
பரிட்சை அட்டையால் கீழ்பாகம் அடைக்கப்பட்ட உடைந்த தகரக்கதவு கொண்ட கழிவறைகளை ஆசிரியரின் கட்டளைப்படி நான் பூட்டிக் கொண்டிருக்கும்போதே மணி அடித்தது. அவசரமாய் ஓடிச்சென்று கூட்டத்தில் கலந்து கொண்டேன். ‘நீராரும் கடலுடுத்த’ என்று பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. ஆங்காங்கே சிதறிக்கிடந்த கட்டிடங்களுக்கு நடுவில் மாணவர்கள் குவியலாய் ஒன்றுகூடி தமிழ்த்தாய் வாழ்த்து பாட, தலைமை ஆசிரியர் கொடி ஏற்றி அந்நாளைத் துவங்கி வைத்தார். அன்று பள்ளி திறந்து முதலாம் நாள்.
ஆறாம் வகுப்பு கட்டிடத்தின் முன்தான் எப்போதும் பிரேயர் நடக்கும். அது சிதறிக்கிடக்கும் கட்டிடங்களுள் நடுவில் இருப்பதும், அதன்முன் பெரிய இடம் இருப்பதும்தான் அதற்கு காரணம். எதிரில் ஓடு வேய்ந்த இரு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் இருந்தது. கடைசி வரை நீண்டு, தெருக்களை இணைக்கும் சிமெண்ட் ரோடு அதை ஒட்டியே போடப்பட்டிருந்தது. அதன் மறுபக்கத்தில் தலைமை ஆசிரியர் அறையும் ஏழாம் வகுப்பிற்கான அறையும் உள்ள டாரஸ் கட்டிடம் இருக்கும். அதன் பின்பகுதியில்தான் ஓலையால் வேயப்பட்ட நீண்ட வராண்டாவில் ஒன்றாம், இரண்டாம் வகுப்பு குழந்தைகள் அமர்த்தப்பட்டிருப்பார்கள். அதையடுத்த, வராண்டாவோடு சேர்ந்த டாரஸ் கட்டிடமே நான்காம் வகுப்பான எங்களுடைய வகுப்பறைக் கட்டிடம். பிரேயர் முடிந்து தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் பேசினார். ‘பிள்ளைகளா, நீங்க ஐந்தாம் வகுப்பு போகப் போறிங்க. நல்லாப் படிக்கணும்’ என்று அவர் வாழ்த்துக்களையும், அறிவுரைகளையும் தூவிக் கொண்டிருக்க என் எண்ணம் ஐந்தாம் வகுப்புக் கட்டிடத்தின்மேல் படர ஆரம்பித்தது. காம்பவுண்ட் சுவர்களோ, ஒரே மாதிரியான வகுப்பறைகளோ, சீரான கட்டிட அமைப்போ இல்லாத பள்ளிக்கூடம் அது. இரண்டு இரண்டு வகுப்பறைகள் கொண்ட மூன்று டாரஸ் கட்டிடங்களும், ஓலையில் வேய்ந்த இரண்டு கட்டிடங்களும், ஓடு வேய்ந்த இரண்டு கட்டிடங்களுமாக 7 சிறு சிறு கட்டிடங்களே. அதுவும் ஆங்காங்கே எதிரிலும் பக்கவாட்டிலும் மக்களுக்கான பொதுப்பாதையாய் இருக்கும்.
சொல்லப்போனால், அதைச் சுற்றியுள்ள அந்த பொதுப் பாதைதான் எங்கள் பள்ளி வளாகம். அங்கேதான் பிரேயர், விளையாட்டு போட்டிகள் எல்லாம். ஐந்தாம் வகுப்பு கட்டிடம் சற்றுத் தள்ளி கடைசியாய் அமைந்திருக்கும். டஸ்டர் வாங்கி வர அதனுள் செல்வதோடு சரி. இருப்பதிலேயே பெரிய கட்டிடம் அதுதான். பெரிய, பெரிய படிக்கட்டுகள், பெரிய ஜன்னல்கள் நீண்ட வராண்டாவைக் கொண்ட உயர்ந்த கட்டிடம். பார்ப்பதற்கு டிவி, சினிமாவில் வரும் நீதிமன்றம் போலக் காட்சியளிக்கும். அங்கு போவதை நினைத்து சிலிர்த்துக் கொண்டிருக்கையில் அவசரமாய் இயற்கை அழைத்தது.
பள்ளியின் முதல் நாளென்பதால் அப்பா தந்த பத்து ரூபாயையும் இஷ்டப்பட்டதை வாங்கித் தின்றுவிட வேண்டுமென்று கொண்டாட்டமாய், இண்டர்வலுக்காக காத்திருந்தால், ‘இப்படி அவசரமாய் வந்து தொலையுதே. இங்கேயும் பாத்ரூம் திறந்துவிட மாட்டிங்கிறாங்க’ என்று சலித்துக் கொண்டு, ஓட்டமும் நடையுமாய் விரைந்து கொண்டிருந்தேன். ஆறாம் வகுப்பு கட்டிடத்தின் பின்புறம் இருந்த, காலையில் பூட்டித் தாழிட்ட கழிவறையை கடந்து, அதன் பின்னிருந்த அடுத்தடுத்து இரண்டு, மூன்று நெசவாளர் வீடுகளைக் கடந்து வெகுதூரம் போக வேண்டி இருக்கும். வகுப்பறை வாசலில் இருந்து பார்த்தால் தெரியும் அளவிற்கு வெட்டவெளியாக கிடக்கும்.
ஒன்றாம், இரண்டாம் வகுப்பு குழந்தைகள் முன்னாடியே சிறிய மஞ்சள் புற்கள் வளர்ந்திருக்குமிடங்களிலேயே அமர்ந்து கொள்வார்கள். பெரிய வகுப்பு மாணவிகளுக்குத்தான் அது மிகவும் சிரமமான பொழுதாக மாறிவிடும். நடக்க வேண்டுமே! ஓட வேண்டுமே! அதுவும் அவசரமாய் முட்டிக்கொண்டு வந்து விட்டால் அவ்வளவுதான். அதற்கு பயந்தே தள்ளிப்போடாமல் ஓட வேண்டும். அந்த வெட்டவெளி தாண்டி சில புதர்கள் மண்டிய இடைவெளிகளை தேடி அமரவேண்டும். அதற்கும் இடைஞ்சலாய் ஆம்பள பசங்க வெளிக்கு போகுமிடம் அதற்கு சற்று தொலைவிலேயே இருப்பதால் அவர்கள் தலைகள் ஆங்காங்கே தெரியும். பெண் பிள்ளைகளின் தலையும்தானே தெரியும் என்று ஆறாம் ஏழாம் எட்டாம் வகுப்பு அக்காக்களை இங்கு பார்ப்பதே கடினம். கூச்சமும், அவமானமுமாக அவர்கள் இங்கு வருவதே இல்லை. கேட்டால் அடக்கிக் கொள்வதாகவும், தண்ணீரே குடிப்பதில்லை என்றும் சொல்லிவிடுவார்கள்.
பாத்ரூமிற்குச் சென்றால் தின்பண்டம் வாங்க முடியாது. தின்பண்டத்திற்காய் நின்றால் பாத்ரூம் போக முடியாது. பாதி நாட்களில் இதுவா அதுவா என்று இரண்டுமே இல்லாமல் போகும். இன்னைக்கு எதுவும் வாங்கி சாப்பிட முடியாது என்று கம்மங்கூழ் பாட்டியின் விரித்த கடையின் மிட்டாய்களும், மாங்காய் துண்டுகளும் நினைவில் ததும்ப அவசரமாய் ஓடினேன்.
அந்த கடைக்கோடு கிட்டதட்ட ஒரு பரலாங் தூரம் கடக்க வேண்டும் ஏதுவான மறைவிடம் வேண்டி. பின் வகுப்பறைக்கும் ஓடியாக வேண்டும். திரும்பி வரும்போது அந்த வெட்டவெளி காடு தொடங்கும் இடத்தில் கோரை கிழங்கு தோண்டித் தின்று கொண்டிருந்த குழந்தைகளாய் இரண்டாம் வகுப்பிலேயே இருந்திருக்கலாம் என்று எண்ணிக் கொண்டே வகுப்பறைக்குள் வேகமூச்சோடு நுழைந்தேன். நேரமானதை பார்வையில் உணர்த்தினார் ஆசிரியர். எல்லோரும் வந்தாச்சா என்று கேட்டு முறைத்தார். மாட்டினோம் என்றபடி கமுக்கமாக என் இடத்திற்குச் சென்று அமர்ந்தேன்.
‘அவங்க அவங்க பைகளை எடுத்துக்கிட்ட வரிசையா எல்லோரும் ஐந்தாம் வகுப்பு கட்டிடத்துக்கு போங்க’ என்று ஆசிரியர் கூற ‘ஹே’ என்ற ஆரவாரத்தோடு ஆசிரியரிடம் விடை பெற்றுக் கொண்டு அந்த கடைசி உயர்ந்த கட்டிடத்திற்காய் நடந்தோம். இந்தக் கட்டிடத்திற்காகவே சீக்கிரம் ஐந்தாம் வகுப்பிற்கு போகவேண்டும் என்று எண்ணிய நாட்களும் உண்டு. அந்த பிரம்மாண்ட கட்டிடம் தன் இரு பெரும் கரங்களால் பிள்ளைகளை ஆரத்தழுவியது. புது வகுப்பாசிரியராய் தெய்வநாயகி டீச்சர் உள்ளே அமர்ந்திருந்தார்.
மாணவர்கள் அவரைக் கண்டதும் கப்சிப்பென்று உள்ளே நுழைய, ‘வாங்க! வாங்க!!’ என்று புன்முறுவலோடு சிரித்தார். அனைவரும் ‘குட்மார்னிங் டீச்சர்’ என்று ஒருசேர உரக்கக் கூறி அவரவருக்கு பிடித்த இடம் தேடி அமர்ந்தனர். மிகவும் கறாரான ஆசிரியை. ஏற்கனவே சமூக அறிவியல் வகுப்புக்காக நான்காம் வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுத்தவர் என்பதால் பிள்ளைகள் அவரை நன்கு அறிந்திருந்தார்கள். பாடம் கவனிக்காவிடில், டஸ்டரை முகத்தில் விட்டெறிவார். கேள்விக்கு பதில் கிடைக்காவிடில் முறைத்தே கொன்றுவிடுவார். பதில் சொன்னாலும் பாராட்டெல்லாம் கிடையாது. வெறும் ‘ம்’ மட்டும்தான். அவரைப் பார்த்தாலே பயம் வந்துவிடும் எல்லோருக்கும்.
அந்த புதிய வகுப்பறையின் பெரிய பெரிய ஜன்னல்களின் வழியே சூரியன் தன் வலுவைக் காட்டிக் கொண்டிருந்தான். காற்றோட்டமும் பதிலுக்கு இசைந்து கொண்டிருந்தது. வெளியே மதிய இடைவெளிக்காக பப்ஸ் வண்டியோடு காத்திருக்கும் சைக்கிள்காரரை பார்த்தபடி , முதல் நாள் சத்துணவுக்கான வேலையின் தடபுடல் சத்தங்கள் காதில் விழ சமையல் மணம் காற்றில் விரவி மூக்கைத் துளைக்க, அதை ஆழ்ந்து உள்ளிழுத்துக் கொண்டு படிப்பதுபோல் வெறுமனே புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
உணவு இடைவேளைக்குள் மாணவர்களை முறைப்படுத்தி சற்று உயரம் குறைந்த மாணவர்கள் முன்னே படிப்படியாக உயரம் சார்ந்து வரிசை அமைக்கப்பட்டது. சத்துணவுக் கூடம் அந்தக் கட்டிடத்தை ஒட்டியே இருப்பதால் மனதெல்லாம் அந்த புது வாசத்தின் பின்னாலே அலைந்தது. ஒருவழியாக உணவிற்கான மணி கூப்பிட்டது. புத்தகப் பையையும், சாப்பாட்டுப் பையையும் தூக்கிக் கொண்டு, வெளியே தனக்கான முழு கம்பீரத்தோடு மொத்த இடத்தையும் வாரி அணைத்தபடி பிரம்மாண்டம் மாறாமல் நிற்கும் அந்த அரசமரத்தின் நிழலுக்காக ஓடினோம்.
சத்துணவு மாணவர்கள் பையை மரத்தடியில் போட்டுவிட்டு தங்கள் தட்டுடன் வரிசையாய் சத்துணவுக் கட்டிடமான எங்கள் வகுப்பறைக்குள் நுழைந்தனர். சத்துணவு இல்லாத மாணவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த சோத்து மூட்டைகளைப் பிரித்து மரத்தடியிலும், வகுப்பறையின் பெரிய திண்ணையிலும் சத்துணவு மாணவர்களுக்கான இடங்கள் போக மீதி இடங்களிலும் அமர்ந்து சாப்பிடத் துவங்கினர்.
நான் என் தோழிகளோடு மர நிழலில் சில்வர் டிபன் பாக்ஸில் இருந்த சாதத்தை ஒரு ஒரு பருக்கையாக, இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி விழுங்கினேன். கூடவே, அதற்காகவே காத்திருந்த பப்ஸ்காரரிடம் ரூபாய்க்கு ஒன்றாய் இரண்டு பப்ஸ்களை வாங்கி கடிச்சுக்க வைத்துக்கொண்டேன். சிலர் சாப்பிட்டபின் அவர் வண்டியை மொய்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு தட்டிலும் விழும் ரேசன் அரிசியின் வேகாத கொட்டை சாதம், தண்ணீர் சாம்பாருடன் மிதந்தது பார்த்தலே தெரியும் அளவிற்கு விதைவிதையாய் இருக்கும். கூடவே, எல்லாருக்கும் அவித்த முட்டையும் அவியலும். சிலருக்கு அவியல் கிடைக்காமல் போனது. அந்த பெரிய சாதம் உள்ள பாத்திரத்தை ஒல்லியான ஆயாம்மா தூக்க முடியாமல் இழுத்துக் கொண்டு வருவார். ‘லொட்டு லொட்டு’ என்று தட்டத்தில் கரண்டியின் அடி விழும். சாப்பிட எப்படியோ ஆனால் அதன் வாசம் சுற்றி இருந்த எல்லா இடங்களிலும் சாப்பிடத் தூண்டும் அளவிற்கு மணந்து கிடந்தது.
சாப்பிட்ட பின்னர் ஒவ்வொருவராய் ஓடிச் சென்று தட்டுகளுடன் கைகழுவுமிடத்தில் முட்டிக் கொண்டு நின்றனர். ஆயாம்மாவிற்கு அந்த இடத்தைப் பார்த்தலே தலை சுற்றும் அளவிற்கு முட்டைகள், பருக்கைகள், சாம்பார் என சிந்தி ஆங்காங்கே இஷ்டத்திற்கு கொட்டிக் கிடந்தது. போதாதற்கு முட்டை நசுங்கி காலில் மிதிபட்டு எல்லா இடங்களிலும் அப்பியிருந்தது. கண்டபடி வசைகளை வீசிக் கொண்டே சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள் ஒல்லி ஆயாம்மாவும், குண்டு ஆயாம்மாவும்.
எப்போதுமே அறைகுறை சுத்தம்தான். மீறிச் சொன்னால், கடிந்து கொள்வாள் ஆயாம்மா என்பது பள்ளிக்கே தெரிந்ததுதான். நேரத்தை சாக்காட்டி விட்டு அவசர அவசரமாக கூட்டிவிட்டு சென்று விடுவார். மாணவர்களுக்குத்தான் சிரமம். கீழே அமரவேண்டுமே.
உண்ட மயக்கம் எல்லார் முகத்திலும் ஒட்டி இருக்க தெய்வ நாயகி டீச்சரும் பாடம் எடுக்காமல் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்ததால், அமைதியும் கிறக்கமுமாக சில மாணவர்கள் தூங்கியே விழுந்தார்கள். டீச்சர் இருப்பதால் சற்று சுதாரித்துக் கொண்டு அவ்வப்போது எழுந்து நிமிர்ந்து அமர்ந்தனர்.
மணக்க மணக்க வந்த சாம்பார் மணம் போய், சாதம், சாம்பார், முட்டை எல்லாம் சேர்ந்து குமட்டிக் கொண்டு வருவதுபோல் ஒரு வாடை வகுப்பறை முழுவதும் அடிக்க ஆரம்பித்தது. ஆங்காங்கே காலில் மிதிபட்டு பிசுபிசுத்த பருக்கைகள் ஏதோபோல் கசகசப்பாய் தோன்றியது. மாணவர்களின் கிசுகிசுப்புகள் அதிகமாகும்போது நிமிர்ந்து பார்த்து முறைத்துவிட்டு பின் மீண்டும் புத்தகத்தினுள் புதைந்தார் ஆசிரியர். அவர் நிமிர்கையில் அடங்கிய சத்தம் மீண்டும் எழ, சலசலப்பு அதிகமாக, ‘ஏய் என்ன சத்தம்? பேசாம இருக்க முடியாதா?’ என்று அதட்டியவரிடம், ‘இல்ல டீச்சர்.. ஏதோ நாத்தம் அடிக்குது’ என்று பெண் பிள்ளைகளில் ஒருத்தி எழுந்து கூறினாள். ‘அது முட்டை எல்லாம் கொட்டிருக்கில்ல அதோட வாசமாக இருக்கும் பேசாம உக்காரு’ என்று ஆசிரயர் சிடுசிடுத்தார். வாடை அதிகமாக மாணவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கேலி செய்ய ஆரம்பித்தனர்.
ஆசிரியருக்கும் அந்த நாத்தம் அடித்தது என்ன இது? என்ன நாத்தம் என்று கேள்வியாய் புருவங்களைச் சுருக்கினார். கடைசி வரிசையில் அமர்ந்திருந்த உயரமான மாணவிகளில் சிவரஞ்சனியை தவிர்த்து மீதி நால்வரும் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொண்டு தள்ளி, சாய்ந்து, நகர்ந்து, ஒதுங்கி அமர்ந்திருந்தனர்.
‘டீச்சர் இவகிட்டதான் நாத்தம் அடிக்குது!’ என்று ஒருத்தி சொல்ல எல்லோரும் அசையாமல் அமர்ந்திருந்த சிவரஞ்சனியைப் பார்த்தார்கள். வகுப்பிலேயே உயரமான பெண் சிவரஞ்சனி நிறைய கருமையான நீண்டமுடி, மஞ்சள் பூசிய தாடை, அகன்ற சதுர வடிவ முகம் அவளுக்கு. இந்த ஊருக்கான சாயலற்று வேறு மாவட்ட சாயலில் அவளது பாவனைகள் சொற்கள் இருக்கும். பேச்சில் முழுவதுமாய் வேறு ஊர்க்காரியாய் தெரிவாள். நாக்கு நன்கு சுழன்று வராமல் சில வார்த்தைகள் கொஞ்சம் சிரமப்படும்.
சிவரஞ்சனியின் அசையாத தன்மையும் இறுக்கமும் ஆசிரியருக்கு கேள்வி உண்டாக்க, எங்கிருந்தோ காற்றில் கண்டுபிடித்து ஜன்னல் வழியாக வந்த ஈக்கள் அவளையும் அவள் பாவாடையையும் வட்டமிட்டு அமர சந்தேகம் உறுதியானது. அவளுடைய பாவாடை ஈரமாகியிருக்க பக்கத்தில் இருந்த பிள்ளைகள் பையைத் தூக்கிக் கொண்டு முன்வரிசைக்கு ஒடினர். சிவரஞ்சனி தனித்து விடப்பட்டாள். அவள் தலை கவிழ்ந்தபடி பதில் ஏதும் பேசாமல், எழாமல் அமர்ந்திருந்த நிலையில் ஆசிரியருக்கு எல்லாம் புரிந்தது. ஒரு மாணவியை அழைத்து, ‘அவங்க அம்மாவ போய் கூட்டிட்டு வா’ என்று சொல்லும்போதே சிவரஞ்சனியை ஒருதரம் கோபமும், எரிச்சலுமாய் அதை உள்ளுள் மறைத்த ஒரு வெற்றுப் பார்வையை வீசிவிட்டு கடகடவென்று வகுப்பிலிருந்து வெளியேறினார்.
மாணவர்கள் அனைவரும் மரத்தடிக்கு வந்தனர். கேலிகள் நிறைந்த இடமாக மாறி அனைவரும் வெளியேற வெறுமையை அணிந்து அந்த கட்டிடம் அவள்முன் தன் கோர முகத்தைக் காட்டியது.
‘அக்கா, M.சிவரஞ்சனி கிளாசுக்குள்ளயே ஆய் போய் வச்சுட்டா. உங்கள டீச்சர் கூட்டிடுவர சொன்னாங்க’ என்று கூறிவிட்டு அந்த மாணவி பள்ளிக்கு திரும்பினாள்.
சிறிது நேரத்தில் கையில் துடைப்பமும் மாட்டுச் சாணமுமாக, வேகமாக ஓடிவந்த சாயலாய், வேர்வை பூத்த முகத்துடன் கலக்கமாய் சிவரஞ்சனியின் தாயார் வாசலில் வந்து நின்றார். ஆசிரியர் அந்த இடத்திலேயே இல்லை. மாணவர்கள் சிவரஞ்சனியின் அம்மாவைக் கண்டதும், ‘சிவரஞ்சனி கிளாஸ்குள்ளயே ஆய் போய்ட்டா, ஆய் போய்ட்டா’ என மாறி மாறி வந்த குரல்களைத் தங்காமல் அந்த குட்டையான தடித்த தேகமுடைய அம்மா படபடப்புடன் உள்ளே ஓடினாள்.
உலகில் செய்யக்கூடாத எதையோ செய்ததைப்போல தனித்து விடப்பட்ட தன் பிள்ளையை பார்த்து அழத் தொடங்கினார். சிவரஞ்சனி பதிலுக்காய் அம்மாவிடம் அழவில்லை. பேசவில்லை. நிமிரவில்லை. அவளின் நடவடிக்கையில் அவள் அம்மா சற்று அதிர்ந்து போனார். தன் முழங்காலுக்கு கீழ் நீண்டிருந்த பாவாடையின் பின்புறத்தில் ஈரமாகவும் கசகசப்பாகவும் உணர்ந்ததால் எழ மறுத்தவளை சிரமப்பட்டு எழுப்பினார்.
வெளியில் இருக்கும் மாணவர்களின் கேலிச் சொற்களை கேட்க முடியாமல் ஆசிரியர் இருக்கும் அறையைத் தேடிப்போய் பிள்ளைகளை திரும்பி அமரச் சொல்லும்படியாய் வேண்டினார் சிவரஞ்சனியின் அம்மா.
ஆசிரியர் ஏதும் பேசிவிடுவாரோ என்று தயங்கி தயங்கி நடந்த கூனிக்குறுகி நின்ற அம்மாவின் முகத்தைத் கூட பார்க்காமல் ஆசிரியர் தலையை ஆட்டிக்கொண்டு கையசைத்து போகச் சொல்கிறார்.
மாணவர்கள் புறங்காட்டி அமர சிவரஞ்சனியை வெளியே அழைத்து வந்து பின்புறம் நிற்க வைத்துவிட்டு, முதலில் வகுப்பறையை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கட்டளையாய் வந்திருந்த வார்த்தைகளுக்காக சிவரஞ்சனியை விட்டுவிட்டு வகுப்பறையின் பெரிய படிக்கட்டுகளில் ஏற முடியாமல் முழங்காலை பிடித்தபடி ஏறினார்.
அங்கிருந்த ஈக்கள் மொய்க்க கிடந்த நரகலை பேப்பரில் எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு ஓரத்தில் வைத்து விட்டு அழுதபடி அந்த இடத்தை தண்ணீராலும் டெட்டால் போட்டும் சுத்தப்படுத்தினார். பின்பு கையோடு கொண்டு வந்த சாணம் போட்டு அந்த இடத்தை மொழுகினார். மீண்டும் சாண வாடை போக வேண்டி வகுப்பறை முழுக்க, கீழிருந்து ஏறி
இறங்க முடியாமல் எடுத்து வந்த குடத்தில் இருந்த தண்ணீரை ஊற்றி துடைப்பத்தால் அடித்து அடித்து சுத்தம் செய்தார். தண்ணீரை வெளியேற்றினால் படிக்கட்டுகளில் ஓடும் என்பதால் துணியில் பிழிந்து பக்கெட்டில் எடுத்து ஊற்றினார்.
மீண்டும் துணியைப் போட்டு குனிந்தபடி மீதி ஈரத்தையும் துடைத்து எடுத்து முடிக்க 2 மணி நேரம் ஆனது. அதன் பின்னேதான் அவ்வளவு நேரமும் தனிமையில் பின்புறமாய் நிறுத்தப்பட்டிருந்த தன் பிள்ளைக்காய் ஓடினார். காலையில் பூட்டி வைத்த, எப்போதும் பிள்ளைகளுக்காய் திறக்கப்படாத அந்த கழிவறை இப்போது திறக்கப்பட, அந்தக் கழிவறையில் அவளை அமர்த்தி குளிக்க வைத்து உடைகளை மாற்றி அனுப்பிவிட்டு பாத்ரூமையும் டெட்டால் போட்டு சுத்தம் செய்த பின்னரே அம்மா வெளியே வந்தார்.
இருவருக்குமே பேசிக்கொள்ள முடியாத வேதனை. அம்மாவின் முகம் வார்த்தைகளற்ற வலிகளின் சுருக்கங்களால் நிறைந்திருந்தது. தான் கொண்டு வந்த துடைப்பத்தையும், டெட்டாலையும் அங்கேயே வீசிவிட்டு வெறுமையைச் சுமந்து கொண்டு, தன் பிள்ளையின் கையைப் பிடித்தபடி இருவரும் நடந்து சென்றனர். ஆசையாய் காலையில் வந்த ஐந்தாம் வகுப்பு புதுக் கட்டிடத்தை கடக்கையில் மாணவர்களுக்காக திறவாத அந்தக் கழிவறையின் தகரக்கதவு காற்றில் அறைந்து அறைந்து பெரும் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது.
சிவரஞ்சனி கடைசிவரை நிமிரவே இல்லை. அவளின் மஞ்சள் முகம் இருண்டிருந்தது. நீண்ட ஆள் அரவமற்ற தெருவின் கடைசிவரை பளிச்சென்று தெரிய, அவர்கள் மெல்ல நகர்ந்து சிறு புள்ளியாய் மறைந்ததையே கண் கொட்டாமல் பார்த்தபடி நின்றேன். ‘ஏய்! அங்க என்ன வேடிக்கை?’ என்றதில் திடுக்கிட்டு சுத்தம் செய்த வகுப்பறைக்குள் ஓடினேன்.
அடுத்தடுத்த நாட்களில் அவளுக்காக காத்திருந்தேன். அதன் பிறகு சிவரஞ்சனி பள்ளிக்கு வரவே இல்லை!
******
கதைக்குள் மிகவும் ஒன்றிப்போய் படித்தேன். கதைச் சொல்லியை போல ஒரு கனவிலிருந்து சட்டென்று திடுக்கிட்டு மீண்டவன் போல அந்த சிவரஞ்சனியை நினைத்துக் கொண்டேயிருக்கிறேன். எழுத்தாளருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!