இணைய இதழ்இணைய இதழ் 79கட்டுரைகள்

மீன் காட்டி விரல் – நூல் விமர்சனம் – மீ. யூசுப் ஜாகிர்

கட்டுரை | வாசகசாலை

சிரியரின் நான்காம் தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு உயரம் தொட்டவர் இந்த தொகுப்பில் மேலும் உயர்ந்து நிற்கிறார். பிடித்தவர்களின் வார்த்தைகளை வாசிக்கும்போது அவர்களோடு உரையாடுவதைப் போல இருக்கும். அப்படியாக ஒவ்வொரு கவிதையும் வாசிக்கும்போது கவிஞரோடு கலந்துரையாடுவதை போலவே இருந்தது.

கவிதைகள் அனைத்தையும் ஆழமாய் வாசித்து, தனது கவி நடையிலேயே அணிந்துரை அமைத்திருக்கிறார் கவிஞர் கி.சரஸ்வதி அவர்கள். நூலில் தாம் வியந்த கவிதைகளை நம்மோடு பகிர்ந்து கொண்டு மீன் காட்டி விரல் நூலை வாசிக்க ஆள்காட்டி விரல் காட்டுகிறார். ஒரு கவிஞரின் திறத்தை இன்னொரு கவிஞரால் தானே கவிப்பாவாக வடிக்கமுடியும்.

நதிப்பெருக்கில் கூத்தாடும் சினை முட்டைகளில் ஆசிரியர் கவிதை கருவை பகிர்ந்து கொண்டு நூலாக்கத்திற்கு காரணமானவர்களுக்குநன்றிகளை தெரிவித்திருக்கிறார்.

முதல் கவிதையே குளிர்விக்கிறது,

”மழையில் குளிக்கும் ஆசை கொண்டவள்
அம்மாவுக்கு பயந்து உள்ளே ஓடுகிறாள்.
யாரும் பார்க்காத நேரம்
சன்னலிலிருந்து கைநீட்டி
விரலுக்கு மட்டும்
குளித்துக் கொள்கிறாள்…!!!”

கண்முன்னே காட்சியை பரவவிட்டு நம்மையும் மழையில் நனைக்கும் மாயம் செய்கிறார்.

சாயல் கவிதையில் எவ்வளவு நேர்த்தி, விற்பனை பெண்ணின் சாயலில் இருக்கும் தன் மகளுக்கு பொருத்தமான புடவையை தேர்ந்தெடுக்கும் காட்சியை எத்தனை கவித்துவத்தோடு அணுகியிருக்கிறார்.

செம்பருத்தி செடியை மரமென்று வாதிடும் சிறுமியோடு கவிஞர் ஐந்தாவது முட்டையாவதும், சிறுமி இன்னொரு குருவியாவதும் ரசிக்க வைக்கிறது.

ஜீரோ வாட்ஸ் பல்பை எத்தனை வாட்டி பார்த்திருப்போம், ஆனால் அதன் கம்பி இழைகளில் ஒளியின் கையெழுத்தை கண்டிருக்கிறார் கவிஞர்.

“வீழ்தலுக்குப் பிறகுமான
பூவின் சிரிப்பு.”

“மொத்த காடும்
ஒற்றைப் பூவாகப் பூத்திருக்கிறது..”

“வாசத்தை கசப்பேற
தொடங்குகிறது வாழ்வு.”

எல்லாமே கவித்துவம் மிக்க வரிகள் ஒவ்வொரு கவிதையின் முடிவும் பெருவாழ்வின் தாக்கம் ஏற்படுத்துகிறது. வாழ்க்கையில் ஏதேனும் ஒரு தருணத்தில் நிச்சயம் நாம் கண்டு கடந்து வந்த காட்சிகளை கவனமாய் கவித்துவமாக்கி கவி செய்திருக்கிறார்.

“உங்கள் சமையல் சூப்பர் என
இன்னொரு லட்டு வைத்துப்போகிறவள்
சின்னஞ் சிறுமி.”

“எதுவும் வாங்கி வராத மல்லி
அத்தையை நாங்கள்
ஏற்றுக்கொண்டது போல
அவள் ஏற்றுக்கொள்ளவே இல்லை”

“மழைச்சரடைப் பற்றியேற
முனைந்திருக்கக் கூடும்
அம்மல்லிக்கொடி.”

“நகரத்துக் குழந்தைகளின்
சுற்றுலா என்பது
மால்களுக்குச் செல்வது தான்.”

“அறுந்துப் போன
செருப்பின் காதில்
தோடாக மின்னுகிறது
ஊக்கு.”

“சில நேரங்களில் தேநீர்
அருந்துவது மட்டுமல்ல
மறுப்பதும் ஆசுவாசம் தான்..!!”

“சிறிய கூண்டிலும்
ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு
சிறகடித்து தான் செல்கிறது
பறவை.”

இயல்பை இயல்பு மாறாமல் இயல்பாய் கவிதையாக்குவதில் தேர்ந்தவர் ஆசிரியர்.

“தொங்கும் புழுவின்
அருகில் வந்து
சிக்காமல் தப்பிய மீனின்
கூடையளவு இன்பம்
காத்திருக்கும் தூண்டில்காரனின்
நதியளவு துக்கம்.”

“சொல்லிலாவது கனத்தை
குறைக்க அவன்
நினைத்திருக்கலாம்.”

எப்போதும் பாரம் துக்குபவனின் வலியை நமக்கும் கடத்துகிறார்.

“பேருந்து நிலையமாக மாறிவிட்ட
ஏரியிலிருந்து.,
வெளியேறும் சொகுசுப் பேருந்தில்
ஓவியமாகி இருக்கிறது
மீனைக் கொத்திப் பறக்கும்
பறவை.”

“மீன்களற்ற குளம்
தனக்குத் தானே நீந்திக்கொள்கிறது
ஒவ்வொரு முறை
பழுப்பிலை உதிரும் போதும்.”

“பேருந்தின் கூரையில்
முட்டி நிற்கும் பலூனால்
பேருந்தும் மிதப்பதாக
நம்புவோமாக..!!!”

“வெறும் மழையின்
இதத்தைக் கேட்டவனுக்கு
கோடை மழையின் இதம்..!!!”

இப்படியாக ஒவ்வொரு கவிதையையும் வாசித்து மகிழ்ந்தேன். கவித்தேன் சுவைத்தேன்.

மேலும் மேலும் இப்படியான கவிதைகளில் நெஞ்சம் நனைக்க ஆசிரியருக்கு அன்பின் வேண்டுகோள். வாழ்த்துக்களும் பேரன்புகளும்..!!! வாசிப்பின் வழியே நம் நேசம் தொடரட்டும்..!!!

நூல்: மீன் காட்டி விரல் – மீ. யூசுப் ஜாகிர்
ஆசிரியர்: ந.சிவநேசன்
வெளியீடு: மௌவல் பதிப்பகம்
வகைமை:கவிதைகள்
பதிப்பு: முதல்பதிப்பு 2023
பக்கங்கள்: 111 பக்கங்கள்
விலை: ₹.120/- ரூபாய்

*****

yusufjakir1712@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button