இந்த உதடுகளை நீயே வைத்துக்கொண்டு
என்ன செய்யப் போகிறாய் என்று
கேட்டதுதான் தாமதம்
ஒரு அந்தரங்க பாகத்தைத் திறந்து வைத்திருப்பது போல
அத்தனை பதற்றமடைந்துவிட்டாய் நீ
பிறகென்னைக் கடந்து செல்லும்போதெல்லாம்
கைகளால் உதடுகளை மறைத்தபடி
செல்ல ஆரம்பித்தாய்
மறைக்க மறைக்க ஒரு பாகம்
மேலும் மேலும் அந்தரங்கமாகிவிடுகிறது
என்பதை உணராமல்
சாதாரணமாகயிருந்த ஒரு பாகத்தை
ஒரு அந்தரங்க பாகமாக மாற்றிய
குற்றவுணர்ச்சி எனக்குள்
அன்றைக்கு என்னிடம் வந்து
மனமுடைந்து அழுதாய்,
”இந்த உதடுகளை நீரே வைத்துக் கொள்ளும்
இந்த அந்தரங்கத்தை
இந்த அந்தரங்கத்தின் கனத்தை
என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை”
என்றாய்
”பேசாமல் உதட்டுச் சாயம் பூசிக்கொள்
உன் உதடுகள் அதனுள் மறைந்துவிடும் இல்லையா?”
என்றேன்
மறுநாள் அச்சமின்றி என் முன்னே வந்து
இரத்தச்சிவப்பாய் சிரித்தாய்
உன் உதடுகளைக் காணவில்லை
இரத்தம் அப்பிய உன் அதரங்கள்
நானே கிழித்துத் தின்றது போலிருந்தன.
*****
நீ இத்தனை ஒல்லியாகவும் இருந்தாய்
என்பதை நம்புவதற்கு
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
அந்தப் புகைப்படத்திலிருப்பவள்
நமது மகளைப் போலவோ அல்லது
முப்பது வருடங்களுக்கு முன்னாலிருந்த
நம் குடும்பத்தைச் சேர்ந்த
ஒரு யுவதியைப் போலவோ இருக்கிறாள்
ஆனால் இப்போதுதான்
உனக்கு முப்பது வயதே ஆகின்றது
ஒரு குவி லென்ஸ்
காட்சியை ஒற்றைப்புள்ளியாய்
குறுக்கிவிடுவதைப் போல
அந்த கேமரா உன்னை என்னவோ செய்திருக்கிறது
என சந்தேகிக்கிறேன்
நிச்சயமாக இது நீயில்லை என்று
நம்பியபடியே அந்தப் புகைப்படத்தை
பூதக்கண்ணாடி கொண்டு
நான் பார்க்கையில்
நீ தெரிகிறாய்
இந்த அதிசயம்
எங்கனம் நிகழ்கிறது
நேற்று ஒரு கூத்து நடந்தது
அலைபேசியின் முகப்புத் திரையில்
உனதிந்தப் புகைப்படத்தை வைத்திருந்தேன்
”யாரிவள்?” எனக் கேட்டு நீயே என்
சட்டையைப் பிடித்து உலுக்கினாய்
நான் காலத்தின் முன்
உறைந்து கிடக்கிறேன்.
******
எல்லோரும் உன்னிடம்
கை குலுக்கிக் கொண்டிருந்தார்கள்
உன் எதிரிலேயே நின்றிருந்தும்
நானென் கையை நீட்டவில்லை
உன்னையே பார்த்திருந்தேன்
நீயும் என்னையே பார்த்தபடி
எல்லாரிடமும் கை குலுக்கிக் கொண்டிருந்தாய்
நீ சென்ற பிறகு
என் கையைப் பார்த்தேன்
ஆயிரம் பேரிடம் கை குலுக்கியது போல
அப்படிச் சிவந்திருந்த என் கை முழுக்க
உனது ரேகைகள்.
******