இணைய இதழ்இணைய இதழ் 82சிறுகதைகள்

வண்ணத்துப்பூச்சியைத் தேடியவன் – தேஜூ சிவன்

சிறுகதை | வாசகசாலை

ராஜலட்சுமி ஒரு குழந்தை போல் படுத்திருந்தாள்.

உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

ரமணி உள்ளங்கை தொட்டார்.

ராஜி.

விழிகள் அவிழ்ந்தன.

ஓரங்களில் ஒரு துளி நடுங்கி உருண்டது.

சொல்லு ராஜி. என்ன வேணும்?

உதடுகள் மெல்ல அசைந்தன.

மகி..மகி.

மகி என்கிற மகேந்திரன்.

பீறிடும் ஒரு ஷெனாய் போல் திடும்மென வீரிட்டாள்.

மகேந்திரா என் செல்லமே.

ரமணியின் உடல் காற்றிலாடும் தீபம் போல் மெலிதாக அசைந்தது.

பின்னாலிருந்து ரவி அவர் தோளைப் பற்றிக் கொண்டான்.

நகர்ந்து அம்மாவின் அருகில் போனான்.

ம்மா.. மகி வந்துருவான்மா.

எப்படா வருவான்? நீங்கள்லாம் என்ன பண்றீங்க?

ரமணி ராஜியின் கன்னம் தொட்டார்.

கட்டாயம் அழச்சிட்டு வர்றோம். ராஜி.

அப்பாவும் புள்ளயும் இதையே சொல்றிங்க.

மேலும் துளிகள் உருண்டன.

கண்களை மூடிக் கொண்டாள்.

புரபோஸர் ஹனாரி பெருமூச்சு விட்டார்.

ஸாரி ரமணி சார்.

என்ன பண்றதுன்னே தெரியல ஸார்.. என் தம்பி வரலைன்னா அம்மா பொழைக்க மாட்டார்.

இது நான் ஆரம்பிச்சு வச்ச விஷயம்.. அந்த ரேர் பட்டர்ஃபிளையைத் தேடப் போனது தப்பாப் போச்சு.

நீங்க என்ன சார் பண்ணுவீங்க? நான் மட்டும் வந்துருக்கனும். என் தம்பியையும் அழச்சிட்டு வந்தது என் தப்பு.

ரமணி குறுக்கிட்டார். சின்ன புள்ளைலேர்ந்து பட்டர்ஃபிளைன்னா அவனுக்கு இஷ்டம். அவன் அம்மா தான் அவனுக்கு சிபார்சு பண்ணியது. அவன் எதுவும் கேக்க மாட்டான். கேட்டால் அவன் அம்மா செய்யாம விடமாட்டாள்.

சரி.. அதை விடுங்க. இப்ப என்ன பண்ணலாம்? ஃபாரஸ்ட் ஆபிஸ்ல சொல்லி தேடியும் கண்டு பிடிக்க முடியல்லையே.

அதான் புரபோஸர் நானும் அப்பாவும் அங்க போகலாம்னு இருக்கோம். நீங்க ஃபாதர் ராபர்ட் கிட்ட ஃபோன் பண்னிச் சொல்லணும்.

புரபோஸர் யோசித்தார்.

ஓகே. சொல்லிடறேன். எப்ப போறிங்க பிளட் ஹில் ஃபாரஸ்ட்க்கு?

நாளை காலை

***

ஃபாதர் ராபர்ட் சின்னப் புன்னகையுடன் வரவேற்றார்.

ரமணி அவர் கை தொட்டார்.

எம் புள்ளயக் கண்டுபிடிச்சுக் கொடுங்க ஃபாதர்.

நிச்சயமாக.

என் வொய்ஃப்க்கு அவன் செல்லப் பிள்ளை. அவன் கருவில உருவானப்ப அவளுக்கு கொஞ்சம் உடம்பு சுகமில்லை. நாந்தான் அவளக் கட்டாயப் படுத்தி கருவை அழிக்க மருந்து சாப்புட வச்சேன்

ரவி அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

எல்லா விஷத்தையும் மீறி அவன் பொறந்தான். மூளை வளர்ச்சியில்லாம. அந்தக் குற்றவுணர்வால தான் அவ அவனை விட்டு எப்பவும் பிரிய மாட்டா.

ஃபாதர் ஆதரவாய் அவர் கை தொட்டார்.

கண்டுபிடிச்சுடலாம். வேலனை வரச் சொல்லிருக்கேன். ஜீப் போயிருக்கு.. இன்னும் அரைமணிநேரத்துல வந்துடுவான்.

வேலன் கண்கள் விரியச் சொன்னான்.

ஜேஷ்டா தேவி சார்.

என்ன?

ஆமாம் சார். ஜேஷ்டா தேவி எங்கள் காட்டின் ராணி

அவ தன் பிள்ளைய தானே எடுத்துக்குவா.

ஃபாதர் கடுமையான குரலில் கேட்டார்.

என்ன சொல்றே வேலா?

நீங்கல்லாம் வேதக் காரங்க சார். உங்களுக்கு எங்க சாமி மேலலாம் நம்பிக்கை கிடையாது.

சரி.. நீதானே இவங்களோட போனே? அன்னைக்கு என்ன நடந்தது?

நாங்க பத்து பேர் போனோம். அந்தப் புள்ள மகி என்கிட்ட ஒட்டிக்கிடுச்சு. நான் காட்டுலேயே இருக்கவான்னு கேட்டுட்டே இருந்துச்சு.

ரமணி பெருமூச்சு விட்டார்.

அந்தப் பட்டாம்பூச்சியை தேடி அலைஞ்சோம். பேர் கூட என்னமோ வாய்ல நொழையாதப் பேராச் சொன்னாங்க.

ப்ளூ மோர்ஃபோ. நீலநிறக் கலர். இறகின் விளிம்புகளில் தையல் போட்டது போல் ப்ரெளவ்ன் கலர் கோடிருக்கும்ஃபாதர் சொன்னார்.

அது என்னமோ.. கண்ல படவேயில்லை. எல்லாரும் அசந்துட்டோம். குடிக்கற தண்ணியும் தீந்துடுச்சு. மொட்டப்பாறைப் பக்கம் போறப்பதான் அந்த சத்தம் கேட்டது.

யானையா?

உங்களுக்கு யானை. எங்களுக்கு அது பேரு வரிஷ்டா. எங்க குல சாமி.

உன் சாமி ஜேஷ்டான்னு சொன்னே?

ரெண்டும் தான்.

எல்லாரும் பயந்து ஓடிட்டாங்க . நானும் ஓடினேன். பக்கத்துல பாத்தா அந்தப் புள்ளயக் காணோம்.

மூச்சு வாங்கி நிறுத்தினான்.

அப்றம் ஒரு மரத்துல ஏறி பார்த்தேன். அந்தப் புள்ள மொட்டப்பாற இடுக்குல நடுங்கிக்கிட்டு நிக்குது. வரிஷ்டா தும்பிக்கையை நீட்டி அந்தப் புள்ளையைத் தூக்கி முதுகுல வச்சுட்டு காட்டுக்குள்ற போய்டுச்சு. இப்ப நெனச்சாலும் என் உடம்பு நடுங்குது.

எந்தப் பக்கம் போனது?

நீலி ஓடைப்பக்கம்.

ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் ஆளுங்க எல்லாப் பக்கமும் தேடிப் பாத்துட்டாங்க.. கண்டுபிடிக்க முடியலை.

சார்.. அது கொரங்கு வளைவு தாண்டி போயிருக்கும்

அது எங்கேருக்கு?

அங்கதான் ஜேஷ்டா தேவி இருக்கா

சரி.. அந்த இடத்தைக் காட்டு. – ரமணி கேட்டார்.

அய்யோ.. அங்க போக முடியாது ஜேஷ்டாதேவியைக் கோவப்படுத்தினா ரெத்தம் கக்கி சாவணும்.

எட்டி நின்னு காட்டிட்டு போய்டு. நானும் என் பையனும் தேடறோம்.

வேண்டாம் சார். உட்டுடுங்க.

என்ன சொன்னே? எம் புள்ளடா!

உன்னால முடியாது சார். என் தாத்தா அந்தக் கதையை சொல்லிருக்கார். நூறு வருஷத்துக்கு ஒரு தடவை இப்படி நடக்குமாம்.

எப்படி?

ஜேஷ்டா தேவி தன் குழந்தையைத் தானே தேடி எடுத்துக்குமாம். அதுக்கு வரிஷ்டா உதவி பண்ணுமாம்அந்தக் குழந்தைக்கு பழசெல்லாம் மறந்துடுமாம்.

ஃபாதர் சிரித்தார்.

நீங்க நம்ப மாட்டிங்க தெரியும். இவங்க கிட்ட சொல்றேன். சார். உங்களால பாக்க முடியாது.. அப்டியே பாத்தாலும் அந்தப் புள்ளைக்கு எதுவும் ஞாபகமிருக்காது. உங்கள அதுக்கு அடையாளம் தெரியாது. உங்க புள்ள இப்ப காட்டின் ராஜகுமாரன். ஜேஷ்டாகுமாரன்.

வேலா .கொஞ்சம் வாயை மூடிட்டு இவங்களை கொரங்கு வளவுல கொண்டு போய் விடு.

அய்யோ சாமி. நான் அங்கல்லாம் போகக்கூடாது.

எது வரைக்கும் தான் போவே?

மொட்டப்பாற வரைக்கும் கொண்டு விடறேன்.

மொட்டை பாறை நெடுங்காலம் மழையில் ஊறி பாசி படிந்திருந்தது. பார்க்கும் போதே கண்கள் வழுக்கின.

வேலன் சொன்னான்: நான் இங்கேயே இருக்கேன். ரெண்டு பேரும் கிழக்காலப் போங்க. மூணு மைல் போனா கொரங்கு வளவு வரும். பாத்துப் போங்க. ஒரு நிமிஷம் இருங்க.

குனிந்து மண் எடுத்து முணுமுணுத்தான்

இந்தாங்க.. இதை நெத்தில வச்சுக்கோ

வைத்துக் கொண்டார்கள்.

கொரங்கு வளைவை நாங்க எப்படி கண்டுபிடிப்பது?

அங்க ஒரு பெரிய சுமை தாங்கிக் கல் நிற்கும். பாத்துப் போங்க.சத்தம் போடாமப் போங்க. புகை எழுப்பிடாதீங்க.

தலையசைத்தார்கள்.

பெரிய திண்ணை போல் அந்த சுமை தாங்கிக் கல் நின்று கொண்டிருந்தது.

ரவிக்குப் பயமாயிருந்தது.

ரமணி அவன் முகம் பார்த்தார்.

பயப்படாத ரவி.

தலையசைத்தான்.

தூரத்தில் ஒரு பிளிறல் கேட்டது.

ரவியின் முகம் மாறியது.

ரமணி அவன் விரல் பற்றினார்.

மெல்லிய நடுக்கம்.

திரும்பி போய்டலாமாப்பா?

உதட்டில் விரல் வைத்து தலையசைத்தார்.

சுற்று முற்றும் பார்த்தார்.

அந்தப் பாறைப் பக்கம் ஒளிந்து கொள்வோம்.

சருகுகள் சப்தமிடாமல் மெல்ல நடந்து பாறைக்குப் பின்னால் போனார்கள். பிளிறல் மிக அருகில் கேட்டது. தொம் தொம் என்ற சப்தத்துடன் யானை அந்தப் பாறையைத் தாண்டியது நில அதிர்வில் தெரிந்ததுஎட்டிப் பார்த்தார்கள்.

தேர் அசைவது போல் யானை நடந்தது

அதன் முதுகில் மகி.

எழுந்து நின்று பார்த்தார்கள்.

யானையின் அசைவிற்கேற்ப அவன் தலையசைந்து கொண்டிருந்தது.

மகீ….

ரவி வேகமாகக் கத்தினான்.

யானை வேகமாக நடக்க ஆரம்பித்தது.

ரமணி பெருங்குரலெடுத்துக் கத்தினார்.

ஜேஷ்டாஆஆஆஆ.

யானை தயங்கியது. அவன் திரும்பி அவர்களைப் பார்த்தான். ஒரு நொடி. யானை காதுகளில் ஏதோ சொன்னான்

யானை வேகமெடுத்து ஓட ஆரம்பித்தது.

ஒரு மஞ்சள் சரக்கொன்றை மரத்தின் கிளையில் மகியின் தலை உரச பொன்னென ஒளிரும் மலர்கள் அவன் தலையில் உதிர்ந்தன. அவன் தலையை உதற பக்கவாட்டிலிருந்து திடும்மென நீலநிற வண்ணத்துப்பூச்சிக் கூட்டமொன்று நீலப் புகையெனக் கிளம்பியது. ப்ளூ மோர்ஃபோ. நீலநிறக் கலர். இறகின் விளிம்புகளில் தையல் போட்டது போல் ப்ரெளவ்ன் கலர் கோடிருந்தது.

வண்ணத்துபூச்சிகள் நீலநிற துகிலென தோளில் அமர ஜேஷ்டகுமாரன் அசைந்து அசைந்து போய்க்கொண்டிருந்தான்.

********

[email protected]

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. இயற்கையின் முடிவில் யாரும் தலையிட முடியாது என்பதை ஆணித்தரமா பதியவைத்ததற்கு நன்றி
    இயற்கையை மனிதன் ஒருபோதும் மீற முடியாது.
    தெய்வங்களின் விளையாட்டு மனிதர்களிடம் அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button