இணைய இதழ்இணைய இதழ் 84சிறுகதைகள்

நாயகி – கமலதேவி 

சிறுகதை | வாசகசாலை

ரு வாரமாக நாள்முழுதும் மழை அடித்துக்கொண்டே இருந்தது. இன்று விடாத சாரல். வீட்டிற்கு முன் நிற்கும் வேப்பமரத்து இலைகள் பசேல் என்று குதூகலமாக இருப்பதைப் பார்த்தவாறு சிமெண்ட் சாய்ப்பின் கீழ் நின்றேன். வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் மழை காலத்தின் நசநசப்பு. காலை பத்துமணி என்ற எண்ணமே இல்லை. இப்போதுதான் விடிந்த மாதிரி மந்தமான மனநிலை. சுள்ளென்று ஒருமணி நேரம் வெயில் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தோன்றியது. கொடியில் காயும் துணிகளை எல்லாம் மடித்து வைத்தாலே மண்டைக்குள் இருக்கும் எரிச்சல் காணாமல் போய்விடும். இந்த வேப்பமரம் மட்டும் எத்தனை அழகாய் என்று நினைக்கும் போதே வீடியோ போடலாமே என்று தோன்றியது. 

அலைபேசியை எடுத்தேன்.

“டேய் தம்பி..அம்மாக்கிட்ட சொல்லிட்டு வீட்டுக்கு வரியா..ஒருவீடியோ போடுவோம்,”

“இந்த மழையிலேயும் எப்படிக்கா,”

“வீட்டுக்கு முன்னாடி இருக்க வேப்பமரம் தான் பேக்ரவுண்டு…என்னா அழகு பச்சையா இருக்கேடா…”

“என்னா பாட்டு..?”

“மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்குது…எப்பிடி,”

“நல்லாதான் இருக்கு,” என்று இழுத்தான். விடுமுறை நாள் என்பதால் குளிருக்கு போர்வைக்குள்ளேயே கிடப்பான்.

“டேய்.. கருவாட்டு கொழம்பு வச்சிருக்கேன்டா..கெளுத்தி கருவாடு பாத்துக்க,”

“இந்தா…வந்துட்டேன்..சாப்பிட்டதும் வீடியோ எடுப்போம்,”

வானம் அடைத்துக்கொண்டு வெளிச்சம் இல்லாமல் இருப்பதே மனதை ஒருமாதிரி இருக்கவிடாமல் பண்ணியது. உட்கார்ந்தால் ஒருபாடு சுகமாக அழுது தீர்க்கலாம். ஆனால், அப்படி ஆகக்கூடாது என்பதற்கு தானே ப்ரசாந்தை வரச்சொன்னது. இப்பொழுதெல்லாம் அழுகை வந்தால் கூட அழுவது சலிப்பாக இருக்கிறது.

வெளிக்கதவை சாத்திவிட்டு உள்அறையில் பீரோவைப் புரட்டினேன். பச்சை கலர் புடவை நழுவி விழுந்தது. வேப்பமரத்திற்கு பக்கத்தில் பச்சை எடுக்காது. சிவப்பில், ஆரஞ்சில் என்ன புடவை இருக்கிறது என்று பார்த்தேன். அடர்ந்த வாடாமல்லிக்கலர் கண்களில் பட்டது. கிராமத்துப் பாட்டுக்கு எடுப்பாக இருக்கும். எடுத்து வைத்து விட்டு முகம் கழுவிய பின் புருவத்திற்கு மையை இழுத்தேன். இந்த முட்டை விழிகள்தான் வீடியோ போடுவதற்கான முதல் காரணம். ‘உனக்கு கண்ணு நல்லாருக்கு’ என்று பார்ப்பவர்களில் பாதிபேருக்கு மேல் சொல்வார்கள். 

புடவையை கட்டிக்கொண்டு முதல்நாள் வெளியிட்ட வீடியோவிற்கான கமெண்டுகளை பார்க்கத் தொடங்கினேன். வழக்கம் போல ஐம்பது கமெண்டுகளுக்கும் மேல்…

நீ ரொம்ப அழகு

நம்பர் கிடைக்குமா?

வீடு எங்கே?

திமிரு…

என்று தொடங்கி மோசமான குறிப்புகள் என்று அடுத்தடுத்து தொடர்ந்து…

அந்தப்பொண்ணு புடவை கட்டிக்கிட்டு தாண்டா வீடியோ போடுது…எதுக்கு கண்டபடிக்கு பேசறீங்க..

திமிரு ப்ளஸ் ..

கண்ணுலயே திமிரு தெரியுது

திமிரும் அழகுதான்..பன்னிக்குட்டியும் பருவத்துல அழகுல்ல

புன்னகைத்தப்படி அலைபேசியை தரையில் வைத்துவிட்டு வெளியே வந்தேன். முதல் வீடியாவின் நேரம் ஐம்பது நொடிகள். துணி கம்பெனிக்கு வெளியே நின்று எடுத்தது. இடது கையில் அலைபேசியைப் பிடித்து அதைப் பார்த்து பேசுவதற்குள் கை ஆடத்தொடங்கி விட்டது. சுண்டுவிரலை பிடிமானமாக பழக்குவதற்கே ஒரு வாரம் ஆனது. 

“என்னக்கா மழையப் பார்த்துக்கிட்டே கனவு கண்டுக்கிட்டு இருக்க…சாயங்காலம் இண்டர்வியூக்கு ஒத்திகை பாக்குறியா..”

“இண்டர்வீயூன்னா நடிப்பாடா… பொண்ணுங்களுக்கான நிகழ்ச்சி… உண்மையத் தான் சொல்லனும்,”

“நீ பாட்டுக்கு இன்னசென்ட்டா எல்லாத்தையும் உளறி வச்சிறாத…கெத்தா இருக்கனுங்க்கா. இப்பதான் சேனல் நல்ல பிக்அப்ல இருக்கு..அதனாலதான் இன்டர்வியூ கேக்றான்…கொஞ்சம் ரிச் கேர்ள் மாதிரி நடந்துக்க,”

“யாருடா கேர்ள்…லூசுப்பயலே..எனக்கே ஒரு பாப்பா இருக்கு,”

அவன் உள்ளே ஓடி சாப்பாட்டு தட்டை எடுத்துக் கழுவினான்.

வீடியோ எடுத்துமுடிக்கும் போது சாயங்காலம் நான்கு மணி. கருவாட்டுக் குழம்பும் சோறும் சாப்பிட்டுவிட்டு மறுபடி ஒரு முறை பல்துலக்கி, குளித்து இருப்பதிலேயே நல்ல சேலையாக ஒன்றை எடுத்துக் கட்டிக்கொண்டு வரும்போது ப்ரசாந்த் வீடியோ வேலைகளை முடித்திருந்தான்.

“ஒரு தடவை பாத்துரு..ரிலீஸ் பண்ணிறலாம்..எல்லாம் மழைக்கு வீட்டுக்குள்ளதான் இருப்பானுங்க…நல்ல வ்யூஸ் கிடைக்கும்,”

பார்த்துவிட்டு வெளியில் கொடியில் கிடந்த துணிகளை வாரி கட்டிலில் போட்டேன். 

“க்கா..ஒரு ட்டீ போடேன்,”

“போற வழியில வாங்கித்தாரேன் …மேக்கப் சரியா இருக்கா…?”

“லோக்கல் சேனலுக்கு இது போதும்,”

அவனை முறைத்துக்கொண்டே வீட்டைப் பூட்டினேன்.

“நீ என்னைக்கு மேக்கப்ல அசட்டையா இருந்துருக்க…” என்றபடி வண்டியை எடுத்தான். வண்டி சாலையில் செல்லச் செல்ல குளிர்ந்த காற்று முகத்தில் படப்பட கண்கள் லேசாக எரிந்தது. மனதில் இருந்த பதட்டம் மாறி இலகுவான மனநிலை வந்திருந்திருந்தது. கண்கள் கலங்கும் என்று தோன்றியதும் மடியில் இருந்த குடையை இறுகப்பிடித்துக் கொண்டேன்.

“பைக்ல போறது ஜாலி இல்லடா…அதானே எல்லாரும் பைக்லயே சுத்துறீங்க..”

அவன் புன்னகைப்பது பக்கவாட்டு கண்ணாடியில் தெரிந்தது.

“அந்த செகண்ட் ஹேண்ட் ஸ்கூட்டி இன்னும் பத்து நாளையில கிடச்சிரும்..அப்பறமா நீயே சொல்லுவ..”

அந்த அலுவலகம் ஒரு சந்திற்குள் இருந்தது. முன்னால் வரவேற்பு அறையில் ப்ரசாந்த் அமர்ந்து கொண்டான். உள்அறையில் நிகழ்ச்சி நடத்தும் பெண் என்னைப் பார்த்ததும் எழுந்து வந்தாள். மெருன் நிற குர்தா அவளின் நிறத்திற்கு அழகாக இருந்தது. அதே நிற லிப்ஸ்டிக். அறை மூலையில் இருந்த சிறிய தடுப்பிற்குள் அழைத்துச் சென்று என்னைத் தனியே விட்டுவிட்டு அவள் வெளியேறினாள். ஆளுயர கண்ணாடிக்கு முன் பவுடர், மை பென்சில் என்று அடிப்படையான சில அழகுசாதனப் பொருட்கள் கிடந்தன. தலைமுடியைச் சரிசெய்து கொண்டேன்.

வெளியே வரும் போது ஒரே ஒரு ஆள் மட்டும் வெளிச்சம் சரிபார்த்து விளக்குகளை நகர்த்தி வைத்து விட்டு காமிராவை சரிசெய்தான். அந்தபெண் ஒரு சிறிய ஒலிவாங்கியை வலது தோளுக்கு கீழே இருந்த சேலை மடிப்பில் செருகிக்கொள்ளுமாறு கொடுத்தாள்.

இருவரும் அமர்ந்த சில நிமிஷங்களில் ஔிப்பதிவு செய்பவர் பெருவிரலை காட்டி தலையாட்டினார். 

இன்னொரு ஆள் வெள்ளை அட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து நின்றான். முதலில் பெயர், ஊரெல்லாம் கேட்டாள்.

“\வீடியோ போடனுன்னு உங்களுக்கு எப்ப தோணுச்சு,”

“ஸ்கூல் படிக்கறப்பவே ஆண்டு விழான்னா நாடகம் டான்ஸ்ன்னு பிஸியா சுத்துவேன்…அந்த ஆசை தான்…யூ டியூப்ல ஏற்கனவே வீடியோஸ் நிறைய கிடக்குல்ல..அதையெல்லாம் பாக்கறப்ப நாமளும் போட்டா என்னன்னு தோணுச்சு,”

“தனியாவேதான் வீடியா போடறீங்க,”

“இல்ல லீவுன்னா பாப்பாவும் சேர்ந்துப்பா,”

“வேலைக்கு போறதுனால சன்டே வீடியா எடுப்பீங்களா..?”

“இல்லல்ல…வீடியா எடுக்கறது ஒரு ரிலாக்ஸா இருக்கும்…கொஞ்ச நேரம் கிடைச்சாலும் கன்டெண்ட் இருந்தா உடனே போட்ருவேன்…கையில இருக்கற மொபைல்லதானே எடுக்கறோம்,”

“என்ன வேல பாக்கறீங்க..?”

“டெக்ஸ்டைல் கம்பெனியில துணி வெட்டறது, தைக்கறது, மடிக்கறதுன்னு எல்லா வேலையும்.. ,”

“வீடியோ மூலமா பணம் கிடைக்குதுல்ல..?”

“குறிப்பிட்ட வியூஸ் போனாதான் கிடைக்கும்…அப்படி ஒன்னும் பெரிசா கிடைக்காது….முதல்ல ஒரு ஆர்வத்துல ஜாலிக்காகதான் வீடியோஸ் போட ஆரம்பிச்சேன்,”

“உங்க வீடியோஸ்க்கான கமெண்ட்ஸ் பாப்பீங்ளா?,”

“சும்மா இருக்கறப்ப அதான் வேலையே…”

“என்ன மாதிரி கமெண்ட்ஸ் வரும்?,”

“பாதி பாசிட்டிவ்வா.. பாதி நெகட்டிவ்வா..”

“உங்களுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் அதிகமா இருக்கே,”

“அது என்னமோ தெரியல…என்ன மாயமோ தெரியல..” என்று சிரித்தபடி குரலையும் முகபாவனையையும் மாற்றினேன். 

அவள் சிரித்தவாறு தொண்டையைச் மெதுவாக செருமி சரிசெய்து கொண்டாள். கண்கள் மெல்லிய நீரோட்டம் கண்டது. கண்களை சிமிட்டியபடி உதட்டை மடித்து புன்னகைத்தாள். அந்த நேரத்தில் ஔிப்பதிவு செய்பவர் என்னை நான்கு பக்கமும் திரும்பச் சொல்லி பதிவுசெய்தார்.

“எல்லா வீடியாஸ்லயும் நல்லா நீட்டா புடவை தானே கட்டறீங்க,”

“ஆமா..என்ன பண்றது… நீங்களே பாக்கறீங்கல்ல…ஹஸ்பெண்டாட ரீல்ஸ் பண்றவங்க இன்னொரு ஜென்ஸ்கிட்ட பேசற மாதிரியும், அவர் இன்னொரு பெண்ணை கிண்டல் பண்ணி அடிவாங்கற மாதிரியெல்லாம் வீடியோஸ் பண்றாங்க. மார்டன் டிரஸ்ல டான்ஸ் பண்றாங்க… சுதந்திரமா வீடியோஸ் பண்றாங்க. அதெல்லாம் நல்லாயிருக்குல்ல… பெரும்பாலும் மோசமான நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரதில்லை…நான் பெரும்பாலும் இளையராஜா பாட்டு ரீல்ஸ் தானே பண்றேன்,”

“இன்னொரு ஹஸ்பெண்ட் அண்ட் வொய்ஃப் அஃபெக்ஷன் வீடியோஸ் ரொம்ப ஹம்பக்கா இருந்தாலும் நெகட்டிவ்வா எதுவும் வரதில்ல,”

“ஆமாமா..பாக்கறவங்களுக்கு ரீலாவாச்சும் நடந்துறாதான்னு ஒரு ஏக்கம் இருக்கும் போல. நான் சிங்கிள் பேரண்ட்..என்ன பண்றது,”

“ரீல்ஸ் பண்றதுக்கு முக்கியமா என்ன திறமை வேணுன்னு நினைக்கிறீங்க,”

“சிவாஜி ,எம்.ஜி.ஆர் ,சாவித்ரி காலத்து க்ளாஸ் அப் ஃபேஸ் எக்ஸ்ப்ரஷன் நல்லா பண்ணனும்.. புருவத்தை, கண்ணை, உதட்டை, நெற்றி சுருக்கத்தை சரியா யூஸ்பண்ணிக்கனும்..அந்த காலத்து கண்டென்ட்டை புதுசா பேசினா கூட போதும்,” என்றதும் அவள் வாயில் கை வைத்துச் சிரித்தாள். இன்னும் சில கேள்விகள். கேள்விகள் முடிந்ததும் சில நொடிகள் கழித்து ஔிப்பதிவாளர் பெருவிரலை காட்டித் தலையாட்டினார். ஏழு மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது.

“பத்து மணிக்கு நம்ம டி.வி சேனல்ல உங்க இன்டர்வீயூ வந்துருங்க்கா.. நம்ம யூட்யூப் சேனல்ல பத்தரைக்கு வரும். நாளைக்கு காலையில பத்துமணிக்கு மறுபடி போடுவாம்…நல்லா போனுச்சுன்னா ஒரு மாசம் கழிச்சி மறுபடி போடுவாம்..பேமெண்ட் நாளைக்கு அனுப்பிருவோம்,” என்று சொல்லிவிட்டு ஒரு காகிதத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டாள். இருவருக்கும் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தேன். 

“அதுக்குள்ள முடிஞ்சிட்டா,”என்றபடி ப்ரசாந்த் எழுந்து நடந்தான். ஜன்னல் வழியே குளிர் காற்று சள்ளென்று அடித்தது. முந்தானையை எடுத்து போர்த்திக்கொண்டேன்.

“நான் ஆட்டோ பிடிச்சு போயிக்கறன்..நீ வீட்டுக்குப்போ,”

“சாயங்காலம் எடுத்த வீடியோ போட்டாச்சுக்கா…கமெண்ட்ஸ் தான் கடுப்பாவுது..”

“விடு…வேலையப் பாப்போம்..நாளைக்கும் உனக்கு லீவு தானே. எதாச்சும் நல்ல பாட்டா தேடிப்பாரு..நாளைக்கு மதியமா ஒரு வீடியோ எடுப்போம் ,” என்று சொல்லிவிட்டு வெளியே வந்த போது சட்டென்று சுற்றிலும் வேறுமாதிரி இருந்தது. அவ்வளவுக்கு இருட்டு இல்லாத மாதிரியும் இருந்தது. உள்ளே அத்தனை விளக்கு வெளிச்சம் இருந்ததாலோ என்னவோ நடுராத்திரி ஆனது போல மனதிற்குள் ஒரு பரபரப்பு இருந்தது. ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு வந்ததும் நல்ல பசி. மீதமிருந்த சோற்றையும் குழம்பையும் சாப்பிட்டதும் டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பால் இல்லை. குடையை எடுத்துக்கொண்டு முடக்கு கடைக்குச் சென்றேன்.

“அண்ணா…ஒரு டீ,”

உள்பெஞ்சில் நான்கு ஆட்கள் அமர்ந்திருந்தார்கள்.

அவர் பெரிய பேப்பர் கப்பை செய்தித்தாள் துண்டால் மூடித்தந்தார். எடுத்துக்கொண்டு நடந்தேன். அங்கேயே உட்கார்ந்து குடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாசல் கதவின் பக்கமாக அமர்ந்து கொண்டேன். நல்ல ருசி. சாயமும் சர்க்கரையும் தூக்கலாகப் போட்டிருந்தார். ஒரு டீயை விட அளவும் அதிகம். அலைபேசி அடித்தது. எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தேன். தெருவிளக்கு வெளிச்சத்தில் மழைச்சாரல் நன்றாகத் தெரிந்தது. அங்கு நின்று ஒரு வீடியோ எடுத்தால் நன்றாக இருக்கும். 

“அம்மா….நாளையிலருந்து மூணு நாள் லீவும்மா..”

“சரி…நான் வரனுமா…வந்துருவியா?,”

“வீடு மாறுனதா சொன்னியே..”

“ஆமாண்டி மறந்துட்டேன்….நீ பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டு கால் பண்ணு,”

கொஞ்ச நேரம் பேசிவிட்டு வைத்தாள். குளிர்சாதனப்பெட்டியை திறந்து பார்த்தேன். தக்காளி தவிர காய்கறிகள் எதுவும் இல்லை. வெளிக்கதவின் உள்பூட்டை பூட்டிவிட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்தேன். புடவை இன்னும் மாற்றவில்லை என்று அப்போதுதான் தோன்றியது. நைட்டியுடன் ஓடி வரும்போதே மணியோசை சேனல் வழங்கும் கடந்து வந்த பாதை நிகழ்ச்சி தொடங்கியது.

போர்வையை போர்த்திக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தேன். தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. யூட்டியூபை விட தொலைக்காட்சியில் நல்ல நிறமாய் அழகாய் இருந்தேன். தலைமுடியை சரி செய்வதை, முகம் திரும்புதை, சிரிப்பதை அங்கங்கே எடுத்து ஒட்டி இடைவேளைக்கு முன்பு காட்டினார்கள். பார்க்க அழகாகத்தான் இருந்தது.

இருபது வயதில் பிடிவாதமாக பிரபா மாமாவைதான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்லி அத்தை வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அதுவும் ஒரு சாயங்கால வேளை. அத்தை, மாமா, பக்கத்து வீட்டுக்காரர்கள் இரண்டு பேரை அழைத்து அத்தையின் தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்துக் கட்டி என் கல்யாணம் முடிந்தது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. பட்டுப்புடவையும், வாடகை நகைகளும் ,வாடகைக் காரும் மாலையும், கொண்டைமுடியும், உதட்டுசாயமுமாக கல்யாணம் பற்றி இருந்த கற்பனைகள் சட்டென்று இல்லாமல் போனது. குனிந்து பார்த்தேன். அத்தையின் குங்கும நிறப் புடவையும்,பக்கத்து வீட்டு அக்காவின் பொருத்தமில்லாத ஜாக்கெட்டுமாக பேந்த பேந்த நின்றது எனக்கே பிடிக்கவில்லை.

குழந்தை பிறந்ததும் பக்கத்துவீட்டு் அக்காக்களின் வாழ்க்கை போலவே எனககும் ஆனது. குடி, சீட்டாட்டம், அடி என்றும்.. நகைகள் காணாமல் போவதுமாக தினமும் ஒரு பிரச்சனை. இந்த குழந்தை வேறு கத்திக்கொண்டே இருந்தது. ஒருநாள் இவன் வேண்டாம் என்று அம்மா வீட்டிற்கு கிளம்பினேன். அதுவும் ஒரு சாயங்காலம். இருந்த நாலைந்து நல்ல சேலைகளும், குழந்தையின் உடைகளும் ,ஆயிரம் ரூபாய் பணமுமாக அம்மா வீட்டிற்குச் சென்றதும் முதலில் அம்மா, “எத்தனை நாள் இருப்ப..சும்மா தான். அப்பாவை கறி மீனெல்லாம் வாங்கியாறச் சொல்றேன்,” என்று சிரித்தாள்.

வாழாமல் வந்தால் அம்மாவுக்கும் மாமியாருக்கும் வித்தியாசமில்லை என்று பத்து நாட்களில் புரிந்தது. நான் வந்த ஒருவாரத்தில் அம்மா ஒரு வேலையும் செய்யாமல் பாப்பாவுடன் திண்ணையில் உட்கார்ந்துகொண்டாள்.

“வீட்டை காலையிலயும் சாயங்காலமும் கூட்டிப் பெருக்கினா என்ன? பாத்திரத்தை அழுத்தி தேய்க்கனும்…கைக்கு நோவக்கூடாதுன்னா என்ன பண்றது..அன்னன்னிக்கி கட்ற துணிய குளிக்கறப்பவே அலசி காயப்போட்டுறனும்,”என்று எதையாவது சொல்லிக்கொண்டே இருந்தாள். பள்ளிக்கூடம் படிக்கும் வரையும், அற்கு பிறகு பனியன் கம்பெனி வேலைக்குச் சென்ற இரண்டு வருடமும் அம்மா இப்படியெல்லாம் பேசியதில்லை. ‘சம்பாதிக்கற பிள்ளை கொஞ்சம் தூங்கி எந்திரி.. வூட்டு வேலையைல்லாம் கண்ணு பாத்தா கை தானா செஞ்சுரும்’ என்பாள். 

ஒரு நாள் காலையில் மறுபடியும் கிளம்பி பனியன் கம்பெனி வேலைக்கு கேட்டுவிட்டு வந்தேன். “எம்பிள்ளைகள வளத்தது பத்தாதா..அதுகளே சொல்பேச்சு கேக்கல..இந்த வயசுல முழுநாளும் பிள்ளை வளக்க முடியுமா,” என்று இரண்டு வாரத்தில் சலித்துக்கொண்டாள். அவள் சொல்வதும் உண்மை தான் என்று தோன்றியது.

ஒருமாதம் கழித்து ஒருஅறையாக உள்ள வாடகை இடம் பார்த்துக்கொண்டு, பிள்ளையைத் தூக்கிக்கொண்டு கிளம்பியபோது அப்பா இரண்டாயிரம் ரூபாயை பாப்பா கையில் கொடுத்தார். ஒரு மாத வாடகை. துணி தைக்கும் இடத்தில் ஓரமாக போர்வையை விரித்து பாப்பாவை படுக்க வைத்துக்கொள்ளலாம். பாப்பா வளர வளர தையல் மிஷின்களின் சத்ததையும், அந்த இடத்திலேயே விளையாடவும் பழகிக்கொண்டாள். தைக்கிற பீஸ்களுக்கு ஏற்ப சம்பளம். முடியாத நாட்களில் வீட்டிற்கு எடுத்துச் சென்று தைத்துக் கொடுக்கலாம். பாப்பா வளர்ந்து பள்ளிக்கூடம் சென்றதும் பெரிய அலைபேசி வாங்கினேன்.

ஜியோ நெட் வந்ததும் யூடிபில் ரீல்ஸ் பார்க்கும்போது நம்மளும் ரீல்ஸ் பண்ணினா என்று நினைக்கும்போதே சந்தோசமாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் இருந்த சந்தோசம். அதற்காகத் தொடங்கி எட்டு வருஷங்கள் ஓடி விட்டது. இப்போது வாரம் இரண்டாயிரம் கிடைக்கிறது. தொடக்கத்தில் நூறுலிருந்து ஐநூறு வரை கிடைத்தது. காய்கறி செலவு மிச்சம் என்ற திருப்தி மனதைப் பிடித்துக்கொண்டது. அதுவுமில்லாமல் கொஞ்சம் நல்லா ட்ரஸ் பண்ணிக்கலாம். இருக்கிற புடவையை அழகாக உடுத்திக்கொள்ள வேண்டும் என்றும், மை வைக்க வேண்டும் என்றும், புருவம் சீர் செய்ய வேண்டும் என்றும் தோன்றியது. சிரிக்கவும் சில சமயம் காத்து போல நடக்கவுமாக மனம் நன்றாக இருந்ததால் ரீல்ஸ் பண்ணுவதை நிறுத்த முடியவில்லை. 

நிகழ்ச்சி எப்பவோ முடிந்து பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. தொலைக்காட்சி, விளக்குகளை அணைத்தேன். வறக்காப்பி போட்டுக்கொண்டு வந்து மெத்தையில் உட்கார்ந்தேன். மதியம் எடுத்த வீடியோவை பார்க்கச்சொல்லி ப்ரசாந்த் வாட்ஸ்ஆப்பில் சொன்னான். நாயகி யூட்யூப் சேனலைத் திறந்தேன்.

பாவண்டா வயித்து பொழப்புக்கு வீடியோ போடுறா

நல்லா பண்றீங்க அக்கா

அதுக்கு எதுக்கு இவ்வளவு திமிரு 

வேற பொழப்பு பாக்கலாமே

திமிரும் இல்ல ஒரு மண்ணும் இல்ல…சாப்பாடுக்கே வழியில்லாதப்ப திமிரு எங்க…எல்லாம் வேசம்

காப்பியைக் குடித்ததும் உற்சாகமாக இருந்தது. எழுந்து இரண்டு விளக்கையும் எரியவிட்டேன். நல்ல வெளிச்சம். ஒரு சேலையை எடுத்து சரியாக மடித்து நைட்டி மேல் வைத்து ஊக்கு குத்திவிட்டு அலைபேசியை எடுத்து முகத்திற்கு நேராக நீட்டினேன். முகம் கருஞ்சிவப்பு பொட்டுடன் பளிச்சென்று இருந்ததும் சிரித்தேன். 

‘அப்டியா சொல்றீங்க…நான் எதுக்கு லாயக்கில்லை..’ என்று வடிவேலு ஜோக்கை முகத்தை கோணலாக்கி பேசத்தொடங்கினேன். பட்டென்று அடித்து திறந்த ஜன்னல் வழியே குளிர்ந்த காற்று முடியைக் கலைத்தது. இளையராஜா பாடல் ஒன்றை அனிச்சையாக பாடத்தொடங்கினேன். 

*******

kamaladevivanitha@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button