இணைய இதழ்இணைய இதழ் 92கவிதைகள்

மழைக்குருவி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

மூக்குக்குள் முந்நூறு ஈக்கள் சுற்றுவதைப் போல
மூக்கு நமநம என்று இருக்கிறது
இடையறாத தும்மல்களால் அதிர்ந்து
கொண்டிருக்கின்றன எனது ஒவ்வொரு நாட்களும்
வற்றாத ஜீவநதியாக ஒழுகிக்
கொண்டிருக்கிறது மூக்கு

ஒவ்வொரு முறை தும்மும்போதும்
முருகா முருகா என்பேன்
நேற்றைக்கு முருகன் கனவில் வந்து
தயவு செய்து நீ மதம் மாறி விடு என்கிறார்

ஒவ்வொரு முறை தும்மும் போதும்
யாரோ நினைக்கிறார்கள் என்பாள் அம்மா
இப்படி என்னை இடையறாது நினைப்பதற்கு
இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள் எனும்போது
அதிர்ந்து திரும்பி குழம்புகிறாள் மனைவி

மருந்து வில்லைகள் உட்கொள்வதை
நிறுத்திவிட்டேன்
இப்போதெல்லாம் தும்மல்கள் இல்லாமல்
வாழ முடியவில்லை

தும்மல்களிடும் மீச்சிறு கணங்களேனும்
எனது துயர்களெல்லாம் மறந்துவிடுகின்றன என்பது
அவ்வளவு ஆறுதலாக இருக்கிறது
தும்மல்களிடும் மீச்சிறு கணங்கள்
தொழிற்கூடத்தில் ஓய்வைத் தருகின்றன என்பது
அவ்வளவு நிம்மதி தருகிறது
தும்மல்களிடும் மீச்சிறு கணங்கள்
எதையும் நினைக்காத ஒற்றைப் புள்ளியில் நிறுத்துகிற
தியானம் போலாகிவிடுகின்றன

தும்மல்கள் ஒரு ஆயுதம் போல
என்னிடம் இருக்கின்றன
எல்லோரும் என்னைக் கண்டு
பயந்து நகர்கிறார்கள்
தேவைப்படும்போதெல்லாம் மூன்று நாட்கள்
விடுப்பு வாங்கித் தருகின்றன தும்மல்கள்

நான் தும்மல்களை
மிகவும் விரும்புகிறேன்

ஒவ்வொரு முறை தும்மும்போதும்
மூக்குக்குள் ஒரு மலர் மலர்கின்றது
ஒவ்வொரு முறை தும்மும்போதும்
அதன் ஓசை ஒரு இசை ஆகிறது

இந்த வாழ்வில் நமக்கென்று என்ன இருக்கிறது
என்று துயருறும்போது எண்ணிக் கொள்வேன்
எனக்கென்று தும்மல்கள் இருக்கின்றன

வா அன்பே
வந்துவிட்டாயா
கொஞ்சம் நகருங்கள்
ஆ..
ஹச்
ஹச்.

*****

மழை வரும்போதெல்லாம்
வீட்டருகேயுள்ள
ஒரு நாய்க்கு பைத்தியம் பிடித்துவிடும் என்பார்கள்
இன்றுதான் பார்த்தேன்

அடைமழையில் அது அங்குமிங்கும் ஓடுகிறது
துள்ளித் துள்ளிக் குதிக்கிறது
ஆவேசமாகச் சுற்றுகிறது
கார்களின் மீதேறி ஒரு மாதிரி ஊளையிடுகிறது

மழை பொழியும்போதெல்லாம்
குருடாகிப் போன
எனது மூன்றாம் கண் மங்கலாகத்
தெரிய ஆரம்பிக்கும்

அது மழையை வரவேற்கிறது
மழையை நமஸ்கரிக்கிறது
மழையில் இறைமையைக் காண்கிறது
மழையை ஆரத் தழுவுகிறது
மழையை ஸ்வீகரித்துக் கொள்கிறது
மழையோடு இரண்டறக் கலக்கிறது

ஒரு நாயைப் பார்த்து பொறாமைப்படும்
காலம் வருமென்று நான்
கொஞ்சமும் நினைத்துப் பார்த்ததில்லை

அடைமழை பேய் மழையாக
மாறிக் கொண்டிருந்தது
ஜன்னலைத் திறந்து பார்த்தேன்

நட்ட நடு சாலையில் அது
மழைக்கடவுளென கம்பீரமாக
அமர்ந்திருந்தது.

*****

என்றைக்காவது என்னைப் பார்த்து
கண்ணடித்திருக்கிறாயா என்று திடீரென்று
கேட்டுவிட்டாள் அவள்

அவளிடம் சொன்னேன்
அது ஒரு பாழடைந்துபோன இசைக்கருவி
மீட்டினாலும் இசை எழாது
அது ஒரு துருப்பிடித்துப்போன
பழைய சமிக்ஞை
காண்பதற்குக் கூட நன்றாய் இராது
மேலும் அது ஏவாள்களுக்கு சலித்துப் போன
ஒரு ஆதாம் காலத்துக் குறும்பு என்றேன்

ஓ… என்றபடியே
சோகமாய் நகர்ந்துவிட்டாள்

சவரம் முடிந்த முகத்தை கண்ணாடியில்
பார்த்துக் கொண்டிருந்தேன்
கண்ணாடியில் தெரிந்த அவளது பிம்பம்
எனைப் பார்த்துக் கண்ணடித்தது

நரம்புகளில் ஓராயிரம் தந்திகள்
அதிர்ந்தன என்னுள்

ஓ… மறந்தே போனேன்
என் பெயர்தான்
ஆதாம்.

*****

mazhaikkuruvi@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button