இணைய இதழ்இணைய இதழ் 82சிறார் இலக்கியம்

டிக் டிக் டிக் – ஜெயபால் பழனியாண்டி

சிறார் இலக்கியம் | வாசகசாலை

ரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இருக்கும். அவனுக்கு வயிற்றைப் புரட்டியது. தனியே வெளியே செல்வது கொஞ்சம் பயமாக இருந்தது. சிறுசிறு சத்தம் கேட்டாலே பேயாக இருக்குமோ என்று பயப்படும் அவன் எப்படி இந்த இருட்டு நேரத்தில் வெளியே செல்வான். அம்மாவைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வீட்டின் பின்பக்கம் சென்று மலம் கழித்தான். அவசரமாக இருந்ததினால் இரவின் பயம் தெரியவில்லை. இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகாக வானத்தைப் பார்த்தான் பயம் கொஞ்சமாக அவனைத் தொற்றிக் கொண்டது. அவனைத் தனியே அமர்த்திவிட்டு அம்மா சுடுதண்ணி வைக்க சென்றுவிட்டாள். மெல்ல வானத்திற்கு கீழே அடிவானத்தில் தீட்டப்பட்ட ஓவியமாய் மலை உச்சியில் மரங்கள் தலையை விரித்துக்கொண்டிருந்தன. மரங்களுக்கெல்லாம் மீசை முளைத்து பெரும்பூதமாக அவனை மிரட்ட ஆரம்பித்தன. பயத்தில் கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். அம்மா வந்து விட்டாள். கால்களைக் கழுவிக்கொண்டு வீட்டினுள்ளே நுழையும் பொழுது அம்மாவிடம் அவன் கேட்டான். எப்படிமா அந்த மரமெல்லாம் மனுஷங்கமாறியே தெரியுது. அவள் சிரித்துக்கொள்கிறாள்

அப்பாவைவிட அம்மாவின் மீதுதான் அவனுக்கு அலாதி பிரியம். அதிகமாக அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டுதான் இருப்பான். அதிகாலை அம்மா எழும்போதே அவனும் எழுந்து கொள்வான். சாம்பாரில் போடுவதற்கான உருளைக் கிழங்கை தனியே வேகவைப்பாள். அதன் தோலை உறித்து இவனுக்கு உண்ணக் கொஞ்சம் கொடுப்பாள். அதற்காகவே அவன் நேரமாக எழுந்துகொள்வான். பல் துலக்குவானோ இல்லையோ அம்மா தரும் சிறுசிறு பண்டங்களுக்காக இவன் நாக்கு துடித்துக்கொண்டே இருக்கும். அடுப்பில் பலாக்கொட்டையைச் சுட்டுத் தருவாள். தக்காளியை விறகு அடுப்பு சாம்பலிற்கு இடையே வேகவைக்கும்போது எழும் டப்டப் ஒலி அவனைப் பயமுறுத்தினாலும் அதனை நன்றாகச் சுட்டு அதன் மேல்தோலை நீக்கி உள்ளே இருக்கும் மென்தோலை சிறு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் உப்போடு தண்ணீர் ஏதும் சேர்க்காமல் அவளின் கைகளாலேயே நசுக்கி ரெடிமேட் தக்காளி சட்னியைச் செய்து தருவாள். சோற்றோடு அதனைப் பிசைந்து சாப்பிடும் சுவை.. ஆஹா.. ! அதே போன்றதுதான் அம்மியில் துவையல் அரைத்தப்பிறகு கல்லில் ஒட்டிக்கொண்ட துவையலில் சூடான கொஞ்சம் வெள்ளைச்சோற்றைப் போட்டு பிசைந்து தரும் பச்சை வண்ண சோற்றின் சுவையும்..

அதுமட்டுமா ஒருநாள் தேயிலைச் செடிக்கு நடுவே கூடுகட்டியிருந்த குருவியின் முட்டையைக் கொண்டுவந்து அவனுக்கு வறுத்துக்கொடுத்தாள். அவன் வாழ்நாளில் குருவியின் முட்டையை முதலும் கடைசியுமாக சாப்பிட்டது அன்று மட்டும்தான். சுவையாக இல்லையென்று அர்த்தமில்லை. குருவிகளின் மீதான இரக்கத்தினால் அவன் அதன் முட்டைகளை உண்பதில்லை.

அந்த பால்ய வயதில் அப்பாவை அவனுக்குப் பிடித்திருந்தாலும் அம்மாவின் அளவிற்கு இல்லையென்றுதான் சொல்லமுடியும். அம்மாவைப் எப்போதும் பிரியக்கூடாது என்றே நினைப்பான். எப்போதேனும் அம்மாவைப் பிரிய நேர்ந்தால் அவனின் அழுகை தொண்டைக்குழியில் வந்து நிற்கும். அப்பா மீதான பயம் அவனுக்கு இருந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், அம்மாவை எதிர்த்தும் பேசுவதற்கான துணிவை எங்கிருந்தோ கற்றுக்கொண்டிருந்தான். அப்பாவிடம் அது செல்லாது. டேய்என்ற சத்தத்திற்கு மறுபேச்சில்லை. இருந்தாலும் அப்பாவிடம் இடைவிட்ட நெருக்கம் அம்மாவிடம் சற்று அதிகமே. வளர வளர அப்பா அம்மா மேலான அன்பை சரிசமமாகப் பகிரக் கற்றுக்கொண்டான். என்னதான் அப்பா அவனிடம் சிலசமயங்களில் கடுமையாக நடந்துகொண்டாலும் அவன் மீதான பாசம் அவருக்கு அதிகமாகவே இருந்தது. அன்பை வெளிப்படுத்துவதில் உலகின் அத்தனை அப்பாக்களும் செய்யும் அதே தவறையே அவரும் செய்திருந்தார்.

தீபாவளி நாளொன்றில் பட்டாசுக் காகிதங்கள் வாசலில் சிதறிக்கிடக்க குடும்பமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அப்பாவின் கைகளில் கட்டியிருந்த கடிகாரம் அவனின் கண்களை உறுத்திக்கொண்டிருந்தது. சிறுவயதில் தன்னைச் தோளில் சுமந்து சினிமா தியேட்டரில் பார்த்த படங்களின் கதைகளைச் சொல்லி ரம்மியமாக அவனைத் தூங்கவைத்ததுதிருவிழாவிற்கு ஒரு சட்டைக்கு இரண்டு சட்டை வாங்கிவந்து அழகுபார்த்த நினைவுகளைச் சுழற்றிச் சென்றது. கட்டம்போட்ட சட்டைக்குப் பதிலாக காக்கிச்சட்டையை மட்டுமே அதிகமாக அணிந்திருந்த அப்பாதேய்ந்த பாதங்களில் கிரீஸ் படிந்த வெடிப்புகள் முகத்தில் மின்வெட்டாய் பதிந்துபோனது. மகனின் மீதான பாசம் மதுவின் கோப்பைக்குள் நிறைந்த உளறல்களாக காதுகளுக்குள் ரீங்காரமிட்டது. சுருட்டின் புகைமண்டலம் ஓட்டின் மோட்டு வளையத்தைச் சுழன்று கொண்டிருக்க தலைமாட்டில் வைத்த வானொலியில் பழைய பாடல் ஒன்று ஒலிக்கின்றது. எல்லாவற்றையும் மறந்த பெருமிதக் களிப்பில் கண்களை மெதுவாக உறக்கத்திடம் ஒப்படைத்தார் அப்பா.. 

அந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில் மின்னிக்கொண்டிருந்த கடிகார முட்கள் அப்பாவின் கையை நெருக்கியபடி நாடித்துடிப்பை தேடிக் கொண்டிருக்கின்றன இப்போதும்

********

jaayapal@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button