கவிதைகள்
Trending

கவிதைகள்- வா.மு.கோமு

துக்கத்தின் தனிமை

என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்

எனத்தான் நினைக்கிறேன்!

வெளியில் வீணாய்ச் சுற்றாதீர்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்.

நான் வீணாய்ச் சுற்றும் மனிதன் தான்.

ஒரு ப்ளாக்டீ குடிப்பதற்காகவே குறுநகர் நோக்கி

கிராமத்திலிருந்து எனது வாகனத்தில் தினமும்

சென்று வந்தவன் தான் நான்.

இனி நான் எப்போதும் செல்லும் மலையாளத்தான்

பேக்கரிக்கு செல்லவே முடியாது போலிருக்கிறது!

எப்போதேனும் மாடியிலிருக்கும் எனதறையிலிருந்து

இயற்கை உபாதையை நீக்கிக் கொள்ள வெளிவருகையில்

வானில் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களில்

ஒருசில மின்னிக்கொண்டு கீழ்வந்து வீழ்ந்து மடிகின்றன.

சில தங்களை எவ்விதமேனும் மறைத்துக் கொள்கின்றன.

நோய்த்தொற்று எப்படிப் பரவுகிறதென இன்னமும்

யாருக்கும் தெரியவில்லை! -உயிரோடிருக்கிறேன்

என்பதை வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று

அலைபேசியில் அடுத்தவர்களுக்கு சொல்லி மகிழ்கிறேன்.

அரசாங்கம் என் வீட்டு வாசலில் ஒரு மாயக்கோட்டை

வெள்ளை நிறத்தில் இழுத்து விட்டிருக்கிறது.

அதைத்தாண்டி விட கால்கள் துடிக்கின்றன.

சும்மாவே யாரோ என்மீது துயரங்களைத்  திணித்து விட்டு

கிடடா இப்படியே! என்று போய்விட்டார்களோவென

அச்சமாயிருக்கிறது! -உனக்குப்  பசியெடுக்கிறதா? என்று

கேட்கவேணும் யாராவது என் வாசலுக்கு வருவார்களாவென

கதவைத் தாழிடாமல் விட்டு வைத்திருக்கிறேன்.

வானத்திலிருந்த இருட்டு முழுவதும் ஒருநாள் கதவை

நகர்த்திக் கொண்டு வீட்டினுள் வந்து விட்டது!

அதை நோக்கி ‘எனக்குப்  பசியாயிருக்கிறதென’

சொல்லத்தான் முடியவில்லை!

*****

மிருதங்கம் வாசிக்கப்படத்தான்

மீதமிருந்த கபசுரகுடிநீரை ஒரே மடக்கில்

குடித்து முடித்து டம்ளரை வைத்தானவன்.

தூரத்தில் எங்கோ ஒரு பெயரறியாப் பறவை

மிகப் பரிதாபமாக கத்திவிட்டுச் சென்றது.

மதியம் உணவுக்கு முட்டை காலி, என்றாளவள்.

பாக்கெட்டைத் தடவிப் பார்த்தவன்

‘நீயே நாலு முட்டையிட்டு வேக வச்சிரு!’ என்றான்.

*****

ஆளரவமற்ற தெரு ஒன்றில் தனித்து நின்றிருந்த

விளக்குக்கம்பத்தின் கீழ் அமர்ந்திருந்தவன்

பெருத்த யோசனையால் தன் விரல்களை

கொறித்துத் துப்பிக் கொண்டிருந்தான்.

விடிய இன்னும் நேரமிருக்கிறது!

*****

குனிந்து குனிந்து மம்பட்டியால்

சவக்குழி வெட்டிக் கொண்டிருந்தவனுக்கு

உடல் முழுதும் வியர்வை

பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது.

தனித்தே அவன் முதுகில் வைத்து

தூக்கி வந்திருந்த பிணம்

உச்சி வெய்யிலில்

சிரித்துக் கொண்டு படுத்திருந்தது.

*****

பிணங்களை இடுகாட்டில் புதைப்பதற்கு

நான்கு பேர் சென்றால் மட்டும் போதுமானது என

அரசாங்கம் அறிவுறுத்தியிருக்கிறது.

உடல்மூடிய நீல வர்ண உடையணிந்த நால்வர்

பிணத்தை தூக்கி வருவதைப் பார்த்து

புதிய குழிமேடுகளில் அவ்வப்போது

முனகல் சப்தம் எழுகிறது!

“குழிக்குள்ள பார்த்து மெதுவா தூக்கிப் போடுங்க!

நீங்க சம்பிரதாயங்கள் செய்யலனா பரவால்ல!”

*****

-உங்க சன்னுக்கு ஃபோர்த் க்ளாஸ்க்கான

புக்ஸ்செல்லாம் வந்துடுச்சுங்க சார்.

ஸ்கூலுக்கு வந்து இந்த இயருக்கு ஃபீஸ் கட்டிட்டு

புக்ஸ் வாங்கிட்டு போங்க சார்.

-மேடம், பையனுக்கு

பாடஞ்சொல்லிக் குடுக்குறதை நாங்க

பார்த்துக்கணுமா?

-இல்ல சார் ஆன்லைன்ல நாங்க

உங்க சன்னுக்கு டீச் பண்டுவோம்.

எவ்ரி டே டூ ஹவர்ஸ்!

-நேர்ல நீங்க சொல்லிக் குடுத்தாவே

படிக்க மாட்டான்.. இதுல

ஆன் லைன்ல நீங்க நொட்டுனா

படிச்சிக் கிழிச்சிடுவானவன்!

*****

வீட்டின் முன்பிருந்த சாலைக்கு

ஓடி விட்ட காற்றடைத்த பலூனை

தாவிப்பிடித்துவிட சாலைக்கு வந்த

பாப்பாவை பைக்கில் வந்த வாலிபன்

அலேக்காய்த் தூக்கி வந்து விட்டான்.

அவர்கள் மூவரும் கிளாஸ்களை

முட்ட வைத்து முட்ட வைத்து

குடித்துக் கொண்டிருக்க

வாயில், கையில், காலில் கட்டப்பட்டு

சற்றுத்தள்ளி படுத்திருந்த பாப்பா

‘இந்த அண்ணன்கள் என்ன விளையாட்டு

விளையாட தூக்கி வந்திருக்கிறார்கள்?’

என்று யோசித்துக் கிடந்தது.

*****

போராட வேண்டியிருக்கிறது ஒவ்வொரு நாளும்.

இயற்கை அழிவுக்கு எதிராக,

விலங்கினங்களின் அழிப்புக்கெதிராக,

கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்காக,

விலைவாசி உயர்வுக்காக,

பாலியல் குற்றங்களுக்கெதிராக,

கொள்ளையடிக்க கிளம்பும் பள்ளிகளுக்கெதிராக,

இப்படி பல எதிராக எதிராக…

ஆனால் கோவிட் 19-க்கெதிராக

போராடுவதாகச் சொல்லி வீட்டினுள்

பிணத்திற்கொப்பாகக் கிடக்கிறேன்

வெற்றுச்சுவரைப் பார்த்தபடி!

*****

பிரசவ அறையில் பிறந்த குழந்தையின்

தொப்புள்கொடியை பாந்தமாய்

துண்டித்தாள் மருத்துவமனை தாதி.

‘கோவிட் 19 தலைவிரித்தாடும்

காலத்தில் பிறந்த கண்ணே!

புதிய உலகிற்கு உனை வரவேற்கிறேன்!’

பற்கள் முளைத்திருந்த குழந்தை

தாதியைப் பார்த்து சிரித்தது!

*****

தலையில் எழுதியிருப்பனவெல்லாம்

பலியானோர் எண்ணிக்கையை

புள்ளிவிபரமாய் கட்டம் கட்டி சொல்லியிருந்தார்கள்!

வீட்டுக்கு வரும் தினச்செய்தித்தாளை

நிப்பாட்டிக் கொண்டேன்.

*****

உங்கள் வீட்டையும் உங்களையும்

கோவிட் 19-லிருந்து நிரந்திரமாய்

காத்துக் கொள்ள எங்கள் புரோடெக்ட்களை

நம்பி வாங்குங்கள்! என்றார்கள்.

கேபிள் கனெக்சனை நிறுத்தி விட்டேன்.

*****

கபசுரகுடிநீர் குடிக்கியளா பங்காளி?

பாக்கெட் 80 ரூவா தான்..

நம்ம வீட்டுல வாரத்துல நாலு நாள்

குடும்பமே குடிக்குது! என்றபடி பங்காளி

படியேறி வந்தார்.

நாளையும் பின்னியும் வீட்டுக்குள்ள

யாரையும் விடாதே! என்று சொல்லி வைத்தேன்.

*****

அவரவர் தலயில என்ன எழுதியிருக்கோ

அதன்படிதான் நடக்குமென்றார் அலைபேசியில்

தூரத்து உறவினரொருவர்.

நீங்க போயிட்டீங்கன்னா மாவட்டம் விட்டு

மாவட்டம் உங்க எழவெடுக்க என்னால

வரமுடியாதுங்க, இப்பவே சொல்லிடறேன்!

எதிர்முனை அணைந்திருந்தது!

**********

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button