இணைய இதழ் 113சிறுகதைகள்

கூத்து  – பிறைநுதல்

சிறுகதை | வாசகசாலை

வெய்யில் ஏற ஏற கூட்டமும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. அழுகைச் சத்தம் உயர்வதும் தாழ்வதுமாக இருந்தது. சின்னாவிற்குப் பசித்தது. யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவித்தான். நேற்றிலிருந்தே அவனது வீட்டில் சமைக்கவில்லை. பக்கத்து வீட்டு அம்மா இவனை நேற்று முழுவதும் கவனித்துக் கொண்டார். அவர் வீட்டில்தான் நேற்று சாப்பிட்டான். இன்று என்னாவாகுமென்று தெரியவில்லை. மெல்ல நடந்து வீட்டை விட்டுத் தள்ளியிருந்த, அவனது தந்தை வழக்கமாக அமரும் வேம்பின் அடியில் அமர்ந்தான். உரைக்கும் ஏறு வெய்யிலுக்கு வேம்பினடி சற்றே இதமாக இருப்பதாகப் பட்டது அவனுக்கு. மரத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட மேடையிலும் தரையிலும் வேப்பம் பூக்கள் தரையில் சிந்திய சீம்பாலாய்ச் சிதறியிருக்க,சின்னா அண்ணாந்து மரத்தைப் பார்த்தான். மெலிதான சிறிய வேப்பம் பிஞ்சுகள் பூக்களிடையே தொங்கிக் கொண்டிருந்தன. நினைவுத் தெரிந்த நாட்களாக அப்பாவை இந்த வேம்பினடியில்தான் சின்னா அதிகமாகக் கண்டிருக்கிறான். மழைக் காலங்களில் கூட அப்பா திண்ணையோடு சரி. அப்பா வீட்டுக்குள் வந்தால், அன்று ஏதோ விசேஷம் அல்லது வெளியூர் கிளம்புகிறார் என்று அர்த்தம். வெகு சில தருணங்களில் மட்டும் நடு இரவில் உறக்கம் கலைந்து அம்மாவைத் தேடுகையில், அம்மா அப்பாவுடன் இந்த வேம்பினடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறான்.  இனி அப்பா இல்லை என்னும் பொழுது என்ன செய்வது என்று சின்னாவிற்கு விளங்கவில்லை. அம்மாவும் அண்ணன்களும் இவனைக் கட்டிகொண்டு அழும்போது மட்டுமே இவனுக்கு அழுகை வந்தது. அதுவும் ஓய்ந்துபோய் இங்கே வேம்பினடியில் வந்தமர்ந்திருக்கிறான். காற்றில் வேம்பு மெல்ல சலசலக்க, சின்னாவின் மடியில் சில பூக்கள் உதிர்ந்து விழுந்தன. அதில் இரண்டை எடுத்து நாக்கில் வைத்து ருசி பார்த்தான் சின்னா.

       மெல்லக் கூட்டம் அதிகமாகத் தொடங்க, சிலர் வந்து சின்னாவோடு வேம்பினடியில் அமர்ந்தனர். அனைவரும் ஏன் சின்னாவை இரக்கத்துடன் பார்க்கிறார்கள் என்று புரியாமல் அங்கிருந்து வீட்டின் பின்புறமிருந்த ஆட்டுத் தொழுவத்திற்கு வந்தான். தொழுவம் இன்னும் சுத்தப்படுத்தப் படாமல் இருக்க, சிறுநீர் கலந்த ஆடுகளின் புழுக்கைகள் நாற்றமெடுத்துக் கொண்டிருந்தது. யாரோ அவனைச் சத்தமாக அழைக்க சின்னா வீட்டின் முன்புறம் அனைவரும் கூடியிருந்த இடத்திற்கு வந்தான். அப்பா சட்டை அணிவிக்கப்பட்டு, சால்வை போர்த்தி நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தார். அனைவரும் மௌனமாகக் கூடியிருக்க ஆலாப் (ஆலமுத்து என்பதன் சுருக்கம்)பெரியப்பாதான் அனைவரையும் பார்த்துக் கேட்டார்

“தேங்கா உடைச்சுருவோமா?”

எல்லோரும் மௌனமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,சீனி மாமா சொன்னார்

“ம். இனிமே ஆக வேண்டியதைத்தான பாக்கனும். ஒடச்சிரலாம்”

  ஆலாப் பெரியப்பா கூட்டத்தில் யாரையோ தேடினார். சின்னாவைக் கண்டு அருகில் வர சொன்னார். சின்னா அருகில் வந்ததும் சட்டையைக் கழற்றச் சொன்னார். இவன் ஒன்றும் பேசாமல் கழற்ற, சின்னாவை அப்பாவின் அருகில் நிறுத்திவிட்டு ஊதுபத்தி ஏற்றினார். சூடம் கொளுத்தி அப்பாவிற்குக் காட்டச் சொன்னார். சின்னாவும் அவ்வாறே செய்தான். அவர் சொன்னபடியே சூடத்தட்டை கீழே வைத்துவிட்டு தேங்காயை எடுத்து சூடத்தில் காட்டிவிட்டு, அவர் கொடுத்த சிறிய கொடுவாளால் தேங்காயை இரண்டாக உடைத்தான் சின்னா. தேங்கா கன கச்சிதமாக இரண்டாக உடைய, கூட்டத்திலிருந்து பெருத்த அழுகைச் சத்தம் எழுந்தது. அம்மாவின் அழுகுரல் மட்டும் தனித்துக் கேட்க அம்மாவைத் திரும்பிப் பார்த்தான் சின்னா.

கூட்டத்தில் யாரோ பேசுவது அவனுக்குக் கேட்டது. “தேங்கா உடஞ்சதப் பாத்தியா? ஆயுள் முடிஞ்சுதான் போயிருக்காரு. இல்லனா பச்சப்புள்ள அவனுக்கு இவ்வளவு கச்சிதமா தேங்கா உடைக்க வருமா?”

அம்மா ஒடிவந்து இவனைக் கட்டிக்கொண்டு பெருங்குரலெடுத்து அழுதாள். சின்னாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கண்ணீர் பொலபொலவெனக் கொட்ட வாய்விட்டு அழுதான் சின்னா.

     உறவினர்களின் வருகை தொடர்ந்து அதிகரிக்க, இழவு சொல்லப் போனவர்கள் ஒவ்வொருவராக திரும்பி வரத் தொடங்கியிருந்தார்கள். பந்தல் இடப்பட்டு ஓரிரு மர இருக்கைகளும், சில இரும்பு நாற்காலிகளும் இரவல் வாங்கிப் போடப்பட்டன. பந்தலின் முன்பாக வரிசையாக அண்ணன்களுடன் சின்னாவும் நிற்க வைக்கப்பட்டான். இழவுக் கேட்க வருபவர்கள் வரிசையாக நின்றிருந்தவர்களின் கரங்களைத் தொட்டு விட்டு அப்பாவைக் காணச் சென்றார்கள். சின்னாவிற்குப் பசித்தது. நல்லவேளையாக இரண்டு தூக்கு வாளிகளில் தேநீரும் ஒரு பொட்டலம் நிறைய வடையும் யாரோ வாங்கிவர, சின்னா பரவசமானான். ஒரு சிறிய குவளையில் தேநீரும் இரண்டு வடைகளையும் சின்னாவிடம் யாரோ முதலில் வந்து தர, சின்னா அவசர அவசரமாக தின்னத் தொடங்கினான். தொண்டை அடைத்துப் புரையேறியது சின்னாவிற்கு. அருகில் நின்றிருந்த பெரிய அண்ணன் தலையைத் தட்டிக்கொடுத்து, நீரைப் புகட்டிவிட்டு, “மெதுவாத் தின்றா தம்பி” என்றார். ஏனோ அண்ணன்கள் யாரும் வடையையோ தேநீரையோ தொடவில்லை. உறவினர்கள் வற்புறுத்தியும் அவர்கள் வேண்டாமென்றார்கள். சின்னா தேநீரை குடித்ததும் ஆசுவாசமாயிருப்பதை உணர்ந்தான்.

 மேளக்காரர்கள் வந்ததும் வடையையும் தேநீரையும் விழுங்கிவிட்டு மேளம் கொட்ட ஆரம்பித்தார்கள். உச்சி வேளை கடந்தது. வெய்யிலையும் பொருட்படுத்தாமல் சின்னா மேளக்காரர்களின் அருகிலேயே நின்று, அவர்கள் மேளம் கொட்டுவதை பார்த்துக் கொண்டிருந்தான். இடையிடையே யாரேனும் இழவுச் சீர்கொண்டு வரும் செய்தி வர, மேளக்காரர்கள் தெரு முனைவரைச் சென்று மேளம் கொட்டி அழைத்து வந்தார்கள். அவர்கள் கொடுக்கும் அஞ்சையோ பத்தையோ வாங்கி வேட்டியில் முடிந்து கொண்டார்கள். மாலை நெருங்க, நெருங்க மற்ற பணிகள் துரிதப் படுத்தப் பட, இழவு சொல்லப் போனவர்கள் அனைவரும் திரும்பியிருக்க, தொலைவிலிருந்த ஊர்களிலிருந்து அப்பொழுதுதான் உறவினர்கள் வரத் தொடங்கினார்கள். பந்தலுக்குள் அழுகை அதிகரிப்பதும் தேய்வதுமாக இருந்தது. அம்மாவின் அழுகுரல் சற்றே தொய்ந்திருப்பதாகப் பட்டது சின்னாவிற்கு.

  அப்பொழுதுதான் அந்த மூவர் மிக மெதுவாக நடந்து வந்து பந்தலின் முன்பாக நின்றார்கள். இரண்டு வயது முதிர்ந்த கிழவர்களும் ஒரு வயது முதிர்ந்த கிழவியும். அதில் சற்றுக் குள்ளமாக இருந்த கிழவரை அப்பாவுடன் ஒரு சில தருணங்களில் சின்னா கண்டிருக்கிறான். ஒவ்வொருவரின் தோளிலும் ஒரு பெரிய துணிப்பை தொங்கிக் கொண்டிருந்தது. மேளம் நிறுத்தப் பட்டு ஒரு மெல்லிய சலசலப்பு கூட்டத்தில் உண்டானது. மேளக்காரர்களில் வயதில் மூத்த இருவர் மட்டும் வந்து வந்திருந்தவர்களை கைத்தாங்கலாகப் பிடித்து, “என்ன அய்யா. இப்பத்தான் வாரீங்களா?” என்று விசாரித்து கைத்தாங்கலாக அழைத்துக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு போய் அப்பா முன்பாக நிறுத்தினார்கள். சின்னாவும் கூடவே போனான். அம்மா இவர்களைப் பார்த்ததும் வயதான கிழவியைக் கட்டிக்கொண்டு ஓவென்று அழ ஆரம்பித்தாள். இப்பொழுது அம்மாவின் ஒப்பாரி வேறுவடிவம் கொண்டது. இதுவரை அப்பாவின் அருமை பெருமைகளை மட்டுமே ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தவள். இப்பொழுது அவர் இல்லாமல் போனதால் அவளுக்கு நேரப்போவதை ஒப்பாரியாக வைத்தாள்.

‘நான் எட்டு ரூவா சேலை கட்டி

நான் இலைபோல போட்டுவச்சி

நான் கையெல்லாம் வளைபோட்டு

நான் கொண்டையில பூவச்சி ஆஆஹாயின்

நான் பக்கத்துல வந்து நின்னா

என்ன பார்வதி தேவிம்பங்க ஆஆஹாஆஅய்ன்’ – இடையில் மூக்கை சிந்திக் கொள்கிறாள். மீண்டும் ஒப்பாரியைத் தொடர்கிறாள்.

‘இனி நான் பூவும் பொட்டும் விட்டு

வளையலும் தாலியும் விட்டு

முன்ன சீதேவின்னு சொன்னவங்க

இனி மூதேவி என்பாங்க.

 நான் பாகம் பார்த்து வந்தாலும்

என் முகம் பார்த்தா தோசம்பாங்கோ ஓஓஓ?’

 கிழவிக்கு பல்லெல்லாம் கொட்டிப் போயிருக்க, மூசு மூசு என்று சத்தம் வராமல் மூச்சிரைக்க அழுதாள். கிழவர்கள் எந்த சலனமும் காட்டாமல் அப்படியே அப்பாவைப் பார்த்தப்படியே இருக்க, கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் மெல்ல வழிந்து கொண்டிருந்தது. கிழவியும் அம்மாவும் அழுது ஓய, குள்ளமான கிழவர் அப்பாவைப் பார்த்து இப்படிச் சொன்னார்

“சுப்பா!? நீயும் போயிட்டியா?. நல்லது கெட்டதுக்காவது முகத்தைப் பாத்துக்கிட்டோம். இனிமே அதுகூட முடியாது”(இதைச் சொல்லுகையில் கூட்டத்தில் அழுகைச் சத்தம் எழுந்து அடங்கியது).

“நீ உண்மையிலேயே பெரிய மனுஷன்டா. வாழ்கையிலயும் சாவுலயும் எங்களச் செயிச்சிட்டடா” என்றுவிட்டு கைத்தாங்கலாக மற்றவர்கள் அழைத்து வர, மேளம் கொட்டுமிடத்தின் அருகாமையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் மூவரும் அமர வைக்கப்பட்டனர். மேளக்காரர் பெரியவரிடம் வந்து, “அய்யா. ஏதோ தொழில் தெரியாத பயலுவள வச்சி ஒப்பேத்திக்கிட்டிருக்கேன். தப்புத்தவறு இருந்தா மன்னிச்சுக்குங்க”என்றதும், சின்னா கிழவரை ஆச்சரியமாகப் பார்த்தான்.

கிழவர், “நீ அடிடா. உன்னய குத்தஞ்சொல்லி என்ன ஆகப்போவுது?. சுப்பன் என்ன திரும்பியா வரப்போறான். வர வர எனக்குக் காது வேற மந்தமாத்தான் கேக்குது”என்றார்.

மேளக்காரர் திரும்பிவந்து தனது சகாக்களிடம், “டேய் பாத்துக்குங்க. இவருதான் வேஷக்காரர் நல்லு. ஒரு காலத்துல இவரு கூத்துக்கட்டி ஆடினா, தேர் பாக்க வர்ற கூட்டத்தைவிடவும் அதிகமா கூட்டம் கூடும். இந்தா கூட இருக்காங்களே அவங்க ரெண்டு பேரு,இப்ப செத்திருக்காரே சுப்பன், அவுரு எல்லாம் கூட்டளிங்க. அவுங்களுக்குத் தெரியாத தாளமில்ல, ஆடாத ஆட்டமில்ல, வாசிக்காத வாத்தியங்க இல்ல. அதனால பாத்து வாசிங்கடா. தாளம் தப்பக் கூடாது”என்று விட்டுத் தன் பணியைத் தொடர்ந்தார். சின்னா மெல்ல கிழவரின் அருகில் சென்று அவர்கள் ஏதாவது பேசுகிறார்களா என்று கவனித்தான். அவர்கள் மூவரும் பேசவே இல்லை. பேசிக்கொள்ளவும் இல்லை. மூவரும் எங்கோ பார்ப்பதும், தங்களுக்குள்ளாக அவ்வப்பொழுது பார்த்துக் கொள்வதுமாகவே இருந்தனர். இடையில் ஆலாப் பெரியப்பா வந்து தேநீரும் வடையும் கொடுத்த பொழுது, மறுப்பு எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டனர். கிழவர்கள் வடையை அப்படியெ மெல்லக் கடித்துத் தின்ன, கிழவி மட்டும் வடையை தேநீரில் சிறிது நேரம் ஊறவைத்து எடுத்து வாயில் போட்டு சப்பித் தின்றாள்.

   இரவு நெருங்குகையில் இரவுப் பிணம் காப்பது பற்றியதான பேச்சு எழுந்தது. ஒவ்வொரு வரும் ஒவ்வொரு அபிப்ராயத்தைச் சொல்ல ஆரம்பித்தனர். ஒருவர் தொலைக்காட்சி பெட்டியை வாடகைக்குக் கொண்டு வந்து மூன்று திரைப்படங்களைப் பார்க்கலாம் என்றார் (அப்பொழுது எல்லாம் எல்லோர் வீட்டிலும் தொலைக்காட்சி இருந்ததில்லை. இரவு  முழுவதும் விழித்திருக்க தொலைக்காட்சிப் பெட்டியை வாடகைக்கு எடுக்கும் வழக்கம் இருந்தது. அதில் மூன்று திரைப்படங்களை பார்த்து முடிக்கையில் விடிந்து விட்டிருக்கும்). மற்றொருவர் முத்தியைக் (தேவரடியார்களின் பரம்பரையில் எஞ்சியுள்ள ஒரே ஜீவன். பக்கத்து ஊரில் ஒதுக்கப்பட்ட குடிசையில் வாழ்பவள்) கூட்டிவந்து கிளுகிளுப்பாட்டம் ஆட வைக்கலாம் என்றார்.

  வேசக்காரர் நல்லு எழுந்தார். மெதுவாகச் சென்று அப்பாவின் முன்பாக நின்று, அனைவரையும் பொத்தாம் பொதுவாகப் பார்த்துவிட்டு மெல்ல நடுங்கும் குரலில் சொல்ல ஆரம்பித்தார்.

“சுப்பன் போயிட்டான். கூத்து கட்டுறது அவனுக்கு எவ்வளவுப் புடிக்கும்னு எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் கூத்து கட்டுனா இனிமேப் பொழக்க முடியாதுன்னு எங்களவிட்டு வந்து புள்ளக் குட்டிங்கள எல்லாம் படிக்க வச்சு, கட்டிக்கொடுத்து, ஒரு நல்ல சம்சாரியா நெற வாழ்க்கைய வாழ்ந்து முடிச்சிருக்கான். சம்சாரியா இருந்தாலும் கூத்தும் பாட்டும் செழிப்பா இருந்த காலத்திலயும், அது கொஞ்ச கொஞ்சமா நாதியத்துப் போனப்பயும், சுப்பன் வேஷங்கட்டலயேத் தவிர, எங்களுக்கு ஏதாவது உதவி செஞ்சுக்கிட்டுதான் இருந்தான். கூத்து இல்லாத நாள்ல கேவுரோ கம்போ கொண்டு வந்து எங்கப் பசிய ஆத்தியிருக்கான். முப்பது வருஷமா அவன் கூத்து கட்டலதான். ஆனாலும் அவனுக்குக் கூத்துன்னா உசுரு. ஆதனால நான் இப்ப சுப்பனுக்காகக் கூத்தாடப் போறேன். நல்லபடியாப் போன அவனோட உசுரு நல்லபடியா அடங்கட்டும். நீங்க பிடிச்சிருந்தாப் பாருங்க. இல்லனா உங்களுக்குப் பிடிச்சதப் பண்ணிக்குங்க. எங்களுக்கு ஒரு ஓரமா கொஞ்சம் எடம் மட்டும் கொடுத்திருங்க” என்று விட்டு மெல்லத் தள்ளாடியபடியே மூவரும் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார். அவர்கள் மூவரும் கொண்டு வந்திருந்த பைகளை அவிழ்த்தார்கள். ஒரு பையில் சிறிய நாதஸ்வரமும் தவிலும் இருக்க,மற்றொன்றில் மற்ற வாத்தியங்களும் இருந்தன. கிழவியின் பையில் காற்சலங்கைகளும், சாயம் போன சேலையும், பெண்களுக்கே உரிய சில அணிகலன்களும், ஒரு ரசம் போன முகம் பார்க்கும் கண்ணாடியும், சில முகப்பூச்சு பொடி டப்பாக்களும் இருந்தன. அவர்கள் கூத்துக்குத் தயாராகத் தொடங்க, கூட்டம் மெல்ல முனுமுனுத்தது. சின்னாவின் அருகிலிருந்து ஒருவர், “இந்த மூனும் இன்னும் போய்த் தொலய மாட்டேங்குது. இன்னும் நம்ம உயிர வாங்குது. இந்த காலத்துல யாரு கூத்துப் பாப்பா? கரகாட்டம்னாக்கூடப் பரவாயில்ல?” என்று அவர்கள் காது படவே சொன்னதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

யாரோ ஒருவர், “ஒழுங்கா நடக்கக் கூட முடியல. இதுங்க எதுக்கு கூத்தாடப் போவுதுங்க?. பாத்துப்பா இவங்களுக்கும் சேத்துப் பாட கட்டுர மாதிரி ஆயிடப்போவுது”என்றார்.

    இவ்வாறாக பலதரப்பட்ட விமரிசனங்கள் எழ, இறுதியாக பெரிய அண்ணன் மற்றும் அம்மாவின் கருத்தைக் கேட்டனர். பெரிய அண்ணனும் அம்மாவும் கிழவரின் கருத்தை ஆமோதிக்க கூட்டம் மெல்ல முனுமுனுத்தது. சிலர் மெதுவாக நழுவினார்கள். சின்னாவிற்கும் சற்றே ஏமாற்றம்தான். மூன்று திரைப்படங்களாவது பார்த்திருக்கலாமே!

             இரவு எட்டு மணியாகிய பொழுது கிழவி ஒப்பனையை ஆரம்பிக்க, கிழவர்கள் தவில் மற்றும் இன்னபிற வாத்தியங்களை இசைத்து சரி பார்க்கத் தொடங்கினார்கள். கிழவியின் ஒப்பனை சின்னாவை ஆச்சரியமடைய வைத்தது. மெல்லத் தனது நடுங்கும் கரங்களால் தோடு, மூக்குத்தி கழுத்துச் சங்கிலி என ஒன்றன் பின் ஒன்றாக அணிந்து கொண்டாள். அனைத்து அணிகலன்களிலும் மேல்பூச்சு விட்டுப் போயிருந்தது. யாரோ ஒருவர், ” இன்னும் பதினாரு வயசுக் கொமரின்னு நெனப்பு” என்றார். கூட்டத்தில் மெல்லச் சிரிப்பலை எழுந்தது. கிழவி அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஒரு சிறிய டப்பாவிலிருந்து வாசனைப் பொடி எடுத்து இரஸம் போன முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்தபடி முகப்பூச்சுப் பூசலானாள் அவள். முகப் பூச்சு முடிந்ததும், சிறிய குப்பியிலிருந்து மை போன்ற ஒன்றை எடுத்து உதட்டுச் சாயம் பூசலானாள். இப்பொழுது கிழவியை பார்த்தால் ஐந்து வயது குறைத்து மதிப்பிடலாம் போலிருந்தது. பையில் இருந்து சுருக்கங்கள் நிறைந்த சாயம் போன சேலையை எடுத்துக்கொண்டு, துணி மாற்ற கண்களால் இடம் தேடினாள் கிழவி. குறிப்பறிந்து அக்கா அவளை வீட்டிற்குள்ளாக அழைத்துப் போனாள். சில நிமிடங்கள் கழித்து அவள் வெளிவருகையில் இன்னும் ஐந்து வயது குறைத்து மதிப்பிடலாம் போலிருந்தது.

   மணி பத்தான போது மேளக்காரர்கள் ஓய்ந்திருந்தனர். இனியும் வெளியூர் ஆட்கள் வரப்போவதில்லை. நாளைக் காலையில்தான் வருவார்கள். உள்ளூர் ஆட்கள் அனைவரும் தத்தமது வீட்டில் உணவருந்திவிட்டு இரவுப் பிணம் காக்க வந்தமர்ந்தனர். சின்னாவிற்கும் பக்கத்து வீட்டு சாப்பாடு கிடைத்தது. நன்றாகவே சாப்பிட்டான். ஏனோ அம்மாவும் அண்ணன்களும் சாப்பிடவில்லை. தேநீரோடு நிறுத்திக் கொண்டார்கள். பக்கத்து வீட்டிற்கு கிழவர்கள் மூவரையும் அழைத்துப் போய் அண்ணிதான் சாப்பிட வைத்தாள். சாப்பிட்டு விட்டு வந்ததும் பந்தலில் மையமாகத் தேர்ந்தெடுத்து சின்னா வீட்டுப் போர்வை வாங்கி விரித்தார்கள். கிழக்குப் பார்த்து கிழவர்கள் மூவரும் அமர்ந்தார்கள். வேஷக்காரர் நல்லுதான் முதலில் ஆரம்பித்தார்.

“எல்லாருக்கும் வணக்கம். நான் கூத்துக்கட்டுறேன்ன உடனே ஒத்துக்கிட்டதுக்காக எல்லாருக்கும் நன்றி. போனமாசம் வரைக்கும் என்மேல “மாமா மாமா”ன்னு பாசமா இருந்து, என் ஊருக்கு வரும்போதெல்லாம் என்னப் பாத்துட்டு பேசிட்டுப்போற சுப்பன், இப்ப உயிரோட இல்ல. அவனும் நானும் எங்க கூட்டாளிங்களோட சேந்து போடாத கூத்து இல்ல. போகாத ஊரு இந்த ஜில்லாவுலேயே இல்ல. அவன் போடாத வேசமில்ல. பாடாத பாட்டு இல்ல. தெரியாத வாத்தியமில்ல. அவன் இல்லனா எங்களுக்கு வேலயே ஒடாது. ஒத்த ஆளா மொத்த சாமானையும் தலைல சொமந்துக்கிட்டு பத்து கல் இருவது கல் தூரத்தையும் ஒரே நாள்ள நடந்துடுவான். திரும்பி வரும்போது மக்கள் எல்லாரும் கொடுக்கிற கேவுரு, கம்பு, சோளத்தையும் ஒத்த ஆளாவே சொமந்து வருவான். அமாவாச இருட்டிலயும் நாங்கப் பயமில்லாம நடந்தே அஞ்சாரு பொம்பளங்கள அழச்சிக்கிட்டு, கூத்தாடப் போயிருக்கோம். காரணம் சுப்பனும் காத்தானும் (இறந்துபோன சின்னாவின் பெரியப்பா) கூடஇருந்ததனால. இவனுங்க ரெண்டுபேரு சேந்து பத்து பேர ஒரே தள்ளாத் தள்ளிருவானுங்க. என்னமோ கடைசி வரைக்கும் பொண்ணுங்களுக்கோ பொருளுங்களுக்கோ சேதாரம் ஏதும் இல்லாமதானிருந்துச்சி. திடீர்னு சுப்பன் கூத்தாடப்போன புதூர்லயே (அம்மாவின் ஊர்) பொண்ணப் பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டான். அதுக்கப்புறம் அவன் கொஞ்சகாலம் எங்களுக்குத் துணையா வந்தானே தவிர வேசங்கட்டல, பாட்டுப்பாடல. தங்கச்சித் தம்பிங்கக் கல்யாணம் புள்ளக்குட்டிங்கன்னு முழுக்க சம்சாரியாவே ஆயிட்டான். இருந்தாலும் முடிஞ்சவரைக்கும் எங்கக் கூத்தப் பாக்குறதுக்காவது வந்துக்கிட்டே இருந்தவன் ஒரு கட்டத்துக்கு அப்புறமா அவனால வரமுடியாமலே போயிடுச்சி. காத்தானும் திடீர்ன்னு போய்ச் சேந்ததனாலே, எங்கக் கூத்து நொடிக்க ஆரம்பிச்சிச்சு. பேசுன பணம் கெடைக்கிறதில்ல. தஞ்சாவூர், திருச்சிலருந்து கரகாட்டக் கோஷ்டிங்க வர ஆரம்பிச்சாங்க. அப்பவே சுப்பன் சொன்னான். மாமா, வேணாம் விட்டுடுங்க. வந்து விவசாயத்தப் பாருங்கன்னு. பின்னாடி கஞ்சிக்கே வழியில்லாமப் போனாலும் போயிடும்னு. புள்ளக்குட்டிங்களுக்கு ஒன்னும் சேத்து வக்க முடியாது. ஒரு நல்லது கெட்டது கூடப் பண்ண முடியாதுன்னு. அவன் சொன்னப்படிதான்ஆச்சு. வீதிக்கு வீதி ஊமப்படம் ஆரம்பிச்சு, அப்புறம் பேசும் படமாயி, அப்புறம் கலர்ப் படமாயி இப்ப வீதிக்கு வீதி டீவி பொட்டி வந்துருச்சு. சுப்பன் சொன்ன சொல்லு பலிச்சிருச்சி. இப்ப அவன் சொன்னத நெனச்சிப் பாக்குறம். அவன் எடுத்து சொன்னப்ப எங்களுக்கு ஒறைக்கல. திமிரா இருந்திட்டோம். உண்மயச் சொன்னா எங்களுக்கு இதவிட்டு வேற எதுவும் தெரியல. ஆனா, அவனுக்கு எல்லாம் தெரியும். கத்துக்கிட்டான். குழந்த குட்டிங்கள நல்லபடியா வளத்திட்டான் அவன். உயிரோட இருந்தவரைக்கும் அவனுக்குன்னு எங்களால எதுவும் செய்ய முடியல. செத்ததுக்கு அப்புறம் எங்களால முடிஞ்ச இந்த கூத்தப் போடுறோம். அப்பா சுப்பா, தப்பு இருந்தா மன்னிச்சு ஏத்துக்கப்பா” என்றவாறே தடுமாற்றத்துடன் எழுந்து அப்பாவைப் பார்த்து வணங்கினார். கூட்டம் மெய்மறந்து அவர் சொன்னதை செவிமடுத்துக் கொண்டிருக்க அம்மா மட்டும் இடை இடையே கேவிக்கொண்டிருந்தாள்.

  கூத்து ஆரம்பித்தது. என்ன கூத்து என்பதைக் கூட அவர்கள் சொல்லவில்லை. முதலில் அப்பாவைப் பற்றியப் பாட்டு வந்தது. முதலில் என்னப் பாடுகிறார்கள் என்பது யாருக்கும் புரிபடவில்லை. மெல்ல மெல்ல சுருதி ஏற கூட்டத்தின் சலசலப்பு குறைந்து அனைவருக்கும் கிழவர்களின் பாடல் மொழிப் புரிய ஆரம்பித்தது.

“அய்யா நீ

எட்டுவச்சிநடந்தா

எட்டுத்திக்கும்

கொட்டிமுழங்கும்

அய்யா

அப்பனுக்கு அடங்காப் பிள்ளையும்

சுப்பன் கூத்தப் பாத்து அடங்கும்

அய்யா நீ

ஒத்தக்கூத்துப் போட்டாலும்

மொத்த ஊரே விருந்து வைக்கும்”

என்றாக சின்னாவின் அப்பா புராணம் நீண்டது. சின்னாவிற்கு அப்பாவின் குழந்தைச் சிரிப்பிற்கும் அமைதியான சுபாவத்திற்கும் ஏனோ இந்த வர்ணனை பொருந்தவில்லை என்றே தோன்றியது. அப்பாவின் சேமிப்புகளில் இருந்த சில நாடகப் புத்தகங்களில் இவர்கள் பாடுவதைப் போல் சில செய்யுள்கள் இருப்பதை சின்னா கண்டிருக்கிறான். வாசித்தும் இருக்கிறான். ஆனால், அவை அவனுக்குப் புரிவதில்லை. தாள லயத்திற்கு ஏற்ப அவர்கள் பாடிக்கொண்டேப் போனார்கள். வார்த்தைகள் சரளமாக எதுகை மோனையுடன் வந்து விழுந்தன. நேரம் செல்லச் செல்ல குரலின் தடுமாற்றம் நீங்கி கம்பீரம் கூடியது. கிழவி ஆடத் தொடங்கிய பொழுது சின்னாவால் நம்ப முடியவில்லை. நடப்பதற்கே சிரமப்படும் நிலையில் வந்தவள் எப்படிப் பம்பரமாய்ச் சுற்றி ஆடமுடிகிறது என்று அதிசயித்தான். அன்றைய நாடகம் கண்ணகி கோவலன் நாடகம் என்பது அவர்கள் சொல்லாமலேயேப் புரிந்தது. கிழவிக்குத்தான் அதிகப் பங்களிப்பு. கண்ணகியாக, மாதவியாக, வழிகாட்டும் மூதாட்டியாக, பணிப்பெண்ணாக, மாதவியின் தாயாக என ஏகப்பட்ட வேடங்கள். உருவம் மாறவில்லை, உடை மாறவில்லை. ஆயினும், அனைவராலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. இடையிடையேக் கிழவர்கள் கோவலனாக ஒருவரும், மற்றொருவர் பாண்டிய மன்னனாக ,பொற்கொல்லனாக, வழிப்போக்கனாக, யாசிப்பவனாக எழுந்து ஆடிப் பாடிவிட்டு அமர்வார்கள். மாதவியைக் காண கோவலன் கிளம்பும்போதெல்லாம், பெண்கள் சிலர் மாதவியையும், சிலர் கோவலனையும் திட்டினார்கள். வறுமை வந்து பிழைப்புக்காக பாண்டிய தேசம் புறப்படுகையில் அனைவரின் கண்களும் குளமாயின. கோவலனின் பிணத்தைக் கட்டிக்கொண்டு கண்ணகி அழும் அந்த வேளையில் மட்டும் அங்கு அழாத பெண்களோ, கலங்காத ஆண்களோ இல்லை என்றானது. அம்மாவின் அழுகை அப்பொழுது மட்டும் தனித்த ஒரு ஒப்பாரியாக மாறி வீரியமெடுத்தது. பொற்கொல்லனும் பாண்டிய மன்னனும் அனைவரின் சாபத்திற்கும் ஆளானார்கள். இறுதியாக மதுரை அழிந்து கண்ணகி குறையா கோபத்துடன் தெற்கே கிளம்புவதாக நாடகம் முடியும் பொழுது கீழ்வானம் வெளிறத் தொடங்கியிருந்தது. கடைசி கடைசியாக மூவரும் எந்த வாத்தியத்தையும் இசைக்காமல், அப்பாவின் முன்பாக நிற்க, மூத்தவர் நல்லு உரத்தக் குரலில் ஒப்பாரி வைப்பதுபோல் பாட ஆரம்பித்தார்.

“சட்டக்கி கஞ்சிப் போட்டு சுத்திய காலம்போய் சுப்பா-இந்த

கட்டக்கி கஞ்சிக்கே வழியில்லடா சுப்பா.

எட்டூருக்கும் கூத்து கட்டிய காலம் போய்-இப்ப

ஒத்த காசுக்கு வழியில்லடா சுப்பா.

கூத்த விட்டா வேற தெரியல்லே-சுப்பா

கூத்துக்கே இப்போ கதியில்லெ.

பெத்ததுக்கு சீர்செய்யவும் வழியில்லெ- சுப்பா

செத்துப் போகவும் வழி தெரியல.

இப்பவும் நீதான் ஜெயிச்சிட்ட- சுப்பா

எப்பவும் நெனக்க வச்சிட்ட.

பொறுப்பா குடும்பம் நடத்தி -சுப்பா

புள்ளக் குட்டிங்களஆளாக்கி

பெருவாழ்வு வாழ்ந்திட்டடா சுப்பா.

பயப்படாமப் போயிட்டு வா

பக்கத்தொணையா அந்த சாமியிருப்பான்.

நிம்மதியாப் போயிட்டு வா- அந்த

குலசாமி உன் குடும்பத்தக் காத்து நிப்பான். ”

என்று முடித்தபொழுது கூட்டம் பெருங்குரலெடுத்து அழுதது. சின்னாவிற்கும் அழுகை முட்டிக் கொண்டுவந்தது. கிழவர்கள் மூவரும் தங்களது இயல்புக்குத் திரும்பும் பொழுது நன்றாகவிடியத் தொடங்கி இழவு கேட்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. சின்னா தனது தாத்தாப் பாட்டிகளைக் கண்டறியாதவன். ஏனோ சின்னா அந்த மூவரையும் தனது தாத்தாப் பாட்டியாகவே அந்தக்கணம் உணர்ந்தான்.

     தாத்தாக்களும் பாட்டியும் வாத்தியங்களை எடுத்து தங்களது பைகளில் வைத்து கட்டிக் கொண்டிருந்தார்கள். பாட்டி தனது வேசம் கலைத்து, உடைமாற்றி, முகம் கழுவிக்கொள்ள, மூவரும் சென்று வேம்பினருகில் அமர்ந்தார்கள். முகத்தில் ஏதோ ஒன்று நிறைவேறியதைப் போல சாந்தம் நிறைந்து ஒளி மிகுந்திருந்தது. மெல்ல உறக்கத்திலாழ்ந்தார்கள்.

    சாவு வீட்டின் அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து அப்பாவைத் தூக்குகையில் மெல்ல எழுந்து வந்து கூட்டத்தோடு கூட்டமாக கலந்து கொண்டார்கள். மயானம் வரை பாட்டியும் வந்தது ஆச்சரியமாக அனைவருக்கும் இருந்தது. ஆனால், யாரும் பொருட்படுத்தவில்லை. சின்னா மொட்டையிடப்பட்டு, மும்முறை அப்பாவின் உடலைச் சுற்றி வலம் வந்து கொள்ளியிட்டான். சிதையில் அப்பாவின் உடல் மெல்ல வேகத் தொடங்க, அனைவரும் அங்கிருந்த புளியமரத்தில் கூடி கூடி அப்பாவின் இறுதிப்பயணத்தின் வரவு செலவு கணக்குப் பார்க்கப்பட்டது. மயானப் பணத்தின் வரவு கைக்கொள்ளப்பட்டு, கடைசிப் பயணத்திற்காக உழைத்தவர்களுக்கு (பாடை கட்டியதிலிருந்து முடியெடுப்பது வரை) கூலிகொடுக்கப்பட்டது. கடைசியாக தாத்தாக்களிடம் சிலநூறு ரூபாய்களை கூத்துப் போட்டதற்காக ஆலாப் பெரியப்பா கொடுக்கப் போக, தாத்தாக்கள் வாங்க மறுத்துவிட்டனர். மேளக்காரரும் ஆலாப் பெரியப்பாவும், பெரிய அண்ணனும் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அவர்கள் வாங்க மறுத்துவிட, கூட்டம் செய்வதறியாது திகைத்தது. பெரியவர் சொன்னார்

“என் சுப்பனுக்காக நான் போட்ட கூத்துக்குக் கூலி வாங்கினா அது நல்லால்ல. ஏற்கனவே நான் பட்ட கடன எல்லாம் தீர்க்க முடியல. இப்போ இவனுக்காகப் போட்ட கூத்துக்குப் பணம் வாங்கி, அந்தக் கடன கொண்டுப் போய் எந்த ஜென்மத்துலத் தீர்க்க. இன்னக்கி நாங்க இருக்கோம் அவனுக்காக கூத்து கட்டுனோம். நாளைக்கி நாங்களும் போயிட்டா?. . . எங்களுக்கு அந்தக் கொடுப்பின கூடக் கிடையாதே” என்றவாறே கண்களில் நீர்வழிய அவர் மெல்லத் திரும்பி மேற்காக நடக்க, மற்ற இருவரும் பின்தொடர்ந்தார்கள். அனைவரின் கண்களிலும் நீர் நிரம்பி பார்வையிலிருந்து அக்கணம் அவர்கள் மறைந்துபோனார்கள்.

chanbu_sp@yahoo. co. in

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button