
ஏகச்சக்கரவர்த்தினியின் பொழுதுகள்
தன்னைச் சார்ந்தவையெல்லாமே பெருஞ்சுகமென்று கருதியபடி சிலநூறு சதுர அடிக்குள் வீழ்ந்து எழுந்து உலாவுதல் அவளுக்குப் பிடித்திருக்கிறது ….
இன்னும் கடத்த வேண்டிய வாழ்க்கைக்காக நுகத்தடிகளின் நசுக்கலைக்கூட உதடுகுவித்து ஊதிவிடப் பழகிவிட்டாள்….
மடியணைந்த சூட்டில் அரைக்கண் மூடித் தூங்கும் பூனையைத் தடவும் போது உதிர உதிரத் தீர்வதில்லை அவள் புன்னகை….
முன்னொரு நாளில் பூஞ்சிறகுகட்டி தட்டாங்கல் ஆடியவள் தான்
காலம் விழுங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டே வெங்காயத்தைப் பொடிப் பொடியாய் நறுக்குகிறாள்….
கலாய் போடப் போவதாகச் சொல்லி இட்லிகுண்டாவை
இடுப்பிலேற்றி அடகுக்காரன்
கடையில் காசாக்கியதை சோற்றில் மறைத்து புளிக்குழம்பை ஊற்றுகிறாள்…
காலில் உருட்டைத் தண்டை இல்லாத நாட்களில் அடுத்த வீட்டுக்கும் போக மறுக்கிறது அவளின் கொற்றவை மிடுக்கு..
மூட்டிய அடுப்பில் முற்றும் அழியாத அசுர பலம் கொண்டு பரிமாறிப் பரிமாறி பொருட்களோடு தெள்ளிய ஞானப் பெருமைகளையும்
தூசுதட்டி ஒழுங்கு படுத்துகிறாள் …
தனிமைக் காலங்களில் கட்டுடைத்த காதலுடன் மழைநீரை உள்ளங்கையில் ஏந்தியவாறு பாரதி பாடலை முணுமுணுக்கிறது அவளின் சுயம்….
காலில் கயிறொன்றைக் கட்டியபடி ஒரு ரூபாய் காசுக்கு தும்பிக்கை உயர்த்தும் யானையைப் பார்த்தால் மட்டும் ஏனோ கழுத்துச் சங்கிலியைத் தவறாமல் தொட்டுப் பார்த்துக் கொள்கிறாள் … !!