இணைய இதழ்இணைய இதழ் 82கட்டுரைகள்

நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே – கவிஞர் கூடல் தாரிக் அவர்களின் நிலவென்னும் நல்லாள் கவிதை நூலை முன்வைத்து – யாழ் ராகவன்

கட்டுரை | வாசகசாலை

வீன கவிதை இயங்கு தளத்தில் 90 களுக்கு பிறகான காலகட்டம் மிக முதன்மையானது. அகவாசிப்பு என்றும் புறவாசிப்பு என்றும் கவிதை தன்னை இரண்டு விதமாக கட்டமைத்துக் கொண்ட காலகட்டம் அதில் தான். இரண்டு தரப்பிலும் மிகுந்த வேகம் கொண்டு பல்வேறு பாடுபொருள்களில் பல்வேறு உத்திகளில் கவிதை காட்டாற்று வெள்ளம் போல பொங்கி பிரவாகம் எடுத்து வழிந்து ஓடியது.

ரத்தமும் சதையுமான போராட்டம் கொண்ட புறவாசிப்புத் தன்மை மிகுந்த உரத்து எழுப்பக்கூடிய குரல் கலந்து கவிதை ஒரு புறம். உள்ளொளிப் பயணமாக மனதின் பல்வேறு அறைகளில் வியாபித்து பூவின் மென்மையாய் காற்றின் பரவலாய் மனதுக்குள் இயங்கும் உற்சாகச் சொற்களாகவும் கவிதை பரவியது.

ஒருபுறம் செல்பவர் மறுபுறம் செல்வதில்லை. ஒரு பார்வையில் நீண்டு பயணிப்பவர் மறு பார்வையை கருத்தில் கொள்வதே இல்லை. அரசியல் சமூகம் சார்ந்த போராட்ட எழுத்து ஒரு புறம். இயற்கை அழகியல் காதல் என்று மென்மைத் தன்மையோடு இன்னொரு புறம். இரண்டு தண்டவாளத்திலும்கவிதை வண்டி பயணித்தது.

சங்க காலத்திலேயே அகமும் புறமும் கலந்த இரு நூல்கள் எட்டுத்தொகையிலும் உண்டு பத்துப்பாட்டிலும் உண்டு. முனைவர் பீர் முகமது தாரிக் என்ற கூடல் தாரிக் அவர்களை கவிஞர் என்று சொல்வதை விட கவிதையாகவே வாழ்பவர். சமீபத்தில் அவரது ஐந்தாவது தொகுப்பான ‘நிலவென்னும் நல்லாள்’ ஒரு புது உத்தியை தமிழ் கவிதை உலகிற்கு அளித்திருக்கிறது என்றே சொல்லலாம். அழகியல் கலந்த போராட்டம். இவருடைய கவிதைகள் சாதாரணமாகத் தெரியும் ஆனால், சொற்கள் எளிமையாக இருந்தாலும் அர்த்தங்கள் வலிமையானவை. படித்தவுடன் எளிமையாக இருந்தாலும் அதன் அர்த்த பொருண்மைகளை எளிதில் கடந்து விட இயலாது. அவர் காட்டும் இயற்கையில் அவர் நினைக்கிற அத்தனை சமூக அவலங்களையும் எடுத்துக் கூறும் விதம் வில்லையும் வளைக்கும் ஆற்றல் உடையது கல்லையும் கரைக்கும் வலிமை பெற்றது.

“மழையின் நிமித்தம்
நிறைவதும் வற்றுவதும்
எப்போதும் இல்லை
கடலுக்கு”

எவ்வளவு பெரிய ஆளுமை இந்த கவிதையில் வெளிப்பட்டிருக்கிறது! கடல் தன்னளவில் எப்பொழுதும் நிரம்பியே இருக்கிறது அது மழையைப் பொறுத்து வாடுவதும் மகிழ்வதும் இல்லை என்று சொல்லுகின்ற பொழுது அதனைப் போலவே எல்லோரும் ஒரு ஜென் நிலையில் இருக்க வேண்டும் என்ற புரிதல் நமக்கு ஒரு கவிதையில் கிடைக்கிறது.

ஐவகை நிலங்களின் செறிவையும் சங்க இலக்கியம் அள்ளிப் பருகத் தந்திருக்கிறது அதன் சாரத்தை எப்போதும் தன் கவிதை எங்கும் குறையாமல் எழுதிவரும் முயற்சியில் எப்போதும் கவிஞர் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்.

“நீல நிறப் பறவையொன்று
பறப்பதை பார்க்க
வேண்டும் போலிருக்கிறது
கடலுக்கு றெக்கை முளைத்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்”

ஆழமான பார்வையும் அழுத்தமான சிந்தனையும் கூர்மையான வாசிப்பும் இருந்தால் மட்டுமே இப்படி ஒரு காவிய வரிகளை படைக்க முடியும் கற்பனையின் உச்சத்திலும் பரந்த மனப்பான்மையின் தேடலிலும் அன்பில் நனையும் ஈரத்திலும் இருப்பவருக்கு மட்டுமே இந்த மாதிரி வரிகள் சொந்தமாகும்.

இந்தத் தொகுப்பில் மணிமுடியாக கருதத்தக்க பல கவிதைகளில் ஒரு கவிதையில் எவ்வளவு பெரிய அரசியலை, எவ்வளவு பெரிய வலியை ,எவ்வளவு பெரிய இருத்தலை, எவ்வளவு பெரிய போராட்டத்தை, எவ்வளவு பெரிய நியாயத்தை, எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு பெரிய பெருமிதத்தை பல நூற்றாண்டுகளில் ஏற்படுகின்ற அழுத்தங்களை சட்டென்று தெறிக்க விட்டு உள்ளார் கவிஞர்.

“நமக்குத்தான் கள்ளிச்செடி
பாலைநிலத்துக்கு
அது தான் ரோஜா”

பறவைகள் இருக்கும் இடத்தில் இருப்பது நமக்கு எவ்வளவு சுகம்.. எல்லாத்தையும் போலி செய்கிற மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது

“சிறகு அழகு கால்கள் என
அனைத்தையும் வரைந்து ஆகிவிட்டது
இந்த பறவையின் தீச்சொலியைத் தான்
எப்படி வரைவது என தெரியவில்லை”

எத்தனை தூரம் பயணித்து வந்த சமூகம் இன்றும் வன்முறையில் இறங்குகிறது.. இப்படி எல்லாம் கவிதை பயணித்தால் தான் வன்முறை குறையும் என்பதை உணர்ந்து தான் கவிஞர் இப்படி

“யாருக்கும் தெரியாமல்
ரகசியமாக பூவை
பறித்து செல்பவன்மீது எந்த கோபமும் இல்லை
சூடிக்கொள்ளத்தானே பூ”

என்று கருணை மிதக்கும்சொற்களுக்கு கவிதை அணிகலன் பூட்டுகிறார். தான் என்ற அகந்தையை, தனது என்ற உடைமையை, தன்னால்தான் என்ற மமதையை போற போக்கில் சாட்டை எடுத்து சுழற்றுவது போல அடி மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிற அற்புதமான கவிதையை இவ்வளவு மென்மையாகச் சொல்ல முடியும் என்பது நான் அறிந்த வகையில் இவருக்கு மட்டும் வாய்த்திருக்கிறது.

“ஒவ்வொரு செடிக்கும் வரிசையாய்
தண்ணீர் தெளித்து செல்கிறான்
தோட்டத்துக்காரன்
தனக்கு மட்டும் மழை பொழிவாய் நம்பிக்கொண்டிருப்பது
பூவின் பிழை தானே”

சமூக நல்லிணக்கத்தினை, தேசிய ஒற்றுமையினை, மதநல்லிணக்கத்தை, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று சமூகத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியராக கவிஞனும் இருக்கலாம் என்பதை மேற்கண்ட கவிதை நமக்குச் சொல்லுகிறது. கடவுளைத் தோட்டக்காரன் என்றும் சொல்லலாம் தானே.

“அதனால் தான் சொல்கிறேன்
நாளில் பத்தாவது
தடவையாக இருந்தாலென்ன
இந்தத் தேநீரை ஒருபோதும்
மறுதலித்து விடாதீர்கள்”

இன்னும் கவிதையில் சக மனித நேசம், பிரியம் காலகாலத்துக்கும் நீடிக்க வேண்டும் என்ற தன்மையில் அன்பைக் குழைத்தே எழுதப்பட்ட கவிதையாக பார்க்கிறேன்.

“ஒரு கோப்பையை தான்
வரைந்தேன் காகிதம் முழுவதும்
தேநீர் வாசம்”

ஜென் தத்துவத்தை எவ்வளவு நேர்த்தியோடு பிரபஞ்சத்தை தனது காகிதத்தில் வழித்துக் காட்டுகிற பேரன்பும், பிரியங்களும் கவிஞனுக்குள் மட்டுமே வாழ்கிறது.

நிலவை, காதலாக, பெண்ணாக, கருணையாக, உணவாக எல்லாம் பார்ப்பது கவிஞர்களின் வழக்கம். ஆனால், மதவாதிகள் நிலவை தங்கள் மதத்தின் அடையாளமாகப் பார்ப்பது அவர்களுடைய ஆதிக்க மனநிலை. எல்லோரும் சொந்தம் கொண்டாட சிலர் தமக்கு மட்டுமே சொந்தமான வைத்துக் கொள்வது எந்த வகை நியாயம்.

“யாரிடம் ஒப்படைப்பதென
கேள்வி ஒன்று பிசைந்த தருணத்தில்
நிலாவினை மீண்டும் இரவினிடமே
ஒப்படைத்து விட்டேன்”

எத்தனை நூற்றாண்டுகளாக நிலவைப் பார்த்த கவிஞர்கள் மத்தியில் தனக்கென்று தனி பார்வையின் மூலம் அதுவும் சமூகத்திற்கு பயன்படும் நல்லிணக்க பார்வை மூலம் பார்த்ததில் தாரிக் நிலவளவு புகழ் பெற்றார் என்று சொல்வது மிகையாக இருக்காது.

கடல், நதி, பூ, நிலா, மழை, பறவை இயற்கையின் வடிவழகை கற்பனை கலந்து எழுதுவது ஒரு புறம். பெண்ணியம், வறுமை, சமூக நல்லிணக்கம், மத ஒற்றுமை, இன்றைய வாழ்க்கைக்கு தேவையான நல்ல பல கருத்துக்கள் இன்னொரு புறம். கற்றற்ற மனம், பற்றற்ற நிலை, தாவோயிசம், ஸூபிசம், ஜென் தத்துவம், மார்க்சியம் என்ற தத்துவார்த்த விசாரணை இன்னொரு புறம். அன்பு, அறம், ஈரம், பிரியம், நேசம், காதல் போன்ற அழகியல் சார்ந்த விஷயங்கள் இன்னொரு புறம்.

ரயில் பெட்டி போல, அடுக்கு மாடி கட்டிடங்கள் போல சொல் நேர்த்தியும் மொழிக் கூர்மையும் கற்பனை வளமும் தொகுப்பு முழுவதும் விரவிக் காணப்படுகிறது. தொகுப்பு முழுவதும் அழகான வேள்வி, அர்த்தமுள்ள கேள்வி, அழகிய போராட்டம், அசுரத்தனமான நீரோட்டம். மனம் அதிரும் மென்மையான பூகம்பக் கவிதைகள் தென்றலின் தீண்டலோடு தீயின் வேகம் வந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த ‘நிலவென்னும் நல்லாள்’ தொகுப்பு அமைந்திருக்கிறது.

கவிஞர் தாரிக் அவர்களின் கவிதை மனோ நிலைக்கு பாராட்டும் வாழ்த்துகளும்

**********

narasimmaragavan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button