
மௌனத்தின் ராகத்தில் குழையும் நாதஸ்வரம்
நேற்றின் கசடுகள் இன்னும்
முற்றாக உதிராத இளங்காலை
எப்போதும் பார்க்கும்
சன்னல் வழியே
தெருவைப் பார்க்கிறீர்கள்
அந்த அப்பார்ட்மெண்ட் கேட்டிற்கு
வெளியே அந்த மனிதன் நிற்கிறான்
கருப்புத் தலைப்பாகை
வெளுத்த மஞ்சள் நிறத்தில்
இறுக்கிப் பிடித்த சட்டை
தோள் பட்டைக் குச்சியில்
ஒரு ஜவுளிக்கடை பை
சட்டென்று நாதஸ்வரத்தை
வாசிக்க ஆரம்பிக்கிறான்
நல்ல கனமான சப்தத்தில்
“நில்லென்று சொன்னால் மனம்
நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை
ஓய்ந்தால் போதும்”……
மௌனத்தின் ராகத்தில்
நாதஸ்வரம் இறங்கிக் குழையும்போது
உங்கள் பிடிமானத்தை இழக்கிறீர்கள்
ஏதோ ஒன்று தளர்கிறது
ஏதோ ஒன்று உடைகிறது
யாரோ ஒருவர் காசு கொடுத்தது
நாய்கள் அவனை நோக்கிக் குரைத்தது
ரஜினிக்கு காத்திருந்த ஸ்ரீதேவி
ஆட்டோ பிடித்துப் போனது
உறங்கும் குழந்தையை நீங்கள்
கட்டிக் கொண்டது
புன்முறுவலோடு இளையராஜா
பார்த்துக் கொண்டிருப்பது
எதுவுமே உங்களுக்குத் தெரியாது.
***
விரிசலின் மறுகரை
சிமெண்ட் திண்டின்
மிகச்சிறிய விரிசலுக்குள்
எப்படியோ நுழைந்து விட்டது
அந்த எறும்பு
இல்லாத வெளிச்சத்தை நோக்கி
அது சற்றே முன்னேறும்
போதெல்லாம்
இருளின் அடர்த்தியில்
ஒரு பிடி கூடிவிடுகிறது
எனினும் அது உறுதியாக நம்பியது
விரிசலின் மறுபுறத்தை
அடைந்துவிட்டால்
அதன் எல்லா துன்பங்களும்
மறைந்துவிடுமென்று
விரிசலின் மறுகரையில்
புழுக்கங்களை உலரச்செய்யும்
ஒரு மென்காற்று உண்டு
என்று நம்பி நுழைந்தவன் கதறுகிறான்
“அப்படியேதும் நடக்காது
இது கரையற்ற கடல்
முட்டாள் எறும்பே
திரும்பிப் போ”
ஒரு விரிசலின் ஆழத்திலிருந்து
மற்றோர் விரிசலுக்கு
அது கேட்டிருக்குமா?
***
தனிமைச் சித்திரங்கள்
மனச்சருமம் எங்கும்
அரும்புகின்றன
தனிமைத் தேமல்கள்
அரிதான உரையாடல்களில்
அதிர்ந்து அடங்குகின்றன
தனிமைக் கம்பிகள்
சற்றுமுன் அணைந்த கங்கின்
சாயலேறிய விழிகளிலிருந்து உதிர்கிறது
தனிமைச் சாம்பல்
தனிமையின் பிசுபிசுப்பேறிவிட்ட
அந்த ஒரே விளக்கையும் அணைத்தாயிற்று
முன்பைவிட வெளிச்சம்
இப்போது.
******