இணைய இதழ்இணைய இதழ் 75சிறுகதைகள்

தீஸிஸ் – ஜார்ஜ் ஜோசப்

சிறுகதை | வாசகசாலை

1

துறைக்குள் நுழைந்ததிலிருந்து மனோகர் படு உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருந்தார். முழுக்கை வெள்ளைச் சட்டையை ஜீன் பேண்ட்டில் இன் செய்து, எண்ணெய் பூசி தலை வாரியவராய் பளிச்சென்றிருந்தார். துறைத்தலைவர் தன் ஆசனத்தில் அமர்ந்ததும் ஸ்வீட் பாக்ஸை எடுத்து நீட்டினார். 

‘வைவா நடக்கும்போது எல்லோருக்கும் குடுங்க மனோகர். இப்ப எதுக்கு?’

‘அதுக்கு தனியா இருக்குங்கய்யா. இது பிரஃபசர்ஸ்க்கு மட்டும் தனியா’ எனக் குழைந்தார்.

அவர் பெற்றுக்கொண்டதுமே அருகிலிருந்த பேராசிரியரை கண்டுகொள்ளாது மூன்று மேஜைகள் தள்ளியிருந்த தனது நெறியாளர் ஆதிமுருகவேலை தேடி வந்து அக்ஷயாவிலிருந்து கொணரப்பட்ட ஸ்வீட் பாக்ஸை நீட்டினார்.

‘என்ன மனோகர் தயாராகிடீங்களா?’ என்று தன் வெள்ளந்தி மாறாச் சிரிப்புடன் பெற்றுக்கொண்டு அமர்ந்தார். பிறகு வரிசைமுறையில் மற்ற பேராசிரியர் மார் அனைவருக்கும் இனிப்பு டப்பாக்கள் வழங்கப்பட்டன. முழுக்க வழிக்கப்பட்டிருந்த தன் கன்னத்தில் குழந்தையை கிள்ளி கொஞ்சுவதைப்போல அடிக்கடி தடவி நீவியபடியிருந்தார். விட்டால் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த திருவள்ளுவருக்கும் ஸ்வீட் பாக்ஸ் தந்துவிடுவார் என ஏசி அறையிலும் நெற்றி வியர்வை பூக்க சுழன்றுகொண்டிருந்தவரை நூலகம் சென்று அமருங்கள், நன்றாக தயார் செய்துகொள்ளுங்கள் என அனுப்பி வைத்தேன். நான் நகர்த்திவிடுவதை அவர் அறிந்திருந்தாலும் மகிழ்வுடன் அல்லது அப்படிக் காட்டிக்கொண்டவராய் அடுத்த அறையிலிருந்த துறை நூலகத்தினுள் சென்று அமர்ந்துகொண்டார்.

காப்பி வாங்க பிளாஸ்க்குடன் புறப்பட்ட பிலஸ்ஸி அக்கா, ‘இதோ வந்துடுறேன் சார்’ எனத் தலைவரிடம் இசைவு பெற்றுவிட்டு அகன்றார். மழை சன்னமாய் பொழியத் தொடங்கியிருந்தது. ஜன்னல் வழியாய் பார்க்கையில் வெளிச்சத்தின் வெப்ப அசைவுகளுடன் ஊடாடி ஆவேசம் பொங்க சல்லடையிலிருந்து நழுவும் புட்டு மாவை போல் வடிந்தது. 

‘மனோகர் எம்.பில் தீஸிஸ் முடிக்கிறது தமிழுக்கே பொறுக்கலபோல அதான் வானம் அழுது வடிக்கிது’ என்ற முருகவேல் சார், என் மௌனத்தின் அர்த்தம் புரிந்தவராய் ‘சரி நீங்களும் நூலகத்துல போய் இருங்க தம்பி. துறை மீட்டிங்னு சொன்னாங்க’ என்று அனுப்பி வைத்தார்.

துறை நூலக மேஜையில் நேற்று மாலை சிந்தியிருந்த தேநீர்த் தடயங்கள் தெரிந்தன. அதன் கரை ஒட்டிக்கொள்ளாதவாறு தன் தீஸிஸ் நோட்டை கைகளில் ஏந்திப் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தார் மனோகர். துறை மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்குமென முதன்மையாகப் பேணப்படும் முப்பதாயிரம் புத்தகங்களைக் கொண்ட நூலகம் தன்னை ஆள்வார் இன்றி உறங்கிக் கொண்டிருந்தது. நூலக காப்பாளரான பேராசிரியர் அன்று விடுமுறையில் இருந்தார். 

இந்த மனுஷன் இங்கேயுள்ள நூல்களைப் பயன்படுத்திக்கொண்டிருந்தாலே சிறந்ததொரு ஆய்வேட்டை முன்வைத்திருக்கலாமே என்று எரிச்சலாய் வந்தது. பள்ளி ஆசிரியர்களுக்கெல்லாம் என்ன கேடு! ஏன் கடமைக்கென ஆய்வேடு எழுதுகிறேன் என்று ஆய்வு மதிப்பைத் தரமிறக்குகிறார்கள் என்று மனோகரையே பார்த்தபடி நின்றிருந்தேன்.

‘வாங்க சார், உட்காருங்க. எத்தனை மணிக்குனு ஐயா சொன்னாங்களா?’ என்றார்.

‘இப்ப துறை மீட்டங் இருக்கு. ஒரு பத்தரைக்கா ஆரம்பிச்சிடுவாங்க. அனேகமா எனக்கு அந்த நேரம் யூ.ஜி வகுப்பு இருக்கும். நல்லாப் பண்ணுங்க’ என்றேன்.

கண்களை மெதுவாய் மூடி திறந்து ‘நிச்சயமா’ என்றார். 

 ”சிகரத்தின் ‘மூத்தவன்’ நாவலில் சமூக விழுமியங்கள்” என்ற தலைப்பில் தயார் செய்யப்பட்டிருந்த எம்.பில் தீஸிஸ் தடியாய் அவர் கரங்களில் கிடந்தது. என்றும் போலன்றி மூர்க்கம் கொண்டு கழன்று விழுவதைப்போல் மின்விசிறி காற்றை வாரித் தள்ளியது. அந்நேரம் ராமசாமி சாரின் எம்.பில் மாணவரும் தனது அரங்கேற்றத்திற்காக நூலகத்திற்குள் நுழைந்தார். பலமுறை சம்பிரதாய வணக்கங்களை வைத்துவிட்டு எப்படிப் பேச வேண்டுமெனக் கண்கள் மூடி ஒத்திகை மேற்கொள்ளத் தொடங்கினார். பின்பு,

‘மனோகர் சார். நல்லா தயார் பண்ணிடீங்க போலயே. யாரும் கேள்வி கேக்காம இருக்கணும்!’ என உதட்டைக் கடித்தவாறு சொன்னார்.

‘ஏங்க வைவா’ங்கிறதே கேள்வி கேக்கதானே. ஏன் இவ்வளவு பதட்டம் நீங்க எழுதுனதுதானே?’ என்று கேட்டுத் தொலைத்தேன்.

‘என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க. ரெண்டு வருஷ உழைப்பு சார். என் கைப்பட எழுதுனது. பதட்டம் இல்லாம இருக்குமா? அதுவுமில்லாம நீங்கலாம் முழுநேர ஆய்வாளர். செறிவாப் பண்ணுவீங்க. நாங்கலாம் கிடைக்கிற நேரத்துல வாசிச்சிட்டுத்தானே எழுத முடியும்’ என்றவரது நூலின் முகப்பில் ”பெண்ணிய நோக்கில் அமலாவின் ‘அஞ்சுகம்’ புதினம்” என்றிருந்தது. அவசரத்துக்கு பெத்தெடுக்க ஏன்டா ஆய்வுக்குள்ள வர்றீங்க என்ற குமுறலை அடக்கிக்கொண்டு புன்னகைத்தேன். அவரைப் பார்த்து நீங்க எழுதுனதுதானே என்று கேட்டதும், போன வாரம் வசமாய் நெறியாளரிடம் பிடிபட்ட சம்பவம் மனோகருக்கு நினைவுக்கு வந்திருக்கும்போல, பாவம் வியர்த்துவிட்டது. 

2

ஆதிமுருகவேல் சாரும் நானும் துறை நூலகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் மனோகர் உள்ளே நுழைந்தார். முருகவேல் சாருக்கே அவர் தன்னிடம்தான் எம்.பில் மேற்கொள்கிறார் என்று நினைவில்லாமல் போகுமளவு நெடுங்காலம் கழித்து வந்திருந்தார்.

‘ஐயா உங்கக் கிட்ட முந்தின வாரம் சொன்னேனில்லங்கயா, இன்னிக்கு ஃபைனோட ஃபீஸ் கட்ட வரணும்னு அதான் கையோட தீஸிஸையும் தூக்கிட்டு வந்துட்டேன்’ என பிஸ்கட் அத்தர் மணம் கமகமக்க வெள்ளைச் சட்டை வேட்டியில் ஜம்மென்று வந்து நின்றார்.

‘ஆஹ் நினைவிருக்கு மனோகர். வாணியம்பாடி காரர்ல நீங்க. ஸ்கூல் வாத்தியார் வேற. நல்லது நல்லது. எங்க ஆய்வேடைக் கொடுங்க, இவ்வளவு நாள் எடுத்து எக்ஸ்டென்ஷன் ஃபீஸெல்லாம் கட்டி எந்தளவு வந்துருக்குனு பாத்துடலாம்’ என்றார். 

மனோகர் திமிருடனும் பெருமிதத்துடனும் தன் ஆய்வேட்டை நீட்டினார். முருகவேல் சார் திடுக்கிட்டவரைப்போல் குரலெடுத்து ’என்னய்யா பண்ணி வச்சிருக்கீங்க’ என்றார்.

உட்கார்ந்திருந்த மனோகர் பதட்டத்துடன் ‘என்னங்கய்யா!’ என முன்னகர்ந்து எதிரே அமர்ந்திருந்த சாரை அண்டினார்.

 ‘மூத்தவன் நாவல்னு வரவேண்டிய இடத்தில முத்தவன்னு போட்டு வச்சிருக்கீங்க. இதைக்கூடவாங்க பாக்காம வருவீங்க. முகப்புப் பக்கத்துலேயா இப்படி!’

‘ஐய்யய்யோ மன்னிச்சிருங்கய்யா. இந்த பிரிண்டிங் போட்டவங்க மிஸ்டேக் பண்ணிட்டாங்கபோல. மாத்திடுறேன்’ என்று கெஞ்சலாய் சமாளித்ததும் உள்பக்கங்களைப் புரட்டவாரம்பித்தார். முக்கால் பக்கத்தில் எழுதப்பட்டிருந்த முன்னுரையை ஒரே அடியாக தன் சிவப்புப் பேனாவினால் அடித்ததும் மனோகர முகம் வாடித்தான்போனது. பக்கங்கள் தோறும் மலினமாக ஒற்றுப் பிழைகளும் வாக்கிய அமைப்பில் தடுமாற்றங்களும் தெரிந்தன. மேற்கோள்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நூல்கள் சான்றெண் நூற்பட்டியலில் இடம்பெறாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டினார். வெகு நேரம் ஒன்றும் சொல்லாமல் திரும்பத் திரும்ப ஒரே பக்கத்தையே வாசித்தார். ஊற்றப்பட்ட தேநீரை வேண்டாம் எனத் தவிர்த்துவிட்டு ஆய்வேட்டில் மூழ்கினார். கோட்பாடுகளுடன் தீவிர கருத்துகளை ஆய்வாளர் முன்வைத்திருக்கிறார் போலவே இதற்கு முன்பு இப்படி ஒரு சில பக்கங்களில் இந்த மனிதர் குத்துக்காலிட்டு பார்த்ததில்லையே என வியந்தபடி தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன். ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திவிட்ட பெருமிதத்துடன் மனோகர் அடுத்த கணினி அறைக்கு சத்தம்போகுமளவு தேநீரை உறிஞ்சி சுவைத்துக்கொண்டிருந்தார்.

‘கேபா இதை வாசிங்களேன்?’ என்று ஆய்வேட்டை நீட்டவே கப்பை வைத்துவிட்டு பெற்றுக்கொண்டேன். 

இரண்டாம் இயல்

நிலவியலும் சாதியமும்

என்ற தலைப்பில் கட்டுரை தொடங்கியது. மூன்றாம் இயல் எங்கு வருகிறதென பக்கங்களைத் திருப்பிப் பார்த்தேன். எழுபத்தைந்து பக்க ஆய்வேட்டில் இரண்டாம் இயல் மட்டுமே முப்பத்தைந்து பக்கம் சென்றது.

அவ்வியலின் முதல் பக்கத்தை வாசித்துவிட்டு, ‘ரொம்ப நல்லா இருக்கே சார். ஒரு வரியைக்கூட வெட்டணும்னு தோணல’ என்றேன்.

தன் மீசையில் ஆங்காங்கே மலர்ந்திருந்த நீள் வெண் குறு மயிரினில் ஒன்றை இரு விரலால் துலாவியபடியே, ‘இது இவரோட எழுத்து நடையாட்டமே இல்லயே கேபா. யாரோ பழக்கப்பட்டவங்க விமர்சனம் மாதிரியிருக்கு. கொஞ்சம் கணிக்கமுடியுதா பாருங்க’ என்றார். சொல்லிவிட்டுச் சொல்லியதைப் பெரிதாய்ப் பொருட்படுத்தாதவர் போலவே மேலும் கீழுமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார். தாடியிலும் ஜிப்பா உடையிலும் பார்க்க அரேபிய முதல் இசைக் கோட்பாட்டாளன் அல்-கிந்தியைப் போலிருந்தார். ஆழ்ந்த சைவ ஈடுபாடு இருப்பினும் சின்னதாக விபூதிக்கீற்றுகூட இல்லாமல்தான் கல்லூரிக்கு வருவார். ஓர் ஆட்சியாளன் எப்படிச் சமய அடையாளமின்றி குடிமக்கள் முன் தோன்ற வேண்டுமோ அதுபோலத்தான் கற்பிப்பவனும் மாணவர்கள் முன்பு இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வதை நினைத்துக்கொண்டேன்.  

மனோகர் அமைதியின் அழுத்தத்தைத் தாங்கயியலாது, ஏதேதோ சொல்ல வந்து முழுங்கியவராய் மீண்டும் வாயெடுத்து ‘ஐயா நான் எழுதுனது தாங்கய்யா’ என்றார்.

‘அப்படியா மனோகர் கொஞ்சம் இருங்க. ஏன் பதட்டப்படுறீங்க உங்க எழுத்துதானே டீ சாப்பிடுங்க’ எனத் தனக்கு வழங்கப்பட்ட தேநீரையும் அவரிடமே நீட்டிவிட்டு உறைந்துபோய் என் கையிலிருந்த ஆய்வேட்டையே பார்த்தார்.

‘சார் யாரோ நல்ல தேர்ந்த கைதான் எழுதிருக்கு சார். நடையைப் பார்த்தா இஸ்.றா ஸ்டைல்ல இருக்கு. ஆனா எங்கேந்து எடுத்ததுனு மட்டும் தெரியல’ என்றேன்.

மனோகரை சிறிது நேரம் வெளியே இருக்குமாறு அனுப்பிவிட்டு தன் மொபைலை எடுத்து ‘அருட்காட்சி’ என்ற தன் வலைப்பூவை திறந்து, கட்டுரையின் முதல் வரியைத் தட்டித் தேடினார். மூத்தவன் நாவலை முன்வைத்து இறுகிப்போன சாதியக் கட்டுமானத்தின் வேராய் எங்ஙனம் பெண்ணுடல் கட்டமைப்பட்டுள்ளது என்ற மையப் பார்வையில் எழுதியிருந்த முழுக் கட்டுரையையும் காட்டினார். அச்சுப் பிறழாமல் ஆய்வேட்டில் அப்படியே பதிவாகியிருந்ததைச் சரிபார்த்துக் கொண்டோம்.

‘இதைத்தான் யோசிச்சிட்டே இருந்தேன் தம்பி. ஒரு நிமிஷம் எனக்கே பிடிபடல இதை நாந்தான் எழுதிருக்கேன்னு’ என்று சிரித்தார். 

‘என்ன சார் அறிவுத் திருட்டா இருக்கே. நிச்சயம் இவர மாதிரி ஆளையெல்லாம் முடிக்க விடக்கூடாது’ என்றேன். 

ஒன்றும் பேசாது புன்னகைத்துவிட்டு மனோகரை உள்ளே அழைக்கச் சொன்னார்.

மனோகர் வந்ததும், ‘என்னங்க இந்தக் கட்டுரையை எங்கேந்து எடுத்து எழுதியிருக்கீங்க’ என்றார்.

‘இல்லங்கய்யா நானா எழுதினது’ என உறுதியான குரலுடன் உரிமைக் கொண்டாடினார்.  

இதைப் பாருங்க மனோகர் என வலைப்பூவிலிருந்த நீள் கட்டுரையைக் காட்டினார். 

மெதுவாய் திரையைக் கீழும் மேலுமாய் தள்ளிப் பார்த்துவிட்டு, ‘ஆமாங்கய்யா அப்படியேதான் இருக்கு. ஆனா எப்படின்னு தெரியல’ என்று தன் பெரிய முகத்தில் அப்பாவித்தனத்திற்கெனப் பயிற்சியெடுத்து வைத்திருந்த பாவத்தை பிடித்தார்.

 ‘எப்படின்னு தெரிலங்கலா. நீங்க எழுதின கட்டுரையை இந்த பிளாக்கை வச்சிருக்கவன் 2018லே காப்பி அடிச்சிருக்கான்னா பாருங்களேன். அவனெல்லாம் சும்மாவே விடக்கூடாது. முதல்ல இவன் பேர் என்னன்னு பாத்துடலாம்’ என்றார்.

மனோகர் யூடியூபில் ஜோசியம் பார்க்க மட்டுமே திறன்பேசியை பயன்படுத்தும் ஆசாமிகளுள் ஒருவர்போல. அவருக்கு வலைப்பூ என்றாலே என்னவென்று புரியவில்லை என்றுதான் அவரது கண்கள் காட்டித் தந்தன. இருந்தும் முருகவேல் சாரே கட்டுரையின் அடிப்பாகம்வரை திரையை இழுத்து ஆதிமுருகனார் என்ற வலைப்பூவின் சொந்தக்காரரது பெயரைச் சுட்டிக்காட்டினார்.

மனோகரை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அப்போதும் அவரிடம் எந்தச் சலனமும் இருக்கவில்லை. அப்படியா என்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தவரை பார்த்துச் சிரிப்புதான் வந்தது.

‘இந்தப் பேரை படிங்க மனோகர்’ என்றார் முருகவேல் சார்.

‘ஏதோ ஆதிமுருகனார்னு போட்ருக்குங்கய்யா. நல்லாதான் எழுதிருக்காரு. ஒரே மாதிரி சிந்தனைல’ என்றதும் பேராசிரியர்க்கு கோபம் வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இயல்பான குரல்தொனி மறைந்து சற்றே கூடுதலாய் வரவழைத்துக்கொண்ட கடுகடுப்புடன்,

‘என் பேரு என்னா?’ என்றார்.

‘ஐயா உங்க பேருங்களா. உங்கது ஆதி முருகவேல் தானங்கய்யா’

‘ஆமா அதுதான். கட்டுரைல என்ன பெயர் போட்டிருக்கு’

‘ஆதிமுருகனார்னு…’ 

‘ம்ம் நான்தான் நீங்க பாராட்டுன அந்தச் சிந்தனையாளன்.’ 

‘மன்னிச்சிருங்கய்யா ரெஃபரென்ஸ்க்கு பயன்படுத்தையில பேரு விடுபட்டு போச்சு’ என்றதும் சிரித்துக்கொண்டிருந்த முருகவேல் சார் மௌனமாகிவிட்டார். உண்மையிலே கோபம் தலைக்கேறியிருக்க வேண்டும். ஞானசம்பந்தனாக மாறி கழுவேற்றத்திற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிடுவாரா அல்லது அருட்பிரகாசரின் பக்தனாக மன்னித்துவிடுவாரா என்று பார்த்துக்கொண்டிருக்கையில், ‘உங்களுக்கு எழுதிக் கொடுத்தவங்க கிட்ட முறையா பார்த்துப் பண்ணி கொடுக்க சொல்லுங்க. வைவாவுக்கு வரும்போது நான் திருத்தினது எல்லாமும் மாறியிருக்கணும்’ என்று சொல்லிவிட்டு வகுப்புக்கு புறப்பட்டுவிட்டார்.

3

‘சார் ஆய்வேட்டை கொஞ்சம் கொடுங்க பார்க்கலாம்‘ என்றேன்.

‘காலையிலயே முருகவேல் சார்கிட்ட காண்பிச்சுட்டேன் சார்’ எனத் தயங்கினார்.

‘அட நானும் சார் ஸ்டுடண்ட் தாங்க. செத்த காட்டுங்க தந்துடுறேன்’ என வாங்கிக் கொண்டேன்.

இரண்டாம் இயலின் தலைப்பு மாறாதிருந்தது. உள்ளே கட்டுரையின் சாரமும் நீளமும் மாறாமல் வாக்கியங்கள் மட்டும் மனோகரது சொந்த நடைக்கு மாறியிருந்தன. அல்லது அவருக்கு எழுதித் தந்தவரது நடைக்கு. மற்ற சந்திப் பிழைகளும் வாக்கிய அமைப்புகளிலிருந்த பிசகல்களும் களையப்பட்டிருந்தன. அனேகமாக, வாங்கிய பொருள் கெட்டுப்போனால் கோபத்துடன் கடைக்காரன் முகத்தில் வீசுவிட்டு ஏசும் தரிசனவாதியைப்போல் தீஸிஸ் அடித்துக் கொடுத்தவனிடம் சண்டையிட்டுச் சரிசெய்திருப்பார் என நினைக்கிறேன். அவரிடம் நூலை ஒப்படைத்துவிட்டு, ‘ஓகேங்க’ என்றேன். 

‘சாரும் பரவால்லனு சொல்லிட்டாங்க சார். அன்னிக்கு வந்துட்டுப் போனதுக்கு அப்பறம் எங்க இன்னொரு முறை தள்ளிப்போயிருமோ திரும்பவும் ஃபீஸ் கட்டணுமோனு ரொம்ப பயந்துட்டேங்க. நல்ல வேளை சார் ஏத்துக்கிட்டாங்க’ என்றார். ஒன்றும் பதில் தரவில்லை. 

‘அந்த நாவல்ல வர வட்டார மொழி வேற புரியவே இல்லங்க சார். நான் பகாவின் ‘பள்ளியறை முதல் கல்லறைவரை’ நாவல தான் எடுத்துக்கிறேன்னு சொன்னேன். சார் என்ன நல்லா மாட்டிவிட்டுட்டார். என் கெப்பாஸிட்டி அவ்ளோதார் சார்’ என அவராகவே தொடர்ந்து தன்னை நியாயப்படுத்திக்கொண்டே போனார்.

மெல்ல எழுந்து வாய்மொழித்தேர்வு நடக்கவிருக்கும் கருத்தரங்க அறைக்குச் சென்று முதுகலை மாணவர்கள் ஒலியமைப்பை சீரமைப்பதை மேற்பார்வை செய்பவனைப் போல் சுற்றும் பார்த்துவிட்டு ஓரமாய்ச் சென்று அமர்ந்துகொண்டேன். 

‘நீ பாட்டுக்கு எதுனா கேள்வி கேக்குறேன்னு திணற வச்சிடாதய்யா. என்ன பண்ணுறது நல்லா தெரியுது போலிங்கதான்னு. சில ஆயிரம் சம்பளம் கூடும்னு அலையிறாங்க எம்.பிலுக்கு. நல்ல வேளையா இந்த வருஷத்தோட மேலருக்கவன் எம்.பில்ல தூக்கச் சொல்லிட்டான். சொல்லப்போனா இவங்க ரெண்டு பேரும்தான் கடைசி. இழுத்தடிக்காம வாங்கிட்டுப் போகட்டும். இல்லனா இதுங்கள கட்டிக்கிட்டு நாமதான் அழுவணும்’ என்று சொல்லிவிட்டுப் போனார் துறைத்தலைவர் ஆரோன்.

‘சரிங்க சார்’ என அரைமனதாய்ப் பதில்தந்துவிட்டு அமர்ந்தேன். முதல் நான்கு வரிசையில் இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மற்றும் முதுகலைத் தமிழ் மாணவ மாணவியர் அமர்ந்துகொண்டனர். மேடைக்கும் அவர்களுக்கும் மத்தியில் இடப்பட்டிருந்த நாற்காலிகளை அந்நேரம் வகுப்பு இல்லாத துறைப் பேராசிரியர்கள் நிறைத்தனர். நான் மட்டும் தனியாய் இறுதி வரிசைக்கு முன் வரிசையில் இருந்தேன். அருகிலிருக்கும் அரசுக் கல்லூரியிலிருந்து வழமைப்போல் பேராசிரியை வடிவுக்கரசி புறத்தேர்வாளராக வந்திருந்தார். 

நிகழ்வுக்கே வராத கல்லூரி நிர்வாகத்தின் கடைநிலை பொறுப்பாளர்கள்வரை போற்றிப் புகழ்பாடிவிட்டு, ஸ்தூலமாய் நாற்காலியில் அமர்ந்திருக்கும் கல்லூரியின் முதல் முன்னவர்களுக்கு முகமன்கள் பாடிவிட்டு ஆய்வாளர்களிடம் சுருக்கமாக ஆய்வேட்டின் சாரத்தைப் பத்து நிமிடங்களுக்கு மிகாமல் வழங்குக என்று புறத்தேர்வாளர் ஆணையிடும்போது மணி பதினொன்று முப்பதாகியிருந்தது. அதற்குள்ளாகவே மாணவர்கள் தூக்கபுரிக்குப் படையெடுத்துவிட்டனர். 

மனோகர் தன் பேச்சைத் தொடங்கும்போது என்னாலும் பேசாமல் இருக்கமுடியவில்லை.

தேடிச் சோறு நிதம் தின்று

ஏன் உன் வூட்ல பொங்கலயா

பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

 சின்னஞ்சிறு கதை பேசுற வயசாப் பெருசு உனக்கு

மனம் வாடித் துன்பமிக உழன்று

சாவுலே சாவு

பிறர் வாடப் பலசெயல்கள் செய்து

நீ செய்யிறவன்தானே

நரை கூடிக் கிழப்பருவ மெய்தி

அடேய் கிழட்டுக் கூவ. வயசானா குழியில போய் படுத்துத் தொலையேண்டா

என்றதும் அதுவரை சத்தமில்லாமல் என் ஹஸ்க்கி குரலுக்கு குலுங்கிக்கொண்டிருந்த மாணவியர் உரக்கச் சிரித்துவிட்டனர்.

‘பிள்ளைங்களா அமைதியா இருங்க’ எனப் பேராசிரியர்கள் அதட்டி சத்தங்களை அடக்க, நான் நல்ல பிள்ளையாக மனோகரைப் பார்த்துச் சினேகப் புன்னகை தூவிவிட்டு, வகுப்புக்கு நேரமாகிவிட்டதென வருகை பதிவேட்டுத் தாளினை மடக்கி விசிறிக்கொண்டே வெளியேறினேன். காப்பியுடனும் பலகார வகைகளுடனும் பிலஸ்ஸி அக்கா உள்ளே நுழைந்தார்.

*****

george.joshe@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button