சிறுகதைகள்

“சரியென்று சொல்லிவிடு” -சிறுகதை- டோபியாஸ் உல்ஃப் : தமிழில்- கயல்

 

அவர்கள் பாத்திரங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவனுடைய மனைவி பாத்திரங்களை கழுவிக் கொண்டும், அவன் அதை உலர வைத்துக் கொண்டும் இருந்தனர். அதற்கு முந்திய இரவு அவன் பாத்திரங்களைக் கழுவினான். அவனுக்கு தெரிந்த பல ஆண்களைப் போல இல்லாமல், அவன் உண்மையாகவே வீட்டு வேலைகளில் உதவுபவன். சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவியின் தோழி அவள் கணவனை, புரிதல் உள்ள கணவன், எனப் பாராட்டுவதை கேட்க நேர்ந்தது. நாமும் முயற்சிக்கலாமே என்று அவன் நினைத்தான் பாத்திரங்களைக் கழுவுவது, அவளுக்கு உதவுவது; தான் எவ்வளவு புரிதல் உள்ளவன், எனக் காண்பிப்பதற்கான ஒரு வழி என்று அவன் நினைத்தான்.

அவர்கள் பல விஷயங்களைக் குறித்து பேசினார்கள் பேசிக்கொண்டே வந்து  எப்படியோ “வெள்ளையர்கள் கருப்பின மக்களைத் திருமணம் செய்யலாமா?” என்ற தலைப்பில் புகுந்தார்கள். எல்லா விஷயங்களையும் யோசித்துப் பார்க்கையில், அது ஒரு மோசமான கருத்து என்று அவன் சொன்னான்.

“ஏன்?”என்று அவள் கேட்டாள்.

சில சமயங்களில் அவனுடைய மனைவி தன் புருவங்களை முடிச்சிட்டது போல ஆக்கி தன்னுடைய கீழ் உதடுகளைக் கடித்தபடி எதையாவது முறைத்துப் பார்ப்பாள். இப்படியான ஒரு தோற்றத்தில் அவளைப் பார்க்கிற போது அவன் தன்னுடைய வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்று அறிந்திருந்தான். ஆனால் அப்படி ஒருபோதும் இருக்க மாட்டான். உண்மையில் அது அவனை இன்னும் அதிகம் பேச வைத்தது. இப்போது அவளிடம் அந்த தோற்றம் உருவாகியிருந்தது. தன் கையை ஒரு பாத்திரத்திற்குள்  வைத்துக் கொண்டு, அதைக் கழுவாமல் தண்ணீருக்கு மேலே வைத்தபடி நின்று “ஏன்?” என்று மறுபடி கேட்டாள். 

“கவனி.  நான் கருப்பின மக்களுடன் பள்ளிக்குச் சென்று இருக்கிறேன், அவர்களுடன் பணிபரிந்திருக்கிறேன் நாங்கள் எல்லோரும் மகிழ்வாகத் தான் இருந்திருக்கிறோம். நீ இப்போது வந்து நான் ஒரு இனவெறியாளன் என்று சுட்டிக் காட்டத் தேவையில்லை” என்றான்.

”நான் எதையும் சுட்டிக் காட்டவில்லை” என்று சொல்லிக்கொண்டே பாத்திரங்களை மறுபடி தூய்மை செய்யத் துவங்கினாள். தன் கைகளில் பாத்திரத்தை வைத்து அவள் ஏதோ அதனை வடிவ மாற்று செய்வது போலத் திருப்பினாள்.” ஒரு வெள்ளையர் கருப்பினத்தவரைத் திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான்” என்றாள்.

“அவர்கள் நம்மைப் போன்ற அதே கலாசாரத்தில் வாழ்ந்தவர்கள் இல்லை. அவர்கள் பேசுவதை எப்போதாவது கேள். அவர்களுக்கு என ஒரு சுயமான மொழி கூட இருக்கிறது. அது பற்றி எனக்கு பிரச்சினை இல்லை. அவர்கள் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன்” அவன் அதைக் கேட்டு வைக்கிறான். ஏதோ காரணத்துக்காக அது அவனுடைய மனநிலையை மகிழச் செய்தது.

“ஆனால், அது வேறு. அவர்களுடைய கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒருவரும்  நம்முடைய கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒருவரும் நிச்சயமாக ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவே முடியாது”.

“நீங்கள் என்னை அறிந்தது போல?” என்று அவன் மனைவி கேட்டாள்.

“ஆமாம். நான் உன்னை அறிந்தது போல”

“ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசித்தால்?” என்றாள் அவள். இப்போது அவள் அவனைப் பார்க்காமல் பாத்திரங்களைத் துரிதமாக தூய்மை செய்தாள்.

அடக் கடவுளே! என்று நினைத்தவன், “நான் சொல்வதை நீ நம்பத் தேவையில்லை. புள்ளி விவரங்களைப் பார்த்தால் அத்தகைய திருமணங்கள் பெரும்பாலும் முறிந்துவிடுகின்றன என்பது உனக்கே தெரியும்” என்றான்.

“சரி. அப்படியானால், அயல்நாட்டவர்? இரண்டு அயல்நாட்டவர் திருமணம் செய்து கொண்டாலும் கூட நீங்கள் இதையே தான் நினைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்”  என்றாள். 

“ஆமாம் .உண்மையில் நான் அப்படி தான் நினைப்பேன். முழுக்க முழுக்க வெவ்வேறு பின்புலத்தில் இருந்து வருகிற ஒருவரைப் பற்றி நாம் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?” என்றான்.

“வேறு விதமான பின்புலம் . அதாவது நம்மைப் போல அல்லாமல்”  என்றாள் அவன் மனைவி.

“ஆம். வேறு பின்புலம்” தான் சொல்வதை உணர்ச்சியின்றி பாசாங்கு செய்வதைப் போல ஒலிக்குமாறு திரும்பச் சொல்கிற அவளுடைய தந்திரம் அவனைக் கோபமூட்டியது. ஆகவே, அவன் இடையில் புகுந்து பாத்திரங்களைப் பற்றினான். 

“இவை எல்லாம் அழுக்காக இருக்கின்றன” என்று சொல்லி, எல்லா வெள்ளிப் பாத்திரங்களையும் மறுபடி பாத்திரம் கழுவும் தொட்டிக்குள் போட்டான். 

தண்ணீர் சாம்பல் நிறத்தில் மாறி இருந்தது. அவள் அவற்றை முறைத்துப் பார்த்தாள். அவளுடைய உதடுகள் ஒன்றையொன்று இறுக்கமாக அழுத்திக் கொண்டிருந்தன. பிறகு தன்னுடைய கைகளை அவற்றின் மேற் தளத்தில் சரிய விட்டவள் “ஓ” என்று துள்ளியபடி அழுதாள். தன்னுடைய இடது கையை இடுப்பின் மீது வைத்துக் கொண்டாள். அவளுடைய கட்டைவிரலில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

“ஆன் நகராதே, அப்படியே இரு” என்றான் அவன். மேலே குளியலறைக்குள் ஓடிச் சென்று மருத்துவ பெட்டியைக் குடைந்து கிருமிநாசினி, பஞ்சு, பேண்ட் எய்ட்  முதலியவற்றை எடுத்துக்கொண்டு கீழே வந்தான். கீழே வந்து பார்த்தபோது அவள் கண்களை மூடிக்கொண்டு குளிர்சாதனப் பெட்டியின் மீது சாய்ந்து இருப்பதையும், இன்னமும் தன்னுடைய கைகளை இடுப்பின் மீது வைத்துக் கொண்டு இருப்பதையும் பார்த்தான். அவன் அவளுடைய கையை எடுத்து கட்டைவிரலைச் சுற்றி பஞ்சைக் கட்டினான். ரத்தக் கசிவு நின்றுவிட்டது.  அது எவ்வளவு ஆழமான காயம் என்பதைப் பார்ப்பதற்காக அதை அழுத்தினான். நடுக்கத்துடன் அடர்வான ஒரு துளி ரத்தம் கீழே விழுந்தது. அவள் அவனைக் குற்றம் சாட்டும் பாவனையில் பார்த்தாள்.

“அவ்வளவு ஒன்றும் ஆழம் இல்லை. அது இருந்தது என்பது கூட நாளை உனக்குத் தெரியாது” என்றான் அவன். அவன் எவ்வளவு வேகமாக அவளுக்கு  உதவி செய்ய ஓடி வந்தான் என்பதை

அவள் பாராட்டுவாள் என்று நம்பினான். அவள் மீதான அக்கறையில் அவன் அவ்வாறு நடந்து கொண்டானேயொழிய அதற்கான எந்தப் பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவில்லை. அவள் மறுபடியும் அந்தப் பேச்சைத் துவங்காதிருப்பது ஒரு நல்ல செயல்  என்று அவன் நினைத்தான். ஏனெனில், அவன் அதனால் களைப்படைந்து விட்டிருந்தான். 

“நான் மீதிப் பாத்திரங்களை தூய்மைப் படுத்தி விடுகிறேன். நீ சென்று ஓய்வு எடு”  என்றான்.

“பரவாயில்லை. நான் அவற்றை உலர்த்துகிறேன்" என்றாள் அவள். அவன் பாத்திரங்களை மறுபடி தூய்மை செய்யத் துவங்கினான். முள் கரண்டிகளுக்கு மிக அதிக கவனத்தைத் தந்தான்.

“ஆக, நான் கருப்பினத்தவளாக இருந்திருந்தால், நீங்கள் என்னை மணம் செய்து கொண்டிருக்க மாட்டீர்கள்?”

“ஓ! கடவுள் மேல் ஆணையாக……”

“ஆமாம். நீங்க சொன்னது அதுதானே! இல்லையா பின்னே? “ என்றாள்.

இல்லை. நான் அப்படி சொல்லவில்லை. மொத்தமாக இந்தக் கேள்வியே மடத்தனமானது. நீ கருப்பினத்தவளாக இருந்திருந்தால் ஒருவேளை நாம் சந்தித்தேகூட இருக்க மாட்டோம். உனக்கு, உன்னுடைய நண்பர்கள் இருந்திருப்பார்கள். எனக்கு, என்னுடைய நண்பர்கள் இருந்திருப்பார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரே கருப்பினப் பெண் என்னுடைய பேச்சாளர் குழுவில் இருந்த என்னுடைய கூட்டாளி………… தான். நான் அதற்குள் உன்னுடன் வெளியே செல்லத் துவங்கி இருந்தேன்”

“ஆனால், நாம் ஒரு வேளை சந்தித்து இருந்திருந்தால்? நான் கருப்பினத்தவளாக இருந்து இருந்தால்?”

“அப்படியானால் நீ ஒரு கருப்பின ஆணுடன் வெளியே சென்று கொண்டு இருந்திருப்பாய்” அலசுகின்ற முனையை எடுத்து வெள்ளிப் பாத்திரத்தின் மீது தெளித்தான். அந்த உலோகம் கருத்து, பிறகு வெளிர் நீலமாகி மறுபடியும் வெண்ணிறமாக மாறும் அளவுக்கு தண்ணீர் மிகவும் சூடாக இருந்தது.

“நான் அப்படிச் செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம்” என்றாள்.  “நான் கருப்பினத்தவள், வேறு யாரையும் காதலிக்கவில்லை , நாம் சந்திக்கிறோம், காதலில் விழுகிறோம். என்று வைத்துக்கொள்வோம் “

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அவனை கவனித்துக் கொண்டிருந்தாள். அவருடைய கண்கள் பிரகாசமாக இருந்தன.

” இங்கே பார்”  “இது முட்டாள்தனம் நீ கருப்பினத்தவளாக இருந்திருந்தால், நீ, நீயாக இருக்க மாட்டாய்” என ஒரு நியாயமான தொனியில் அவன் சொன்னான். அவன் அதைச் சொன்ன போது, அது முற்றிலும் உண்மை என்று உணர்ந்தான். அவள் கருப்பினத்தவளாக இருந்தால் அவள் அவளாகவே இருக்க மாட்டாள் என்ற உண்மையைப் பற்றி விவாதிப்பதில் எந்தவிதமான பலனும் இல்லை. ஆகவே, அவன் அதை மறுபடியும் சொன்னான் “கருப்பினத்தவளாக இருந்தால் நீ, நீயாக இருக்க மாட்டாய்”

“எனக்குத் தெரியும். ஆனால் சும்மா சொல்லிப் பார்ப்போம்” என்றாள் அவள். அவன் மூச்சை ஆழமாக உள்ளிழுத்தான். அவன் அந்த வாக்குவாதத்தில் வெற்றி அடைந்து விட்டான். ஆனாலும், அவள் மீதான அக்கறையோடு "என்ன சும்மா சொல்லிப் பார்ப்போம் “ என்று கேட்டான்.

“அதாவது நான் கருப்பினத்தவள். ஆனால் நான் நானாகவே இருப்பேன். நாம் இருவரும் காதலிக்கிறோம். நீ என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?”

 அவன் அதைப் பற்றி சிந்தித்தான். அவள் அவன் அருகில் நெருங்கினாள். அவளுடைய கண்கள் இப்போது இன்னும் பிரகாசமாக இருந்தன. 

“நீ என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?”

“நான் யோசிக்கிறேன்” என்றான் அவன்.

“நீ திருமணம் செய்து கொள்ள மாட்டாய். என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். நீ ‘இல்லை’ என்று தான் சொல்லப் போகிறாய்”.

 “நீயே இப்படி சொல்கிறாய் என்பதால்……”

“இனியும் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. ஆமாம் அல்லது இல்லை. இரண்டில் ஒன்று சொல்”

 “இறைவா, ஆன்! இல்லை என்பதே என் பதில்”

“நன்றி” என்றாள் அவள். சமையலறையிலிருந்து வாழும் அறைக்கு சென்றாள். சில நிமிடங்களுக்குபிறகு அவள் ஒரு பத்திரிக்கையின் பக்கங்களைப் புரட்டும் சத்தத்தைக் கேட்டான்.

அவள் அதைப் படிக்கும் நிலையில் இல்லாமல் மிகுந்த கோபத்துடன் இருக்கிறாள் என்று அவனுக்கு தெரியும். ஆனால், இந்த மனநிலையில் அவன் இருந்திருந்தால் எப்படி செய்வானோ அதைப்போல அவள் அந்தப் பக்கங்களை வேகமாக தள்ளவில்லை. ஒவ்வொரு சொல்லாக படிப்பதைப்போல அவள் மிக மெதுவாக அவற்றை திருப்பினாள். தன்னுடைய அலட்சியத்தை அவனுக்கு காட்சிப்படுத்தினாள். அது என்ன விளைவை அவன் மீது ஏற்படுத்த வேண்டும் என்று அவள் நினைத்தாளோ, அதை உருவாக்கியது. அது அவனை காயப்படுத்தியது.

அவள் மீதான தன்னுடைய அலட்சியத்தை காண்பிப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அமைதியாக, மீதமிருந்த மற்ற பாத்திரங்களை அவன் தூய்மை செய்தான். பிறகு அவற்றை உலர்த்தினான்; அடுக்கி வைத்தான். விளிம்புகளையும் அடுப்பையும் துடைத்தான். ரத்தத் துளி விழுந்திருந்த இடத்தில், லினோலியத்தைக் கொண்டு தூய்மைப் படுத்தினான். அதைச் செய்யும்போது தரை மொத்தத்தையும் தூய்மை செய்து விடலாம் என்று முடிவு செய்தான். அதைச் செய்து முடித்த பிறகு, அவர்கள் முதல் முதலில் இந்த வீட்டை வந்து பார்த்தபோது, அவர்கள் இங்கு வந்து வாழத் துவங்கும் முன் எப்படி இருந்ததோ, அவ்வளவு புதிதாக சமையலறை இப்போது காட்சி அளித்தது.  

குப்பைகளை அதற்கான வாளியில் அள்ளிக் கொண்டு வெளியே சென்றான். இரவு, தெளிவாக இருந்தது. அவன் மேற்கு திசையில் சில விண்மீன்களை பார்த்தான். அவை நகரத்தின் வெளிச்சத்தில் மங்கிவிடாமல் இருந்தன. எல் கேமினோவில் போக்குவரத்து நிலையாக, மிதமாக ஒரு நதியைப் போல அமைதியாக இருந்தது. தன்னைத் தன் மனைவி, ஒரு சச்சரவுக்குள் இழுத்து

விட்டதற்காக அவன் அவமானமாக உணர்ந்தான். இன்னும் ஒரு முப்பது ஆண்டுகளுக்குள் அவர்கள் இருவரும் இறந்து விடுவார்கள். பிறகு மற்ற எல்லா விஷயங்களும் என்ன பொருள்படும்? அவர்கள் இருவரும் கழித்த வருடங்களைப் பற்றி அவன் நினைத்தான் .அவர்கள் எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தார்கள், ஒருவரை ஒருவர் எவ்வளவு நன்றாக அறிந்திருந்தார்கள்

என்றெல்லாம் நினைத்தான். மூச்சுவிட முடியாத அளவுக்கு அவனுடைய தொண்டை இறுகியது. அவனுடைய முகமும் கழுத்தும் கூச்சம் கண்டது. வெம்மை அவனுடைய நெஞ்சில்  வெள்ளமெனப் பெருகியது. இந்த எல்லா உணர்வுகளையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்தபடி அவன் அங்கேயே சிறிது நேரம் நின்றான். பிறகு குப்பை வாளியை கையில் எடுத்துக்கொண்டு பின்புற கதவு வழியாக வெளியே சென்றான்.

தெருவில் இருந்த இரண்டு கலப்பின நாய்கள் குப்பைக் கலனில் இருந்து குப்பைகளை மறுபடி வெளியே இழுத்துப் போட்டு இருந்தன. அதில் ஒன்று தரையில் படுத்து உருண்டு கொண்டிருந்தது. இன்னொன்று தன்னுடைய வாயில் எதையோ வைத்து இருந்தது. உறுமியபடி அதைக் காற்றில் தூக்கி வீசி பிறகு எம்பிக் குதித்து அதைப் பிடித்து, தன்னுடைய தலையை ஒருபுறமும் மற்றொரு

புறமுமாக அசைத்து மறுபடி உறுமியது. அவன் வருவதைப் பார்த்ததும், அவை சிறிய அடிகளுடன் தளுக்காக தங்கள் பயணத்தைத் துவக்கின. வழக்கமாக அவன் அவற்றின் மீது கற்களை வீசுவான். ஆனால், இந்த முறை அவற்றை விட்டு விட்டான். அவன் மீண்டும் வீட்டுக்குள் திரும்பி வந்தபோது வீடு இருளடைந்து இருந்தது. அவள் படுக்கை அறையில் இருந்தாள். அவன் படுக்கை அறைக்கு வெளியே நின்று அவளுடைய பெயரை சொல்லி கூப்பிட்டான். பாட்டில்கள் கிளிங் என்ற ஓசையை எழுப்புவதைக் கேட்டான். ஆனால் அவள் பதில் சொல்லவில்லை.

“ஆன். நான் மிகவும் வருந்துகிறேன்.நான் இதை சரி செய்வதாக உனக்கு உறுதி அளிக்கிறேன்” என்றான்.

“எப்படி?” என்றாள்.

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. அவளுடைய குரலில் ஒலித்த கண்டிப்பான தொனி அவனுக்கு விசித்திரமாக இருந்தது. ஆகவே தான் சரியான பதிலைச் சொல்லி ஆகவேண்டும் என்று அவன் அறிந்து கொண்டான். கதவின் மீது சாய்ந்தபடி “நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்” என்று கிசுகிசுத்தான்.

“பார்க்கலாம். படுக்கச் செல்லுங்கள். நான் ஒரு நிமிடத்தில் வெளியே வந்து விடுவேன்” என்றாள் அவள்.

அவன் உடைகளைக் களைந்து உறைகளுக்கு கீழே படுத்தான். இறுதியாக குளியல் அறையின் கதவு திறந்து மூடுவதை அவன் கேட்டான்.

“விளக்கை அணையுங்கள்” வரவேற்பறையின் பாதி வழியில் அவள் சொன்னாள்.

“என்ன?”

“விளக்கை அணையுங்கள்”

அவன் படுக்கைக்குப் பக்கத்தில் இருந்த விளக்கின் சங்கிலியை எட்டி இழுத்தான். அறை இருள் அடைந்தது “சரி” என்றான் அவன். அவன் அங்கே படுத்து இருந்தான் ஆனால் எதுவும் நிகழவில்லை “சரி” என்று அவன் மறுபடியும் சொன்னான். பிறகு அறையில் ஒரு அசைவைக் கேட்டு அவன் எழுந்து உட்கார்ந்தான். ஆனால் அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. அந்த அறை அமைதியாக இருந்தது. 

இருளில் ஏற்பட்ட அந்த ஓசையால் அவன் இப்போது விழித்திருக்கையில், அவர்களுடைய முதலிரவில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது அவனுடைய இதயம் துடித்தது போல, மறுபடியும் இப்போது துடித்தது. அந்த வீட்டுக்குள் அன்னியர் ஒருவர் உலவுவதைப் போன்ற அந்த சத்தத்தை மறுபடி கேட்பதற்காக அவன் காத்திருந்தான்..

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. Tobias Wolff தமிழில். ஆஹா. வழக்கம் போல் அவரது பாணியில், வெளிப்படையாய் எதுவும் சொல்லாமல், ஆழமான உணர்வுகளைச் சொல்லும் கதை. வெள்ளைக்காரர்கள் அவர்கள் மட்டுமே இயல்பானவர்கள் என்று நினைத்துக் கொள்வார்கள். எப்படி கருப்பினத்தவரை காதல் செய்ய முடியும் என்ற கேள்வியிலேயே எல்லாம் அடங்கிவிடுகிறது. இரண்டாவது ஆணாதிக்க மனம். மனைவிக்கு உதவி செய்வதும் இயல்பாக வருவதில்லை. சின்ன ஊடலுக்குப்பின் வரும் கடைசி பத்தி கவிதை. துல்லியமான மொழி பெயர்ப்பு. வாழ்த்துக்கள் கயல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button