
ஒரு படப்பிடிப்புத் தளத்தில் இயக்குனர் K.பாலச்சந்தரை SPB அவர்கள் சந்தித்தபோது, “அங்க ஒருத்தன் நின்னுடிருக்கான்ல. எப்டி இருக்கான் பாக்க? கொஞ்ச நாள்ல பெரிய ஆளா வருவான் பாரு” என்று ஒரு இளைஞனைக் சுட்டி கலை ஆரூடம் சொல்லியிருக்கிறார் KB. “பாலச்சந்தர் சார் சொன்னப்போ நான் நம்பல. Now he proved me wrong” என்று SPBயே பல இடங்களில் நினைவுகூர்ந்து குறிப்பிட்ட அந்த இளைஞன் பிற்காலத்தில் ’ரஜினிகாந்த்’ என்று மாறினார். சுருதி பேதம் என்று திரையில் தோன்றிய அந்த நடிகன் பலரது திரைக்கனவுகளுக்கு ஆதார சுருதியாக மாறினார். புதுயுக கதாநாயகனுக்கான இலக்கணங்களை மாற்றி எழுதினார்; திரைமொழிகளுக்கு புதிய சூத்திரங்களைத் தோற்றுவித்தார்; இன்றும் ‘ரஜினி’ என்ற பிம்பம் திரையின் ஒவ்வொரு நூலிலும், சுருளின் ஒவ்வொரு பிலிமிலும், ஒவ்வொரு Byteலும் தனது சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தை அசைக்க முடியாத அளவுக்குக் கட்ட முடிந்த காரணமாக மூன்றைச் சொல்லலாம்.
முதலில் உழைப்பு. அசாத்திய உழைப்பு. முன்னுக்கு வர வேண்டும் என்பதை விட அதிலேயே நிலைக்க வேண்டும் என்று எடுத்த உழைப்பு. கிடைத்த கதாப்பாத்திரத்தில் நடித்து, ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு நிலையிலும் உழைத்திருக்கிறார்.
இரண்டாவது தன்னம்பிக்கை. தனது மைனஸ் அனைத்தையும் ப்ளஸ்ஸாக மாற்றிக்கொண்டு அதை வைத்தே முன்னேறிய நெஞ்சுரம். சரளமாகப் பேச இயலாது வார்த்தைகளை வெட்டி விழுங்கும் பேச்சையும், நளினமற்று வேகமாக கையை வீசிக்கொண்டு நடப்பதையும் மூலதனமாகக் கொண்ட தன்னம்பிக்கை. மூன்றாவது நன்றி. தனது வெற்றியின் பயணத்தில் யாருக்கெல்லாம் நன்றிக்கடன் இருக்கிறதோ அதையெல்லம் அவர்கள் மறைவுக்குப் பின்னும் பேணி வரும் மனம். இன்றும் ரஜினியின் வரவேற்பறையில் பாலச்சந்தரும், பஞ்சு அருணாச்சலமும் புன்னகையேந்தி வாழ்கிறார்கள்.
வெறும் ஸ்டைல் மட்டுமே செய்யும் நடிகராக ரஜினி இருந்திருப்பராயின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு இத்தனை பிரம்மாண்டம் கிடைத்திருக்காது. ரஜினி ஒரு நடிகன். ஒப்பனையற்ற எண்ணங்களின் சாமான்ய பிரதிபலிப்பு. காதல் காட்சிகள், நகைச்சுவை, வில்லன் கதாபாத்திரம் என்று அனைத்திலுமே முத்திரை பதித்தவர் ரஜினி.
இன்று ரஜினியைத் தூக்கிச் சுமக்கும் இந்த சூப்பர் ஸ்டார் அடையாளம் அவரது உண்மையான முகம் அல்ல. தனது முதல் பத்தாண்டுகளில் அவர் செய்த படங்களின் கதாப்பாத்திரங்களின் திசைகளைப் பார்த்தோமானால் ரஜினியின் கலையை வெறும் ஸ்டைல் என்ற கமர்ஷியல் வட்டத்திற்குள் சுருக்கிவிட்டதாகத் தோன்றலாம். புவனா ஒரு கேள்விக்குறி, காயத்ரி, அவர்கள், மூன்று முடிச்சு, ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், நெற்றிக்கண், எங்கேயோ கேட்ட குரல், ஜானி, கை கொடுக்கும் கை, தில்லு முல்லு என்று எத்தனையோ படங்கள் இருக்கின்றன ரஜினியை நடிகனாகக் காட்டிய படங்கள்.
“எம்மகன் கற்பூரம் மாதிரி. யார் ஏத்தினாலும் ஒரே ஜோதிதான்” என்று படையப்பா படத்தில் ரஜினிக்காக லட்சுமி சொல்லும் வசனம் ஞாபகம் வருகிறது. ரஜினி கற்பூரமே. எந்த இயக்குநர் அவரை வைத்துப் படமெடுத்தாலும் அவரது தொழில் நேர்மை அவரை வெற்றியடையச் செய்தது. மகேந்திரனுக்கும் தேவைப்பட்டார்; SP முத்துராமனுக்கும் தேவைப்பட்டார்.
சிவாஜியின் சிலை திறப்பு விழாவில் விஜயகாந்த்தை இவ்வாறு புகழ்ந்திருப்பார் ரஜினி. “சினிமா அரசியல் ரெண்டையும் ரெண்டு குதிரை மாதிரி பூட்டி ஓட்டி ஜெயிச்சார் எம்ஜிஆர். இப்போ விஜயகாந்த்தும் அப்படி ஜெயிச்சிருக்கார்.” (விஜயகாந்த் MLAஆக வென்ற நேரம் அது).
இன்று ரஜினியும் அந்த குதிரை வண்டியை ஓட்டத் தொடங்கியிருப்பது காலத்தின் விசித்திரம். இந்த உவமையைக் குறிப்பிடுவதற்குக் காரணம் ரஜினியின் கதாப்பாத்திரத் தேர்வுகள். ஒரே ஆண்டில் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள்.
முள்ளும் மலரும் – காளி வந்த அதே ஆண்டில்தான் ப்ரியா படத்தின் கணேஷும் திரையில் தோன்றினார். ஜானி வந்த அதே ஆண்டில்தான் முரட்டுக்காளை வெளியானது. ‘எங்கேயோ கேட்ட குரல்’ வந்த அதே ஆண்டுதான் ‘மூன்று முகம்’ படமும் வெளியானது. ராபின்ஹூடாக “நான் சிகப்பு மனிதன்” படத்தில் நடித்த அதே ஆண்டு ராகவேந்திரராக “ஸ்ரீ ராகவேந்திரர்” படத்தில் நடித்தார்.
இன்றைய இளம் நடிகர்கள் வயதான தோற்றத்தில் நடிப்பதற்கு முற்படுவதில்லை. ஆனால், ரஜினியோ “நெற்றிக்கண்”, “எங்கேயோ கேட்ட குரல்”, “நல்லவனுக்கு நல்லவன்”, “அண்ணாமலை”, “படையப்பா” என்று சீரான இடைவெளியில் வயதான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதிலொரு அழகான விஷயம் என்னவென்றால் ரஜினி பெரும்பாலும் பெண்குழந்தைகளின் தந்தையாகவே நிறைய படங்களில் நடித்தார். எங்கேயோ கேட்ட குரல், நல்லவனுக்கு நல்லவன், அண்ணாமலை, படையப்பா எல்லாம் ஒரு தந்தையின் அந்த கமெர்ஷியல் பூச்சுக்குளிருந்து ரஜினியை வெளியே கொண்டு வந்த படங்கள்.
ரஜினியின் நடிப்பை உதாரணங்களுள் அடக்கி விட முடியாது. ஆனாலும் குறிப்பிட்டுச் சொல்லாமல் சில இடங்களைத் தவிர்க்க இயலாது.
எத்தனையோ படங்கள் இருக்கின்றன. ரஜினியின் ஆகச்சிறந்த பத்து படங்களில் ஒன்றாக என் தேர்வில் ஜானி எப்போதும் இருக்கும். ஜானி, வித்யாசாகர். வாழ்க்கை. தேடல். பயணம். தனித்தனிப் பாதைகள். பயணங்கள் குறுக்கிடும்போது சேருமிடங்கள் ஒன்றாகும். காதல் அதில் இளைப்பாறும் தருணங்கள். இன்றும் ஜானி – அர்ச்சனா காதல் காட்சிகள் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள்.
மிகவும் ரசிக்கப்பட்டது அவர்களுக்குள் காதல் மலரும் காட்சி. ஶ்ரீதேவி தன் காதலை வெளிப்படுத்தும் இந்தக் காட்சியில் ரஜினி ஆரம்பத்தில் காதலை ஏற்கத் தயங்கி சிறிது எழுந்து நடந்த பிறகு அருகில் வந்து திருமணம் செய்வதாக ஒத்துக்கொள்வார். அந்தக் காட்சியின் இறுதியில் ரஜினியும் ஶ்ரீதேவியும் பேசும் வசனங்கள்.
“என்ன பத்தி அது இதுன்னு ஏதேதோ தப்பா நினைச்சுட்டு, ஏன் அப்டிலாம் பேசிட்டீங்க”
“நான் அப்டித்தான் பேசுவேன்”
“ஏன்… ஏன்… ஏன்?”
ஒரு கேள்வி, அதற்குப்பதிலாக ஒரு உரிமை கலந்த பிடிவாதம், அதற்குப் பதிலாக திரும்பவும் ‘ஏன்’ என்ற கேள்வி. அந்தக் கேள்விக்கு இருவரின் வெட்கங்கள் காதலின் பெயர்கொண்டு பதிலாகும். பியானோ ஒலிக்கத் தொடங்கும். ஒரு காதல் மலர்வதை அதன் முதல் படியை இருவரும் சிரித்துக்கொள்வது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதில் ஜானியான ரஜினி தனது முகத்தை வெட்கத்தால் மூடிக்கொண்டு சிரிக்கும் சமயம் ஆணின் அழகுக்கான இலக்கணம் தெரியும்.
மற்றொரு காட்சி.
ஜானியின் பிறந்தநாள்.
“ஒவ்வொரு வருஷமும் என் பொறந்தநாள் அன்னிக்கி எங்க அம்மாக்கிட்ட பணத்த கேப்பேன். அவங்களும் குடுப்பாங்க. அத பத்ரமா வச்சுப்பேன். ஆனா இந்த வருஷம் பணத்தக் கேட்டு வாங்க அம்மா உயிரோட இல்ல. எனக்குத் தெரிஞ்சு என்கிட்ட அன்பாப் பழகுற உங்ககிட்ட உரிமையா கேக்குறேன். உங்க கையில ஒத்த ரூபாயாச்சும் குடுங்க. அத பத்ரமா வாழ்க்க பூரா வச்சுப் பாதுகாப்பேன்”
ரஜினி இதை ஶ்ரீதேவியிடம் கேட்டதும் ஒரு மௌனம். திகைப்பில் ரஜினியிடமிருந்து ‘என்ன’ என்ற ஒரு கேள்வி வரும்.
ஶ்ரீதேவியின் மொழியில்,
‘நான் குடுக்குறது பெருசில்ல. நீங்க உங்க தாய மதிச்ச அளவுக்கு என்னையும் மதிச்சு கேட்டீங்களே. அதுக்கு நான் ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கனும். இந்த அதிர்ஷ்டத்த ஒவ்வொரு வருஷமும் எனக்குக் குடுப்பீங்களா?”
ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வியை பதிலாய்த் தந்து அந்தக் காட்சி முடியும். ரஜினியின் புன்னகை கலந்த Sure உடன்… இப்பொழுது வசனங்கள் மறைந்து இளையராஜாவின் இசைக்குறிப்புகள் பேசத்தொடங்கும். Montage காட்சிகள்.
ஶ்ரீதேவி காருக்குள் அமர்ந்திருப்பார். சாலையைக் கடந்து சென்று கரும்புச்சாறு வாங்கி வருவார் ரஜினி. ஶ்ரீதேவி குடிக்கத் தொடங்கியதும் ரஜினியின் செயல், அதை ரசிக்கும் பார்வை, தனது தொண்டையில் கைவைத்து ‘இது குடிக்கிறதுல குரலுக்கு ஒண்ணும் ப்ரச்சனையில்லயே’ என்ற தோரணையில் தான் ரசிக்கும் குரலுக்காக கேட்கும் தன்மை என்று ரஜினி மட்டுமே தெரிவார்.
இந்தக் காட்சி சில விநாடிகள்தான். ஆனால் நேரங்கள் உறைந்ந ஒரு பெருவெளியில் காதலர்களின் நெடும்பயணம் போலிருக்கும். வசனங்கள் இருக்காது. ரஜினியும் ஶ்ரீதேவியும் கவிதைகளாக இருப்பார்கள்.
இன்னொரு உதாரணம்.
படிக்காதவன் படம் சிவாஜியும் ரஜினியும் இணைந்து நடித்த படங்களில் முதன்மையான ஒன்று. ரஜினியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி. Title Cardல், ’கலைத்தாயின் மூத்த மகன் சிவாஜி கணேசன்’ என்று சிவாஜியின் முக்கியத்துவத்தோடு படத்தின் ஆரம்பம் அமைந்திருக்கும். அந்த ஆரம்பத்தின் அடிநாதம் ‘ஒரு கூட்டுக்கிளியாக’ பாடல். மலேசியா வாசுதேவன் சிவாஜியின் குரலாக மாறியிருந்த காலத்தில் 80களின் சிவாஜி பாடலாக இளையராஜா தந்த பாடல்.
அண்ணன், தனது இரண்டு தம்பிகள், அவர்களது வாழ்க்கை என்று ஒய்யாரமாக வெளிச்சம் கொடுக்கும் தொடக்கம். “என்னென்ன தேவைகள், அண்ணனைக் கேளுங்கள்” என்று மலேசியா வாசுதேவன் குரலில் ஒலிக்க ரஜினி – கமல் பெரும் நட்சத்திரமாக மின்னிக்கொண்டிருந்த தருணத்தில் பெரியண்ணன் ஸ்தானம் சிவாஜியிடம்.
சூழ்நிலையால் சிவாஜியை தம்பிகள் பிரிகிறார்கள். பின்னொரு நாள் அண்ணன் சிவாஜியை தம்பி ரஜினி சந்திக்க நேர்கிறது.
ஜெய்ஷங்கரும் சிவாஜியும் இருக்கும் அறைக்குள் அவசரமாக நுழையும் ரஜினி ஜெய்ஷங்கர் தனது டாக்ஸியில் தவறவிட்ட கைக்கடிகாரத்தை அவரிடமே பத்திரமாக திருப்பிக் கொடுக்கும் காட்சி. ரஜினியின் நேர்மையைப் பார்த்துக்கொண்டிருக்கும் சிவாஜி ‘தம்பீ’ என்று தனக்கே உண்டான கம்பீரத்தில் அழைப்பார். ஆனால் சொந்தத் தம்பி என்று தெரியாது. சட்டென திரும்பிப் பார்க்கும் ரஜினிக்கு அந்தக் குரலும், குரலின் முகமும் அண்ணன் என்று தெரிந்து உறைந்து வாய்பேச முடியாமல் திகைத்து நிற்பார். வைத்த கண் வாங்காத சிவாஜி, பேரதிர்ச்சியில் சந்தோஷம் நிறைந்த முகத்தோடு ரஜினி – இதற்கிடையே இளையராஜாவின் வயலின்.
“உன் பேர் என்ன பா”
“ராஜா”
“உங்க அப்பா அம்மா சரியாத்தான் பேர் வச்சுருக்காங்க. உன் நல்ல மனசுக்கு நீ ராஜா தான். போய்ட்டு வா”
“போய்ட்டு வர்றேன் சார்…”
கைக்கூப்பி நிற்கும் ரஜினி அண்ணனென்று தெரிந்தும் நான்தான் ராஜா என்று ஒளிந்த உண்மை, இமைக்காத கண்கள், மலேசியா வாசுதேவன் குரலில்…
//சொந்தக் கிளிதான் தேடும் இந்தப் பறவை!
கண்டும் அதைச் சொல்லாது அது அந்தப் பறவை
என்னில் ஒரு போராட்டம்
கண்ணில் ஒரு நீரோட்டம்
கண்ணை இமை காணாமல் காலக்கொடுமை//
ரஜினி தனக்கு நகர மனமில்லாமல் நகர்ந்து சிவாஜியைப் பார்த்தபடியே மெல்ல பின்னோக்கி நடந்து கதவினோரம் நின்று திரும்பிப் பார்க்க கண்ணீரைக் கடந்து புன்னகை கொஞ்சம் படர்ந்திருக்கும். இது ஒரு கமெர்ஷியல் படத்தின் இடைவேளைக் காட்சி என்று சொன்னால் நம்ப முடியுமா என்ன? சிவாஜி என்ற ஜாம்பவானோடு அத்தனை உணர்வுப்பூர்வமாக நடித்திருப்பார் ரஜினி. வாலி ஒருமுறை எம்ஜிஆர்+சிவாஜி = ரஜினி என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.
இன்னும் நிறைய இருக்கின்றன.
“ஆறிலிருந்து அறுபது வரை” படத்தில் தங்கைக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிச் சென்றுவிட்டு அவரது ஊதாசீனங்களைக் கேட்டு உடைந்து விழும் காட்சி, “தில்லு முல்லு” படத்தில்
“வடகோடி தண்டியில காந்தி உப்பு சத்தியாகிரகம்னு சொன்ன உடனே தென்கோடி தூத்துக்குடில ஒரு சட்டியத் தூக்கிட்டு சமுத்திரத்த நோக்கி நடந்தாரே ஒரு மகான்… அவரப் பத்தி கேள்வி பட்ருக்கீங்களா சார்?”
என்று கேட்டு அதற்கு தேங்காய் சீனிவாசன் இல்லை என்று சொன்னதும்,
“அப்ப அவர்தான் சார் எங்க அப்பா”
என்று சொல்லும் காட்சி, “தம்பிக்கு எந்த ஊரு” படத்தில் செந்தாமரையிடம் ஊரைக்காலி செய்ய வினுச்சக்ரவர்த்தி கேட்டுக்கொண்டிருக்க, பின்னாடி தரையில் அமர்ந்துகொண்டு ரஜினி செய்யும் சேட்டைகள், “முள்ளும் மலரும்” படத்தில் சரத்பாபுவை சந்திக்கக் காத்திருக்கும் ரஜினியை “யோவ் பெரிய மனுஷா போயா” என்று ஏளனம் செய்பவனை தோளில் சிரித்துக்கொண்டே தட்டிக்கொடுத்து “நல்லாயிரு” என்று சொல்லும் காட்சி என சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாமே அவர் காட்டிய பாவனைப் பொக்கிஷங்கள். கண்ணீருடன் நம்பிக்கையோடு “ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக் கூட இந்த காளிங்கறவன் பொழச்சுக்குவான் சார். கெட்டப் பையன் சார் அவன்” என்று சொல்லும் காளியை மறந்து விட முடியுமா என்ன?
காட்சிகளைப் போல பாடல்களையும் சொல்ல வேண்டும். காதலில் திளைத்து வர ‘காதலின் தீபமொன்று’, காதலைக் கொண்டாட “மலரே மலரே உல்லாசம்”, ஏமாற்றத்திற்கு “ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன்”, தந்தை பாசத்திற்கு “சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு”, கொண்டாட்ட்டத்திற்கு “ராக்கம்மா கையத்தட்டு”, நட்புக்கு “காட்டுக்குயிலு மனசுக்குள்ளே”, நட்பின் எதிரிக்கு “வெற்றி நிச்சயம்” என்று எண்ணற்ற பாடல்கள் இருக்கின்றன.
படங்களால், பாடல்களால், பேச்சுக்களால் இத்தனை ஆண்டுகள் சந்தோஷித்த ரஜினி, உடனிருந்த ரஜினி, ஊக்குவித்த ரஜினி, இன்று ‘நடிகர் ரஜினி’ என்ற கோட்பாட்டிலிருந்து ‘அரசியல்வாதி’ ரஜினி என்ற எல்லைக்குள் நகரும் காலத்தில் இருக்கிறோம். “என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய தமிழக மக்களே” என்ற வாசகத்தின்படி இது கைமாறு காலம். காலத்தின் கணக்குகளில் அவர் வர வேண்டுமென்ற எண்ணத்தில் ஆண்டுகள் பல காத்திருந்த ரசிகர்களுக்கு இந்தப் பிரவேசம் மிகப் பெரிய மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தந்திருக்கிறது.
அரசியலோ காலமோ எதைக் காரணமாகச் சொன்னாலும் ரஜினி என்ற மாபெரும் கலைஞனை மூன்று தலைமுறைகளின் கொண்டாண்டத்திற்கான முகத்தை தமிழகத்தின் திரைகளும் கண்களும் இழந்து கொண்டிருக்கும் நேரமிது என்று நினைக்க, அதன் நிதர்சனத்தை ஏற்க, எந்த ஒரு ரஜினி ரசிகனுக்கும் மனம் மறுக்கும். வயதே ஆகக்கூடாத பட்டியலில் ரஜினியையும் வைத்துக் கொள்ளலாம். ‘அண்ணாத்த’ ஆறுதலாக இருந்தாலும் ‘அண்ணாத்த’க்குப் பிறகும் வாய்ப்பிருப்பின் அவர் நடிக்க வேண்டுமென்பதே ஒவ்வொரு ரசிகனின் பேராசையும் விருப்பமும்.
ஆதர்ச ரஜினி இனி அரசியல் பேச வேண்டும். அரசியல் காரணங்களால் வாழ்த்தென்ற பெயரில் புகழ்மாலைகள் பெறலாம். விமர்சனமென்ற பெயரில் ஏச்சுக்களும் பேச்சுக்களும் எதிர்கொள்ளலாம். அனைத்துக்குமான மனத்திடத்தையும் உடல்நலத்தையும் நற்பாதையையும் அவர் வணங்கும் தெய்வங்களும் அவரை நேசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பும் கொடுக்கட்டும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்றும் எப்பொழுதும் எங்கள் அன்புள்ள ’தலைவா…’
*** ***