அம்மா வீட்டிலிருக்கும் மனைவி
போன் செய்து கேட்டாள்
என் செல்லப் பூனை
என்ன பண்ணுகிறது
சுவரெல்லாம்
ஆத்திரத்தைக் கீறலாக வரைந்தும்
ஆறாமல்
தன் நகங்களைத்
தானே உடைத்துக்கொள்ளுமளவுக்கு
பெருங் கோபத்தில் இருக்கிறது.
***
துயரலகு
இரவுப் பறவை
என் வீட்டின் மூலையில்
துயர முட்டைகளிடுகிறது
பொரியும்
ஒவ்வொன்றிலிருந்தும்
ஒவ்வொருவிதமான
துயரம் கண்விழிக்கிறது
மெல்ல எட்டு வைத்து
எனை நோக்கி வருகின்றன
அழுதழுது
மேலும் சிவப்பேறிய இதயத்தை
பெருந்தானியமென
கொத்துகின்றன
அம்மையே
சிறு குஞ்சுகள்தானெனினும்
வலி உயிர்போகிறது.
****
குழந்தை வந்தது
துடிக்கத் துடிக்க கொன்றார்கள்
சிறுவன் வந்தான்
துள்ளத் துள்ள கொன்றார்கள்
இளைஞன் வந்தான்
திமிரத் திமிர கொன்றார்கள்
நடுத்தர வயதினன் வந்தான்
வெட்டி இழுக்க இழுக்க கொன்றார்கள்
இறுதியாக
நடுங்கும்
கண்களோடும் மனதோடும்
நரைத்த
மயிர்களோடும் கனவுகளோடும்
தளர்ந்த
தோள்களோடும் உடையோடும்
முதியவன் வந்தான்
வெயில் படாத
ஈக்கள் மொய்க்கும் மூலையில்
குறுகிக் கிடந்தவனைப் பார்த்தவர்கள்
தாடை பிடித்து நிமிர்த்தி
ஓங்கிச் சிரித்துவிட்டு கிளம்பிவிட்டார்கள்
அன்றிலிருந்து
தினம் தினம்
யாரோ கத்தி கொண்டு
தன் கழுத்தில்
வயலின் வாசிப்பதுபோல கத்திக்கொண்டிருந்தான்
அவ்வப்போது
அவ்வழியாகச் செல்பவர்களில் சிலர்
நிச்சயம் இது
வயலினின் குரல் போலவே இல்லை என்று
கல்லெறிந்து போனார்கள்.
*********