இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

கோடாங்கி – இரா.முருகன்

சிறுகதை | வாசகசாலை

இந்தத் தெருதான். ஓரமாக இஸ்திரி போட்டுக்கொண்டிருக்கிறது ஓயாது போல் இருக்கிறது. சக்கரங்கள் நகராத இஸ்திரி வண்டி மேல் கர்ணன் பட போஸ்டரில் சிவாஜி உயிர் உடலில் இருந்து உதிரும் வேதனையும், மார்பில் அர்ஜுனனின் அம்புமாக விடை பெறுகிறார். ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்று சீர்காழி கோவிந்தராஜனின் வெங்கலக் குரலில் அசரீரி பாடி அது முடித்து போகும். கர்ணன் சினிமா போஸ்டர் இருக்கட்டும். அது வெளிச்சுவரில் ஒட்டிய வீடு என்று அடையாளம் சொல்லியிருக்கிறார்கள். இங்கே இஸ்திரி வண்டி மேல் ஒட்டி வைத்திருக்கிறார்கள். இந்த போஸ்டர்தானா? சுயம்பு சந்தேகத்தோடு நின்றான்.

வீட்டுக்குள் இருந்து பள்ளிக்கூட சீருடை அணிந்து  வந்த பையன் சுவரில் சார்த்தி வைத்த உயரம் குறைந்த சைக்கிளைப் பூட்டுத் திறந்தபோது அவனுக்குப் பின்னால் நின்று எக்கிப் பார்த்தான் சுயம்பு. சைக்கிளுக்கு நேர் மேலே காலண்டர் அளவு எட்டு சின்னச் சின்ன போஸ்டர்கள். எந்த சினிமா, யார் நடித்தது  தெரியவில்லை என்பதை சுயம்புவின் முகம் காட்டுகிறது.

”தம்பி .. கர்ணன்”

 தயங்கித் தயங்கி அவனோடு பேச்சு வளர்க்க ஆரம்பித்தான் சுயம்பு.

“அண்ணா, கொஞ்சம் விலகி நிக்கறது. சைக்கிளுக்கு அடிபட்டா நடந்துதான் போகணும்”.

 சுயம்பு சிரித்தான். சைக்கிள் பையன் ‘உனக்கு என்ன வேணும்?’ என்று விசாரிக்கும் முகபாவம் காட்டிப் பொறுமை இழந்து நின்றான். “இல்லே, கர்ணன் படம் ஒட்டிய வீடு இதுதானே?” ஆர்வத்தோடு கேட்டான் சுயம்பு.

“கர்ணன், எங்க வீட்டுப் பிள்ளை, திருவிளையாடல் அப்படீன்னு அறுதப் பழைய மினி போஸ்டர் எங்கேதான் கிடைக்குமோ” சலிப்பு தணிய பொறுமையாக நின்று சைக்கிளை உருட்டும் முன், ‘பாரி’ என்று உள்ளே இருந்து உரக்க யாரோ கூப்பிட்டபடி வாசலுக்கு வந்தார்கள்.

உடலை முழுக்க மூடி வழியும் அங்கி உடுத்திருந்தவர் ஒரு பார்வைக்கு பாதிரியார் போல இருந்தார். பெரிய சந்தனப் பொட்டும் நடுவில் குங்குமமும் பாதிரியார் இல்லை என்று உரக்கச் சொல்லியது.

 லாகவமாக சைக்கிளில் ஏறிய பையன், “அவர்தான் போஸ்டர் ஒட்டுவார்” என்றபடி பெடல் மிதித்துப் போனான். பள்ளிக்கூடப் புத்தகங்களை காரியரில் வைத்துப் போனது ஸ்கூல் பேக் இல்லாமல்தான்.

கை கூப்பி  சுயம்பு வந்தவரைப் பார்க்க அவர் வந்த சுவடே இல்லை. ரெண்டு நிமிஷம் கழித்து உள்ளே இருந்து ஒன்றோடு ஒன்று மடக்கி வைத்த நான்கு ப்ளாஸ்டிக் நாற்காலிகளை தரையோடு சேர்த்துத் தள்ளியபடி திரும்பினார்.

வாசல் திண்ணையில் ப்ளாஸ்டிக் குவியல் நெடி, ஊதுபத்தி வாசனை, உள்ளே கிடாரங்காயை எண்ணெயில் வறுத்து ஊறுகாய் ஆக்கும் வாடை என்று கதம்பமாக சுயம்புவைச் சூழ்ந்த தருணம் அது. சாமியாரை பார்த்ததில்லையே தவிர ஏற்கனவே பழக்கமானவர் என்ற அளவு அறிந்திருக்கிறான் சுயம்பு.

வாசலில் ‘சாமி சாமி’ என்று சின்னக் குரல்கள். பள்ளிக்கூடம் போகிற நேரம் என்று பெரிய பையில் புத்தகம் சுமந்து ஏழெட்டு பையன்கள் சைக்கிளை விட்டு இறங்கி ஹேண்டில் பாரை நேராகப் பிடித்தபடி  

மறுபடி ‘சாமி’ என்றார்கள்.

“என்ன தம்பி?”

கருணை பொங்கி வழியும் குரலில் கேட்டார், ப்ளாஸ்டிக் நாற்காலிகளைப் பிரித்துப் போட்ட சாமியார். அங்கியிலிருந்து கைக்கடக்கமான உடுக்கு ஒன்றை எடுத்து அடித்துக் கொண்டு, “அம்மா மாரியம்மா” என்று  பாடினார்.

திரவுபதி அம்மன் கோவில் சூழ்நிலை பழக்கமில்லாத சுயம்பு இரண்டு கையும் கூப்பியபடி இன்னொரு ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார்.

“சாமி, பாஸா?”

சைக்கிள்களை ஜாக்கிரதையாக நிறுத்திப் பிடித்தபடி ஒவ்வொரு பையனாக கேட்பது ‘அந்தந்த வருடம் படிக்கும் வகுப்பில் பாஸ் ஆகி மேல் வகுப்பு தேர்வாவது நிச்சயமா’ என்று சாமியாரிடம் ஒற்றை வார்த்தை ஜோசியமாக  உறுதிப் படுத்திக் கொள்வது.

‘பாஸா’ என்று கேட்கிற பையன்கள் ஒவ்வொருத்தருக்கும் ‘பாஸ் பாஸ்’ என்று உடுக்கடித்தபடி பொறுமையாகப் பதில் சொல்கிறார் கோடங்கி சாமியார்.

பையன்கள் நடுவே கோடாங்கி பற்றி நிறைய நம்பிக்கைகள் உண்டு. அடுத்து அடுத்து வரும் வகுப்புக் குழு ஜாக்கிரதையாக ’பாஸா’ மட்டும்தான் கேட்க வேண்டும். ‘பாஸா பெயிலா’ கேட்கக் கூடாது. ‘பெயில்’ என்று ஒரு சாய்ஸ் இருப்பதே சாமியாருக்குத் தெரியக் கூடாது.

அதே போல், பெண்கள் சைக்கிளை விட்டு இறங்கி தெருவைக் கடக்காமல் அங்கே இருந்தபடியே ’சாமி பாஸா’ கேட்கணும். பையன்கள், பெண்கள் எல்லோரும் கோடாங்கியை சாமியார் அடித்த பிறகும், தெருவில் நடக்கும் போதும் கேட்டால் அவர் பதில் சொல்லாமல் போகும் அபாயம் உண்டு.

சாமியார் ‘பாஸ்’ என்று சர்வ நிச்சயமாக ஜோசியம் சொல்லி விட்டு, அங்கியை அசைத்து உள்ளே இருந்து பத்தாம் வகுப்பு மாணவனுக்கு ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தால் வேண்டாம் என்று அடக்கமாக மறுத்து விடலாம். கீழ் வகுப்பென்றால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மிட்டாய் வாங்கித் தின்னலாம். மந்திரப்பட்டிருக்க ஏது உண்டு. அவர் பின்னாலேயே போய் விட வாய்ப்பு உண்டு. பெண்கள் விஷயத்தில் அந்த வாய்ப்பு இன்னும் அதிகம்.

 காலையில் பெருங்கூட்டமாக சைக்கிள் விட்டுப் போகும் மாணவர்கள் இரண்டாவது மணி அடிக்க நேரம் நெருங்க, சாமிக்குப் பதிலாக அவருடைய தம்பி மகன் பாரியிடம் ‘பாஸா’ கேட்க முற்படுவது உண்டு. அவன் ‘தெரியாது’ என்று சொல்லி விடுவான். ‘எதுக்கு தேவையில்லாமல் வேலியில் போகிற ஓணானை ஜேபியில் விட்டுக் கொள்ளணும்?’

பள்ளிக்கூடப் பையன்கள், பெண்கள் போன பிறகு ‘பராசக்தி, காளி, மாரி, மகாசக்தி’ என்று சுமாரான குரலில் அழைத்தபடி உடுக்கு அடித்தார் சாமியார். அவர் முதல்முதலாக வீட்டுத் திண்ணையில் ப்ளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தபடி முழங்கியபோது கையில் வைத்து அடித்தது கோடாங்கி என்று வக்கீல் குமாஸ்தா சுப்பிணி சொன்னாராம். அதிலிருந்து சாமியார் கோடாங்கி என்று அழைக்கப்பட்டார். அது பதினைந்து வருடம் முன்பு. சாமியார் குடும்பத்தோடு வடக்கே எங்கேயோ இருந்து குடி பெயர்ந்த போது.

“சாமியார்னா தெரியும் எல்லோருக்கும்னு சொன்னாங்க” பாராட்டாகவோ மற்ற எப்படியோ சொன்னான் சுயம்பு.

”ஏதோஒரு பெயர். நான் சாமியான். ஜோசியம் எல்லாம் கிரக நிலையை சோழி உருட்டிப் போட்டு கணிக்கறது. அதெல்லாம் சொல்ல முடியாது. ரொம்பப் போச்சுன்னா பாஸா பாஸா தான். பார்த்திருப்பீங்களே.”

 பள்ளிக்கூட திசையில் கையை உடுக்கையோடு ஆட்ட சுயம்பு  சுருக்கமாகச் சிரித்த பிறகு சொன்னான் – ”உங்களுக்கு பூஜைக்கு நேரமாயிடும். சீக்கிரம் வந்த காரியத்தைச் சொல்லிடறேன்”. சுயம்பு கண்கள் மின்னச் சாமியாரைப் பார்த்தான். சாமியார் புன்சிரிப்பு அணிந்து இருந்தார்.

”லாகூர்ஹீரா மண்டி அடுத்து இருந்து வரேன். அந்த இடம் பற்றி பழைய கதை உண்டுன்னு உங்களுக்கு தெரியுமே. சிவப்பு விளக்கு பகுதி. இப்போ எல்லாம் மாறிப் போச்சு. பூரணத்தம்மா அங்கே இனிப்புப் பலகாரம் செஞ்சு வித்து நல்ல லாபம். பூரணத்தம்மா செஞ்ச ஜிலேபியும் ஹல்வாவும் வாங்கவே குல ஸ்திரிகளும் கண்ணியமான பிரபுக்களும் ஹீரா மண்டிக்கு வருவாங்க.”

சுயம்பு உடுக்கு ஓசை ஓய்ந்த பிறகு தொடர்ந்தான். சாமியார் அங்கியில் நாசியைத் துடைத்துக்கொண்டு தும்ம ஆரம்பித்தார்.

வீட்டு உள்ளே இருந்து ஒரு ப்ளாஸ்டிக் தட்டில் இரண்டு டம்ளர்களோடு ஒரு மத்திய வயசுப் பெண்மணி வந்தார்.

பானக்கம் என்று சொல்லியபடி டம்ப்ளர்களை சுயம்புவுக்கும் சாமியாருக்கும் கொடுத்தார். பானகத்தில் ஒரு க்-கும் கொஞ்சம் தண்ணீரும் அதிகம் என்று சுயம்புவுக்குப் பட்டது.

சட்டென்று இதை முடிக்க வேண்டும் என்று தீர்மானித்ததுபோல், ”போய்ச் சேர்ந்துட்டா.. அதானே ..தெரியுமே” என்று மெல்லிய குரலில் சொன்னார் சாமியார்.

சுயம்பு பானகத்தின் வெல்லச் சுவை நாக்கில் சுழல கை கூப்பி எழுந்து நின்றான்.

“வாங்க, உள்ளே போய்ப் பேசலாம்”.

சாமியார் யாரையாவது உள்ளே அழைப்பது இது தான் முதல் தடவையாக இருக்கலாம். அந்தப் பெண்மணி கொழும்புத் தேங்காய் எண்ணெய் என்று ஒட்டிய போத்தலை வழியில் இருந்து எடுத்து வைத்தார்.

பின்வாசலை ஒட்டி ஷெட் போட்டு மரத் தொட்டி வைத்து ஏதோ காய்ச்சப்பட்டுக் கொண்டிருந்தது.

கைத்தொழில். சோப்பு உருவாக்க பேங்க்லே கடன் கொஞ்சமா போட்டு என் தம்பிக்கு கொடுத்தேன். அவனை விட அவளுக்கு ஆர்வம் இதிலே. போய்ட்டா வேணாம்னு… தினசரி இருபது சவுக்காரமாவது நான் செய்யறேன். கம்பெனி பெயர் கேட்கலியே.. பாரியும் பெற்றோரும். பாரி அண்ட் பேரண்ட்ஸ்” சாமியார் சிரித்தார். சுயம்பு சுவர் ஓரமாக அடுக்கி வைத்த சவுக்காரத்தை எடுத்துப் பார்த்தான். தீர்க்கமான கிளிசரின் வாடை.

வாசலில் இரைச்சல். சுயம்பு திரும்பிப் பார்த்தான்.சைக்கிளை வாசல் சுவரில் மோதி நிறுத்தியபடி பாரி.

”ஸ்கூல் கரஸ்பாண்டெண்ட் இறந்து போய்ட்டார். லீவு” வெளிப்படையாகத் தெரியும் விடுமுறை சந்தோஷம் அவனுக்கு.

”நான் லாகூர்லே உங்க.. உங்க .. இவங்க  மிட்டாயிக்கடை வச்சிருந்த போது உதவிக்கு இருந்தேன். நாலைந்து வருடம் முன்பு வரை. அப்புறம் அவங்களுக்கு டிமென்ஷியா சித்தம் கலங்கி கடை எல்லாம் விட்டாச்சு”

“மிட்டாயி தின்னு தீர்க்கணும் வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்கணும்” சாமியார் பின்னால் திரும்பிப் பார்த்து கேட்டார் – “ஐயா பெயர் கேட்கலியே. சர்க்கரையப்பரா?”

ஆச்சரியப்பட்டுப் போனான் சுயம்பு.

”எப்படி தெரியும் சாமிஜிக்கு? ஆதியிலே வச்ச பெயர் சர்க்கரையப்பன் தான். பூரணத்தம்மா சுயம்புன்னு பெயரை மாத்தினாங்க. ஹீரா மண்டி மிட்டாய்கடையிலே”

ஒரு நிமிடம் மௌனம் அலை ஓய்ந்து அடுத்து கனமாகப்  பரவியது.

“அவள் போய்ட்டா ஆனா, அங்கே கெட்டழிந்து போகலே. அது தெரியும்”.

 சாமியார் சொல்ல, சுயம்பு முகத்தில் விநோதமான நிம்மதி.

”அவங்க ஜதையா புறப்பட்டு போனாங்களே அந்த மிட்டாய்வாலா கூட அவசரக் கல்யாணமும் நிலைக்கலே. தெரிஞ்சிருக்கும் ஸ்வாமிஜிக்கு”.

“அய்யோ, நான் சாமி எல்லாம் இல்லே. சின்னப் பசங்களுக்கு  பாஸ் ஆகப் போறேன்னு ஜோசியம் சொல்லி கூடவே ஆரஞ்ச் மிட்டாய் தர்றதுலே எனக்கு சந்தோஷம். லாகூர்லே வேறே யாராவது சந்தோஷப்பட்டா எனக்கு மகிழ்ச்சிதான். அந்தக் கல்யாணம் நிலைக்கலேன்னு வருத்தம்தான். சாமி மாதிரி அங்கியை மாட்டிக்கிட்டு அலைஞ்சு அரிதான புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்து மறு பதிப்பு போடற சந்தோஷத்துக்காக குடும்ப சுகத்தை துறக்கலாம். நான் கொஞ்சம் திடமனசோடு குடும்ப ஜீவிதத்தை விட்டு ஓடியிருக்கலாம். ஆனால், அவளுக்கு ஓட்டம் எளிதா இருந்தது. போகட்டும் இப்போ அவனும் போய், அவளும் போய், குழந்தைகளுக்கு யார் இருக்கா?”

சாமியார் நீளமாகப் பேசிவிட்டு தாடியை நீவிக் கொண்டார்.

”குழந்தைகள் இல்லே. ஒரே ஒரு பெண். பதினைந்து வயசு” அவசரமாகக் குறுக்கிட்டான் சுயம்பு.

“அப்படின்னா அப்படியே இருக்கட்டும். அந்தப் பொண்ணை யார் பாத்துக்கறது இப்போ?”

“விசாலாட்சின்னு பேர் கேட்டிருப்பீங்க. மறந்திருக்கலாம். பெயர் இருக்கட்டும். விசாலாட்சி என்ற சாலுவுக்கு லாகூர்லே யாரும் இல்லே. இங்கே இந்தியாவுக்கு வந்து ஏதாவது வேலை பார்க்கணும், ஜீவிக்கணும்னு ரொம்ப ஆர்வம். லாகூர் சதா எதிரி நாடாச்சே. விசா கிடைக்கலே. அவளை யாராவது சுவீகாரம் எடுத்து இங்கே கூட்டி வந்து வேலைக்காரியாவது  நடத்தலாம். பாருங்கோ உங்களுக்கு கண்ணுலே தண்ணி தளும்புது. உங்க பொண்ணு மாதிரி சார். லாகூர்லே இருந்து வந்தா என்ன பாங்காக்லே இருந்து வந்து சேர்ந்தா என்ன? உங்க மகள் சார். சோப் பண்றதிலே டிப்ளோமா வாங்கியிருக்கா. அவசியம் கூப்பிடுங்க.

சவுக்காரக் குவியலை சீராக அடுக்கியபடி பாரி கூவினான் – “பாரி அண்ட் பேரண்ட்ஸ் ப்ளஸ் ஒன்.”

eramurukan@gmail.com     

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button