இணைய இதழ்இணைய இதழ் 47சிறுகதைகள்

நம்பிக்கை – கணேஷ் ராகவன்

சிறுகதை | வாசகசாலை

தையை முழுவதுமாகக் கேட்ட மேனேஜர் சுபாஷ் சோபாவிலிருந்து எழுந்து பிரகாசைக் கட்டிப்பிடித்தார்.

“பிரகாஷ், கதை சூப்பர். இது எவ்வளவு செலவு ஆனாலும் நம்ம பண்ணுறோம்.” சுபாஷின் வாயிலிருந்து பொழிந்த வார்த்தைகள், வாழ்க்கையின் மகத்துவத்தை அவனுக்குள் உணர்ந்தான். சுற்றிச் சுற்றி வந்த தோல்விகளின் ஒட்டுமொத்த வலிகளை அந்த வார்த்தை சுக்கு நூறாக உடைத்தது. கடந்து வந்த பாதைகள் எல்லாம் சுகமாகத் தெரிந்தது. கொண்டாட்டமானது மனம். இரண்டு கண்களும் நிறைந்தன.

“பிரகாஷ்…. ப்ரொட்யூசர் மலேசியாவுக்கு போயிருக்காரு. வந்ததும் நான் சொல்லுறேன். உடனே தொடங்கலாம்.” பிரகாஷ் கண்களைத் துடைத்துக்கொண்டு தலையை ஆட்டினான். 

“பிரகாஷ்…. நீ எப்பவும் ரெடியா இரு. நான் ஓ.கே சொன்னா அவரும் ஓ.கே தான். கதை கேட்டார்னா என்கிட்டே எப்படி கதை சொன்னியோ, அதே மாதிரி சொல்லு.”

“சரி சார்.”

“பிரகாஷ், இந்தப் படத்தோட உன்னுடைய வாழ்க்கை மாறப்போவுது. இந்த வருஷத்தில் இது பெஸ்ட் சினிமா.” தன் படைப்புகளை மற்றவர்கள் புகழ்ந்து பேசும்போது அதில் கிடைக்கும் ஆனந்தத்தினை உணர்ந்தபடி பிரகாஷ் நின்றான்.

“செம கத பிரகாஷ். கலெஷன் அள்ளும். விஜய்சேதுபதி கால்ஷீட்தானே கேட்ட. அதெல்லாம் நான் வாங்கி வைக்கிறேன். நீ ரெடியா இரு. ப்ரொட்யூசர் வந்ததும் ஆபீஸ் போட்டு வேலையை ஆரம்பிக்கலாம்.”

“ரொம்ப நன்றி சார்.”

“நன்றி எல்லாம் எதுக்கு? நீ பெரிய டைரக்டர் ஆனா என்னை எல்லாம் மறக்காம இருந்தாப் போதும்.”

“அப்படி யாரையும் நான் மறக்க மாட்டேன் சார்.” சுபாஷ் புன்னகையுடன் அவன் தோளைத் தட்டிக்கொண்டு “சும்மா பிரகாஷ்.” என்று சொல்ல, பிரகாஷ் புன்னகைத்தான்.

“சரி சார்…… நான் கிளம்பட்டுமா?.”

“சரி பிரகாஷ், ரெடியா இரு. நாம ஆரம்பிக்கலாம்.” சுபாஷ் சிரித்துக்கொண்டு கையை நீட்ட, பிரகாஷ் அவரது கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான். ‘மட, மட’ என கண்கள் நிறைந்த வண்ணம் இருந்தன. எத்தனை வருஷ போராட்டம். அவமானம், ஏமாற்றம், துரோகம் எல்லாம் வாழ்க்கையின் அனுபவங்களாக உணர்ந்தான். அனுபவங்கள் நல்ல படைப்பை உருவாக்கும் என்று நினைத்து தன் இரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியைப் பகிர, அவனுடைய நெருங்கிய நண்பர் செல்வாவுக்கு போன் போட்டான். 

“மச்சி….. என்ன ஆச்சு.”

“ஓ.கே. சொல்லிட்டாரு.”

“வாழ்த்துகள். சூப்பர்டா.”

“பத்து நாளில ஆபீஸ் போட்டுத்தாரேன்னு சொல்லிட்டாங்க. நம்மளோட கஷ்டம் இதோட மாறுண்டா”

“மாறணும். அப்ப ட்ரீட் இருக்கு. இப்போ நீ எங்க இருக்க.”

“ப்ரொட்யூசர் ஆபீஸ் கீழ நிற்கிறேன். இந்த விசயத்த முதலில உனகிட்ட தான் சொல்லுறேன்.”

“சூப்பர்டா. எனக்கு என்ன சொல்லுறதுனு தெரியில்ல. சீக்கிரம் நீ ரூமுக்கு வா.”

“சரிடா.” என்று போனின் தொடர்பைத் துண்டித்துவிட்டு, பாக்கெட்டில் வைத்துவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

வாழ்க்கையைத் திரும்பி பார்க்கும் போது கடந்து போன வாழ்க்கை ஏதோ ஒரு விதத்தில் என்னை மேன்மைப்படுத்தியது. அது சந்தோசமாக இருக்கலாம். துக்கமாக கூட இருக்கலாம். ஆனா, இனி நடக்க இருப்பதை கெட்டியாகப் பிடித்து நம் முழு உழைப்பை போடணும். முதல் சினிமா எல்லாவிதத்திலும் நம்மளை அடையாளப் படுத்தணும். தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றியை நோக்கி நகரணும் என்றெல்லாம் கனவுகளில் மிதந்துகொண்டு பிரகாஷ் பைக்கில் சென்றுகொண்டிருக்கையில், பின்னால் அதிவேகமாக வந்த டாட்டா இண்டிகா பிரகாஷ் பைக்கில் மோத, பிரகாஷ் தூக்கி வீசப்பட்டான்.

*****

செல்போன் சத்தம் கேட்டதும், பிரகாஷ் கண்முழித்தான். பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்துப் பார்க்க ‘அம்மா’ என்ற பெயரில் அழைப்பு வந்துகொண்டிருந்தது. பிரகாஷ் அழைப்பை எடுத்துக் காதில் வைத்தான்.

“ராசா…. போயிட்டியா.”

“ஆமா அம்மா.”

“சரி…. பாத்து பத்திரமா வா. ரோடு எல்லாம் பாத்து கிராஸ் பண்ணு.”

“சரி அம்மா.”

“சாப்பிட்டியா.”

“செல்வா வந்ததும் சாப்பிடணும். சரி அம்மா….. வேல முடிச்சிட்டு பேசறேன்.”

“சரி அப்பா.” என்று சொல்ல, அழைப்பைத் துண்டித்துவிட்டு போனை பாக்கெட்டில் வைத்தான். பிராட்வே பஸ் ஸ்டாண்டில் பேருந்துகள் வரிசையாக நின்றிருந்தன. மக்கள் கூட்டம் கூட்டமாக பஸ்டாண்டில் உள்ளே வந்து கொண்டும், வெளியே சென்று கொண்டுமிருந்தனர். பஸ் ஸ்டாண்டில் சுற்றியிருந்த டீ கடை, டிபன் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இவ்வளவு பெரும் இரைச்சல் சத்தத்துக்கிடையில், விடிந்து இவ்வளவு நேரம் கடந்தும் தூக்கத்தைவிட்டுக் கலையாமல் சிலர் தூங்கிக்கொண்டிருந்தனர்.

‘என்னை மேன்மைப்படுத்தியது சென்னை என்ற நகரம். பல சிக்கல்கள், தொடர் வறுமையில் வாழ்க்கையைக் கடந்தாலும் சென்னை நகரம் எப்பொழுதும் ஒரு சுகத்தைக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. பல நாட்கள் நினைத்திருக்கிறேன் வாழ்க்கையில் தோற்றுப்போவோமா என்று. அதே சமயம் வெற்றி உன் அருகில் என்று சென்னை காட்டும். சென்னைக்கு வந்த பிறகுதான் என் ஊரின் அற்புதத்தைக் கண்டேன். உலகத்தை விரித்துப் பார்த்தேன். ஊரின் சிறப்பை உணர்ந்தேன். மனித மனங்களைத் தேடினேன். நேசித்தேன். என் படைப்புகளுக்குப் பின் சென்னைக்குப் பெரும் பங்கு இருக்கு’. என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது செல்வாவிடமிருந்து அழைப்பு வந்தது. உள்ளுக்குள் மகிழ்ச்சி பூத்தது. போனை காதில் வைத்து “ஹலோ.”

“பிரகாஷ்….. எங்க?”

“பஸ்டாண்டு உள்ள.”

“நானும் அங்க தான் நிக்கிறேன்.” பிரகாஷ் இருக்கையிலிருந்து எழுந்தான். கண்கள் வேகமாகத் தேடின.

“செவன்டீன் டி பஸ் நிக்குமில்ல அந்த இடத்தில நிக்கிறேன்.” செல்வா சுற்றித் திரும்பி பார்க்க, உடல் மெலிந்து, முடியெல்லாம் கொட்டி, தோளில் கறுப்பு நிற பேக், புல் கை நீல நிற சட்டை, கறுப்பு பேண்டுடன் நின்றான். “உன்ன பாத்துட்டேன்.” என குரல் நடுங்கிச் சொல்ல,

“அப்படியா.”

“என்னடா…. உடம்பு இப்படி மெலிஞ்சு போச்சு.”

“ஒண்ணுமில்லடா. நல்லாதேன் இருக்கேன்.”என்று பிரகாஷ் சொல்ல, செல்வா அழைப்பைத் துண்டித்து நேராக வர, பிரகாஷ் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தான். எங்க இருக்க வேண்டியவன். ஒருவேளை அந்த சினிமா இயக்கியிருந்தா இவன் தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குநராக இருந்திருப்பான். இவனைப் போன்ற தலை சிறந்த பல படைப்பாளிகளும் சினிமாவுக்கு வெளியேதான். என்று மனதினுள் குமுறினான்.

செல்வா நேராக பிரகாஷ் முன்பு வந்து நின்று வேதனையோடு அவனைக் கட்டிப்பிடித்தான். இருவரின் கண்களும் நனைந்தன.

“என்னடா வேசம்.” பிரகாஷ் சிரித்தான். “ரூமுக்கு வந்திட்டு வரலாண்னு சொன்னா அது கேட்க மாட்ட.”

“அது ஒண்ணும் இல்லடா. காலையில ஏழு மணிக்கெல்லாம் சென்டரல் ரயில்வே டேசன் கொண்டு விட்டான். அப்புறம் அங்கே லாட்ஜில குளிச்சு பிரஷ் ஆகி இங்க வந்திட்டேன்.”

“பாத்து ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும். வந்தீயே பொறுமையாக ரூமுக்கு வந்து அங்க குளிச்சீட்டு. ரெண்டு நாள் தங்கிட்டு போயிருக்கலாம். வந்ததும் வீட்டுக்கு ஓடுற. நீ சொன்னா எங்க கேட்கிற. சரி, நீ சாப்பிட்டியா.”

“நீ வந்தீட்டு சாப்பிடலாண்ணு இருந்தேன்.”

“சரி வா.” என்று இருவரும் பஸ்ஸ்டாண்டை விட்டு வெளியே வந்தனர்.

“ இப்ப உடம்பு எப்படிடா இருக்கு.”

“பரவாயில்லடா, கடினமான வேலை செய்ய முடியாது. அதிக தூரம் நடந்தா மூச்சு வாங்குது.”

“உடம்பில காயம் வந்தா அத சுமக்க வேண்டியதுதான். நீ ஒண்ணு பண்ணு. கேரளாவுக்கு போ. அங்க சித்த வைத்தியம் நல்ல ட்ரீட்மெண்ட் இருக்கு.” பிரகாஷ் சிரித்தான். இருவரும் ரோட்டின் எதிரே இருந்த ஹோட்டலில் ஏறினர். வரிசையாக இருந்த டேபிளில் சிலர் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இருவரும் நேராகச் சென்று கையினை கழுவிக்கொண்டு ஒரு டேபிளைப் பார்த்து எதிர் எதிர் நாற்காலியில் அமர்ந்தனர்.

“உடம்பு முக்கியம். காசு வருதில்ல. அத எடுத்துக்கிட்டு நேரா கேரளாவுக்கு போ.”

“டேய்….. ஆக்சிடெண்டுக்கு பின்னாடி ட்ரீட்மெண்டுக்காக வாங்கின காசு இன்னும் கட்டி முடிக்கல. அம்மாவுக்கு வேற வயசாச்சு. பாவம் இப்பவும் வீட்டு வேலைக்குப் போய்தான் என்னையும் பாக்கிறாங்க” செல்வா பிரகாசைப் பார்த்தான். 

“சரிடா, உன்னுடைய ஆக்சிடெண்ட் கேசுக்கு எவ்வளவு காசு வருது. வக்கில்கிட்ட ஏதாவது கேட்டியா.”

“இல்லடா. கேஸ் ஜெயிச்சு பணம் வந்திருக்குண்ணு சொன்னாரு. எனக்கு ஆன ஆபரேசன், மருந்துச் செலவு எல்லாம் பில்லோடு சேர்த்து மூணு லட்சத்துக்கு எழுதிக் கொடுத்தேன். மூணு லட்சம் வந்தா எனக்கு ரொம்ப உதவியா இருக்கும். மூணு லட்சம் வந்தா ஆக்சிடெண்டுக்கு வாங்கின ரெண்டு லட்சம் கடன் இருக்கு. அத கட்டிட்டு. மீதி உள்ள ஒரு லட்சத்துல ஐம்பதாயிரத்தை அம்மா பேரில போட்டுட்டு மீதி உள்ள ஐம்பதாயிரத்த வச்சு குறும்படம் பண்ணலாண்ணு நினைக்கிறேண்டா. ரொம்ப நாளாச்சு. சினிமாவை விட்டு ரொம்ப விலகி இருக்கிறமாதிரி தோணுது.”

“அப்படி ஒண்ணும் நீ நினைக்காதே. குறும்படம் அப்புறம் பார்க்கலாம். நீ பஸ்ட் கேரளாவில போய் ட்ரீட்மெண்ட் பாக்கணும். உடம்பு நேராக இருந்தாதான் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நடக்கும்.”

“மூணு லட்சம் அப்படியே கெடச்சா எல்லா பிரச்சனையும் தீரும்.”

“எப்படிடா…… செக்கா கையில குடுப்பாங்களா.” – பேசிக்கொண்டிருக்கும் போது டேபிள் அருகில் ஒரு இளைஞன் வந்து “சார்…. என்ன வேணும்.”

“பிரகாஷ்…. என்ன வேணும்.” செல்வா கேட்க

“எனக்கு ஒரு தோச, வட ஒண்ணும்.”

“எனக்கு மூணு இட்லி, வட ஒண்ணு.” அவன் கிளம்பிச் செல்ல,

“பணம் அக்கவுண்டில் வரும்.”

“அந்த ஆக்சிடெண்டு மட்டும் நடக்கல்ல இன்னைக்கு நீ எங்கையே இருந்திருப்ப.”

“அதெல்லாம் நெனச்சா பைத்தியம் பிடிக்கும். எல்லாம் ஒரு அனுபவம்னு சொல்லி வாழ்க்கையை நகர்த்த வேண்டியதுதான்.”

“நீ பண்ண வேண்டிய இடத்தில வேறு ஒருத்தன் அந்தக் கம்பெனியில் படம் பண்ணி, அந்த கம்பெனி பெரிய நஷ்டத்தில மூழ்கி சினிமாவே வேண்டாண்ணு அந்த ப்ரொட்யூசர் ஓடினான்.”

“மேனேஜர் எல்லாம் சொன்னாரு.”

“டேய்….. அந்த மேனஜர் தொடர்பில இருக்காரா?.”

“ஆமாடா. நா சொன்ன கத அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. இப்பவும் அதைப் பத்தி பேசுவாரு.”

“விடாத…. மேனேஜரிடம் அடிக்கடி பேசு. உனக்கு வந்த தலை எழுத்து.”என்று பேசிக்கொண்டிருக்கும் போது சர்வர் இளைஞன் வலதுகையில் ஒரு தட்டில் தோசையும் வடையும், இடதுகை தட்டில் இட்லி வடையுடன் கொண்டு டேபிளில் வைத்தான். அருகில் இருந்த டேபிளிலிருந்து வாளியிலிருந்த சாம்பார், சட்னி எடுத்து இவர்கள் டேபிளில் வைத்துவிட்டு அருகில் இருந்த பக்கத்து டேபிளை நோக்கி நகர்ந்தான்.

“உனக்கு இதவிட பெரிசா ஏதோ ஒண்ணு காத்திருக்கு.”

“எனக்கும் நம்பிக்கை இருக்குடா. அதனாலதான் நான் இப்போ உயிரோடு இருக்கேன்.”

“டேய்…. ப்ரெண்ட்ஸ் யாராவது போன் பண்ணுவங்களா?”

“நான் பெரும்பான்மையான நண்பர்களின் போனைத் தவிர்த்திட்டு வாறேன். உதவி பண்ணக் கூட வேண்டாம். ஒரு நல்ல வார்த்தை கூட பேசமாட்றாங்க. இவனுவ எல்லாம் என்ன படைப்பாளிண்ணு எனக்குத் தெரியில்ல.”

“என்ன படைப்பாளி. சினிமாவுக்குள்ள ஒண்னும். வெளியே ஒண்னும். இத பாரு….. முப்பது நாள் சூட்டிங் போச்சு. இனி இருபது நாள் இருக்கு. இந்த அசிஸ்டெண்ட் டைரக்டர் என்ன பண்ணுறாங்க, எப்படி சாப்பிடுறாங்கண்ணு ஒரு வார்த்தை கூட கேட்கல டைரக்டர். அவனுக்கு வேல மட்டும் நல்லா நடக்கணும். சரி, புரடக்சனில குடுக்கிற சம்பளமாவது கரக்ட்டா அசிஸ்டெண்ட் டைரக்டருக்கு குடுக்கிறானா? அதுவும் இல்ல. பாவம் அசிஸ்டெண்ட் டைரக்டர் பொழைப்பு. இவன் எல்லாம் என்ன சமூகப் படம் எடுத்து. இவனுவ எல்லாம் வளர மாட்டானுவ. கேட்டா படைப்பாளியாம்.” கொஞ்சம் ஆவேசமாக பேச, அந்த இளைஞன் வந்து “சார்…. வேற ஏதாவது வேணுமா.”

“வேற என்ன வேணும் செல்வா.”

“எனக்கு வேண்டாம்.”

“அப்போ ரெண்டு டீ சொல்லட்டா.”

“ஓ.கே.” என்று செல்வா சொல்ல

“தம்பி…… ரெண்டு டீ.” இருவரும் சாப்பிட்டு முடித்து கையினை கழுவிக்கொண்டு டேபிளில் வந்து அமர்ந்தனர்.

“செல்வா…. இந்த இடைப்பட்ட நாட்களில் என்னால நல்ல கதை பண்ண முடிஞ்சது.” அந்த இளைஞன் இரண்டு டீயை கொண்டு வைத்து விட்டு “சார்….பில் போடட்டுமா?”

“போடுங்க” என்று செல்வன் சொல்ல,

“எல்லாரும் நினைக்கிறாங்க, ஊருக்கு போனா அவன் இனி அவ்வளவுதான். திரும்பி வரமாட்டாண்ணு.”

“பிரகாஷ்…. நமக்கு அது அவசியமில்லை.”

“உண்மைதான். ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் நம்ம லட்சியத்துக்காக என்னல்லாம் இழந்ததோம்னு என்னால் உணர முடிந்தது.” செல்வா டீயைப் பருகிக்கொண்டு “எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் ஏதாவது ஒன்னை இழந்து கொண்டுதான் இருக்கிறோம்.” என்று பேச, பிரகாஷ் செல்போனில் அழைப்பு வந்தது. பிரகாஷ் எடுத்துக் காதில் வைத்து ‘ஹலோ.”

“சார்….. நான் வக்கீல் ரவிகுமார் அசிஸ்டெண்டு பேசுறேன். எங்க இருக்கீங்க?.”

“கோர்ட் பக்கத்தில இருக்கேன்.”

“அப்படியா…. நான் கோர்ட் வாசலில் நிக்கிறேன்.”

“சார்…. அங்கே நில்லுங்க.” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு “வக்கீல் வாசலில் வெயிட் பண்ணுராரு.” என்று சொல்லி டீயை வேக வேகமாகக் குடித்துவிட்டு, பில் பணத்தைக் கட்டிவிட்டு ஹோட்டலைவிட்டு வெளியே வந்தனர்.

கோர்ட்டுக்கு வாசலில் இருவரும் வரும்போது வக்கில், போலீஸ், கைதிகள் மற்றும் அங்கு வேலை செய்யும் ஆட்கள் என கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர்.

“டேய்…. நீ அவர பாத்திருக்கிறியா.” செல்வா கேட்க,

“வக்கீல தெரியும் அவரத் தெரியாது.”

“போனைப் போடு.” பிரகாஷ் போனைப் போட, வக்கீல் போனை பார்த்துக்கொண்டே சுற்றிச் சுற்றிப் பார்த்து பின்னர், பிரகாஷ், செல்வாவை பார்த்து கையை உயர்த்த, இருவரும் அவர் அருகில் சென்றனர்.

“பிரகாஷ் தான.”- என்றவாறு அவர் கையை நீட்ட,

“ஆமா.” என்று பிரகாஷ் கையை நீட்ட “என் பெயர் மகேஷ்” கைகுலுக்கிக்கொண்டனர். உடனே பிரகாஷ் “இது என்னுடைய நண்பர் செல்வா.” மகேஷ் உடனே கையை நீட்ட, செல்வா கையை பற்றி குலுக்கினான். 

“வாங்க.” என்று மகேஷ் இருவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான். சிவப்பு நிற கட்டிடத்தை சுற்றி கண்களை மயக்கும் பச்சை நிறத்தில் மரங்கள் நின்றன. பறவைகளின் சத்தம் காதுகளில் இசைத்தபடி இருந்தது. கைவிலங்குகள் பூட்டப்பட்ட கைதிகளை போலீஸ் அழைத்துச் செல்லும் போது கோர்ட் வாசலில் கைதிகளின் உறவுகள் கண்ணீருடன் நின்றனர். காக்கிச் சட்டையுடன் போட்டி போட்டு கறுப்பு கோட்டும் நின்றன.

“சார்….. ரவிக்குமார் சார் வருவாரா.?”

“அவரு வர மாட்டாரு.”

“இங்க என்ன வேல இருக்கு. “

“அது ஒண்ணுமில்ல. உங்கள ஜட்ஜ் பாத்துட்டு கையெழுத்து போடுவாரு. பத்து நாளைக்குள்ள உங்க அக்கவுண்டில் பணம் வரும்.”

“சார்…. எனக்கு எவ்வளவு அமவுண்ட் வந்திருக்கு?”

“அது சொல்லுறேன் “ என்று அழைத்துக்கொண்டு கோர்ட்டுக்குள்ளே பல கட்டிடங்களைத் தாண்டி அழைத்துக்கொண்டு சென்றான்.

“அப்பாடா…. இதுக்குள்ள இவ்வளவு கட்டிடம் இருக்கே.”

“ஒவ்வொரு கேசுக்கும் செக்சன் செக்சனாக பிரிச்சு வச்சிருக்கு.”

“எனக்கும், இவனுக்கும் பஸ்ட் டைம். இது எங்களுக்கு நல்ல அனுபவம்” என்று செல்வா சொல்ல, பிரகாஷ் சிரித்தான்.

“செல்வா…. நோட் பண்ணு….. கதைகள் கிடைக்கும்.”

“ஆமா சார்…. இங்க நிறைய கதைகள் எழுதலாம்.” 

“ஆமா சார்.”

ஒரு கட்டிடம் வந்ததும் “நீங்க இங்க இருங்க.” என்று சொல்லி விட்டு மகேஷ் உள்ளே சென்றான். அந்தக் கட்டிடத்தைச் சுற்றி வெளியே சுமார் நூறுக்கு மேற்பட்ட ஆட்கள் இருந்தனர். அவர்கள் உடலில் காயங்கள். சிலர் கால்களை இழந்து கொம்பைப் பிடித்தும், ஒரு கை இழந்தும் சிலர் சுயநினைவு இல்லாமலும் இருந்தனர். செல்வா, பிரகாஷ் மனிதர்களை உன்னிப்பாகப் பார்த்தான். செல்வா கால்களை இழந்த இளைஞனைப் பார்த்து “அண்ணே…… இது எப்படி நடந்தது.”

“தண்ணீ லாரி ஓட்டுறேன். போதையில கொண்டு வண்டி ஓட்டிக் கொண்டு இடிச்சேன். காலு போச்சு.” செல்வா பிரகாசைப் பார்த்தான். உள்ளே இருந்த வக்கில் ஒருவர் வெளியே வந்து “இங்க யாரு பாலு.”

“என்ன சார்.”என்று ஒரு அம்மா ஓடிச் சென்றாள். அழுக்கடைந்த சேலை, பறந்து கிடந்த முடி, தோற்றமே அவர்களின் நிலைமையை உணர்த்தியது.

“பாலு எங்க.?”

“சார்….. அவனால் நடக்க முடியாது. வண்டியில உட்காந்திருக்கான்.”

“பாலுவுக்கு நீங்க யாரு..?”

“அம்மா.”

“சரி வாங்க.” என்று அழைத்து சென்றான்.

“செல்வா…… இங்க எல்லா விபத்துக்கும் காரணம் மதுதான். மதுவால மது குடிக்கிறவனும் பாதிக்கிறான். ஒண்ணும் தெரியாத அப்பாவிகளும் பாதிக்கப்படுறாங்க. இதை எல்லாம் தெரிந்தும் அரசியல்வாதிகள், வக்கீல், போலீஸ் எல்லாரும் இத நல்லா பயன்படுத்துறாங்க.” சில நொடியில் அந்த அம்மா வெளியே வந்தாள். “அம்மா… என்ன கேட்டாங்க?.”

“ஒண்ணும் கேட்கல.”

“வக்கீல் கையெழுத்து போட்டாரு.”

“எவ்வளவு அமொண்டு வந்திருக்கு?”

“ரெண்டு லட்சம் வந்திருக்காம். ஆஸ்பிட்டல அஞ்சு லட்சம் செலவு ஆச்சு. செலவு செஞ்சும் எனக்க மகன் நடக்கிறானா. அதுவும் இல்ல. சும்மா போனான். ரோட்டில ஒருத்தன் மதுபோதையில வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து இடிச்சான். அவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.”

“அம்மா….. நீங்க அமவுண்ட் பத்தி கேட்கலயா.” செல்வா கேட்க,

“எதுக்கு சார்?. வந்ததே போதும். கேட்டா குடுப்பாங்களா. அதுக்கு எவ்வளவு காசு செலவு பண்ணனும். எங்க வீடே இவனதான் நம்பீட்டு இருந்தது.” என்று அழுதவாறு வீல் சேரைத் தள்ளிக்கொண்டு அந்த அம்மா சென்றாள்.

“பாவண்டா….. இப்படியும் மக்கள ஏமாத்துறாங்க.” பிரகாஷ் சொல்ல,

“நா நினைக்கிறேன் இந்த வக்கீல்களும், ஆக்சிடென்ட் பண்ணுனவங்களும் அவங்களுக்குள்ள டீல் நடத்துறாங்க.” – என்று பேசிட்டிருக்கையில் மகேஷ் வெளியே வந்து “பிரகாஷ் வாங்க.” என்று அழைக்க, பிரகாஷ் சிரித்தவாறு செல்ல, பின்னாடியே செல்வா சென்றான்.

“பிரகாஷ்…. உங்க கேசில் ரவிகுமார் சார் ரொம்ப கஷ்டப்பட்டாரு. உங்களுக்கு வந்திருக்க அமவுண்ட் ஒரு லட்சத்து இருபதாயிரம். எங்க கமிஷன் போக எழுவதாயிரம்தான் கிடைக்கும்.” – இதைக் கேட்டதும் பிரகாஷ் முகம் வாடியது. கண்கள் நிறைந்தன. கோபத்தை அடைக்கினான்.

“என்ன சார்…. மூணு லட்சம் மேல செலவு ஆச்சு. உங்ககிட்ட பில்லு எல்லாம் இவன் குடுத்திருக்கான் இல்ல. நீங்க வாதாடிக் குடுப்பீங்கண்ணு சொல்லிதான் உங்ககிட்ட வந்தோம்.” செல்வா கோபப்பட,

“சார்…. எங்க சைடுல எல்லா விதமான முயற்சியும் பண்ணினோம்.”

“சார்…. இந்த காசு வச்சு எத்தனை கனவோடு வந்தேன். என்னுடைய உடம்பு போச்சு. இப்போ நடுத்தெருவில நிக்கிறோம். என்ன சார் இது? “ பிரகாஷ் கண்கலங்கியவாறு பேச,

“சார்… உங்களுக்கு ஓ.கேண்னா சிக்னேசர் போடுங்க. பத்து நாளில் அக்கவுண்டில் வரும்.”

“எனக்கு வேண்டாம்” எனச் சொல்லி விட்டு பிரகாஷ் அழுதவாறு நடந்து செல்ல, “சார், இது பெரிய துரோகம். அவன் அமவுண்ட்டில் எவ்வளவோ கனவு வச்சிருந்தான். இப்படி எல்லாம் ஏமாத்தாதீங்க.” என்று சொல்லிவிட்டு “பிரகாஷ், பிரகாஷ்.” என கூவியவாறே செல்வா பின்னாடியே ஓடினான். செல்வா ஓடிச் சென்று பிரகாஷின் கையைப் பிடித்தான். வெடிகுண்டு விழுந்து சிதறியது போல் எண்ணங்கள் எல்லாம் சிதைந்தன. பிரகாஷ் குலுங்கிக் குலுங்கி அழுதவாறு அவன் தோளில் சாய்ந்தான்.

“டேய்…. எங்க போற?.”

“இல்லடா…. இந்த கேச வேறு வக்கீல் கிட்ட கொடுக்கலாம்.”

“கொடுத்தாலும் இதுதாண்டா நடக்கும். அவங்க எல்லாம் ஒரே மாதிரிதாண்டா. திருட்டுப் பயலுவ. நம்மள பத்தி எல்லாம் எவனும் நினைக்கமாட்டான். அவங்க கண்ணுக்கு பணம் தாண்டா நிக்கும்.”

“வாழ்க்கையே போச்சுடா. இத நம்பி நான் நிறைய கணக்கு போட்டேன்.”

“ஒண்ணுமில்லடா. நீ வந்து கையெழுத்து போட்டுக் குடு. அது உனக்கான பணம். அத வாங்கு. உன்னுடைய கஷ்டம் குறையும். நீ பிடிவாதம் பிடிக்காத.” என்று செல்வா சொல்ல, பிரகாஷ் அமைதியாக இருந்தான். வீட்டோட கஷ்டம் திரும்பத் திரும்ப வருத்தத்தை கொடுத்தது.

கையெழுத்து போட்டுவிட்டு “மகேஷ் சார், இது எல்லாம் பாவம். இடிச்சவன் பணக்காரனா இருந்தா பிரகாஷ் போல உள்ள ஏழைகள் கோமாளிகள் தான். இதில கூட அறியாமை.” செல்வா சொல்ல,

“யாரு எப்படி இருந்தால் என்ன.. நமக்கு பணம் வருதா? சார், இது மிக பெரிய துரோகம். இப்படி வேலை பாக்கிறத விட வேற வேல பாக்கலாம்.” செல்வா சொல்ல, பிரகாஷ், செல்வாவின் கையை பிடித்து கிளம்ப, மகேஷ் அமைதியாக நின்றான்.

****** 

“டேய்…. ரூமுக்கு வா. ஒரு நாள் தங்கு, இல்ல ராத்திரி கிளம்பு.”

பிரகாஷ் அமைதியாக இருந்தான். “டேய், என்னடா சொல்லுற.”

“இல்லடா, டீ ஏதாவது சாப்பிடுறீயா?.”

“வேண்டாம்.”

“நீ கிளம்பு. சென்ட்ரல் போனா ஏதாவது டிரைன் கிடைக்கும்.”

“இல்லடா…. நானும் ரயில்வே டேசனுக்கு வாறேன்.”

“பரவாயில்ல நீ கிளம்பு.” இருவரும் பிராட்வே பஸ்டாண்டுக்கு வந்தனர். வளசரவாக்கம் செல்ல 25 ஜி இரண்டு பஸ் வரிசையாக நின்றிருந்தது.

“டேய் ரூமுக்கு வாடா. ராத்திரி போவலாம்” என்று திரும்ப கேட்க,

“இல்லடா….. இன்னொரு நாள் வாறேன்.”

“மச்சி…. இது ஒண்ணும் பெரிய விசயம் இல்ல. ஜெயிக்கிறதுக்கு நிறைய இருக்கு. உன்னுடைய படைப்பு இந்த சமூகத்துக்குத் தேவை. நம்ம ஜெயிக்கணும். தைரியமாக இரு.” என்று பிரகாஷைக் கட்டிப்பிடித்தான். பிரகாஷ் கலங்கினான். “கதை எழுது. நல்ல உயரம் உனக்கு இருக்கு. அது சீக்கிரம் உன்னைத் தேடி வரும்.” முகத்தை வேறுமுகமாக வைத்துக்கொண்டு தலை ஆட்டினான். பஸ் நகர “சரிடா….. பாத்து போ. ஊருக்குப் போயிட்டு கால் பண்ணு.” என்று சொல்லி பஸ்ஸில் ஏறி கை அசைக்க, பிரகாஷும் கை அசைத்தான். சில நொடிகளில் பஸ் பிராட்வே பஸ்ஸடாண்டை விட்டு வெளியேறியது. 

சென்னையை வெறித்துப் பார்த்தான். ‘வாழ்க்கை விசித்திரமானது.’ என்ற பாவவின் வார்த்தை அவன் காதில் முழங்கிக்கொண்டே இருந்தது. தோல்விகளைத் தாண்டி வெற்றி முகத்துடன் இருக்கும் பல கலைஞர்கள் கண் முன் வந்து நம்பிக்கை ஊட்டினர்.

மதியம் ரயிலைப் பிடித்துச் சென்றால் ஊருக்குப் போக பஸ் இருக்காது. இரவு ரயிலைப் பிடித்து வீட்டுக்குப் போகலாம் என முடிவெடுத்தான். நேரத்தைக் கடக்க பீச்சுக்குப் போகலாமா. பார்க்குக்குப் போகலாமா, இல்ல நூலகத்துக்குப் போகலாமா, செல்வா ரூமில இருந்து ரெஸ்ட் எடுத்துவிட்டு ஊருக்கு போயிருக்கலாமா. என்று எல்லாம் பல குழப்பத்திலே இருந்தான். மனம் தடுமாற முடிவை சரியாக எடுக்க முடியவில்லை. நடந்தான். மனதுக்கு எவ்வளவு ஆறுதல் கொடுத்தாலும் அம்மாவுக்கு என்ன பதில் சொல்லுவது. இந்தக் கடனிலிருந்து எப்படி வெளியேறுவது, எப்போ இயக்குநர் ஆவது என்று மனதிற்குள் கேள்விகள் ஓடிக்கொண்டே இருந்தத்த்து. 

சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் இரவு நேரத்திற்கான ரயில் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். ரயிலைப் பிடிக்க பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். சோர்ந்து போன உடலாலும், தளர்ந்து போன மனதாலும், பிரகாஷ் இருக்கையைப் பார்த்து அமர்ந்தான்.

மேனேஜர் சுபாஷிடமிருந்து போன் வர, பிரகாஷ் போணை எடுத்துக் காதில் வைத்து “ஹலோ….. சார்.” என்று கேட்க,

“பிரகாஷ்…. நல்லா இருக்கிறியா.”

“என்ன சொல்ல சார், மனசுக்குள்ள ஒண்ண வச்சிட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்திட்டே இருக்கேன்.”

“என்ன பிரகாஷ் இப்படி பேசுறீங்க.”

“பின்ன என்ன சார் சொல்ல, எவ்வளவு போராடி உங்க கம்பெனியில கிடைச்ச வாய்ப்பு.” கலக்கமாகப் பேச, “பிரகாஷ்….. வருத்தப்படாத. நா இப்போ போன் பண்ணது எதுக்குண்ணு தெரியுமா?.” பிரகாஷ் அமைதியாக இருந்தான்.

“உன்னுடைய படைப்பை நான்தான் தயாரிக்கிறேன்.” சந்தோசம் தாங்காமல் ‘மட, மட’ கண்களில் கண்ணீர் வடிந்தது. “அடுத்த வாரம் சென்னை வா, ஆபிஸ் எல்லாம் பாத்தாச்சு. ரொம்ப சீக்கிரம் படத்தை ஆரம்பிக்கிறோம்.” போனை வைக்க, சந்தோசம் தாங்க முடியாமல் “நா தோத்துப் போகல, நான் தோத்துப் போகல.” என்று வாயில் முனங்க, காதுகளைக் கிழித்துக்கொண்டு வந்த சத்தத்தால் கண்களைத் திறந்தான். “கூ, கூ சக், சக்.” என்று சத்தத்தை எழுப்பிக்கொண்டு ரயில் கடந்து சென்று கொண்டிருந்தது. கண்ட கனவு அவன் மனதைப் புரட்டிக்கொண்டே இருந்தது. நல்ல பசி. செல்போனை எடுத்துப் பார்த்தான். நேரம் மூன்றைக் கடந்து சென்று கொண்டிருந்தது. செல்போனை எடுத்து பாக்கெட்டில் வைத்துவிட்டு, எதாவது சாப்பிடலாம் என்று இருக்கையிலிருந்து எழும்ப, செல்போனில் அழைப்பு வந்தது. பிரகாஷ் பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பார்க்க, ‘மேனேஜர் சுபாஷ்’ என்ற பெயர் திரையில் மின்னிக் கொண்டிருந்தது. 

******

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button