இணைய இதழ்இணைய இதழ் 82சிறுகதைகள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – கார்த்திக் பிரகாசம்

சிறுகதை | வாசகசாலை

ளில்லா மைதானத்தில் தமிழ் மாறன் மட்டும் தனியாய் அமர்ந்திருந்தார். இரவுடன் மோனம் சத்தமாய் பேசிக் கொண்டிருந்ததது. கடிக்க, குருதி குடிக்க மனிதர்கள் இல்லாமல் கொசுக்கள் வயிற்றுப்பசியில் வதங்கிக் கொண்டிருந்தன. பசியின் முனகல்களைக் கிடைத்தவர்களின் காதுகளிலெல்லாம் பாட்டாய் பாடின ஒரே ராகத்தில். எதிர்ப்பேதும் செய்யாமல் கவனமாய் கேட்டார். வெளிச்சமானது நிழல்களாக இல்லாமல் வெறுமனே தரையில் விழுந்து தற்கொலைக்கு முயன்றது. பார்வை மங்கிய மின்கம்ப விளக்கொன்று தலைகுனிந்து எதையோ வெகுநேரமாகத் தேடிக் கொண்டிருந்தது. கண்டுபிடிக்க முடியவில்லை போலும். அதன் தலை நிமிரவேயில்லை. கடைசியாய் வந்த காற்றும் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனது.

வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும் தினக்கூலிகளைப் போல எந்தவித பரபரப்பும் இல்லாமல் அதன் போக்கில் கலையத் தொடங்கின மேகங்கள். யாருமில்லா வானில் நிலவு மட்டும் வெளிச்சமாய் இருந்தது. மற்றுமொரு இரவில் அவரும் நிலவும் தனியானார்கள். இரவுதான் விடியலுக்காகக் காத்திருக்கிறது. இந்த நிலவு யாருக்காகக் காத்திருக்கிறது?

சங்கிலித் தொடராய் நீளும் எண்ணங்களை பெருமூச்சுடன் ஒதுக்கிவிட்டு உறங்கச் சென்றார்.

***

இந்தா.. உன்னோட துணிமணி, வாட்ச். ஜெயில்ல இத்தன வருசமா நீ செஞ்ச வேலைக்கான கூலி

தமிழ் மாறன் கையில் வாங்கிக் கொண்டு ஒவ்வொன்றாய் பிரித்துப் பார்த்தார்.

சரியா இருக்கானு பாக்குறியாக்கும்? வாஇந்த ரெஜிஸ்டர்ல ஒரு கையெழுத்தப் போடு.” – குரலில் லத்தியைச் செருகியிருக்கும் அதிகார முறுக்கு மீசை செருமியது.

கலைந்த தாடி மேசையைத் தொடக் குனிந்து கையெழுத்துப் போட்டார்.

யோவ்.. இங்க பாருய்யா.. கையெழுத்துலாம் ஜோரா இருக்கு” – அருகிலிருந்த மற்றொரு காவலரிடம் ரெஜிஸ்டரை காட்டினார் முறுக்கு மீசை.

தமிழ் மாறனுக்கு அழகான கையெழுத்து. விரல்களிலிருந்து விழுவது அச்சடித்த எழுத்துக்களென ஆசிரியர்களே வியந்து பாராட்டுவார்கள். அதனாலேயே ஆசிரியர்களின் செல்லப் பிள்ளை. எந்தப் பாடத்தில் பிரதியெடுக்க வேண்டுமென்றாலும் இவரையே அழைத்து வேலையைக் கொடுப்பார்கள். கச்சிதமாக எழுதிக் கொடுப்பார். மாணவர்களும் இவர் நோட்டை வாங்கிச் சென்றே குறிப்பெடுத்துக் கொள்வார்கள். ஆனால், கையெழுத்து அழகாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள் அல்லவா? தமிழ் மாறன் விஷயத்தில் அது முற்றிலும் பொய்யானதுதான் விதிமுறைகளற்ற இவ்வாழ்க்கையின் இரக்கமற்ற விளையாட்டு.

வாயிற் காவலர்கள் கதவைத் திறந்துவிடச் சிறைக்கூடத்திலிருந்து வெளியே வந்தார்.

மேகங்களால் வடிகட்டப்படாத கதிரவனின் பளீரென்ற வெயில் கோபமாக முகத்திலறைந்தது. இமைகளால் பாதி கண்களை மறைத்துக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு நடந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தி தெருவில் என்னவோ பிதற்றிக் கொண்டு சென்றாள். பிச்சைக்காரர்கள் தங்கள் கைக்குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தொழிலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். தெரு முக்கில் ஒரு பையன் சுத்தமாய் இருக்கும் காரை இன்னும் சுத்தமாய் கழுவிக் கொண்டிருந்தான். பெருமூச்சுடன் புகையைக் கக்கி முதல் அடியைத் தயங்கியபடி எடுத்து வைத்தது மாநகரப் பேருந்து. குளித்தும், பவுடர் பூசியும் கலையாத தூக்கத்துடன் சொக்கிக் கொண்டிருந்த முகங்களை எவ்விதத் தயக்கமும் இல்லாமல் வழக்கம் போல் தனக்குள் அடைத்தபடி முறைத்துக் கொண்டு பறந்தன பள்ளிக் கல்லூரி பேருந்துகள். செத்த எலியின் உடலை தன் அலகால் கொத்தி இழுத்துச் சென்றது காக்கை கூட்டம். இடிப்பது போல் வந்து மயிரிழையில் உயிரை அவரிடமே விட்டுச் சென்றது ஆட்டோ. நகரம் வழக்கம் போல் இயங்குவதற்கான அறிகுறிகள் வழியெங்கும் தென்பட்டன.

இவரை ஏற்றிக் கொண்டு போவதற்கெனவே பல மணி நேரமாய்க் காத்திருப்பது போல உறுமல் சத்தத்துடன் தயாராய் இருந்தது சேலம் செல்லும் அரசு பேருந்து. படிக்கட்டில் கால் வைத்ததும், கரும்புகையைக் கக்கிவிட்டு இயந்திர பாகங்களின் புலம்பல் கூச்சலுடன் பேருந்து கிளம்பியது.

***

இருக்கையில் அமர்ந்தார். பேருந்து செல்லும் வேகத்தில் உடலைத் தொட்டு உயிரை நனைத்தது காற்று. பல வருடங்களுக்குப் பிறகு வருடும் சுதந்திர காற்று. உடம்பெல்லாம் சிலிர்த்தது. இழந்த காலங்களுக்கெல்லாம் சேர்த்து வைத்து சுதந்திர காற்றை ஒரே மூச்சில் குடித்திடத் தோன்றியது. பாதி உறக்கத்தில் கண்களைச் சொக்கும் குழந்தையைத் தோளில் சாய்த்து ஆட்டிக் கொண்டிருக்கும் இளம் தந்தையை முன்சீட்டில் கண்டார். மகனின் ஞாபகம் வந்தது.

எந்தவொரு விஷயத்தையும் பகுத்தறிவோட ஆராய்ஞ்சி, தீர்க்கமா செய். நானே சொன்னாலும், கண்ண மூடிட்டு நம்பாத. உன்னோட அறிவிலிருந்து அதை யோசி. உனக்கு சரின்னு தோணுனா மனசுல எடுத்துக்கோ இல்லையா கேள்வி கேளு. விடைஉடனே கெடைக்காது. கெடைக்குற வரைக்கும் கேட்டுகிட்டே இரு.

யோசிக்காம எந்தவொரு காரியத்தையும் செய்யாத. அதனாலதான் உனக்குச் சிந்தனைச் செல்வன்னு பேர் வெச்சிருக்கேன். அதே மாதிரி மத்தவனையும் யோசிக்க வை. அதுக்காக உன் நம்பிக்கைய அவன்மேல ஒருநாளும்திணிக்காத

இப்போ சொல்லு.. உன் பேரென்ன..?”

சிந்தனைச் செல்வன்

இன்னும் சத்தமா சொல்லு.”

சிந்தனைச் செல்வன்” – உரத்த குரலில் சொல்வான்.

தன் வாழ்நாள் முழுவதும் இயக்கம் இயக்கமென ஓடியோடி உழைத்தவர் தமிழ் மாறன். காலத்துக்கும் பொருளாதாரத்தின் முன்னேற்றப் படிக்கட்டில் நிரந்தரமாகக் கால் ஊன்றிட முடியாத குடும்பத்தில் பிறந்தவர். ஒரே பிள்ளை. பாசத்தோடு பகுத்தறிவையும் கைப்பிடித்து வளர்ந்தார். ஆதலால் வெகு இயல்பாக அம்பேத்கர் மற்றும் பெரியாரிய சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டார். பெரியாரின் மேடைப் பேச்சுக்களையும், புத்தகங்களையும் தேடித் தேடி வாசித்தவர், காலப்போக்கில் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மனிதம் நசுக்கப்படும் போதும், மனித உரிமைகள் மறுக்கப்படும் போதும் அதிகாரத்தை எதிர்த்து எழுந்திடும் முதல் குரல் அவருடையதாக இருக்கும். அதிகார அந்தஸ்திற்காக இல்லாமல் எளிதில் அணுக முடிந்த அன்பான பண்பிற்காகவும், மற்றவர்களுக்காகக் குரல் கொடுத்து அரவணைத்துக் கொள்ளும் பரந்த குணத்திற்காகவும் ஊராரால் பெரிதும் மதிக்கப்பட்டார்.

கல்லூரியில் காலெடுத்து வைத்த சில நாட்களிலேயே பெரியார் அம்பேத்கர் பாடசாலையை நிறுவினார். ஒத்த கருத்துடைய நண்பர்கள் சிலரை இணைத்துக் கொண்டு, பள்ளிப் பிள்ளைகளுக்கு மாலை நேரத்தில் பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். பள்ளிக்குச் செல்லாத பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்து

அவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் சின்னச் சின்ன உதவிகளைச் செய்தார். அனைவருக்கும் கல்வி கிடைத்தால் மட்டுமே, சமூக மாற்றத்திற்கான விதை மண்ணில் வேர்விடும் என்பது அவரின் ஆழமான புரிதலாக இருந்தது. சாதிய இழிவிலிருந்து மீண்டெழுவதற்கு மட்டுமன்றி, சாதியால் ஒருவனை இழிவுபடுத்துவது மிருகத்தனம் என அறிவதற்கும் கல்வியே பக்க பலம். ஆதலால் எல்லா சமூகத்தைச் சார்ந்த பிள்ளைகளையும் பாடசாலைக்கு அழைத்தார். முதலில் மறுத்த பெற்றோர்கள் கூட, கல்வியின் அவசியத்தை உணர்ந்து தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்தனர். காலப்போக்கில் அப்பகுதியின் நம்பிக்கைச் சுடராக மாறியது பெரியார் அம்பேத்கர் பாடசாலை.

***

இளம் வயதில், ஊரில் விமர்சையாக நடக்கவிருந்த ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தார். பொதுவாக இது மாதிரியான ஆடம்பர திருமணத்திற்கெல்லாம் அவர் செல்வதில்லை. அது சுயமரியாதை இயக்கத்தில் இணைந்திருந்த சமயம். தன்னுடைய நெருங்கிய நண்பரான சங்கரின் வற்புறுத்தலால் (அவரது தூரத்து உறவினரின் திருமணமாதலால்) மறுக்க முடியாமல் சென்றார். சமையல் கூடத்திலிருந்து பல வகைகளில் பசியைக் கிளறும் வாசனை வந்த வண்ணம் இருந்தது. மணமக்களை வாழ்த்த வந்தவர்களின் கவனம் மணமேடையை விட உணவு பரிமாறும் அறையை நோக்கியே பரவலாக இருந்தது.

மணமக்கள் மேடையில் வந்து அமர்ந்தனர். ஐயர் மந்திரம் ஓதியவாறே தாலியை மணமகன் கையில் தந்தார். தலை குனிந்து அமர்ந்திருந்த மணப்பெண்ணுக்கு, மணமகன் தாலி கட்டும் போது, எவருமே எதிர்பாராத விதமாக அச்சம்பவம் நடந்தது.

மணப்பெண் தாலியைப் பிடுங்கி எறிந்தாள். மேளச் சத்தமும், வந்திருந்தவர்களின் கூச்சல் ஓசைகளும் இடைநிறுத்தம் செய்யப்பட்ட ரேடியோவைப் போல அந்தந்த இடத்திலேயே உறைந்து நின்றன. மேலும் யாரையும் திரும்பிப் பார்க்காமல் அந்த பெண் மணக்கோலத்திலேயே மண்டபத்திலிருந்து வெளியேறினாள்.

மொத்த மண்டபமும் அதிர்ச்சியில் வாய் பிளந்தது.

என்ன நடக்கிறது என்று புரியாமல் சலசலப்புடன் அனைவரும் கலைந்தனர். விருந்து உண்ணாமல் போகும் வருத்தம் பலரின் கண்களில் அப்பட்டமாக வழிந்தது. சங்கருக்கும் ஒன்றும் புரியவில்லை.

இரண்டு வாரம் கழித்து சங்கர் சொன்னார்.. “அந்தப் பொண்ணு இருக்குல. அதான்பா.. அன்னைக்கு கல்யாணத்த நிறுத்திச்சே.. மங்கை. அந்தப் பொண்ண ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ண பாத்துருக்காங்க. இத்தனைக்கும் அந்த ஆளோட சம்சாரம் உயிரோடதான் இருக்கு. கல்யாணமாகி நாலு வருஷமா கொழந்த இல்லையாம். அதனால இந்தப் பொண்ணு வீட்ல இருக்குற கஷ்டத்த தனக்கு சாதகமாக்கிட்டு அவ அப்பன்கிட்ட பணத்தை அள்ளி எறச்சிருக்கான் அந்த ஆளு. அதுல மயங்கிப் போயி பெத்தவங்களும் அவன்கிட்ட தள்ளிவிடத் திட்டம் போட்ருக்காங்க. அவங்க கேட்கும் போதே இந்தப் பொண்ணு முடியாதுனு மூஞ்சில அடிச்ச மாதிரி பட்டுனு சொல்லியிருக்கு. ஆனாலும் பணத்தாசை யார விட்டுச்சு? ஏதேதோ சொல்லி, கெஞ்சி கல்யாணத்த ஏற்பாடு பண்ணிருக்காங்க. எல்லாம் அவன் செலவுதான். இந்தப் பொண்ணும் பாத்திருக்கு. இவிங்களுக்கு எங்க சொன்ன ஒரைக்குமோ அங்கு சொல்லணும்னு கரெக்டா கல்யாணத்தப்போ கட்ட வந்த தாலிய புடுங்கியெறிஞ்சிட்டு அது பாட்டுக்குப் போயிருச்சு

தைரியமான பொண்ணா இருக்கே!”

அதுமட்டும் இல்லப்பா, போன மாசம் செட்டியார் பண்ணைல கூலி வேலைக்குக் கூப்ட்ருங்காங்க. இந்தப் பொண்ணும் போயிருக்கு. வேலை முடிச்சிட்டு கூலி தரும் போது ஆம்பளைகளுக்கு ஒரு கூலி, பொம்பளைகளுக்கு ஒரு கூலின்னு கங்காணி சொல்லியிருக்கான். நாள் முழுக்க நாங்களும் ஆம்பளைகள போல அதே வேலயதான செய்றோம். அப்புறம் ஏன், எங்களுக்கு மட்டும் அவங்கள விடக் கம்மியா கூலி தர்றீங்க. எங்களுக்கும் அதே கூலி குடுங்க. இல்லனா இனிமேல் உங்க காடு, பண்ணை எதுக்கும் வேலைக்கு வர மாட்டோம்னு சொல்ல, மத்த பொம்பளைகளும் கூட சேர்ந்து கத்தியிருக்காங்க. பயங்கர வாக்குவாதத்துக்கு அப்பறம் எல்லாருக்கும் ஒரே கூலி குடுத்திருக்கான் கங்காணி.”

தமிழ் மாறனுக்கு மங்கையை மிகவும் பிடித்திருந்தது. நேரடியாகச் சென்று மங்கையிடமே சொன்னார்.. “உங்கள பத்தி கேள்விப்பட்டேன். புடிச்சிருக்கு. உங்களோட சேர்ந்து பயணிக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். நான் பகுத்தறிவாதி. சுயமரியாதை இயக்கத்துல இருக்கேன். உங்களுக்கும் விருப்பம்னா மேற்கொண்டு பேசலாம். ஒண்ணும் அவசரம் இல்ல. நிதானமா யோசிச்சு சொல்லுங்க

சுத்தி வளைக்காமல், பாசாங்கு எதுவும் செய்யாமல் நேரடியாக அவர் விருப்பத்தைச் சொன்னது மங்கைக்கு வியப்பாகவும் அதுவே பெரும் ஈர்ப்பாகவும் தோன்றியது. கருப்புச்சட்டை காரர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் போல என்று மனதில் நினைத்துக் கொண்டாள். பெற்றோரிடம் பேச, எதிர்பார்த்தது போலவே தமிழ் மாறன் தரப்பில் எளிதில் சம்மதம் கிடைத்துவிட்டது. ஆனால், மங்கையின் வீட்டில் பிடிவாதமாய் மறுத்தனர். மகளை அந்தச் செல்வந்தனுக்குக் கட்டிக் கொடுத்து, அதன் மூலமாகப் பொழியும் பண மழையில், கடனையெல்லாம் அடைத்துவிட்டு தாமும் பணக்காரராகி காடு, நிலம், காணி, தங்கம் எனச் செல்வச் செழிப்போடு சீமான் சீமாட்டியாக வாழலாம் என்று மனதில் கோட்டை கட்டி வைத்திருந்த அவர்களின் கனவைக் கடைசி நேரத்தில் சாம்பலாக்கிய ஆத்திரத்திலிருந்தார்கள். ஆனால், நிஜக் காரணத்தைச் சொல்லாமல் வேறொன்றுக்கு வசதியாக நூல் பிடித்தார்கள். தமிழ் மாறன் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். மங்கையின் குடும்பம் கவுண்டர் சாதியினர்.

எங்கள மீறி அந்த கீழ் சாதி பையன் கூட ஓடிப் போய் கல்யாணம் செஞ்சிட்டு நிம்மதியா வாழ்ந்துரலாம்னு மட்டும் நெனச்சிடாத. அவன தடம் தெரியாம வெட்டி வீசிட்டு உன்னையும் உருத் தெரியாம அழிச்சுடுவேன் . பெத்த புள்ளன்னு கூட பாக்கமாட்டேன்” – என்று மங்கையை மிரட்டினார்கள்.

தமிழ் மாறனுக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன. சாதியின் பெயரைச் சொல்லி இழிவாக ஏசினார்கள்.

எந்த விதத்துல நான் அவனுகளுக்கு கொறஞ்சி போயிட்டேன். நான் அவனுக்கு கீழ்சாதினா, இன்னொருத்தனுக்கு அவன் கீழ்சாதி. அவன் என்ன மிதிச்சிட்டு இருக்கான்னா, இன்னொருத்தன் அவன மிதிச்சிட்டு இருக்கான். மொத்தத்துல நாம எல்லாருமே மிதிபட்டுட்டு இருக்கோம். அதுலருந்து விடுதலை அடையறதுக்கு என்ன செய்லாம்எப்படி முன்னுக்கு வரலாம்னு யோசிக்காம.. மேல இருக்கறவன் மிதிக்கிறப்போ, மிதிச்சிக்கோ பிரச்சனையில்ல எனக்கு கீழ ஒருத்தன் இருக்கான்.. அவன நான் மிதிச்சுக்கிறேன்னு சொல்றது எவளோ பெரிய அயோக்கியத்தனம். கண்ணுக்குத் தெரியுற மனுசன மனுசனா பாக்காம மசிருக்குப் பிரயோஜனம் இல்லாத சாதிய கௌரவம் மண்ணாங்கட்டின்னு தூக்கிட்டு திரியுறானுங்க. வேல வெட்டி இல்லாதவனுங்க. குலப் பெருமைய காப்பாத்துறேங்குற பேருல பெத்த புள்ளைங்களேயே காவு கொடுத்துட்டு கொலைவெறி ரத்தத்தை உடம்பெல்லாம் பூசிக்கிட்டு என்னத்த சாதிக்கப் போறானுங்க?” என்று ஆவேசப்பட்டார் தமிழ் மாறன்.

தமிழ் மாறனின் காதல் விஷயம், சுயமரியாதை இயக்கக்காரர்களின் செவிகளுக்குச் சென்றதும் வேலை விறுவிறுவென நடந்தது. பல மிரட்டல்களுக்கு மத்தியில் இயக்கத் தோழர்களின் பெரும் ஆதரவோடு தமிழ் மாறனும், மங்கையும் சுயமரியாதை முறைப்படி உறுதி மொழி ஏற்று இல்வாழ்க்கையில் இணைந்தனர். இயக்கத் தோழர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாய் இருந்தனர்.

***

சிந்தனைச் செல்வனுக்கு அப்போது வயது இருபத்தி ஐந்து. நடக்கவிருந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் முதல்முறையாகச் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார் தமிழ் மாறன். அவருக்குகுவளைசின்னம் ஒதுக்கப்பட்டிருந்து.

தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. கண்ணில்படும் சுவர்களிலெல்லாம்குவளைவரையப்பட்டு, ‘நம் சின்னம் குவளை, நமது வெற்றி வேட்பாளர் தமிழ் மாறன்என்று வாக்குச் சேகரிக்க எழுதப்பட்டிருந்தது. பெரும்பாலான மக்களின் ஆதரவு தமிழ் மாறனுக்கு இருப்பதாகக் கள நிலவரமும் சொல்லியது.

ஆதிக்கச் சாதியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் அன்று பிரச்சாரம். அந்தப் பகுதிக்குத் தமிழ் மாறன் வர வேண்டாம், பிரச்சாரத்தை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் எனத் தோழர்கள் வற்புறுத்தினர். அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருந்தன.

ஏன்டா தேவுடியா பயலே.. எங்க ஏரியா செவுத்துல அந்தச் சின்னத்த வரையிற அளவுக்கு ஒனக்கு நெஞ்சில உரம் வந்துருச்சா. இன்னைக்கு தேர்தல்ல நின்னுட்டா, யாரு என்னங்குறதெல்லாம் மறந்துருமோ. அடிமை நாய்களா.. அவன் சொன்னா உங்களுக்கு எங்கடா போச்சு அறிவு மயிரு. இருக்குற இடம் தெரியாம இருக்கனும் இல்லனா, கைய கால உடைச்சி உருத் தெரியாம செதச்சிருவோம் பாத்துக்க” – என்று கூச்சலிட்டவாறே நாலைந்து பேர் கொண்ட கும்பல் அந்த பகுதியில் வசிக்கும் ஆதி திராவிடர் வகுப்பைச் சார்ந்த இருவரின் வீடுகளுக்குள் புகுந்து கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து உடைத்தனர். குழந்தைகளைத் தூக்கி வெளியில் வீசிவிட்டு பெண்களின் தலைமுடியைப் பிடித்துத் தள்ளினர். கண்ணில்பட்டோரை உருட்டுக் கட்டைகளால் அடித்து நொறுக்கினர்.

ஆன்மாவைக் கிழிக்கும் அலறல் சத்தம் ஊரையே இரண்டாகப் பிளந்து அடுத்த நாள் விடிந்தது. இதைத்தான்மர்மநபர்கள் வெறிச்செயல். முன்பகை காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுவதாகபிரபல பத்திரிக்கை அடுத்த நாள் பெட்டிச் செய்தியாக வெளியிட்டது.

மற்றொரு காரணம். மங்கையின் குடும்பத்தினர் வசிக்கும் பகுதி அது.

திருமணமான நாள் முதல் இன்று வரை அவர்கள் மனமிறங்கவில்லை. கீழ்ச்சாதிக்காரனோடு போனவளெல்லாம் என் மகளில்லை. எங்களைப் பொறுத்தவரையில் அவள் செத்துவிட்டாளென, அவர்களின் திருமணம் முடிந்த பதினாறாம் நாள் அவளுக்குக் காரியம் செய்து தலை முழுகிவிட்டனர். இத்தனை வருடத்தில் ஒருநாள் கூட பேசியதில்லை. மண்டைக்குள் சாதியைச் சுமப்பவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்று மங்கையும் அவர்களை மறந்துவிட்டாள்.

ஆனால், தானே நேரில் சென்று வீடு வீடாக வாக்குச் சேகரிப்பதில் உறுதியாக இருந்தார் தமிழ் மாறன்.

தெருவுக்குள்ள வந்து ஓட்டு கேக்ற அளவுக்கு தெகிரியம் வந்திருச்சாடா தேவுடியா பசங்களா. என்னிக்கு எங்க வூட்டு பொண்ணுக் கூட படுக்கணும்னு புரட்சிங்குற பேருல கண்ட டிராமாலாம் போட்டு நடிச்சி கல்யாணம் பண்ணுணானோ, அன்னிக்கே அவன கண்டதுண்டமா வெட்டி வீசியிருக்கணும். அப்படி செஞ்சிருந்தா இன்னிக்கு இங்க கால் வைக்க ஒருத்தனுக்கும் தோணியிருக்காது. வெட்டாம விட்டது எங்க தப்புதான். ஓட்டு கீட்டுனு எவனாவது வந்தீங்க. அப்புறம் திரும்பிப் போக மாட்டீங்க” – தொண்டையில் அருவாளைச் செருகியிருக்கும் தொனியிலிருந்த குரல் கூட்டத்திலிருந்து பகிரங்கமாக மிரட்டியது.

உங்களுக்கும் சேத்து நல்லது செய்யத்தான்யா ஓட்டு கேட்டு வந்துருக்கேன்” – பீறிட்டு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு தமிழ் மாறன் சொன்னார்.

யாரு.. நீஎங்களுக்கு நல்லது செய்ய போறியாடாபறப் பயலே. எங்க சாதி ரத்தம் ஒன்னும் அவ்ளோ மானம் கெட்டு போய்டலடா. உனக்கு ஓட்டு போடறதும் ஒன்னு தான், உன் மூத்தரத்த வாங்கி குடிக்கறதும் ஒன்னு தான். மொதல்ல இந்த எடத்த விட்டுப் போடா” – என்று இன்னொருவன் கத்தினான்.

இன்னும் எத்தன நாளைக்கு எங்கள எட்டி உதைச்சிட்டு, உங்கள மிதிக்கிறவன் கால நக்கிட்டு இருக்கப் போறீங்க. பேச்சுக்குப் பேச்சு பறப் பையன்.. தேவுடியா பையன்னு சொல்றீங்கள்ள, எல்லாருக்கும் மேலனு ஒருத்தன் சொல்லிக்கிறான்ல, அவனப் பொறுத்தவரைக்கும் நாம எல்லாருமே தேவுடியாளுக்கு பொறந்தவனுங்கதான். அப்படிதான் காலம் காலமா பேசியும், எழுதியும் வச்சிருக்கானுங்க. அந்த இழிவுல இருந்து வெளிய வரணும்னு நினைக்காம, போரடாம, எதுத்து கேள்விக் கேக்காம, எதுக்கெடுத்தாலும் பெருமையா சாதி.. சாதி.. நான் தெரியாம கேக்குறன், மீசைய முறுக்கிக்கிட்டு, முதுகுல அருவாள சொருகிட்டு சுத்துறத தவிர உன் சாதியால உனக்குச் சல்லிக் காசுக்குப் பிரயோஜனம் உண்டா. சாதிங்கறது வீரமோ, நெஞ்சில குத்துன பதக்கமோ இல்ல. சாதி ஒரு இழிவு. சாதி ஒரு கழிவு. யாரு பேண்டாலும் கழிவு நாறும். அந்த கழிவ மேல பூசிக்கிட்டு திரிஞ்சா அது அவமானம். அதை இன்னொருத்தனுக்குப் பூசிவிட்டாலும், உன் கையும் சேந்து நாறும். இவ்வளவு ஏன், சொந்த சாதிக்காரனே உன் கையில காசு பணம் இல்லனா, உன்ன மயிர்ல கூட மதிக்கமாட்டான். உன் சாதிய பெருமையா நீ சொல்றனா, அந்த மேல இருக்குறவனுக்கு நீ இன்னும் அடிமையா, அவன் கால நக்கிட்டு இருக்கன்னு அர்த்தம்” – ஆவேசமாகப் பேசினார் தமிழ் மாறன்.

தமிழ் மாறன் பேசிக் கொண்டிருக்கும் போதே, “யோவ்.. என்னங்கய்யா.. இவன்லாம் ஒரு ஆளுன்னு, பேசவிட்டு வேடிக்க பாத்துட்டு இருக்கீங்க. வேட்டிய உருவி அடிச்சி தொரத்துங்கய்யாஒரு இளம் மீசை குரல் வந்ததும் மொத்த கும்பலும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு, தமிழ் மாறன் மற்றும் அவருடன் இருந்த தோழர்களை அடித்து உதைத்தது. தமிழ் மாறனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மயக்க நிலையில் தடுமாறிக் கொண்டிருந்த தமிழ் மாறனை, அங்கிருந்து காப்பாற்றி அழைத்துச் சென்றனர் மற்ற தோழர்கள்.

தன் கட்சிக்காரன் ஜெயிக்கலனா கூட பரவால்ல ஆனா அந்த கீழ்ச் சாதிக்காரன் பய ஜெய்ச்சிற கூடாதுஎன்று தீவிரமாக ஒரு கும்பல் வேலை செய்தது. எளிதாக வெற்றி வாகை சூடும் வாய்ப்பிருந்த சூழ்நிலையில், வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார் தமிழ் மாறன். சாதிய சூழ்ச்சிகளால் சாதுரியமாகத் தோற்கடிக்கப்பட்டார் என்பதுதான் உண்மை.

அப்பாவின் தோல்வி சிந்தனைச் செல்வனைப் பெரிதும் பாதித்தது. கவிழ்ந்த தலையுடன் சுற்றிக் கொண்டிருந்தான். ஓரிரு நாட்கள் கவனித்த தமிழ் மாறன் அவனை அழைத்து, “வெற்றி தோல்வி என்பதெல்லாம் போகும் பயணத்தில் கிடைக்கும் தற்காலிக இளைப்பாறல்கள். அதிலேயே தங்கிவிட்டால் பயணம் தறிகெட்டுப் போய், நோக்கம் சிதைந்துவிடும். வருத்தத்தைத் தூக்கியெறிந்துவிட்டு ஆக வேண்டியதைக் கவனிஎன ஆறுதல் கூறினார். ஆனால், அவனின் மனவருத்தத்திற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

***

பேருந்தின் ஹாரன் சத்தத்தில் திடுக்கெனக் கண் விழித்தார் தமிழ் மாறன். தொலைவில் மின்சாரக் கம்பிகளின் ஆபத்து அறியாமல், அதன் பக்கத்திலேயே ஜோடிக் குருவிகள் விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு உணவகத்தில் சாப்பாட்டிற்காகப் பேருந்து நிறுத்தப்பட்டது. சாப்பிட, சிறுநீர் கழிக்கவென பயணிகள் இறங்கினர். அவர் இறங்கவில்லை. பிரக்ஞை இல்லாதவர் போல ஜன்னலில் தலை சாய்த்து அமர்ந்திருந்தார். ஹோட்டல் ஸ்பீக்கரில் காதல் பாடலொன்று, காதலே துன்புறும் அளவிற்கு இரைச்சலாய் ஒலி(ழி)த்துக் கொண்டிருந்ததது.

ஒரு போராட்டத்தில் கலந்துவிட்டு வந்திருந்த தமிழ் மாறனிடம், “பெயர் திவ்யா. சட்டம் படித்துக் கொண்டே பெரியார் அம்பேத்கர் பாடசாலையில் டீச்சராக இருக்கிறாள். அவளைப் பிடித்திருக்கிறது. அவளுக்கும் என்னைஉங்களிடம் எப்படிச் சொல்வதெனத் தயக்கம். கல்லூரி படிப்பு முடிந்ததும் சொல்லலாமென காத்திருந்தேன். ஆனால், அவளது வீட்டாருக்கு எப்படியோ விஷயம் தெரிந்துவிட்டது. வேறொரு இடத்தில் அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து முடித்துவிட்டார்கள். அடுத்த வாரமே திருமணமாம். பாடசாலைக்கு வருவதையும் தடுத்துவிட்டார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லைஎன்று தயங்கியவாறே சிந்தனைச் செல்வன் சொன்னான்.

அதிர்ச்சியை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், பெண் வீட்டாரைப் பற்றி விசாரித்துவிட்டு தான் பார்த்துக் கொள்வதாகவும், அடுத்து வரும் நாட்களில் பெண் வீட்டாரிடம் பேசுவதாகவும் உறுதி அளித்தார். சிந்தனைச் செல்வனுக்குக் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது

செல்வாநான் இங்க இருந்தேனா கண்டிப்பா அந்த பையனுக்குக் கட்டி வச்சிருவாங்க. வீட்டுக்குத் தெரியாம சீக்கிரம் கல்யாணம் பண்ணுனா மட்டும்தான் நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடியும்” – அழுது கொண்டே கூறினாள் திவ்யா.

பயப்படாத திவ்யா. அப்பா உங்க வீட்டுக்கு வந்து பேசறேன்னு சொல்லிருக்காரு. எல்லாம் நல்லபடியா நடக்கும்” – அமைதிப்படுத்த முயன்றான் சிந்தனைச் செல்வன்.

அதெல்லாம் நடக்காது. எங்க வீட்ல கொலவெறி ஆத்திரத்துல இருக்காங்க. ஒனக்கு காதலிக்க வேற ஆம்பளையே கிடைக்கலையா, போயும் போயும் அந்த பறப் பையன் தானா கிடைச்சான்னு அம்மாவும் அப்பாவும் மாறி மாறி அடிக்கிறாங்க. சாதிக்காரங்க காறித் துப்புவாங்க. மூஞ்சியே எங்க கொண்டு போய் வைக்கன்னு சொந்தக்காரங்களாம் அழுது ஆர்ப்பாட்டம் பண்றாங்க. வீட்ல ஒரு கூட்டமே கூடியிருக்கு. சாதிய காரணமா வச்சே கண்டிப்பா நம்மள சேர்த்து வைக்க மாட்டாங்க. உறுதியா சொல்றேன்

இப்போ என்ன பண்லாம்னு சொல்ற.?”

எல்லாரும் தூங்குனதும் நான் கெளம்பி வரேன். ஓடிப் போயி கல்யாணம் பண்ணிக்கலாம்” – சிறிதும் பதற்றமில்லாமல் கூறினாள் திவ்யா.

என்ன பதில் சொல்வதெனச் சிந்தனைச் செல்வனுக்குக் குழப்பமாய் இருந்தது. அதே நேரத்தில் அப்பாவை நினைத்தால்எதிர்த்தால் கூட பரவாயில்லை ஆதரவாய் இருக்கும் அப்பாவை மீறி எப்படி இந்தக் காரியத்தைச் செய்வது? அப்பா உடைந்து விடுவாரே என உள்ளுக்குள் பதற்றம் கூடிக் கொண்டே இருந்தது.

என்னடா.. எதுவும் பேசாம இருக்க

சரி. வாஎன நம்பி வந்தவளைக் கரம்பிடிப்பதே முதல் கடமையென முடிவு செய்தான். இருப்பினும் மனதிற்குள் கிலி பிடித்து ஆட்டியது.

சொல்லியபடியே அடுத்த நாள் இருவரும் நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

தினசரி வாசித்துக் கொண்டிருந்த தமிழ் மாறனின் முன்பு மாலையும் கழுத்துமாகச் சிந்தனைச் செல்வனும், திவ்யாவும் வந்து நின்றனர்.

என்னடா செல்வா இது? நான் தான் அந்தப் பொண்ணு வீட்ல பேசுறேன்னு சொன்னேன்ல. அதுக்குள்ள ஏன்டா?” – அதிர்ச்சியில் நிலைகுலைந்தார் தமிழ் மாறன்.

அவங்க எங்கள சேர விடமாட்டாங்க. நீங்க வீட்டுக்கு வந்திருந்தா உங்களையும் அசிங்கப்படுத்தி அனுப்பிருப்பாங்க. நாங்க எடுத்த முடிவுதான் சரி” – முந்திக் கொண்டு பதில் சொன்னாள் திவ்யா.

சிந்தனைச் செல்வன் வாய் பேசாமல் நின்றிருந்தான். அப்பாவின் முகத்தைப் பார்க்கவே கூச்சமாக இருந்தது.

இதற்குள் விஷயம் தெரிந்து கொண்ட திவ்யாவின் உறவினர்கள், ‘ஓடுகாலி முண்ட. சாதி மானத்த கப்பலேத்திட்டியேடிஎன அருவாள் கம்புடன் தமிழ் மாறனின் வீட்டிற்குள் நுழைந்தனர்.

கொஞ்சம் பொறுமையா இருங்க” – அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றார் தமிழ் மாறன்.

என்னையா பொறுமையா இருக்குறது. எங்க சாதி பொம்பள புள்ளைகள்ட்ட கண்ட கருமாத்திரத்தையும் புரட்சின்னு பேசி நடிச்சி , ஜீன்ஸ் பேண்டும் போனும் காட்டி மயக்கி, அதுங்க மனச கலச்சி கல்யாணம் பண்றதுதான் நீ பாடம் நடத்துற லட்சணமா. உன்னையெல்லாம் நம்பி பொம்பள புள்ளைங்கள படிக்க அனுப்பிச்ச எங்க புத்தில சாணிய கரைச்சி ஊத்திட்டய்யா. உன்னையும், உன் பையனையும் வெட்டி வீசுனாகூட எங்க ஆத்திரம் அடங்காது” – என்று இரைந்தவாறே ஆத்திரத்தில் கன்னங்கள் துடிக்கக் கண் இமைக்கும் நேரத்தில் சிந்தனைச் செல்வனின் கழுத்தில் வெட்டினார் திவ்யாவின் சித்தப்பா.

செல்வா….” – தமிழ் மாறனும், திவ்யாவும் அலறினர்.

வெள்ளைச் சட்டையை கடகடவென நிறம் மாற்றியது இரத்தம். திவ்யாவின் மடியில் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தான் சிந்தனைச் செல்வன். அவளின் கையைப் பிடித்து காட்டமாக இழுத்தார் திவ்யாவின் அப்பா. அவளது மடியிலிருந்த சிந்தனைச் செல்வனின் தலை தரையில் சாய்ந்தது. கன்னத்தில் அறைந்து, அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு காரில் ஏற்றிச் சென்றது அந்தக் கும்பல்.

மகனை மடியில் ஏந்திக் கொண்டு கதறி அழுதார் தமிழ் மாறன். பேச்சு மூச்சின்றி மயங்கி விழுந்தாள் மங்கை. தமிழ் மாறனின் மடியிலேயே சிந்தனைச் செல்வனின் உயிர் பிரிந்தது.

அடுத்த சிலமணி நேரங்களில், தமிழ் மாறனின் வீட்டிற்கு வந்தது போலீஸ். வேற்று சாதிப் பெண்ணை மணந்ததற்காக, தன் மகனை ஆணவக் கொலை செய்த குற்றத்திற்காகத் தமிழ் மாறனைக் கைது செய்வதாகச் சொன்னார் இன்ஸ்பெக்டர். தமிழ் மாறனுக்கும், மங்கைக்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாய் இருந்தது.

மகன் பிணமாய் கிடக்கையில் கொன்றவர்களை விட்டுவிட்டு பெத்தவனைக் கைது செய்யக் காத்திருந்தது போலீஸ்.

இன்ஸ்பெக்டர்அந்த பொண்ண பெத்தவங்கதான் என் மகன வெட்டிட்டு போறாங்க. அந்த கும்பல விட்டுட்டு என்ன கைது செய்றேன்னு சொல்றீங்க?” – வார்த்தைகள் எழாமல் குமுறிக் குமுறி அழுதார்.

அந்த பொண்ணு தரப்புல இருந்து தான் உங்கமேல கம்பளைண்ட் குடுத்துருக்காங்க. எதுவா இருந்தாலும் நீங்க கோர்ட்ல பேசிக்கோங்க” – தமிழ் மாறனின் கைகளில் விலங்கை மாட்டி வண்டியில் ஏற்றியது காவல்துறை.

என்னதான் மனதில் கோபமும், வருத்தமும் இருந்தாலும் மகளின் திருமணச் செய்தி அறிந்ததும் நாங்கள் வாழ்த்தவே தமிழ் மாறனின் வீட்டிற்குச் சென்றதாகவும், ஆனால் வேறு சாதிப் பெண்ணை மணந்து கொண்ட மகனால் கடும் ஆத்திரம் அடைந்த தமிழ் மாறன், இதனால் தன் அரசியல் வாழ்க்கைக்கு, ஆபத்து நேருமோ என்ற அச்சத்தினால் பெத்த மகனை தங்களின் கண்ணெதிரிலேயே கொன்று விட்டதாகவும், அங்கிருப்பது எங்கள் மகளுக்குப் பாதுகாப்பில்லை என்ற காரணத்தால் உடனேயே நாங்கள் பெண்ணைக் கூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டதாகவும், அதன்பின்னரே போலீசில் கம்பளைண்ட் கொடுத்ததாகவும் திவ்யாவின் தரப்பில் வாக்குமூலம் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் அரசியல் லாபத்திற்காகத் தமிழ் மாறன் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கோர்ட்டில் உண்மையைச் சொன்னால், அந்த பாடசாலையைப் பிள்ளைகளோடு எரித்து, பழியை மங்கையின் மீது போட்டு அவளையும் உள்ளே தள்ளி விடுவோம்என உறவினர்கள் மிரட்டியதால், தமிழ் மாறேனே சிந்தனைச் செல்வனைக் கொன்றதாக சாட்சிச் சொன்னாள் திவ்யா.

தமிழ் மாறனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைத்தது நீதிமன்றம்.

வாழ்க்கையைப் புயல் போலப் புரட்டிப் போட்ட நிகழ்வுகளால் மனம் குலைந்த மங்கை, தீவிர காய்ச்சலுக்கு உள்ளாகி இறந்து போனாள். அவளின் பிணத்தைப் பார்க்கக் கூட அவள் பிறந்த வீட்டிலிருந்து யாரும் வரவில்லை.

தோழர்களின் தொடர் முயற்சியினால், பத்தாண்டு சிறைவாசத்திற்குப் பிறகு, நன்னடத்தையின் பேரில் தமிழ் மாறனுக்கு தற்போது விடுதலை கிடைத்தது.

***

சேலம் வந்திறங்கும் போது சங்கர் காத்திருந்தார். சங்கரைப் பார்த்ததும் தமிழ் மாறனுக்கு தனக்கு நொடியில் வயதாகிவிட்டதைப் போல் இருந்தது. கலங்கும் கண்களுடன் ஆத்மார்த்தமாகக் கட்டி அணைத்துக் கொண்டனர். பல வருட நட்பின் சாட்சியாய் நான்கு கண்களிலிருந்தும் துளிகள் உதிர்ந்தன.

வீட்டிற்குப் போகும் வழியில் இருவரும் நடக்கலாயினர். தொண்டையை அடைத்தது சோகம். தமிழ் மாறனின் கால்கள் திராணி இல்லாமல் நடுங்கின.

மயானத்தின் வாயிலாய் வளைந்து நீண்டு சென்றது பாதை.

********

karthiksona91@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button