“ம்” என்ற ஒற்றைச் சொல்லில்
இருத்தலை உறுதி செய்யும் உன்னிடம்
இனிமேற்கொண்டு என்ன பேசுவேன்?
இலகுவாக்க எதையாவது எழுதியும்
இல்லை என அழித்தும்
இருந்த பொழுதினில் யோசனையோடு
இன்னொரு, “ம்” மை அனுப்பி வைக்கிறேன்
நீயுமொரு, “ம்” ஐ அனுப்பி
இந்த விளையாட்டு பிடித்திருக்கிறதென்கிறாய்
இறுகிய பொழுதுகள்
இயல்பாய் அவிழத் தொடங்கியிருந்தன.
****
என் வானின் மேகங்கள்
என்னை விட்டு அகல்வதேயில்லை
போகுமிடமெல்லாம் உடன் வரும் கருமேகங்கள்
முகம் பார்க்கத் தவறுவதில்லை
எதையாவது எண்ணிச் சிரிக்கையில்
கூடவே சிரிக்கின்றன வெண்மேகங்கள்
கண்கலங்கிய பொழுதில் கைகளை
அகல விரித்தென்னை அணைத்துக்கொள்கின்றன
எதுவுமற்ற நிர்தாட்சன்ய வேளையில்
வடிவங்களால் கதை பேசுகின்றன
“கலையாதே” என்று புகைப்படமாக்க
பொறுமையாய் அப்படியே நிற்கின்றன
புதிய ஊர்கள் தோறும் மேகங்கள்
உற்சாகமாய் புதிய உலகத்தை காட்டுகின்றன
இரவில் ஜன்னலில் ஒளிரும் நட்சத்திரங்களின் வெளிச்சத்தில்
மேகங்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றன
என் காலைப்பொழுது மேகங்களோடே விடிகின்றது
என் வானின் நீலவண்ண மேகம்
என்னை விட்டு அகல்வதேயில்லை.
******