இணைய இதழ் 104சிறுகதைகள்

ஊன்சோறு – ஜே.மஞ்சுளாதேவி

சிறுகதை | வாசகசாலை

மிழ் இலக்கிய உலகில் பெண் எழுத்தாளர் விலாசினியைத் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அவரே தன்னைப் பெண் எழுத்தாளர் என்று குறிப்பிட்டுக் கொண்டால் பிரச்சனை இல்லை. வேறு யாராவது, அதிலும் ஆண்கள் யாராவது சொல்லிவிட்டால் அவர்கள் காதில் இரத்தம் வந்துவிடும். ”எழுத்து என்பது பொது. அதில் ஆண் என்ன, பெண் என்ன?” என்பார். அவர் எழுதும் எழுத்தை விட சக எழுத்தாளர்களுக்குத் தரும் சாப்பாட்டு விருந்தினால் தமிழ் கூறும் நல்லுலகைக் கவர்ந்தவர். அவர் தரும் விருந்துக்கும் பெயர் உண்டு. ‘ஊன் உண்ணல்’.

’எப்படி இவருக்கு விருந்து வைக்கும் பழக்கம் வந்தது, இது நமக்குத் தோணாமல் போச்சே?’ என்று பெரியா பெருந்தலைகள் அங்கலாய்ப்பு கொள்ளும் அளவிற்கு இதனால் பெரும்புகழைப் பெற்றவர் இவர். இத்தனைக்கும் விருந்திற்காகத் தன் கையிலிருந்து செலவு செய்யமாட்டார். செலவு செய்யும் புரவலர்களைக் கண்டுபிடிக்கும் திறமை விலாசினிக்கு உண்டு.

பெரும் விருதுகளைப் பெற்றவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து வைப்பார். விருந்திற்குப் பிறகு அந்தப் படைப்பைப் பற்றி விமர்சனம் செய்கறேன் என்ற பெயரில் முழுக்கதையையும் வரிவிடாமல் நெடுங்கதையாகச் சொல்வார். கதை வேறு, விமர்சனம் வேறு என்று அவரிடம் சொல்ல வேண்டும் என்று வெகு வருடங்களாகத் துடித்துக் கொண்டிடுக்கிறவர்கள் பலர். நேரில் சொல்வதற்கான துணிவு யாருக்கும் வந்ததில்லை. அப்படிக் கேட்டால் அதையும் ஒரு கதையாக மாற்றி பிரபல இதழில் தொடராக எழுதிவிடுவாரோ என்று ஒவ்வொருவருக்கும் பயம் இருந்தது. விலாசினிக்குக் கோபம் வந்தால் மூக்குக் கண்ணாடியும் மூக்கு நுனிக்கு வந்துவிடும். கண்களை உருட்டியபடி, ’இன்னும் எதார்த்தவாத எழுத்திலேயே இருக்கிறீர்கள்’ என்று முறைத்து முறைத்து சரி செய்துவிடுவார். இத்தனைக்கும் இதுநாள் வரையிலும் அவர் எழுதியது இரண்டே இரண்டு புத்தகங்கள்தான். சொந்தக் கதை போல் மாற்றப்பட்ட தழுவல் கதை. உலக இலக்கியத்தில் இந்த இரண்டு நூல்களுக்கும் தனி இடம் உண்டு என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்.

எப்போது தான் எழுதத் தொடங்கினாலும் ஒரு சின்னப்பூச்சி தன் கைகளுக்கு அடியில் தானே வந்து சிக்கி உயிரைவிடும், அது களபலி போல அமையும் என்பதை உணர்ச்சி பொங்கக் கூறுவார். கேட்பவர்கள், ’நல்லவேளை, இந்தம்மா இரண்டு புத்தகங்களுக்கு மேல் எழுதவில்லை’ என நினைத்துக்கொள்வார்கள்.

எந்த நேரமும் தன்னைச் சுற்றி ஆட்கள் நிறைந்திருக்க வேண்டும் என்பதான நோய் அவருக்கு உண்டு. அதற்காக எந்நேரமும் இலக்கியப் புரணிகள் பேசுவார். உண்மையைப் போலவே பொய்யையும், பொய்யைப் போலவே உண்மையையும் பேசுவதில் தனித்திறமை விலாசினிக்கு உண்டு. அம்மா-மகள் பற்றிய புரணிதான் தற்போது இலக்கிய உலகில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ”தெரியுமாப்பா? அம்மா, மாதத்திற்கு நான்கு நாவல் எழுதுகிறாராம் – தன் மகளுக்காக இன்னும் முப்பது வருடத்திற்கு வெளியிடுவதற்கான கதைகளைத் தனித்தனியா எழுதி கவர்ல போட்டு வச்சிட்டாராம். எல்லோரும் மகளுக்கு இடம், வீடு, நகைன்னு சேர்த்து வைக்கிற மாதிரி இவரு கதைகளை சேர்த்து வைக்கிறார்ப்பா” என்று சொன்னதும், ”ஏன்ப்பா, இப்படி அநியாயமா பழி போடறீங்க?” என்று ஒருவர் கேட்டார். “அம்மா-மகள் இரண்டு பேரோட நாவலையும் எடுங்கப்பா, குட்டி நாய் கத்துறத ஒரே மாதிரி எழுதியிருப்பார் பாருங்க” என்று சொன்னார் விலாசினி. இதுபோல ஏராளமான இலக்கியப் புரணிகள் விலாசினியின் கைவசம் எப்போதும் இருக்கும்.

இப்படியான கல்யாண குணங்கள் நிறைந்த விலாசினி தன் வாழ்நாளில் செய்த ஒரே நல்ல விசயம் தன் சிஷ்யையாக வீரப்பேச்சியை உருவாக்கியதுதான். வீரப்பேச்சி உண்மையாகவே மொழிவளம் வாய்ந்த கவிதைகளை எழுதக்கூடிய இளம் படைப்பாளி. ”மலைச்சாரலும் மிளகு வாசமும் பிணைந்து கிடக்கும் கவிதைகள்” என்று மூத்த படைப்பாளி ஒருவர் மனம் திறந்து பாராட்டினார். கல்லூரி மாணவியாக அறிமுகம் ஆன வீரப்பேச்சியைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி கவிதை நூல் போட வைத்தார் விலாசினி. அதற்கு முன்னுரை எழுதிய விலாசினி, ’கவிதை உலகின் இளம் நட்சத்திரம்’, ’கவிதை மொழியின் நாக்கு இவர்’ என்றெல்லாம் பாராட்டி எழுதியிருந்தார். எந்த விருதுக்கும் பேச்சி தகுதியானவர் என்று விலாசினி எழுதியதும் வரிசையாகப் பல விருதுகள் வரத் தொடங்கின.

தான் பேசச் செல்லும் இடங்களில் எல்லாம் வீரப்பேச்சியின் கவிதைகளை அடைமழை போல் சொல்வார். ’கவிதை சொல்லி’ என்று விலாசினியைத் தமிழ் கூறும் நல்லுலகம் அழைத்து மகிழ்ந்தது. மற்ற கவிஞர்களின் கவிதையையும் பேசுவார். எந்தக் கவிதையைச் சொன்னாரோ அந்தக் கவிதையை எழுதிய கவிஞருக்கே குழப்பம் வந்துவிடும், ’இது நாம் எழுதிய கவிதைதானா?’ என்று, அந்த அளவிற்கு விலாசினி தன் சொந்த சரக்கைக் கலந்து தெளித்திருப்பார். சில சமயம் கவிதைகளின் அர்த்தம் தலைகீழாக மாறிவிடும்.

இப்படித்தான் ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கவிதையை வசிக்கும் வேகத்தில் மரத்தை வெட்டினால் என்ன தப்பு? என்று சொல்லிவிட்டார். முகறூலும் இலக்கிய உலகமும் கொந்தளித்தது. பிறகுதான் தன் தவறை உணர்ந்தார். ’உளுத்துப்போன மரத்தையும் செல்லரித்த மரத்தையும் வெட்டினால் என்ன தப்பு?’ என்று அறிக்கை விட்டு சமாளித்துக் கொண்டார். அதுவும் கூட சுற்றுப்புறச் சூழல் சார்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவரை நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல், ‘தள்ளி’ வைக்கத் தொடங்கியதும்தான் அறிக்கை விட்டார். அதில் தன்னை கவிஞர் என்பதோடு, ’சூழலியல் செயற்பாட்டாளர்’ என்ற அடைமொழியையும் சேர்த்துக்கொண்டார்.

இதை எல்லாம் பார்த்து அலறிப்போன விலாசினியின் கணவர், ’புரணி உடம்புக்கும் மனதுக்கும் ஆபத்து’ என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விலாசினி விடுவதாயில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கணவர் ‘ஆ’ வன்னா (ஆறுமுகம்) தன்னைப் பற்றி விலாசினி பொதுவெளியில் எதையும் எழுதவோ சொல்லவோ கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டார். பிள்ளைகள் இருவரும் அப்பாவை வழிமொழிந்தனர்.

வீரப்பேச்சியின் வளர்ச்சி கண்டு விலாசினியின் குடும்பமே பெருமிதம் கொண்டது. இதில் விலாசினியே எதிர்பாராமல் நடந்தது ஒரு திடீர் திருப்பம். தலைநகர் அறிவித்த பெரும் விருதுப் பட்டியலில் வீரப்பேச்சியின் பெயரும் வந்தது. அஞ்சாயிரம் பத்தாயிரம் விருதுகள் வரிசையாக வந்தபோதெல்லாம் வீரப்பேச்சிக்கு வாழ்த்துகள் வாழ்த்துகள் (’க்’ போடக்கூடாது என்பார்) என்று பதிவு செய்தவர், வீரப்பேச்சி பெரும் விருது பெற்றதும் பேரமைதி கொண்டார். அறிவிப்பு வந்ததிலிருந்து தானாக பேச்சியை அழைத்துப் பேசுவதைக் கைவிட்டார். பேச்சியே அழைத்தால் மட்டும் பட்டும் படாமல் பதில் அளிக்கத் தொடங்கினார். அதற்குப் பிறகு எந்த விழாவிலும் வீரப்பேச்சியின் கவிதைகளை மறந்தும் கூடச் சொல்லவில்லை.

விருது வாங்கிவிட்டு மூன்று நாட்கள் இரயிலில் பயணித்து விருதுக் கேடயத்துடன் தன் வீட்டிற்குக் கூடப் போகாமல் நேராக விலாசினியின் வீட்டுக் கதவைத் தட்டினாள் வீரப்பேச்சி. கதவைத் திறந்ததும் விலாசினி வெலவெலத்துப் போனார். உள்ளே அழைத்து தேநீர்க் கோப்பையைக் கையில் கொடுத்துவிட்டுப் பேச்சைத் துவக்கினார். ”இந்த விருது ஒரு சாபக்கேடு – இதுவரை இந்த விருதை வாங்கியவர்கள் அதற்குப் பிறகு எழுதவே இல்லை. எழுதினாலும் புகழ் பெறவில்லை. நீயே யோசித்துப் பார்” என்று ஒரு பெரிய பெயர்ப் பட்டியலை மடமடவென்று ஒப்பித்தார். அதைக் கேட்ட பேச்சிக்கு கண்களில் நீர் நிறைந்ததும்தான் திருப்தியுடன் அப்பேச்சை நிறுத்தினார் விலாசினி. பேச்சிக்கு தேநீர் உள்ளே இறங்கவில்லை. பாதிக் கோப்பைத் தேநீருடன் பேச்சு வராமல் தலையை மட்டும் அசைத்து விடைபெற்று வெளியே வந்தாள்.

வீரப் பேச்சி விருது வாங்கியிருப்பதால் இம்முறை விலாசினியின் ‘ஊன் உண்ணல்’ விருந்து தடபுடலாக இருக்கும் என்று எல்லோரும் எதிர்பர்த்திருந்தார்கள்.

“கொஞ்சம் கவிதை பாடுவோம்!

கொஞ்சம் கதை பேசுவோம்!

நிறைய ஊன் உண்போம்!

நிறைய தேறல் குடிப்போம்!”

என்று பதினைந்தாம் தேதி விருந்தின் அழைப்பிதழ் வெளியானது. அதில் வேறு பிரிவில் விருது வாங்கியவரின் பெயர் மட்டும் இருந்தது. பேச்சியின் பெயர் இல்லை. அழைப்பிதழைப் பார்த்தவுடன் விலாசினியின் கணவர், ”விலாசி, நீ செய்வது கொஞ்சம் கூட சரியில்லை. உன் பேட்டைக்காரன் மனநிலையை மாற்று. பேச்சியையும் விருந்துக்கு அழை. அவள் நம் வீட்டில் வளர்ந்த குழந்தை. அவள் வந்து ஒரு வாய் சாப்பிட்டால் உனக்கு என்ன குறைந்துவிடும்?” என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அழுத்தமாக அவரை முறைத்துப் பார்த்ததோடு எதுவும் பேசவில்லை.

விருந்து அறிவித்திருந்த முந்தைய நாளில் பெய்யத் துவங்கிய மழை நான்கு நாட்கள் கழித்து ஒய்ந்தது. எல்லாப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. விலாசினியின் வீட்டைச் சுற்றிலும் ஒரு ஆள் உயரத்திற்குத் தண்ணீர் தேங்கியது. விலாசினியின் வீட்டுச் சமையலறையில் முக்கால் அடித் தண்ணீர் தேங்கியிருந்தது. விருந்து அறிவித்த நாளில் விலாசினியின் வீட்டிற்குள் ஒருவரும் நுழைய முடியவில்லை.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button