![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/04/FB_IMG_1587100615730-780x405.jpg)
தெலுங்கு சினிமான்னாலே பலபேருக்கு நினைவுக்கு வர்றது பாலகிருஷ்ணா ரயிலை கைகாட்டி பின்னாடி ஓடவைக்கிற ஒரு சிறுபிள்ளைத்தனமான சண்டைக்காட்சிதான். கல்லூரியில படிக்கும் போது தேடித்தேடி தெலுங்கு படங்கள் பாத்ததுண்டு. சீரியஸா அவங்க பண்ற சண்டைக்காட்சிகள்ல கூட நமக்கு சிரிப்பு கொடூரமா வரும். உதாரணமா ஜூனியர் என்டிஆரோட ‘ராக்கி’ ங்குற படம். தெலுங்குல மிகப்பெரிய வெற்றி. ஆனா படத்தைப் பாத்தா விழுந்து புரண்டு சிரிப்பு வரும். அப்பப்போஅப்பப்போ சேகர் கம்முலா ன்னு ஒரு டைரக்டர் கோதாவரி, ஹேப்பி டேஸ்னு எதையாவது தூக்கிட்டு வருவாரு. அது ரொமான்டிக் படம்னாலும் தெலுங்கு டெம்ப்ளேட்டுக்கு உள்ளதான் இருக்கும். தேசிய விருதுகள்ல கூட சிறந்த தெலுங்கு படத்திற்கான விருதை வாங்கமுடியாத நிலையிலதான் தெலுங்கு சினிமா இருந்தது. அதுக்கப்புறம் 2012 ல எஸ்.எஸ் ராஜமெளலியோட ‘நான் ஈ’ வந்து மூனு வருசத்துக்குப் பிறகு ஒரு தேசியவிருதை வாங்கிக் குடுத்தது. பின்னர் பாகுபலி வந்தது. இப்போ தெலுங்கு சினிமா நிறைய மாறிட்டு வருது. இந்திய அளவுல சிறந்த திரைக்கதைக்கான விருதை வாங்குற அளவுக்கு நல்ல சினிமாக்கள் வர ஆரம்பிச்சிருக்கு. குறிப்பா விஜய் தேவரகோண்டா ஃபீல்குட் படமான “பெல்லி சூப்புலு” மூலமா குடுத்த மிகப்பெரிய வெற்றி மூலமா நிறைய நல்ல மினிபட்ஜெட் சினிமாக்கள் வர ஆரம்பிச்சிருக்கு. அதுவும் தெலுங்கு டெம்ப்ளேட்டை தாண்டி மேக்கிங்லயும் கதையமைப்புலயும் தமிழ் மலையாள சினிமாக்களுக்கு இணையா நல்ல சினிமாக்களாவும் இருக்கு. அப்படி சமீபத்துல வந்து விமர்சன ரீதியா நல்ல பேரை வாங்குன சில தெலுங்குப் படங்களைப் பத்தி பார்ப்போம்.
Evvareke Cheppodu(2019) – Netflix
பாகுபலி படத்துல பிரபாஸ், “தேவசேனா!!வெட்ட வேண்டியது விரல்களை அல்ல.அவன் தலையை!!” ன்னு சொல்லிட்டு ஒரு ஆளை வெட்டுவாரில்லையா அந்த வெட்டுப்படுற ஆள்தான் இந்தப் படத்தோட ஹீரோ. பேரு விக்ரம் வாரே. அவரே தயாரிச்சிருக்காரு. ரொம்ப ரொம்ப சின்ன பட்ஜெட் படம். ஆனா படம் பேசுற விசயம் ரொம்ப சென்சிடிவ். நம்ம ஊர்ல சென்சிடிவ்னாலே ஜாதிதானே. ஆமாம், இது ஜாதியை விமர்சிக்குற படம். ஆனா ஹெவியா இல்லாம ஜாலியான ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட். சாதிப்பெருமை பேசுற அப்பாவோட கடுமையான சூழல்ல வளர்ற ஹீரோயின் ஜாலியான ஹீரோவை பாத்ததும் காதல்ல விழுறாங்க. கதாநாயகன் வேற ஜாதின்னு தெரிஞ்சிக்குற கதாநாயகிக்கு காதலை சொல்றதுல தயக்கம். ஆனா ஹீரோ இப்போ தானும் அதே ஜாதின்னு கதாநாயகி வீட்டுக்கு பொய் சொல்லி பெண் பாக்கப் போறாரு. அதுக்கப்புறம் நடக்குறதெல்லாம் காமெடி கலாட்டா. கடைசி அரைமணிநேரம் படத்துல பேசுற விசயங்கள்லாம் அட்டகாசம். நம்ம இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் காதலுக்கு முதல் எதிரி ஜாதிதான். அதை சரியா புடிச்சு ஜாலியான ஒரு படமா எடுத்துருக்காங்க.(சில இடங்கள்ல கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமான காமெடிகளும் உண்டு).
Ee Nagaraniki Yemaindi – Netflix
தேசிய விருது பெற்ற பெல்லிசூப்புலு இயக்குநரோட அடுத்த படம். நான்கு பால்யகால நண்பர்கள். நாலு திசையில பிரிஞ்சு போய்ட்ட நாலு பேரும் ஒரு பார்ட்டியில சந்திக்குறாங்க. அங்க இருந்து கோவாவுக்கு ட்ராவல் ஆகுது படம்.பல சீரியசான விசயங்களை ஜாலியா சொல்ற படம்.முழுக்க முழுக்க மாடர்ன் இளைஞர்களுக்காக வெங்கட் பிரபு, கெளதம் மேனன் ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த மாதிரியான ஒரு படம். படத்துல கெளதம்மேனன் கூட கேமியோ ல வர்றாரு. ஜாலியான படம்.
Chi la sow- Sun nXT
பாடகி சின்மயியோட கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கி நாகர்ஜூனா தயாரிச்ச படம் இ ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாம பாக்க ஆரம்பிச்சேன். போகப் போக படம் உள்ளிழுத்துக்குச்சு. நிறைய புதுசான ரொமான்ட்டிக் மொமன்ட்டுகள் படத்துல இருக்கு. போறபோக்குல அரேஞ்ச்டு மேரேஜ், விர்ஜினிட்டி, வரதட்சணைன்னு வலிக்காம விமர்சனம் பண்ணிடுறாங்க.
திருமணமே வேணாம்னு இருக்குற கதாநாயகனுக்கு வித்தியாசமான முறையில பெண் பார்க்குறதுக்கு ஏற்பாடு பண்றாங்க கதாநாயகனோட அம்மா. அந்த ஒருநாள்ல நடைபெறுகிற சம்பவங்களை ரொம்ப சுவாரஸ்யமா சொல்லி முடிக்கிறாங்க. ரொம்ப அழகான ஒரு படம். கண்டிப்பா பாக்கலம். 2018 ம் வருசத்துக்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வாங்கிருக்கு.
Dorasani – Netflix
விஜய் தேவரகொண்டாவோட தம்பி ஆனந்த் தேவரகொண்டா தான் ஹீரோ.படம் முக்கியமான ஒரு விசயத்தைப் பேசுதுன்னாலும் நம்ம இதுவரை பாக்காத கதைக்களம்னு சொல்லிட முடியாது.1980 கள்ல ஆந்திராவிலுள்ள ஒரு கிராமம்,ஊர்மக்களையும் போலிஸ் அதிகாரியையும் தன் கட்டுக்குள்ள வச்சிருக்க ஒரு நாட்டாமை டைப்பான ஆளு.ஊர் மக்கள் மத்தியில மகராஜாவா வாழுற அந்த ஆளோட பொண்ணை ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயி மகன் காதலிக்குறதால வர்ற பிரச்சினைகள்தான் படம்.என்னவெல்லாம் பிரச்சினைகள் வரும்னு நமக்கு தெரியும்கிறதால இயக்குநர் காதல் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் குடுக்குறாரு.கவித்துவமா காதல் முதல் பாதி முழுக்க சொல்லப்படுது.லேசான அலுப்பு ஏற்படுறதையும் தவிர்க்க முடியல.இதோட ஆண்டைக்கு எதிரான கம்யூனிஸ்டுகளோட எழுச்சியும் சொல்லப்படுது.படத்தில் காட்டப்பட்டுள்ள காதல் உணர்வுகளுக்காகவும் நாயகன் நாயகியோட நல்ல பெர்ஃபாமென்ஸ்க்காகவும் ஒருமுறை பாக்கலாம்.
Bro chevaru evarura -Amazon Prime
இது போன வருசம் தெலுங்குல வந்ததுலயே ரொம்ப முக்கியமான படம்.பல மொழிகள்ல ரீமேக் பண்ணிட்டு இருக்காங்க. சூதுகவ்வும் டைப்ல அட்டகாசமா எடுக்கப்பட்ட படம். இன்டர்வெல் ப்ளாக்ல இவங்க தர்ற ஒரு ஷாக் நாம எதிர்பாராதது. அதுக்கப்புறம் இரண்டாம் பாதியும் க்ளைமாக்சும் எதிர்பார்ப்பை மிஞ்சிடுது. சினிமாவுல சாதிக்கனும்னு ஆசைப்படுற ஒரு இயக்குநர் அவர் எழுதி வச்சிருக்க திரைக்கதையை ஒரு நடிகைகிட்ட சொல்றாரு.அவர் சொல்ற கதை நம் கண்முன்னாடி காட்சிகளா விரியுது. இது மாதிரியான சிக்கலான திரைக்கதையைக் கொண்ட ஒரு படம் தமிழ்ல சாத்தியம். ஆனா தெலுங்குல எடுத்து அதை ஹிட்டும் பண்ணிருக்காங்க. சினிமா விரும்பிகள் தவறவிடக்கூடாத படம். இருந்தாலும் எதிர்பார்ப்பை குறைச்சிக்கிட்டே படம் பாக்க ஆரம்பிங்க.
Mallesham – Netflix
மல்லேசம் குடும்பசூழ்நிலையால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு தன் குடும்பத்துடன் துணி நெய்யும் வேலையை செய்கிறான். ஒரு சேலையை நெய்வதற்கு கடும் உடல் உழைப்பும் நேரமும் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கான லாபமோ குறைவாகவே கிடைக்கிறது. தாயின் உடல்நலனுக்காகவும் துணிகளை நெய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கும் தன் ஊர் மக்களுக்காகவும் நூல் நூற்கும் ஒரு இயந்திரத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்குகிறான். அவனுக்கு இருக்கும் அறிவையும் பணத்தையும் வைத்துக்கொண்டு அதை செய்யமுடியாது என்பதை உணர்கிறான். அவன் அந்த இயந்திரத்தை வடிவமைத்தானா இல்லையா என்பதே கதை.
இது ஒரு பயோபிக் மூவி. முடிஞ்ச அளவு எதார்த்தமாவே எடுக்க முயற்சி மண்ணிருக்காங்க. காமெடி நடிகர் பிரியதர்சிதான் மல்லேசமாக நடித்திருக்கிறார். பார்த்தே தீர வேண்டிய. ஃபீல்குட் படம் இது. நெட்ஃப்ளிக்ஸ்ல இருக்கு..
Raju vaaru Raani Garu- Amazon prime
பிரேமம் படத்துலருந்து இன்ஸ்பையர் ஆகி எடுத்த படம்னு நினைக்கிறேன். ஆனா இந்தப் படத்துக்குன்னு ஒரு தனித்துவம் இருக்குறதை படம் பாக்கும்போது உணரமுடியும். மூன்று நண்பர்கள்ல ராஜான்னு ஒருத்தன் ராணின்னு ஒரு பெண்ணை காதலிக்கிறான். காதலிச்சாலும் அந்தக் காதலை வெளிப்படுத்த அவனுக்குத் தெரியுறதில்ல. நண்பர்ளோட உதவியோட ராஜா தன்னோட ராணிகிட்ட காதலை சொன்னானா இல்லையாங்குறதை ஆந்திராவிலுள்ள ஒரு கலர்ஃபுல்லான கிராமத்து பேக்கிரவுண்ட்ல சொல்லிருக்காங்க. படம் முழுக்க காதல் காமெடின்னு நல்லதொரு ஃபீல் குட் என்ட்டடெய்னர். டோண்ட் மிஸ் இட்.
Hit :The first Case – Amazon prime
தெலுங்குல வந்த நல்ல படங்களைப் பத்திப் பேசும்போது இந்தப் படத்தைப் பத்தி பேசாம இருக்க முடியாது. மேக்கிங் மற்றும் பர்ஃபாமென்ஸ்ல கலக்கலான படம். படத்தோட ஹீரோ விஸ்வாக் சென் அருமையான நடிப்பு. ஒரு பெண் கடத்தப்படுகிறாள். அதை துப்பறியும் பெண் போலிஸ் அதிகாரியும் கடத்தப்படுகிறார். அந்த பெண் போலிஸ் அதிகாரியின் காதலனான கதாநாயகன் இந்த குற்ற சம்பவத்தின் பின்னனியை எப்படி கண்டுபிடிக்கிறார்ங்குறதுதான் கதை.
க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் கன்வின்சிங்கா இல்லைங்குறது உண்மைதான். அது ஏன்னா நம்ம எப்பவுமே கொடூரமான ஒரு சீரியல் கில்லரை எதிர்பாக்குறோம். காரணம் ரொம்ப சிம்பிளா இருக்கும்போது நம்மாள ஏத்துக்க முடியுறதில்ல. தெலுங்குல ஹிட்டடிச்ச இன்வேஸ்டிகேசன் திரில்லர் இது. பார்க்க வேண்டிய படம்.
Palasa 1978 – Amazon prime.
இந்த மாதிரியான நேரடியான சாதிய மனநிலையை சாடுற ஒரு படம் தமிழ்ல வரலையேன்னு பொறாமையா இருக்கு. எந்த ஆதிக்கசாதி தலித் மக்களை ஒடுக்குறாங்களோ அந்த சாதிப் பெயரை கூட நேரடியா பயன்படுத்துறாங்க. கடைசியா அம்பேத்கரின் படத்தோட படம் முடியுது. நடுவுல சின்னதா தடுமாறுனாலும் தெளிவா சொல்ல வேண்டியதை சொல்லிடுறாங்க.
படத்தைப் பாத்து முடிச்சதும் இந்தப் படத்தோட இயக்குநர் கருணாகுமாரோட ஃபேஸ்புக் பக்கத்தை போய் பாத்தேன்.அதுல நம்ம தெலுங்கு தேசத்துக்கு பா இரஞ்சித், நாகராஜ் மஞ்சுளே மாதிரியான ஒரு இயக்குநர் கிடைச்சிட்டார்னு புகழ்ந்துருக்காங்க. நடிகர் அல்லு அர்ஜூனோட தந்தை இப்போ கூப்பிட்டு அடுத்த படம் இயக்க வாய்ப்பு தந்துருக்குறதா ஷேர் பண்ணிருக்காரு. தெலுங்கு ஆட்கள் எதை சொல்றதா இருந்தாலும் காரசாரமா சொல்லிடுவாங்க. அதேமாதிரி சாதிக்கு எதிரான சமத்துவத்தையும் பொட்டுல அடிச்ச மாதிரி ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லிருக்காங்க இந்தப் படத்துல.
இதுபோக நிறைய நல்ல படங்கள் இருக்கு. ஆனா அதெல்லாம் பரவலா தமிழ் ரசிகர்களுடைய கவனத்தை ஏற்கனவே பெற்றுடுச்சி. உதாரணமா C/o kancherapalem, ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா மாதிரியானப் படங்களைப் பாக்காத ஆளே இருக்கமுடியாது. அதனால அந்தமாதிரி நிறைய படங்களை தவிர்த்திருக்கேன்.