
-
நீயும் நானும்
மலையுச்சி..
மரகதப் பச்சை
உரசும் மேகம்
சில்லிடும் காற்று..
நீள் காம்பில்
நிரவும் பன்னீர்ப்பூ..
நட்சத்திர நெருடல்களில்
பிசுபிசுக்கும்
தேன் துளிகள்..
ஊறி மிதக்கும்
சிற்றெறும்புகளாய்
வலசை திரும்பும் பறவைகள்..
ஒரு கோப்பைத் தேநீர்
கூடவே நீ.!
-
அளவீடுகள்
அளந்து பேசவும் சிரிக்கவும்
அளவைகள் உண்டோ?
விழும் இடத்து வடிவம் பெறும்
தண்ணீராகிறேன்..
குடுவையிலா கடலிலா
கொட்டிக் கவிழ்க்கையில்
பிரளயமாகவோ குடிநீராகவோ
குறிப்பிட்டுக் கொள்ளுங்கள்..
இடும் சாயத்தில்
நிறம் மாறித் தெரிவது
இயல்பல்ல..
இருப்பிற்கான அடையாளம்..
ஒப்பனைகளுக்குள்
ஒளிந்து கிடக்கும்
உண்மைகள் உலா வருகையில்
கண்ணாடியைக் கழட்டி விடுங்கள்.
மனம்….
மெய்யைத் தரிசிக்கட்டும்…
அருமையான கவிதைகள் . சிறப்பு