சிறார் இலக்கியம்
Trending

கூடு பார் கூடு பார்

கீதா மதிவாணன்

கூடு பார் கூடு பார் பறவைக்கூடு பார்

முட்டையிட்டு அடைகாக்க உதவும் வீடு பார்

கட்டுமானம் வியக்கவைக்கும் காக்கைக்கூடு பார்

கச்சிதமாய் முள்ளும் சுள்ளியும் வைத்துக்கட்டுது பார்

 

வட்டத்துளை வெட்டிவைத்த அட்டைப்பெட்டி பார்

சிட்டுக்குருவி உள்ளே சென்று முட்டையிடுது பார்

உயரப்பனையின் உச்சியிலே தொங்கும் கூடு பார்

தூக்கணாங்குருவிகளின் திறமை வியந்து பார்.

 

மாவிலைகள் சேர்த்து தைக்கும் தையல்சிட்டு பார்

கூர் அலகால் நாரிழுத்து கோக்கும் அழகைப் பார்

சின்னக்குச்சிகள் கொண்டுவரும் கொண்டைக்குருவி பார்

கிண்ணம்போல வளைத்துக் கட்டும் கூட்டினழகைப் பார்

 

குழைத்தமண்ணால் கூடுகட்டும் தகைவிலான்கள் பார்

சன்னமான வாசல் வைத்த சாமர்த்தியத்தைப் பார்

பொந்துக்குள்ளே முட்டையிடும் பச்சைக்கிளிகள் பார்

பஞ்சும் இறகும் மெத்தையிட்டு குஞ்சைக் காக்குது பார்

 

பெருமரத்தில் இருக்கும் அந்தப் பருந்தின் கூட்டைப் பார்

பெரிய குச்சிகள் அடுக்கிக்கட்டிய பிரமாண்டத்தைப் பார்

ஆட்கள் கண்டால் எச்சரிக்கும் ஆட்காட்டி பார்

வெட்டவெளியில் கூடமைத்து காவல் நிற்பதைப் பார்

 

பாடுபட்டுக் கூடுகட்டும் பறவைத் திறமை பார்

கூடு கட்டத் தெரியாத குயிலின் நிலையைப் பார்

தேடிப்போய் காக்கைக்கூட்டில் முட்டையிடுது பார்

பாடுகையில் குயிலின் குஞ்சு கொத்துப்படுது பார்

 

அலகாலே பறவை கட்டும் அழகுக்கூடுகள் பார்.

அன்பு அக்கறை திறமை யாவும் அங்கே உண்டு பார்

பறவைக்கூடுகள் பலவிதம் பார் ரசித்துப் பார்

தொந்தரவு செய்திடாமல் தொலைவில் நின்றே பார்!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. விதவிதமான பறவைகளின் கூடுகள் குறித்துக் குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்த பாடல் சிறப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button