
எழுத்தாளரின் மனம் இயங்கும் விதம்
எழுத்தாளர் இரா.முருகனின் எழுத்து அறிமுகம் எனக்கு அம்ருதா பதிப்பகம் வெளியிட்ட “முத்துக்கள் பத்து” என்ற அவரின் முத்தான சிறுகதைகளின் தொகுப்பு மூலமே. பிறகு தொடர்ந்து அவரை வாசிக்க இயலாது போயிற்று. தேடலின் பல்திசைகளில் பறப்பது தானே பொது வாசக மனதின் பேராசை. தற்போது வாசகசாலை நடத்திய இரா.முருகனின் “நண்டுமரம்” சிறுகதைத் தொகுப்பு கலந்துரையாடலுக்காக வாசிக்க துவங்கினேன். வாசிப்பும், அதைத் தொடர்ந்த வாசக பார்வையும் எழுத்தாளரின் சந்திப்பும் இதனை எழுத தூண்டிய வினையூக்கி எனலாம்.
இக்கதைத் தொகுப்பில் எனக்குத் தெரியும் பொதுத் தன்மை முதலில் ஒரு இந்திய மனம் சிந்திக்கும் விதம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. கதாசிரியர் பல நாடுகளில் தனது கதைக்களங்களை அமைத்துள்ளார். ஆயினும், ஒரு இந்திய மனம் தனது அடிப்படை இந்திய தத்துவவியல் மற்றும் உளவியல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே சிந்திக்கும், அலசும் மற்றும் அதன் சார்பிலேயே முடிவுகள் எடுக்கும் என்பதை உணர முடிகிறது. குறிப்பாக “கல்லத்தி” கதையில் கதை சொல்லி தான் வேலை பார்க்கும் தாய்லாந்திலிருந்து குலதெய்வம் கும்பிட வந்திருக்கிறார். அந்நேரத்தில், அவரின் வீட்டிற்குள் இராணுவம் நுழைய காத்திருக்கும் செய்தி அவரை எட்டுகிறது. கதை சொல்லி இங்கு சாமி கும்பிடுவதற்கும், இன்னபிற குட்டி குட்டி நற்செயல்களுக்கும் அயல்நாட்டில் ஒரு நன்மையை எதிர்பார்க்கும் மனம், “கர்மா விதி” யை அடிப்படையாக கொண்டு சிந்தித்தலை காட்டுகிறது.
மேலும் “திரை” கதையில் வரும் நடேசன் வாழ்வில் அவரை அலைக்கழிக்கும் கர்மாவின் வட்டம்.
இக்கதைகளில் பெண்கள் சார்பாக கதாசிரியரின் பார்வையும் புதுமையானதே. அது பெண்களை அவர்தம் செயல்களை எவ்விதத்திலும் எடைபோடவில்லை. அதற்கு பதிலாக தனிப்பேச்சுகள் மூலமாகவும், அவர்களது உரையாடல்கள் வழியாகவும் நம்முன் வைக்கிறார். இதிலிருந்து உலகம் முழுவதும் உள்ள பெண்களின் நிலையில் பெரிதாக ஒரு வேறுபாடும் இல்லை என்பதும் இவ்வுலகமயமாக்கப்பட்ட நூற்றாண்டுகளிலும் வீட்டுப் பெண்கிளிகள் கூண்டில் பழங்கொத்துவது, கூண்டினை பராமரிப்பது மட்டுமல்லாது வெளியில் பறந்து திரிந்து பழம் கொணர்வதும், கூண்டினை பராமரிப்பதும் கொணர்ந்த பழங்களின் ஏடிம் பின் தெரியாதிருப்பதும் பெண்களின் தலையாய கடமை என்றாகிறது. மேலும் சாமி வந்து இறங்கி அமானுஷ்ய டப்பிங் குரலில் தான் கறிசோறே அம்மாவிடம் கூட கேட்க முடிகிறது (கல்லத்தி) ஆணின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத அவர்கள் புளிக்குழம்பு வைக்கத் தெரியாதவர்களாகி விடுவது சகஜமாக நடக்கிறது.
“மீனாக” கதையில் வரும் நாயகியின் மூன்று மாத குழந்தை இறந்து விடுகிறது. அவளது பால்கட்டிய மார்பின் வலியையும், இறுகி கட்டியாக நிற்கும் மனதின் வலிகளையும் கதாசிரியர் கணிக்கும், எழுதும் பாங்கு உளம் கவர்வது.
அதே நேரம் “கல்லத்தி” கதையின் குறியீடாக வரும் பலி கேட்கும் கிராம தேவதை, தன் திறமைகளை விட உடலை, கடமையை நேசிக்கும் காதல் கணவனை நேசிக்கும் அண்ணி (அண்ணன் அண்ணி கதை) வேறு ஒருவனுடன் ஓடும் போதும் அன்றி சாகும் போதும் குழந்தைகளுடனே செல்லும் பெண்கள் நிறை உலகம் இரா.முருகனுடையது.
பெண்மையை, பெண்ணின் உளவியலை மிக நெருக்கமாக உற்று பார்த்து நம் முன்வைக்கிறார் கதாசிரியர்.
அரசியல் முன்வைப்பை, பகடியுடன் இன்னொரு குதிரை (இந்திய கவுன்சிலர் தேர்தல்) மற்றும் நண்டு மரத்தில் (ஸ்காட்லாந்து கவுன்சிலர் தேர்தல்) செய்கிறார். அரசியலில் வழங்கப்படும் பொய் வாக்குறுதிகள், தேர்தல் கால சலுகைகளின் பட்டியல், யதார்த்தங்களின் பகடி என்றால் மிகையில்லை.
கதைக்களம், அவற்றின் புதுமை, பெரும்பாண்மை. ஒன்றுக்கொன்று வேறுபடும் விதம், மனிதர்கள் அதிகாரத்தின் கையில் கணிப்பொறியாவதோ” அன்றி அதிகாரம் மனிதர்களை கடவுளாக்குவதோ தொடர்ச்சியாக கதைகளில் பிரதிபலிக்கப்படுகிறது. எழுத்தின் வீர்யம் காலங்கடந்த பின்னும் நம்மை பாதிக்கிறதா இல்லையா என்பதே ஒரு எழுத்தாளரின் வெற்றி. இச்சிறுகதைத் தொகுப்பு பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட கதைகள் அதன் புத்துயிர்ப்பினை, இன்று மனிதம் இருக்கும் பரிதாபமான நிலையிலும் இக்கதைகளை தொடர்புறுத்தி பார்க்கும் போது அவ்வழகியல் நிகழ்கிறது.
உதாரணமாக கதை சொல்லும் உத்தி “வாக்குமூலம்” கதையில் வரும் மோனோ ஆக்டிங் உத்தி, ஓட்டுநரின் குரலில் கதையின் மாந்தர்களும் கதை நிகழ்வும் கண்முன் விரியும் காட்சிகள் அழகானவை.
சிறுகதைக்கென ஒரு வடிவம் இருப்பதாக நான் நம்புகிறேன். அவற்றின் ஒரு முக்கிய அம்சமாக சில அல்லது ஒரே ஒரு கொண்டை ஊசி வளைவையாவது எதிர்நோக்கும் வாசக மனம் என்னுடையது, ஆனால் இவரின் பெரும்பான்மை கதைகள் கொண்டை ஊசி வளைவுகளின்றி தேசிய நெடுஞ்சாலையாக உலா வருகிறது. அதற்காக சுவாரஸ்யம் குறைவு என்று எடுத்துக் கொள்ள முடியாது.
இரா.முருகன் தொடர்ந்து வாசிக்கவும், அவர் எழுத்துக்களை நேசிக்கப்படவும் வேண்டிய எழுத்தினை வனைந்திருக்கிறார். தொடர்ந்து வாசிப்போம்.