
‘க்ரீச்ச்ச்ச்ச்ச்’ என்ற பெரும் பிரேக் சத்தத்துடன் அந்த காரும், பைக்கும் நூலிழையில் இடித்துக் கொள்ளாமல் ஒன்றையொன்று பக்கவாட்டில் உரசி நின்றன.
‘வாட் தி ஃபக். பாஸ்டர்ட்’ — கத்தினான் காரை ஓட்டி வந்தவன்.
‘த்தா தே*** மவனே’ — இது பைக் ஓட்டிவந்தவன்.
‘பைக் தானே ஓட்டுற, ஃபிளைட் இல்லயே’
‘பக்கத்துல ஃபிகர் இருந்தா கண்ணு தெரியாதே, ரோட்டை பாத்து ஓட்டுடா’
இருவரும் ஒரே நேரத்தில் திட்டிக்கொண்டனர். காருக்குள்ளே அருகில் உட்கார்ந்திருந்தவள் பொங்கி எழுந்த ஏளனச் சிரிப்பை அடக்காமல் கலகலவென சிரித்தாள்.
இருவரும் சில நொடிகள் வாய்ச்சண்டை போட்டுக்கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் இருவரையும் ஒரு புழுவைப் பார்ப்பது போல பார்த்தாள். கண்களில் திமிர், ஏக்கம், விரக்தி, ஏமாற்றம் கலந்த கலவையாக சிந்தனையில் இருந்தவாறே அவர்களை கவனித்துக் கொண்டிருந்தாள்.
இதற்குள் பின்னால் உருவாகியிருந்த மினி டிராஃபிக் ஜாம் தொடர்ச்சியாக ஹாரன் எழுப்பி இவர்கள் சண்டையைத் தொடர விடாமல் செய்ய, கார் கிளம்பியது. சில நொடிகள் பதட்டம் அடங்க காத்திருந்தவன் கண்களில் கேள்வியுடன் இவளைப் பார்த்தான். ‘அவன் திட்டுறான், நீ அப்படி சிரிக்கிற’ எனும் தொனியில் இருந்தது அந்த பார்வை.
‘நீங்க ரெண்டு பேரும் முதல்ல ஒரே வார்த்தையைத்தான் வெவ்வேற மொழியில சொல்லித் திட்டிக்கிட்டீங்க. ஆனா, உங்க ரெண்டு பேரைத் திட்டிக்காம அவங்கவங்க அம்மாவைத்தான் திட்டுனீங்க, குற்ற உணர்வே இல்லாம ரொம்ப சுலபமா. ஒரு பொண்ணைப் பத்தி தப்பா பேசாம ஒரு ஆணோட நாள் முடியறதே இல்லல்ல’ – சிவந்திருந்த உதட்டில் இன்னும் சிரிப்பும் நக்கலும் மாறவில்லை.
பதிலுக்கு அவனும் சிரித்தான். ஆனால், எதுவும் பேசவில்லை.
‘நீங்க எதுக்கு சிரிக்கிறீங்கன்னு புரியுது. நான் போய் இதை சொல்றேனேன்னு உங்களுக்குக் கொஞ்சம் கிண்டலாதான் இருக்கும். உங்க தப்பு இல்லை, இந்த உலகம் மனுஷனை மையமா வைச்சு சுழல ஆரம்பிச்ச காலத்துல இருந்தே இப்படிதான்’
‘ஐயையோ. நான் அதுக்கு சிரிக்கல, நீ தப்பா எடுத்துக்காத… சும்மாதான் சிரிச்சேன்’
‘பதறாதீங்க. இது ஒன்னும் புதுசு இல்ல’ என்று சொல்லிவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பினாள்.
‘புரியல. இப்போ என்னாச்சு?’
மீண்டும் பார்வையை அவன் பக்கம் திரும்பியவள், ‘ஒருவிஷயம் சொல்லவா? உலகத்தோட முதல் ஆணும், பெண்ணும் சாப்பாட்டுக்கு வேட்டையாடித் திரிஞ்ச நேரம் போக மீதி நேரம் எல்லாம் செக்ஸ் மட்டும்தானே பொழுதுபோக்கா இருந்திருக்க முடியும். அவங்க பசங்க, பசங்களோட பசங்கன்னு வளர வளர, ஆண்கள் வேட்டையாடுறதையும், பெண்கள் வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக்கறதுன்னு பரஸ்பரம் முடிவு செஞ்சப்போ அந்த சமூகத்துல எவனோ ஒருத்தன் அந்த சிஸ்டத்தையே தப்பா புரிஞ்சிகிட்டு, பொண்ணுங்களை வெறும் மூடுக்காக மட்டும் பார்க்க ஆரம்பிச்சப்போவே இதெல்லாம் ஆரம்பிச்சுடுச்சுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதுக்கு அப்புறம் காலம்காலமா பொண்ணுங்களை ஆம்பிளைங்க தலைக்கு மேல தூக்கிவெச்சு கொண்டாடவும் செஞ்சாங்க, வேலை முடிஞ்சதும் தூக்கிப் போட்டு மிதிக்கவும் செஞ்சாங்க’
‘ப்ப்ப்ப்பா! என்னென்னமோ சொல்ற. இதெல்லாம் எப்படித் தெரிஞ்சுக்கிட்ட. இதெல்லாம் தெரிஞ்சும் ஏ…ன்…’
‘ஏன்? உங்களுக்கு மட்டும் தான் லீவு கிடைக்குமா? எங்களுக்கும் லீவு எல்லாம் இருக்கு தலைவா! ஒவ்வொருத்தருக்கும் ஒரு பொழுதுபோக்கு. நான் கொஞ்சம் புக்ஸ் படிப்பேன். இதெல்லாம் எவ்வளவு நாளைக்கு, உடம்புலயும், மனசுலயும் தெம்பும் இளமையும் இருக்குற வரைக்கும்தானே ஓடுவோம், நடுவுல நடுவுல ஏதோ கொஞ்சம் ஞானம்…’, சொல்லிக்கொண்டே அவள் சிமிட்டிய கண்களை ரசித்தபடியே மௌனமானான்.
கார் மெல்ல ஊர்ந்து அந்த அபார்ட்மெண்ட் பார்க்கிங்கில் நின்றது. இருவரும் இறங்கி படிகளில் ஏறி வீட்டுக்குள் நுழைந்தனர். ஃபிளாஸ்கில் இருந்த காபியை இரண்டு கப்பில் ஊற்றி ஒன்றை அவளிடம் கொடுத்து கட்டிலில் சாய்ந்தபடியே சொன்னான்.
‘வெரி இன்டெரெஸ்ட்டிங். ஆனா, நீ சொல்றதுல எனக்கு உடன்பாடில்லை. எல்லா காலத்துலயும் ஆண்கள் பெண்களை ஓரளவுக்கு மதிக்கத்தான் செஞ்சாங்க. வெறும் செக்ஸுக்காக மட்டுமே பெண்களைப் பயன்படுத்தின ஆண் சமுதாயம்னு ஒன்னு என்னைக்குமே இருந்தது இல்ல. இருந்திருக்கவும் முடியாது. பை தி வே, நான் நிறைய புக்ஸ் எல்லாம் படிக்கிறதில்ல’
‘நானும் அப்படி சொல்லலையே. கண்டிப்பா ஆதாம்ங்கற ஆம்பிளை ஏவாள்ங்கற பொண்ணை நிறையவே மதிச்சிருப்பான். காட்டுல இருந்த மனுஷன் நாகரீகமாகி விவசாயம் பண்ண நதிக்கரைக்கு வந்தப்போ பெண்ணை மையமா வெச்சுதான் வாழ்ந்தாங்களாம்’
காபியை உறிஞ்சியபடியே அவன் அருகில் நெருங்கி வந்து அமர்ந்தவள் மேலும் தொடர்ந்தாள்.
‘இன்னொரு விஷயம் சொல்லவா? நதிக்கரை ஒட்டிய நாடுகள்ல எல்லாம் ஒரு பொண்ணை அந்த ஊருக்கே ராணியாக்கி, அவள் கண்ணசைச்சா மட்டும்தான் அங்க எல்லாமே நடக்கும்னு எல்லாம் ஒரு காலத்துல இருந்துச்சாம். விசித்திரம் என்னன்னா, ராணியாவே இருந்தாலும் அந்த ஊர்ல இருக்குற எல்லா ஆண்களோடும் அந்த ராணி உறவு வெச்சுக்கணுமாம்’ என்று சொல்லியபடி இடது கண்ணை மட்டும் குறும்பாகச் சிமிட்டினாள்
‘கொடுத்து வெச்சவனுங்க’ என்றான் சிரித்தபடியே.
அவளும் சிரித்தாள். ‘ஆமாமாம். ஆனா, இதையும் ஒரு சட்டமா, சம்பிரதாயமா சேர்த்தவன் கண்டிப்பா ஒரு பொண்ணா, ஏன் அந்த ராணியாவே கூட இருக்க முடியாது. என்ன சொல்றீங்க?’. பேசியபடியே எழுந்தவள் தனது அலங்காரத்தை கட்டிலின் முன் இருந்த நிலைக்கண்ணாடியில் சரிசெய்தவாறே சொன்னாள்.
வாயடைத்து நின்றான் அவன். ஒரு பெண்ணிடம் இருந்து இப்படிப்பட்ட விஷயங்களை அவன் முதன்முறை கேட்கிறான். அதுவும் இவளிடம் இருந்து கேட்பது, கொஞ்சம் அதிகமாகவே திக்குமுக்காடச் செய்தது. அதற்காகவே அவளிடம் நிறைய பேசத் தோன்றியது.
நிறையப் பேசினான்.
‘அசத்துற போ. என்ன சொல்றதுன்னு தெரியல. ஆச்சரியமா இருக்கு. இவ்வளவு அறிவா பேசுற நீ, இந்த இடத்துல எப்படி?’
வெடுக்கென திரும்பியவள் ஒருநிமிடம் அவனை ஊடுருவதைப்போல உற்று நோக்கினாள். பின் சொன்னாள்,
‘விதின்னு எல்லாம் சொல்லி சமாளிச்சு எஸ்கேப் ஆக விரும்பலை. பை தி வே, எனக்கு மீட்டர் ஓடுது. நான் உங்களுக்கு கொடுத்த டைம்ல ஏற்கெனவே நிறைய ஓடிடுச்சு. மீதி இருக்குற நேரத்தை எப்படி கழிக்கறதா உத்தேசம்?’ என சொல்லிக்கொண்டே திடீரென கண்களில் ஏற்றிய காமத்தைக்கொண்டு உதட்டுக்குள் நாவினால் சுழற்றியபடி தன் ஆடைகளை எந்தவொரு சலனமும் இல்லாமல் ஒவ்வொன்றாய் கழற்றத் தொடங்கினாள்.
மனதில் நிறைய கேள்விகள் எழுந்தாலும், அவளின் ஆடைக் கழிதல் அவன் நெஞ்சில் கிறக்கத்தை உண்டாக்கியது. பெருமூச்சொன்றை சொரிந்தான்.
‘ஹும். டைம் ஆகுதுல. ஆனா, நீ நிறைய யோசிக்க வைக்கிற. ஒரு ஆம்பிளையைப் பத்தி ரொம்பவே வெறுத்துப் பேசுற. உன்னோட தொழில் கூட காரணமா இருக்கலாம். உன் பேர் மாதவின்னு சொன்னல்ல. கண்டிப்பா அது உன் நிஜப் பேரா இருக்காது. உன் உண்மையான பேரைத் தெரிஞ்சுக்கலாமா?’
சொல்லிக்கொண்டே தன் பாதி சட்டையைக் கழற்றியபடியே அவளைக் கட்டிலில் மெல்ல கிடத்தினான்.
‘நான் சொன்னதுக்கும் என் தொழிலுக்கும் சம்பந்தமே இல்ல. விவசாயம் செய்ய ஆரம்பிச்சப்பவே மனுஷன் விபச்சாரத்தையும் சேர்த்தே ஆரம்பிச்சுட்டான். சொல்லப்போனா நான் பண்ற இந்த தொழில்தான் இன்னைக்கும் எந்த மாற்றமும் இல்லாம அதே மவுஸோட இருக்குற உலகத்தோட மூத்த தொழில்’
அவள் சொல்லிமுடிப்பதற்குள் அவள்மீது படர்ந்தபடியே கட்டிலின் தலைமாட்டில் இருந்த எல்லா ஸ்விட்ச்சுகளையும் அணைத்து விட்டு அவளிடம் நெருங்கியவன், அவளது தோளைத் தொட்டு இறுக்கமாக அணைத்தபடியே கேட்டான்,
‘ஹும். உன் பேரைச் சொல்ல விருப்பம் இல்லையோ’
‘மாதவின்னு நானே வெச்சுக்கிட்டேன். அப்பா அம்மா வெச்ச பேர் என்னை மாதிரி ஒருத்திக்கு இருக்குன்னு சொல்லி அசிங்கப்படுத்த வேணாம்னு எங்கேயுமே அதை சொல்றது இல்ல.’
‘அது சரி’ என்றவன் அவளை இறுக அணைக்கும் முன் ஏதோ தோன்றி ஒருமுறை விலகி அவளிடம் கேட்டான்.
‘நான் உன் கஸ்டமர், நீ ஒரு… அதெல்லாம் விட்டுட்டு சொல்லு. எனக்கு இன்னைக்கு செக்ஸ் வேணும், ஆனா, நான் வெறி பிடிச்சவன்லாம் இல்லை. விருப்பம் இல்லாம வெறும் மெஷின் மாதிரியான அனுபவத்துல எனக்கு விருப்பமும் இல்லை. இன்னைக்கு, இப்போ, இங்கே, முன்னே பின்னே யாருன்னே தெரியாத என்கூட செக்ஸ் வெச்சுக்க உனக்கு உண்மையிலேயே விருப்பம் இருக்கா இல்லையா?’
அதிர்ந்தாள்.
சட்டென பேச்சு எழாமல் தொண்டை அடைத்தது. இத்தனை நேரம் ஆண்களைப் பற்றிய அவளது அத்தனை சிந்தனைகளையும் இவன் மெல்ல உடைப்பது போல இருந்தது.
‘விருப்பம் இல்லை, ஆனா, சம்பாதிக்கணுமேன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?’
‘வெல், நான் செக்ஸை உடல் ரீதியா இல்லாம உணர்வு ரீதியா அனுபவிக்கணும்னு நினைக்குற டைப். உனக்கு விருப்பம் இல்லைன்னா இப்படியே கொஞ்ச நேரம் பேசிட்டு, அப்படியே டின்னர் சாப்பிட்டுட்டு உன்னை ட்ராப் பண்ணிடுவேன். கவலைபடாதே, பேமென்ட்ல எந்த மாற்றமும் இல்லை’
அவன் சாதாரணமாகத்தான் சொன்னான். ஆனாலும் அவளது இடது கண்ணில் லேசாக எட்டிப்பார்த்த கண்ணீர் அந்த மெல்லிய ஸீரோ வாட்ஸ் சோடியம் வெளிச்சத்தில் அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தொண்டையைக் கனைத்தபடியே மெல்லிய குரலில் சொன்னாள், ‘இன்னும் ஒரேயொரு விஷயம் சொல்லவா? எல்லா ஆண்களும் பெண்களை செக்ஸுக்காகப் பயன்படுத்திட்டே இருந்த காட்டுமிராண்டி சமுதாயத்துக்கு நடுவுல, முதன் முதலா யாரோ ஒருத்தன் என்னை மாதிரி ஒரு பொண்ணைத் தொடும்போது, நிஜமாவே அந்த பொண்ணுக்கு அதுல விருப்பம் இருக்கா இல்லையான்னு கேட்டுருப்பான். விருப்பம் இல்லாத பொண்ணைத் தொடக்கூடாதுன்னு ஒரு கொள்கையோட இருந்துருப்பான். உங்களை மாதிரியே.’
‘….’
‘காட்டுமிராண்டியா இருந்த கூட்டம் மனுஷனா மாறுன முதல் நிமிஷம் அதுவாத்தான் இருந்துருக்கும், இல்லை?’
அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அவனுக்குத் தென்படவில்லை. ஆனால் உணர்ந்தான். ஏதோ காரணத்தால் அவளது கண்ணீரை நிறுத்த நினைத்தவன், பேச்சை இயல்பாக மாற்ற நினைத்தான்.
‘மறுபடியும் லெக்ச்சரா? உனக்கு விருப்பம் இல்லைன்னா இப்படியே விடிய விடிய ஃபிலாசஃபி பேசிட்டே இருக்கலாம், என்ன சொல்ற’ என்றபடியே பொய்யாக விலகினான்.
முழுதாக விலகுவதற்குள் அவன் தோளைத் தொட்டு இழுத்து அணைத்து இடைவெளியின்றி நெருங்கினாள்.
அவளது தேகத்தில் இருந்து மலர்ந்த செண்பகப்பூவின் பெர்ஃயூம் வாசம் இப்போது மிக அருகில் வீசியது. அவளது மூச்சுக்காற்றின் உஷ்ணத்தை தனக்குள் உணர்ந்தவன், அவளது கண்களைப் பார்த்தபடியே அமைதியாக இருந்தான்.
‘இந்த நிமிஷம் வரைக்கும் சுத்தமா விருப்பம் இல்லாமதான் இருந்தேன், ஆனா, இப்போ நிறையவே இருக்கு. என் நிஜப் பேரு கேட்டீங்களே, சொல்லவா?’
‘….’
‘பாரதி’
******
அருமை?
பழக்கப்பட்ட கதையேயானாலும் , ரசிக்கும் படி வெளிப்படுத்திய திறமை பாராட்டிற்குரியது.