
நேரத்திற்கு எழுவதற்காக வைத்த விழிப்புக்கடிகையின் குயில் விடாமல் கூவிக்கொண்டேயிருந்தது..
அதைத் தட்டியணைத்துவிட்டு இன்னமும் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு உறக்கத்தைத் தொடரவே ஏங்குகிறது மனம்.
ஒரு நல்ல கனவில் அமிழ்ந்து கிடந்தேன்.. குயிலோசை அதை கலைத்துவிட்டது. ப்ச்ச்.. மனம் சிணுங்கியது.
விடுமுறை நாளிலும் இவ்வளவு அதிகாலையில் எழுந்துகொள்ள கொஞ்சமும் விருப்பமில்லை.
ஆனால், எங்கிருந்து முடியும்?
இன்றைக்கு தீபாவளி.
பண்டிகை நாட்களெல்லாம் கொண்டாட்டமாக விடிந்த காலமொன்றுண்டு. தி.மு காலம் அது. தாய் வீட்டு வாசம் பிடித்த திருமணத்திற்கு முந்தைய காலம்.
இப்போதெல்லாம் பண்டிகை ஏன்தான் வருகிறதோவென அலுப்புதான் மிச்சம்.
திருமணத்திற்குபிறகுமே கூட எங்கெல்லாம் வேலை மாற்றமோ அங்கெல்லாம் பெட்டியைக் கட்டிக்கொண்டு திரிந்த நாடோடி வாழ்க்கையில் நினைத்தால் பண்டிகை.. மனமில்லையென்றால் வெறுமனே ஒப்பேற்றிவிட வாய்த்திருந்த சுதந்திரம் இதோ இங்கே இவரின் சொந்த ஊரோடு வந்துசேர்ந்ததிலிருந்து மொத்தமாக போயே போச்சு..
வேண்டா வெறுப்பாக எழுந்து அமர்ந்தேன். இவருக்காகவாவதும் செய்யவேண்டியதையெல்லாம் செய்துதான் ஆகணும். இந்த வயதிலும் இவருக்கு துள்ளாட்டத்துடன் தீபாவளி கொண்டாடுகிற ஆசை விடவே இல்லை. அது ஏனோ மத்த பண்டிகைகளைவிட தீபாவளியென்றால் இவருக்கு தனிதான்.. தீபாவளி நாளில் விடியலில் எழுவது, எண்ணெய் வைத்துக் குளிப்பது புதுசு உடுத்தி இட்லிக்கு மட்டன் குழம்பு ஊற்றி சாப்பிட்டு இனிப்பு பலகாரங்களை உறவுகளுக்கெல்லாம் கொடுத்து வெடி வெடித்தென லிஸ்ட் மாறாமல் எல்லாமும் வேணும். மதியத்துக்கு அதே மட்டன் குழம்பையெல்லாம் ஒத்துக்கொள்ளமாட்டார் ஐயா. வடை பாயசம் குழம்பு கூட்டுப்பொரியலோடு தலை வாழை இலை போட்டு விருந்தாக சாப்பிடணும். எல்லாம் சரிதான். வயதுகாலத்தில் செய்ய முடிந்தது. இப்ப முடியணுமே எனக்கு!
இந்த மனுசன் இன்னமும் உறக்கத்தில்தானிருப்பார். பெட் காபி குடிக்காமல் எழுந்திருப்பதேது..! கொடுத்துவைத்த மகராசன். அவருக்கென்ன.. எதற்கும் ஆசைப்படலாம். அடுப்படியில் வெந்து புழுங்கப்போவது நான்தானே..!
கேட்டால், “உன்னை யார் செய்யச் சொன்னது. ஆள்வச்சுக்க சொல்லி ஆயிரம் தடவை சொல்லியாச்சு. கேட்காம இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யவேண்டியது அப்புறம் புலம்ப வேண்டியது” என்பார்.
ஆள் வச்சா மட்டும்.. அவரவர் வீட்டில் பண்டிகை இராதா? விடுப்பெடுக்காமல் வந்து விருந்து பலகாரங்களை சமைத்துக்கொடுக்க எதாவது எந்திரத்தைதான் தேடணும்.
எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் எந்நேரமும் உற்றுநோக்கி குறைகூறிக்கொண்டே திரிகிற உறவுக்கூட்டங்களுக்கு மத்தியில் கொண்டுவந்து குடிவைத்துவிட்டு தனக்கு மட்டும் ரிட்டயர்மெண்ட் லைஃப் சலுகைகளைக் கொண்டாடிக்கொள்வது.. சுயநலம் பிடித்த மனுசன்!
வேண்டாம். எழும்போதே மனநிலையை கெடுத்துக்கொள்ள வேண்டாமென்று எனக்கு நானே திரும்பவும் சொல்லிக்கொண்டு குளியலைறைக்குள் நுழைந்தேன்.
இப்போதே பட்டாசு சத்தம் காதைப் பிளக்கத் தொடங்கியாயிற்று..
எண்ணெய் குளியலெல்லாம் நிதானமாக அனுபவித்துச்செய்ய வேண்டிய ஒன்று.
தளிர்சூட்டில் தொட்டெடுத்து, மயிர்கால்களில் நன்கு விரவித்தேய்த்து, தலைச்சூடு தணியவென குளிரக்குளிர ஊறவைத்து, பின் அலசவேண்டும்.
அவ்வளவு நிதானத்திற்கெல்லாம் நேரமில்லை. குளித்து முடித்துவிட்டு வந்து ஒரு சுடிதாருக்குள் நுழைந்தாயிற்று. இவருக்கு பகலிலும் நைட்டியில் உலாத்தினால் பிடிக்காது. அதற்காகவே நாலைந்து உருப்படிகள் இப்படி தைத்து வைத்திருக்கிறேன். புதுச்சேலை உடுத்திக்கொண்டு அடுக்களையில் வேலை செய்வது எப்படியாம்! பள்ளிக்குப் போகிற நாட்களில் எப்படியும் சேலைதான் உடுத்தியாகணும். அப்ப புதுச உடுத்திக்கலாம்.
“பண்டிகை நாளும் அதுவுமா இதையா போட்ருக்க! பட்டுச்சேலை வாங்கியிருக்கியே அத எப்ப கட்டுவ?” கேட்டுக்கொண்டே இதோ கொஞ்ச நேரத்தில் ஒரகத்தி எட்டிப்பார்ப்பாள். தொட்டெடுத்தார்போல் அடுத்தவீடு இவரது அண்ணன் குடும்பம்.
பக்கத்து தெருவிலேயே இவரது தங்கை குடும்பம். கேட்கவா வேணும்.
நித்தமும் தீபாவளிதான். வெடிகுண்டுதான். பற்றவைப்பதற்கும் வெடிக்கவைப்பதற்கும் பஞ்சமே இராது…
பட்டாசு சத்தத்தை தவிர்க்க எதாவது பாட்டை ஓடவிடலாமென்று டிவியைப்போட்டால் ஓடவில்லை. மின்சாரம் போய்விட்டதுபோல..
வீதியே புகை மண்டிக்கிடந்தது..
முத்துவடிவு வாசலில் விரிய வண்ணக்கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். எப்படித்தான் அவசர கோலத்திலும் இவ்வளவு அழகாகத் தீட்ட முடிகிறதோ!
பேச்சுக்கொடுத்து அவள் வேலையைக் கலைக்காமல் பால் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தேன். முத்துவடிவின் மகன் பத்தாவது படிக்கிறவன். அவனுக்கு சில நோட்டு புத்தகங்கள் பேனா ஜாமெண்ட்ரி பாக்ஸும் வாங்கி வைத்திருக்கிறேன். அத்தோடு கொஞ்சம் பலகாரங்களும், நேற்று இவர் வாங்கி வந்ததில் கொஞ்சம் பட்டாசுகளையும் சேர்த்து அவளுக்கு கொடுத்தனுப்ப ஒரே பையாக போட்டு வைத்தேன்…
காலையில் ஃபில்டர் இறக்குவதற்கு நேரம் பிடிக்குமென்பதால் இரவே டிக்காஷன் எடுத்து பாட்டிலில் ஊற்றி ஃப்ர்ட்ஜுக்குள் வைத்திருந்ததையெடுத்து கப்பில் ஊற்றி இவருக்கு மட்டும் சர்க்கரை இட்டுக்கலக்கி கொதிக்கிற பாலை அதில் ஊற்றிக்கொண்டிருந்த போதுதான் வீதியில் சரவெடியை போட்டார்கள்.
படபடவென்று அதிரச் சத்தம் மிகச்சரியாக அதே நேரத்தில் போன மின்சாரமும் திரும்பியிருக்க.. ஹாலில் டிவியும் அலரத்தொடங்கிற்று.. திடுமென இருபுறமும் பெருத்த ஓசைகேட்ட அதிர்வில் சுருக்கென்றொரு பயச்சுருள் திரண்டதில் கை தடுமாறி பால் பாத்திரம் விழுந்து தரைமுழுக்க பால் அபிசேகம். ஒரு வேலைக்கு ஒன்பது வேலை. இப்ப இதை வேறு துடைத்தெடுக்கணும். நல்லவேளை கையில் காலில் படவில்லையே.. நல்லவேளை இவருக்காவது காபி மிஞ்சியதே..
டிவியில் சானல்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக மாறிக்கொண்டே இருப்பதாகப்பட.. என்னடாவென்று எட்டிப்பார்த்தால் இவரேதான். நியூஸ் சானலை வைத்துக்கொண்டிருக்கிறார்.
அட! அதிசயமே! காபிக்கு முன்னமே எழுந்தாச்சு குளிச்சுமாச்சு. வெள்ளைச்சட்டையும் வேட்டியும் சகிதம் ஈரத்தலையை துவட்டிக் கொண்டே வரண்டாவின் மூங்கில் நாற்காலிக்கு போய் அமர்ந்து பேப்பரை கையிலெடுத்தாச்சு.. இதெல்லாம் தீபாவளி அதிசயங்கள். சாதாரண நாட்களில் இருவருக்கும் சண்டை வந்து முகத்தை திருப்பிக்கொண்டாலும் கூட காபி போட்டு தருகிறாயவென படுக்கையிலிருந்தே மெசேஜ் அனுப்பிக்கேக்கிற மனுசன் இவர்.
என் அம்மாவும் அப்பாவும் ஒரே வீட்டில் இருந்துகொண்டு வாட்ஸ்அப்பில் குடித்தனம் நடத்துகிற ஜோடியென்று நிலன் கூட கேலி செய்து சிரிப்பான்.
நேற்றும் சண்டைதான். பத்தாயிரத்திற்கும் குறையாமல் பட்டாசு வெடிகளை வாங்கி சுமந்துகொண்டுவந்தார். கேட்டால் சொந்தக்கார பிள்ளைகளுக்கு கொடுக்கவாம்.
“எதுக்கு இப்படி காசை கரியாக்கிறீங்க. காற்றையும் மாசுபடுத்திக்கிட்டு.. குப்பையும் சேர்த்துக்கிட்டு. அதுக்கு அந்தப் பிள்ளைங்களுக்கு படிக்கிறதுக்கு உபயோகப்படும்படி உருப்படியா வாங்கிக்கொடுத்தாலாவது மெச்சிக்கலாம்”
“எல்லா நாளுமா! ஒரு நாள்தானே. இந்த சந்தோசத்தையும் அதுங்க பார்க்கணும். இது நம்ம பாரம்பரியம்.. கலாச்சாரம்.. “அது இதுவென பேச்சு வளர்த்து வாக்குவாதம் முற்றி இறுதியில் பேச்சுவார்த்தை முறிந்து அவரவர் அறைக்குப் படுக்கப் போனதுதான் நடந்தது.
பொதுவாக சண்டையிட்டுக்கொண்ட மறுநாள் வீட்டிற்குள் மெளனம் குடிபுகும். அதற்கும் அடுத்தநாள்தான் முதல் வார்த்தையை யார் பேசுவதென்பதில் வந்து நிற்கும்..
இன்றைக்கு பண்டிகை நாள் சலுகையாக நானே முதற்சொல்லை காபியோடு சேர்த்து வைத்தேன். “எப்பப் பாரு காபிய கசப்பா கொடுக்கிறேன்னு புகார் சொல்லவேண்டியது. சர்க்கரை டப்பாவையும் சேர்த்தே கொண்டுவந்து வச்சிட்டேன். எவ்வளவு வேணுமோ கொட்டிக்கலாம்”
மனுசன் செய்தித்தாளிருந்து தலையெடுக்கவுமில்லை. நான் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளவுமில்லை.
“அலட்டலுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.. இனி பேசறேனான்னு பாருங்க” வெடுக்கென்று சிலுப்பிக்கொண்டு உள்ளே வந்துவிட்டேன்.
சிந்திய பாலை துடைத்துக்கொண்டிருந்தபோது முத்துவடிவு இவரிடம் பேசிக்கொண்டிருப்பது கேட்டது..
“இந்தாம்மா தீபாவளி செலவுக்கு..”
“நன்றிங்க சார். அம்மா கோலம் போட்டு விட்டு போகச் சொன்னாங்க சார். இன்னைக்கும் நாளைக்கும் நான் லீவு. அம்மாட்ட சொல்லிடுங்க சார். அப்புறம் கோலமாவும் வாங்கணும்”
உள்ளே வருவாள். பையைக் கொடுப்போமென்று நினைத்தால் அப்படியே கிளம்பிவிட்டாளே..!
பையைத்தூக்கிக்கொண்டு நான் எவ்வளவு அவசரமாக வெளியே போனபோதும் அவள் கேட்டைத்தாண்டி இடப்பக்கம் திரும்பியிருந்தாள்.
இருந்தாலும் கொடுத்துவிடுவோமென முத்து என அழைத்துக்கொண்டே பின்னோடு போனால்..
“ம்க்கும்.. டீச்சரம்மா கொடுத்திட கிடுத்திட போகுது நீ வேற.. சார்தான் அந்தம்மாக்கு தெரியாம பணம் கொடுத்தார். சார் கொஞ்சம் நல்ல மனுசன். அந்தம்மா சரியான கஞ்சம். எச்சிக்கையில ஈ ஓட்டாது. பழைய கொழம்பைக் கூட கொடுக்காதுன்னா பார்த்துக்க. நாலு நாள் ஆனாலும் ஃப்ரிட்ஜ்ல வச்சு சாப்பிடும். சார்கூட.. வேலைய விட்டுட்டு வீட்ல இருங்கிறாரு. நமக்கெல்லாம் நம்மவூட்ல அப்படி சொல்லமாட்டாங்களான்னு இருக்கு. இந்தம்மா இந்த வயசிலயும் மூட்டுவலி முதுகுவலியெல்லாம் வச்சுக்கிட்டும் வேலைய விடாம போய்க்கிட்டு இருக்கு பாரு. சம்பளம் போய்டுமே.. இத்தனைக்கும் காசு பணத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. பையன் ஃபாரின்ல இருக்கான். சார்க்கும் பென்ஸன் வருது. மூணு விட்டு வாடகை வருது..”
முத்துவடிவு வேறோருத்தியிடம் என்னைப்பற்றிதான் புறம் பேசிக்கொண்டிருக்கிறாள்.
முகத்திலடித்தாற்போல் இந்த நேரத்தில் இதை கொண்டுபோய் கையில் கொடுத்தால் பேசின வாய் என்ன செய்யும்!
ஒரு எட்டு எடுத்துவைப்பதற்குள் முத்துவடிவே திரும்பி என்னைப் பார்த்துவிட்டாள்.
என்னை நேருக்குநேர் பார்க்கிறாள்.
இருந்தும் அவள் பேச்சை நான் கேட்டுவிட்ட திகைப்போ குற்ற உணர்வோ காணோம்.. சொல்லப்போனால் என்னை ஒரு பொருட்டாக கூட நினையாமல், எனக்கும் பின்னால் யாருக்கோ “நாலு மணிக்கு போவேன்” என பதில் சொல்லிவிட்டு திரும்பி நின்று மீண்டும் புறம் பேசுதலைத் தொடர்கிறாள்.
முசுமுசுவென்று கோபம் பொத்துக்கொண்டுவந்தது எனக்கு. விறுவிறுக்க வீட்டிற்குள் விரைந்து பையை பொத்தென்று போட்டுவிட்டு கைகளை இறுகக்கட்டிக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தேன். மூச்சை நன்கு இழுத்துவிட்டு என்னை நிதானித்துக்கொள்ள முயல்கிறேன்.
எரிச்சலும் கோபமும் குறைந்தபாடில்லை. போதாக்குறைக்கு இந்த டிவியின் அலறல் வேறு.. நிறுத்தத் தேடினால் ரிமோட்டை வேறு காணோமென்பதில் எரிச்சல் கூடி உரக்கக் கத்தி கூச்சலிடத் தொடங்கினேன்..
இதை போட்டுவிட்டுட்டு எங்கே போய் தொலைந்தார் இவர்..
ஆத்திரம் மொத்தத்தையும் இவரின் மேல் கொட்டிவிடுகிற தீவிரத்துடன் தேடினால் அடுக்களையில் நிற்கிறார். பால்பாக்கெட்டை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பிலேற்றிக்கொண்டு..
“இதென்ன செய்றீங்க. நான்தான் அப்பவே உங்களுக்கு காபி போட்டு அங்..“ – பார்த்தால் வரண்டாவிலிருக்கும் டீபாய் மீது காபி இல்லை சர்க்கரை டப்பாவும் இல்லை. சொல்லப்போனால் இவர் சர்க்கரை டப்பாவை ஒவ்வொரு அலமாரியாக திறந்து தேடுகிறார். இவருடைய கப் முன்பு கழுவி கவிழ்த்த மேனிக்கே இடம் மாறமலிருக்கிறது..
பாத்திரத்திலும் முன்பே காய்ச்சின வடுவைக் காணோம். உற்று நோக்கினால் தரையில் சிந்திய பாலின் சுவடே இல்லை.
அதிர்ந்துபோய் திரும்பினால் நான் போட்ட இடத்தில் முத்துவடிவிற்கு கொண்டு போன பையும் இல்லை.
என்ன நடக்கிறது இங்கே..!
புரியாத திகைப்போடு விக்கித்தது மனம்..
மெல்லப் பின்னெட்டுகள் வைத்து என் படுக்கையறையை எட்டிப்பார்த்தால் நான் இன்னமும் படுக்கையில் கிடந்து உறங்கிக்கொண்டுதான் இருக்கிறேன். இரவில் உடுத்திய நைட்டியுடன்.
ஓஹ்! இது கனவு. கனவிலா இவ்வளவு நேரம் உலாத்திக்கொண்டிருந்தேன்..!
அதுதானே.. இவராவது அடுக்களையில் நிற்பதாவது.. தானே காபி போட்டுக்கொள்வதாவது..
ஏன் காய்ப்பொரியலை தொடவே இல்லையென்று கேட்டால் அது இருந்ததே எனக்கு தெரியாதென்று சொல்லுகிற மனுசன்.
ஒவ்வொன்றையும் கையிலெடுத்துக்கொடுக்க வேண்டும் இவருக்கு. அப்படியாப்பட்டவர்..
மீண்டும் அடுக்களைக்கு போகிறேன். இவர் அதிரச டப்பாவை திறந்து ஒன்றை எடுத்து உடைத்து வாயில் போட்டுக்கொள்கிறார். ரசித்து உண்கிறார். பின் முறுக்கு.. இரு உள்ளங்கைளுக்கிடையில் வைத்து நொடித்து அதையும் வாயில் போட்டுக் நொறுக்கிக்கொண்டே எங்களின் இருவர் பெயரும் பொரித்த கோப்பைகளை எடுத்துவைத்து எனதில் சர்க்கரை சேர்க்காமலும் அவருடையதில் சேர்த்தும் காபி கலந்து அவருடையதை சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டு என்னுடையதை எடுத்துக்கொண்டு என் அறைக்குப் போகிறார்.
இது கனவேதான் என்பது அட்சர சுத்தமாக தெளிவாகிவிட்டது.. இந்த முப்பத்தியைந்து வருடங்களில் ஒருதரமும் கூட இவர் இப்படி காபியை போட்டுக் கொணர்ந்து என்னை எழுப்பியது நடந்ததே இல்லை..
நடவாதவற்றை நடத்திப்பார்க்கிறது இந்த கனவு. நான் பின்னோடு போய் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறேன்.
கோப்பையை அருகே வைத்துவிட்டு இவர் என்னை முதலில் லேசாக தட்டி எழுப்புகிறார்.
நான் அசையக்கூட மறுக்கிறேனென்றதும் கன்னத்தில் தட்டி தோளைக் குலுக்கி…
அடித்துப்போட்டாற்போல் என் உடல் அசந்து கிடக்க.. செய்துமுடிக்க வேண்டிய வேலைகளின் நினைப்பில் முடுக்கப்பட்டு என் மூளை மட்டும் விழித்துவிட்டதால் கனவில் உலாத்திக்கொண்டிருக்கிறது. இது நடப்பது எனக்குப் புதிதில்லை… எழப்பிடிக்காமல் உடம்பு சண்டித்தனம் செய்கிற போதெல்லாம்..
இவரது தங்கை மகள் குடும்பத்துடன் விருந்துக்கு வருவதாய் இருந்த நாளின் முன் தின இரவே அரைக்க வேண்டியது நறுக்க வேண்டியதையெல்லாம் முடித்து வந்து படுக்கவே பன்னிரண்டுக்கு மேலானது.. இருந்தும் விடாப்பிடியாய் அதிகாலை நாலரைக்கு எழுந்து மொத்த விருந்து சமையலையும் முடித்துவைத்து விட்டு நிமிர்ந்தால்..
-இவர் இப்படித்தான் என்னைத்தட்டி எழுப்பிக்கொண்டிருந்தார்..
“மதி வீட்டாரை சாப்பிடக்கூப்ட்ருக்கேன்னு சொன்னேனே.. நீ இன்னமும் இப்படி தூங்கிட்ருக்க.. முடியலைன்னா சொல்லு. வெளியே ஆர்டர்பண்ணி வாங்கிக்கலாம்”
பார்த்தால் அடுக்களையில் முந்தின இரவில் போட்டது போட்ட படியே கிடக்க, சமைத்து முடித்ததெல்லாம் கனவில்.. பிறகு அன்றைக்கு ஹோட்டல் சாப்பாட்டு விருந்தோம்புதல்தான் நடந்தது ..
இன்றும் அப்படித்தான்… ஆனால், என்னை எழுப்பமுடியாமல் போனதும் இவருக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது.. திரும்பத்திரும்ப என் பெயரைச் சொல்லி அழைத்தவாறே என்னென்னவோ செய்து பார்க்கிறார். நீரள்ளிக் கொண்டுவந்து முகத்தில் தெளிப்பது முதற்கொண்டு..
கணவர் கையால் காபிபோட்டு எழுப்பப்படுவது இனிய கனவுதான்.. ஆனால், இவருடைய பதட்டத்தையும் கலவரத்தையும் பார்த்தபின் எனக்கு இந்தக்கனவை நீளச்செய்ய வேண்டாமென்று தோன்றிவிட்டது.
கனவை உடைத்துக்கலைத்து என்னை உந்தி எழுந்துவிட பெருமுயற்சி செய்து பார்க்கிறேன். முடியக் காணோம். என் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது.. நான் விடாமல் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்..
அதற்குள் நிலைமை விபரீத திசைக்கு திரும்பத்தொடங்கிவிட்டிருந்தது ..
இவர் போனில் யாரிடமோ நான் பேச்சுமூச்சற்று கிடப்பது மருத்துவமனை.. என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார். நான் விரைந்துபோய் இவர்முன் நின்று, “ஹய்யோப்பா எனக்கு ஒன்னுமே இல்லை.. பாருங்க நான் நல்லாதான் தெம்பா இருக்கேன். இது வெறும் கனவு. இன்னும் கொஞ்சம் நேரம் விட்டால் நானே எழுந்துடுவேன். சொன்னாக் கேளுங்க ப்ளீஸ்”
நான் சொல்வதொன்றும் இவர் செவிக்குப்போய் சேரவே இல்லை.. நான் இவரைத் தொட்டு என் புறம் திரும்பியதுகூட இவருக்கு புலனாகவில்லையென்றதும் அடுத்து என்ன செய்வது எப்படி புரியவைப்பதென்ற கலக்கம் தொற்றிக்கொண்டது எனக்கு.
இவரோ செய்வதறியாமல் வெளிவாசலுக்கும் என் அறைக்கும் இரண்டுமூன்று முறை போய்ப் போய் திரும்புகிறார். குவளை நீரை அப்படியே சரித்து மேலே சிந்துவதைக்கூட கவனிக்காமல் பருகுகிறார். பின் விரைந்து வெளியே இறங்கி கால் செருப்பைகூட போடாமல் கேட்டைத்திறந்துகொண்டு..
“நில்லுங்கப்பா.. செருப்பைப் போடாம.. வீதியெல்லாம் வெடி வெடிச்சுக் கிடக்கு..”
“ஏன் இப்படி கத்தற-உன் லவ்ட் ஸ்பீக்கர் தொண்டையை கொஞ்சம் அடக்கு. பக்கத்திலதான இருக்கேன். மெதுவா பேசு. ஊருக்கே கேக்கணுமா!” என்றெல்லாம் சொல்லுகிற மனுசனுக்கு நான் கத்திக் கூப்பாடு போடுவது ஒன்றுமே கேட்கவில்லை.
இவருடைய அண்ணனின் வீட்டிற்குள் நுழைகிறார். போச்சு.. சும்மாவே நாடகவியல் குடும்பம் அது.
நான் மீண்டும் உள்ளறைக்கு ஓடி என் உடலைத் தட்டிமுடுக்கி எழுந்துவிட பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன்.. ஆனால், முடிந்தால்தானே!
அடுத்த பத்தே நிமிடங்களில் மொத்த வீடும் இவரது உறவினர் கூட்டங்களால் நிறைந்துவிட்டது.
நான் உறங்கும்போது யாரும் என்னை பார்க்கிறார்களென்பது கொஞ்சமும் பிடிக்காது எனக்கு.. யாருக்காகவும் நடிக்கத் தேவையில்லாமல் நமக்கே நமக்கு எப்படிவேண்டுமோ அப்படி இலகுத்தன்மையுடன் கிடக்கவாய்ப்பது உறக்கத்தில்தான். அப்படிக் கிடக்கும் பொழுது அடுத்தவர்கள் வந்து என்னை உற்று உற்றுப்பார்ப்பதா! அதிலும் ஆளாளுக்கு அவரவர் பங்கிற்கு என் மேல் பல பரிசோதனைகளை வேறு செய்து பார்த்துவிட்டு மூச்சில்லை என முடிவே கட்டிவிட்டார்கள்.
“ஹாஸ்பிடலுக்கெல்லாம் கொண்டு போக வேண்டாம். போஸ்ட்மார்ட்டம் அது இதுன்னு நம்மள அலைகழிச்சுடுவாங்க.டாக்டர் வீட்டுக்கே வந்து பார்த்து கன்பாஃர்ம் பண்ணட்டும். அவர் தரும் அறிக்கையை வச்சு…”
இவருடைய அண்ணன் எனக்கு இறப்புச்சான்றிதழ் வாங்குவது முதற்கொண்டு சகலத்தை விவரித்துக்கொண்டிருந்தார்.
டாக்டரும் வந்து அவர் பங்கை முடித்துவிட்டு சாரி.. சொல்லி இவரின் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டுப் போகிறார்.
உயிர்போய்விட்டதென ஊருக்கே அறிவித்தார்கள்.
அடப்பாவிகளா.. இது அநியாயம்.
எனக்கு நடக்கிற அநியாயத்தை தடுக்கவோ மாற்றவோ இயலாததொரு கையறு நிலையில் கலங்கிப்போய் பார்த்துக்கொண்டு நிற்கிறேன். கொஞ்சமும் ஒத்துழைக்காத என் உடல் மீது எனக்கு தாளாக்கோபம். கோவப்பட்டு மட்டும்!
இப்பொழுது ஒன்றுவிட்ட இரண்டுவிட்ட சொந்தங்கள் தொடங்கி ஊரார் மொத்தத்திற்கும் கண்காட்சிப்பொருளாக்கிக் காட்ட, நான் நடுக்கூடத்தில் கிடத்தப்படப் போகிற நேரம் என்று அறிவித்தது இவரின் இரத்த உறவுக்கூட்டம்.
“அண்ணா, அதுக்கு முன்னாடி அண்ணியுடைய நகைகளையெல்லாம் கழட்டியெடுக்கணும். நேரம் போகப்போக உடம்பு ஊதிட்டா கழட்டமுடியாம ஆகிடும்..” நாத்தனார் சொன்னதும்
எதோ செய்யுங்கள் என்பதைப்போல தலையாட்டிவிட்டு இவர் முன்கூடத்திற்குப் போக..
“எனக்கெதுக்கு வம்பு. நான் இந்த ரூமுக்குள்ள ‘இது’ இருக்கும்போதே வரமாட்டேன். அப்புறம் அதக்காணோம் இதக்காணோம்ன்னு சொல்றதுக்கா!” என்றபடி ஓரகத்தி அடுப்படிக்குள் புகுந்துகொண்டாள்.
நாத்தனார் தன் மருமகளைக் கூட்டு சேர்த்துக்கொண்டு என் மீதிருந்த தங்க வளைவிகள், கழுத்தணிகள், காதுத்தோடு, கால்விரல்களின் மெட்டிகள், கைவிரல் மோதிரங்களையெல்லாம் கழட்டி எடுக்கிறாள். மருமகளை ஒரு கண் பார்த்துக்கொண்டே இமைக்கும் நொடிக்குள் என் கருநீலக்கல் மோதிரத்தை தன் ரவிக்கைக்குள் போட்டுக்கொள்கிறாள் நாத்தனார்.
‘அடிப்பாவி! அது நான் ஆசை ஆசையாய் நகைக்கொல்லரிடம் கொடுத்துச் செய்து வாங்கி அணிந்திருப்பது’.
இங்கே வரவேமாட்டேனென்று ஒரே பிடிவாதமாய் நின்ற என்னை.. வயதான காலத்தில் ஒன்று கிடக்க ஒன்றானால் பார்ப்பதற்கு பக்கத்தில் உறவுகள் இருக்கிற இடத்தில் வசிப்பதுதான் நல்லதென விடாப்பிடியாய் இங்கே இழுத்துவந்த அந்த மனிதனை அழைத்து வந்து கையும் களவுமாய் இந்த இரத்த உறவுச்சுரண்டுதல்களையும் ஏமாற்று வித்தகங்களையும் காட்டியே ஆகணும்..
காட்டினால் மட்டும்! கண்டுகொள்ளவா போகிறார்! இந்த உறவுக்கூட்டங்களுக்கு மத்தியில் கட்டின மனைவியை விட்டுக்கொடுத்து துச்சமாக பேசுகிற மனுசனிடம் என்னத்தை சொல்லி என்ன! என் சுயத்தை பறிகொடுத்தது போலவே என் உடைமைகளையும்..
அடுக்களையில் மற்றுமொரு கூத்து.. அது ஏனோ நான் வைத்திருப்பதையெல்லாம் எடுத்து கலைத்து இடம் மாற்றி வைப்பதில் திருப்தி கண்டுகொண்டிருந்தாள் ஓரகத்தி.. நான் என் அடுக்களையில் யாரையுமே அனுமதிக்காமல் வாழ்ந்தேன் எனவும் ஆள் அண்டாத சாதி எனவும் மற்றொரு உறவுக்காரியிடம் ரகசியக்குரலில் புறம் பேசிக்கொண்டே..
திருமணமாகி அகமதாபாத்தில் புதுக்குடித்தனம் தொடங்கிய வேளையில் இவரது அண்ணன் குடும்பம் அங்கே விருந்தாட வந்திருந்தனர். இந்த ஓரகத்தி தடாலடியாக என் அடுக்களைக்குள் நுழைந்து தனித்தனியாக ஊறவைத்திருந்த அரிசியையும் உளுந்தையும் சேர்த்துக்கொட்டி “மிக்ஸியில் அரைக்க சேர்த்துதான் ஊறவைக்கணும் இதுகூடவா தெரியாது உனக்கு?” என்றாள்.
மறுநாள் அவித்த இட்லியானது உடைக்கக்கூட முடியாத கல்லானபோது இவர் என்னிடம் எரிந்து விழுந்தார். ”அதெப்படி உன் அடுக்களைக்குள் அடுத்தவரை முடிவெடுக்க விடுகிறாய். என்னோடு இன்னொருத்தி படுக்கையை பகிர்ந்தால் நீ விடுவாயா?” சுள்ளென்று விழுந்த வார்த்தைகள் வலித்து அப்போதெல்லாம் கண்ணீர் சிந்த மட்டுமே தெரிந்திருந்தது.. நாட்கள் ஆக ஆகத்தான் பதிலுக்கு பதில் திருப்பிக்கொடுக்க படித்துக்கொண்டது.. இல்லாமல் போனால் இந்த மனுசனோடு இத்தனை வருடங்கள் சேர்ந்து குப்பைக்கொட்ட முடிவதேது!! எத்தனை வருடங்கள் ஆனபின்பும் என்னைக் கண்ணீர் விடவைத்த சொற்களொவ்வன்றையும் மறக்கவே முடியாது இன்னமும் மனதை அறுக்கத்தான் செய்கிறது..
ஓரகத்தியிடம் அந்த இன்னொருத்தி தன் பங்கிற்கு புரளி விதைக்கத் தொடங்கினாள் “நேத்துகூட நல்லாதான நின்னு பலகாரம்லாம் சுட்டுக்கிட்டு இருந்தாங்க. நைட் சண்டை போட்ற சத்தம் கேட்டுச்சே.. எதுனா மனசொடிஞ்சு மாத்திரைய போட்டுக்கிட்ருப்பாங்களோ..!”
‘இந்த சண்டைக்கெல்லாம் நான் சாகிறதுன்னா இத்தோடு எத்தனை லட்சம் தடவைகள் செத்திருப்பேன்..!’
செய்தி பரவி இவரைச் சார்ந்த அத்தனை சொந்த பந்தங்களும் குவியத்தொடங்கிவிட்டார்கள்.
கூடத்தில் என்னைக்கிடத்த ஒரு பாயை விரித்துப்போட்டார்கள்.
இவர் உள்ளே விரைந்து போய் எனக்கு மிக மிகப்பிடித்து நான் காஷ்மீரில் வாங்கிய போர்வையை எடுத்துவந்தார். நல்ல கைவேலைப்பாடுகளோடான அந்த போர்வையை பார்த்ததும் பிடித்துப்போய் பன்னிரெண்டாயிரம் விலைகொடுத்து வாங்கியிருந்தேன்.. எடுத்து உபயோகப்படுத்தக்கூட மனமில்லாமல் புதிதாகவே நான் பத்திரப்படுத்தி வைத்திருந்த எத்தனையோ உடைமைகளில் ஒன்று..
மின்னல் வேகத்தில் நாத்தனார் குறுக்கே வந்து, ”அண்ணா, இருங்க இருங்க.. நான் வேற கொண்டுவரேன்.. இதப்போட்டா அண்ணியோடவே போய்டும்”
“பரவாயில்லை இது உடம்பில் அழுந்தாமல் இருக்கும்..” என்றபடி விரித்துப் போட்டார். இந்த வார்த்தை என்னை என்னவோ செய்தது.. நலுங்கியிருந்த என் உடையை இழுத்துவிட்டு மேலேயும் ஒரு போர்வை போர்த்தினார். யாரோ, “மேலே கோடித்துணிய போடுங்கப்பா” என்றதும் இம்முறை நாத்தனார் வேகவேகமாக உள்நுழைந்து என் துணி அலமாரிக்குள் இருந்து.. இன்றின் தீபாவளிக்கான புதுப்பட்டுச்சேலையை கவனமாக தவிர்த்துவிட்டு அவசரகதியில் துழாவி தனக்கு பிடிக்காத நிறத்திலொரு சேலையைக் கண்டடைந்து கொண்டுவந்து விரித்து மேலே போட்டாள்..
தடியெடுத்தவரெல்லாம் தண்டல்காரர் என்கிற மாதிரி துக்க வீடென்றானதும் ஆளாளுக்கு உரிமையை எடுத்துக்கொண்டு கூடத்தில் கிடத்துவதைக்கூட இந்த திசையில கூடாது.. நேர்வாசலுக்கு முன் வேண்டாமென்றெல்லாம் மாற்றி மாற்றி தூக்கிவைத்து மொம்மை விளையாட்டிற்கு என்னை ஆளாக்கியிருந்தனர்.
ஒவ்வொருவரும் ஒன்றுபேச நான் இவரை பார்த்தேன்.. முகம் இறுகி மெளனமாக நின்றிருந்தார். வழக்கம் போலத்தான்.. முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்கமுடியாது. கல் இந்த மனுசன்.
“பண்டிகை நாளும் அதுவுமா ஐஸ்பெட்டியைத் தேடிப்பெருவது இங்க சிரமம்தான். டவ்ன் வரை போய் கிடைக்கிறதா பார்க்கணும்”
“ஐஸ்பெட்டி கிடைக்கலைனா எப்படிப்பா.. ஐந்து மணி நேரம் வரைதான் பாடி தாங்கும். அதுக்கப்புறப்னா வச்சுதான் ஆகணும். பையன் அமெரிக்காலருந்து வர்ற வரைக்கும் வச்சாகணும்ல”
போனில் நிலன், “ப்பா, இங்கே வானிலை சரியில்லை. நிறைய ப்ளைட்ஸ் கேன்சலாட்ருக்கு. நான் ப்ரோக்கன் ஏரோவிலிருந்து துல்சா போய்ச் சேருவதே இப்போதைக்கு முடியுமான்னு தெரில. அப்புறம் அங்கிருந்து ஹூஸ்டனுக்கு விமானம் கிடைத்து, அங்கிருந்து தில்லி.. தில்லியிலிருந்து நம்மூருக்கு நான் வந்துசேரணும்னா குறைஞ்சது ஃபோர் ஃபை டேஸ் ஆயிடும். எனக்காக பார்க்க வேண்டாம்பா. நீங்க ஆகவேண்டியத பாருங்க..”
நான் இருந்தாலும் இல்லாமல் ஆவதாலும் என்ன பெரிய வித்தியாசம் கண்டுவிடப்போகிறான் அவன்! கன்றுக்குட்டி வயதுவரை அம்மா அம்மாவென்று பின்னோடு வால்பிடித்துத் திரிந்தவன்தான்.. வளர வளர கிரிக்கெட், ஃபுட்பால், டென்னிஸென்று விளையாட்டுத்தனமாய் அப்பாவின் பக்கம் சாயத்தொடங்கியவனுக்கு அதன் பிறகு சகலமும் அப்பாதான். காளை வயதேகி ஊரைவிட்டுக்கிளம்பினதும் அதுவும் மாறி.. இருவரையுமே நிலன் கண்டுகொள்வதேயில்லை.
“ஏம்பா, என்ன இந்த பய இப்படி ஒரேடியா மறந்துட்டு இருக்கானே.. வாரத்துக்கு ஒருக்காவாவதும் ஒரு இரண்டு நிமிசத்துக்காவதும் போன்ல பேசினாத்தான் என்ன!” என்றால், “வளர்ந்த பிள்ளைகளிடம் அதெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது” என்பவர் இவர்.
“ஆமா பெத்த பாசத்தில தேட்றதெல்லாம் உங்களுக்கெங்க இருக்கப்போகுது.. சரியான கல்லுளிமங்கனாச்சே நீங்கதான்.. உங்களைப் போலத்தான இருப்பான் உங்க பிள்ளையும்..”
“இன்னும் யாருக்காவது காத்திருக்கணுமா அவங்க வீட்டு சைட்ல இருந்து யாராவது வருவாங்களா?”
“அவங்க சைட்ல இப்ப யாருமில்லை..”
“ஆமாம், யாருமற்ற தனித்த ஆனாதை நான்.. வேறு போக்கிடம் இல்லாததினால்தானே இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு வாழப் பழகியது!.. என் பக்கம் நின்று கேட்க நாதியற்றவளென்றுதானே என்னை வைத்து இந்த பொம்மலாட்டமெல்லாம் செய்கிறீர்கள்.. !“
வயிற்றில் பிள்ளையைச்சுமந்த காலத்திற் கூட ஆறுதலாக அனுசரணையாக யாருமே கூட இருக்கவில்லை. அப்போதே தாயற்றவள்நான். நஞ்சுக்கொடி இறக்கமாகியுள்ளது.. வெயிட் தூக்கக் கூடாது. ஓய்வு தேவை. கவனமா பார்த்துக்கணும் என்றெல்லாம் டாக்டரம்மா இவரிடம்தான் படித்துப்படித்து சொல்லியிருந்தார். வாரச் சந்தையில் கொண்டுபோய் இறக்கிவிட்டு கூட்டத்திற்குள் என்னால் வர முடியாது. நீ உள்ளே போய் வாங்கிவா. நான் இங்கேயே நிற்கிறேன் என்ற மனுசன். இரு கைகளிலும் சுமக்கமாட்டாத சுமையோடு சந்தைக்குள்ளிருந்து வருவதையும் பார்த்துக்கொண்டே அசையாமல் புகைபிடித்தபடி நின்ற மனுசன்.. அந்த நிமிடம் மொத்தமாக மனம் விட்டுப்போயிற்று. அந்த நிமிடம் முடிவெடுத்திருந்தேன் இத்தோடு போதும். இனி ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளப்போவதில்லை. பெற்ற ஒன்றுக்கும் நான் தேவையில்லை..
“சரி, அப்ப சட்டுபுட்டுன்னு ஆகவேண்டிய காரியங்கள பார்க்கலாம்” என்றனர்..
“கடைசியா எதையாவது மனசில நினைச்சு ஆசைப்பட்டாங்களா? அத செஞ்சு விட்ருவோம்.”
“கடைசி ஆசையா! அடப்பாவிகளா.. நான் இன்னும் என் முதல் ஆசையையே முறித்தவள் இல்லை. நானெல்லாம் இவ்வளவு சீக்கிரம் சாகிறவளும் இல்லை..”
அவங்க பக்கத்தில் போல எரிப்பதா இல்லை நம்ம பக்கத்தில் போல புதைப்பதா எனும் பட்டிமன்றம் வைத்து புதைப்பதென தீர்வாக்கினார்கள்..
ஒரு மூடிய குழிக்குள் நான் திமிர்ந்து போராடி தவித்துத் திண்டாடப் போகின்றேனென்பதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. கொடூரம்.. எனக்கு ஏன் இந்த கொடுமையெல்லாம் நடக்கிறது! என்ன செய்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள..!
“உடலைக் குளிப்பாட்டணும்” என்றார்கள்.
இவர் ஒருவழியாக வாயைத் திறந்து மறுப்புச்சொன்னார்.. “அதெல்லாம் வேண்டாம். இவளுக்குப் பிடிக்காது”
ஹப்பாடி! “ய்யா.. சாமி இந்த ஒன்றிலாவது எனக்குப் பிடிக்காததை செய்யவேண்டாம்ன்னு சொல்லத்தோணுச்சே..”
“அதெப்படி செய்யவெண்டிய சாங்கியத்தையெல்லாம் செய்யாம அனுப்பினா ஆத்மாக்கு சாந்தி கிடைக்காது.. சரி சரி, அப்ப மத்ததெல்லாத்தையும் செய்வோம்யா. அப்படியே விடமுடியாது. வெளியூர்லயே இருந்திட்டதால உனக்கு இதெல்லாம் தெரில. நாங்க பார்த்துக்கிறோம்யா”
அடுத்தடுத்து செய்யப்பட்ட ஒவ்வொன்றும் என்மேல் நடத்தப்படுகின்ற உட்சபட்ச கொடுமைகள்..
என்னை வீதிவாசலாக்கி கூட்டி மொழுகி வண்ணக்கோலமிட்டு நடுவே சாணம் பிடித்து அதில் பூசணிப்பூ வைத்துப் பார்ப்பதுபோல், கால்கட்டைவிரல்களை சேர்த்துக் கட்டினார்கள். காது மூக்கு துவாரங்களை அடைத்தார்கள். தலைமாட்டில் விளக்கும் ஊதுபத்திகளும்..
தலையில் எண்ணெயும் சீயக்காயுமாக அத்தனைபேரும்.. மாற்றி மாற்றி வந்து பூசிவிட்டு அத்தோடு பூச்சூட்டி, முகத்தில் மஞ்சலிட்டு ஒன்றரையணா வட்டத்திற்கு ஒரு பெரிய குங்குமப்பொட்டு இட்டு.. பெரிய பெரிய ரோஜா மாலைகளை என் மேல் சாத்தி, அசல் பத்ரகாளி தோற்றத்தில்.. ஒரு அலங்காரக் கோலத்தை செய்துவைத்தார்கள்.
கலையமாட்டாத கனவிற்குள் திணறிக்கொண்டிருக்கும் நான் மட்டும் இதோ இப்போது இந்த கோலத்தோடு எழுந்து உட்காரட்டும்.. ஒவ்வொருவரையும் அலறவிட வேண்டும் போல மனம் சினத்து தகித்தது..
மாரடித்துக்கொண்டு அழும் ஒப்பாரிச் சடங்கைகூட மிச்சம் வைக்கவில்லை. பார்க்க பார்க்க திக்கென்றிருக்கிறது.. கலக்கமும் அச்சமும் கூடி என்னுள் நடுக்கம் பரவிக்கொண்டிருக்கிறது.
விளக்கணைந்துவிடுமென நிறுத்திவைத்திருக்கும் மின் விசிறி.. வெக்கையோடு கூடி ரோஜாப்பூக்களும் ஊதுபத்தியும் சுழன்றடிக்கும் துக்கமுமாக நிரம்பிக்கிடந்தது வீடு..
மரணத்தின் மேல் இவர்கள் தூவும் சப்பிரதாயங்களெல்லாம் என்னை மூச்சுமுட்டச் செய்து உண்மையிலேயே கொன்றுவிடப்போகிறது..
நடக்கின்ற சம்பிரதாயங்களெல்லாம் வீடியோ காலில் நிலனுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது..
நிலனும் கலைந்த தோற்றத்தில் கலங்கிப்போய்தான் இருந்தான்..
“டேய் நிலன்.. இல்லடா எனக்கு ஒன்னுமே இல்ல. நல்லா இருக்க என்னைப் பிடிச்சு வச்சு கொல்றாங்கடா… இதிலேர்ந்து எப்படி வெளில வர்றதுன்னு தெரிலடா நிலன். இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில என்னை புதைக்குழிக்குள்ள தள்ளி மண்ணைப்போட்டு மூடி கொடிக்கள்ளி சாத்தாம யாரும் ஓயப்போறதில்லை.அம்மாவுக்கு நிஜமாவே ரொம்ப பயமா இருக்கு.. என்னால முடிலடா. உனக்காவது நான் பேசறது கேக்குதா! அம்மாவ காப்பாத்துடா நிலன். இதையெல்லாம் நிறுத்தச்சொல்லு..”
நெய்ப்பந்தம் பிடித்தவாறு சுற்றிவந்துகொண்டிருந்த சின்னக்குட்டிகளில் தான்யா சட்டென்று நின்று என்னை உற்று நோக்கினாள்..
“பாட்டி, ஹும் ஹிம்ன்னு சொல்றது கேக்குது..”
நாத்தனார் முன்னேவந்து அவளை அணைத்துப்பிடித்துக்கொண்டாள். “இல்லடா குட்டி, பாட்டி சாமிக்கிட்ட போய்ட்டாங்க. இனிமே பேசமாட்டாங்க”
“அடப்பாவிகளா.. இல்லவே இல்லை. தானு குட்டி சொல்வது நிஜம். அவளுக்கு கேக்கிறது. கொஞ்சம் காதுகொடுத்து நான் சொல்றத கேளுங்க ப்ளீஸ்” அலறிக்கொண்டிருக்கிறேன்.
“டீச்சரம்மா மாதிரி ஒருத்தங்கள பார்க்கவே முடியாது.. முடியலைன்னா கூட ஓயாம ஓடி ஓடி வேலை செஞ்சுக்கிட்டே இருப்பாங்க. ஒரு பொருள வீணாக்கினாலும் டீச்சரமாக்கு புடிக்காது…. அத சம்பாதிக்க எவ்வளவு கஷ்டபட்றோம். மிதமிஞ்சிப்போய் தூக்கி குப்பையில கொட்றதுக்கா! குழம்போ கஞ்சியோ அளவா வச்சுப்பழகணும் முத்தும்பாங்க..”
நாட்டில் பலபேர் செய்வதைப்போலவே.. காலையில் குறையாக புறம்பேசியதையே சொற்களை மாற்றிப்போட்டு இப்போது எனக்கு அஞ்சலியாக்கிவிட்டிருந்தாள் முத்துவடிவு.
பாடை கட்டப்பட்டது.
மூங்கில் தட்டில் பச்சை ஓலைகள் கொண்டு வேய்த பாடையில் கிடத்தி ஆம்புலன்ஸ் போலொரு வண்டியில் ஏற்றிவைத்தார்கள்.. ஆம்புலன்ஸ் வண்டியில் மட்டும்தான் பயணித்ததே இல்லையென்கிற குறையையும் சேர்த்து தீர்த்துவைக்கிறார்கள் போல..
இந்த இறுதி கணம் வரைக்கூட நான் என் போரட்டத்தைக் கைவிட தயாராயில்லை. என்னை விடுத்தரப்போவதில்லை.. முடிந்தளவு முயற்சிகளை கைவிடாது பிடித்திருந்தேன்..
ஏற்றி உள்ளே கிடத்தியவர்களில் இருவர் அந்த வண்டியைச் செலுத்துபவர்கள்..
“லேய், கிழவி மூக்குத்தி போட்ருக்குதுடா.. வைரம் போலத்தான் தெரியுது”
“டேய் வேற என்னென்ன போட்ருக்குன்னு அப்படியே பார்த்து வை..”
அடப்பாவிகளா! இடுகாட்டில் இப்படி நகைக்காக..கழட்டியெடுக்க முடியாது போனால் அறுத்துக்கூட எடுப்பார்களென்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.. கடைசியில் அது எனக்கே நடப்போகிறது..
மூக்கினுள் விரல் செலுத்தி கழட்டத்தயங்கி நாத்தனார் மூக்குத்தியை விட்டுவிட்டாள் போல.. இந்த படுபாவிகள் இந்த நகைக்காக என்னை..
என்னைக்கிடத்தியதும் தானும் வண்டியில் ஏறவந்தார் இவர். இவருடைய அண்ணன் இவரைத் தடுத்து, “மூங்கில் கால்ல இடிக்கும். உனக்கு உட்கார முடியாது. நாம இந்த வண்டிக்கு பின்னாடியே காரில் போய்டலாம்..
“பரவாயில்லை. சமாளிச்சுக்கலாம் நான் இதிலேயே வரேன்..”
நல்லவேளை
குளிரச்சம் கூடி நடுக்கம் கண்டுகொண்டிருக்கிற என்னை இந்தவண்டியில் தனியே விட்டுவிட்டுப்போய் விடுவாரோவென ஒருகணம் தவித்துப் போயிருந்தேன்.. ஏனோ இவர் அருகில் இருப்பது எனக்கு ஆறுதலாய் இருந்தது..
வண்டி கிளம்புவதற்குமுன் பாலும் நீரும் சேர்த்த ஒரு மண்பானையை இவரிடம் தந்து பிடித்துக்கொள்ளச் சொன்னார்கள்.
இவர் வேஷ்டி மட்டுமணிந்து மேலே ஒரு வெள்ளைத்துண்டை போர்த்தியிருந்தார். மடியில் பானையை பிடித்தபடி.. வண்டி ஓட்டத்தில் பாடைக்கட்டு நகர்ந்து அவரின் முட்டியில் இடித்துவிடாமல் ஒரு கையால் பிடித்துக்கொண்டு.. இப்படி அமர்ந்து வருவது சிரமம்தான்..
வண்டியின் அசைவில் தளும்பி பால்நீர்க்கலவை என் மேல் சிந்தியது.. சட்டென மேல்துண்டை உருவி என் முகம் கழுத்து தோள்ப்பட்டையில் இருந்த ஈரத்தையெல்லாம் துடைக்கத் தொடங்கினார்.
வெறும் உடலென்றானபின்னும் என் மேல் சிந்திய ஈரத்தை துடைக்கவேண்டுமென்று தோன்றுகிறதே இந்த மனிதருக்கு..
பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இவருடைய கண்கள் என் முகத்தின் மீதிருந்து நகரவில்லை.. துடைத்துக்கொண்டிருந்தவர் சட்டென உடைந்து அழுகிறார். இத்தனை வருட மணவாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லாத இவரை இன்றில் நான் பார்க்கிறேன்..
எத்தனைதரம் கல்லுளிமங்கனென்று திட்டியிருப்பேன்… அத்தனை அழுத்தக்காரர்.. இப்பொழுதோ!
கண்ணீரைக்கட்டுப்படுத்த முனையவே இல்லை.. என் முகத்தையே பார்த்தபடி அழுந்துகொண்டே இருக்கிறார்.. இவரின் இந்தக் கண்ணீர் என்னைச் சுடுகிறது. என் விரைத்துக்கிடந்த உடலையும் தாண்டி இந்த கண்ணீரின் வெதுமை என்னைத் தொடுகிறதென்றால்…
நான் யாருமற்ற தனித்த அனாதை என்கிற என் உணர்வின் மேல் விழுந்து கரையச்செய்கிறது இந்தக் கண்ணீர்..
இருப்பில் எப்படியோ! என் இல்லாமையில் கண்ணீர்விடவும் இருக்கிறது ஓர் உயிர்..
இந்த ஐம்பத்தியெட்டு வயதிற்கும் இந்த உடலைத்தூக்கிக்கொண்டு சுமந்த ஒட்டுமொத்த காலத்திலும் கிட்டாத அனுபவங்களையெல்லாம் இந்த ஒரே நாளின் நெடுங்கனவில் கண்டுவிட்டேன்..
இதுதானா!
இதற்காகத்தானா…! உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்ததெல்லாம்..
நான் இவரை அணைத்துக்கொள்கிறேன்.. கண்ணீரைக் கட்டுறுத்த முயல்கிறேன். முயற்சியில் தோற்றபிறகு சட்டென ஒரு விட்டேத்தி மனநிலை வந்து ஒட்டிக்கொள்கிறது.. என்னிலிருந்து என் உடலை பிரித்துப்பார்க்கத் தோணுகிறது..
நெடுங்கிடையாக கிடக்கும் என் உடலை ஒரே ஒருமுறை உற்றுப்பார்க்கிறேன்..
“இது போதும் போ..”
நானே என்னை வழியனுப்பமுடிகிற விந்தையை வியந்தபடியே வண்டியைவிட்டு இறங்கிக்கொள்கிறேன்.
என்னை விட்டுவிட்டு என் உடலோடு போகிற இவரை.. காட்சி கண் மறையும் வரை பார்த்துக்கொண்டு நிற்கிறேன்.
மேலே.. வரிசை மாறாத ஒரே சீர்க்கோட்டில் வீடேகப் பறக்கின்றன பறவைகள்.
திசையறிந்த பறவைகள் அவை..
நீலமும் வெண்மையும் ஆரஞ்சும் சிவப்பும் பொன்மஞ்சளுமான நிறங்களில் கோர்வையுற்று என் முடிவிலிக் கனவிற்குள் மெல்லக்கரைந்து கொண்டிருக்கிறது அந்தி வானம்.
*********