
காதலின் துயரம்
என்றோ நடந்த வாக்குவாதத்தின் பிரதிகளை
மீண்டும் மீண்டும் அச்சிடுகிறாய்
நிகழ்கால சண்டைகளில்
ஒவ்வொரு முறையும் எழுத்துக்களின் கூர்மை
முன்னெப்பொழுதையும் விட
மிக ஆழமாக பதிகின்றது
மறக்க நினைத்த சச்சரவுகளின் கருமை
நா முழுவதும் பரவி
ஆவலாதிகளாக உருப்பெற்று உருமுகின்றது
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்
என்று கூறிக்கொண்டே
உள்ளில் உளியால் அடிக்கிறாய்
நீ களங்கமில்லா கோவில் சிலை
செதுக்குவதாகத்தானே எண்ணினாய்
இல்லை கண்ணாளா…
நீ உருவாக்கியது
வனத்தில் வெறிகொண்டு அலையும் ஒரு யட்சியை
குருதியின் நெடி படரப் படர
வன்மத்தின் கோரபிடியில் நீ சிக்கக்கூடும்
தப்பித்துக்கொள் கண்ணா…
ஏனெனில்
உன்னை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
*
மறக்காமல் நீ அடுக்கிச் செல்லும் புகார்களையும்
காலப்போக்கில் களமிறங்கிய
புதிய புரிதலின்மையையும்
ஒவ்வொரு சண்டையிலும்
செவிமடுக்கிறேன்
செய்யாத தவறுக்கும்
தவறான புரிதலுக்கும்
பின் எல்லாவற்றுக்குமாய்
கண்ணீரோடு கைகூப்பி
மன்னிப்பை உன் மகாசபையில்
சமர்ப்பிக்கின்றேன்
சிறுபுன்னகையோடே உன் வலிமிகுந்த மனதினை
வெளிப்படுத்த இயன்ற உன்னால்
எனக்கு நீ அளித்திடும் பெரும்வலியை
உணர முடியாமல் போனது மட்டுமே என் வாதனை.
*
அதீத கோபத்தில் நீ உமிழும்
அக்னி கேள்விகளின் நெருப்பில்
கணன்று கொண்டிருக்கும் கங்கின் தணப்பில்தான்
சுட்டெடுத்தேன்
உனக்கான பதிலை…
வெம்மையேறிய உன் கண்களுக்குள்
பொசுங்கி போகும் அபாயம் அறிந்தே
சற்றும் யோசிக்காமல்
கொஞ்சமும் நிதானிக்காமல்
பதிலிறுத்தேன் உனக்கு
பெருமூச்சில் பொசுங்கும் உன்னிடம் என்ன சொல்வேன்
பெருமழையில் நனைந்துவிட்டு வா
எல்லாம் நீர்த்துப் போகும்
நான் வேறெங்கும் போகவில்லை
அருவிக்கரையிலேதான் காத்திருக்கின்றேன்.
*
நீயாக ஒருநாளில்
என்னை விட்டுப் பிரிவதாகக் கூட எனக்கு அறிவிக்காமல்
என்னை விட்டு விலகிச் செல்கிறாய்
உன் ஒவ்வொரு அசைவுகளையும்
அறிந்துகொள்ளும் எனக்கு
எப்படி புரியாமல் போகும்
மீண்டும் ஒரு நாளில்
மீண்டு வருகிறாய்
எந்த விளக்கங்களும் அளிக்காமல்
உன்னால் என்னோடு ஒன்ற முடிகிறது
உன்னையறியாமல்
‘என் மேல் கோபமே இல்லையா’
என்று நீ வீசும் பரிதவிக்கும் பார்வையை,
தயக்கப் பொழுதுகளை
சிறு முறுவலோடு தவிர்க்கிறேன்
மரத்தினின்று இலை உதிர்வதும்
புதிதாய் ஒரு பச்சையம் துளிர்ப்பதும் இயல்புதானே
மனித இயல்பை நான் கேள்விகளுக்குள் அடக்குவதில்லை.



