இணைய இதழ்இணைய இதழ் 88சிறுகதைகள்

நித்தியக்காதலி – விஜயகுமார் சம்மங்கரை

சிறுகதை | வாசகசாலை

“டேய் மச்சீ.. அவ உன்ன பாக்குறாடா..” என்று சொல்லித்தான் ஆரம்பித்து வைத்தான் கோபி. இன்னும் நின்றபாடில்லை. எட்டு ஆண்டுகள் கழித்து அவளை மீண்டும் இந்த உணவகத்தில் வைத்துப் பார்க்கிறேன். அவள்தானா? அவளேதான். உயர்தர அழகிகளுக்கு இருக்கும் சிறிய கோணல் அவளுக்கு இருந்தது. அவள் சிரிக்கும் போது அந்த கோணலான சிங்கப் பல்லைப் பார்த்து ஊர்ஜிதம் செய்தேன். அவள் எதிரில் அமர்ந்திருப்பது யார்? வாட்ட சாட்டமாக. கண்டிப்பாக அவள் கணவன்தான். மீசையில்லாத கணவனா? அவள் கண்ணில் படக்கூடாது. பட்டால் என்ன? இத்தனை ஆண்டுகள் பேசாதவள் இப்போது மட்டும் பேசவா போகிறாள்?

இன்னும் ஞாபகம் இருக்கிறது. கல்லூரி இரண்டாம் ஆண்டில் முதல் நாளன்று நான் கல்லூரிக்கு கொஞ்சம் தாமதமாகத்தான் சென்றேன். அவள் அங்கு இருப்பதையே நான் கவனிக்கவில்லை. அவள் என்றில்லை பொதுவாக நான் யாரையுமே கவனிப்பதில்லை.

“டேய் மச்சி, அவ உன்ன பாக்குறாடா..” என்று கோபி சொன்ன உடனேயே, நான் அவள் திசை நோக்கித் திரும்பிய போது, அவள் என் திசையில் இருந்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டிருந்தாள்.

அவள் என்னைப் பார்த்தது போலவும் இருந்தது, பார்க்காதது போலவும் இருந்தது. ஆனால், எனக்கு அது ஒரு முதல் பார்வை. முதல் பார்வை மட்டும்தான் முழுமையான உண்மை. அடுத்த கணத்தில் இருந்து நாம் பார்க்கும் அனைத்துப் பார்வையும் அந்த முதல் பார்வையின் பதிவின் வெவ்வேறு வடிவங்கள்தான். வெவ்வேறு மீட்டுருவாக்கம்தான்.

அந்தகரணவிருத்தி என்று சொல்வார்களே. இதுவரை அறிந்திராத ஒன்றை; நாம் ஞாபக அடுக்குகளில் இதுவரை இருந்திராத ஒன்றை, முதல் முறையாக எதிர்கொள்ளும் போது உண்டாகும் வியப்பு.

‘ஆ.. வியப்பு.. பளிச்சென்று; மின்னலென்று; திடுக்கென்று; படீரென்று; அறை விழுந்தது போல்‘ அதுதான் எனக்கு நடந்தது. அந்த கணம்தான் நான் அந்த முதல் வியப்பிற்கு உள்ளானேன். இதுவரை இல்லாத புதிய உணர்வு. ஒருவேளை இவ்வுணர்வை உணர்ந்த வேறு சிலர் இவ்வுலகில் இருக்கலாம். ஆனால், இது என்னுடைய அந்தகரணவிருத்தி.

“இதோ பார் மறுபடியும் பாக்குறா..”

என் ஆர்வத்தை காட்டிக் கொள்ளாமல் கேட்டேன், “நியூ கம்மரா டா?”

“அவளோட அப்பன் எதோ ஏர் போர்ஸாமா.. டிரான்ஸ்பர் போல.. அதான் அம்மணி டெல்லியை விட்டு இங்க நம்ம கூட..” கோபிக்கு எல்லாம் தெரிந்திருந்தது.

ஒன்று இரண்டு வாரங்களிலேயே தெரிந்துவிட்டது, அவள் அனைத்திலும் கெட்டிக்காரி என்று. முக்கியமாக படிப்பில். படிப்பு என்பதால் எனக்கு நேரடிப் போட்டியாகிப் போவாள் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. இதற்கிடையில் எங்கள் வகுப்பில் அநேக பையன்கள் ஸ்ரீவித்யா உபாசகர்கள் ஆகிப்போனார்கள். இவர்கள் வழிபடுவதால் அவளுக்கு ஆற்றல் வந்ததா அல்லது அவளது ஆற்றலைத்தான் நம்மவர்கள் வழிபட்டார்களா என்பது இன்றுவரை புதிர்தான்.

ஸ்ரீவித்யா..

நானோ அந்த முதல் வியப்பையே வெகு நாட்களாக உள்வாங்கிக் கொண்டிருந்தேன். அதைப் பழக்கி, அர்த்தப்படுத்தி, அடையாளப்படுத்தி என் ஞாபக அடுக்கில் கொண்டு அமர்த்த முயன்று கொண்டிருந்தேன். அப்படிச் செய்தால்தான் அவள் வியப்பாக இல்லாமல் அந்த ஞாபகத்தின் பிரதிநிதியாக எனக்குத் தெரிவாள். அப்படித்தான் மற்ற அனைவரும் இருந்தார்கள். ஆனால், அந்த முதல் வியப்பிற்குப் பிறகு என் மூளை அவளைப் பற்றிய என் உணர்வுகளின் ஏதோ ஒரு சிறிய பகுதியை அடையாளப்படுத்த மறுத்ததோ என்னவோ, அவள் எனக்கு வியப்பாகவே தெரிந்தாள். 

அதன் காரணத்தை ஆராய்ந்தால் எதையெல்லாம் நாம் அழகு என்கிறமோ அதற்கு வெளியே நின்று அந்த அழகை பரிகாசம் செய்து கொண்டிருந்தாள். ஆண்மையின் ஆக்கிரமிப்புக்கு அப்பால் இருப்பவர்களிடம் நாம் செய்யக்கூடியது இரண்டு. வழிபடுவது அல்லது போட்டி போடுவது.

எங்கள் வகுப்பில் காதலிக்கும் எண்ணம் இருக்கும் அனைவருமே முதலாம் ஆண்டே தத்தம் இணையைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். கோபி கூட மூன்று நான்கு காதல்கள் கடந்திருந்தான். இவள் இரண்டாம் ஆண்டுதான் வந்து சேர்ந்தாள். ஆகையால் அவளுக்கு உண்டான இயற்கையான வாய்ப்பு என்பது நான் மட்டும்தான். ஆனால், வழிபடுவதா? நானா? 

வகுப்புத் தேர்வு நடந்த உடனே அவள் யார் என்று அனைவருக்கும் புரியச் செய்திருந்தாள். நான் யார் என்று அவளுக்கு தெரியச் செய்திருந்தேன். இருவரும் ஒரே மதிப்பெண். அவள் பொருட்படுத்த வேண்டிய ஒரே ஆள் நான்தான் என்று நிரூபித்திருந்தேன். இனி இப்படித்தான் நடக்கும். அவள் என்னுடனும் நான் அவளுடனும் ஒட்டிக்கொண்டோம். ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலே.

முதல் மதிப்பெண் எடுக்கும் அழகியை திமிர் பிடித்தவள் என்று நினைப்பதுதானே எப்போதுமான வழக்கம். ஒருவரை வெறுத்தால் கோபி காதலிக்க ஆரம்பித்து விடுகிறான்.

கோபி, “நல்ல வேல நான் மேக்ஸ்ல மூணு மார்க்குதான் எடுத்தேன்” என்றான்.

“ஏன்..?”

“அவ தொன்னூத்தி ஏழுல?”

“அதுக்கு?”

“கூட்டிப்பாத்தா நூறு வருத்துல? வீ கம்ப்ளீட் ஈச் அதர். கணக்கு கரெக்டா இருக்கு மச்சி..” என்று கூச்சம் நாச்சம் இல்லாமல் சொல்வதில் அவன் வல்லவன்.

“நான் கூடத்தான் தொன்னுத்தி ஏழு” என்றேன்.

“ஆம்பளையும் ஆம்பளையுமா? சங்கடமா இருக்காது? மச்சி, நீ ஏதாவது மூணு மார்க் வாங்குற பொண்ண பாத்துக்கோ..” என்னை மச்சி என்று அழைக்கும் ஒரே ஜீவன் இவன்தான். அதனால் கோபியை என்னால் வெறுக்க முடிவதில்லை ஆனால், முறைக்க முடியும். முறைத்தேன்.

“சரி சரி.. விடு.. தொன்னுத்தி எழும் தொன்னுத்தி எழும்..” என்று சொல்லிவிட்டு விரல் விட்டு எண்ணியவனிடம், “நூத்தி தொன்னூத்தி நாலு..” என்றேன்.

“ஆங்.. ஆமா.. அதெல்லாம் ஒரு நம்பராடா.. சரி, உன்பாடு.. இல்லடா மச்சி, வேற விஷயமா இருந்தா நானே கோதாவுல குதிச்சிடுவேன். திஸ் இஸ் எஜுகேஷன் மேட்டர்டா மச்சி.. இட் இஸ் அவுட் சைட் ஆஃப் மை எக்ஸ்பர்ட்டிஸ்..” என்றான். இப்படி பல பல போட்டிகள் அன்று இருந்தன.

நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ‘அவள்தானா? அவளேதான். இப்போதுகூட சிரிக்கிறாளா என்று பார். இதோ இதோ சிரிக்கிறாள்… ச்சீ சிரிக்கிறாள்… கொஞ்சம் பூசிவிட்டாளோ? ஏன்? இருக்காது..’

என்னை நோக்கித் திரும்புவது போல் இருந்தது. சட்டென்று தலை தாழ்த்திக் கொண்டேன். இன்று நாங்கள் இருவரும் பார்த்துக் கொள்ளக் கூடும்; பேசிக் கொள்ளக் கூடும். ஆனால், அதை நான் ஆரம்பிக்கக்கூடாது. அவள் என்னைப் பார்க்க வேண்டும், பார்த்து என்னிடம் ஓடி வரவேண்டும். ஓடி வந்து என்னிடம் பேசவேண்டும். எப்போதும் முதலில் வருபவள் இதிலும் வரட்டுமே. இனி தலை தாழ்த்தக்கூடாது. அவள் பார்வை வட்டத்தில் என்னை வைத்துக் கொள்ளவேண்டும். எப்போதும் அவள் முந்தியா நான் முந்தியா என்பதுதான். படிப்பில் மட்டுமல்ல. அவள் நன்றாக நடனமாடுபவள் என்பதற்காக நான் ட்ரம்ஸ் கற்றுக்கொண்டேன். மேலதிகமாக ஓவியம். கல்லூரி ஆண்டு விழாவில் அவள் ஆடுகிறாளோ இல்லையோ நான் டிரம்ஸ் வாசிப்பேன்.

அவளுடைய மதிப்பெண்கள் எனக்கு மனப்பாடம். அதில் ஒன்று கூடினால் கூட எனக்குத் தூக்கம் வந்ததில்லை. நான் உறங்காத காலங்களில் அவள் நன்கு உறங்கி இருக்கக்கூடும். அப்படியான நாட்களில் அவள் துள்ளலுடன் இருப்பாள், நான் துக்கமாக; அவள் என் பாவனையைப் பூசியிருப்பாள். நான் அவள் திமிரை சுவீகரித்திருப்பேன். 

எல்லாம் நான் அந்த ஒரு மதிப்பெண்ணில் அவளை முந்தும் வரைதான். அவளிடம் பறிகொடுத்திருந்த என்னுடைய மகிழ்ச்சியை நான் மீட்டெடுத்திருப்பேன். என்னிடம் இருந்த அவளுடைய பாவனையை நான் திருப்பி அனுப்பியிருப்பேன்.

எல்லாம் அந்த ஒரு மதிப்பெண்தான்.

சில சமயங்களில் எனக்குத் தோன்றும். இவ்வுலகில் மற்ற எல்லோருக்கும் அவரவர் வாழ்வனுபவம் அவரவருக்கு கொடுக்கப்பட்டிருக்கையில், எங்கள் இருவருக்கு மட்டும் ஒரே அனுபவத்தை பங்கிட்டு அளிக்கப்பட்டுள்ளதோ என்று. அவள் மகிழ்ச்சியாக இருந்தால் அன்று அது என்னிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கும். அவள் சிரித்த நாட்கள் நான் மௌனமாய் இருந்தவைகள். 

அவள் இருப்பு என்பதே பலருக்கு இங்கு சங்கடம்தான். எல்லோரையும் விட மேம்பட்டவள். ஆயாசமாக அழகாயிருப்பாள். அவளுடைய அன்றாடம் கூட செவ்வியல் தரத்தில் இருக்கும். அவள் ஒவ்வொரு நாளும் சூக்குமமாக எங்களிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் – ‘நான் நீங்கள் எல்லோரும் இருக்கும் இடத்தில்தான் இருக்கிறேன். ஆனால், உங்களுடன் இல்லை. உங்களுடைய லட்சிய உலகம் எனக்கு தினசரி. உங்களின் உச்சி எனக்கு இன்னும் மேலே செல்லும் உந்து தளம்.’ என்று.

அவளை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி நான் மட்டும்தான். என்னுடைய வெற்றி அந்த அழகதிகாரத்திற்கு எதிரான வெற்றி. ஆகையால் அது அனைவருடைய வெற்றி. அப்படித்தான் அன்றெல்லாம் இருந்தது.

அவள் இன்னும் என்னை கவனித்ததாகத் தெரியவில்லை. இன்னும் உணவை மேய்ந்துகொண்டும் அவன் கணவனின் கண்களை நோக்கிக்கொண்டும் அவனிடம் செல்லம் பாராட்டிக்கொண்டும் இருந்தாள். நானும் வர்ம உக்தி, கிரியா உக்தி, நோக்கு உக்தி, ஜெப உக்தி என்று நான் கேள்விப்பட்ட எல்லா கரணங்களும் அடித்துப் பார்த்தாகிவிட்டது. ம்ம்ஹும்… மனதில் அபவார்த்தைதான் வந்தது. அதைத் தொடர்ந்து கோபியின் ஞாபகம் வந்தது. அவனை போனில் அழைத்தேன்.

“ஹலோ சொல்லு மச்சி..” என்றான்.

“டேய், அவள பாத்தேன். அதான் அந்த இவள. அட வித்யாவ..”

“அட… எப்படி இருக்கா. பேசுனியா? இன்னும் கும்முன்னுதான் இருக்காளா? எங்க இருக்கா?” அடுக்கடுக்காக வினவினான்.

“ரெஸ்டாரெண்டில். சாப்பிட்டுக்கிட்டு இருக்கா. அவ என்னை இன்னும் பாக்கல.”

“இன்னுமாடா? நீயே போய் பேசு. நம்பர் வாங்கு..”

“என்னது….?”

“பார்றா.. உனக்கு இன்னும் கொறையல..? மச்சி, நான் குடும்பஸ்தன். சின்ன பிள்ளைங்க விளையாட்டுக்கு வர முடியாது. நல்ல பையனா ஒழுங்கா நீயே போய் பேசு. ஒரு காலத்துல நீ எங்களோட ரட்சகத்தான். இல்லேன்னு சொல்லல. இன்னொரு தடவை நீயே இறங்கிப் போடா. ஒன்னும் தப்பில்லை. சரி.. கடமை என்னை அழைக்கிறது. என் பையனை ஆய்க்கு விடணும்.. விடைபெறுகிறேன்…” என்று சொல்லிவிட்டு துண்டித்துவிட்டான்.

ஒரு காலத்தில் நான் எளியோரின் ரட்சகனாக மீட்பராக இருந்தது உண்மைதான். ஆனால், நல்ல போராளி என்பது எதிராளிக்கு அருள்வது. மூன்றாம் ஆண்டின் என் வரிசை கட்டிய வெற்றிகள் என்னை பருமனாக்கியது மட்டுமல்லாமல் அவளைச் சுருக்கியிருந்தது. மெலிய வைத்திருந்தது. வழவழப்பான வனப்பின் மீது நான் மட்டும் கண்டு உணரக்கூடிய வாட்டமும் சுருக்கங்களும் என்னை குதூகலிக்க வைத்தது. அதை தொடர்ந்து வருத்தமடையச் செய்தது. வானில் மட்டுமே பறந்து திரிந்தவளை மண்ணில் இறக்கிவிட்டதை மட்டும்தான் நான் செய்தேன். மண்ணுக்கு இறங்கியவள் அதில் புதைந்து போனது எல்லாம் அவளின் சுயவதை. பாவம்.. வரிசையாக இரண்டாமிடம் வாங்கியவளின் உள்ளத்தை நான் மட்டுமே அறிவேன்.

அவளுடைய திருவுருவம் என்னுடைய விஸ்வரூபத்தால் மறைக்கப்பட்டிருந்தது. தொடர் வெற்றிகள். வெற்றிக்கு பின்னான வெற்றி. இயல்பாகவே சலித்து விட்டிருந்தது. முக்கியமாக அவளை முதலில் முந்தவிட்டு நான் எட்டிப்பிடிக்கும் திருவிளையாட்டு இல்லாமல் போனது. பல கோணங்களில் அவளுடைய துயரின் மறு பிரதியாக நான் ஆகிப்போயிருந்தேன். வெற்றியைப் போல அவளுக்கு தோல்வியும் பழகிவிட்டால் அவள் ஆட்டத்தை விட்டு விலகி விடுவாள் என்று பட்டது. இவ்வளவு அருகாமையில் இருப்பவளை அன்று இழக்க என்னால் இயலவில்லை.

ஒரே ஒருமுறை நானே விரும்பி விட்டுக் கொடுத்தேன். கொஞ்சம் அதிகம் விட்டுக் கொடுத்தேனோ என்னவோ அந்த மூன்றாம் ஆண்டு இறுதித் தேர்வில் நான் மூன்றாம் இடம் பெற்றிருந்தேன். அதுகூட வருத்தமில்லை அவளுடைய வெற்றிக்களிப்பு, எப்போதுமான அவளது பாராமுகமும் அவளை வெறுக்கச் செய்தது. அன்று தோற்றவன்தான், இறங்கியவன்தான், நான்காம் ஆண்டு இறுதி வரையில் பிடி கிடைக்கவில்லை.

அது பெரிய தவறாகப் போய்விட்டிருந்தது. அவளுடைய வெற்றியை அவளுக்கு நான் இறங்கி வந்து கையளித்தால், அவள் திருப்தியுறுவாள், என்னிடம் வந்து பேசுவாள் என்றெண்ணினேன். கடைசிக்கு அனுதாபிப்பாள், துயருற்றிருக்கும் என்னைப் புரிந்துகொள்வாள், நான் மேலும் துயருருவேன். என்னை ஏந்திக்கொள்வாள், கண்ணீர் துடைப்பாள், தோள் சாய்ப்பாள். என்னைப்போல் எனக்காக அவளும் விட்டுக் கொடுப்பாள். கடைசியாக கடைசியாக.. இல்லை.. அதை அன்றும் இன்றும் எண்ணமாக ஆக்கிக் கொள்ளவில்லை. ஆக மொத்தத்தில் கேனையனாக இருந்திருக்கிறேன். 

ஆனால், நடந்தது என்ன? அந்தரத்தில் மட்டுமே இருந்தவள் ஆகாயத்திற்க்கே சென்று விட்டிருந்தாள். மொத்தத்தில் ஐந்து பத்து மதிப்பெண்தான் வித்தியாசம். ஆனால், அவள் இருந்த உயரத்தில் அன்று நாங்கள் யாரும் அவள் பார்வைக்கு படவேயில்லை. அவளுடைய பேருருவத்திற்கு முன்னால் நாங்கள் சிறிய துகள்களாகத் தெரிந்தோம்.

அவளை வீழ்த்த என் முழு சக்திகொண்டு முயன்றேன். வெற்றியின் ருசி கண்ட அவள் அதை விட்டுக் கொடுக்கவில்லை. பலமுறை நெருங்கி வந்தேன். முடியவில்லை. 

இரண்டாம் இடத்தில் உள்ளவர்கள் அனைவரும் திருவுருவங்களினால் மறைக்கப்பட்டவர்கள். அவர்களது வெற்றிகள் கவனிக்கப் படுவதில்லை. அவர்கள் சொற்கள் கேட்டகப்படுவதில்லை. அவர்கள் இருப்பு கூட அங்கீகரிக்கப்படுவதில்லை. 

உலகின் பார்வை எனக்கு முக்கியமாக இருக்கவில்லை. அவளின் பார்வை. அவளின் பார்வை கூட அல்ல, அவள் பார்வையின் ஒரு கோணம். அன்று அப்படித்தான் இருந்தது, இன்றும் அப்படித்தான் இருக்கிறது.

என்னுடைய ஒவ்வொரு தோல்விக்கு பிறகும் அவளுக்கு நான் அணுக்கமாகவும், எனக்கு அவள் விலக்கமாகவும் ஆகி போயிருந்தோம்.

ஆனால், பிந்திய கால்கள் பிந்தியே இருப்பதில்லை. ஒற்றை நோக்குடைய விசை அதன் இலக்கைத் தவறவிடுவதேயில்லை. நித்திய வெற்றி என்று எவருக்கும் அருளப்பட்டுவதில்லை. கடைசித் தேர்வில் நான் முந்தினேன். கடைசியாக என் இருப்புக்கு நானே நியாயம் செய்துகொண்டேன். என்னை நானே மன்னித்துக் கொண்டேன். 

ஆச்சரியம் என்னவென்றால் அவளுடைய தோல்வி அவளைச் சீண்டவேயில்லை. அப்படி ஒன்று நடக்காதது போல் இருந்தாள். ஒருவேளை ஒட்டுமொத்தத்தைப் பார்க்கிறாளோ? அப்படியானால் அவள் முந்திதான். அல்லது ஒருவேளை என்னுடைய இந்த வெற்றி அவள் விட்டுக் கொடுத்ததுவோ? இப்படியெல்லாம் யோசித்தேன். என் மேல் பரிவில்லாமல் விட்டுக்கொடுக்க முடியுமா? அப்படியானால் நான் நினைத்தது நடக்குமா? அவளே என்னுடன் வந்து பேசப்போகிறாளா? 

கல்லூரியின் கடைசி நாள் அவள் எல்லோருடனும் பேசினாள். அதாவது எல்லோருடனும். கோபியுடன் கூட முதல் முறை பேசினாள். என்னிடம் பேசுவாள் என்று எதிர்பார்த்திருந்தேன். அன்று அதற்காகத் தயாராக இருந்தேன். சகஜமாக வரப்போகும் நிகழ்வை மனதில் பலவாறாக நிகழ்த்திப் பார்த்தேன். அவள் தேடி வந்து பேச வேண்டும். என் பெயர் சொல்லி அழைக்க வேண்டும். என் பெயர் சொல்லி. 

ஆனால், அப்படி எதுவும் அன்று நடக்கவில்லை. சாதாரணமாக, மிக சாதாரணமாக எல்லா நாட்களைப்போல அவள் அன்றைய தினத்தை கடந்து சென்றாள். அதற்கு பிறகு அவளை இப்போதுதான் நான் பார்க்கிறேன்.

நான் எரிச்சலுற்றேன். அப்படியானால் அந்த மூன்று வருடப் போட்டியெல்லாம் எனக்குள் நானே நடத்திக் கொண்டவைதானா? ஒற்றைக்கால் ஆட்டம்தானா? இது மௌன உரையாடல் இல்லையா? ஒற்றைத் தன்னுரையா? அவள் உலகில் நான் இல்லையோ? ஆனால், எங்கள் இருவருக்கும் நடக்கும் இந்த ஆடல் அனைவரும் அறிந்ததுதான். அதன் பிசிறு கூட அவள் அறியவில்லை என்பது நம்பும்படி இல்லை. ஆரோக்கிய போட்டியின் எடுத்துக்காட்டாக எங்கள் இருவரையும்தான் கல்லூரியில் சொல்வார்கள். அப்படியானால் அவளுக்கு என்ன கேடு? வந்து பேச வேண்டியதுதானே? என் மனம் இப்படியெல்லாம் பிதற்றியது சொல் மாறாமல் இன்றும் நினைவில் இருக்கிறது.

போன் ஒலித்தது. கோபி.. “டேய், இன்னும் இங்கதான் உக்காந்திருக்கா.. ரொம்ப சந்தோசமா இருப்பா போல..” என்றேன்.

“மச்சி, என்ன செய்றதா உத்தேசம்? போய் பேசு… நம்பர் கெடச்சா எனக்கும் ஷேர் பண்ணு.”

“பேசலாம்ன்னு சொல்றியா. அவ மறுபடியும் என்ன கண்டுக்காத மாதிரி இருந்தான்னா?”

“அவள பழிதீர்க்க ஒரு வழி இருக்கு. ஆனா, உனக்கு தைரியம் பத்தாது.”

“ட்ரை மீ..”

“சடசடன்னு அவளைப் பாத்து நேரா போகணும். நீ வர்ற வேகமே உன் பக்கம் அவள் கவனத்தைத் திருப்பும். என்ன ஏதுன்னு அவ நினைக்கறதுக்குள்ள லிப் கிஸ் ஒன்னு ‘நச்’சுன்னு போட்டுட்டு அங்க இருந்து ஓடி வந்தரனும். அப்படி நீ செஞ்சின்னா, அவ லைஃப் மேல உன் பேர் எழுதி வச்ச மாதிரி. அப்புறம் உன்ன மறக்கவே மாட்டா..”

“எது முத்தமா? அவ புருஷன வெச்சுகிட்டா?”

“புருஷனா?”

“பின்ன..”

“மச்சி, அழகிக்கும் அடங்காபிடாரிக்கும் புருஷன் இருக்கக்கூடாது.”

“அதுக்கு?”

“மர்டர் பண்ணிரு..”

“பீ சீரியஸ்..” என்று கடிந்து கொண்டேன்.

கோபி, “இன் மை ப்ரோபஷனல் ஒபினியன், அவ உன்ன இப்பவும் திரும்பி பாக்கப் போறதில்லை” என்று கிண்டலாகச் சிரித்தான்.

அபவார்த்தை சொல்ல எத்தனிக்கும் போது அவள் என்னைப் பார்ப்பது போல் இருந்தது. “டேய், அவ என்ன பாக்குறாடா..” என்றுவிட்டு போனைத் துண்டித்தேன்.

நான் வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன். என்னைப் பார்த்துவிட்டாளோ? எழுந்து சென்றுவிடலாமா? எழுந்தேன், அமர்ந்தேன். மீண்டும் எழும் போது, பில் வந்து கொடுத்தான் வெயிட்டர். அமர்ந்து பணம் காட்டினேன். இந்த இடைப்பட்ட நேரத்தில் நடந்த மாற்றம் என்னை அவள் அமர்ந்திருக்கும் டேபிள் நோக்கி அழைத்துச் சென்றது. நான் அவளைப் பார்த்தவாறு நடந்தேன். அவள் தனது கணவனிடம் இன்னும் பேசிக்கொண்டிருந்தாள், இல்லை பார்த்துக் கொண்டிருந்தாள், இல்லை பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். நடக்க நடக்க அடித் தொடைகள் நடுங்க ஆரம்பித்தன. காது மடல்கள் சூடேறின. இன்னும் சில எட்டுகள். அவள் முன் நின்றிருப்பேன். நின்றபின் என்ன செய்வது? கோபி நினைவு வந்து சென்றது, ஐய்யோ முத்தம் கொடுத்துவிடுவேனோ? அசிங்கம். திரும்பிவிடு. இல்லை. இன்னும் சில எட்டுகள் தான். என்னால் முடியும். 

ஹலோ ஹலோ.. ரிமெம்பர் மீ? ரிமெம்பர் மீ?. ரிமெம்பர் மீ? … சரி ரிமெம்பர் மீ யில் இருந்து ஆரம்பிப்போம். அப்புறம் அதுவே எடுத்துச் செல்லும். அவள் கணவன்…!? அவனைப் பற்றி நினைக்கவில்லையே. சரியான தருணம் இது அல்ல. ஆம். இன்னும் ஒரு மீட்டர் இருக்கும்போது என் கால்கள் அவையாகவே மறுமுனை நோக்கித் திரும்பிக் கொண்டன. கால்களை உடல் பின்தொடரும் சிறிய இடைவேளையில் அவள் என்னை நேருக்கு நேர் பார்த்தாள். சட்டென்று என் கண்களை என் உடல் திரும்பிய திசை நோக்கி திருப்பிக்கொண்டேன். 

“மச்சீ..” ஒரு பெண் குரல்.

முதுகின் நடுக்கம் விலா எலும்பு வரை பரவியது. கால்கள் வேகமாக நகர மறுத்தன.

“மோகன் மச்சி..” 

அவள் குரல்=தானா? தெரியவில்லையே. ஆனால், மோகன் என் பெயர்தான்.

திரும்பினேன். உதடுகள் எனக்கு முன்னமே சிரித்திருந்தன. அதாவது இளித்திருந்தன. 

வித்யா என் முகம் நோக்கி நின்றிருந்தாள். அவள் கணவன் இருந்த இடத்திலேயே எழுந்து நின்றிருந்தான்.

“ஹே வித்யா…”

“எப்படி இருக்க?..” என்றவள் அவள் கணவனை நோக்கி, ” என் காலேஜ் மேட்.. மை பெஸ்ட் பிரண்ட்.. வி வேர் சோ க்ளோஸ் இன் காலேஜ்..” என்று ஆரம்பித்து சொல்லிக்கொண்டே சென்றாள்..

********

– sammankarai@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button