
அன்பு நண்பனை இப்போதுதான் கழுத்தை நெரித்துக் கொன்றேன். கழுத்தை என் கைகளால் இறுக்கும்போது அவன் காட்டிய மறுப்பு படிப்படியாக குறையத் தொடங்கியபோது ஒரு தெய்வீகமானச் சூழலில் மனம் லயித்தது. என் கைகளை அவன் கைகள் உடையும் அளவிற்கு பற்றிக் கொண்டிருந்தான். பின் மெலிதாய் விடுவித்துக் கொண்டான். இறக்கும்போது என்னைப் பார்த்து சிரித்தது போல இருந்தது. நானும் பதிலுக்குச் சிரித்து வைத்தேன். ஆகச்சிறந்த நட்பின் விடைபெறுதல் ஓர் அற்புதம் போல நிகழ்ந்தது.
இருவரும் பால்ய சினேகிதர்கள். நாங்கள் நடத்தி வந்த ஹோட்டலில்தான் இவனது தந்தை புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். ஒரு கட்டத்தில் ஹோட்டலை நடத்த முடியாததால் வேறு யாருக்காவது கொடுக்கலாம் என்றபோது அவனது அப்பாவே வாங்கிக்கொண்டார். இவன் அடிக்கடி கடைக்கு வருவான். ஹோட்டலுக்கு அருகில் என் வீடு இருந்தது. ஹோட்டலை அபகரித்தவர்கள் என்ற நோக்கில்தான் இவனையும் பார்த்தேன். ஒருநாள் இருவரும் ஒரே இடத்தில் கிரிக்கெட் விளையாடினோம். வீடு திரும்பும் வழியில் சைக்கிள் செயின் நழுவியது. இவன்தான் அதை மாட்டிக்கொடுத்தான்.
அதுமுதல் என் நண்பனான். எதிரிகள் நண்பராகும்போது நட்பின் வலிமை கூடுதலாக இருக்கும். அப்படித்தான் இருந்தோம். ஒரு கட்டத்தில் நாங்கள் வீடு மாற வேண்டிய கட்டாயம். பக்கத்து ஊருக்கு மாறினோம். அதுமுதல் எனக்கும் இவனுக்குமான தொடர்பு அற்றுப்போனது.
வருடங்கள் ஓடின. ஒரு மருந்து கம்பெனியில் வேலை கிட்டியது. அந்த அலுவல் தொடர்பாக வெளியூரில் தங்கவேண்டிய சூழல். சந்திக்க வேண்டியவர்களை சீக்கிரமே பார்த்துவிட்டேன். மாலையில் இருந்து இரவைக் கழிக்க வேண்டும். வெயில் அப்போது மங்கியது. தங்கியிருந்த லாட்ஜ் அருகில் டாஸ்மாக்கில் பிராந்தி ஒரு முழு பாட்டில் வாங்கினேன். தோளை யாரோ தொட்டார்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒரு தொடுதலுக்கு அர்த்தமுண்டு. பஸ்ஸில் தொடுதல், வரிசையில் உராய்தல் என சொல்லிக்கொண்டே போகலாம். டாஸ்மாக்கில் ஒருவன் தொட்டால் அது கட்டிங்கிற்கான யாசகம். மெல்லத் திரும்பினேன்.
அது என் நண்பன். ஒரே ஊரில் இருந்து பார்க்க வாய்க்காத சந்தர்ப்பத்தை இன்று ஒரு சாரயக்கடை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அவனது தோற்றம் அவ்வளவு கவுரவமாக இல்லை. சமூகத்தால் கைவிடப்பட்ட விரோதி போல இருந்தான். இருந்தால் என்ன? அவன் என் நண்பன். சிறுவயதில் பார்த்த அதே முகம். சிறுவயதில் பேசிக்கொண்டதுபோல அவனுக்கு மீசை வாய்க்கவே இல்லை. அது அவனைக் கண்டுபிடிக்க இன்னும் எளிதாய் இருந்தது.
சூழலை மறந்து அவனை ஆரத்தழுவிக் கொண்டேன். என் கைகளைப் பார்த்தான். இன்னொரு முழு பாட்டில் வாங்கிக்கொண்டு இருவரும் லாட்ஜ் படி ஏறினோம். இருவருக்கும் சாப்பாடும் வாங்கிக்கொண்டோம். சாப்பாடு பார்சல், இரு பாட்டிலையும் அவன் வாங்கிக்கொண்டான். அனைத்தையும் டீப்பாயில் வைத்துவிட்டு பேசத் தொடங்கினோம். அவன் தொடங்கிய தொழிலைப் பற்றி பேசினான். ஏதோ ஆள் சேர்க்கும் ஏஜெண்ட் போல இருந்தது அவனது பேச்சு. மிகவும் மிகைப்படுத்தி ஏற்ற இறக்கத்தோடு பேசினான். அதில் ஒரு நேர்த்தி இருந்தது.
அவனது திருமண வாழ்க்கை குறித்துக் கேட்டேன். தோல்வி மனப்பான்மையுடன் தலையைக் குனிந்துகொண்டான். குழந்தைகள் எத்தனை எனக் கேட்டேன். நான்கு விரலைக் காட்டிவிட்டு ஒன்றை மடக்கி மூன்றைக் காட்டினான்.
“ஒரு குழந்தை பிரசவத்தில் செத்து போச்சு. ஆம்பள புள்ள!” என்றான்.
“மீதம் மூன்று?” என்று கேட்க, “அதுவும் ஆம்பள புள்ளதான்”.
“அப்புறம் வேற என்ன பிரச்சனை?”
“பொண்டாட்டிதான் பிரச்சினை” என்றான். மேலும் கேட்க விரும்பாமல் அமைதியாக இருந்தேன்.
சிறிது நேரத்தில் அவனே ஆரம்பித்தான். “அவ தெருவுல படுக்காத ஆளே இல்ல. பிறந்தது எதுவுமே என்னோட ஜாடை இல்ல. எவன் எவனோ மாதிரி இருக்கு!” அழுதுகொண்டே பாட்டிலைப் பார்த்தான். டீப்பாய் தாண்டி அவனது தோளைத் தொட்டு ஆறுதல் சொல்ல அசௌகரியமாக இருந்தது. மேலும் இடிந்து போன கட்டிடத்தில் களிமண் பொம்மையைத் தேடுவது இன்னும் கடினம். சொல்ல வேண்டுமே என இரண்டு வார்த்தைகளை எடுத்துப் போட்டேன்.
“விடு சரியாயிடும்!”
உடனே அவன், “எப்படி சரியாகும், இன்னொருத்தனுக்கு பிறந்தது, எப்படி சரியாகும்?” என்றான். அடுத்த பாட்டிலை எடுக்க முடிவு செய்தேன்.
மூடியைத் திறந்ததும் உற்சாகமாக இருந்தான். இருவருக்கும் ஊற்றினேன். தண்ணீர் ஊற்ற அவகாசம் கொடுக்காமல் எடுத்துக் குடித்துவிட்டு வாயைத் தேய்த்தான். எதிரில் இருந்த வறுத்த கோழியை நீட்டினேன். மறுத்தான். பின் அவன் சட்டைப் பையில் இருந்த ஊறுகாயினை எடுத்து நக்கினான். என்னிடமும் நீட்டினான். எனக்கும் ஊறுகாய் பிடிக்கும்தான். ஆனால், அவன் அதை சாப்பிட்ட விதம் பிடிக்காமல் மறுத்தேன்.
“ஊறுகாய்க்கு ஏன் மாமியா, நாத்தனார், கொழுந்தியான்னு வைக்கிறாய்ங்கன்னு தெரியுமா?” எனக் கேட்டான். ‘தெரியலையே’ என்பது போல தலையாட்டி வைத்தேன். அதற்கு அவனும் பதில் கூறாமல் இன்னொரு கிளாஸ் எடுத்து ஊற்றினான். பின் ஊறுகாய் பாக்கெட்டை அருவெறுப்பாய் எடுத்து சப்பிக்கொண்டே சிரித்தான்.
வரும்போது சற்றுப் பணிவாக இருந்ததுபோல காட்சியளித்தவன் நேரம் செல்லச் செல்ல அதிக உரிமை எடுத்துக் கொண்டது போல தெரிந்தது. பாட்டில் வைத்திருந்த டீபாயில் காலை நீட்டிக்கொண்டு சிகரெட் பிடித்தான். எனக்கு அறவே ஆகாத புகையை முகத்தில் சாத்தி ஊதினான். தலைவலி வருவது போல இருந்தது.
“நண்பா, சொர்க்கத்தைப் பாத்திருக்கியா?” என கேட்டான். எனக்கும் லேசாக போதை ஏறியிருந்ததால் அவனது கேள்வியைப் புரிந்து கொள்ள முடிந்தது. “இல்லையே” என்றேன். பேய் போல சிரித்தான். போதை அதிகமாகும்போது குரல் எழுப்பும் சப்தமும் அதிகமாகும் என்றாலும் அதை போதை அடிக்காத மூன்றாவது நபரால் மட்டுமே அறிய இயலும். எழுந்து போய் அவன் கொண்டு வந்த பையை புரட்டி ஏதோ தேடினான். அப்போதுதான் அவன் கொண்டு வந்த பையைக் கவனித்தேன். அது ஜவுளிக்கடை பை போல இல்லை. சர்வரோகசாத்தானின் முகம் பதித்த ஜாடையில் ஒரு முத்திரை இருந்தது. அதில் ஒரு பொட்டலத்தோடு வந்தான்.
பொட்டலத்தை பிரித்துக் காட்டினான். உப்பு போல வெள்ளைத் தூள் இருந்தது. “நண்பா, நான் கொடைக்கானல் போகும்போது ஒரு நைஜீரியா பையன் நண்பனா கிடைச்சான். எனக்கும் அவனுக்கும் செம்மையா செட் ஆச்சு. இத்தனைக்கும் அவன் பேசுறது எனக்கும், நான் பேசுறது அவனுக்கும் புரியவே இல்ல. கொடைக்கானல் மலையே சுத்துனோம். கடைசியா போகும்போது இந்த பொட்டலத்தைக் கொடுத்தான். நீ தனியா இருக்கும்போதும், சந்தோஷமா இருக்கும்போதும் மட்டும் இதை சாப்பிடுன்னு சொன்னான். நண்பா நீ நம்ப மாட்ட. இதுவரைக்கும் இதை ரெண்டு தடவை சாப்பிட்ருக்கேன். ங்கோம்மால.. சொர்க்கம் என்னடா சொர்க்கம்? அதையெல்லாம் மிஞ்சி ஒரு உலகத்துக்கு கூட்டிட்டு போகும்!” என்றவன் ஏதோ நினைத்துச் சிரித்தான்.
இரண்டு கிளாஸ்களிலும் சரக்கை ஊற்றினான். பின் அந்த வெள்ளைத் துகளை அவன் கிளாசில் கொஞ்சம் கொட்டினான். என்னிடம் அனுமதி கேட்டான். “நண்பா, உன்னை வற்புறுத்தி இதை சாப்பிட வைக்க மாட்டேன். இஷ்டம் இருந்தா சாப்பிடு. இல்லேன்னா வேணாம்!” என அவன் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. ‘சரி’ என தலையாட்டியதும் உற்சாகமாக என் கிளாசில் கொஞ்சம் கொட்டிக் கலக்கினான். குறைவுக்கும் சற்று கொஞ்சமாக இருந்த அதன் அளவு அப்படி என்ன செய்யப்போகிறது என ஆர்வமாக இருந்தது.
அவன் கிளாஸை எடுத்துக் குடித்தான். அருகில் இருந்த சிக்கனை எடுத்து தாறுமாறாகக் கடித்தான். எங்கிருந்தோ பறந்து வந்து கரப்பான்பூச்சியைக் கைகளால் நசுக்கிச் சிரித்தான். அந்தச் சிரிப்பு அவன் போலவே இல்லை. வாய் கோணி இன்னும் விசித்திரமாக இருந்தது. வெகுநேரம் அமைதியாகவே இருந்தான். அவன் இரு தொடைகளிலும் கைகளை வைத்து கால்களை ஆட்டிக்கொண்டிருந்தான். அவனது மெலிந்த தேகம் சற்று பூசியது போல இருந்தது. அவனது உருமாற்றம் என்னை இன்னும் ஆர்வமூட்டியது. என்றாலும் ஒரு தயக்கம். நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன். அவன் அப்படியே இருந்தான். பின் நிமிர்ந்து பார்த்துக் கேட்டான். “என்ன நண்பா, சொர்க்கம் வேணாமா?”
பையில் இருந்த பணத்தை எடுத்து பாதுகாப்பாய் வைத்துக்கொண்டேன். அலுவலகம் சம்பந்தப்பட்ட எல்லாக் கோப்புகளையும் நினைவில் நிறுத்திக்கொண்டேன். எப்படிப்பட்ட போதையில் முழுகி எழும்போதும் எந்த தவறும் செய்திருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்த என்னை நினைத்துப் பெருமிதமாக இருந்தது. அறையைச் சுற்றிப் பார்த்தேன். எல்லாம் சரியாக இருந்ததுபோல இருந்தது. கிளாஸை எடுத்து ஒரு மடக்கில் குடித்தேன். பெரிய வித்தியாசம் இல்லை. கசப்பு சற்று அதிகமாக இருந்த உணர்வு.
நானும் அவனைப் போலவே உட்கார்ந்துகொள்ள உள்ளுணர்வு தூண்டியது. அப்படியே உட்கார்ந்துகொண்டேன். காலில் இருந்து ஏதோ ஊறியது போன்ற உணர்வு. கரப்பான் பூச்சியாகத்தான் இருக்க வேண்டும் என மூன்று முறை தட்டிவிட்டேன். மீண்டும் மீண்டும் அதே உணர்வு. காலை நீட்டிப் பார்த்தேன். எதுவும் இல்லை. இப்போது பெரிய எலி ஒன்று கால் வழியாக ஏறுவது போல இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு கால்களிலும் அதே உணர்வு தென்படும் போதுதான் அது போதையின் கைங்கர்யம் எனப் புரிந்தது.
“நண்பா சொர்க்கத்துக்குள்ள காலடி எடுத்து வச்சிட்ட போல!” அவன் என்னை நிமிராமல் பார்த்துச் சொன்னான். அவன் குரலைத் தவிர்த்து ஏதும் கேட்காதவாறு மனம் அதற்கு மட்டும் கட்டுப்பட்டது.
“நண்பா, இப்ப எல்லாமே ரொம்ப ஸ்லோவாதான் இருக்கும். மேல நிமிர்ந்து ஃபேனை பாருவேன்!” என்றான். வேகம் குறைந்து வலுவிழந்த மின்சாரக் காற்றாலைப் போல மெதுவாகச் சுற்றியது. விரல்களை விரித்து மடக்கினேன். இரண்டு நொடிகளுக்குள் நடக்கும் விஷயங்கள் இழுப்பட்டுக் கொண்டே நீண்டன.
“நண்பா, எல்லாமே ரொம்ப மெதுவா நடக்குற மாதிரி இருக்கு!” என்றேன். அவன் சிரித்துக்கொண்டே சொன்னான், “ஒரு பொம்பள இருந்தா யோசிச்சுப் பாரு. நேரம் இழுக்கும்ல?” என்றபோது என் கற்பனைகளும் தறிகெட்டு ஓடத்தொடங்கின. ஒரே நேரத்தில் பார்த்துப் பழகிய எல்லா பெண்களின் முகங்களும் படம் போல ஓடத் தொடங்கியது. பெண் போன்ற படத்தைப் பார்த்தாலே பாய வேண்டும் போல இருந்தது. ஒரே நேரத்தில் ஏற்பட்ட இன்னல் இச்சைகளை உதறிவிட்டு எழும் முயற்சியாக கண்களை மெதுவாய் மூடினேன். எங்கிருந்தோ என்னைக் கவனித்துக் கொண்டிருந்தவன் கத்தினான், “நண்பா, நண்பா தூங்க மட்டும் செஞ்சிறத. எல்லாமே வேஸ்டா போயிரும். கண்ணைத் திறந்திட்டு என்ன பண்ண முடியுமோ அதெல்லாம் பண்ணு. சாகும்போது இந்த நாளை மறக்கவே மாட்ட!”
கண்கள் எதற்கும் கட்டுப்படாதது போல அசத்தியது. அவனைப் பார்த்தேன். எப்படியும் இருபது இடங்களில் அவன் உருவம் தெரிந்தது. எட்டு முதல் பத்து இடங்களில் அவன் குரல் வெவ்வேறாக கேட்டுக்கொண்டிருந்தது. கழுத்துக்கு கீழே உணர்விழந்ததுபோல இருந்தது. மேலே பார்த்து கீழே பார்க்கும் போதெல்லாம் பறந்து கொண்டிருந்தேன். உடல் பிடிமானம் இல்லாமல் இருந்தது. உட்கார்ந்து கொண்டிருந்த ஞாபகத்தில் மெதுவாய் தரை சாய்ந்தேன். திம்மென்ற சப்தத்தில் கீழே விழும் போதுதான் நான் நின்று கொண்டிருந்த ஞாபகம் வந்தது. தலையில் அடியில்லை. முதுகில் வலித்தது. லேசாய் சிறுநீர் போயிருந்தது.
அவன் அருகில் வந்து என்னைத் தூக்கி உட்கார வைத்தான். கண்ணை மூடினேன். “கிறுக்குத் தாயோளி, கண்ண மூடாதடா!” என உரக்கக் கத்தினான். முடிவு என் கையில் இல்லை என்பது போல மெதுவாய் மூடினேன். “ங்கோம்மாலக்க சொல்லிட்டே இருக்கேன். புளுத்தியாட்டம் மூடுற. சரக்கு விலை தெரியுமாடா?” என என் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான். அறை கணக்கில்லாமல் போனது. அடி ஆழத்தில் உயிருடன் புதையுண்ட மிருகம் ஒன்று மெல்ல மீளுவது போல உணர்ந்தேன். அருகில் இருந்த சரக்கு பாட்டிலை எடுத்து உடைத்தேன். அவன் பின்வாங்கி நின்றான்.
என் கன்னங்களில் சிராய்ப்புகள் இருந்தன. அந்த போதையிலும் முகம் முழுக்க எரிந்தது. “நண்பா, எல்லா உன்னோட நன்மைக்குதான் சொன்னேன். அடிச்சதைத் தப்பா எடுத்துக்காத!” என்றான்.
மெதுவாக எழுந்து போய் கட்டிலில் படுத்தேன். அவன் அருகில் வந்து படுத்துக்கொண்டான். கோபத்தில் கைகள் நடுங்கின. “தேவுடியா மவனே கீழ போய் படுடா!” என்றேன்.
அவன் எழுந்து உட்கார்ந்துகொண்டான். நான் உடனே, “என்ன பாக்குற? உன்னோட அப்பா கடைய விரிச்சாரு. உங்க அம்மா கால விரிச்சிச்சு!” என சொல்லிச் சிரித்தேன். சிரிப்பு உடல் முழுக்க பரவியது போல சிரித்துக் கொண்டிருந்தேன். அவன் எதிர்பார்க்காமல் என்னிடம் மீண்டும் மீண்டும் சொன்னான். “நண்பா, அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்கிறேன். அதுக்குன்னு அம்மாவைத் தப்பா பேசாத. அவங்க செத்துப் போயிட்டாங்க!” என்றான்.
“செத்து போனா என்ன? படுத்தது படுத்தது தானே. அதை நீயும் நானும் பாத்துருக்கோமே. மறந்துட்டியாடா?” என சொல்லிவிட்டு மீண்டும் சிரிப்பைத் தொடந்தேன். அவன் அழுதான். “அம்மா எனக்கு தெய்வம்” என கையெடுத்துக் கும்பிட்டான். என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் கைகளை வைத்து என் வாயைப் பொத்தினான். அவனைத் தள்ளிவிட்டுச் சொன்னேன், “வேணா அவுசாரி மவனேன்னு சொன்னா உனக்கு பெருமையா இருக்குமாடா?” சாத்தான் நிலையாக ஏறி நாக்கில் அமர்ந்து கொண்டது போல் இருந்தது.
எதிரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுக்கச் சொன்னேன். அடிமை போல எடுத்து வந்து கொடுத்தான். முகத்தில் கை வைக்க முடியாத அளவிற்கு எரிச்சல் இன்னும் சாத்தானை மீண்டும் நாவில் ஏறி உட்காரச் செய்தது. சிரித்தேன். அவன் அருகில் வந்து அவனையே அறைந்து கொண்டான்.
எழுந்து போய் அந்த கோழி பிரட்டலை எடுத்துக் கடித்தேன். ரத்த ஓட்டம் தலைக்கு ஏறி மீண்டும் போதை உடலை மிதக்க வைத்தது. அவன் மூலையில் உட்கார்ந்துகொண்டான். பின் எழுந்து அருகில் நின்று என் வயிற்றில் ஒரு குத்து விட்டான். கீழே விழுந்தேன். சிறுநீர் முழுமையாக வெளியேறியது. என்னைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னான், “சின்ன வயசுல இருந்து நீ இன்னும் இந்த பழக்கத்தை விடலயா?”
நிதானமாக எழுந்து நின்றேன். உடையை மாற்றிக்கொண்டேன். ஒரு நினைவில் உடையை அலசி போட்டு அதே ஈரத்தில் பேக்கில் திணித்துக் கொண்டேன். அவனை உற்றுப் பார்த்தேன். மெதுவாய் அவன் பின்னால் சென்று நின்றேன். நிதானமாக சிரித்துக் கொண்டிருந்தான். சுவாசத்தை ஒருங்கிணைத்து சக்தியைத் திரட்டினேன். அவன் கழுத்தைப் பின்பக்கமாகக் கையில் வைத்து மடக்கினேன். எதிர்பார்க்காதவன் திமிறிக்கொண்டு இருந்தானே தவிர அவனால் என்னைத் தடுக்கவே முடியவில்லை. ஒரு குட்டி ஆடு போல என் கைக்குள் மாட்டிக்கொண்டு அவன் தவிப்பது வேடிக்கையாக இருந்தது.
என் நோக்கம் அவனைக் கொல்வது அல்ல. சாவின் இறுதிக்கு அவனைக் கொண்டுச் சென்று நிறுத்த வேண்டும். அதன் பின் என் அருகில் வர அஞ்ச வேண்டும். அவன் கழுத்தை பிடித்து இன்னும் இறுக்கினேன். அவன் சாவின் விளிம்பு குறித்து எனக்கு சந்தேகம் இருந்த காரணத்தால் அப்படியே என் கைகள் அவன் கழுத்தில் நிலைகொண்டு விட்டது. கழுத்தை என் கைகளால் இறுக்கும்போது அவன் காட்டிய மறுப்பு படிப்படியாக குறையத் தொடங்கியபோது ஓர் அற்புதமான சூழலில் மனம் லயித்தது. என் கைகளை அவன் கைகள் உடையும் அளவிற்கு பற்றிக் கொண்டிருந்தான். பின் மெலிதாய் விடுவித்துக்கொண்டான். பின் இறந்துவிட்டான்.
அவன் கழுத்துக்கு என் கைகளுக்கும் நசநசத்துக்கிடந்த வியர்வைதான் என்னை இயல்புக்கு கொண்டு வந்தது. அவனை மனதார விடுத்தேன். சரிந்து விழுந்தான். மூச்சு முற்றாக நின்றுவிட்டது. படங்களில் பார்த்த காட்சிகள் கண் முன் வந்து போயின. அவன் நெஞ்சைப் பிடித்து அமுக்கினேன். எந்த முன்னேற்றமும் இல்லை. பின் நெஞ்சில் காது வைத்துக் கேட்டேன். அவன் இதயத்திற்குள் பேய் ஒன்று ‘ஓ’வென்று கத்திய சப்தமே கேட்டது. அவன் வாயில் என் வாய் வைத்து ஊதினேன். அருவெறுப்பான ஒரு வீச்சம் நெடித்தது. கண்ணை மூடினேன். மூடிக்கொண்டது. உயிரோடு இருக்கும்போது பேச்சைக் கேட்காதவன் செத்த மறுநொடியில் எனக்கு இணங்கி போனது போல இருந்தது.
என்ன நடக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தேன். ஒரு கொலை உறுதியாக நடந்திருக்கிறது என்பதைத் தவிர்த்து வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. ஓலை பாய் போல விரிந்து கிடந்த அவனை ஒழுங்காய் படுக்க வைத்தேன். அருகில் அமர்ந்துகொண்டு அழ முயற்சி செய்தேன். அவன் வாயோடு வாய் வைத்த காட்சி நினைவுக்கு வரவே சிரிப்பு வந்தது. என்னோடு சேர்த்து அவனும் சிரிப்பது போல இருந்தது. அகத்தில் நடக்கும் எந்த சம்பவமும் இன்னும் என்னை பாதிக்கவில்லை என உணரும்போதுதான் நான் இன்னும் போதையில் இருப்பதை அறிந்தேன்.
பாவமறியா ஒரு ஜீவராசி போல எழுந்து பெட்டில் படுத்தேன். அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பெட்டிற்கு விரிந்திருந்த விரிப்பை அவன் மீது போர்த்தி விட்டு தூங்க முயற்சித்தேன். தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினேன். ஒரு நீதிபதி என் காதுக்குள் வந்து, “நண்பன் சாவுக்கு அழுதால் தண்டனையைக் குறைப்பேன்” என சொன்னதும் எழுந்து உட்கார்ந்து கொண்டேன்.
அவனைப் பார்த்தேன். அழகாக இருந்தான். கொலை செய்த குற்றம் மனதில் எங்காவது குறுகுறுத்து நிற்கிறதா எனப் பார்த்தேன். சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. சற்று நேரம் சிரித்தேன். பின் கழிவறைக்குச் சென்று முகத்தைக் கழுவினேன். முகம் கழுவும்போது நீருக்குப் பதில் எரிமலையை அள்ளி முகத்தில் அடித்துக்கொண்டது போல இருந்தது. முகத்தைத் துடைத்துக்கொண்டு அவன் வயிற்றில் எட்டி உதைத்தேன். அவன் நெஞ்சில் ஏறி மிதித்தபோது அந்த போதைப் பொட்டலம் வெளியே வந்து விழுந்தது. அதைக் கவனமாக பையில் வைத்து கொண்டு அவன் அருகில் அமர்ந்தேன்.
அவனின் குரல் என்னைத் தொந்தரவு செய்தது. எங்கு பார்த்தாலும் அவன் குரல். ‘கொலை கொலை’ எனும் சப்தம் காதைக் கிழித்தது. எழுந்து உட்கார வைத்து கடிகாரத்தைப் பார்த்தேன். நள்ளிரவு மணி ஒன்றைக் காட்டியது. போதைப் பொட்டலத்தைப் பிரித்து அதை தண்ணீரில் கொட்டிக் குடித்தேன்.
அவனைக் கைதாங்களாக இழுத்துக்கொண்டுச் சென்றேன். இலகுவாக இருந்தான். ‘இலகுவாக இருக்கும் மனிதனை கொன்றிருக்க கூடாது’ என்று என்போன்ற ஓர் உருவம் சொல்லிக்கொண்டு மறைந்தது. இழுத்து வந்த அவனை ஓரமாகப் போட்டுவிட்டு அறைக் கதவை சாத்திவிட்டு சாவியை எடுத்துக்கொண்டேன்.
லாட்ஜ் அறைக்கதவுகள் யாவும் பெரும் ரகசியத்தை அடைகாத்தது போல மூடிக்கிடந்தன. தட்டினால் கூட திறக்கத் தயங்குவது போல இருந்தன. பெரிதாக ஒரு திட்டமும் இல்லை. இங்கிருந்து ஆறு கிலோமீட்டரில் ஒரு மலை இருக்கிறது. அங்கிருந்து நண்பனை உருட்டினால் பாதுகாப்பாக ஒரு புதரில் சிக்கிக்கொள்வான் என எனக்குள் பேசிக்கொண்டேன்.
சற்று வியர்த்தது. அவனைத் தூக்கி பின்னால் வைத்துக் கொண்டு சென்றேன். அவன் மீது அடக்கமுடியாத துர்நாற்றம் வீசியது. உடம்பைத் திருப்பிப் போட்டுப் பார்த்தேன். இயற்கை உபாதைகள் வெளியாகியிருந்தது. என்னுடன் வேலை பார்த்த ஒரு பொறியாளர் சொல்லியிருக்குறார், இறக்கும்போது ஆண்களுக்கு விந்து வெளியேறும் என! அதுகுறித்தும் யோசனை வந்தது. பையில் இருந்த பொட்டலத்தைச் சரிபார்த்துக் கொண்டேன். “நீ ஒருவன் போதும் வேறு யாருமே தேவையில்லை!” எனத் தோன்றியது. சாகும் முன்பு அந்த நைஜீரியா இளைஞன் குறித்து விசாரித்திருக்கலாம் என எனக்குள் சொல்லிக்கொண்டேன். அது குறித்து கொஞ்சம் கவலையாகவும் இருந்தது. கையில் ஒரு பிணம். அப்புறப்படுத்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சமாவது பதட்டம் வேண்டுமே? துளி கூட இல்லை. மனம் விசிலடிக்கத் தோன்றியது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட வீட்டுக்குள் ஒரு பூனை வளர்ந்தது. குட்டியும் போட்டது. தாய் பூனை ஒரு குட்டியை மட்டும் என்வசம் விட்டுவிட்டு எங்கு போனது எனத் தெரியவில்லை. அதை வளர்க்கத் தொடங்கினேன். எப்போதும் என்னுடன் இருக்கும். படுக்கையில் படுத்துக்கொண்டு தூங்கும். நேரமாகிவிட்டால் காலை சுரண்டும். ஒருநாள் எழுந்திருக்கும் போது மெத்தையில் செத்துக் கிடந்தது. போதை தூக்கத்தில் அதன் மீது புரண்டு கிடந்திருக்கிறேன். துக்கம் தாளாமல் வேலைக்குச் செல்லாமல் ஒருமாதம் சரியாகச் சாப்பிடாமல் கிடந்தேன். பூனைக்குக் காட்டிய இரக்கம் உயிர் நண்பனுக்கு எங்கு போனது என்பதே புதிராக இருந்தது. பொட்டலத்தைச் சரிபார்த்து கொண்டேன். அவ்வப்போது அதை முகர்ந்து பார்த்துக்கொண்டேன். காதின் அருகே வைத்து ஆட்டிப் பார்த்தேன். அதன் ‘சரசர’ சப்தம் கிளர்ச்சியாக இருந்தது.
அவனை முதுகில் வைத்து இழுத்துச் சென்றேன். அவன் வாயில் நுரை தள்ளியது. அதை என் கைக்குட்டையில் துடைத்துவிட்டு அவன் பையில் வைத்தேன். அவன் காதில் சொன்னேன், “வீட்டுக்குப் போனதும் கர்சீப்ப மறந்துடாத!”
‘யார் பார்த்தால் என்ன’ என்ற மனநிலையில் இருந்தேன். அதற்கு மாறாக நடந்து கொண்டிருந்தது. ரிசப்ஷனில் எப்போதும் ஓர் இளைஞன் இருப்பான். இன்று அவன் கூட படுத்துக்கிடந்தான். எதிரில் இருந்த கண்காணிப்பு கேமரா எதிரில் நின்று முகத்தை நன்கு காட்டிக்கொண்டிருந்தேன். நண்பன் முகத்தையும் அதில் பதிய வைக்க சில முயற்சிகளைச் செய்தேன். அவனைக் காத்திருப்பு அறையில் சாய்த்து விட்டு வெளியே வந்தேன். இதமான காற்று. வாகன நடமாட்டம் குறைவாக இருந்தது. என்னைப் பார்த்ததும் அந்த ஆட்டோ நின்றது. “என்ன சார், சவாரியா? எங்க போனும் ஸார்? வாங்க ஸார்?” என்ன விகுதியில் ஸார் போட்ட அந்த ஆட்டோக்காரனைப் பார்த்தேன். நல்ல வசீகரமான கிழவன். மனவோட்டத்தில் வசீகரம் எனும் வார்த்தை எனக்கே புதிதாய் இருந்தது.
அவனை நிறுத்தினேன். ஆட்டோவை எட்டிப் பார்தேன். ஆங்காங்கே தாறுமாறாகச் சிலுவை போடப்பட்டிருந்தது. நண்பனுக்கு ஏற்ற சவப்பெட்டி எனத் தோன்றியது. நான் நீண்ட நேரம் அப்படியே இருந்திருக்க வேண்டும். “என்ன சார் ஏதோ யோசனையா இருக்கீங்க? காசு முன்னபின்ன இருந்தா பரவாயில்ல ஸார்!” என்றான்.
“உள்ள ஃப்ரெண்டு இருக்கான். அவனையும் கூட்டிட்டு போயிருவோம்!” என்றேன். உற்சாகமாக என்னுடன் வந்தான். வரவேற்பறையில் பிணம் போலக் கிடந்தான். “என்ன ஸார், உங்க ஃப்ரெண்டு மட்டையா?” என்றான். “இல்ல செத்துட்டான்!” என்றேன். அவன் சிரித்தான். உடலைத் தொட்டுப் பார்க்கும் போது குளிர்ச்சியாக இருக்கும். நிச்சயம் அறிந்து கொள்வான் என நம்பினேன். இருவரும் அவனைத் தூக்கினோம். அவன் பதறிப்போய் சொன்னான், “என்ன ஸார், ஃப்ரெண்டுக்கு உடம்பு சரியில்லையா? நெருப்பா கொதிக்குது!”
ஆட்டோவில் அவனை அள்ளிக்கொண்டு போய் திணித்தோம். அறைக்குள் சொன்ன பேச்சைக் கேட்ட நண்பன், பிணமாக மாறியதும் சற்று அடம் பிடிப்பது போல இருந்தது. ஒருவாறாக மடித்து அவனை உள்ளே திணித்து வைத்தேன். அருகில் அமர்ந்து கொண்டேன். சுமார் நான்கு ஈக்கள் விடாமல் காதுக்குள் கத்திக்கொண்டே இருந்தது. அப்போதுதான் ஆட்டோக்காரன் கேட்டான், “எங்க ஸார் போகணும்?” குறிப்பிட்டுச் சொல்லாமல் ஓர் இடத்தைச் சொன்னேன்.
“அது மலையாச்சே ஸார்? இந்த நேரத்துல எதுக்கு ஸார்?” என்றான்.
“இவனை அங்கிருந்துதான் உருட்டி விடணும்!” என்றேன்.
“உங்களுக்கு போதை அதிகமாயிருச்சு ஸார்!” எனச் சிரித்தான். எப்படிக் கொன்றேன் என்பதை இவனிடம் விலாவரியாகச் சொல்ல வேண்டும் போல இருந்தது.
ஆட்டோ கிளம்பியது. வெளிக்காற்று முகத்தில் அறைந்ததும் எதிர்கொள்ளப்போகும் உண்மையும் சேர்த்து அறைவது போல கலக்கமாக இருந்தது. உடல் நடுங்கியது. பதட்டமாகப் பையைத் தொட்டுப் பார்த்து பொட்டலத்தை எடுத்தேன். காதருகே வைத்து குலுக்கிவிட்டு அதில் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன். வாயில் புகை கிளம்பியதுபோல இருந்தது. எரிச்சல் வேறு.
ஆட்டோக்காரன், “என்ன சார் அது? கணேசா? போயிலை கிடைக்குதா?” என்றான். வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு பொட்டலத்தைக் காட்டினேன். “பெரிய போதையா இருக்கும் போல!” என கண்களை அகல விரித்தான். “உனக்கு வேணுமா?” என்றேன். “ஐயோ ஸார், என்னென்ன தெரியாம போட்டா சிக்கலு!” என்றவன் முகத்தில் ஆவல் வெளிப்படையாகத் தெரிந்தது.
தூரத்தில் போலீஸ் வாகன சோதனையில் இருந்தது. “ஸார் போலீஸ். எது கேட்டாலும் பேசாம இருங்க. நா பேசிக்கிறேன்!” என்றான். போலீஸ் விசாரித்தால் நடந்த எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டு அந்த சராசரி உயரத்தில் இருக்கும் அதிகாரி நெஞ்சில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. வேகவேகமாக பொட்டலத்தில் இன்னும் சில துகள்களை வாயில் போட்டுச் சப்பினேன். ஆட்டோவை நிறுத்துவதற்கு முன்பாகவே அதிலிருந்து கீழே இறங்கினேன். ஆட்டோக்காரன் மிரண்டு போய் உள்ளேயே இருந்தான். அந்த அதிகாரியிடம் சென்று கம்பெனி விசிட்டிங் கார்டை நீட்டினேன். ஆட்டோக்காரனுக்கு மட்டும் மது பரிசோதனை நடந்தது. ஆட்டோவின் உள்ளே ஏறெடுத்துக் கூடப் பாராமல் எங்களைப் போகச்சொன்னார்.
போலீஸ் இப்படித்தான். அவர்களுக்குத் தேவை குற்றம் அல்ல, அதை செய்யத்தக்க ஒரு முகம். குற்றங்களை மறைக்க ஒரு சந்தேகத்துக்கும் இடமளிக்காத ஒரு வெள்ளை அனைத்தையும் சலவை செய்துவிடும். உடலின் இயல்பான போக்கு என்ன என்பது போலீசுக்கு நன்கு தெரியும். இயல்பாக போலீசை பார்த்ததும் எழும் பதற்றத்திற்கும், தவறைச் செய்து விட்டு உடலில் தெரியும் பதற்றமும் அவர்களுக்கு அத்துப்படி. பொட்டலத்தை எடுத்து முத்தம் குடுத்தேன்.
மலை நெருங்கியது. ஆட்டோ சற்றுத் திணறிப்போய்தான் மேலே எழும்பியது. “எஞ்சின்ல கொஞ்ச வேலை இருக்கு ஸார். இல்லேன்னா வண்டி சிட்டா பறக்கும்!” நான் அமைதியாக இருந்தேன். வண்டியை ஓரம் கட்டச் சொன்னேன். “குளிர்காலத்தில இது ஒரு பிரச்சனை. எனக்கும் முட்டிக்கிட்டு வருது ஸார். போலீசை பாத்ததும் இன்னும் அடக்க முடியல!” சிரித்தான். வாயில் பீடியைப் பற்ற வைத்துக்கொண்டே சிறுநீர் கழித்தான். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். “கல்லு அடப்பு ஸார். ஒண்ணுக்கு வுட ரொம்ப நேரமாகும்!”
ஆட்டோவுக்குள் எட்டிப்பார்தேன். சொந்த வீட்டில் படுப்பது போல ஆட்டோவில் சௌகரியமாக படுத்துக் கிடந்தான். எழுப்பிப் பார்த்தேன். இப்போது எழுந்தால்கூட சரியாக இருக்கும். இவனை இங்கே விட்டுவிட்டு போய்விடலாம்.
“ஸார், நீங்க எங்க போகணும்ன்னு சரியாவே சொல்லல!” இரண்டு நூறை தூக்கி அவன் சட்டையில் திணித்தேன். “அய்யோ ஸார், காசு பிரச்சினை இல்ல. எங்க போகணும்ன்னா சரியா இருக்கும். இனி மலைப்பாதைதான்!”
பொட்டலத்தை எடுத்து அவனிடம் நீட்டினேன். அவனும் அதைத்தான் எதிர்பார்த்தவனாக இருந்தான். “கஞ்சா தவற எதும் தொட்டத்தில்ல ஸார். ரெண்டு மணிநேரத்திற்கு ஒன்னு இழுக்கலேன்னா கண்ண கட்டுன மாதிரி ஆயிரும் வேணுமா?” இரண்டு பீடியை நீட்டினான். அதில் ஒன்றை எடுத்தேன். அவன் திரும்பி ஆட்டோவுக்குள் அமர்ந்தான். அதற்குள் பீடியைப் பிரித்து பொட்டல துகளைப் போட்டு சுட்டினேன். அவனிடமே நீட்டினேன். மறுக்காமல் வாங்கி வைத்துக் கொண்டவனை அந்த பீடியைப் புகைக்கச் சொன்னேன். ஏதோ புரிந்தவன் போல “பெசலா ஸார்?” என்று புகைத்தான்.
ஆட்டோ கிளம்பியது. மலையில் இருந்து பார்த்தால் ஊரே தெரிய வேண்டும். அப்படிப்பட்ட இடத்தில் நிறுத்துமாறுக் கேட்டுக்கொண்டேன். அங்கிருந்து நண்பனை உருட்டிவிட்டால் செங்குத்தாக ஒரு பள்ளத்தில் சொருகிக் கொள்வான் என்பது என் அபிப்பிராயம். சரளமாகப் பேசிக்கொண்டு வந்த ஆட்டோக்காரனிடம் தீவிர அமைதி. மூன்றுமுறை அழைத்துவிட்டேன். ஆட்டோவைச் செலுத்துவதே தவப்பலன் போல இருந்தான். வாட்டமான ஒரு வட்டாரக் கெட்ட வார்த்தையில் அவனை அழைத்தேன். அழுதுக்கொண்டே திரும்பினான். “எனக்கு என்ன சார் குடுத்த? மனசு கிடந்து அடிக்குது. ஒரே பதட்டமா இருக்கு!”
எனக்கு சிரிப்பு வந்தது.
“சிரிக்காத ஸார், ஈரக்குலையே ஆடிப்போச்சு.” என்றவன் வண்டியை விட்டுவிட்டு சட்டையைக் கழற்றி வெளியே விசிறினான். கழுத்துக்குக் கீழே ‘மாரி’ என்று பச்சை குத்தியிருந்தது. அதில் ஓர் அறை கொடுத்தேன். எந்த சலனமும் இல்லாமல் அழுதுகொண்டே போனான்.
அவனாகவே வண்டியை நிறுத்தினான். “என்ன வேணாலும் பண்ணிக்க ஸார்!” என ஆட்டோவில் உட்கார்ந்துகொண்டான். நான் நண்பனை மெதுவாக இழுத்துக் கொண்டு வெளியே வந்தேன். பின்னாலோ, எதிரிலோ எந்த வாகனமும் இல்லை. வந்தாலும் பிரச்சினை இல்லை. பெரிய தடுப்பில் இவனைப் படுக்க வைத்தேன். ஆட்டோக்காரன் சப்தமிட்டு அழுதுகொண்டிருந்தான். நண்பனின் முகத்தைப் பார்த்தேன். சிறுவயதில் என் கைகளைப் பிடித்து கிரிக்கெட் விளையாட அழைத்துச் செல்லும்போது அவன் முகத்தில் தெரிந்த அதே சிரிப்பு. அவர்கள் கடை புரோட்டாவிற்கு பிரசித்திப் பெற்ற கடையாக இருந்தபோது எங்கள் குடும்பத்தை வறுமை பீடித்திருந்தது. புரோட்டாவைக் கட்டுக்கட்டாகத் தினத்தந்தி பேப்பரில் மடித்து எனக்குக் கொடுப்பான். வாங்க மறுத்தபோது தோளில் தட்டி கையில் திணிக்கும்போது அவனிடம் ஒரு விசேஷ சிரிப்பு இருக்கும். அப்படித்தான் இப்போதும் சிரித்துக்கொண்டிருந்தான்.
ஆட்டோக்காரன் புலம்பி அழுதுகொண்டிருந்தான். அவனைப் பார்த்துக்கொண்டே நண்பனைப் புரட்டி விட்டேன். அதற்காகவே காத்திருந்ததுபோல கீழே பாய்ந்துகொண்டு சென்றான். காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்டேன், ஏதோ ஒரு கல்லில் மோதி திம்மென்ற சப்தம் கேட்டது.
போதை கலைந்த உணர்வு. பொட்டலத்தைத் தொட்டுப் பார்த்தேன். காதின் அருகே வைத்து ஆட்டினேன். பீடித்த சாத்தான் சிரித்ததுபோல இருந்தது. அதையும் அவனோடு வீசிவிட்டு ஆட்டோவில் வந்து அமர்ந்தேன். ஆட்டோக்காரன் கேட்டான், “எதுக்கு ஸார் உருட்டிவிட்ட?” நான் பதில் பேசாமல் இருந்தேன். அவனும் ஏதும் கேட்கவில்லை.
லாட்ஜில் இறங்கும் போதுதான் அவனிடம் சொன்னேன், “எங்க ஹோட்டலை எழுதி வாங்கிட்டானுங்க!” அவன் அழுகை வற்றிப்போய் மெலிதாய் சிரித்தான். எனக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. சப்தமிட்டுக் கதறினேன். பதறிக்கொண்டு வெளியே ஓடிவந்தான் ரிசப்ஷன் இளைஞன். அதற்குள் ஆட்டோவும் எங்கோ சென்று மறைந்து விட்டது!
*******
ஒரு சில திரைப்படங்கள் நிறைவுற்ற பிறகும் திரையரங்கை விட்டு எழுந்து வர மனம் வராது. அதைப்போன்ற ஒரு மனநிலையை வரவைத்த அற்புதமான சிறுகதை இது. நானும் கொஞ்சம் எழுத முயற்சித்துக் கொண்டிருப்பவன் என்கிற வகையில் இது போன்ற சிறுகதைகள் எழுத வேண்டும் என்கிற உத்வேகம் பிறந்தாலும் முதல் முறை களத்தில் இறங்குபவன் எதிர்மட்டையாளன் அடிக்கும் சிக்ஸர்களை பார்த்து பீதியாவதைப் போல கொஞ்சம் டர் ஆகிறது. உங்களது இந்த சிறுகதையை வாசிப்பு பழக்கம் உள்ள எனது அத்தனை நண்பர்களுக்கும் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்து வருகிறேன். இந்த கதையை விமர்சனம் செய்வதற்கு பதிலாக கொண்டாடவே மனம் துடிக்கிறது. சிறந்த கதையாக்கம். அதிஅற்புதமான எழுத்து. என்னை போன்றவர்களுக்கு இந்த இந்த எழுத்து ஒரு ஆசான்.
வாழ்த்துகள்.
தொடர்ந்து எழுதுங்கள்.