இணைய இதழ்இணைய இதழ் 83தொடர்கள்

அந்நிய நிலக் குறிப்புகள் – பகுதி 25 – வளன்

தொடர் | வாசகசாலை

Inquisition பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஐரோப்பாவில் மத்தியகாலத்தில் கிறிஸ்துவம் அதிகார மையத்திலிருந்த போது பில்லி சூன்யம் போன்றவற்றில் தொடர்புடையவர்களை கொடூரமான முறையில் துன்புறுத்தி கொலை செய்தார்கள். மதம் அதிகார மையமாகும் போது இப்படியான சம்பவங்கள் அரங்கேறுயதை வரலாறு எங்கும் காணமுடிகிறது. இதுவே கிறிஸ்துவம் மதமாக உருவான காலத்தில் மற்ற மதத்தினரால் பெரும் கொடுமைகளை சந்தித்தது. இன்க்விஷிஷன் கிறிஸ்துவத்தின் வரலாற்றில் மறைக்கமுடியாத கரும்புள்ளி.

பாஸ்டன் வரலாற்றிலும் இந்த வகையான இன்க்விஷிஷன் நடந்திருக்கிறது. பாஸ்டனுக்கு மிக அருகில் இருக்கும் இன்னொரு துறைமுக நகரம் சேலம். காலணித்துவ காலம் மாறாமல் இருக்கும் சில நகரங்களில் சேலமும் ஒன்று. அதேபோல என்னுடைய இன்னொரு விருப்பமான நகரம் நியூபெட்ஃபர்ட். இன்றளவும் சேலம் நகரத்தை சூனியக்காரிகளின் நகரம் என்றுதான் அழைக்கிறார்கள். நகர முத்திரையும் பெரிய தொப்பியணிந்த சூனியக்காரி தனது துடப்பத்தில் ஏறி பறந்து செல்வதாக அமைந்திருக்கிறது. அக்டோபர் இறுதியில் நடக்கும் ஹேலோவீனை கொண்டாட மக்கள் பெரியளவில் இங்கு ஒன்று கூடுகிறார்கள்.

சமீபத்தில் சேலம் சென்று வந்தேன். ‘சேலம்’ என்ற வார்த்தை ‘சலோம்’ என்ற ஹீப்ரூ மொழியின் வேரில் தோன்றியது. ‘அமைதி’ என்பது இச்சொல்லின் பொருள். பைபிளின் தொடக்கநூலில் சேலம் மன்னர் மெல்கிஸதேக் ஆப்ரகாமுடன் செய்து கொண்ட உடன்படிக்கை பற்றிய குறிப்புகள் இருக்கிறது. மெல்கிஸதேக் அமைதியின் அரசர். ஒருவேளை முன்பொரு காலத்தில் மேஸசூஸட்ஸில் இருக்கும் சேலம் அமைதியின் நகரமாக இருந்திருக்கலாம். ஆனால் மத்தியகாலத்தில் அவ்வாறில்லை. காலணித்துவம் இன்க்விஷிஷனை இங்கே கட்டவிழ்த்திருக்கிறது. சூனியக்காரிகள் என்றறியப்பட்ட பல பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

யார் இந்த சூனியக்காரிகள்? இப்போது இருப்பது போன்று மருத்துவ வசதிகள் அப்போது இருந்ததில்லை. இன்று ஐரோப்பிய நாகரீகத்தையும் அமெரிக்க நாகரீகத்தையும் வியந்தோதும் சூழல் அப்போது இல்லை. ஐரோப்பியர்கள் உடல் உபாதைகள் எதுவானாலும் மத குருமார்களிடம் சென்று ஆசி பெற்று வருவார்கள். உபாதைகள் சரியானால் குருக்களுக்கு காணிக்கை; இல்லை என்றால் இறந்தவர்கள் மோட்சம் சென்றுவிட்டதாக நம்பி இருக்க வேண்டியது தான். இதுதான் நாகரீகம் இதுதான் சரியான போக்கு என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் மிக எளிமையாக சில பூர்வகுடிகள் உடல் உபாதைகளுக்கு மருந்து கொடுத்து சரி செய்து கொண்டிருந்தார்கள். சிறு வயதில் எனக்கு வயிற்று வலி எடுக்கும் போது என் தாத்தா ஓமத்திராவகம் ஒரு மூடி குடிக்கக் கொடுப்பார் அல்லது ஒரு கல் உப்புடன் சீரகத்தை மென்று சாப்பிட சொல்வார். வாயுத்தொல்லை ஏற்படும் போது நாட்டு பூண்டை சுட்டு சாப்பிட கொடுப்பார்கள். இதெல்லாம் தான் பூர்வகுடிகளின் மருத்துவ முறை. சாதாரண காய்ச்சலும் சளியும் பற்களின் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவும் ஐரோப்பியர்களின் உயிரை குடித்துக் கொண்டிருந்த போது வேர்களையும் இலைகளையும் கொண்டு எப்படி வியாதிகளை குணப்படுத்துகிறார்கள் என்பது புரியாத புதிராக இருந்தது.

அமெரிக்க தொல்குடிகளில் ஷாமன் என்று ஒருவர் இருப்பார். அவர்தான் இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்கும் பொதுவானவர் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. பல இனங்களில் ஷாமன்களுக்கு தொடக்கமும் முடிவும் இல்லை என்றும் அவர்கள் பாலின வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர் என்றும் நம்பப்பட்டது. ஷாமன்கள் மருத்துவத்தில் தேர்ச்சிப் பெற்றிருந்தார்கள். மந்திரங்கள் ஓதி மக்களின் துயர்களை போக்கினார்கள். கனவுகளுக்கு விளக்கம் கொடுத்தார்கள். இன்றளவும் தீர்க்க முடியாத சில மனப்பிரச்சனைகளுக்கு ஷாமனிச முறையில் மருத்துவம் பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. இப்போதுள்ள அறிவியல் விளக்கங்களைக் கொண்டு ஷாமன்களின் மருத்துவ முறைகள் ஒன்றுமேயில்லை என்று நிரூபித்துவிடலாம். ஆனால் அப்போது ஷாமன்களின் தேவை இன்றியமையாதது. அவர்கள் வழக்கமான வாழ்விலிருந்து விளக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் மருத்துவ குறிப்புகள் ரகசியமானதாக இருந்தது. அவர்களின் மொழி மக்களுக்கு புரியாததாகவே பாதுகாக்கப்பட்டது. இப்படியாக தொல்குடிகளுக்கு வாழ்வின் மீதான சுவாரசியத்தை கூட்ட இருந்த ஒரே வழி ஷாமன்கள் தான். அதன் நீட்சியாகத்தான் ஒவ்வொரு மதத்திலும் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வு சாதாரண மனிதர்களை காட்டிலும் மர்மமானதாகப் பேணப்பட்டு வருகிறது. அறிவியல் அனைத்துக்கும் விடை சொல்லிவிட்டாலும் இன்றளவும் சாமியார்களின் தேவை இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. இப்படி இயற்கையோடு ஒன்றித்திருந்த பழங்குடிகளின் நீட்சியாக வந்தவர்கள் தான் சூனியக்காரிகள்.

அப்போது அறிவியல் வளர ஆரம்பித்திருந்தது. மருத்துவர்கள் இங்கும் அங்கும் ஓடி மருத்துவம் பார்த்தார்கள். இருந்தாலும் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. இப்படியான சூழலில் சில இளம்பெண்கள் தங்கள் சமையலறையிலிருக்கும் சில பொருள்களின் உதவியோடு வியாதிகளை குணப்படுத்தினார்கள். ஆகவே கிராமத்து பெண்கள் இப்படியான இளம்பெண்களிடம் தங்கள் குழந்தைகளை தூக்கிச் சென்று குணப்படுத்திக் கொண்டார்கள். இப்படி மருத்துவம் பார்க்கும் பெண்கள் தங்கள் மருத்துவ குறிப்புகளை தெளிவாக யாரிடமும் சொல்ல மறுத்து ஒரு ரகசியத்தை பேணிக்காத்தார்கள். இது ஆண் வர்கத்தை அவமதிப்பதாகவும் மத நம்பிக்கைகளுக்கு எதிரானதாகவும் பார்க்கப்பட்டது. இந்தப் பெண்களை பொதுவெளியில் வைத்து தண்டிக்க முயற்சித்தார்கள். தங்கள் ரகசியத்தை வெளியில் சொல்லும்படி வற்புறுத்தப்பட்டார்கள். முடிவில் அவர்கள் பல்வேறு வதைகளுக்கு ஆளாகி மடிந்தார்கள்.

ஐரோப்பாவில் 1300களில் கிறிஸ்துவ மதத்தில் நிகழ்ந்த சில ஆட்சி மாற்றங்களுக்கு இடையில் இன்க்விஷிஷனும் நடந்துக் கொண்டிருந்தது. இம்மாதிரியான பதற்றமான சூழலில் ஒரு மடாலயத்தில் தொடர்ந்து சில துர்மரணங்கள் நிகழ்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு உம்பர்த்தோ எக்கோ ‘த நேம் ஆஃப் த ரோஸ்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். படிப்பதற்கு கடினமான நாவல். இதை அப்படியே திரைப்படமாகவும் எடுத்திருக்கிறார்கள். கடினமான நாவல் என்றாலும் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. அதில் அறிவியல் குறித்த உரையாடலில் துறவி ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “ரோஜர் பேகன், அறிவியலின் ரகசியங்கள் எல்லோருக்கும் அறிவிக்கப்படுவதைக் குறித்து எச்சரிக்கிறார். சிலர் அதை தீமையான காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடும். அறிவார்ந்த மனிதன் எளிய அறிவியல் விதியை ஒரு மாயாஜாலத்தைப் போல மறைத்து உரிய நேரத்தில் தகுந்தவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்” இந்திய சமூகக் கட்டமைப்பில் இது எவ்வாறு புரிந்துக் கொள்ளப்படும் என்று தெரியாது ஆனால் அன்றைய ஐரோப்பா அப்படித்தான் இருந்தது. நவீனத்துவம் மற்றும் அதை தொடர்ந்து வந்த பின் நவீனத்துவத்தின் சாதகங்களும் பாதகங்களும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான். இன்று எல்லாருக்கும் எல்லாம் சாத்தியமாகிவிட்டது. அதுவே நம் வாழ்க்கையை சாவாலுக்குரியதாக மாற்றிவிட்டது. உதாரணமாக எனக்கு துப்பாக்கிச் சுட தெரியாது. தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இணையத்தில் பல்வேறு காணொலிகளைப் பார்த்து எப்படி துப்பாக்கிச் சுட வேண்டும் என்று எளிதில் கற்றுக் கொள்ளலாம். விளைவு நிம்மதியாக ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பொருள்கள் வாங்க முடியவில்லை. எந்த நேரத்தில் யார் வந்து சுடுவார் என்கிற பதற்றத்திலே வாழ்கிறோம். இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மெயினில் இருக்கும் பௌளிங் அரங்கில் ஒருவர் புகுந்து சரமாரியாக பதினாறு பேரை கொலை செய்திருக்கிறார்.

எனவே அனைவரும் அனைத்தையும் அறிந்துக் கொள்ளக்கூடாது என்கிற பயம் இயல்பிலே மனிதர்களுக்கு இருக்கிறது. அந்த பயத்தின் காரணமாக பல்வேறு அப்பாவி பெண்களை சூனியக்காரிகள் என்று பழி சுமத்தி கொன்று குவித்திருக்கிறார்கள். சேலத்தில் அவ்வாறு தூக்கிலடப்பட்டவர்களின் நினைவிடத்திற்கு சென்றிருந்தேன். தூக்கிலடப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுகற்களை பார்க்கும் போது நம்மை அறியாமல் ஒரு பெரும் அமானுஷ்ய உணர்வுகள் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. சாரா கூட்ஸ் என்ற பெண்ணை ஜூலை 29, 1692ல் சித்ரவதை செய்து கொண்டிருக்கிறார்கள். அவள் இறப்பதற்கு முன் நீதிபதிகளை நோக்கி, “நான் சூனியக்காரி என்றால் நீங்களெல்லாம் சூனியக்காரர்களே! என் உயிரை நீங்கள் பறித்துக் கொண்டால் கடவுள் உங்களுக்கு ரத்தத்தை குடிக்க கொடுக்கட்டும்!” என்று சொல்லி இறந்திருக்கிறாள். இப்படி எத்தனையோ பேரின் கதைகளை சொல்லலாம்.

சேலம் ஒரு துறைமுக நகரம் என்பதால் பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த ஒரு நகரமாக அது இருந்திருக்கிறது. பல கலாச்சாரங்களின் மூட நம்பிக்கைகளும் அங்கு இருந்திருக்கிறது. புகழ் பெற்ற ஜிம் கார்பெட் என்ற பிரிட்டிஷ் வேட்டைக்காரரை நாம் அறிவோம். ஜிம் கார்பெட்டின் வேட்டைக் குறிப்புகளில் வேட்டைக்கு முன் பாம்பு ஒன்றை கொல்வதை அவர் வாடிக்கையாகக் கொண்டிருந்ததது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏன்? மூட நம்பிக்கைகளுக்கு விளக்கம் தேவையில்லை. நாம் வளரும் போதும் சில நம்பிக்கைகள் நமக்கு இருந்தது. எருக்கம் பூ மொட்டுக்களை உடைத்து தேர்ச்சியை கணித்தோம். கீரிப்பிள்ளைகளையோ செம்போத்துகளையோ பள்ளிக்கு செல்லும் முன் பார்த்துவிட்டால் அன்று முழுவதும் நல்ல நாளாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. என் தோழிக்கு ஒற்றை மைனாவை பார்த்துவிட்டு சென்றால் பெரும் துன்பங்கள் ஏற்படும் என்று நம்பிக்கொண்டிருந்தாள். இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். சேலம் பகுதியில் இருந்த விவாசாயிகளுக்கு அப்போது ஒரு நம்பிக்கை இருந்தது: துடப்பத்தில் அமர்ந்து கொண்டு எவ்வளவு தூரம் குதிக்கிறோமோ அந்த அளவுக்கு பயிர்கள் செழித்து வளரும் என்று நம்பினார்கள். அப்படி பெண்கள் துடப்பத்தை தங்கள் கால்களுக்கு இடையில் வைத்து குதித்து மகிழ்ந்தததை தூரத்திலிருந்து பார்த்தவர்கள் துடப்பத்தில் ஏறி பயணிக்க ஆசைப்பட்டே இவர்கள் இப்படி குதிப்பதாக புரளியை கிளப்பிவிட அதுவே சூனியக்காரிகளின் அடையாளமாக மாறிவிட்டது. சூனியக்காரிகள் துடப்பத்தில் ஏறி பறந்து செல்வதாகக் கதைகள் புனையப்பட்டு இன்றும் அது பிரபலமான பிம்பமாக இருக்கிறது.

அக்டோபர் மாதம் சேலம் விழா கோலம் பூண்டுவிடுகிறது. காரில் பயணிக்க அசாத்திய பொறுமை வேண்டும். அப்படியே நகரில் நுழைந்துவிட்டாலும் பார்க்கிங் கிடைக்காது. சில வீடுகள் தங்கள் இடங்களை பார்க்கிங் இடங்களாக்கி கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். எஸ்ஸெக்ஸ் வீதி வேறொரு உலகமாக மாறிவிடுகிறது. ஹாலிவுட்டில் நாம் பார்த்து பயந்த கோரமான உருவங்களில் மேக்கப் அணிந்துக் கொண்டு சிலர் காசுப் பார்க்கிறார்கள். சைக்கிக் எனப்படும் எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தை கணிக்கும் பேர்வழிகள் எங்கும் நிரம்பியிருக்கிறார்கள். அதைப்பார்த்துவிட்டு கூட வந்த நண்பன் நம்மூர் மாதிரி நாமும் கிளி ஜோசியம் என்று ஒரு கடை விரித்தால் சில ஆயிரம் டாலர்கள் ஒரே நாளில் சம்பாதிக்கலாம் என்றான். உண்மை தான். இந்திய மனங்களுக்கு எஸ்ஸெக்ஸ் வீதியில் நடைபெறும் களியாட்டங்கள் என்றும் உவப்பை தராது. காரணம் இதைவிட பன்மடங்கு கேளிக்கைகளை நாம் பார்த்துவிட்டோம். போக ஒட்டு மொத்த சேலத்திலும் அக்டோபர் மாதம் முழுவதும் நடப்பது வணிகம் மட்டுமே. அருங்காட்சியகங்கள் என்ற பெயரில் அங்கு நடப்பது பெரும் ஏமாற்று வேலை. சுவாரசியத்துக்கு ஏங்கும் அமெரிக்க மனம் விரும்பிச் சென்று தன்னைத் தானே அங்கு ஏமாற்றிக் கொள்கிறது.

சேலம் பயணம் மகிழ்ச்சியளிக்காததால் அன்று இரவு ‘The Exorcist: Believer’ படத்துக்குச் சென்றேன். ஒன்றிரண்டு காட்சிகள் பயங்கரமாக இருந்தது. ஐம்பது வருடத்துக்கு முன் வந்த ‘த எக்ஸார்சிஸ்ட்: த பிகினிங்’ படத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது. சொல்லிக் கொள்ளும் படி சுவாரசியமாக இல்லை. பேய் படங்களுக்கு இருக்கும் வழக்கமான டெம்ப்லேட். வழிந்து திணிக்கப்பட்ட காட்சிகள். எனவே அடுத்த நாள் ‘த நன் 2’ படத்துக்கு சென்றேன். வழக்கமான விளம்பரங்கள் திரை துணுக்குகளுக்கு பிறகு படம் ஆரம்பமானது. இப்போது தான் நான் தியேட்டரை கவனித்தேன். என்னைத் தவிர அவ்வரங்கில் யாருமேயில்லை. பொதுவாக தனி ஒருவருக்கு படம் போடும் வழக்கம் இங்கில்லை. அரங்கை மாற்றுவார்கள் அல்லது காட்சி நேரத்தை மாற்றுவார்கள். அதிசயமாக அன்று எனக்கு மட்டும் படம் ஓடியது. பெரிதாக என்னை கவரவில்லை. ஆனால் தனி ஒருவனாக மாபெரும் அரங்கில் அமர்ந்து ஒரு திகில் படம் பார்த்தது தனி அனுபவமாக இருந்தது.

(தொடரும்…)

valan.newton2021@aol.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button