
‘வானில் இருந்து அடுத்தடுத்து விழுந்த குண்டுகள், அந்த இடத்தையே புகைமண்டலமாக மாற்றியிருந்தது. பச்சை வயல்களாக காட்சியளித்த அந்த கிராமம், ஒரே நொடியில் அதன் அழகை இழந்து நின்றது. கரும் புகையை கிழித்துக் கொண்டு ஓடி வந்த அச்சிறுமியின் குரல், இன்றும் என்னுள் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது’.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் புகைப்படக் கலைஞர் நிக் உட் (Nick Ut) உதிர்த்த திடமான வார்த்தைகள் இவை.
யார் இந்த நிக் உட்?
ஜீன் 02, 1972.
வியட்நாம் போரின்போது நிக் உட் எடுத்த ஒரு புகைப்படம், உலகையே அதிரச் செய்தது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக நடந்த போரின் தீவிரத்தை, ஒரே ஒரு புகைப்படம் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
உடலெங்கிலும் ஆங்காங்கே கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் தோலுடன், நிர்வாணமாக ஓடி வரும் இந்த சிறுமியின் புகைப்படம் தான் அது
நாபாம் சிறுமி (Napalm Girl) என அறிப்படும் அந்த புகைப்படத்தைப் பற்றி பார்க்கும் முன்பு, வியட்நாம் போரைப் பற்றி சுருக்கமாக பார்த்து விடலாம்.
இதுவரை நடைபெற்ற உலகப் போர்களில், மிக நீண்ட காலம் நடைபெற்ற போர்களுள் வியட்நாம் போரும் ஒன்று. 1955 ல் ஆரம்பித்து 1975 வரையில் நீண்டது.
வடக்கு வியட்நாமுக்கும் தெற்கு வியட்நாமுக்குமான இந்த போரின் முடிவில், வடக்கு வியட்நாம் வெற்றி அடைந்தது.
போரின் காரணம்?
வெரி சிம்பிள். வடக்கு வியட்நாமில் கம்யூனிசம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கும் சமயம். கம்யூனிசம் தலை தூக்கும் நேரத்தில் அதை ஒடுக்க, ‘உள்ளேன் ஐயா…’ என தவறாமல் அட்டெண்டன்ஸ் போடுவது தானே அமெரிக்காவின் வழக்கம். அது தான் இங்கும் நடந்தது.
வடக்கு வியட்நாம், சோவியத் ரஷ்யா, சீனா என கம்யூனிச நாடுகள் எல்லாம் ஒரு புறம் இருக்க தெற்கு வியட்நாம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என கம்யூனிச எதிர்ப்பு நாடுகள் எல்லாம் மறுபுறம் நின்றனர்.
ஒரு வகையில் அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் நடந்த பனிப்போரின் உச்சம் தான் இந்த வியட்நாம் போர் என்றே சொல்லலாம்.
மில்லியன் கணக்கில் அப்பாவி மக்கள் இதில் மாண்டனர். அமெரிக்க வீரர்களும் லட்சக்கணக்கில் செத்து மடிந்தனர்.
சரி, புகைப்படகதைக்கு வருவோம்.
ஜூன் 8. 1972.
அமெரிக்காவின் அசோசியேட் ப்ரஸில் (Associated Press), புகைப்பட பத்திரிகையாளராக இருந்த நிக் உட்டுக்கு அன்றைய வேலை வியட்நாம் போரை படம் பிடிப்பது. கேமராவுடன் அந்த அபாயகரமான வேலைக்கு நிக் புறப்பட்டார். அப்போது அவருக்கு வயது இருபது!
தெற்கு வியட்நாம் வீசிய குண்டுகளால் சிதிலமடைது கிடந்த ‘ட்ராங் பாங்க்’ (Trang Bang) கிராமத்தை, நிக் உட்டின் கேமரா பல கோணங்களில் படம் பிடித்தது.
அங்குள்ள கோவில் ஒன்றில் பதுங்கியிருந்த கிராம வாசிகளை குண்டுகள் தாக்க, உயிரை காப்பாற்றிக் கொள்ள குத்தியிரும் குலையுயிருமாக நிக் உட்டை நோக்கி ஓடி வந்திருக்கின்றனர்.
அப்போது அவர்களுள் ஒருவளாக ஓடி வந்த சிறுமி தான் ஒன்பது வயது தி கிம் ப்ஹுக் (Thi Kim Phuc).
‘என் தலைக்கு மிக அருகில், விமானம் ஒன்று பறந்து வந்தது. திடீரென அதிலிருந்து வந்த நான்கு குண்டுகள் என் மீது விழுந்தன. மரணஓலங்களும், நெருப்புப் புகைகளும் என்னை சூழ்ந்து கொண்டன. என் உடலில் இருந்த ஆடைகள் தீக்கு இறையாகின’.
தன் வாழ்க்கையை மாற்றிய அந்நாள் பற்றி, ஒரு மேடையில் கிம் ப்ஹுக் இவ்வாறு பேசினார்.
நிக் உட் எடுத்த அந்த புகைப்படத்தை பற்றிக் கேட்கும்போது,’ முதலில் அந்த புகைப்படத்தை பார்த்தபோது எனக்கு கோபம் தான் வந்தது. இப்படி ஒரு நிலையில் நான் இருந்த போது, என்னை ஏன் படம் பிடிக்க வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால் இன்று போரின் உண்மை முகத்திற்கு அடையாளமாக இருக்கும் இப்படத்தை நினைத்து பெருமையே கொள்கிறேன்’ என்றார்.
கிம் ப்ஹீக் தீக்காயத்துடன் ஓடிவந்த போது, அவருக்கு முதலுதவி செய்தது நிக் உட்டும் அங்கிருந்த ராணுவ வீரர்களும் தான். கிம் ப்ஹீக்கை மருத்துவமனையில் சேர்த்து, அவளுக்கு உண்டான எல்லா உதவிகளையும் செய்திருக்கிறார்கள்.
இதற்கிடையே நிக் உட் எடுத்த புகைப்படம் தினசரி பத்திரிகைகளில் வெளிவந்து, காட்டுத்தீயைப் போல உலகெங்கிளும் பரவத் தொடங்கின.
புகைப்படத்தை பார்த்த அமெரிக்க மக்கள், கண்ணீர் வடித்தனர். இதற்கு மேலும் போரைத் தொடர்வது சாத்தியம் இல்லை என புரிந்து கொண்ட அமெரிக்கா, போரிலிருந்து பின் வாங்கியது.
நிக் உட்டுக்கு 1973 ல் புகைப்படத் துறையின் மிக உயரிய விருதான, ‘புலிட்சர் விருது’ வழங்கப்பட்டது. ஒரே புகைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் நிக் உட்.
‘நாபாம் சிறுமி’ கிம் ப்ஹீக்கு இப்போது வயது 67. கனடாவில் வசித்து வருகிறார். தான் ஏறும் மேடைகளில் எல்லாம் உலக அமைதிக்காக பேசும் இவர், சமீபத்தில் இப்படி சொல்லி இருந்தார்…
‘என்னிடம் பேசும் எல்லோரும் என் உடம்பில் உள்ள தழும்புகளைப் பற்றி கேட்பார்கள். அப்போதெல்லாம் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்திருக்க வேண்டும் என நினைப்பேன். ஆனால் காலம் என் எண்ணத்தை மாற்றிவிட்டது. நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள். இதற்காகத் தான் கடவுள் என்னை இந்த பூமியில் படைத்திருக்கிறார்’.
*****