ஆக்டன் நாஷ் (Ogden Nash)- இயைபு, வார்த்தை ஜாலம் – ஆர் சீனிவாசன்
கட்டுரை | வாசகசாலை
கவிதை உணர்ச்சிகளுக்கு மட்டும் வடிகாலாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அமெரிக்க கவிஞர் ஆக்டன் நாஷ் (1902 -1971) எளிய நடையில் எல்லா வயதினருக்கும் எழுதியவர். லேசான லய வரிகள் அவருடைய சிறப்பு. அவர் கவிதைகள் தீவிர நடையை தவிர்த்த ஆங்கில வார்த்தை ஜாலங்கள்.
என் காதலிக்கு (To My Valentine)
பாட்டுப்பறவை பூனையை வெறுப்பதைவிட
குற்றவாளி தடயங்களை வெறுப்பதைவிட
அக்சீஸ் நாடுகள் அமெரிக்காவை வெறுப்பதைவிட
நான் உன்னை நேசிக்கிறேன்
தரைதட்டிய மாலுமி நீரை வெறுப்பதைவிட
பந்து வித்தைக்காரன் தள்ளலை வெறுப்பதைவிட
வீட்டம்மா எதிர்பாராத விருந்தாளியை வெறுப்பதைவிட
நான் உன்னை நேசிக்கிறேன்
ஆகாயத்து நட்சத்திரங்கள் மேல் ஆணை
பாதாளத்து நட்சத்திரங்கள் என்றொன்று இருந்தால், அதன் மேலும் ஆணை
பொய் வாக்குறுதிகளை எப்படி உயர்நீதிமன்றம் வெறுக்கிறதோ
அதை போல நான் உன்னை நேசிக்கிறேன்
எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை (A Caution To Everybody)
பறவையைப் பாருங்கள்
பறப்பதைக் கல்லாமல் நடப்பதைக் கற்றது
அழிந்து போனது
மனிதனைப் பாருங்கள்
நடப்பதை மறந்து
சிந்திக்காமல்
பறக்க கற்றுக்கொண்டான்
அழிந்து போவான்
ஆங்கில இயைபு வரிகளில் மழலைத்தனமான படைப்புக்களை எழுதினாலும் சில மெல்லிய உணர்வுப் பூர்வமான தலைப்புகளையும் தன் தனித்துவ பாணியில் எழுதியுள்ளார்.
முப்பதை அடைந்துவிட்டோமே என வருந்தும் பெண் (A Lady Who Thinks She Is Thirty)
தயக்கத்துடன் மிராண்டா எழுகிறாள்
பயத்துடன் சூரியனை நோக்குகிறாள்
இஷ்டமில்லாமல் ஒரு படி முன் வைக்கிறாள்
கண்ணாடியில் தன்னையே பார்க்கிறாள்
மிராண்டாவின் பார்வையில்
உதிரும் பழைய சுண்ணாம்பு
நேற்றிரவு இருபத்தொன்பது
இன்று காலை முப்பது
விடிவெள்ளியைப் போல ஒளிருபவள்
அந்தியொலிப் போல மின்னுபவள்
வெறித்த நாள்காட்டியை பார்த்து
ஏங்குகிறாள் மிராண்டா
மடப்பெண்ணே, பேதையே
கண்ணாடியை நெருக்கத்தில் வை
வருடங்களை சுழற்றும் நேரம்
அலங்கரித்து ரசிக்கிறது உன்னை
காலங்கள் உனக்கில்லை
நாள்காட்டிகள் பிற மனிதர்களுக்கு
முப்பது என்பது பொலிவின் இலக்கணத்திற்கு
ஒரு பொருட்டா சொல் மிராண்டா
இரவு முப்பதை பார்ப்பதில்லை
மெல்லிய இறக்கை மிராண்டா
குவளையை எடு; எனக்கு ஒன்று சொல்
வசந்ததிற்கு எத்தனை வயது?
இன்றைக்கு தேவாலயம் செல்லவில்லை (I Didn’t Go To Church Today)
இன்று தேவாலயம் செல்லவில்லை
தேவன் புரிந்துகொள்வான் என நம்புகிறேன்
அலைகள் அற்புதமாய் சுழல்கின்றன
கரையில் குழந்தைகளும் சுழல்கிறார்கள்
அவனுக்குத் தெரியும் என் வரவின் சுருக்கம்
வசந்தகால நீடிப்பின் அவகாசம்
அவனுக்குத் தெரியும் இன்று வரவில்லை என்றாலும்
நாம் இருவர் பேசிக்கொள்ள நிறைய நேரம் பின்னர் இருக்கும்
வெயில்காலப் பாட்டு (Summer Serenade)
இடி மேகங்களில் முழங்கும் காலம்
வழுக்கும் பயத்தில் நடக்கும் காலம்
சட்டை நனைந்து தொண்டை வற்றும் காலம்
அதுதான் அன்பே ஜூலை மாதம்
நடக்கும் புல்வெளி பாதத்தை சீண்ட
சிறு கோபம் எல்லையைத் தாண்ட
வானிலைக்காக நம் காதலைத் தள்ளிவைக்கலாமா ?
கரைய வேண்டுமென்றால் சேர்ந்தே கரையலாமா?
பேரம் (The Bargain)
செயின்ட் ஈவிற்குச் செல்லும்போது
ஏழு வாழ்வுடைய ஒருவனை பார்த்தேன்
ஏழு வாழ்வு
ஏழு மூட்டைகளில்
ஏழு மாடுகளைப் போல
அல்லது
ஏழு படிகளைப் போல
ஏழும் விற்பனைக்கென்றான்
அவற்றில் எது சிறந்தது தெரியாதென்றான்
ஏழில் எவற்றிலும்
“என்றும் சந்தோசம்” என்றான்
ஏழையும் வாங்கினேன்
சாமர்த்தியசாலி என என்னையே நினைத்தேன்
ஆனால் அவனின் கடைசி வார்த்தை
மறக்க முடியவில்லை எப்போதும்
“என்றும்” என்பது கடைசி அல்ல என்றான்
இவரது சில படைப்புகள் அமெரிக்க செவ்வியல் இலக்கியத்தின் முக்கியமான படைப்புகளாக கருதப்படுகிறது.
திருமணம் (I Do, I Will, I Have)
நான் எவ்வளவு பெரிய ஞானி என்றால்
ஆட்டாளத்துக்கு சொல்லி
ஆட்டாளம் மோட்டாளத்துக்கு சொல்லி
மோட்டாளம் நொண்டிக் கழுதைக்கு சொல்லி
நொண்டிக் கழுதை வெட்டியானுக்குச் சொல்லி
என் சவப்பெட்டியை செய்துவிட்டேன்
ஏனெனில்
திருமணத்தின் விளக்கத்தைச் சொல்லப் போகிறேன்
குடிகளில் காரை, தூத்து, மன்னார் என்பது இருப்பது எனக்குத் தெரிந்தது போல
எனக்குத் தெரியும் திருமணம் என்பது
ஜன்னலைத் திறந்தால் தூக்கம் வராத ஒருவருக்கும்
ஜன்னலை மூடினால் தூக்கம் வராத இனொருவருக்கும்
இடையேயான சேர்க்கை
ஜாக்கட்டிற்கும் பாக்கெட்டிற்கும் வித்யாசம் தெரியாதெனினும்
திருமணம் என்பது பிறந்தநாளை எளிதில் மறப்பவருக்கும்
அந்நாள் வரவை எதிர்பார்க்கும் இன்னொருவருக்கும்
இடையேயான சட்ட தர்ம ஒப்பந்தம்
தண்ணிக் குழாயில் அடைப்பில்லை, காஸ் பைப்பில் கசிவில்லை என்பவருக்கும்
நீர் சுழலில் மூழ்கி தவிக்கும் , மூச்சுத்திணறி சாக கிடக்கும்
இன்னொருவருக்கும் உள்ள ஒரு அனுபந்தம்
“ஜன்னல் பக்கத்தில் இருக்கும் என் தலை சீப்பை ஏடு, நனையப்போகிறது” என்ற ஒருவரின் சொல்லிற்கு
“கவலைப்படாதே மழைத்துளிகள் நேரேதான் விழுகிறது” என்று இனொருவரின் பதில்வருவது மிக இயல்பு
இதனால்தான் விவகாரத்தைவிட விவாகம் சுவாரஸ்யமானது
ஏனெனில் திருமணம் ஒன்றுதான்
அசைக்கமுடியாத தன்மைக்கும்
தடுக்கமுடியாத சக்திக்கும்
இருக்கும் ஒரே சங்கமம்
கணவனும் மனைவியும் விவாதிக்கட்டும் மறுக்கட்டும்
அதுதான் என் விருப்பம்
ஏனெனில் சிறுது உவர்ப்பு
வழக்கை படகிற்கு மிகச் சிறப்பு
கவிதை எழுதுவதை தவிர நகைச்சுவை நாடகங்களிலும், வானொலி நிகழ்ச்சிகளிலும் விருந்தினர் பாத்திரத்தில் நாஷ் நடித்துள்ளார். மிருகங்களைப் பற்றி அவரது படைப்புகள் ஆங்கில வார்த்தை ஜாலங்களாக அமைகிறது.
மின்மினிப்பூச்சி (The Firefly)
மின்மினிப்பூச்சியின் ஒளிக்கு
அறிவியல் பெயர் கிடையாது
பார்த்தவுடன் நினைப்பது “கண்ணைக் கட்டு”
தீயுடன் எறியும் பின்கட்டு
பூச்சி (The Fly )
ஈசன் ஈசலை ஈயை படைத்தான்
எதெற்கென சொல்ல மறந்தான்
கிருமி (The Germ)
மிக முக்கியமான ஜீவன் கிருமி
ஆனால், யானையை விட இடை கம்மி
பொதுவாக அது இருக்குமிடம்
உன்னைப்போல எல்லோரிடம்
குழந்தைப் போல தன் ஆசையை நிறைவேற்ற
நோயைத்தவிர வேறெதுவுமில்லை கரையேற்ற
குட்டி, உனக்கு இருமல் காய்ச்சல் தும்மலா
கிருமி உன்னிடம் இருக்கிறது மிகப் பல
முள்ளம்பன்றி (The Porcupine)
முள்ளம்பன்றியால் முள் தேய்த்த நாய்கள்
கடுப்படைந்தால் உண்டு பல காரணங்கள்
கண்ணாடித் துண்டொன்றின் மீது உட்காந்த முள்ளம் பன்றியை
பனிக்காலம் முழுவதும் பார்த்து சிரித்த நாய் பல உண்டு
கவிதைகளைப் பற்றியே கூட சில நையாண்டிகளை படைத்துள்ளார்.
திமிங்கலத்தை போல (Very Like A Whale)
இலக்கியத்தை இன்னும் மேம்படுத்த ஒரு சிறந்த வழி
ஆசிரியர்களை உவமை மற்றும் உருவக உபயோகிப்பை கட்டுப்படுத்தும் ஒரே வழி
ரோமானியர்கள் ஆகட்டும், கிரேக்கர்கள் ஆகட்டும், யாரே ஆகட்டும்
இருப்பதை இருப்பதைப் போல சொல்லாமல் மழுப்பி குழப்பி உழப்பி புரட்டி சொல்வது வழக்கம்
“அசிரியன் ஆடுகளின் மேல் ஒநாயைப்போல பாய்ந்தான்” என
எதற்காகச் சொல்லவேண்டும் பிரபு பைரன்?
முதலில் பைரனிற்கு நிச்சயமாகத் தெரியும் அது ஒரு அசிரியன் அல்ல அது ஒரு படை என்று
சரி, அதிக வாதங்கள் மூளைச்சிதைவை ஏற்படுத்தும்
அவன் ஒருவனென்றே வைத்துக்கொள்வோம்
இருப்பினும் ஜொலிக்கும் பரிவாரங்களுடன் ஒநாயைப்போல ஏன் அவன் ஆட்டு மந்தையின் மேல் பாயவேண்டும்?
தெய்வங்களின் வரலாற்றிலும், உயர் சித்தாந்தங்களிலும் கூட
பரிவாரங்களுடன் ஒநாயைப்போல ஒருவன் வருவதைக் கண்டு
நற்குறிப்புக்கள் இல்லை நான் கவனித்ததுண்டு
இல்லை பிரபு பைரன் அவர்களே
அவன் ஓநாய் என நான் நம்ப அத்தாட்சிகள் வேண்டும்
நான்கு கால்களில் நடந்தானா? புசு புசு வென வால் இருந்ததா?
பெரிய சிவப்பு வாய்க்குள் பெரிய வெண்ணிற பற்கள் இருந்ததா?
நிஜத்தில் நான் நம்புவது “ஒரு பெரிய அசிரியப் படை ஹிப்ரூக்களின் மேல் பயந்தனர்” என்பது.
ஆனால் “ஓநாய்” “ஆட்டு மந்தை” போன்ற உவமை/உருவக-உருபை போடாமல் சொல்லும்போது
பிரபு பைரனின் கறி வேகாது.
இதனால் பழைய ஏற்பாட்டை படிக்கும் எவரும் இப்போது
அசிரியர்களை ஓநாயைக்கு ஒத்த ஒப்பனையையோடு நினைப்பதுண்டு
ஹோமரிலிருந்து கம்பர் வரை
எல்லோரும் செய்யும் பொது மறை
பெண்களை பூக்களென்றும்
ஆண்களை காளைகளென்றும்
பனி மழைக்குபின் “பனிக்கம்பளி” யென்றும்
ஓ! அப்படியா அடுத்தமுறை நீங்கள் “பனிக்கம்பளி”-க்கு கீழ் உறங்குங்கள்
நான் சாதாரண கம்பளிக்குள் உறங்குறேன்
பார்க்கலாம் யார் பிழைக்கிறார்கள் என்று
அதன் பிறகு தெரியும் நான் சொல்வது
உவமை, உருவகம் அதிகமாகிவிட்டதென்பது.
“சென்னெச்சரின் அழிவு” என்ற பைரனின் கவிதையில் இடம்பெறும் “அசிரியன் ஓநாய்யை போல ஆட்டு மந்தையின் மேல் பாய்ந்தான்” (“Wolf coming down on a fold “) என்ற உருவகத்தை நையாண்டி செய்யும் வண்ணம் இந்த படைப்பு அமைந்துள்ளது.
சமுதாய வர்ணிப்பிலும் நாஷின் பார்வையில் எளிய நகையுணர்வை வெளிப்படுத்துகிறது.
“நான் அறிய விரும்பா சக மனிதன்
எதற்கிருக்கிறான் என நினைப்பதுண்டு
தற்பெருக்கம் ஒன்றுக்கே வருத்தத்தோடு”
“இன்றைய செய்திகளின் போக்கு
கசப்பாய் இருக்கிறது எனக்கு
இதற்கு மேலும் மோசமாக முடியாது என நினைக்கும் போது
நடந்ததே மேல் என ஆகிவிடுகிறது
இதனால்தான் செய்திகளை வெறுக்கிறேன்
வேறெந்த காலத்திலும் நடந்ததில்லை தற்போதை போல்
முட்டாள்களுக்கு யோகம் பார் கடலை போல்”
“மனம் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும்” என்பதற்கு நாஷின் படைப்புகள் சிறந்த அத்தாட்சி!