தொடர்கள்
Trending

நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;18 ‘லோக்கல்’ செய்தித்தாள்கள் – சுமாசினி முத்துசாமி

தொடர் | வாசகசாலை

ஒரு பரபரப்பு இல்லாத காலைப்பொழுது.

எழுந்து, குளித்து, அவசர அவசரமாக அலுவலகம் செல்லும் தொந்தரவோ, பிள்ளைகளைப் பள்ளிக்குக் கிளப்பி விட வேண்டிய அவசரமோ, அன்றைய அடுத்தடுத்த வேலைகளைப் பற்றிய நினைப்போ இல்லாத அமைதியான காலைப்பொழுது. நீங்கள் எழுந்து வரும்பொழுது வாசலில் அன்றைய தினசரி செய்தித்தாள் இருக்கிறது. உங்களுக்குப் பிடித்த சுவையான காபியோ, ஏலக்காயும் இஞ்சியும் மணக்கும் டீயோ தயார் செய்துவிட்டு  வருகிறீர்கள். யாராவது அதையும் தயார் செய்து தர இருந்தால் அது மேலும் பாக்கியம். அப்படியே உட்கார்ந்து மற்ற யோசனைகள் எதுவும் இல்லாமல், அந்த நாளிதழை உங்கள் மனது திருப்தி ஏற்படும் அளவிற்கு வாசிக்கிறீர்கள். அந்த நாளிதழில் உள்ள செய்திகள் அனைத்தும் (சரி, பேராசை வேண்டாம்! பெரும்பான்மையானவை என்று வைத்துக்கொள்வோம் !!) எந்தப் பொய், புரட்டும் இல்லாமல், எந்தக் கட்சி சார்பும் இல்லாமல், நடுநிலையோடு அறத்தின் சாரத்தோடு எழுதப்பட்ட செய்திகள் மட்டும்.

இப்படியான காலைப்பொழுதுகள் எவ்வளவு இனிமையானவை.

இது என்னுடைய லட்சிய காலைப்பொழுது. இப்படியே எல்லா நாட்களும் துவங்கினால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.  உண்மையில், இவற்றில் அனைத்தும் ஒரே நாளில் நடப்பதென்பது கனவில் கூட இன்றைய நிலையில் சாத்தியமில்லை.

ஒரு நாளில் எவ்வளவோ பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ளப் போகிறோம். சின்ன ஆசீர்வாதங்களில் ஆரம்பித்து பெரிய பிரச்சனைகள் வரை பலவற்றை ஒரு நாள் நமக்குப் பரிசளித்திடத் தயாராக உள்ளது. ஒரு நாள் முடியும்பொழுது நாம் நினைத்தபடி அந்த நாள் முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவுதான். அதனால் அந்த நாள் துவங்கும் பொழுதாவது நாம் நினைக்கும்படி துவங்க வேண்டும் என்று நான் விரும்புவேன். காலை எழுந்து காபி அல்லது டீயோடு செய்தித்தாள் வாசிப்பது என் முதல் விருப்பத் தேர்வு. காலையில் சுடச் சுட செய்திகளை வாசித்து விடுவது, சுடச் சுட இட்லியோ, தோசையோ காலை உணவாக இருப்பதை விடவும் எனக்கு முக்கியம். எந்த ஒரு நாளும் இப்படித் துவங்கி விட்டால் அந்த நாள் என் கட்டுக்குள் வந்துவிட்டது போல் எனக்குத் தோன்றும்.

நம் இந்திய தேசத்தில் பெண்ணாய்ப் பிறந்துவிட்டு, கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் வைத்துக்கொண்டு, வீட்டு வேலை பின் அலுவலகத்திற்கும் கிளம்ப வேண்டும் என்ற  கட்டாயமும் இருக்கும்பொழுது அமைதியான காலைப்பொழுதுகள் பற்றிக் கனவு காண்பது கொஞ்சம் ‘ஓவர்’ தான் என்பது எனக்குப் புரிகின்றது. இருந்தும், அன்றைய செய்தித்தாளைக் காலையிலேயே வாசித்துவிட்டால், அந்த நாளின் பல முயற்சிகள் சரியாக என் விருப்பப்படி நடந்துவிடும் என்ற ஒரு பொய் நம்பிக்கை எனக்கு உண்டு. இவை எல்லாவற்றுக்குள்ளும், இந்த ‘மடிப்பு’ கலையாத பேப்பர் என்பது மிக முக்கியம் எனக்கு.

செய்தித்தாளில் பேப்பர்கள்  வரிசைப்படி இருக்க வேண்டும். வாசித்துவிட்டு அங்கேயும் இங்கேயும் வைக்கக் கூடாது. ஆங்கில நாளிதழும், தமிழ் நாளிதழும் தனித்தனியாக அடுக்கி இருக்க வேண்டும். இது போன்ற, சிறு சிறு எதிர்பார்ப்புகள் நாளிதழைப் பொறுத்தவரை எனக்கு உண்டு. சிறு வயதில், அப்பாவோடு சேர்ந்து நாளிதழ் படிக்க ஆரம்பித்த காலங்களில் பள்ளிக்குக் கிளம்புவதில் தாமதம் ஆகி விடும். இதன் காரணமாகவே காலையில் பாதி நாள் திட்டு வாங்கி விட்டுத்தான் பள்ளிக்கு கிளம்புவேன். “காலையிலேயே பேப்பர் வாசிச்சு என்ன பண்ணப் போற?” என்ற கேள்வி பின்னர் பள்ளியில் காலை அசெம்பளியில் செய்திகள் வாசிக்க ஆரம்பித்த பின் காணாமல் போகிவிட்டது. இந்த செய்தி வாசிப்பு நிரல், எனக்கும் அந்தக் காலை செய்தித்தாளுக்கும் உள்ள தொடர்பை மிக அதிகமாக வளர்த்துவிட்டது. கல்லூரிக் காலங்களில் விட்டும் தொட்டும் என்று குறைந்ததிருந்த இந்த காலை செய்தித்தாள் உடனான தொடர்பு,  திருமணம் ஆகி முதல் முறை வெளிநாடு போனபின்பு முழுவதும் அறுந்தது. பின்பு, ஒரே வருடத்தில் மீண்டும் நம் மண்ணுக்கு வந்த பொழுது கிடைத்த நிறைய ஆசுவாசங்களில் இதுவும் ஒன்று.

ஆனால் இப்பொழுது வழக்கமாகக் காலை செய்தித்தாள் வாசிப்பது ஏதோ வயதில் மூத்தோர் மட்டும் செய்யும் காரியம் போல் ஆகிவிட்டது. ஒரு மாத ஆன்லைன் சந்தா ஒரு   வார செய்தித்தாள் காசை விடக் குறைவு. இணையத்தில் தேவையானதை மட்டும் வாசித்துவிட்டு நகர்ந்துவிடலாம். இன்னும் நான்கைந்து வருடத்தில் நம்மூரிலும் கையில் செய்தித்தாள் வைத்து வாசித்தால் டைனோசர் காலத்து ஆள் போல் நம்மைப் பார்ப்பார்களா என்று தோன்றுகிறது.

முன்பு எல்லாம், நாளிதழ்களும் பின்னர் 8 மணி செய்தியும் தான் நாம் நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள இருந்த வாய்ப்புகள். இப்பொழுது அப்படியில்லை. உடனுக்குடன் துரிதமாகச் செய்திகள் பரிமாறப்படுகின்றன. காலையில் நேரமில்லாததினால் செய்தித்தாள் வாசிக்க முடியவில்லை என்றால் இரவில் வீடு வந்து வாசிப்பதற்குள் செய்திகள் எல்லாம் மிகப் பழமையாக மாறி விடுகின்றன. பழமையான செய்திகளை வாசிப்பதற்கு நாம் காசு கொடுத்து நாளிதழ் வாங்கத் தேவையில்லை என்ற மனப்பான்மை வந்துவிட்டது.

இந்த நோய்த்தொற்றுக் காலம் அச்சுத் தொழிலை முன்பிருந்த நஷ்டத்திற்கு மேல் இன்னும் அதிகமாக பாதித்துள்ளது. முகநூலும், வாட்சப்பும் forward ஆகச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மட்டும் பார்த்து அறிந்து ஞான மோட்சம் அடையும் மக்களும் நாளிதழ்களைத் தவிர்க்கின்றனர். செய்திகளைத் தரவுகளோடு வெளியிடும் நியூஸ் இணையதளங்கள் தங்கள் சந்தாதாரர்களை இழந்து வருகின்றனர்.

இங்கு அமெரிக்கா வந்த பின்பு கையில் பேப்பர் வைத்து வாசிப்பதில் உள்ள ஆர்வத்தால் ‘Wall Street Journal’ தான் வாங்குவது என்று முடிவு செய்திருந்தேன்.  இங்கு நீங்கள் செய்தித்தாள்கள் வாங்க வேண்டும் என்றால் அவர்களின் இணையதளத்தில் காசு கட்டிப் பதிந்து விட வேண்டும். அவர்கள் நாம் வசிக்கும் பகுதியில் நாளிதழ்கள் பட்டுவாடா செய்பவர்கள் மூலம் நமக்கு அனுப்பிவிடுவர். இங்கு மழையும் பனியும் சகஜம் என்பதினால், தினமும் ஒரு பிளாஸ்டிக் கவருக்குள் அந்த பேப்பரை வைத்து, அதைச் சுற்றி ஒரு ரப்பர் பேண்ட் போட்டு, நமது லெட்டர் பாக்ஸிலோ, வீட்டின் முன்போ போட்டு விடுவர். ஆனால் எங்கள் ஊரில் அந்த ஒரே ஒரு பட்டுவாடா செய்பவரை வைத்துக்கொண்டு நான் பட்ட பாடு, கையில் பேப்பர் வைத்து வாசிக்கும் ஆர்வத்தை முற்றிலும் என்னை விட வைத்து விட்டது. இப்பொழுது நானும் இணைய சந்தா வாசிப்புதான்.

வேறு வழி ஏதாவது தேறுமா என்று தெரிந்து கொள்வதற்காய் கூகிளை நோண்டினேன். அப்பொழுது கொஞ்சம் ஆச்சரியம் ஊட்டுவதாகத் தேசிய நாளிதழ்களைத் தவிர்த்து, இங்கு ஐம்பது மாநிலங்களிலும் தனித்தனி நாளிதழ்கள் உள்ளன என்று தெரிய வந்தது. தேசிய அளவில் பெரிய நாளிதழ்கள் தனி லிஸ்ட். ஒவ்வொரு மாநில அளவிலும் இருக்கும் லிஸ்ட் தனி. அதிக மக்கள் வாழும் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன், தலைநகரம் வாஷிங்டன் போன்ற நகரங்களில், அந்த நகரின் பெயரோடு வரும் நாளிதழ்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ளன. அலுவலகத்தில் அமெரிக்க நண்பர்கள் தேசிய நாளிதழ்களை (USA Today, Wall Street Journal, New York Times போன்றவற்றுள் ஏதாவது ஒன்று) இணைய சந்தா  மூலமும், உள்ளூர் செய்தித்தாள்களைத் தினமும் காலையில் பட்டுவாடா செய்யப்படுவது போலும் வைத்துள்ளனர்.

‘Local  newspapers’ ஒவ்வொரு நகரங்களிலும், சிறு டவுன்களிலும் உள்ளன. இந்த local newspaperகளுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. அந்த நகரில் நடக்கும் அனைத்து விஷயங்கள்,  முக்கிய அறிவிப்புகள்,  மாநில உரிமைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், உள்ளாட்சி மன்றங்களில் நடக்கும் முறைகேடுகள் என்று இயல்பாக நம் அன்றாட வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் இவை உள்ளடக்கி வருகின்றன. இவை சமூகத்திற்கு மிக அணுக்கமானவை. இருந்தும், இவற்றுள் பலவும்  நஷ்டத்தில்தான் இயங்குகின்றன.

அமெரிக்காவில் ஒரு தரவின்படி மொத்த நாளிதழ்களில், உள்ளூர் செய்தித்தாள்கள் 25 சதவீதம். அதாவது, நாலில் ஒருவர் இங்கு உள்ளூர் செய்தித்தாளைத்தான் வாசிக்கிறார். ஆனால் மொத்த அமெரிக்காவின் முக்கியமான செய்திகளில் 50% இந்த ‘லோக்கலில்’ தான் வெளிவருகின்றன என்று இன்னொரு கணிப்பில் கூறுகின்றனர்.

நெட்பிலிக்ஸில் ‘Patriot Act’ என்று ஒரு தொடர் உள்ளது. அதில் ஒரு எபிசோடில் இங்குள்ள உள்ளூர் செய்தித்தாள்களின் தேவையும், முக்கியத்துவத்தையும், அவற்றை நசுக்க நினைத்துச் செயல்படும் மிகப்பெரிய முதலாளித்துவத்தையும்  நன்றாக விளக்கி சொல்லியிருப்பார் Hasan Minhaj. இங்கு உள்ளாட்சி அளவில் நடக்கும் பல முறைகேடுகளை இந்த நாளிதழ்களே விசாரித்து வெளியிடுகின்றன. ஒரு முறைகேட்டை விசாரித்து வெளியிட்டால் அதேபோல் மற்ற நகரங்களில் நடக்கும் முறைகேடுகள் சங்கிலித் தொடர்கள் போல் வெளிவரும்தானே… இவற்றிற்காகவே இந்த நாளிதழ்களின் தேவை அதிகம்.

2019ம் ஆண்டில் அமெரிக்காவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய ஜெப்ரி எப்ஸ்டெய்ன் குற்ற வழக்கை முதலில் ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தது ‘மையாமி ஹெ ரால்ட் (Miami Herald)’ என்ற செய்தித்தாள்தான். புலனாய்வு செய்து செய்திகள் வெளியிடுவது இங்கு பெரும்பாலான பத்திரிக்கைகளில் பொதுவாக நடக்கின்றன. Spotlight  என்று ஒரு  படம். இதுவும் நெட்பிலீக்ஸில் உள்ளது. பத்திரிக்கைத் தொழிலில் இருப்பவர்கள் பார்க்க வேண்டிய படம். ‘பாஸ்டன் குளோப்’ என்னும் பத்திரிக்கையின் நிருபர்கள் அதிக முயற்சி செய்து எப்படி கத்தோலிக்க தேவாலயங்களில் நடக்கும்  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஆதாரத்தோடு வெளியிட்டனர்  என்பதைச் சொல்லும் படம். இது உண்மைக் கதை. இந்த செய்தி வெளிவந்த பொழுது உலக அளவில் மிகுந்த அதிர்ச்சியை இது ஏற்படுத்தியது.

மேலோட்டமாகப் பார்த்தால் பத்திரிக்கைகளின் தோல்வி இப்பொழுது பெருகி வரும் தொழில்நுட்பத்தினாலும், அதனால் மாறி வரும் மக்களின் வாழ்க்கை முறையாலும் என்று கூறலாம். இவை தனி வணிக நிறுவனங்களின் தோல்வி மட்டும் அல்ல. ஒட்டுமொத்தமாக ஊடகங்கள் என்னும் தொழில் முறையே தோற்பது என்பது, உண்மையில் சமூகத்தின் தோல்வி. கேள்வி கேட்ட, எடுத்துரைக்க, நன்மையையும் தீமையும் சுட்டி உணர்த்த  மொத்த சமூகத்தின் பெருங்குரல் ஊடகங்கள். அவற்றை நசுக்கி விட்டு ஒரு சமூகம் தன்னை நிலை நிறுத்த முடியாது.

நம்மூர் நாளிதழ்களில் நமது உள்ளூர் செய்திகளை வெளியிட ஒரு பக்கமோ, இரண்டு பக்கமோ ‘லோக்கல்’ பதிப்பு உண்டு. பெரும்பாலும் அவற்றில் எப்பொழுது மின்சார தடை இருக்கும், உள்ளூரில் நடக்கும் பள்ளி, கல்லூரி, கோவில் விழாக்கள், அவற்றில் நடந்த பிரச்சனைகள்,  உள்ளூர் பிரபலங்கள் பற்றிய குறிப்புகள் அல்லது அவர்களின் பேட்டி போன்றவைதான் பெரும்பாலும் இருக்கும். சில அரிய சமயங்களில் ஊருக்கு முக்கியமான விழிப்புணர்ச்சி ஊட்டும் சில செய்திகளும், கட்டுரைகளும் இருக்கும். இருந்தும் உள்ளூரில் நடக்கும்  முறைகேடுகளைத் தோலுரித்துக் காட்டும் நிலையில் அவை இல்லை என்றே கருதுகிறேன். நம் ஊரை நாம் பார்த்துக்கொண்டால், நம்மை ஆள்பவர்களும் நம் ஊரின் மேல் பார்வையை பதிப்பர்.

ஊடகத் துறையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கூறுவார்கள். அவர்களின் தார்மீக பொறுப்பு ஒரு நாடு சரியான பாதையில் முன்னேறுகிறதா என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். தவறுகளை இடித்துரைக்கும் பொறுப்பு மக்களின் சார்பாக இவர்களின் கைகளில் தான் உள்ளது. நான் விரும்பிப் படிக்கும் ஒரு பத்திரிக்கை, செய்திகளைத் தொகுத்து மட்டும் வெளியிடக் கூடாது என்று நான் விரும்புகிறேன். அதற்கும் மேல், மையாமி ஹெரால்ட் போல், பாஸ்டன் க்ளோப் போல் மக்களை வதைக்கும் ஏதோ ஒன்றை வெளிச்சம் போட்டுக் காட்டி, குரலில்லாதவர்களின் பெருங்குரலாய் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அப்படி இருந்தால்,  காலையில் தன் செய்திகளின் மூலம் அந்தப் பத்திரிக்கை நமக்குள் கண்ணுக்குப் புலனாகாத வகையில் அறத்தையும், அறிவையும், உத்வேகத்தையும், சக மனிதன் மேல் அன்பையும் கடத்தும் என்று நம்பிக்கையோடு சொல்லலாம். அப்பொழுது மீண்டும் மக்கள் தமது காலைப்பொழுதுகளை மடிப்பு கலையாத செய்தித்தாள்களோடோ அல்லது செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களோடோ தொடங்குவர்.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button