நெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 2 – புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – சுமாசினி முத்துசாமி
தொடர்கள் | வாசகசாலை

அமெரிக்காவைப் பற்றி நினைக்கும்போது பெரிய பலமாடிக் கட்டிடங்கள், எட்டு வழிச் சாலைகள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் போர்வை மலைகள் நம் நினைவுக்கு உடனே வந்துவிடும். ஆனால் இது அமெரிக்கா முழுமைக்கும் உண்டான குறியீடுகள் அல்ல. நியூயார்க் நகரம், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற மெகா பெருநகரங்களில் ஐந்நூறு அடி அளவில் ஒற்றை அறை அடுக்கு குடியிருப்புகள் மிகச் சாதாரணம். அதே நேரத்தில், நகரத்தை விட்டுத் தள்ளி புறநகர்களில் ஒரு ஏக்கர் நிலத்தின் நடுவே மூன்று அடுக்குகளில் பத்து பன்னிரெண்டு மிகப் பெரிய அறைகள் கொண்ட வீடு என்பதும் சாதாரணம். வெண்பனியும், அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் தான் அதிகம். மரங்களின் பச்சை போர்வை, கோடைக் காலத்தில் மட்டுமே. அப்பச்சை இலைகளே வெவ்வேறு வண்ணங்கள் பூண்டு இலையுதிர் காலத்திலும், வசந்த காலத்திலும் நம் கண்களுக்குக் காணும் திறன் இருப்பதற்காய் கடவுளிடம் நன்றி கூற வைத்துவிடும். அவை அவ்வளவு அழகு!
வடக்கில் இருக்கும் சில சிறப்புகள் தெற்கிற்குப் புதுமை. தெற்கின் வெயில் வடக்கிற்கு ஒவ்வாமை. சரி, நாடு முழுவதும் சாலைகளினால் சிறப்பு என்றால் வெகு சில இடங்களில் அதுவும் பிரச்சினை. நம்மூர் தோழர்கள் சிலர் இந்த கொரோனாவில் வீட்டில் முடங்கி தண்ணீரை விட இணையத் தட்டுப்பாட்டில் திணறியவுடன் ‘அங்க எப்படி?’ என்று என்னிடம் கேட்டனர். இங்கு, சில மத்திய மேற்கு (Mid-west) சிறிய ஊர்களில், இணையத்திற்குத் திணறிய நண்பர்கள் பற்றி அவர்களிடம் கூறினேன்.
வடக்கு, நமக்கு அரசியல் மட்டுமில்லாது பல விஷயங்களில் ஒத்து வராது என்று அந்தப் பக்கமே போகாத நம்மாட்கள் எத்தனை பேர்! அதேபோல் சுதந்திர தேவி சிலை (அமெரிக்காவின் கிழக்கில், நியூயார்க் நகரம் அருகில் உள்ளது) பார்க்காத கலிபோர்னியா வாழ் மேற்கு வாசிகளும், கோல்டன் கேட் பிரிட்ஜ் (நம்ம வாரணம் ஆயிரம் சூர்யா கிட்ட சமீரா மனதைத் திறக்கும் சீன்) பார்க்காத தெற்கு, வடக்கு, கிழக்கு ஊர்வாசிகளும் கொண்ட சராசரிதான் இங்கும். என்ன, நம்மூரை விட இங்கு சராசரி கொஞ்சம் குறைவு. சரி, இங்கு எந்த ஊரிலிருந்தாலும் நம்மவர்கள் எல்லோரும் வியக்கும், அமெரிக்கர்களும் பெருமை கொள்ளும் பல விஷயங்களில் ஒன்றான, மிகச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டு இந்த நாடு மொத்தத்திற்கும் எது? அமெரிக்காவின் முக்கு மூலையிலும், ஒரு சிறிய ஊர், கிராமம் முதற்கொண்டு முக்கியமான கட்டமைப்பு சிறப்பு என்பது இதன் நூலகங்கள்!
நெல்லையில் நான் ஒன்பதாவது படிக்கும் பொழுது ஒரு நிகழ்வு. நான் பள்ளி முடிந்ததும் வீட்டிற்குப் போகும் வழியில் நூலகம் சென்று விட்டேன். அங்கு எதேச்சையாக அப்பாவுக்குத் தெரிந்த ஒருவர் என்னைப் பார்த்துவிட்டார். பாளை நூலகத்தின் வாசலிலேயே ஒரு பேருந்து நிறுத்தம் உண்டு. அங்கு பேருந்துக்கு நின்று கொண்டிருந்தார். ஏன் இந்த விளக்கம் என்றால், வாசிப்புப் பழக்கம் மனதின் கிழக்கு ஜன்னலைச் சூரியனின் வெளிச்சத்திற்குத் திறந்துவிடும் பழக்கம் கொண்டது, பாவம் அவர், மனதின் ஜன்னல், கதவு அனைத்தையும் தாழ்ப்பாள் போட்டுப் பூட்டி வைத்திருந்ததாக இன்றும் நம்புகிறேன்! பார்த்தவுடன், “நீ எங்கம்மா இங்க!!!?” என்றுதான் ஆச்சரியமாகக் கேட்டார்கள். படிக்கிற பெண் பிள்ளை நூலகத்துக்கு எதற்கு வந்தாய் என்று கேட்கும் அளவிற்குத்தான், நான் படிக்கும் பொழுது நூலகம் நாட்டின் கண்களை எட்டியிருந்தது. பின்னர் நான் நூல் எடுத்து வீட்டிற்குக் கிளம்பும் வரை எனக்கு அரண் போல் இருந்து, “எதற்கு இப்படி?” என்ற கேள்வியை என் மனதிலும், “எவ்ளோ பொறுப்பா உன்ன பார்த்துகிட்டான்னு” அப்பாவிடமும் அவர் பதக்கம் வாங்கினார். அந்த வார இறுதியில் அப்பாவைப் பார்க்க வந்து, மனிதன் பேச ஆரம்பித்த ஆதி நாள் முதலாய் உதிர்க்கும் முக்கியமில்லாத வாக்கியமான “காலம் கெட்டு கிடக்கு சார்!” என்ற மாற்றமே இல்லாத கருத்தையும், “லைப்ரரில தான்பாதி பயலுவ லவ் லெட்டர் கொடுக்குகிறானுவ” என்று தன் தமிழ் சினிமாவின் தாக்கத்தையும் வெளிப்படுத்தினார். அதற்கும் மேல், பொது நூலகம் போவது என்பதும் அதில் புத்தகம் எடுத்துவிட்டு வருவது என்பதும் எவ்வளவு பெரிய சாதனையாக அன்று இருந்தது என்பதை இன்றும் நான் நினைத்துக்கொள்கிறேன்.
நூலகத்திற்குச் செல்ல பெற்றோரிடம் அனுமதி வாங்கி, சுற்றம் அல்லது தோழிகள் மற்றும் சூலம் (geomentry box) என்று துணைக்கு அழைத்துச் சென்ற காலவடுவின் மிச்சம் தேங்கி நிற்கும் எனக்கு, இங்கு வந்தவுடன் சாலைகளோ, கட்டிடங்களோ, பாலங்களோ பிரமிப்பை ஏற்படுத்தவில்லை. சில பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களை மட்டுமே கொள்முதல் செய்யாத, பழைய நூல்களை ஆவணங்களைத் தேடித் தேடிச் சேகரித்து மக்கள் கைகளில் கிடைப்பதற்கு மெனக்கெடும் இங்குள்ள நூலகங்களே எனக்கு வியப்பைக் கொடுத்தன! நம்மூரில் நூலகங்கள் பெட்டகம் போல் பூட்டி பாதுகாக்கப்பட்டு மக்களிடம் இருந்து கொஞ்சம் விலகி விட்டது போல் எனக்குத் தோன்றுகிறது. அரிச்சுவடிகள், ஆவணங்கள் போன்ற பொக்கிஷங்கள் வெள்ளத்திற்கும், தீக்கங்குக்கும் இரையான துயர நினைவுகளோடு வாழ்ந்து வரும் நமக்கு இந்த நூலக அமைப்பு மயிலிறகு!
“இரவு இருளில் மறைந்து இருக்கும் தலைமுறைக்கு, விடியலில் வெளிச்சம் இருக்கும் என்பதை உணர்த்தும் நம்பிக்கையின் குறிப்பு, நூலகங்கள்!” என்றார் விக்டர் ஹியூகோ என்னும் பிரெஞ்சு அறிஞர். இவர் சொல்வதைக் கண்டு நோக்கினால், நூலகங்கள் என்பது அறிவு வளர்க்கும் நிலையங்கள் மட்டும் அல்ல, பண்பாட்டுக் கூடங்கள்! இங்கு நூலகங்களில் நடக்கும் நிகழ்வுகள், ஊக்குவிக்கப்படும் உரையாடல்கள், குழந்தைகளின் பன்முக திறமையை மேலோங்க வைக்கும் கூட்டங்கள் நல் ஆச்சரியம்! எத்தனை புத்தகங்கள் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம், வீட்டில் அனைவர் பேரிலும் நூலக கார்டு போட்டுக் கொள்ளலாம்.
மேலாண்மை சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் படிக்குமாறு பரிந்துரை ஒன்று எனக்கு கிடைத்தது. நான் வசிக்கும் ஊரில் உள்ள நூலகத்தில் இல்லை. நூலகரிடம் விசாரித்து, வேண்டுகோள் படிவத்தை நிரப்பிக் கொடுத்தேன். ஒரு பத்தே நாட்களில் மாகாணத்தின் மற்றுமொரு மூலையில் உள்ள நூலகத்திலிருந்து கொணர்ந்து கொடுத்து விட்டனர். இது ஒரு சிறு உதாரணம். வேண்டும் புத்தகத்தை எழுதிக் கொடுத்தால் முடிந்தவரை வாங்கியோ, மற்ற நூலகங்களில் கடன் பெற்றோ கொடுத்து விடுவார்கள்.
இங்கு நூலகக் கூடங்கள் என்பது சமத்துவத்தின் கூடாரங்கள். புத்தகங்கள் அடுக்கப்பட்ட அந்த அலமாரிகளின் முன் அனைவரும் சமம். ஆடியோ பதிவுகள், பட DVDகள், இணைய தள சேவை, ஸ்கேனிங், ஜெராக்ஸ் என்று பல தரப்பட்ட சேவைகள் இங்கு உண்டு. இது போக மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகள் தனி! (Value added services to the society) மாணவர்கள் பலர் மாலை நேரங்களில் அங்குப் படிக்க வருவதையும், வீட்டுப்பாடம் முடிக்க உதவி கேட்பதையும், அவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க பல மூத்த மாணவர்கள், சில ஆசிரியர்கள் வருவதையும் காணலாம். உதவி கேட்டு நிற்கும் மாணவர்களுக்கு நூலக உதவியாளர்கள் தெரிந்த தொடர்புகளை ஏற்படுத்தி உதவுவதைக் காணலாம். ஒத்த நோக்கமுடைய சிறு சிறு குழுக்களின் செயல்பாடுகள் கண்ணுக்குத் தெரியாமல் இந்த பண்பாட்டுக் கூடங்கள் மூலம் நடந்து கொண்டே வருகின்றன.
மிக இனிமையாகப் பழகும் மனிதர்களை இங்கு நான் இன்று வரை நூலகங்களில் நூலகர்களாகத்தான் பார்த்துள்ளேன்! புத்தகங்களையும், மனிதர்களையும் நேசிப்பவர்களுக்கே இங்கு வேலை கிடைக்கும் என்று சிரித்துக்கொண்டே நான் போகும் நூலகத்தில் வேலை பார்க்கும் நூலகர் கூறினார். ஒரு உரையாடலில் அவர், “அமெரிக்க நாட்டில் வெகு சமீபம் வரை புத்தகங்களையும் கல்வியையும் நேசிப்பவர்களே பெரும்பான்மையாக அதிபராகவும், மாகாணத் தலைவர்களாகவும் இருந்ததே இந்த நாட்டின் மிகப்பெரிய வரம்” என்று கூறினார். அவர்கள் நூலகத்திற்குக் கொடுத்த முக்கியத்துவமே அறிவுத்தளம் பரவலாக்கப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணி என்று தான் உறுதியாக நம்புவதாகக் கூறினார். அமெரிக்காவின் நூலகத் தந்தை, முன்னோடிகள் என்று கருதப்படும் சில பெயர்களையும், நூலகங்களின் உரிமையை, முக்கியத்துவத்தைப் பாதுகாக்கும் சில சட்டங்களையும் வரிசையாகக் கூறினார். அந்த நொடி நமக்கு நூலகத் தந்தை என்று ஒருவர் இருக்கிறாரா என்பதே எனக்குத் தெரியவில்லை அல்லது பள்ளி புத்தகத்தில் என்றோ படித்தது முற்றிலும் மறந்து விட்டது. நூலக முறையைப் பாதுகாக்கும் சட்டங்கள் நம் நாட்டில் கண்டிப்பாக இருக்கும் என்று நம்பிக் கொண்டேன் (உங்களுக்கு அவை பற்றித் தெரியுமா?) பின்னர் பெருமதிப்பிற்குரிய எஸ்.ஆர்.ரெங்கநாதன் அவர்களின் பெயர், சேவை எல்லாம் கூகுளின் உதவியோடு தெரிந்தது. (இன்று ஆகஸ்ட் 9 அவர் பிறந்த நாள்)
தொடக்கப் பள்ளி முதலே இங்கு குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. தினமும் பதினைந்து நிமிடங்கள் முதல் முப்பது நிமிடங்கள் வரை ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்து அந்தப் புத்தகம் எதைப் பற்றியது என்று ஒரு வரி முதல் ஒரு பத்தி வரை எழுதச் சொல்வார்கள். மூன்று முதல் ஐந்தாவது வகுப்பு வரை கண்டிப்பாக ஒரு வருடத்தில், ஒன்று முதல் மூன்று புத்தகங்களுக்குக் கேள்வி பதில், நீண்ட மதிப்புரை எழுதுவது என்பது ப்ராஜெக்ட் போல் உண்டு. சில சமயம், பள்ளியே புத்தகங்களைத் தேர்ந்து எடுத்து அதைப் பற்றி எழுதச் சொல்வார்கள். அப்படி அவர்கள் தேர்ந்தெடுக்கும் புத்தகங்களைப் பற்றித் தனியாக ஒரு சமூக நீதி குறிப்பு எழுதலாம். (இது என் மகனின் மூலம் எனக்குக் கிடைத்த அனுபவம். இன்னொரு மாகாணத்தில், நல்ல புத்தகங்கள்தான் எனினும் அப்படி சமூக நீதி உணர்த்தும் புத்தகங்கள் எல்லாம் கொடுப்பதில்லை என்று ஒரு தோழி மூலம் அறியவந்த போது சின்ன வேதனை ). பாடப் புத்தகங்களுக்கு அப்பால் ஒரு மிகப் பெரிய உலகம் இருக்கிறது என்பதை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மாணவர்களிடம் உருவாக்குவதில் நிச்சயமாக இங்குப் பள்ளிகள் பெரு முயற்சி எடுக்கின்றன. ஒரு மாதத்திற்கு இத்தனை புத்தகங்கள், இத்தனை நிமிடங்கள் வாசித்தால் இலவசப் பரிசுகள் உண்டு போன்ற அறிவிப்புகளும் உண்டு. சில சமயம், புத்தகங்கள் படித்தற்காக பிஸ்சா ஹட் போன்ற உணவகங்கள் பள்ளியின் மூலம் இலவசமாகவோ, ஐம்பது சதவீத தள்ளுபடியிலோ உணவு பெற்றுக் கொள்ள டோக்கன்கள் கொடுப்பர். கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகள் புத்தகம் வாசிப்பதை ஊக்குவிக்கவே பல புத்தகக்கடைகள் வெளியிடும் விளம்பரங்கள் தனி விதம்! நூலகங்களில் சில சமயம் ஜூஸ், குக்கீஸ் கொடுத்து “வாங்க குழந்தைகளா” என்று கதை சொல்லி புத்தகங்கள் வாசிக்க வசதி செய்துக்கொடுப்பர்.
வாசிப்பதற்கான சூழலை ஊக்குவிப்பது ஒரு புறம் என்றால், எதிலும் இவர்கள் காட்டும் பிரமாண்டம் மறுபுறம். Newyork Public Library, 5th Avenue என்று கூகிள் கொடுக்கும் படங்களைப் பாருங்கள் ஒருமுறை!
அமெரிக்காவில் அதிகமான புத்தகங்களை வைத்திருப்பதில் முதல் இடத்தில் உள்ள நூலகம் இது. இந்த நூலகத்தைப் பார்த்தால் வாசிக்கவே பிடிக்காது என்பவர்கள் கூட ஒரு முறை புத்தகங்களின் வாசத்திற்குள் வாழ விரும்பிவிடுவர். தலைநகர் வாஷிங்டனில் ஒரு காங்கிரஸ் நூலகம் உள்ளது. அந்த நூலகத்தைப் பற்றி வாசித்து அதை ஒரு முறை சென்று பார்த்து விட வேண்டும் என்ற ஒரு அவாவும் எனக்கு உண்டு. கொரோனா காலக் கொடுமைகளில் இங்கு நூலகங்கள் பூட்டி கிடந்ததும், சில இன்றும் பூட்டி கிடப்பதும் பெருந்துயரம்.
புத்தகக்கடைகள் கொஞ்சம் அருகி வந்தாலும் அவைகளின் அருமையும் தனிதான். மெக் நல்லி ஜாக்சன் புக்ஸ் என்று மன்ஹாட்டனில் ஒரு கடை. அதில், காபி ஆர்டர் செய்து விட்டுச் சுடச் சுட வாங்குவது போல் புத்தம்புதியதாக அந்த நிமிடமே தேர்வு செய்யும் புத்தகத்தை அச்சடித்துத் தரும் (Print on Demand) ஒரு அச்சடிக்கும் மெஷின் இருந்தது (Espresso Book Machine என்று பெயர்). இப்பொழுது செயல்படவில்லையாம். நமது வருடாந்திரப் புத்தகக் கண்காட்சியில் வாசகசாலையை அறிமுகப்படுத்த சொல்லுவோம்.
தி பப்ளிக் (The Public) என்று சமீபத்தில் நான் பார்த்த ஒரு படம். கொஞ்சம் அமெரிக்கத்தனத்தில் இருந்து வேறுபட்ட படம். வீடில்லாதவர்கள், குளிர், ஏழ்மை, சமூகத்தில் ஏற்றத் தாழ்வு, அரசியல்வாதிகளின் அரசியல், போதையின் வதை என்று எத்தனையோ கவனிக்கப்பட வேண்டிய சிக்கல்களை நூலகம் என்ற பிரதிபலிப்பின் மூலம் நடைமுறை உண்மைகளாய் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அமெரிக்கச் சமூகத்தில் நூலகம் என்பது எத்துணை பெரிய இடம் வகிக்கிறது என்பதும் தெளிவாக புரியும். படம் முடிந்தவுடன் மனதில் தோன்றிய பல எண்ணங்களுள், இந்த நாட்டின் மிகச் சிறந்த கட்டுமானமான நூலகங்களுக்கு எந்த வித நெருக்கடியையும் எந்த அரசும் உண்டு பண்ணி விடக் கூடாது என்று மனதில் வெள்ளை மாளிகை ஆண்டவனை நினைத்து வேண்டிக் கொண்டேன். தமிழ்நாட்டின் அரசியலைக் கவனித்ததின் தாக்கம்!
பாவேந்தரின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், “புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில், புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும்!” மீட்டெடுப்போம் நமது நூலகங்களையும்!
தொடரும்…