இணைய இதழ்இணைய இதழ் 83சிறுகதைகள்

நீல சொம்பு – வசந்த் முருகன்

சிறுகதை | வாசகசாலை

1
த்தனை வடிவாக இருந்தது அந்த வளைவுகள். தங்கம் தீட்டிய பாறையின் நடுவே தேங்கி இருக்கும் சுனை போல் நீர் நிரம்பி இருந்தது பார்த்திபன் வீட்டு பூஜையறை சொம்பு. அது இன்றோடு பத்து வருடங்களைக் கடந்து இந்த குடும்பத்தோடு உள்ளது. ஆனால், ஒரு நாளும் அதன் வளைவுகளை எந்த வாயின் உதடுகளும் தொட்டதில்லை.

ஆடியானாலும் அம்மாவசையாக இருந்தாலும் சாமிக்கு பூஜையிடுகையில் நீர் வளவவும், புரட்டாசி மாத பூஜையில் சொம்பிற்கு பட்டை இட்டு இளநீரோடு துளசி இலை போட்டு ஊறவைத்து பூஜை முடிந்தததும் அதை(துளசி) வாயில் போடும்போதும் சரி, ஒரு நாளும் அந்த சொம்பில் யாரும் வாய் வைத்ததில்லை. மீறி யாரும் வைத்தால் வாயில் கட்டி என வீட்டில் சொன்னதால் பார்த்திபன் கூட அதில் வாய் வைக்க பயந்தான். எனவே, கற்பூர ஆராதனைகள், ஊதுவத்தி புகை, சாம்பராணி வாடை போன்ற புனித யாத்திரைகளுக்கு நடுவே பெரும் வாகையோடும் குடும்பத்தின் ஆதரவோடும் வாழ்ந்து கொண்டிருந்தது அந்த தங்கநிற சொம்பு.

ஆறடி கொண்ட சிமென்ட் தொட்டி பார்த்திபன் வீட்டின் கிணற்றுக்கு அருகாமையிலே அமைந்திருந்தது. அதன் முகப்பில் வீசும் காற்றின் போக்கில் யாரின் ஆதரவுமற்று இருந்தது இந்த சொம்பு. ஒரு பக்கம் ஒடிந்து வெள்ளி நிறம் தேய்ந்து போயிருந்தது. மறு பக்கத்தில் நீலப் பெய்ண்ட் கொண்டு விரலால் பூசியதுபோல இருந்தது. நீலம்தான் இந்த சொம்பின் விலாசம். பார்த்திபன் வீட்டில் இதை யாரும் கண்டுக்கொள்ளமாட்டார்கள். அது ஒடுங்கியபோது இந்த தொட்டிக்காக ஒதுக்கபட்டுவிட்டது. அருகே இருக்கும் ஊரிலிருந்து வருபவர்களுக்காகவே இந்த சொம்பு.

கழனிக்கு வேலை செய்ய வருபவர்கள், விறகு வெட்ட வருபவர்கள் தொட்டியில் கை வைத்தோ வாய் வைத்தோ தண்ணீர் குடிக்கக் கூடாது. பார்த்திபன் வீட்டிலும் கையேந்தி குடிக்கவும் இவர்களுக்காகத் தண்ணீர் எடுத்து ஊற்றவும் நேர விரயம் ஆவதை எண்ணி, சொம்பில் நீலம் தேய்த்து இவர்களுக்கெனவே வைத்து விட்டார்கள். அது தொட்டியைத் தாண்டி எங்கும் செல்லாது. சில சமயம் அடித்துக்கொண்டு கிணற்றில் விழுந்ததுமுண்டு. இப்படி யாரின் ஆதரவுமற்று பலரின் தாகத்திற்காகவும் வாழ்ந்தது நீல சொம்பு.

கடலைச்செடி நட்ட இடங்கள் ஒரு வழியாக கரம்பாகியது. செடிகள் இளம்பிஞ்சு கொட்டைகளை தரித்த நாள் முதலே பார்த்திபன் இந்த கரம்புக்காகக் காத்திருந்தான். கரும்புகள் அல்லது நெற்பயிர்கள் நடப்பட்டிருந்தால் அது அறுவடைக்கு பிறகு கரம்பாவது கடினம். நெற்பயிர்கள் அறுக்கப்பட்டதும் குச்சிகள் போல் தங்கள் அடித்தண்டுகளை நிமிர்த்தியவாறே இருக்கும். எனவே, பார்த்திபன் மற்றும் கூட்டாளிகள் அதில் விளையாட முடியாது. கரும்புகள் அறுக்கப்பட்டால் உள்ளே நடப்பதே கடினம். கரும்பு சோகைகளோடு அது கொளுத்தப்பட்டால்தான் அது மட்டமாகும். அதுவும் சாம்பலோடு இருப்பதால் விளையாடுவது சாத்தியமில்லை. எனவே, புழுதியோட்டி கடலை போட்டு பெரம்பு அடித்தது முதலே தன் கூட்டாளிடம் சொல்லிவிட்டான். “கருப்பா, செடி புடுங்குன மக்கியா நாளே கபடி ஆட்றோம்”. கருப்பனோடு காளியப்பன், ரவட்டை, டிங்கிரி என அனைவரும் தலையாட்டினார்கள்.

முதல் செடி பார்த்திபன் கையால் பிடுங்கப்பட்டு தொடர்ந்து சனி மூலை கழனி என சொல்லும் பகுதி முழுக்க பிடுங்கி முடிக்கப்பட்டது. பார்த்திபன் தன் கூட்டாளிகளோடு களத்தில் இறங்கினான். செடிகள் பிடுங்கப்பட்ட சிறு துவாரங்களை காலால் நிரப்பினார்கள். கோடுகள் கிழிக்கப்பட்டு கபடி களம் தயாராகியது.

பிடுங்கப்பட்ட செடிகள் பெரும் குழுவாக ஒரு இடத்தில் அமர்த்தப்பட்டு செடிகள் தனியாக கடலை தனியாக பிரித்துக்கொண்டிருந்தார்கள் வேலைக்கு வந்தவர்கள். இவர்கள் செய்யும் வேலையைப் பார்த்துக்கொண்டு விளையாடுவதற்கு காத்திருந்தார்கள் பார்த்திபன் மற்றும் நண்பர்கள்.

2

முதல் முறையாக இவர்களோடு பார்த்திபன் விளையாடியது பெரும் தயக்கத்துடன்தான். “இவங்க யாரையும் தொடக் கூடாது டா” – என்ற ஆணை பார்த்திபன் வீட்டில் இருந்து அவன் சிறு வயதிலே வந்துவிட்டது. ஆனால், அவன் வேறு யாரோடுதான் விளையாடுவான்? பள்ளியைத் தவிர்த்து அவனுக்கு நண்பர்கள் என்றால் இவர்கள்தான். முதல் முறை இவர்களோடு விளையாடும்போது அவன் நெஞ்சில் சிறு தயக்கம் இருக்கவே செய்தது. யாரும் பார்த்துவிட்டால் என்ன ஆகுமோ? அவர்கள் தன்னைத் தொட்டால் உண்மையிலே தீட்டு ஆகிவிடுமோ என்று பல குழப்பங்கள் இருந்தது.

ஆனால், புழுதிக் கறை படிய கட்டி உருண்டு அவர்கள் உடம்போடு ஒன்றி விளையாட ஆரம்பித்ததும் அத்தனை தயக்ககங்களும் மறைந்துவிட்டது. அதன் பின் இதுவே வாடிக்கையாகிவிட்டது. விளையாடிய களைப்பில் வழக்கம்போல பார்த்திபன் வீட்டுத் தொட்டியில் தண்ணீர் குடிக்க விரைந்தார்கள். அங்கு பார்த்திபனின் பாட்டி அவர்கள் வருவதை முறைத்துப் பார்த்தபடி தன் கையிலிருந்த ஒரு சொம்பை தொட்டியின் மீது வைத்தாள். வாண்டுகள் தண்ணீர் தாகமெடுத்தும் அவள் நிற்பதால் பொறுத்திருந்தார்கள். “தெ தெ ஏய் பசங்களா இனிமே தொட்டில வாய் வச்சி குடிச்சீங்கனா இந்த பக்கமே வர கூடாது. இதுக்கப்புறம் இந்த சொம்புலதான் மொண்டு குடிக்கணும்”, அவர்கள் நீல பெய்ன்ட் அடித்த சொம்பை உற்றுப் பார்த்தார்கள். அவர்களோடு சேர்ந்து விளையாடிய தடம் பார்த்திபனிடம் தெரிந்தது. “ஊட்டுக்கு வா.. உங்க அப்பன சூடு வைக்க சொல்றேன்”

அவனை முறைத்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள். இந்த தொட்டியை விட்டால் ஒரு மைலிற்கு எந்த தண்ணீர் வசதியுமில்லை என வேறு வழியில்லாமல் சொம்பை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்கள். கைகள் நிரப்பி கட்டுப்பாடுகள் இல்லாமல் அள்ளிக் குடித்த தண்ணீரை குவளையில் அளவாக குடிப்பதை நினைத்து அரை மனதோடு அன்று தங்கள் முழு வயிறையும் நிரப்பினார்கள்.

3

கிருத்திகை பூஜை முடிந்ததும் தங்க சொம்பில் நீர் வலவி சாமி கும்பிட்டார்கள். கடலைச்செடி பிடுங்கிக்கொண்டிருப்பவர்களை பார்த்துக்கொள்ளச் சொல்லி பார்த்திபனை விட்டு வந்தது பாட்டிக்கு நியாபகம் வந்தது.

“நீங்க சாமி கும்புட்டு சாப்புடுங்க நான் போய் கல்ல செடி எடுத்து போட்றேன்” – கிழவி கல்லக்கா கழனியை நெருங்கும்போதே பதைபதைக்க ஆரம்பித்தாள். வேலையாட்கள் அனைவரும் தெரியும் திசை பார்த்து அமர்ந்து, பார்த்திபனும் அவனது கூட்டாளிகளும் கபடி விளையாட கோடுகள் கிழிப்பதைப் பார்த்து எரிச்சலானாள். அவனும் இவள் பார்ப்பது தெரிந்து தலை திருப்பிக்கொண்டான்.

கிழவி தன் இடுப்பில் சொருகியிருந்த சிகப்பு சுருக்குப் பையைத் திறந்து, வதங்கிப் போயிருந்த வெற்றிலை ஒன்றை எடுத்து, சிறு அளவான சில்வர் மூடியில் இரு விரல் அளவு சுண்ணாம்பு எடுத்து சுருட்டி சொத்தை இல்லாத பல் பக்கமாக வைத்து அதக்கினாள். இதை அங்கே விளையாடிக்கொண்டிருந்த சில சிறுவர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு, “எத்தன கலக்காவ எடுத்து மறச்சி வெச்சிருப்பாளுங்களோ…எத்தன எத்தன வாய்க்குள்ள போயிருக்குமோ” என அவள் பார்வை கழுகுபோல் விரிந்தது.

கழனி முழுக்க ஆங்காங்கே செடிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. குவியல்களுக்கு அருகே கோணி சாக்கின் மீது உறித்து எரியப்பட்ட மணிகள் குவிந்து கிடந்தன. பச்சிளம் கொடிகளில் பொன்னிறமாக இருந்தவை சில கச்சிதமான மணிகளைக் கொண்டிருந்தது. அவை உரிக்க ஏதுவாக இருந்தது. சொற்ப கொடிகள் ஈரமான வெண் பஞ்சுகள் போல் இருக்கும் அவை வேரினோடு இருக்கமாக ஒன்றியிருந்து உரிப்பவர்களுக்கு விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்தது.

சிலர் குழந்தைகளோடு கல்லக்காய் உரித்தனர். ஐந்து செடி உருவல்களுக்கு ஒரு மணியை உடைத்து வாயில் போட்டுக்கொண்டனர். கொஞ்சம் குழந்தைகளுக்கும் கொடுத்தனர். அவை அதை வாயில் போட்டு வெண் பால் ஒழுகும்வரை மென்று முழுங்கின.

ஓடி ஆடி விளையாடும் குழந்தைகள் மதிய நேர கூழ் குடித்தலை ஏற்றுக்கொள்ளாது. அவ்வப்போது வாயில் போட்டுக்கொள்ளும் கல்லக்காய் மணிகளே அவர்களுக்குப் போதுமானதாய் இருந்தது.

கிழவி வரப்பைச் சுற்றி வந்தாள். குழந்தைகள் அவளைத் தாண்டி குறுக்கும் நெருக்கும் ஓடின.

“எங்கன்னா சும்மா கீதுங்களா பாரு. எதுக்கு இதுங்களயெல்லாம் கூட்னு வருதுங்க”

ஒரு பக்க கழனியில் உரித்துக்கொண்டிருக்க மறுபக்கத்தில் செடிகளை பிடுங்கிக்கொண்டிருந்தார்கள். அங்கேயும் சிலர் அவ்வப்போது வாய்க்கு சில காய்களை போட்டு மென்றுக்கொண்டிருந்தார்கள். இந்தப் பக்கம் உரித்துக்கொண்டிருந்தவர்கள். அவர்களை விட சில காய்கள் அதிகம் போட்டு மென்றுகொண்டே உரித்தார்கள்.

“எம்மா இதுங்களது வாயா? இல்ல வண்ணான் சாலையா?” என்று கத்திக்கொண்டே எழுந்து நடந்தாள் கிழவி. அவளின் புலம்பல்களைக் கேட்ட கூலிப்பெண்னொருத்தி தன் குழந்தைக்கு கல்லக்காய் ஒன்றை குடுக்க வந்ததை நிறுத்திவிட்டு கல்லக்காய் குவியல்களில் அதை தூக்கி போட்டுவிட்டு, “தொ பாரு கெயவி, வந்து பாத்தியா வாயி வண்ணான் சாலையாட்டம் கீறத. ஊர்ல மத்த கயினில உரிக்கிறவங்களாம் மடில வாரி போட்னு போவாங்க. நாங்க அப்டியா பண்றோம்?”

“ஓணும்னா மடில வாரி போட்னுதா போங்களேன். வாரி போட்ற கை எதுன்னு பாக்கலாம்”

“ஏன் போட்னு போவ முடியாதா இன்னா” தான் உட்கார்ந்திருந்த தலை அளவிற்கு கல்லக்காய் குவியலை பறித்து குவித்திருந்த பெண்னொருத்தி சொன்னாள்.

கிழவியின் முகம் வெறுமையில் சில நொடிகள் வெற்றிலையை மென்றது. பின் ஆரம்பித்தது. “எடுத்துனுதான் போங்களேன். டி எம்மா, காக்கா குருவி துன்னது போவ நீங்களும் துன்னுட்டு போங்க. அடுத்த பறிப்புக்கு யாரு கயினிக்கு போறிங்கன்னு பாக்குறேன்”

தன் முழு கோபத்தையும் யார் மீது காண்பிப்பது எனத் தெரியாமல் அவள் தூரத்தில் தன் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருக்கும் பார்த்திபனை பார்த்து, “ஏய் பையா” என்றாள் .

அவன் கண்டுக்கொள்ளாமல் கபடி களத்தின் உள்ளே இருக்கும் சருகுகளை எடுத்து வெளியே எறிந்து கொண்டிருந்தான்.

“ஏய், உன்னதான்டா செவுடா”

அவன் கோபத்தில் திரும்பி, “இன்னா கெயவி?”

“உங்கொப்பன் கூப்புட்றான் வாடா”

மீண்டும் அசட்டை செய்துவிட்டு தன் நண்பர்களோடு குழுவாகப் பிரிந்தான்.

கிழவி எரிச்சலாக கத்திக்கொண்டே இருந்தாள். “கலக்கா உரிக்கறவங்கள பார்றானா பறப்பசங்க கூட சேந்துக்குனு கபடி ஆட்றியா.. ஊட்டுக்கு வா. சூடு இசிக்க சொல்றேன்”

“ஏய் கெயவி, எங்க அப்பாவே எதும் சொல்ல மாட்டாரு. நீ மூடிகினு இரு” – கூச்சலிட்டு சொன்னதும் அங்கு கல்லக்காய் உரித்துக்கொண்டிருந்த அனைவரும் குபீரென சிரிக்க ஆரம்பித்தார்கள்.

கிழவிக்கு அவன் பேரன் தன்னைக் கிழவி எனத் திட்டியதை விட தான் அதிகாரம் செலுத்த வேண்டும் என நினைத்தவர்கள் அனைவரும் அவளை பார்த்து எக்களித்தது அவளுக்குப் பெரும் துயரை ஏற்படுத்தியது. அங்கிருந்து நகர்ந்து கிணற்று மேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

உரித்து எரியப்பட்ட கழனிக்காட்டு களத்தில் ஆட்டம் தொடங்கியது. பார்த்திபன் தலைமையில் கருப்பன் இதர சில வாண்டுகள் ஒரு பக்கமாகவும், டிங்கிரி தலைமையில் ரவட்டை இன்னும் சொற்ப பொடுசுகளும் ஒரு பக்கமாகவும் இருந்தார்கள்.

கருப்பன் அனைவரை விடவும் உயரமும் எடையும் கொண்டவன். அவன் ரெய்டு சென்றால் எதிரணியில் பயம் இருந்தாலும் கபடி கூவிக்கொண்டு மெல்லதான் நகர்வான். அந்நேரம் அவனின் ஒற்றைக்காலை ஒருவர் பிடித்துக்கொண்டு, மற்றொருவர் வயிற்றை பிடித்து கீழே சாய்த்தால் அடங்கிவிடுவான். ஒருவேளை கருப்பன் சுதாரித்துக்கொண்டால் காலை பிடித்துக்கொண்டிருப்பவனை தர தர வென தேய்த்துக்கொண்டே கோட்டை தாண்டி இழுத்துச் சென்றுவிடுவான். கடைசியாக வறண்டு போன ஏரி மண்ணில் விளையாடிய போது ரவட்டை இப்படியாக கருப்பனின் காலை பிடித்துக்கொள்ள, மற்ற எவனும் வந்து பிடிக்க பயந்து தாமதித்ததால் ரவட்டையை தேய்த்துக்கொண்டே கோட்டிற்கு சென்றுவிட்டான். ரவட்டையின் அரை டவுசர் கிழிந்து நார் நாராகி ரத்தம் வருவது போல் பின் பக்கம் ரணமாகிவிட்டது.

எனவே, இம்முறை கருப்பனைப் பிடிக்க லாவகமாக விளையாடும் டிங்கிரியை அவன் பக்கம் வைத்துக்கொண்டான். கருப்பனுக்கு கண்டுபிடிக்கப்பட்ட பலவீன யுக்தி போல டிங்கிரிக்கு இன்னும் சரியாக கிடைக்கவில்லை. எத்தனை பேர் பிடிக்க முயன்றாலும் காற்றுப்போல் துள்ளிக்கொண்டே கபடி கூறுவான். காலை பிடிக்க முயற்சிப்பவன் வாயில் மண்தான். வேண்டுமென்றே காலை சில நொடிகள் பிடிக்க ஏதுவாக காண்பிப்பான். எவன் ஒருவன் அவன் காலை லாவகமாக பிடித்துவிடலாம் என பாய்கிறானோ சட்டென காலை எடுக்க, அவன் மண்ணைக் கவ்வுவான். விழுந்தவனின் புற மண்டையை அடித்துவிட்டு கோட்டைத் தொடுவான். விழுந்தவன் வாயில் மண்ணும் வெறுப்பும் தகிக்கும். எனவே, இன்றைக்கான போட்டி என்பது இரு அணிகளுக்கானது அல்ல. கருப்பன் – டிங்கிரி இருவருக்குமானது.

முதல் ரெய்டு பார்த்திபன் பக்கம் என முடிவானது. வழக்கத்திற்கு எந்த மாற்றமும் இல்லாமல் பொடுசு ஒன்று பார்த்திபன் பக்கமிருந்து சென்றது. முன் பின் பெரிய அணுபவமில்லாத அவன் கோட்டு மண்ணைத் தொட்டு தலையில் தேய்துவிட்டு, “கபடிக் கபடிக்” என சத்தம் வர கூவிக்கொண்டே நடு மையத்தை நோக்கிச் சென்றான். அவனுக்கு நடுப்பக்கமாக அனைவரும் வழிவிட்டார்கள். அவனும் போனஸ் கோட்டைத் தொட்டு அதையும் நெற்றியில் தேய்த்தான். திரும்பியதும் அரை வட்டத்துக்கு அவனைச் சுற்றி இருந்தார்கள். எப்படியும் தூக்கி வெளியே எறிந்துவிடுவார்கள் எனத் தெரிந்ததும் அவனாக, “கபடிக் கபடிக் கபடிக்….” என சத்தத்தை மெல்ல குறைத்துக் கொண்டு, களத்தை விட்டு வெளியே சென்று இரண்டு கல்லக்காய்களை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.

டிங்கிரி பக்கமிருந்து இப்போது ரெய்டு. துடுக்கு ஒன்று கபடி கூவிக்கொண்டு கருப்பனை நேராகத் தொடச் சென்றது. வந்தவனை அரவணைத்துக் கொண்டு கோட்டின் வெளியே தூக்கி எறிந்தான். அவன் கல்லக்காய் குவியல் ஒன்றின் மீது தடுமாறி விழ சில அடிகள் கிடைத்தது.

இப்போது பார்த்திபன் பக்கம் கருப்பன் மட்டுமே இருக்க அந்த பக்கம் ரவட்டையும் டிங்கிரியும் இருந்தார்கள். கருப்பன் கோட்டை மிதித்து உள்ளே இறங்கியதும் ரவட்டையின் தொண்டை எச்சிலை விழுங்கியது. எந்த சலனமுமின்றி மிதமான அளவில் கபடி கூவிக்கொண்டு வலது புறமுள்ள போனஸ் கோட்டை நோக்கி நடந்தான். அவன் வருகை இருவரையும் இடதுபுறம் இழுத்துச் சென்றது. திரும்பியதும் ரவட்டை அவன் காலையே பார்த்துக்கொண்டிருந்தான். அதை கருப்பனும் உணர்ந்தான். ரவட்டைக்கு இரண்டு விடயம்தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. பயத்தில் விட்டு விடுவோமா அல்லது இந்த டவுசரும் கிழியுமா? பயந்து ஒதுங்குவதை விட டவுசர் கிழிவதை அவன் ஏற்றுக்கொண்டான். மூச்சை இழுத்துக்கொண்டு கருங்காளி மரம் போன்ற காலைத் தாவி அனைக்க மரம் சிறிது ஆட்டம் கண்டது. ஆனால், விழவில்லை! ரவட்டை தன் அடி தேய்வதை உணர்ந்தான். இன்னும் ஐந்து தேய் தேய்த்தால் ரத்தமும் எல்லை கோடும் வந்துவிடும். கண்னை மூடிக்கொண்ட அவன் இறுக்கமாக பிடித்துக்கொண்டான். மறுநொடி மரம் சரிந்தது. பெரும் மூச்சு விடப்பட்டது. டிங்கிரி சாய்ந்த மரத்தில் இருந்து தன் தலையை எடுத்தான். கருப்பன் புற மண்டை மண்ணைக் கவ்வியது. டிங்கிரி, கருப்பன் வயிறை முட்டிய தன் தலையை நெட்டை முறித்தான்.

இந்தப் பக்கம் பார்த்திபன் மட்டுமே. பார்த்திபன் சுமாராக விளையாடுபவன். ஆனால், யாரும் ரெய்டு போகும்போது அவனைத் தொடவோ, அவன் ரெய்டு வரும்போது பிடிக்கவோ தயங்குவார்கள். இன்னும் சொல்லப்போனால் கருப்பன், டிங்கிரி, ரவட்டை என அவன் ஈடு உள்ள அவர்களின் பெற்றோர்களே சொல்லி விடுவார்கள்… “ஒடையாமூட்டு பையன உட்டு குடுத்து வெளையாடனும்பா”

ஆனால், இந்த தருணத்தை அவன் வெறுப்பான். விளையாட்டில் அவனுக்காக பாரபட்சம் பார்ப்பதை அவன் விரும்ப மாட்டான். பார்த்திபன் மட்டும் இருக்கும் களத்திற்கு டிங்கிரி ரெய்டு சென்றான். பார்த்திபனுக்குத் தெரியும் அவன் தன்னை தொட மாட்டான் என. இப்படியாக டிங்கிரி அவனைத் தொட முயற்ச்சிப்பது போல நடிப்பதும், பார்த்திபன் அவனைப் பிடிக்க முயற்சிப்பது போல நடிப்பதும் வேடிக்கையாக இருந்தது. டிங்கிரி போனஸ் கோட்டை தொட்டுவிட்டுச் சென்றான்.

இப்போது பார்த்திபன் முறை கூவிக்கொண்டு இருவரையும் தொட முயற்சித்தான். அவனுக்கு நன்றாகவே தெரியும் தொட்டுவிட்டுச் சென்றால் தன்னை பிடிக்க மாட்டார்கள் என்று. எனவே அவர்களிடம் தோற்றாலும் பரவாயில்லை உண்மையாக விளையாட வேண்டும் என நினைத்தான். எனவே, அவர்கள் பிடிப்பதற்கு ஏதுவாகவே ரெய்டு சென்றான். வலது கையை வீசிக்கொண்டே சென்ற அவன் இருவரின் முகத்தையும் சீண்டிவிட்டு திரும்ப இருவரும் பிடிக்க முற்படுவது போல் நடித்தனர். அவர்களிடமிருந்து விலகி ஓடி கோட்டிற்கு அருகில் சென்று திரும்பினான். அவர்கள் இவனைப் பிடிக்க அருகில் கூட வராததை உணர்ந்தான். திரும்பி கூவிக்கொண்டே அவர்கள் அருகில் வந்து பிடிப்பதற்கு ஏகுவாக நின்ற பின்னும் அவர்கள் பிடிக்க பயப்படுவது போல இருந்தார்களே தவிர பிடிக்கவில்லை. இந்த செயற்கை ஆட்டத்தை களத்திற்கு வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்த வாண்டுகளுக்கு விளங்கவில்லை. ஆட்டம் தன் இயல்பை இழந்துவிடக் கூடாதென உள்ளே இருந்த மூவரும் விழிப்புடன் இருந்தார்கள். பார்த்திபன் தோற்பதை விட இந்த விளையாட்டை இயல்பாக ஆடி முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்க, அவர்கள் இருவரும் இந்த தருணத்தில் இருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தார்கள்.

பார்த்திபன் இறுதியாக முடிவு செய்து அவர்கள் மீது பாய்ந்தான். அவன் தங்கள் மீது விழ எத்தனிப்பதை உணர்ந்த இருவரும் அவனை தங்கள் மீது கிடத்திக்கொண்டு கோட்டின் மேல் விழுந்தார்கள். கருப்பன் துள்ளி குதித்து எழுந்து ஆடினான். எதிரணி தோற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பார்த்திபன் எழுந்து தன் உடலை தூசி தட்டினான். பார்த்திபனை தூக்கி தன் தோளில் வைத்துக்கொண்டு களத்தைச் சுற்றி வந்தான். நாடகம் போல இறுதியில் நடந்து முடிந்த போட்டியை அனைவரும் மெச்சினார்கள்.

ஆடிக் களித்த கையோடு தண்ணீர் அருந்த தொட்டியை நோக்கி நடையை கட்டினார்கள். பார்த்திபன் தன் வீட்டிற்குச் சென்று தண்ணீர் அருந்தினான். சிறிது இளைப்பாறிவிட்டு வெளியே வந்த பார்த்திபன் தொட்டியருகே கபடி விளையாடிய பயல்கள் களைத்தபடி நின்றவாறும் உட்கார்ந்தவாறும் இருப்பதை பார்த்தான். அருகே சென்று பார்க்கையில் கருப்பன் நாவறண்டு கீழே உட்கார்ந்திருக்க, ரவட்டையும் டிங்கிரியும் தொட்டியை எட்டிப் பார்த்தவாறு இருந்தார்கள். பொடுசுகள் சில கிணற்றை எட்டிப் பார்த்தவாறு இருந்தார்கள்.

“தண்ணி குடிக்கலாம்னு வந்தோம் பார்த்திபா. சொம்ப காணோம்”

“ஏண்டா அப்போவே வந்தீங்க இன்னும் குடிக்கலயா? அப்டியே கைய உட்டு எடுத்து குடிக்க வேண்டியதான”

டிங்கிரி கண்ணை வலது புறம் திருப்பினான். அங்கே அவனது பாட்டி வெற்றிலை போட்டு அதப்பிக்கொண்டிருப்பதை பார்த்தான். கண்கள் வேறு எங்கோ இருப்பதை போல உணர்ந்தாலும் கிணற்று மேட்டின் மேல் நிலைநிறுத்தியிருப்பதை உணர்ந்தான் பார்த்திபன். கெழவி எதும் இவர்கள் மீதுள்ள கோபத்தில் சொம்பை தூக்கி எறிந்திருக்குமோ என்ற சந்தேகம் வந்து மறைந்தது. அந்த சிந்தனை கருப்பனை பார்த்ததும் சிதறியது. தொட்டியின் அருகே அவனைத் தூக்கிக் கொண்டாடிய தோள்கள் தாகத்தால் துவண்டு கிடந்தன. தாகத்தில் மூச்சு ஏறி இறங்குவது அவன் உடல் குலுக்கத்தில் தெரிந்தது.

“டேய் எப்பா ரவட்ட, தண்ணி மொண்டிங்களா இல்லயாடா?”

அவன் மூச்சு ஏற்ற இறக்கத்தை பார்த்த பார்த்திபனுக்கு பயம் வந்தது. கிணறை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பொடுசுகள் சில அத்தனை பெரிய வட்டக் கிணறு பாதி அளவு முழுக்க நீர் இருந்தும் எடுத்து குடிக்க இயலாத தருணத்தை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார்கள்.

தன்னை ஜெயிக்க வைத்தவர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க இயலாத நிலையை நினைத்து வருந்தினான் பார்த்திபன். வெற்றிலையை அதப்பிக்கொண்டு கிணறை நோக்கி நடந்து வந்த அவனது பாட்டி, “தெ ஏய் பசங்களா, இன்னா இம்மா நேரமா கெண்த எட்டி பாத்துனுகீறிங்க. உள்ள வீந்தா யார் பதில் சொல்றது? தண்ணி ஓனும்னா சொம்ப எடுத்து தொட்டில மொண்டு குடிச்சிட்டு போறதான”

டிங்கிரி கோபத்துடன், “ஏன் ஓடையாச்சம்மா சொம்ப காணோம்னு தான இம்மா நேரம் தேடினு இருக்கோம்”

“தென்னம்பால எதனா இருந்தா எடுத்துனு வந்து குடிக்கறதான?”

தென்னம்பாளை, பனை ஓலை எதுவும் அவர்கள் இருக்கும் தாகத்தில் கண்ணில் கிடைக்கவில்லை.

கருப்பன் துவண்டு போவதை பார்க்க முடியாமல், “தொ இருங்கடா சொம்பு எடுத்தாறேன்” என்று பார்த்திபன் வீட்டிற்குள் ஓடினான். அவன் ஓடும் வேகத்தைப் பார்த்து வீட்டிற்குள் இருந்து எந்த சொம்பை எடுத்து வரப்போகிறான் என்று தெரியாமல் கிழவி ஓடினாள்.

சில நிமிடங்களில் பார்த்திபன் வீட்டை விட்டு வெளியே வந்தான். அவன் கையில் மின்னும் தங்க நிற சொம்பு வெயில் பட்டுக் கூசியது. அதைப் பார்த்ததும் கிழவி வாயில் அடித்துக் கொண்டு அவன் பின்னால் ஓடினாள்.

“ஏ பொரம்போக்கு, அது சாமி சொம்பு டா அது! அவ்வா அவ்வா அவ்வா” – சத்தமிட்டு வாயில் அடித்துக்கொண்டாள்.

அதுவரை தேய்ந்து போய் ஒடுங்கிய நீல சொம்பில் குடித்தவர்களுக்காக புதிய தங்க நிற சொம்பை கொடுத்ததும் ரவட்டையும் டிங்கிரியும் வாங்கத் தயங்கினார்கள். கருப்பன் அழாத குறையாக தண்ணீருக்காக ஏங்கிக்கொண்டிருந்தான்.

பார்த்திபன் பொன்நிற சொம்பை தொட்டியின் உள்ளே விட்டு தண்ணீர் எடுத்தான். உச்சி வெயில் சூரியன் அவன் தண்ணீர் எடுக்கையில் சொம்பை மினுக்கியது. கருப்பனின் வாயில் வைத்ததும் அதை வாய் வைத்து குடித்து வெகுவாக தாகத்தில் இருந்து மீண்டான். இனி இந்த சொம்பில் கை வைத்தால் குற்றமில்லை என்றெண்ணி ரவட்டை, டிங்கிரியைத் தொடர்ந்து மற்ற பொடுசுகளும் தண்ணீர் அருந்தினர். அதுவரை யார் உதட்டிலும் படாத சொம்பு அன்று தவித்த வாய்களுக்கு நீர் கொடுத்து புண்ணியத்தை சேர்த்தது.

கிழவி தொட்டியை வந்தடைவதற்குள் அனைவரும் தண்ணீர் குடித்து முடித்தனர். அங்கு வந்ததும் அருகிலிருந்த கற்களை பொறுக்கி அனைவரின் மீதும் வீச ஆரம்பித்தாள். அங்கிருந்தவர்கள் அனைவரும் சிதறி ஓட அதில் ஒரு கல் பொன் சொம்பின் மீது விழுந்து “டங்” என ஒலி எழுப்பியது. பொன் சொம்பு கல் பட்டு ஒடுங்கியது.

பொழுது சாய்ந்ததும் வேலை முடிந்து கல்லக்காய் கழனியில் இருந்து வெளியே வந்தவர்கள் தாங்கள் காலையில் கொண்டு வந்த தண்ணீர் போத்தல் தீர்ந்ததால் பலரும் தொட்டி பக்கம் வந்தார்கள். அங்கு அந்த சொம்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு நின்றார்கள்.

“ஒடையாமூட்டுதா இருக்கும் மறந்து வெச்சிட்டு போயிருப்பாங்க. கொண்டுனு போய் குடுத்தடலாம்” – என்றவாறே ஒருவன் சொம்பை எடுக்க அதன் நடுவில் நீல நிற வண்ணம் பூசப்பட்டிருந்ததைப் பார்த்தான்

“இல்லப்பா இது நமக்குதான்”

அந்தி வெளிச்சமானது தொட்டி உட்பட அனைத்தையும் மூட, மஞ்சள் ஒளியாய் சொம்பு மட்டும் பளிச்சிட்டது.

********

tamizhanvasanth7@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button