
ஒரு சலனம் தோன்றி நான் கண் விழித்தேன். இருளாக இருந்தது. வாயைத் திறந்தேன். இப்போது உருவங்கள் தெரியத்துவங்கின. நீல வானம் ஒரு போர்வை போல் மூடிக்கொண்டிருக்க, மரங்களும், செடிகளுமாக அந்த வனாந்திரம் வளர்ந்திருந்தது.
நான் வீற்றிருந்த மலைச் சிகரமும் அதைச்சுற்றியிருந்த காடும் தெரிந்தது. மனிதர்கள் வேட்டை இனமாக இருந்த காலத்திலிருந்தே இந்தச் செடிகளும், மரங்களும் இருந்திருக்க வேண்டும். மனிதன் முதலான விலங்குகள் இந்த மரங்களிலும் செடிகளிலும் தனக்குத் தேவையான சத்துக்களைப் பெற்றிருக்க வேண்டும். இப்போதிருக்கும் மாமரம் முற்காலத்தில் வேறொரு மரமாகவும் இருந்திருக்கலாம். காலப்போக்கில் மரங்கள் தாம் மாறியிருக்கின்றனவே ஒழிய அவற்றிலிருந்து பெறப்படும் பலன்கள், சத்துக்கள் ஒன்றாகவே தான் இருந்திருக்கின்றன. இயற்கையின் பேரொழுங்கை என்னவென்று வியப்பது என்று சிந்தனை போனது எனக்கு.
காட்டினூடே எட்டிப் பார்த்தேன். பல மைல் தொலைவில் இருந்த அடிவாரத்தில் ஒரு வயதானவர் ஒரு முதலையுடன் என்னைப் பற்றி விசாரிப்பது தெரிந்தது.
முதலையா!? அதுவும் மனிதனுடனா?!
மனிதன், தான் ஒரு காலத்தில் வெளிப்படுத்திய மாசற்ற விலங்கிய இயல்புகளை முழுவதுமான மீட்டெடுத்துவிட்டானா என்றெண்ணி ஒரு கணம் அதிர்ந்தேன். பின்னர் தான் அது முதலையே அல்ல; முதலை போல் ஊர்ந்து வரும் இன்னொரு மனிதன் என்பது புரிந்தது. அவன் ஒரு முதலை போலவே நான்கு கால்களில் ஊர்ந்தான். முதுகுத்தண்டிலும், நரம்புகளிலும் அவனுக்கிருக்கும் சிக்கல் என் கண்களுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. மனிதர்கள் என்ன பேசினாலும், எத்தனை தொலைவிலிருந்தாலும் கேட்கும் ஆற்றல் எனக்கு இருக்கிறது. அதைப் பயன்படுத்தவேண்டிய சூழல் ஒன்று சட்டென முளைத்தது.
“அவரைப் பார்க்க வேண்டும். என் மகனுக்கு உடல் நலமில்லை. எத்தனையோ வைத்தியம் பார்த்தாகிவிட்டது. எதுவும் வேலை செய்யவில்லை” என்றார் அந்தப் பெரியவர் அடிவாரத்தில் இருந்த ஒரு கடைக்காரரிடம்.
“அவர் என்று இங்கு யாரும் இல்லை.. உங்களுக்கு யாரோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்” என்றுவிட்டுக் கடந்தார் அந்தக் கடைக்காரர்.
என்னைத்தான் சுற்றுவட்டாரத்தில் ‘அவர்’ என்று அழைப்பார்கள். எனக்குப் பெயரே இல்லை. தேவைப்பட்டதே இல்லை. சுருக்கமாகச் சொல்வதானால், நான் ஒரு அமானுஷ்யன். என் இருப்பு குறித்து உலவுவதெல்லாம் செவிவழிக் கதைகளே. பல நூற்றாண்டுகளாக உலவும் செவி வழிச்செய்திகளுக்கு நான் ஒருவனே மூலம். காரணகர்த்தா. நான் அமானுஷ்யனாக உணரப்படுவதற்கும் அதுவே காரணம். ஒரு உயிர் பல நூற்றாண்டுகளாக அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட மலை உச்சியில் தோன்றினால் அமானுஷ்யனன்றி வேறு என்ன? ஆனால், இந்தக் கதைகளை நம்பி என்னை நாடி வரும் ஒரு சிலரை நான் ஏமாற்றுவதில்லை. என் இருப்பை நம்பாத பல்லாயிரம் கோடி பேருக்கு நான் வெறும் ஒரு கட்டுக்கதையாகவும், நம்பும் ஒரு சிலருக்கு நான் ஒரு அமானுஷ்யனாகவும் இருப்பதையே நானும் விரும்புகிறேன்.
அவருக்குச் சொல்லப்பட்டது ஒரு தேர்வு. வழமையாக என்னை நாடி வரும் அத்தனை பேருக்கும் அப்படித்தான் சொல்லப்படும். காத்திருக்க வைக்கப்படும். யார் என்னைத் தீர்மானமாக நம்புகிறாரோ அவரே என்னை அண்ட இயலும். பொறுமையற்றவர்கள் பாதியிலேயே நம்பிக்கையிழந்து திரும்பிவிடுவார்கள். அவர்கள் குறித்து எனக்கு அக்கறை இல்லை.அவர்கள் காரியவாதிகள். எதன் மீதும் முழுமையான நம்பிக்கையை அர்ப்பணிக்க இயலாதவர்கள். எல்லாவற்றிலும் தன் முன்னிலையையே கோருபவர்கள். அவர்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் அவர்களாகவே கண்டடைவதில் மட்டுமே அமைதி காண்பவர்கள். அவர்களை நான் கையாளாமல் இருப்பதே உசிதம்.
நான் கண்களை மூடும் முன் அவர் தன் மகனுடன் ஒரு மரத்தின் கீழ் அமர்வதைப் பார்த்தேன். பிற்பாடு என் இதழ்களை மூடினேன். கண் இமைகளையும் தான்.
அதன் பிறகு ஒரு வார காலம் கடந்திருக்கும். நான் மீண்டும் கண்கள் விரித்து, இதழ்களை விரிக்கையில் தொலைவில் அந்தப் பெரியவர் இன்னமும் அதே மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். பின் அவர் எழுந்து அருகாமையில் இருந்த கடலை விற்கும் கடைக்குச் சென்றார்.
“ஐயா, அவரைப் பார்க்க வேண்டும். “ என்றார் அந்தப் பெரியவர்.
“வந்து எத்தனை நாளாகிவிட்டது? அப்படி யாரும் இங்க இல்லை ஐயா.. நீங்கள் வந்த வழியே போய் விடுங்கள்” என்றார் கடைக்காரர்.
“எங்கே செல்ல? எல்லா வைத்தியமும் கைவிட்டாகிவிட்டது. உடல் என்பது பல உறுப்புகள், நரம்புகள், எலும்புகள் கொண்ட ஒரு தொகுப்பு. ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனி மருத்துவர்கள். என் மகனின் உடலில் இந்த அமைப்பில், எங்கோ குறை இருக்கிறது. ஒவ்வொரு உறுப்புகளுக்கான தனித்தனி மருத்துவர்கள் அனைவரும் ஒன்றிணைவதும், ஒரு உடலின் எல்லா உறுப்புகளும், நரம்புகளும், எலும்புகளும் ஒருங்கிணைவதும் சமமல்ல என்பதை மிகவும் தாமதமாக மிகப்பல பொருள் இழப்புகளுக்குப் பின்னரே உணர்ந்துகொண்டேன். அந்த ஒன்றிணைவில் தான் தீர்வு இருக்குமென்று நான் நம்புகிறேன். அது, பிரபஞ்ச இணைப்புக்கு சமமானதென்று கணிக்கிறேன். இவன் என் ஒரே மகன். என் மனைவி இவனைக் குறித்த கவலையிலேயே இறந்துவிட்டாள். என் மகன் உடல் நலம் பெறுவதில் தான் என் வாழ்க்கையே இருக்கிறது. கடவுளைத் தரிசிக்க முடியவில்லை என்றால் அந்த முயற்சியிலேயே உயிர் விடுவது என்ற முடிவில் தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம்” என்றார் அந்தப் பெரியவர்.
அந்த பதிலில் என்னைச் சந்திக்க அவருக்கு இருக்கவேண்டிய புரிதலும், முதிர்ச்சியும், தயாரிப்பும் இருப்பதாகவே எனக்குப் பட்டது. அதையே அந்தக் கடைக்காரரும் உணர்ந்திருக்க வேண்டும்.
“மலை உச்சியில இருக்கிறார் அவர். நடந்து சென்றால் உச்சியை அடைய நேரமாகலாம். என் குதிரை வண்டியைத் தருகிறேன். கவனம்; அவர் முகத்தை நீங்கள் ஏறிட்டுப் பார்க்கக் கூடாது. எக்காரணம் கொண்டும் பார்க்கக் கூடாது” என்ற அந்தக் கடைக்காரர் தன் குதிரை வண்டியை வருவித்தார்.
பெரியவர் தன் மகனை அந்த வண்டியில் ஏற்றினார். அது ஒரு சவத்தை இருவராகத் தூக்கி வண்டிக்குள் திணிப்பதைப் போலிருந்தது. பின் அந்தப் பெரியவர் வண்டியில் ஏறி அமர்ந்தார். கடைக்காரர், செல்லும் வழியெங்கும் பசிக்கு உணவும், அருந்த நீரும் வண்டிக்குள் எடுத்து வைத்தார். குதிரை வண்டி மலை மீது அமைந்த ஒற்றையடிப்பாதையில் ஏறத்துவங்கியது.
பிரபஞ்சத்தினுள் ஆழ முங்க வேண்டுமென்ற உந்துதல் அடைந்தேன். கண்களை மூடினேன். பிற்பாடு என் இதழ்களையும் மூடினேன்.
சரியாக மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்கள் அந்தக் குதிரை வண்டியில் மலை உச்சியை அடைந்தபோது நான் என் குடிலில் தான் இருந்தேன். சனிக்கிரகத்தையும், அதை சுற்றி அமையப்பெற்ற வட்டங்களையும் நான் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன். என் இதழ்கள் திறந்திருந்தன. அப்போது என் குடிலுக்கு வெளியே குரல் கேட்டது.
கிராமத்தவர்களுக்கு அவர்களின் பார்வையை மறைக்கும் மரங்களால், காடுகளை ஊடுருவி எதையும் பார்க்க இயலாது. ஆனால், எனக்கு அப்படி அல்ல. மான்களுடன் வளர்ந்தவன் நான். மான்கள் உண்டதையே உண்டவன் நான். மான்களுக்கு துல்லியமான பார்வையில் சனிக்கிரகம் கூட தென்படும். மலையின் உச்சியில் இருந்தபடி, அடிவாரத்தில் நகரும் ஒரு சிறிய எலியையும் அவைகளால் காண இயலும்.
நான் எழுந்தேன். முதற்கண் ஒரு துணியை எடுத்து மூக்கும் வாயும் செவிகளும் மட்டும் வெளியே தெரியும் வண்ணம் முகத்தை துணியால் இறுகக் கட்டினேன். இருளாக இருந்தது. இதழ்களை விரித்தேன். கண்களைத் திறந்தேன். இப்போது என்னால் பார்க்க முடிந்தது. மெதுவாக குடிலை விட்டு வெளியேறினேன். நான் வழமையாக வந்தமரும் மரத்தடியை அடைந்தேன். அமர்ந்தேன்.
அந்தப் பெரியவரும், அவர் மகனும் தலை தாழ்த்தி நிலத்தைப் பார்த்தபடி என் முன்னே அமர்ந்திருந்தார்கள்.
“என் மகனுக்கு உடல் நிலை சரியில்லை…” என்று துவங்கியவரை இடைமறித்தேன்.
“நீங்கள் மலையடிவாரத்தில் கடைக்காரரிடம் பேசியதை நான் கேட்டேன்” என்றேன். அது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும். ஆயினும் அவர் ஏறிட்டுப் பார்க்காமல் நிலம் பார்த்தே அமர்ந்திருந்தார்.
“இவன் பிறந்ததிலிருந்தே இப்படித்தான் இருக்கிறான். எங்கே சென்றாலும் இவனுக்கென ஒரு சக்கர நாற்காலியையும் கூடவே கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. மனிதனாகப் பிறந்தவன் எதற்கு முதலை போல் நடந்து கொள்ள வேண்டும்? முதலை போல் இயங்க வேண்டிய நிர்பந்தங்கள் கொண்ட ஒருவனை ஏன் கடவுள் மனிதனாகப் படைக்க வேண்டும்? உலகில் எவ்வெவர்க்கோ எப்படியெப்படியோ பிள்ளைகள் பிறக்கிறார்கள். எனக்கு ஏன் இப்படி ஒரு மகன்? நான் என்ன பாவம் செய்தேன்? என் மனைவி இருந்தவரை, இவனைப் பார்த்துக்கொள்ளும் வேலையைப் பகிர ஒரு துணை இருந்தது. இப்போது, இந்தத் தள்ளாத வயதில் என்னையே என்னால் பார்த்துக்கொள்ள முடியாமல் இருக்கையில், இவனையும் பார்த்துக்கொள்வது மிக மிகக் கடினமாக இருக்கிறது. ஆயினும், நான் ஒரு நாளும் இவனைப் பார்க்காமல் விட்டதில்லை. படுக்கையிலேயே மலம் மற்றும் சிறுநீர் கழித்துவிடுவான். அப்படி அர்த்த ராத்தியிலும் நடந்துவிடும். நனைந்த ஆடைகளுடன் அவன் விடியும்வரை பொறுக்க வேண்டுமே என்றேண்ணி இரவாக இருந்தாலும் அவனைச் சுத்தம் செய்து, அவனின் ஆடைகளை மாற்றி விடுவது என் வேலையாகும். இப்படி தினம் தினம் நடக்கும். எனக்கோ பகலில் உறக்கம் வராது. இரவில் இவனின் நிமித்தம் உறக்கமே இருக்காது. நான் படும் பாட்டை வார்த்தைகளால் சொல்லி மாளாது” என்ற அவரது கண்கள் பனித்தன.
“என் தந்தையை என்னால் இனியும் கஷ்டப்படுத்த முடியாது. பாழாய்ப்போன உயிர் தன்னிச்சையாகப் பிரிய மறுக்கிறது. இல்லாவிட்டால் நான் என்றோ இறந்திருப்பேன். என் தந்தைக்கு அவரது தள்ளாத வயதில் என்னால் இத்தனை கஷ்டங்கள் இருந்திருக்காது. அம்மா இறந்த பிறகு அவரால் இன்னொரு பெண்ணை மணந்திருக்க முடியும். ஆனால், அவரோடு இணைந்து வாழ முன்வந்த பெண்களால் என்னை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. என்னையன்றி என் தந்தையால் தனக்கோர் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளவும் விரும்பவில்லை. இப்படி எண்ணப்பாடுகள் கொண்ட ஒரு தந்தை கிடைப்பது வரம். ஆனால், அப்படிப்பட்ட தந்தைக்கு சிரமங்களைத்தான் நான் தர வேண்டுமா? இதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இந்த இயற்கை ஏன் இப்படி மனிதர்களை ஒன்று சேர்க்கிறது. அவரை நான் இனியும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை” என்றான் அவரது மகன் கேவல்களுடன்.
“உங்கள் மகன் உடல் வளர்ச்சியாலும், அதைத் தொடர்ந்து கட்டமைக்கப்படும் குணாதிசயங்களாலும் ஒரு வினோதமான முதலையைப் போல் இயங்குபவன். பூமிக்கு இவன் ஒரு புத்தம் புதிய உயிரினமாகக் கூட இருக்கக்கூடும். ஆனால், அவ்விதமான ஒரு உயிரினத்தை மனித உடலுக்குள் திணித்து வைக்க முயல்வதைப் போலிருக்கிறது உங்கள் முயல்வுகள். இப்படி நீங்கள் செய்யத்தான் வேண்டுமா? “ என்றேன் நான்.
“கடவுளே, இது என்ன பேச்சு? எத்தனை மனக்கஷ்டத்துடன் நான் இருக்கிறேன். அது புரியாமல்…..” என்றவரது முகம் அனிச்சையாக, ஒரு வாதத்தை நிறுவுவதன் முன்னிட்டு உயர்ந்தது. அப்போது அவர் கண்கள் என் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தன.
“உங்கள் இதழ்கள்…. உங்கள் வாய்… அதனுள் பாம்பொன்று இருக்கிறது” என்றார் அவர் திகைப்பிலிருந்து மீளாதவராய்.
நான் இப்போது என் நெற்றியைச் சுற்றியிருந்த துணியை அகற்றினேன்.
“கடவுளே!! என்ன இது? உங்கள் கண்கள் எங்கே? வாய்க்குள் நாகம் ஏன்? அதைத் துப்பிவிடுங்கள். அது விஷம் வாய்ந்தது” என்றார் அவர்.
அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது. நான் சிரித்தேன். அதில் என் இதழ்கள் மேலும் விரிவடைந்தன. அவருக்கு என் வாயின் மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் என் கண்கள் இப்போது தெளிவாகப் புலப்பட்டன.
“அது….அது… சர்ப்பமல்ல… கண்கள்.. மனிதக்கண்கள்… ஆனால், அவை வாய்க்குள் எப்படி வந்தன?” என்றார் அவர் அரை மயக்கத்துடனும் திகைப்புடனும்.
நான் அந்தப் பெரியவர் மீது பலம் கொண்ட மட்டும் என் தலையால் மோதினேன். கண்களற்ற தலை அது. மிகவும் வலு வாய்ந்தது. நான் மோதிய வேகத்தில் அவர் நிலத்தில் சரிந்தார். நெஞ்சுக்கூடு அதிர்ந்திருப்பதை என்னால் பார்க்க முடிந்தது.
“ஆம். இந்த அமைப்புக்காகத்தான் என்னைப் பெற்றவர்களால் நான் காட்டில் தனித்து விடப்பட்டிருக்க வேண்டும்.” என்றேன் நான்.
“என் மகனை இங்கு அழைத்து வந்திருக்கக்கூடாது என்கிறீர்களா?” என்றார் பெரியவர்.
“இல்லை. மான்களால்தான் நான் பாதுகாக்கப்பட்டேன். மான்கள் தான் தாய்மை உணர்வுடன் என்னை வளர்த்தெடுத்தன. பிற மனிதர்கள் போல் கண்ணில் படும் கனிகளை என்னால் உண்ண முடியாது. ஏனெனில் மேலண்ணத்தில் கண்கள் இருக்கின்றன. நீர் அருந்தலாம். மான்கள் உண்ணும் சிலவகைப் பச்சிலைகள் உண்ணலாம். அப்போதுதான் என் வாய்க்குள்ளாக அமைந்த இந்தக் கண்கள் நான் உண்ணக்கூடிய உணவுகளின் மீது ஒரு வடிகட்டியாகச் செயல்படுவதை நான் உணர்ந்தேன். இந்த வடிகட்டியால், வடிகட்டப்பட்ட உணவால் என் பார்வை கூர்மை அடைந்தது. அந்தக் கூர்மையால், என்னால் பூமியில் இருந்தபடியே சனிக்கிரகம் வரை கூட பார்க்க இயலும். பல்லாயிரம் மைல் தொலைவில் நிகழ்வதைக் கூட கேட்கவும், உணரவும் முடியும். இதன் மூலம் நான் புரிந்துகொண்டது என்னவென்றால், சில பிரத்தியேக குணாதிசயங்களுக்கு சில இழப்புகள் தேவைப்படுகின்றன என்பதைத்தான். அந்த இழப்புகளால் தான் சில பிரத்தியேக குணாதிசயங்களைப் பெற முடியும் என்பதை நான் மிகத் துவக்கத்திலேயே விரைவாக புரிந்துகொண்டேன். என் கேள்வி என்னவென்றால், இந்தப் பின்னணியில், மனித உருவம் என்பது, எந்தெந்த இழப்புகளின் மீது கட்டமைக்கப்பட்ட ஒன்று? எவை எவற்றை இழந்து நாம் மனித உருவை அடைந்தோம் என்பது” என்றேன் நான்.
“பரிணாம வளர்ச்சியின் விளைவாகத்தானே நாம் இன்றிருக்கும் உருவத்தை அடைந்திருக்க முடியும்? பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு மைல்கல்லிலும் எதனையோ இழந்து தானே எதனையோ பெற்றிருப்போம் நாம்?” என்றார் பெரியவர்.
“அதாவது, ஒன்று இரண்டு மூன்று என்று படிப்படியாக முன்னகர்ந்து நூறை நெருங்கியிருக்கலாம் என்கிறீர்கள் அல்லவா?” என்றேன் நான்.
“அப்படித்தானே இருக்க முடியும்?” என்றார் அவர்.
“ஒருவேளை, நூறு என்ற இடத்தை அடைய, ஒன்று, இரண்டு, மூன்று என்று முன்னகர்ந்திருக்கலாம் அல்லவா?” என்றேன் நான்.
“அது எப்படிச் சாத்தியம்?” என்றார் அவர்.
“இப்படி யோசித்துப் பார்க்கலாம். பூரான், முதலை, சர்ப்பங்கள், பல்லி, ஆமை ஆகிய அனைத்தும் ஊர்வன தாம். ஒரு பூரானை எடுத்துக்கொள்ளுங்கள். அவைகள் முதலைகள் போல் பெரியதாக நீளமாக இல்லை; அதற்காக, பூரான்கள் ஒரு விலங்கினமாக முழுமையடையவில்லை என்று கொள்ள முடியுமா? ஒரு சிட்டுக்குருவியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பருந்தைப்போல் உடலோ, பலம் பொருந்திய இறக்கைகளோ இல்லை தான். அதற்காக ஒரு பறவையாக சிட்டுக்குருவிகள் முழுமையடையவில்லை என்று கொள்ள முடியுமா? அப்படி ஒரு வாதம் எத்தனை அபத்தமாக இருக்க முடியும்? ஆனால், ஊர்வன தோன்றிய காலத்தில் பூரான், முதலை ஆகிய இரு ஊர்வனவற்றுக்குமிடையில் உள்ள வேறுபாடு மரபணு ரீதியில் மிக மிக சன்னமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அந்த சன்னமான வேறுபாடு, காலத்தினூடே, பல தலைமுறைகளினூடே பரிணாம வேறுபாடடைந்து இப்போது அதனதனிடத்தில் முழுமையடைந்திருக்கின்றன. ஆக, இரண்டு முற்றிலும் வெவ்வேறான, அதனதனிடத்தில் முழுமையடைந்த உடல்களை உருவாக்க இந்த இயற்கைக்கு ஒரு மிகச்சிறிய வேறுபாடு மட்டுமே தேவைப்படுகிறது. காலம், அந்த வேறுபாட்டைத் தன் இயல்புக்கேற்றவாறு விஸ்திகரிக்கின்றது. அந்த ஒரு சன்னமான வேறுபாடு காலத்தின் போக்கில் ஒரு முழுமையான உயிராக பின்னாளில் உருப்பெருகிறது. ஆனால், இந்த இயக்கத்தில் ஒன்றை கவனிக்கிறீர்களா? பருந்துகளுக்கு உணவாவது சிட்டுக்குருவிகளுக்கு உணவாவதில்லை. இது சொல்வது என்ன? எலிகளும், பருந்துகளும் இருக்கும் உலகில் புழுக்கள் இருந்தால் சிட்டுக்குருவிகளும் நிச்சயமாக இருக்கும் என்பது தான் அல்லவா? எலிகளும், பருந்துகளும், சிட்டுக்குருவிகளும் இருப்பதே புழுக்கள் இருப்பதற்கான நிரூபணம் என்றாகிறது அல்லவா? ஆக, இயக்கமே பிரதானமாகிறது அல்லவா? இயக்கத்தின் வழிதான் ஆக்கம் பிரதானமாகிறது அல்லவா?” என்றேன் நான்.
பெரியவர் ஆமோதிப்பாய்த் தலையசைத்தார்.
“அப்படியானால், நூறு என்கிற எண்ணின் நிமித்தம் ஒன்று இரண்டு மூன்று என்று முன்னகர்ந்திருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது” என்றார் பெரியவர்.
“இதனால் தான் சொல்கிறேன். இயற்கை எல்லாவற்றையும் மிகவும் கூர்ந்து கவனிக்கிறது. அந்த அவதானிப்பு, பார்வையால் அல்ல, இயக்கத்தால் நடைபெறுகிறது. இயக்கமே பார்வையாகிறது. இயக்கமே ஒரு மிகச்சிறிய வேறுபாட்டை முழுமையான இன்னொன்றாக்குகிறது. ஒரு வேறுபாடு, அது எத்தனை சன்னமாக இருப்பினும், அதனையும் அதற்குரிய மதிப்புடனே இயக்கம் அணுகுகிறது. அதற்கேற்ற வாய்ப்பை வழங்குகிறது.” என்றேன் நான்.
“அப்படியானால், நான்? எனது மகன்? எங்கள் இத்தனை வருட கால காத்திருப்பு? இதற்கெல்லாம் என்ன பொருள்?” என்றார் பெரியவர்.
“எலிகளையும், பருந்துகளையும், சிட்டுக்குருவிகளையும் பார்த்துவிட்ட பின்னும், புழுக்கள் இருப்பது உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் உங்களை சுற்றியுள்ள வட்டத்தில் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டீர்கள். அந்த வட்டத்துக்கு அப்பால் நீங்கள் செல்லவே இல்லை. அறியாமையால் தான் இத்தனை காலமும் நீங்கள் தனித்தே போராடியிருக்கிறீர்கள். உங்கள் மகன் இந்த உலகில் தோன்றிய முதல் வினோதமான உயிர் என்று நீங்களாகவே அனுமானித்துக்கொண்டு விட்டீர்கள். வேறுபாடுகள் என்பதும், பிறழ்வுகள் என்பதும் இந்த இயற்கையின் இயக்கத்தின் பண்புகள்.” என்ற நான் இப்போது அவரின் மகனிடம் திரும்பினேன்.
அவன் நிலத்தையே பார்த்திருந்தான். அவனது முதலை உருவம் அவனைத் தலைதூக்க விடாது என்பதை நான் அறிந்தே இருந்தேன்.
“நிலம் பார்க்க விதிக்கப்பட்டவனே, நீ வேண்டுவது என்ன?” என்றேன் நான் அவனிடம்.
“நான் மனித உருவை அடைவேனா? அடைய என்ன வழி” என்றான் அவன்.
“நீ ஏன் எதைவிட்டு விலகி வந்தாயோ அதற்கு மீள்வது குறித்தே கவலை கொள்கிறாய்? எதற்கு நீ அருகாமையில் இருக்கிறாயோ, அது குறித்து ஏன் கவலை கொள்வதில்லை?” என்றேன் நான்.
அவனிடமிருந்து பதில் இல்லை.
“இது ஒரு உலகம் இல்லை. இங்கே பல உலகங்கள் உள்ளன. உன் பார்வைக்கேற்றவாறு உலகங்கள் மாறுபடும். நீ எதற்கு அருகாமையில் இருக்கிறாயோ அந்த ‘அருகாமை உலகம்’, அந்த அருகாமை உலகங்களில் மேலதிகமாகப் பொருத்தமான ‘மிக அருகாமை உலகம்’, நீ எதை விட்டு விலகி வந்துவிட்டாயோ அந்த ‘தொலைவிலிருக்கும் உலகம்’, அந்த தொலைவு உலகங்களிலேயெ மேலதிகப் பொருத்தமான ‘மிகத்தொலைவிலிருக்கும் உலகம்’, இவ்விதமே பொருத்தமான உலகம், மிகப்பொருத்தமான உலகம், தகுதிப்பட்ட உலகம், தகுதியற்ற உலகம் என்று உலகங்கள் பல வகைப்படும். இவற்றில் எந்த உலகம் உனக்குப் பொருத்தமானது என்பதை நம்மைத் தவிர வேறு யாரால் அறுதியிட்டுக் கூற முடியும்?” என்றேன். பின் மெல்ல நான் காட்டுக்குள் நகரத்துவங்கினேன்.
என் பின்னால் ஒரு முதலை போல் அவன் மட்டும் ஊர்ந்து வந்துகொண்டிருந்தான்.
சற்று நேரம் கழித்து குதிரையின் குளம்பொலி நெடு நேரம் எனக்குக் கேட்டது. தொடர்ந்து, “அவரைக் காணவில்லை. என் மகனையும் தான். வந்த இடத்தில் என் மகனைத் தொலைத்தேனே” என்று அந்தப் பெரியவர் புலம்பினார். நான் திரும்பிப் பார்த்தேன். பெரியவர் இப்போது மலையடிவாரத்தில் இருந்தார். கடைக்காரரிடம் கைகூப்பி நின்றிருந்தார்.
“உங்கள் மகன் குறித்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம். உங்கள் வாழ்வை இனிமேலாவது வாழுங்கள்” என்று அந்தக் கடைக்காரர் சொல்வது எனக்குத் துல்லியமாகக் கேட்டது.
******