இணைய இதழ்இணைய இதழ் 72கட்டுரைகள்

நுழைவாயில் – மூன்று தகப்பன்களின் கதைவழி ஒரு நிலத்தின் கதை – வருணன்

கட்டுரை | வாசகசாலை

கவல்களின் யுகம் நம்முடையது. கடந்த காலம் குறித்த தகவல்களை அடுக்கியெடுத்து கோர்க்கையில் அது வரலாறாக மாறுகிறது. யார் கோர்க்கிறார்கள், எப்படிக் கோர்க்கிறார்கள், எதை எடுக்கிறார்கள், எதனை விடுக்கிறார்கள், எதனை பிறர் அறியக்கூடாதென மறைக்க முயல்கிறார்கள் எனும் செயல்பாடுகளின் வழி, சொல்லபடுகிற அல்லது எழுதப்படுகிற, வரலாற்றிற்குள் அரசியல் நுழைகிறது. மேற்சொன்ன இதே காரணிகளைக் கொண்டே இதனை எழுதியவர்களின் நோக்கம், சாய்வு, சார்பு போன்ற பல விடயங்களை நாம் ஆய்ந்தறிய இயலும்

நிலத்திற்கும் மனிதர்களுக்கான பிணைப்பு ஆழமானது. மனிதர்களே நிலத்தைச் சார்ந்திருக்கிறார்கள். தமக்குத் தேவையான சகலத்தையும், தேவைக்கும் மிகுதியாகவும் கூட, நிலத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள். தொடர்ந்து மனிதர்களால் நிலம் உருமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கடலுக்கு அருகிலிருக்கும் நிலங்களில் வாழும் மனிதர்கள் நிலத்தைப் போலவே தங்கள் வாழ்க்கையை கடலைக் கொண்டும் எழுதிக் கொள்கிறார்கள்

தூத்துக்குடி தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களுள் ஒன்று. பெயரைக் கேட்ட மாத்திரத்தில் உப்பும், முத்தும், மீனும் நினைவில் எழுகிற ஊர். கூடவே பாசமும் அதே வேளையில் கோபமும் கொண்ட கடலாடிகளென இம்மண்ணின் மனிதர்கள் குறித்த சித்திரமும் விரியலாம். ஆனால், அது மட்டுமேயல்ல தூத்துக்குடி. சரியான கோணத்தில், இந்நிலம் குறித்து நமக்குச் சொல்லப்பட்டிருக்கும் வரலாற்றில் / அதில் தோய்ந்த கதைகளில் விடுபட்ட (இன்னும் சரியாய்ச் சொல்வதானால் விடப்பட்ட) கோடிட்ட இடங்களை இட்டு நிரப்பி அதன் கதையை இன்னும் தெளிவாய்ச் சொல்ல முனையும் எத்தனிப்பை முஹம்மது யூசுப் அவர்களின்நுழைவாயில்புதினத்தில் காணமுடிகிறது

இத்தொல் நிலத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்கிற மூன்று தகப்பன்மார்களின் மற்றும் அவர்களின் மகன்களின் கதையாகச் சொல்லப்பட்டிருப்பது உண்மையில் இம்மண்ணின் கதையின் ஒரு துளியே. ஒரு நிலத்தில் வாழ்கின்ற மனிதர்கள் எப்படி மாறிப் போகிறார்கள் என்பதைக் காட்டிலும் அம்மனிதர்களால் நிலம் என்னென்ன மாற்றங்களுக்கெல்லாம் உட்படுகிறது என்பதனையும் இந்தப் புதினம் அவதானிக்கிறது. அதே வேளையில் பொதுவெளியில் இந்நிலத்திற்கு வழங்கப்பட்டிருக்கிற பிம்பத்தை மறுபரீசலனை செய்யக் கோருகிறது. (குறிப்பாக தெலுங்கு மொழிமாற்றுப் படங்களில் கணிசமாக மதுரை மற்றும் தூத்துக்குடி நகரங்களை ரவுடிகளின் கூடாரமாகவும் வன்முறை பூமியாகவும் சித்தரிப்பது வாடிக்கை. ஆனால், அது அல்ல நிசம்.) மனிதர்களின் கதையை சொல்கிற சாக்கில் காலந்தோறும் அதிகாரத்தின், பேராசையின், சுயநலத்தின் கரங்களால் வனைந்தெடுக்கப்பட்டு தொடர்மாற்றத்திற்கு உள்ளாகிக்கொண்டே இருக்கிற, தொடர் சுரண்டலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிற நிலத்தின் சித்திரத்தை வரைந்து காட்டுகிற கதையாகவும் நுழைவாயில் இருக்கிறது.

சொல்லப்போனால் மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த மூன்று தலைமுறையின் மனிதர்கள் இக்கதைவெளிக்குள் கதைமாந்தர்களாய் உலவுகின்றனர். காலகட்டங்களைப் பொருத்தவரையில் அது பல சமயங்களில் அம்மனிதர்களின் நினைவுச்சித்திரங்கள், கடந்த காலத்தை அசைபோடுகிற மனப்பதிவுகள் வழியாகவும் கோர்க்கப்படுகின்றது. வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்கிற மூன்று கதைகளை அடுத்தடுத்த அத்தியாயங்களில் வாசிக்கிற நாம், வழமையான வாசிப்பனுவத்தை முன்னிறுத்தி ஒரு கட்டத்தில் இவை பிணைந்து ஒரே கதையாக உருக்கொள்ளும் என்ற நினைப்பில் தொடரக்கூடும். பொதுவாகவே வாசிப்பனுவத்தில் எதிர்பார்த்தது நிகழ்வதைக் காட்டிலும் நிகழாமை என்பது கூடுதல் சுவாரசியம் தான் இல்லையா! அது தான் இங்கு நடக்கிறது.

வேலைப்பாடுகள் நிரம்பிய ஒரு கம்பளியாடையை பின்னுகிற செயல்பாட்டை சீரான கால இடைவெளியில் காண்பது சுவாரசியமானது. தையல் கலைஞர் தனித்தனி வண்ணங்களில் கம்பளி நூல்களைச் சேர்த்து சேர்த்து பின்னிக் கொண்டே இருப்பார், ஆடை வடிவ ஒழுங்கை கொஞ்சம் கொஞ்சமாய் எட்ட எட்ட கம்பளியிலிருந்து உருவங்களும், வடிவமைப்புகளும் தோன்றும். அதை ஒத்த அனுபவத்தையேநுழைவாயில்புதினத்தின் கதையாடல் நல்கியது. கதைமாந்தர்களை பிணைக்கிற களமாக தூத்துக்குடியின் ..சி மார்க்கெட் வளாகம் இருக்கிறது. (ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வளாகம் புனரமைக்கப்பட இருப்பதால் இப்போதிருக்கும் இச்சந்தை இனி இப்புதினத்திற்குள் மட்டும் சிரஞ்சீவியாய் வாழும்.) இச்சந்தையை முன்னிறுத்தி, லிஸ்டன், அவரது மகன் சிரில், செல்வம் மற்றும் அவரது தோழர் கருத்தப்பிள்ளை, லிஸ்டன் வேலை செய்கிற கடையின் முதலாளி மார்க்கஸ், மார்க்கெட் வளாகத்தில் காய்கறிக் கடை வைத்திருக்கும் யாசின் பாய், அவரது மாணவ பத்திரிக்கையாளர் மகன் சித்திக், ஜெய்லானித் தெருவிலிருக்கும் பார்வையற்ற புத்தகக் கடைக்காரர் மஹபூப் ஷெரீப் பாய் ஆகியோரின் வாழ்க்கைக் கதைகளை நாவல் பின்னுகிறது. கதையோட்டதோடு செங்கல்ராஜ், மாசாண முத்து, ஐசக் சித்தப்பா, ஜவ்வாது, பீட்டர் மாமா என பலரையும் நாம் சந்திக்கிறோம்

கதைக்குள் ஷிப்பிங் தொழிலுக்குள் இருக்கிற தொழில் போட்டியின் காரணமாய் எழுகிற தனிமனித அரசியல் இருக்கிறது, சமூக விலங்குகளாக வாழ்கிற ஜனங்களை பிடிக்குள்ளேயே வைத்துக் கொள்ள, மதத்தையும் சாதியையும் கருவிகளாக உருமாற்றி அதை வைத்துக் கொண்டு தங்களுக்குள்ளேயே அவர்கள் சமர் செய்யத் தூண்டி அதில் குளிர்காய்கிற, அதிகார மையங்களின் அரசியல் இருக்கிறது. இதன் நீட்சியாக வரலாற்றை திரித்தும், மறைத்தும் சில மனிதர்களுக்கும் இனக்குழுக்களுக்கும் சமூக, கலாச்சார, பண்பாட்டுத் தளங்களில் வேறு சாயம் பூசுகிற நுண் அரசியலும் நுட்பமாய் பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக சமூகத்தின் எல்லா படிநிலைகளுக்குள்ளும் தம் ஆளுமையை செலுத்துகிற திராவிடக் கட்சி அரசியலும் இதில் இருக்கிறது

இத்தனை வகையான அரசியல்களையும் இது கதையினூடாக பிணைத்துச் சொல்கிற போதிலும், தூத்துக்குடி எனும் இத்தொல் நிலத்தினை மையமாகக் கொண்டு பன்னெடுங்காலமாய் நிகழ்த்தப்படுகிற புவி சார் அரசியலை (Geopolitics) பறவைப் பார்வையில் புதினம் காட்டுகிறது. மேற்சொன்ன பிற அரசியல்களை முதன்மையான புவிசார் அரசியலோடு பிணைத்துப் பேசுகிற பாங்கு, தனிமனித வாழ்வியலின் கடைக்கோடி வரையிலும்அவ்வரசியல் நிகழ்த்தியிருக்கிற ஊடுருவலையும், தனது பிரம்மாண்ட வலிமையால் ஏனைய அரசியல்கள் அனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் ஆட்டுவிக்கும் சூத்திரதாரியான அதன் சூட்சுமங்களையும் எளிய மனிதர்களின் கதையைக் கொண்டே படம் பிடித்துக் காட்டுகிற விதமே தனிப்பட்ட விதத்தில் வாசகனை ஈர்க்கிற படைப்பம்சமாகவும் இருக்கிறது.

***

எழுத்தாளர் யூசுப் ஆவணப் புனைவு (Docu-Fiction) பாணியை தன் விருப்பத் தேர்வாகக் கொண்டு தொடர்ந்து இயங்கி வருகிற படைப்பாளி. 2018 முதல் வருடத்திற்கு ஒரு நாவலெனும் கணக்கில் மிகத் தீவிரமாய் இயங்கி வருகிறார். திணை சார்ந்து கதைக்களங்களை தேர்ந்து கொண்டு அதில் தன் புனைவுப் பிரபஞ்சத்தை நிர்மாணிக்கிறார். நுழைவாயிலை வாசிக்கும் போது, மிக ஆரம்ப பக்கங்களிலேயே வரலாற்றின் மீதான தீரா காதலும், தகவல்களை கதையோடு குழைத்துத் தருகிற பெருவேட்கையும் ஆசிரியரிடம் இருப்பதை கண்டுகொள்ள முடிகிறது. ஒரு கட்டத்தில் அவர் மொத்தப் புனைவையுமே தகவல் புள்ளிகளை இணைக்கிற கோலச் சித்திரத்தைப் போலத்தான் வரைகிறாரோ என்று கூடத் தோன்றுகிறது. கதைமாந்தர்களின் பாத்திர வார்ப்பும், அவர்களுக்கிடையே எழுகிற சிக்கல்கள், அவர்கள் எதிர்கொள்கிற சூழல்கள் என சகலமும் ஏதோ ஒரு வரலாற்றுத் தகவலை அதனோடு பின்னிப் பிணைத்துக் கொள்ளத் தகுந்ததாகவே வடிவமைக்கப்பட்டது போன்ற தோற்றங்கொள்கிறது. மிகச் சில தருணங்களைத் தவிர்த்து, பெரும்பான்மையான இடங்களில் பகிரப்படுகிற வரலாற்றுத் தகவல் கதையின் போக்கோடு இயல்பாக இயைந்து பொருத்திக் கொள்வதால் வாசிப்பை வளப்படுத்தவே செய்கிறது. சில இடங்களில் கதையின் தன்மைக்கு முற்றிலும் அந்நியமான தளத்திலும், காலகட்டத்திலும் இருந்து வரலாற்றின் ஒரு துண்டு பரிமாறப்படுகிற போது, அது கதையோட்டத்தின் ஏதோ ஒரு சரடோடு மிகச் சரியாக பொருந்தியிருக்கிற போதிலும், அதனை கதைப்போக்கிலிருந்து விலகலாக உள்வாங்கி எங்கோ இட்டுச் செல்வதாய் வாசகர்கள் கருதக்கூடும் என்பதையும் சொல்ல வேண்டும். ஆயினும் ஏககாலத்தில் ஒட்டுமொத்தமாய் பார்க்கையில் ஒரு அபுனைவு ஆக்கத்தை புனைவு மொழியில் வாசிப்பதைப் போன்ற ஓர் அனுபவத்தை இப்புதினம் வாசகனுக்கு அளிக்கிறது.

மேற்சொன்ன விசயத்தோடு பிசகாமல் பொருந்திப் போகிற பாத்திர வார்ப்பு ஷெரிப் பாய். அக்கதாபாத்திர விவரணைகள் மற்றும் அவரது சூழல் குறித்த குறிப்புகளை வாசிக்கையில் ஏதோ ஓர் மூலையில் எழுத்தாளர் ஜார்ஜ் லூயி போர்ஹே நினைவிலாடினார். வரலாறென பிசகாக நமக்குச் சொல்லப்பட்ட பல செய்திகளை தனது தர்க்கப்பூர்வமான உரையாடல்கள் வாயிலாக ஷெரிப் பாய் மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறார். சில இடங்களில் வரலாற்றின் துண்டு துண்டாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேள்விப்பட்ட தகவல்களை வரிசைக்கிரமமாய் கோர்வையாய் கோர்த்து அவர் முன்வைக்கிற விடயங்கள் பலவும் சுவாராசியமானவையாகவே இருக்கின்றன. கூடவே சித்திக் கதாபாத்திரத்தின் வழியாகவும் பல தகவல்கள் பகிரப்படுகின்றன

ஷெரிப் பாய் போல ஏட்டறிவு இல்லாவிடினும், பட்டறிவு நிரம்பிய மாசாணம் (மாசாண முத்து) இன்னுமொரு சுவாரசியமான பாத்திரம். ஷெரிப் பாய் வழியாக தத்துவார்ந்தமான உலகளாவிய பார்வை முன்வைக்கப்படுகிறது என்றால், செல்வத்துடனான மாசாணத்தின் பகிர்வுகள் தூத்துக்குடி மண்ணிற்கேயுரிய சங்கதிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அன்றாடத்தின் நுட்பத்தை அனுபவத்தால் உணர்ந்த, விவேகம் மிகுந்த ஒரு சாமானியனின் குரலை ஏந்தி அப்பாத்திரம் நம்மோடு உரையாடுகிறது. தூத்துக்குடி பரவலாக நெய்தல் நிலமாகவே வகைப்படுத்தப்படுகிறது. காரணம் கடலும், இயற்கைத் துறைமுகமும் என்பது யாவரும் அறிந்ததே. ஆயினும்உப்பு, மீனு, முத்துன்னு இது வெறும் கடப்புரம் மட்டுமில்ல இங்க தான் தெக்க ஸ்ரீவைகுண்டம் அணையும் வடக்க எப்போதும் வென்றான் அணையும் இருக்கு. மருதமும் நெய்தலும் கலந்த கழிமுக , நிலத்தில தான் கரம்பை ஒதுங்கும்…” [:169] , “பெரும் கடல் கடந்து, வணிகன் இந்த மண்ணைத் தேடி வந்ததுக்கு வெறும் முத்து (ம்) உப்பும் காரணம் இல்ல, அதைத் தாண்டி கழனியில் இறங்கி வேலை செஞ்சு இந்த நிலத்துல விளையிற பொருளை வச்சு இந்த நெலத்துக்கு இன்னொரு முகமும் இருக்குன்னு அடிக்கடி யாவக படுத்த வேண்டியிருக்கு.” [:170] என்பன போன்ற மாசாணம் பாத்திரத்தின் பகிர்வுகள் வழியே ஆசிரியர் இம்மண் வெறுமனே நெய்தல் நிலமாக மட்டுமல்ல, பணப்பயிர்கள் உள்ளிட்ட பலவும் விளைகிற மருத நிலமாகவும் இருக்கிறதென நிறுவுகிறார். கதையேங்கும் இடையிடையே முன்வைக்கப்படுகிற தரவுகளை சீர்தூக்கிப் பார்க்கையில் அதனை மறுக்க இயலவில்லை என்பதே உண்மை. மாசாணத்தின் பகிர்வுகளில் உழவு சார்ந்த நுணுக்கமான தரவுகளும் விவரணைகளும் மிகச் சுவாரசியமானவையாக இருக்கின்றன. போலவே ஷெரிப் பாய் பாத்திரம் பகிர்கிற தரவுகள் வரலாறு சார்ந்து தூத்துக்குடி மண்ணின் பண்பாட்டு, கலாச்சார மற்றும் மரபு சார்ந்த கூறுகளை முன்வைக்கின்றன என்பதையும் இவ்விடத்தில் சொல்ல வேண்டும். வரலாற்றின் பக்கங்களில் அது எவ்வளவு முந்தைய காலகட்டத்திலிருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் அவர் வாயிலாகவே அறிகிறோம்

அறுபதுகள் துவங்கி, சமகாலம் வரையிலும் தூத்துக்குடியில் நிகழ்ந்த மிக முக்கியமான வரலாற்றுத் தருணங்களை, இடர்களை, ஈடுசெய்யவே இயலாத பேரிழப்புகளை இப்பாத்திரங்களின் வாழ்க்கைக் கதையைத் தொடர்வதன் வழியாக நாம் காண்கிறோம். அது அவர்களை எப்படியெல்லாம் துண்டாடுகிறது, உருக்குலைக்கிறது, கொந்தளிக்க வைக்கிறது என்பதை நேரடியாகச் சொல்லாது அக தரிசனமாக வெளிப்படுத்துகிறது படைப்பு. தீவிர புனைவென்றாலே அது சமகாலத்தின் மனித வாழ்வியலில் இருந்து முற்றிலும் அந்நியப்பட்ட மேலானதொரு தளத்தில் மட்டுமே இயங்க வேண்டுமெனும் மயக்க நிலை ஏதுமற்ற, தரமான இலக்கியமென்பது சிக்கலான மொழியைக் கொண்டிருக்குமெனும் அபத்தமான ஊகத்தை முற்றிலும் மறுதலிக்கிற நடை எழுத்தாளர் யூசுப்புடையது. மிக எளிதாகத் தொடர முடிகிற எழுத்து, உரையாடல்களில் வட்டார வழக்கை மிக இலாவகமாய் எடுத்து அணைத்துக் கொள்கிறது. நேர்த்தி என்பது உள்ளடக்கம் சார்ந்ததுதானேயொழிய சிக்கலான மொழிப்பிரயோகம் அல்ல என்று தீர்க்கமாய் சொல்கிறதுநுழைவாயில்’. 

***

பிரதான கதைமாந்தர்கள் லிஸ்டன், செல்வம், ஷெரிப் பாய் மற்றும் சித்திக் எனும் போதிலும் புதினத்தின் கணிசமாய் நிறைந்திருப்பது செல்வத்தின் கதை தான். நான்கு சகோதரிகளுடன் பிறந்து, தந்தை தங்கப்பாண்டியாலேயேதரித்திரியம் பிடிச்ச பயஎனச் சொல்லப்படுகிற பரிதாப வாழ்க்கையே செல்வத்தினுடையது. வறண்ட வாழ்க்கையில் நட்பின் நிழலே அவனை ஆசுவாசங்கொள்ளச் செய்கிறது. இளவயதில் சொந்த ஊர் கூட்டாம்புளியில் சமவயதினனான செங்கல்ராஜுடன் துளிர்க்கிற நட்பு அவனது பால்யத்தில் வீசுகிற வசந்தமாகிறது. ஆயினும் காலவெள்ளத்தில் அது துடைத்தெறியப்பட்டு மீண்டும் வெறுமை. பிழைப்பிற்காய் தூத்துக்குடி வந்த இடத்தில் அண்ணன் மாசாணத்தின் உறவு அவ்வெறுமையை நிறைக்கிறது. வெறும் நண்பராக அல்லாமல் அவரை தந்தையின் ஸ்தானத்திற்கு மனதிற்குள் ஏற்றி வைத்திருக்கிற செல்வத்திற்கு , பிறிதொரு காலத்தில் அவரது இல்லாமை ஈடு செய்து இட்டு நிறைக்கவியலாததாய் இருக்கிறது. கடும் உழைப்பாளியான இளைஞன் செல்வம், மாசாணம் இல்லாமல் திக்கற்றுத் திரிகிற சமயத்தில், மிகச் சரியாய் அவனது வாழ்க்கைக்குள் நுழைகிறார் கருத்தப்பிள்ளை, வாழும்வரைத் தொடரும் நட்பாய். மாசாணத்தின் நட்பால் செல்வம் வாழ்க்கையைக் கற்றுக் கொண்டாலும், அதில் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்க, பின்னால் இணையும் கருத்தபிள்ளை அவன் கற்ற சில சரியற்றவையை வடிக்கட்டிட உதவுகிறார். செல்வம் முழுக்க முழுக்க மருத நிலத்தானாகவே நமக்குக் காணக் கிடைக்கிறான்

லிஸ்டனின் கதைவழியே நாம் நெய்தல் நிலத்தோடு பிணைந்த சமகாலத்தின் கப்பல் சார்ந்த தொழிலை அதன் மாறிப்போன போக்குகளோடு அறிமுகமாகிக் கொள்ள வாய்க்கிறது. ஷிப் சாண்ட்லிங் (Ship Chandling) தொழில் குறித்த விரிவான சித்திரம் நமக்கு லிஸ்டன் கதை மூலமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. துறைமுக நகரங்களுக்கேயான பிரத்தியேகத் தொழில் இது. துறைமுகத்திற்கு வந்து நிற்கிற வெளிநாட்டு கப்பல்களில் இருக்கிற பணியாளர்களுக்கு அங்கு இருப்பது வரை உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை குறையின்றி கவனித்து பூர்த்தி செய்து கொடுப்பதே இத்தொழில். அதன் நெளிவு சுளிவுகளை பணிக்குச் சேருகிற லிஸ்டன் வாயிலாக நாமும் விளங்கிக் கொள்கிறோம். ஒரு விதத்தில் இக்கதையின் போக்கே அதனியல்பில் தூத்துக்குடி நகர் சார்ந்த பல நிலவியல் தகவல்களை வாரி வழங்கிடவும், வரலாறெனும் பிரம்மாண்ட திரைச்சீலையை பின்னால் கட்டிவிட்டு அதில் காட்டப்படாத சித்திரங்களையும் சேர்த்து வரைந்து வைத்து இந்நிலத்தின் முகத்தை இன்னும் பொலிவுறக் காட்டிடும் வாய்ப்பாகவும் இருக்கிறது

முன்சொன்னது போல ஷெரிப் பாய் பாத்திரமேஏன் சித்திக் பாத்திரமுமேபுனைவிற்கு ஊடாக வரலாற்றின் தந்திகளை மீட்டிட தோதான கைகள் என்பதற்கேன்றே படைக்கப்பட்டவை தான். மொழி ஆளுகை புதினத்தில் நம்மை ஈர்க்கிற இன்னொரு அம்சமென்பதையும் சொல்ல வேண்டும். எளிமையான நடை குறித்து முன்னமெ சொல்லி இருப்பினும் அதன் பயன்பாட்டில் இருக்கும் நுண்மைகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. அதாவது லிஸ்டனின் கதை சொல்லும் மொழியில் கிறிஸ்தவத் தமிழின் வாசம் மணக்க, செல்வத்தின் கதை சொல்லும் போது வட்டார வழக்கில் தோய்கிறது. மாணவப் பத்திரிக்கையாளர் சித்திக் கண்வழியே நகரும் கதைப்பகுதிகளிலோ செறிந்த மொழியாக உருமாறும் அது, ஷெரிப் பாய் கதைசொல்லியாக (அல்லது வரலாற்று ஆய்வாளராய் /ஆசிரியராக) மாறுகிற போதெல்லாம் செறிவோடு கூடவே தத்துவார்ந்த நடையும் ஒட்டிக் கொள்கிறது. பாத்திரங்களின் மொழிப் பிரயோகங்களைத் தாண்டி ஆசிரியரின் சுயமொழியும் தனித்துத் தெரிகிறது என்பதையும் வாசிப்பனுவத்தில் கண்டுணர முடிகிறது

ஒரு வகையில் ஆவணப் புனைவு பாணியை கையாள்வது கத்தி மேல் நடப்பது போன்றதே. புனைவில் கலக்கப்பட்ட தகவல்கள் மிகுந்தால் அது அபுனைவாக மாறி வாசிப்பின்பத்தை புளிப்பேறிய பழமாக்கிவிடும். தவறான இடங்களில் திணிக்கப்பட்டிருப்பின் அது தரவு என்பதைத் தாண்டி கதைவாசிப்பினூடே வேகத் தடையாகவே மாறியிருக்கும். சிற்சில இடங்களை தவிர்த்துப் பார்க்கையில் நாவலில் கதையோட்டத்தில் மிகப்பெரும்பான்மையான இடங்களில் வரலாறும் புனைவும் கைகோர்த்தே செல்கின்றன. சில இடங்களில் (குறிப்பாக செல்வம் மற்றும் லிஸ்டனின் கதையோட்டங்களின் வேகம் அதிகரித்து ஆர்ப்பரிக்கிற புதினத்தின் பிற்பாதியில்) மட்டுமே ஆவல் மேலீட்டால் தகவல்கள் அதிகமாகி புனைவை விழுங்கிச் செரித்து விடுகின்றன. எழுபதுகளின் எண்பதுகளின் தமிழக மாநில அரசியல் மீதும் கழக அரசுகள் மீதான விமர்சனங்கள் கூர்மையான மொழியில், கறாராக முன்வைக்கப்பட்டிருக்கிற இடங்களில் எல்லாம் இது காத்திரமான அரசியல் நாவலாகவும் மிளிர்கிறது. ஷெரிப் பாய் பாத்திரம் வழியாக நமக்கு இதுவரையிலான சொல்லப்பட்டிருக்கும் வரலாற்றை விமர்சனப் பார்வையோடு எதிர்கொண்டு அதனை மறுஆக்கம் செய்கிற முனைப்பையும் கண்கூடாய் பார்க்க முடிகிறது

பிரதான கதாபாத்திரங்கள் முதல் சில அத்தியாயங்களிலேயே நமக்கு அறிமுகமாகி விடுவதால், அவர்களின் பாத்திர வார்ப்பு ஒரு வேளை ஆசிரியர் மதநல்லிணக்கத்தை முன்னிறுத்தும் நோக்கில் படைத்திருக்கிறாரோ எனும் எண்ணம் எழுந்தாலும், கதை வளர வளர இது மனிதர்களின் கதை அல்ல மாறாக அவர்கள் வாழ்க்கை வழியே சொல்லப்படுகிற இந்நிலத்தின் கதை என்பதை உணர ஆரம்பிக்கையில் தெளிவு பிறக்கிறது. ஒரு நிலம் என வருகையில் அங்கு சகலரும் தானே வாழ்வர். நிலமகள் ஒரு போதும் எவரையும் ஒதுக்குவதோ, பாரபட்சமாக பாவிப்பதோ இல்லையே! அதனைச் செய்வது மனிதர்கள் தாம்

நாவலின் முடிவு நாடகீயத் தருணமே எனினும், கதை துவங்கிய புள்ளியிலேயே முடிவும் சரியாய் இணைக்கப்படுவதற்கானபடைப்புருவாக்கத்தின் கட்டமைப்பு ஓர்மைக்கானஒரு உத்தியாகவே அதனைக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. படைப்பு மங்களத்தில் துவங்கி மரணத்தில் முடிகிறது. எல்லாம் கலந்ததே மானுட வாழ்வென்றிருக்க, அதன் ஒவ்வொரு மடிப்பையும்அது சமூக, கலாச்சார, பண்பாட்டு, அரசியல் தளங்களில் எதிர்கொள்கிற அலைக்கழிதல்களையும், சறுக்கல்களையும் அதனைத் தொடர்ந்த மீட்சியையும் ஒவ்வொரு (அதற்கு மிகப் பொருத்தமான) கதாபாத்திரத்தின் வாழ்க்கைக்கதையினை முன்வைத்து, சீர்தூக்கிப் பார்த்து அலசி ஆராய்கிறநுழைவாயில்நாவல் அவசியம் பரவலாக வாசிக்கப்பட வேண்டிய ஆக்கம். கலை கலைக்காவே எனும் சாய்வு கொண்ட வாசகராக அல்லாமல் கலை சமூகத்திற்கானது எனும் கருத்தியல் கொண்டவராக நீங்கள் இருப்பீர்களேயானால், ‘நுழைவாயிலுக்குள்நுழைந்தது குறித்து நீங்கள் ஆனந்திப்பீர்கள்

நுழைவாயில் (நாவல்), 
ஆசிரியர் : முஹம்மது யூசுப், 
வெளியீடு : யாவரும் பதிப்பகம்
பக்கங்கள் : 460
விலை : ரூ. 560

**********

[email protected]

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button