சிறுகதைகள்

முதிர்ந்தவன் – உஷா தீபன்

சிறுகதைகள் | வாசகசாலை

எனக்கு வயது எழுபது நெருங்குகிறது. இந்தத் தருணத்தில் என் மகனோடு இருப்பது எனக்குப் பொருந்தி வரவில்லை. “நீயா ஏதாச்சும் நினைச்சுக்கிறே” என்கிறான் அவன்.

மகனின், மருமகளின் வாழ்க்கைமுறை என்னுடைய இளம்பிராய வாழ்க்கைமுறையிலிருந்து எவ்வளவோ மாறுபட்டிக்கிறது. என்னால் சகிக்க முடியவில்லை. “எதையும் கண்டுகொள்ளாமல் இருங்கள்” என்கிறாள் என் மனைவி. அவளோடு இருந்தபோதே அவளின் பல செய்கைகள் எனக்குப் பிடிக்காததால், தனிமை காத்தவன் நான். இதுதான் முடியும், இதெல்லாம் முடியாது என்று கட்டுப்பாடுகள் விதித்தவன். அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தியவன். பொறுத்துகொண்டாள். என்னை சகித்துகொண்டாள். இவனிடம் என்ன பேசினாலும் கதையாகாது என்று தோன்றிவிட்டது அவளுக்கு. வேறு கதி என்று இருந்துவிட்டாள்.

 என் வீட்டில் நான் நடைமுறைப்படுத்திய சட்டத்திட்டங்களை கண்டிப்பாகக் கடைப்பிடிப்பவனாக இருந்தேன். முதலில் என்னை ஆட்படுத்திக்கொண்டு, பிறகுதான் அவள் மேல் திணித்தேன். முதலில் அதைச் சொல்பவனே முன்னுதாரணமாய் விளங்க வேண்டும் என்பதில் நான் தீர்மானமாய் இருந்தேன். காய்கறி, மளிகை, பால், பழம், துணிமணி, தண்ணீர், மின்சாரம், சுத்தம், சுகாதாரம் என்று அனைத்துமே என் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. பொறுப்பை எடுத்து சுமப்பதற்கு ஒருவன் தயாராய் இருக்கும்போது, எதிராளி அதற்கு மடங்கிப்போய்த்தானே ஆக வேண்டும். அல்லது, பொறுப்பு விட்டது என்று எனக்கு ஒத்துழைத்தாக வேண்டும். அதுதான் நடந்தது. என்னை மீறி ஒரு துரும்புகூட நகர்ந்ததில்லை. வெளியேறியதில்லை, உள்ளே வந்ததில்லை.

அளவான குடும்பம் அழகான குடும்பம், சிக்கனம், சேமிப்பு இதுவே தாரக மந்திரம். என் பையன் பிறந்து, வளர்ந்து, படித்து பட்டம்பெற்று ஒரு நல்ல இடத்தில் (எங்களுக்குப் பொருத்தமான இடத்தில்) அவனுக்கு பெண்ணையும் பார்த்துக் கட்டிவைத்து, இன்று ஒரு குழந்தைக்கும் தகப்பனாகிவிட்டான். அத்தனையும் என்னுடைய சாதனை என்றுதான் சொல்வேன். கடமையைச் சாதனை என்று சொல்லிக்கொள்ளலாமா?

என்னுடைய அத்தனை செயல்பாடுகளுக்கும் அவளும் ஒத்துழைத்தாள். இவனிடம் வேறு மாதிரி எதுவும் சொல்லிப் பயனில்லை என்கிற அவளின் முடிவே அந்த ஒத்துழைப்புக்க்கு முழுக் காரணமாய் இருக்கும். மிலிட்டரி ரூல் என்று அடிக்கடி ஒரு பதப்பிரயோகம் புறப்படும். “அப்படித்தான்” என்று பதிலளித்திருக்கிறேன். “உண்மை வேகமாத்தான் வரும். நேர்மை கடினமாத்தான் இருக்கும்” என்று சொல்வேன். இன்றுவரை எல்லாமும் சரியாகத்தானே நடந்தேறியிருக்கிறது? அதை அவள் மறுக்கமுடியுமா?

ஆனால், இப்போதுதான் காற்று திசை மாறி அடிக்கிறது. அவள் தன்னை அந்த வீட்டுக்குக் கொடுத்துவிட்டாள் என்று புரிந்தது. தன்னை என்றால், தன் மீதிக் காலத்தை. ஏதோ ஓட்டிட்டுப் போகணும் என்று அவள் எப்பொழுதேனும் முனகிக்கொள்வதன் முழுப் பொருள் இதுதான் என்று நான் உணர்ந்துகொண்டிருக்கிறேன்.

அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி குடித்தனம் வைத்துவிட்டு ஊருக்குத் திரும்பி வந்துவிட வேண்டுமென்றுதான் திட்டம். எல்லாமும் திட்டமிட்டபடி நடந்தன ஒன்றைத் தவிர. அதுதான் நாங்கள் ஊர் திரும்புவது.

“எனக்கு எங்கம்மாதான்….” – இது என் பையன் யாரிடமோ கூறிய வார்த்தைகள். அப்போது நானும் அருகிலேதான் இருந்தேன். என்னை வைத்துக்கொண்டேதான் கூறினான் இந்த வார்த்தைகளை. அப்பாவை வைத்துக்கொண்டு இப்படிக் கூறினால் அப்பா மனசு சங்கடப்படும் என்று அவனுக்குத் தெரியவில்லை. கேட்பவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்பதும் தெரியவில்லை அவனுக்கு.

எந்தப் பசங்களுக்குமே அவன் அப்பா ஒரு முன்னுதாரணமாய் இருப்பதில்லை. இருந்ததில்லை. அது இந்தத் தலைமுறையின் தலையெழுத்து. அப்பன்காரன் எப்போதும் சண்டைக்காரன்தான். எதனால் இப்படி ஆயிற்று என்று எனக்கும் இன்றுவரை தெரியவில்லை. நான் பின்பற்றத்தகாதவன் என்றால், அவன் வாழ்க்கையில் உருப்படவே முடியாது என்பது என் துணிபு. நான் இல்லாதபோதுதான் அந்த அருமை தெரியப்போகிறது.

 அவனுக்கு வேண்டியதெல்லாவற்றையும் ஓடி ஓடி, பார்த்துப் பார்த்துச் செய்தவன் நான். விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் காலங்களில் வேண்டிய உணவு வகைகளை விதவிதமாய்ச் சமைத்துப் போட்ட  வேலை மட்டும் அவளுக்கு. மறுப்பதற்கில்லை. அது ஒரு தாயாருக்கே உள்ள அக்கறை. மற்றபடியான அவனது கல்வி, சுகாதாரம், இதர வெளிவிவகாரம் அனைத்தையும் விழுந்து விழுந்து கவனித்தவன் அடியேனே. ஆனாலும், பையன்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அது தந்தையர்களின் துரதிருஷ்டம். இந்தப் பசங்கள்தான் நாளை பெண்டாட்டி வந்ததும், அவள் பின்னால் ஒடுங்கிவிடுகிறார்கள். அப்போது இந்த அம்மாவின் பாடு? அது இனிமேல்தானே தெரியும். அவளென்னவோ அவன்  அம்மா கோண்டு என்று  நினைத்திருக்கிறாள்.

பாருங்கள்… இப்போது அவன் பெயருக்கே ஒரு வீடு வாங்கி, குடிவைத்து அவனைப் பாதுகாப்பாய் உட்கார்த்திவைத்து… அனைத்து முயற்சிகளும் என்னுடையதே. இதை யார் உணர்கிறார்கள்? என் பணிக் காலத்திலிருந்து நான் சும்மா வெறுங் கையில் மொழம் போட்டிருந்தால் இதெல்லாம் இன்று சாத்தியமாகியிருக்குமா? எத்தனை செலவுகளைச் சுருக்கியிருப்பேன். எதை எதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருப்பேன். இல்லையென்றால் பைசா சேருமா? என்றாவது உணருவார்களா இந்த உண்மையை? அவளுக்கே சரியாகத் தெரியாதே.

“அப்படிச் சொல்லாதே. உங்கப்பா உனக்கு எம்புட்டு செய்திருக்கா. அவரில்லைன்னா ஊர்லேர்ந்து கிளம்பி வந்து, இங்க வீடு வாங்கி செட்டிலாகி, மேட்ரிமோனியல் விடாமப் பார்த்து தேர்வுசெய்து, எத்தனை தடவை ஓடு ஓடுன்னு ஓடியிருக்கா. உன் ஜாதகத்தத் தூக்கிண்டு, உனக்குப் பொருத்தமா ஒரு இடத்தைப் பார்த்து, உன் விருப்பம் போலக் கல்யாணத்த முடிச்சு, இன்னிக்கு நீ ஒரு சரியான பொசிஷன்ல இருக்கேன்னா அதுக்கு அவர்தானே மெயின் காரணம். உன்னையே நினைச்சு எத்தனை நாள் தூங்காம இருந்திருப்பார் தெரியுமா? அவரில்லேன்னா இம்புட்டும் நடந்திருக்குமா. என்னால மட்டும் இதெல்லாம் முடிஞ்சிருக்குமா? கொஞ்சம் நினைச்சுப்பாரு. ஆகையினால இனிமே அப்படிச் சொல்லாதே. உங்கப்பா மனசு கஷ்டப்படுமாக்கும்.”  – ஒரு நாள்கூட இப்படி எடுத்துச் சொல்லவில்லையே..! பெண்கள் எப்போதுமே குறுகிய மனம் படைத்தவர்கள்.

எல்லாம் அம்மாதான் என்கிற அந்த வார்த்தைகளில் அப்படியே திளைத்துப்போய்க் கிடக்கிறாளே! போகட்டும்.. அதுபற்றி ஒன்றும் பாதகமில்லை. நான் என் கடமையைச் செய்தேன் அவ்வளவுதான்! அதற்கு மேல் இதில் ஒன்றுமில்லை. பெத்த கடன் செய்தால்தான் மனசு திருப்தி அடையும். நாளைக்கு திடீரென்று மண்டையைப் போட்டாலும் ஆத்மா சாந்திகொள்ளும். ஊர் தூற்றாதே… உறவு வையாதே…!       

ஆனாலும் இப்போது என் மனது தனித்தே கிடக்கிறது. இங்கே ஒன்ற மாட்டேனென்கிறது. ஒரு விலகலை மனம் உணர்ந்து கொண்டேயிருக்கிறது. பேரக் குழந்தையோடு கொஞ்சி மகிழும்போது மட்டும் மனசு இளகிப்போகிறது. இவனை விட்டுவிட்டு இருக்க முடியுமா என்று அஞ்சுகிறது. அது பாபமில்லையா என்று தோன்றுகிறது. இப்படியும் ஒரு தாத்தன் இருப்பானோ என நினைப்பார்களோ, திட்டுவார்களோ என்று எண்ணமிடுகிறது. இன்னும் ஒரு வயசானால் பள்ளிக்குப் போகப்போகிறான். பிறகு படிப்பு, விளையாட்டு, அவன் அம்மா அப்பா என்று கவனம் போய்விடும். எங்கே தாத்தாவை நினைக்கப்போகிறான்? முதலில் அப்படித்தான் தோன்றும். போகப்போக எல்லாமும் சரியாகிவிடும். இங்கிருந்து நகர்ந்தால் போதும். தப்பித்தால் போதும். பிறகு தனிமையிலே இனிமை காணுவது ஒன்றும் அப்படிச் சிரமமில்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்கிறேன்.

என் வாழ்க்கை முறைதான் என்னை இப்படியெல்லாம் நினைக்க வைக்கிறது. அதிகமான சந்தோஷத்தை அனுபவித்தலோ, அதிகமான வசதி வாய்ப்பில் புரளுதலையோ என் மனம் எப்போதுமே ஏற்றதில்லை. இனிமேலா? இங்கு ஒரு குறையும் எனக்கு இல்லைதான். எல்லாமும் பார்த்துப் பார்த்துத்தான் செய்கிறான் என் பையன். ஆனாலும், என்னவோ உதைக்கிறது எனக்கு. எதுவோ குறை இருந்துகொண்டேயிருக்கிறது. மனது ஒன்ற மாட்டாது தவிக்கிறது. எனக்கு சுதந்திரம் வேண்டும். கட்டுப்பாடற்ற சுதந்திரம். அதைத் தருவது –

தனிமை… தனிமை… தனிமை… அதைத்தான் நாடுகிறது என் மனம். சிறுவயதிலிருந்தே அப்படிப் பழக்கப்பட்டவன் நான். கையில் புத்தகத்தை எடுத்துக்கொண்டு மாடிக்கு ஓடிவிடுவேன். அந்த மாடியிலும் யாரும் கண்டுபிடிக்க முடியாத ஓரிடத்தில் சென்று ஒண்டிக்கொள்வேன். வீட்டுக்குள் இருந்தேனென்றால், நான் எங்கிருக்கிறேன் என்று யாரும் அத்தனை லேசில் கண்டுபிடித்துவிட முடியாது. பாடப்புத்தகமா கையில் வைத்திருப்பேன்? அதுதான் இல்லை. சதா அப்படி அலைவதில் எனக்கு எப்போதுமே ஆர்வமிருந்ததில்லை. நான் விரும்பியதெல்லாம் கதைப் புத்தகங்கள். அந்தச் சின்ன வயதிலேயே வயதுக்குப் பொருந்தாத புத்தகங்களையெல்லாம் எடுத்துப் படித்திருக்கிறேன். அசிங்கமான புத்தகங்களில்லை. அதுமட்டும் உறுதி. புரிந்ததா என்று கேட்காதீர்கள். முழுப் புத்தகத்தையும் படித்துவிட்டுத்தான் ஓய்வேன். “எப்பப் பார்த்தாலும் என்ன கதைப் புத்தகம்? பாடத்த படிடான்னா…” என்று பிடுங்கியெறிவாள் அம்மா. கூடவே ரெண்டு மொத்தும் கிடைக்கும் முதுகில். அந்தத் தனிமைதான் இன்றும் என்னைப் பேயாய்ப் பிடித்து ஆட்டிவைக்கிறது.

தனிமை என்றால் என் மனைவியோடு இருக்கும் தனிமையல்ல… நான் மட்டும் இருக்கும் தனிமை. எப்போது என்னை விடுத்து அவனோடு இருக்க வேண்டும் என்று அவள் பிரியப்பட்டாளோ, அப்போது அவளும் எனக்கு வேண்டாம். இதுதான் என் துணிபு. `நீ என்ன என்னை ஒதுக்குவது. நான் ஒதுக்குகிறேன் உன்னை. உனக்கு நான் வேண்டாமென்றால், எனக்கு நீ வேண்டாம் அவ்வளவுதான். என்னால் தனிமையில் இருக்க முடியும். இருந்து கழிக்க முடியும். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அதையும்தான் செய்து பார்த்துவிடுவோமே! என்ன குடியா முழுகவிடும்? அப்படியா சாவு வந்து பற்றிக்கொள்ளும். அப்படித்தான் பற்றுமென்றால் பற்றட்டுமே! கதவை உடைத்து வந்து என்னைத் தூக்கிச் செல்லுங்கள். நான் உறுதியாகத்தான் இருக்கிறேன். அந்தளவுக்கு தனிமை என்னை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

தனிமையிலே இனிமை காணமுடியாது என்று எவன் சொன்னான்? முடியும். என்னிடம் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. இசை இருக்கிறது… என்னோடு படிந்த யோகப் பயிற்சி இருக்கிறது… சமையல் கலை இருக்கிறது… உள்ளூர் நண்பர்கள் இருக்கிறார்கள்… நூலகம் இருக்கிறது… சொந்த ஊர், தெரிந்த மக்கள் என்கின்ற நெருக்கம் இருக்கிறது… பரபரப்பில்லாத அமைதியான, எளிமையான வாழ்க்கைமுறை இருக்கிறது. ஏன் மீதி நாட்களைக் கழிக்முடியாது? தனிமை என்ன அத்தனை கொடுமையான விஷயமா? அதென்ன பேயா, பிசாசா? பயந்து சாக!

என் வீடே என் கோயில். அதோடு நான் அனுதினமும் பேசுவேன். என் தாய் தந்தையரின் காலடி பட்ட ஸ்தலம் அது. நான் விரும்பி, ஆசை ஆசையாய் அமைத்துக்கொண்ட பூஜை அறை. என் விருப்பத்துக்குக் கட்டி குடிவந்த இல்லம். என் கனவுகளை, நினைவுகளை, என் ஆசைகளை, என் ஏக்கங்களை, என் வருத்தங்களை, ஏன் என் தவறுகளை இப்படி எல்லாவற்றையும் தன்னகத்தே சுமக்கும் அகம் அது.

தெரிந்த மக்களை, முகம் அறிந்தவர்களைத் தினமும் சந்திப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி. அவர்களோடு இரண்டு வார்த்தை பேசி நகர்வதில் ஒரு திருப்தி. “ஐயா… ஊரிலிருந்து வந்திருக்கீகளா? அம்மா நல்லாயிருக்காகளா?” என்று யாரேனும் வலியவந்து, வாசல் கதவைத் தட்டி விசாரிக்கும்போது கிடைக்கும் திருப்தியே அலாதி. நம்மைப் பற்றி நினைக்கவும் ஒராள் இருக்கிறதே என்கிற ஆறுதல். அதிலும் அந்தக் கீரைக்காரர் தவறாமல் இப்பக்கம் திரும்பாமல் போகமாட்டார். கதவு திறந்திருக்கிறது என்று தெரிந்தால், திரை விலக்கியிருப்பது பார்த்தால், இறங்கி விசாரிக்காமல் நகரமாட்டார்.

“அம்மா… எப்ப வந்தீக? ஊர்ல பையன், மருமக, பேரன் எல்லாரும் சௌக்கியங்களா?” என்று அவர் அவளைப் பார்த்து விசாரிப்பதே ஒரு தனி அக்கறையின், அன்பின் அடையாளம். பாருங்கள்… அவருக்குக்கூட அவள்தான் முதல். அம்மாவுக்குப் பிறகுதான் அய்யா. பெண் தெய்வங்களைத்தானே நாம் விழுந்து விழுந்து வணங்குகிறோம். அதுபோல வீட்டுப் பெண்மணிகள்தான் உலகத்தாரால் முதலில் மதிக்கப்படுகிறார்கள். அவர்களை வைத்துத்தான் இவர்கள். மாமியை வைத்துத்தான் மாமா. இந்த உலகம் இந்தக் கணம்வரை அப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. நன்றி கெட்ட உலகம். உழைப்புக்கேற்ற கூலி கிடைப்பதில்லை.

ஆண்களுக்கு வாய்த்ததெல்லாம் வெறும் உழைப்புதான். உழைத்து உழைத்து ஓடாய்ப்போனதுதான் மிச்சம். கடைசி காலத்தில் கவனிக்கக்கூட ஆளில்லாமல் எத்தனை பேர் சீரழிகிறார்கள்? அதுவும் மனைவியை இழந்த பொழுதுகளில் நாளும் அவர்களுக்கு நரகம்தான். தனக்கு யாரும் இல்லை என்பதாக உணரத் தலைப்படுகிறார்கள். இப்படியிருக்கும் என் மனைவியைப் பற்றி நான் என்ன சொல்ல? அவள் பின்னால் தொடுப்பாக நான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறாள். நானென்ன முடமாகியா கிடக்கிறேன் தொடுப்பாக நிற்க? நான் என்றுமே நான்தான். அதில் எந்தச் சலனமோ, மாற்றமோ இல்லை. நீதான் என்னைச்  சார்ந்து இருக்க வேண்டும். நான்தான் வேண்டியது செய்வேனே? பிறகென்ன? அப்படியும் அவன்தான் மேல் என்றால் இருந்துகொள் கவலையில்லை!

என்னோடு வந்து இருங்கள் என்று பையன் முழு மனதாய்ச் சொன்னாலும், அரை மனதாய் நடித்தாலும், தந்தையர்களுக்கு மனசு ஒப்புவதில்லை. தான் பார்த்து வளர்ந்த மகன், தூக்கி வளர்த்த மகன், தோளுக்கு மேல் நின்று தோழனாய் மாறியவன். ஆனாலும் அவனுக்கென்று இன்று ஒரு துணை வந்து விட்டபிறகு, இவருக்கு விலக்கம் வந்துவிடுகிறது. அவன் வாழ்க்கை அவனுக்கு. தன் வாழ்க்கை தனக்கு. தனக்கென்று இன்னும் இந்த வாழ்க்கை மீதமிருக்கிறதா என்ன?

என்னவோ தெரியவில்லை… எனக்கு இங்கே இருக்க உறுத்திக்கொண்டேயிருக்கிறது. நான் அங்கு சென்று இருப்பதில்தான் ஏதோ கௌரவம் மிஞ்சியிருப்பதாய்த் தோன்றுகிறது. சதா அந்த நினைப்பாகவே இருப்பதால்தான், இங்கு பார்ப்பதிலெல்லாம் ஏதாவது குறை தென்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வேலை செய்வது என்பது வேறு. திருத்தமாக வேலை செய்வது என்பது வேறு. அந்த வீட்டில் நடக்கும் வேலைகளில் இப்படியெல்லாம் எனக்குத் தோன்றிக்கொண்டேயிருக்கிறது. திருந்த வேலை செய்வது என் மனைவிக்கே படியவில்லையே. பிறகு இவர்களைச் சொல்லி என்ன செய்ய? அவளிடமே ஆயிரம் குறைகள் கண்டுபிடிப்பேன்.

“குடத்த திறந்து தண்ணி எடுத்தேன்னா, உடனே அதைத் திரும்ப ஏன் மூட மாட்டேங்கிறே? திறந்தே கிடந்தா, அதுல தூசி விழாதா? ஏதாச்சும் பூச்சி விழுந்தா? அப்புறம் அந்தத் தண்ணியப் பூராவும் தூக்கி மடைல கொட்ட வேண்டியது? செடிகளுக்கு ஊத்துவோம்னா இங்க மரம் மட்டையா இருக்கு? எங்க பார்த்தாலும் காங்கிரீட் காடுகள். பாத்ரூம் போயி்ட்டு வந்தீன்னா லைட்டை அணைக்க மாட்டியா? குழாயச்  சரியா மூடமாட்டியா? இந்த ஹால் ஃபேன் எப்பவும் சுத்திட்டே இருக்குமா? ட்வென்டிஃபோர் ஹவர்ஸ் ஃபேனா அது? ஆளிருந்தாலும் இல்லாட்டாலும் சுத்தணுமா? விரயம் பண்றதுக்கு ஒரு அளவே இல்லையா? எலெக்ட்ரிசிட்டி என்ன ஓசிலயா வருது? தேவையில்லாம ஏதாச்சும் ரூம்ல லைட் எரிஞ்சிட்டே இருக்கே அணைக்கவே தோணாதா? விரிச்ச படுக்கை விரிச்சமேனிக்கே கிடக்குமா? அதை மடிச்சுவைக்கிற ஜோலியே கிடையாதா? வீடு பூராவும் இப்டி அங்கங்க முடி பறந்திட்டே இருக்கே… இதென்ன பார்பர் ஷாப்பா?”

இப்டிச் சொல்றதுக்கு எங்கிட்ட ஏராளமா இருக்கு. வீடு முழுக்க துணி இறைஞ்சு கிடக்கிறதைப் பார்த்தாலே எனக்கு எரிச்சல் வருது. எது துவைச்ச துணி, எது விழுப்பு? யாருக்குத் தெரியும்?குடுகுடுப்பைக்காரன் தொங்கவிட்டிட்டு வர்ற மாதிரி அந்தல சந்தலயாக் கிடந்தா? அங்கங்க சாமான்கள் இறைஞ்சு கிடக்கு. யாராவது கண்டுக்கிறாங்களா? எதையும் எடுத்து உரிய இடத்துல வைக்கிறதில்ல. நானும் கீழே விழுந்து கிடக்கிற பொருட்களை எத்தனை தடவைதான் எடுத்து எடுத்துவைக்கிறது? அதான் ஒராள் இருக்கேன்னு விட்டுட்டாங்களோ? எந்தப் பொருள் எங்க இருக்கும்னு வீட்டுக்கு ஒரு அடையாளம் வேண்டாமா? எதுவும் எங்க வேணாலும் கெடக்கும்னு இருந்தா அது வீடா? டிவிக்கு கீழே பர்ஸ், வாட்ச், பணம், வண்டிச் சாவி, இப்படி இறைஞ்சு கிடந்தா வர்றவங்க, போறவங்க கண்ணுல பட்டு, இந்த வீட்ல எல்லாம் இப்டித்தான் கண்டமேனிக்குக் கிடக்கும்போலிருக்குன்னு ஒரு பரிகாச எண்ணத்தை உண்டாக்காதா?  கைய வைக்க நாமளே  தூண்டினா? பொருட்களை பாங்கா வச்சிருக்கிறது வேறே, அங்கங்கே கெடக்கிறது வேறே! பார்க்கிறவனுக்குத் திருடத் தூண்டுற மாதிரிப் போட்டு வச்சிருந்தா எடுக்கத்தானே தோணும்? ஒரு இன்ட்யூஷன் ஏற்படுமாயில்லியா? வீடு இருக்கிற நிலைமையைப் பார்த்து நம்மள ஒருத்தன் கணிச்சிடுவான். அது நம்ம கௌரவத்தின் அடையாளம். இது யாருக்குத் தெரியுது? நம்ம வீட்டுக்கு எதுக்கு சோபா? அது மேலே இம்புட்டு சாமான்கள் கெடந்தா, வர்றவங்க எதுல உட்காருவாங்க அது மேலயா? சோம்பேறி மடமா இந்த வீடு? பார்வைக்கு ஒரு ஒழுங்கில்லைன்னா வர்றவன் என்ன நினைப்பான்?

“வீடுன்னா அப்டித்தான் கெடக்கும். இதென்ன மியூசியமா… வெச்ச பொருள் வெச்ச எடத்துல இருக்கிறதுக்கு?” – இவளே இப்படிச் சொல்கிறாள். மருமகளுக்கு சப்போர்ட்டாகப் பேசுகிறாளாம். பையன் எதுவும் கோவித்துக் கொண்டுவிடக்கூடாதே என்று எனக்குத் தப்பைக்கட்டுப் போடுகிறாள். நானென்ன இவள் ஆதாரத்திலா நிற்கிறேன்? மனசில் தோன்றுவதைச் சொல்லமுடியாதென்றால் அப்புறம் அங்கு இருந்துதான் என்ன பயன்? பிறகு நமக்கு என்னதான் மதிப்பு? பெரியவர்களை வழிகாட்டிகளாக நினைக்காத சமூகத்தில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன?

போடுறத தின்னுட்டுக் குத்துக்கல் மாதிரி உட்கார்ந்து கிடக்கிறதுக்கா இந்த ஜீவன்? அப்படி வார்த்தை வந்தாலும் வருமோ? அது நம் தள்ளாத வயதில், படுக்கையில் விழுந்தால் வர வாய்ப்பிருக்கிறதுதான். அதற்குள் இங்கிருந்து கழண்டுகொண்டுவிட வேண்டும். அல்லது,அதற்குள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அதென்ன நம் கையிலா இருக்கிறது? விதி எப்படிப் போட்டிருக்கிறதோ? எவன் கண்டது? கண்டவர் விண்டிலர்… ண்டவர் கண்டிலர்.

“மியூசியம் மாதிரி அந்தந்தப் பொருட்களை அந்தந்த இடங்களில் அடுக்கி, உபயோகத்துக்குப் பின் அதே இடத்தில் வைத்து, எடுக்க-வைக்க என்று இருந்தால்தான் வீடு விளங்கும்” என்று நான் தீர்மானமாய்ச் சொல்வதை யார் கேட்கிறார்கள்?

“உங்கப்பா என்ன… நச்சு நச்சுன்னு ஏதாச்சும் சொல்லிட்டேயிருக்காரு.” அன்றொரு நாள் அந்தப் பெண் என் பையனிடம் இப்படிச் சொல்லிக்கொண்டிருந்தது என் காதில் விழத்தான் செய்தது. நம் நன்மைக்காகத்தான் சொல்கிறார்கள் பெரியவர்கள் என்று ஏன் அவர்களுக்குத் தோன்றமாட்டேனென்கிறது? இருக்கும்போது அருமை தெரியாது. போன பின்னால், பல நஷ்டங்களுக்குப் பிறகு தெளிவார்கள். இதுதான் யதார்த்தம். அந்தப் பெண் என்று எனக்குத் தோன்றுகிறதே… அது சரியா? மருமகப் பெண் என் பெண்ணல்லவா? இந்த வீட்டின் வம்சம் வளர வந்தடைந்த பெண்ணல்லவா? இப்படி ஆழ உணர்பவர்கள் பெரியவர்கள் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியப்போகிறதா என்ன?               

தேவையான பொருட்கள், தேவையற்ற பொருட்கள் என்று ஒரு வரைமுறையே கிடையாதா? கண்ணில் பட்டதையெல்லாமா வாங்கிக் குவிப்பது? முன்னாலெல்லாம் சீட்டில் எழுதிக்கொண்டு போய்க் கொடுப்பதை மட்டும் தருவான் கடைக்காரன். இப்போதுதான் எத வேணாலும் எடுத்துக்கோ… என்று திறந்து விட்டுவிட்டார்களே? தேவையான பொருட்களைத் தேடும்போது, தேவையற்ற பொருட்களும் `என்னையும் எடு… எடு…’ என்று நம் ஆசையைத் தூண்டுகிறதே..! ஒரு தரம் வாங்கித்தான் பார்ப்பமே என்று வாங்கும் பொருட்களுக்கு முடிவு என்று ஒன்று இருக்கிறதா என்ன?அதுதானே இன்று பெருமை! கடையை Show Room ஆக மாற்றியதே அதற்காகத்தானே! departmental store, super market என்று பெத்த பேரு வேறு அதற்கு. சும்மாவா இருக்கு? உனக்கு வெறுமே வேடிக்கை காண்பிப்பதற்கா? மறைமுகமாக உன் ஆசையைத் தூண்டி உனக்குச் செலவு இழுத்துவிடுவதற்குத்தானே? உன் கைபணத்தைக் கரைப்பதற்குத்தானே? காசைக் கரியாக்குவதற்குத்தானே..!

காசைக் கண்ணும் கருத்துமாய் இன்று நாம்  காப்பாற்றினால்தானே நாளை அது நம்மைக் காப்பாற்றும்? எங்களைப் போல என்ன உங்களுக்குப் பென்ஷனா வரப்போகிறது? அட, வேலை நிரந்தரமாவது உங்களுக்கு உண்டா? எல்லோருமே ஒப்பந்தக்காரர்கள்தானே? அப்படித்தானே ஒப்பமிட்டு வேலைக்குள் நுழைகிறீர்கள்? கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து,  நாகரீகமாய், ஸ்டைலாய், படிவங்களைப் பூர்த்திசெய்து, விண்ணப்பித்து வேலை வாங்கியிருந்தால் பெரிய மதிப்பா என்ன? உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தானே அவன் வைத்திருக்கிறான்? அந்தச் சூடு உங்களுக்கு உறைக்கிறதா? வானத்தில் சிறகடித்து பறப்பது போலல்லவா  பறக்கிறீர்கள்? அதையாவது உயரம் தெரிந்து பறக்கிறீர்களா?

“இனியது இனியது உலகம்” என்று பாடிக்கொண்டு திரிகிறீர்கள். வயதும், இளமையும், உடம்பி்ல் வீரியக் கட்டும், ரத்தத்தில் சூடும் இருக்கும்போதே கட்டு செட்டாகப் பணம் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியவேண்டாமா? எங்களுக்கெல்லாம் வழிகாட்டுதலே இல்லை. நாங்களாகவேதான் பொறுப்புணர்ந்து நடந்துகொண்டு முன்னேறினோம். உங்களுக்கு எடுத்துச் சொன்னாலும் புரியமாட்டேன் என்கிறதே? முந்திக்கொண்டு முணுக்கென்று கோபமல்லவா வருகிறது? என்ன ஒழுங்கு முறையைத்தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள்? திங்க… தூங்க…பேள… என்ற இந்த மூன்றைத் தவிர நீங்கள் வேறு ஏதாவது செய்ததுண்டா?

இருக்கும் கோபத்தில் அல்லது ஆதங்கத்தில் இப்படித்தான் சொல்ல வருகிறது. “என்ன செய்ய? ராத்திரி ஒன்றுக்கும் ரெண்டுக்கும் வேலை முடிந்து திரும்பும் எங்களால் வேறு எப்படி இருக்க முடியும்?” என்று கேள்வி வேறு. அதற்காகக் குளிக்காமல் திங்கச் சொல்லியிருக்கிறதா? அது எத்தனை ஆரோக்கியக் கேடு? யாருக்கானும் தெரிகிறதா? வயிற்றெரிச்சலை எங்கு போய்க் கொட்டுவது? சொல்லவும் முடியவில்லை… மெல்லவும் முடியவில்லை. கண்ட நேரத்தில் தூங்க… கண்ட நேரத்தில் குளிக்க, கண்ட நேரத்தில் திங்க… எதில்தான் ஒரு ஒழுங்கு? காலைக் கடன்களை முறையே முடிக்க வேண்டும் என்பது சிறு பிராயம் முதலான பாடமில்லையா?

இப்படி ஏராளமாய் இன்னும் எத்தனையோ என் மனதில். எதையும் வாய்விட்டுச் சொல்ல முடிவதில்லை. மனதிற்குள்ளேயே வைத்துப் புழுங்கிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. எதற்காக? இவற்றையெல்லாம் கண்ணால் பார்ப்பதால்தானே? காதால் கேட்பதால்தானே? மழுங்குண்ணி மாங்கொட்டையாய் நாட்களை கடத்த முடியுமா?

என் வாழ்க்கையை நான் வாழ்ந்தாயிற்று. உன் வாழ்க்கையை நீ வாழ்ந்து கொள். அவ்வளவுதான். உன் வயசுல எனக்கெல்லாம் யாருமே துணைக்கு இல்லை. உதவிக்கு இல்லை. நானேதான் எல்லாத்துக்கும் ஓடி ஓடிக் கஷ்டப்பட்டேன். அதுமாதிரி நீயும் கஷ்டப்படு. அனுபவங்களை சேகரித்துக்கொள்.  சின்ன வயசுதானே… ஓடி ஓடி உழைக்க உழைக்க உடம்பு உரம்பெறத்தான் செய்யும். நசிந்துபோகாது. அம்பது வயசு வரைக்கும் நல்லா சாப்பிடலாம். கடுமையா உழைக்கலாம். அதுக்கு கியாரண்டி உண்டு. பிறகுதான் இறங்கு தசை. அதனால உங்க பாட்டை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். என்னை விட்டுவிடுங்கள். அதுதானே நியாயம்? வாழ்ந்து காட்டுங்கள்!

எவ்வளவோ மனதில் தோன்றித் தோன்றித்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன் நான். எனக்குத் தனிமை பிடிக்கும், அமைதி பிடிக்கும். இருந்து பார்க்கிறேனே. இதுதான் இன்று நான் இவர்களிடம் வேண்டிக்கொள்வது. அதில் ஒரே ஒரு புதுமை. அது நான் மட்டும் செல்வது. அவள்தான் பையனோடு இருக்க வேண்டுமென்கிறாளே..! தாராளமாய் இருந்து கொள். நீ வந்தால்தான் எனக்குத் தனிமை என்பது போய்விடுகிறதே..! தனிமை என்பதே தனித்து இருப்பதுதானே..!    நீ இல்லாமல் இருந்து காட்ட வேண்டும். அந்தப் பயிற்சியையும் செய்து பார்த்துவிடுகிறேன்.

 தனிமையில் இருக்கத் தெரியாதவன், தனிமையை விரும்பாதவன் ஒரு மனிதனா? தக்க சமயத்திற்காகக் காத்திருக்கிறேன் நான்.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button