நேர்காணல்கள்

ந உடனான உரையாடல். . .

நேர்காணல்:- கிருஷ்ணமூர்த்தி

சிறுகதைகளின் வழியே அதிகம் அறியப்பட்டிருந்த தேவிபாரதி தன்னுடைய முதல் நாவலான “நிழலின் தனிமை”ஐ 2011 இல் வெளிக்கொணர்ந்தார். நாவலில் தெரிந்த நவீன சொல்லாடலின் வழியே இன்றளவும் வாசகர்களின் கவனத்தை அந்நாவல் பெற்று வருகிறது. அவருடைய இரண்டாம் நாவலான “நட்ராஜ் மகராஜ்”ஐ கடந்த மே மாதம் சென்னையில் அசோகமித்திரன் வெளியிட்டார். இந்நாவல் இலக்கியத்தின் எல்லா சாத்தியக்கூறுகளையும், புதுமைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. நாவலால் ஈர்க்கப்பட்டு, நாவலை மட்டுமே மையப்படுத்தி தேவிபாரதியிடம் நான் கொண்ட உரையாடல்/நேர்காணல்/கேள்வி-பதில் என எப்படி எடுத்துக் கொண்டாலும் அதற்கு கிடைத்த பதில் சமூகத்திற்கும் இலக்கியத்திற்குமானதாக இருக்கிறது. நாவலின் தன்மை கேள்வி-பதிலிலும் தெரிவதை நாவலின் நீட்சியாகவே உணர்கிறேன்.

கேள்வி: “நட்ராஜ் மகராஜ்நாவல் எழுதிய அனுபவம் (குறித்து) பற்றி?

பதில்: நவை 2003 ஆம் ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் சந்தித்தேன். ந என்னும் பெயரையுடைய சத்துணவு அமைப்பாளரை. ந மிகவும் எளிய மனிதர், நல்ல இயல்புகளைக்கொண்டவர், பேராசைகளற்றவர். அப்போதே அவர் தான் வெறும் நவோ ந என்னும் பெயரையுடைய சத்துணவு அமைப்பாளரோ அல்ல, நட்ராஜ் மகராஜ், நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரன் மாவீரன் காளிங்க நடராஜ மகாராஜாவின் வாரிசு என்பதை அறிந்திருந்தார். தனது குடும்ப மரம் எனத் தன்னிடம் இருந்த நான்காக மடிக்கப்பட்ட A3 அளவுடைய நைந்துபோன தாள் ஒன்றைக் காட்டினார். தானும் தனது மனைவியும் ஓ எனனும் பெயரையுடைய சிறிய, மிகச்சிறிய கிராமமொன்றில், மாவீரன் காளிங்க நடராஜ மகாராஜா வசித்துவந்த அதே பாழடைந்த அரண்மனையில் வசித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார். நான் உடனடியாக அந்த அரண்மனையைப் பார்க்க விரும்பினேன். அடுத்த விடுமுறை நாளிலேயே நான் ந வைத் தேடிக்கொண்டு அவரது கிராமத்திற்குச் சென்றேன். நாவலில் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போல அது சிதைந்துபோன பதினெட்டுத் தூண்களையுடைய தர்பார் மண்டமும் உறக்கமஞ்சக் கூடமும் அந்தப்புரமும் குதிரைலாயமும் உள்ள அரண்மனை அல்ல. எனினும் ஓ என்னும் பெயரையுடைய ஊர்க்காரர்கள் அதை அரண்மனை என்றே குறிப்பிட்டார்கள். நாவலில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல நுழைவாயில் ஒன்றும் சிதைந்துபோன இரு காவல்கூண்டுகளும் இருந்தன. அந்தக் காவல்கூண்டுகளில் ஒன்றில்தான் ந தன் குடும்பத்தோடு வசித்துவந்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ந விரும்பாதபோதும் நான் பாழடைந்த அந்த அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்தேன். அடர்ந்த புதர்களால் சூழப்பட்டிருந்த அதன் சிதைந்த தாழ்வாரங்களின் வழியே நடந்தபோது சுமார் ஐந்தடி நீளமுடைய சாரைப்பாம்பு ஒன்று பதற்றத்துடன் என்னைக் கடந்து சென்றது. அந்தச் சாரைதான் நாவலில் கொடிய விஷமுள்ள நாகமாக மாறியிருக்கும். ந வைப்பற்றி நெடுங்கதை ஒன்று எழுத வேண்டுமென அப்போதே தீர்மானித்தேன். அதைப் பற்றி யோசிக்கத் தொடங்கியபோதுதான் அது ஒரு பெரிய நாவலுக்கான களம் என்பதை உணர்ந்தேன்.

வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் பாழடைந்த அந்த அரண்மனைக்குப் போனேன். ந வின் மனைவி போட்டுக்கொடுத்த வரக்காபியைக் குடித்துவிட்டுப் புகைபிடித்தபடியே அதன் இடிபாடுகளுக்குள் சுற்றித் திரிந்தேன். கவிஞர் இரா. சின்னசாமி, குற்றாலம் தர்மராஜன் போன்ற என் நண்பர்கள் சிலருக்கு ந வைப் பற்றிச் சொன்னேன். அவர்களை அழைத்துக்கொண்டு பாழடைந்த அந்த அரண்மனைக்குப் பலமுறை போனேன். நாவல் பற்றிய சித்திரம் அப்படித்தான் உருவானது.

2012இல் ஸ்விட்சர்லாந்தின் எழுத்தாளர்களுக்கான உறைவிட முகாமில் நான்கு வாரங்கள் தங்குவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அங்கே உட்கார்ந்துகொண்டு நான் நீண்ட காலமாக எழுதிவரும் நொய்யல் நாவலைத் தொடர்வதுதான் திட்டம். ஆனால் உறைவிட முகாமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரண்மனை எனக்கு நவைப் பற்றிய நினைவுகளைத் தூண்டியது. முதல் பகுதியை அங்கே வைத்துத்தான் எழுதினேன். 2014இல் சென்னை வாழ்க்கையை உதறிவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பி இரண்டாம் பகுதியை முடித்தபோது விபத்தில் சிக்கிக்கொண்டேன். மருத்துவமனையில் இருந்தபோதே இந்த நாவலை எழுதி முடிக்காமல் செத்துவிடக்கூடாது எனத் தீர்மானித்தேன். மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக்குத் திரும்பிய இரண்டாவது வாரத்தில் தொடங்கி கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நாள்கள் பணிபுரிந்து எஞ்சிய இரண்டு பகுதிகளை நிறைவு செய்தேன். உண்மையில் நவைக் கடைசியாகச் சந்தித்தது 2005 இறுதியில். அதற்குப் பிறகு ந என்ன ஆனார் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது.

கேள்விஇந்நாவலுக்கான களப்பணியைப் பற்றி ?

பதில்: களப்பணியா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ந வசித்து வந்த ஓ என்னும் பெயரையுடைய கிராமம் எனக்கு நன்கு அறிமுகமான ஒன்று. நான் வசித்துவந்த எனது பூர்வீகக் கிராமத்திலிருந்து மொபட்டில் போனால் அரைமணி நேரம். ஓ அழகிய, எளிய கிராமம். எனது பதின்ம வயதுகளில் நான் மாவீரன் காளிங்க நடராஜ மகாராஜாவைப் பற்றிய கதைகளில் சிலவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அது எங்கள் பகுதியில் கர்ணபரம்பரைக் கதையாகவும் கும்மிபாடல்களாகவும் புழங்கிக் கொண்டிருந்தது. உள்ளூர் வரலாற்றாய்வாளர்கள் சிலரும் சில பட்டிமன்றப் பேச்சாளர்களும் பாட்டுக்காரர்களும் அவரவர் கற்பனைக்குத் தக்கவாறு அந்தக் கதைகளுக்கு ஒருவிதமான வரலாற்று மதிப்பூட்டியிருந்தார்கள். உள்ளூர் பதிப்பகங்களில் சில மாவீரனைப் பற்றிய ஓரிரு புத்தகங்களைப் பதிப்பித்திருந்தன. நான் அந்த கிராமத்தைக் கடந்து செல்லும்போது அவற்றை நினைவூட்டிக்கொள்வேன். மாவீரன் அங்கே வாழ்ந்ததற்கு ஏதாவது தடயம் தட்டுப்படுகிறதா எனப் பார்ப்பேன். மாவீரனுக்கும் கும்பினியாருக்குமிடையே சண்டை நடந்ததாகச் சொல்கிறார்களே அதற்கான தடயம். வெடித்துச் சிதறிய பீரங்கிக் குண்டு அல்லது எலும்புக் குவியல்கள் அல்லது சிதறடிக்கப்பட்ட கோட்டையின் எச்சங்கள் அல்லது மாவீரன் தப்பிச்சென்றதாகச் சொல்லப்படும் சுரங்கப்பாதை. கிராமத்துவாசிகள் யாரிடமாவது அதைப்பற்றிக் கேட்டால் ஒருவிதமாகப் பார்ப்பார்கள். ஆனால் பிறகு திடீரென உரியவர்களால் உரியமுறையில் மாவீரனின் வரலாறு மீட்டெடுக்கப்பட்டது. மாவீரனுக்கு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது. மாவீரனின் பிறந்த தினமும் மரணமடைந்த நாளும் கண்டுபிடிக்கப்பட்டது. பால்யம் முதல் இறப்பு வரை அவனது வரலாறு ஆதியோடந்தமாகத் திரும்பவும் எழுதப்பட்டது. அதன் சில பகுதிகளை நீங்கள் மதனகாமராஜன் கதையிலும் கட்டபொம்மன் கதையிலும் காண இயலும். மாவீரன் இப்போது நாட்டின் புகழ்பெற்ற முதல் சுதந்திரப் போராட்ட வீரன். வருடாவருடம் அவனது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. உரியவர்கள் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள். மாவீரனின் பெயரால் சில அரசியல்கட்சிகள் உருவாக்கப்பட்டுவிட்டன. நான் அந்த மண்டபத்தைப் பார்த்தேன். விழாக்களை வேடிக்கை பார்த்தேன். ஒருபோதும் என்னால் அங்கே ந வைப் பார்க்க முடியவில்லை. ந என்னும் பெயரையுடைய சத்துணவு அமைப்பாளரை. இப்போது அந்த மண்டபத்தில் உள்ள புல்வெளியில் முகத்தோடு முகம் உரசிக்கொண்டு இரண்டு மான்கள் நிற்பதைப் பார்க்க முடியும். உயர்த்திய வாளுடன் போர்க்கோலம் கொண்டு தன் குதிரையில் காலூன்றி நின்றுகொண்டிருக்கும் அவனது வெண்கலச் சிலையைப் பார்க்க முடியும். களப்பணி என இவற்றைக் குறிப்பிட முடியுமா?

கேள்விஇந்நாவலை வாசிக்கும் வாசகனுக்கு முதலில் எழக்கூடிய கேள்வி ஏன் இந்நாவலின் கதாபாத்திரத்திரங்களுக்கும் ஊர்களுக்கும் பெயர்கள் இல்லை அல்லது பெயர்களின் முதல் எழுத்து மட்டுமே பெயராக இருப்பது ஏன் என்பதே ஆகும். அது வெறும் சோதனை முயற்சியா அல்லது இலக்கிய-அரசியல் செயல்பாடா ?

பதில்: நிச்சயமாக அது ஓர் அரசியல்செயல்பாடுதான். இந்த நாவலை எழுதியதேகூட ஓர் அரசியல் செயல்பாடுதான். ந வை அவனது வட்டாரத்திலிருந்து வெளியே இழுத்துவர விரும்பினேன். வரலாறு பற்றிய நமது கற்பிதங்களை மேலோட்டமாகப் பரிசீலித்தால்கூட நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் பல நக்கள் உலவிக்கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடியும். உண்மையில் எனக்கு ந மீது எந்த அனுதாபமும் இல்லை. நவுக்கு வாழ்க்கை குறித்து எந்தப் புகாரும் இல்லாதபோது அவன் மீது அனுதாபப்படுவதற்கு ஒன்றுமில்லை. எனது அக்கறை வரலாறு பற்றி உலவிக்கொண்டிருக்கும் கற்பிதங்களைப் பரிசீலிப்பதுதான். கற்பிதங்கள் கட்டுக்கதைகளிலிருந்து உருவானவை எனச் சொல்லிப்பாருங்கள், உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிற கருத்து சுதந்திரம் அல்லது படைப்பு சுதந்திரத்தின் லட்சணம் புரியும். சுதந்திரம் பற்றிய கற்பிதங்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. பெருமாள் முருகனைப் போல என்னால் தேவிபாரதியின் மரணத்தை அறிவிக்க முடியாது. ஒரு கலைஞனின் வேலை அரசியல்வாதிகளோடு மல்லுக்கட்டிக்கொண்டிருப்பதல்ல. மற்றொரு வகையில் அது ஓர் இலக்கியச் செயல்பாடும்தான்.

கேள்விநாவலின் நாயகன் ஏழ்மையில் தவிக்கிறான். ஆனால் தான் ராஜவம்சத்தின் நேரடி வாரிசு என்பதை அறியத் துவங்கியவுடன் ஓர் கனவு உலகில் சஞ்சரிக்கத் துவங்குகிறான். யதார்த்தம் அவனை விட்டு கழன்று விடுகிறது. வேர்களை தேடிச் செல்லும் தனி மனிதனின் ஆவல் அபத்தம் சார்ந்தது என இந்நாவல் கொண்டு முன்மொழிய விரும்புகிறீர்களா?

பதில்: ந நம்மில் பலரையும் போல் எளிய மனிதன். தனக்கு விதிக்கப்பட்ட எளிய வாழ்வோடு போராடக் கற்றுக் கொண்டிருப்பவன். அவனது கனவுகளும் ஆசைகளும்கூட எளிமையானவையே. தான் வெறும் ந வாகவும் ந என்னும் பெயரையுடைய சத்துணவு அமைப்பாளராகவும் இருப்பதற்குப் பழகிகொண்டிருப்பவன். வரலாற்றின் கற்பிதம் ந வின் எளிய யதார்த்தத்தைச் சிதைக்கிறது. அவன் அதற்குப் பலியாகிறான். நாவலின் இறுதி அத்தியாயத்தில் ந அந்தக் கற்பிதத்திலிருந்து விடுபட விரும்புகிறான். தன்னை நிர்வாணமாக்கிக்கொள்கிறான். ஒருவகையில் அவன் தன் மீது திணிக்கப்பட்ட கற்பிதத்தைத் துறக்கவே முயல்கிறான். ஆனால் நிலைமை கைமீறிப் போய்விடுகிறது. நீங்கள் திரும்பிச் செல்ல முடியாதபடி வரலாற்றின் பிடிக்குள் சிக்கிக்கொண்டு விட்டீர்கள் என்பதுதான் அதற்குப் பொருள்.

கேள்விதனி மனித தேடலை தவிர்த்து சமூகம் சார்ந்த சில தர்க்கங்களையும் முன்வைத்திருக்கிறீர்கள் சத்துணவுக் கூட ஊழல்கள், தொகுப்பு வீடு சார்ந்த அரசியல் என. நாவலின் குறிப்பிட்ட பகுதிக்கு பின்னர் இவை இரண்டும் காணாமல் போய்விடுகிறதே ? பெரும் சம்பவங்களின் மெலிதான பின்ணனியாக மட்டுமே அவற்றை நாவலில் பயன்படுத்தியிருக்கீர்களா ?

பதில்: அவை வாழ்வின் தவிர்க்க முடியாத பகுதிகளாக நிலைபெற்றுவிட்டவை. சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்திக்காட்டுவது, கொஞ்சம் அரிசி பருப்பைத் தனக்காக எடுத்துச் செல்வது, மானியத்தொகையில் மிச்சம் பிடிப்பது, மீதமாகும் முட்டைகளை மளிகைக்கடைக்குக் கொடுப்பது, ஒரு சத்துணவு அமைப்பாளர் வேறு எப்படியாவது இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா? ஊழல், முறைகேடு பற்றியெல்லாம் சு என்னும் யெரையுடைய அலுவலக உதவியாளர் ந விடம் விரிவாகப் பேசுகிறார் அல்லவா? ந வின் சிறிய உலகைச் சூழ்ந்திருந்த அரசியல் பிறகு அவனது கனவுகளைச் சூழ்கிறது.

கேள்விவட நாட்டில் இருந்து ஆய்வு செய்ய வரும் பேராசியர்கள் மூலமாகவும் சரி, “வின் பணிகளில் உடன் பணிபுரியும் ஆட்களின் வழியேவும் சரி அதிகாரத்தின் பன்முகப் பார்வையை சொல்லிக் கொண்டே வருகிறீர்கள். தங்களின் முந்தைய படைப்புகளைக் காட்டிலும் இப்படைப்பில் அதிகாரம் மேலோங்கி இருப்பதன் காரணம்?

பதில்: ந வெறும் ந, ந என்னும் பெயரையுடைய சத்துணவு அமைப்பாளர். அதிகாரத்தின் நிழலில் அதன் கருணையை வேண்டி வாழ்பவன். தனது எளிய தேவைகளுக்காக யாருடைய அதிகாரத்திற்காவது கீழ்ப்படிய வேண்டியவன். தொடர்ந்து அவமானங்களுக்கும் உதாசீனங்களுக்கும் உள்ளாக வேண்டியவன், அவற்றைச் சகித்துக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டிருப்பவன், தொடர்ந்து ஏமாற்றப்படுபவன், அதுபோன்ற ஒருவனின் வாழ்வைக் குறித்துப் பேச நேரும்போது அதிகாரத்தைக் குறித்துப் பேசுவதை எப்படித் தவிர்க்க முடியும்? ந வின் எதார்த்தத்தையும் கனவையும் சார்ந்து நாவலில் அதிகாரம் கேலிக்குள்ளாக்கப்படுகிறது, விமர்சனங்களுக்குள்ளாக்கப் படுகிறது. இந்த நாவலை எழுதியதே ஓர் அரசியல் செயல்பாடு என உங்களுடைய முந்தைய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்திருக்கிறேன்.

கேள்வி: சமகாலத்தில் வரலாற்றை மீள்பார்வை செய்வதன் பிண்ணனியில் இருக்கும் அபத்தங்களை நாவலில் விரிவாக பேசியிருக்கிறீர்கள். ஆனால் வரலாற்றின் மீள்பார்வை பற்றிய தங்களின் பார்வை என்ன ?

பதில்: வரலாறு என்பதே ஒருவகையான புனைவு. அதை மீள்பார்வை செய்ய முயலும்போது அபத்தம் வரலாற்றின் தவிர்க்கமுடியாத பகுதியாகிவிடுகிறது. உலக அளவில் மீட்டெடுக்கப்பட்ட எந்த வரலாற்றை வேண்டுமானாலும் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள் அதன் பின்புலங்களில் பல அபத்தமான கற்பனைகள் பல்லிளித்துக்கொண்டிருப்பதைக் காண முடியும். என்ன ந வின் வரலாற்றை மீட்டெடுக்கும்போது இளிப்பு சற்று அதிகமாகப் போய்விட்டது.

கேள்வி: நாவலை மையப்படுத்தி வரலாற்று பிரக்ஞையின் சமகால நிலை பற்றிய கருத்து?

பதில்: வரலாற்றுப் பிரக்ஞை தற்போது கேலிக்கூத்தான ஒரு புனைவாக மாறியிருக்கிறது.

கேள்வி: நாயகன் தன்னை வரலாற்றின் எஞ்சிய பகுதி என உணர்கிறான். ஆனாலும் வாசகனுக்கு அவ்வரலாறு தெளிவாக கூறப்படவில்லையே ஏன்? அங்கங்கு கதாபாத்திரங்களின் கதையாடல் வழியே வரலாற்றை கூறும் உத்தியை ஏற்கக் காரணம்? மேலும் இந்த உத்தி வாசகனுக்கு அவ்வரலாற்றின் மீதான பிடியை தளர்த்திவிடாதா?

பதில்: முதலில் ந தான் ஆண்டபரம்பரை என்பதை மனதளவில் ஏற்கவே இல்லை. மேடையில் பேரழகி ஸ்ஸைப் போல் தோற்றமளிக்கும் பெண் கும்பினிப் படையின் தளபதி பாம்பு தீண்டி இறந்துவிட்டதாகச் சொல்லும்போது ந தனது பாழடைந்த வீட்டில் ஒளிந்துகொண்டிருக்கும் நாகத்தை நினைத்துக்கொள்கிறான். ந, மாவீரனின் சிற்ப மாதிரியாக கிரீடத்துடனும் உடைவாளுடனும் நிற்கும்போது அவனது மனைவி வ அவனுக்கு சத்துணவு அரிசியால் சமைக்கப்பட்ட அவர்களது வழக்கமான எளிய உணவைக்கொண்டு வருகிறாள். நான் இந்த நாவலில் சொல்லியிருப்பது, சொல்ல விரும்பியது, ந வின் வரலாற்றைத்தான், ந என்னும் பெயரையுடைய சத்துணவு அமைப்பாளரின் வரலாற்றை.

தவிர தெளிவான வரலாறு என ஒன்றுமே இல்லை. ஔரஙக்சீப் சில வரலாற்றாசிரியர்களால் கொடூரமான சக்ரவர்த்தியாகச் சித்தரிக்கப்படுகிறார். ஆனால் அவர்தான் வீழ்ந்துகொண்டிருந்த மொகலாய சாம்ராஜ்யத்தைத் தடுத்து நிறுத்தியவர் என வேறுசில வரலாற்றாய்வாளர்களால் போற்றப்படுகிறார். செங்கிஸ்கானின் படையெடுப்புக்கள் பற்றியும்கூட வேறுபட்ட பார்வைகள் உண்டு. காந்தியின் செயல்பாடுகள் குறித்த கடும் விமர்சனங்கள் இப்போதும் புழக்கத்திலிருக்கின்றன. புழக்கத்திலிருக்கும் வரலாற்றில் கற்பனைகளுக்குப் பஞ்சமே இல்லை. நந்தவம்சம் பற்றிப் படித்திருக்கிறீர்களா? மௌரியப் பேரரசு எப்படி உருவானது எனப் படியுங்கள். தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ள மூவேந்தர்களின் வரலாற்றையோ ஆண்டபரம்பரைகளின் கதைகளையோ படித்துப் பாருங்கள், அப்போது வரலாற்றுக்கும் கற்பனைகளுக்கும் இடையே உள்ள இணைவு அல்லது இடைவெளிகள் பற்றித் தெரிந்து கொள்வீர்கள். வரலாறு சார்புகளற்றதல்ல. அவரவரது அரசியல் சார்புகளுக்கேற்ப வரலாறு உருவாக்கப்படுகிறது, புதைக்கப்படுகிறது, மீட்டெடுக்கப்படுகிறது. ஒருவகையான கர்ணபரம்பரைக் கதைதான்.

கேள்வி: காளிங்க நடராஜ மகராஜாவின் வாரிசு என்பதை அறிந்தவுடன் நாவல் முழுக்க ந வம்சரீதியில் தனக்கான அதிகாரத்தை அடைய நினைக்கிறான். ராஜாவின் வாரிசுக்கு அரண்மனை வாழ்க்கைதான் கிடைக்க வேண்டும் என நினைப்பது ஜாதீய படிநிலைகளையும் வர்க்கப் படிநிலைகளையும் ஆதரிப்பதாகாதா ?

பதில்: ஆம், வரலாறு சார்ந்த கற்பிதங்கள் அனைத்துமே அவை போன்ற படிநிலைகளை உருவாக்குபவைதான். அது போன்ற ஒரு கற்பிதத்தை ஏற்று ந கனவுகாண முற்படுகிறான். அதற்குப் பலியாகிறான். சாதிய, வர்க்கப் படிநிலைகளைப் பாதுகாக்கும் எல்லாவிதமான கற்பிதங்களுக்கும் சில பலி மிருகங்கள் அவசியம் அல்லவா?

கேள்விநட்ராஜ் மகராஜ் நாவலுக்கும் காஃப்காவின் தி ட்ரையல்நாவலுக்குமான உறவை ஆசிரியராக நீங்கள் எப்படி பார்க்கிறீகள் ?

பதில்: இல்லை, இரண்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. காப்காவின் ஆழமான பாதிப்பை ஏற்றவன் நான் என்பதை ஒப்புக்கொள்ளும்போதுகூட இந்த நாவலுக்கும் காப்காவின் விசாரணைக்கும் தொடர்பிருப்பதாக நான் நினைக்கவில்லை. காப்கா தனது நாயகனுக்கு க என ஓர் ஓரெழுத்துப் பெயரைச் சூட்டியிருப்பார். அந்த உத்தியை நான் பின்பற்றியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் காப்காவுக்கு எப்படியோ நான் எனது பாத்திரங்களுக்கு பெயரின் முதலெழுத்தை அல்லது ஒற்றை எழுத்தைப் பெயராக வைத்ததற்கு அரசியல் ரீதியான காரணங்கள் உள்ளன. உங்களுடைய கேள்விகளுக்கான இந்த பதில்களில்கூட ந என்பவன் உண்மையில் யார் என்றோ மாவீரன் காளிங்க நடராஜ மகாராஜா யார் என்றோ நான் வெளிப்படுத்தத் துணியவில்லை. யாராவது கேட்டால் இந்த நாவலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல எனச் சொல்ல வேண்டாமா? வரலாறு சார்ந்த கற்பிதங்களில் திளைத்துக்கிடக்க விரும்பும் ஒரு சமுகம் அதன் மீதான பகடியைச் சகித்துக்கொள்ளும் என நம்புவதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.

கேள்விமேற்சொன்ன பதில்களின் வழியே சாமான்யன் வரலாற்றின் சுழற்சிகளில் சிக்கிக் கொள்வதையும், அதிகாரத்தால் நசுக்கப்படுவதையும் நாவலைக் கொண்டு விவரித்தீர்கள். யதார்த்தத்தில் இவ்விரண்டிலிருந்தும் சாமான்யன் தன்னை விடுவித்துக் கொள்வது எப்படி ?

பதில்: இறுதி அத்தியாயத்தில் காவல்துறை அதிகாரியால் தூக்கி வீசப்படும் ந வை திடகாத்திரமான இளைஞன் தன்தோளில் சுமந்துகொண்டு செல்வான் அல்லவா? அப்போது அவன் நவிடம் ந வெறும் நவாக ந என்னும் பெயரையுடைய சத்துணவு அமைப்பாளராக இருந்திருக்கலாம் என்கிறான். இலக்கிய நுட்பங்களுக்கு அப்பால் அது வாழ்வைக் குறித்த எளிய மனிதன் ஒருவனின் பார்வை. கடந்த பல நூற்றாண்டுகளின் வரலாறே எளிய மனிதர்களுக்கும் அவர்கள் மீதான அதிகாரத்திற்குமிடையேயான போராட்டங்கள்தாம் என நான் நினைக்கிறேன். இந்தப் போராட்டங்களில் பலியிடப்பட்ட அதே எளிய மனிதர்கள்தாம் வரலாற்றைக் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள், அம்பலப் படுத்துகிறார்கள், வரலாற்றின் பிழையான கணக்கைச் சரி செய்கிறார்கள். மீட்டெடுக்க முயல்கிறார்கள், வரலாற்றையும் தம் வாழ்வையும்.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button