக்கு சற்று ஒதுங்கி
டீ சொல்லும்போதுதான்
ஞாபகத்துக்கு வருகிறது
கட்ட வேண்டிய EMIயும்
வீட்டு வாடகையும்
மாதவிகள் உலகத்தில்
கண்ணகியைத் தேடிக்கொண்டிருக்கும்
நான்
ஸ்ரீராமனல்ல
பகலின் இத்தனை
நெருக்கடிகளுக்கு மத்தியில்
படுக்கையில் பெண்
உடலைத் தழுவுவது
எனக்கு குற்றவுணர்வை
ஏற்படுத்துகிறது
இரவின் எச்சங்களை
தண்ணீரில் கரைத்தவுடன்
புனிதனாகிவிடுகிறேன்
சிலுவையில் மரித்தவுடன்
இயேசு கிறிஸ்துவானதைப் போல…
*
எனது மூளைக் கிறுக்கல்கள்
வாழ்வை அதனுடையை
ஒத்திசைவோடு பார்க்கத்
தவிறிவிடுகின்றன
நான் நிரபராதி என
நிரூபிக்க ஒரு கொலையாவது
செய்ய வேண்டியுள்ளது
எனக்காகப் பரிந்துபேசும்
அனைவரும் என் மீது
நம்பிக்கை அற்றவர்கள்
என் மீதான உனது அக்கறை
சில சமயங்களில்
என்னையே வருத்தமடையச்
செய்கிறது
பயணங்களும் புதுப்புது மனிதர்களுமே
என் வாழ்வின் பக்கங்களை
அர்த்தமுள்ளதாக ஆக்குகின்றார்கள்
தற்கொலை செய்துகொள்பவனின்
மனம் அனைத்து
பொறுப்புகளிலிருந்தும் முதலில்
தன்னை விடுவித்துக் கொள்கிறது
சற்றே இடைவெளி விட்டு
என்னைப் பின்தொடருங்கள்
எனது பலகீனமான கால்களால்
தப்பித்து ஓட முடியாது
என்னைப் புறக்கணித்தவர்களை
மன்னித்து விடுகிறேன்
என் மீதான வெறுப்பை
வேறு எப்படிக் காட்ட முடியும்?
அவர்களால்
இந்த நள்ளிரவிலும்
விழித்துக் கொண்டு
எனது முகம் காண
ஆவலோடு ஒரு உயிர்
காத்துக் கொண்டிருக்குமானால்
நான் வாழ்வதிலும்
அர்த்தம் உண்டு
என் மீதான தீர்ப்பை
இன்றே வாசித்துவிடுங்கள்
மறுமை நாளுக்காக
என்னால் காத்திருக்க
முடியாது.
*
எனக்கு அவகாசம் தேவை
வாழ்க்கையின் போக்குக்கு
என்னையே நான்
மாற்றிக் கொள்ள
எனது பிடிமானங்கள்
நழுவும்போது
வாழ்க்கை மீதான
நம்பிக்கையை முற்றிலும்
இழந்து விடுகிறேன்
எனக்கு எந்த எதிர்பார்ப்புமில்லை
பெண் அம்மா ஜாடையில்
இருந்துவிட்டால் போதும்
பத்திரமாக இரு
என் ஏக்கத் தீ உன்னை
எரித்துவிடப் போகிறது
முதல் வரிக்கும்
கடைசி வரிக்கும்
மத்தியில் என்னை நானே
எழுதிக் கொள்கிறேன்
அந்தக் கவிதையில்
குயிலாக பாடிக் கொண்டிருந்தது
நான்தான்
உனது சுதந்திரத்தை
நான் பறித்துக் கொள்ள
முடியுமானால் அது எப்படி
சுதந்திரமாகும்
நான் பொறுக்குவேன்
என்பதற்காக
நீங்கள் எலும்புகளைத்
தூக்கி எறிவது
நான் மிருகமாக மாறுவதற்கு
வாய்ப்பு கொடுத்தது
போலாகிவிடுகிறது
எனது கூண்டுக்குள்
அவசியமின்றி யாரும்
நுழையாதீர்கள்
எனது கூரிய பற்களும்
நகங்களும் கருணையை
அறியாதவை
நிரந்தரமற்றுப் போன
எனக்கு உயிர் தர யாரும்
முன்வர வேண்டாம்
எனது சவப்பெட்டியை
சுமந்து வருபவர்களிடம்
ஒப்படைத்து விடுங்கள்
நான் கொடுத்த ஆணிகளை.