
ஊரே உறங்கிப்போயிருந்தது. அவளுக்கு பொட்டுத் தூக்கம் கூட வரவில்லை. கண் அநியாயத்திற்கு காந்தியது (எரிச்சல் தந்தது). புரண்டு புரண்டு படுக்க, ஒரு சிறு நொடி கண் அயர்ந்தது. மீண்டும் விழித்துக் கொண்டது. மனம் உறங்காமல் எப்படிக் கண் உறங்கும்? மனம் தான் கொதிநிலையின் உச்சத்தில் இருந்தது அவளுக்கு.
வாழ்க்கை பல வேளைகளில் பந்தயம் போலே இருக்கிறது
‘எவ்வளவு பணம் கட்டி படிக்க வச்சேன். இப்படி குறைச்சு மார்க் வாங்கிட்டாளே’
‘பையன எத்தனை லட்சம் செலவு பண்ணி படிக்க வச்சிருக்கோம். பெரிய இடமா பாத்து முடிச்சா, போட்ட காசுல பாதியாச்சு எடுத்தாப்புல ஆச்சுல’
‘எரநூறு பவுன் நகை போடுறாங்க. கையில லட்சத்தில கொடுக்கிறாங்க. அதுக்கு தக்கன எடமா பாப்பாங்கல்லா’
குதிரைப் பந்தயத்தில் குதிரையின் மேல் பணம் கட்டியிருப்பவனின் மனநிலையை ஒத்த மனநிலைகள். யார் பள்ளியில் அதிக மதிப்பெண் என்பதில் ஆரம்பிக்கிற பந்தயம், யாருக்கு முதலில் வேலை வாய்க்கிறது, திருமணம் நடக்கிறது, குழந்தை பிறக்கிறது என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இடுகாட்டிற்கு போவதைத் தவிர்த்து அனைத்திற்கும் இங்கு முண்டியடித்தல் தான்! அவரவருக்கான இடத்தை ஏற்றுக்கொள்ள, மனதார அதனோடு இசைந்து கொள்ள யாருக்கும் விருப்பமில்லை. எல்லோருக்கும் முதல் இடம் மட்டுமே விருப்பமானதாக இருக்கிறது. குதிரைப் பந்தயத்தில் ஏதேனும் விதிகள் இருக்கக்கூடும். ஆனால், மனிதர்களின் பந்தயம் விதிமுறைகள் அற்றது. ஜெயிக்க வேண்டுமென்பதே ஓரே விதியாக இருக்கும் பந்தயம். ஜெயிப்பதற்காக நியதியின் எல்லைகளை மீறுவதற்கு ‘சாமர்த்தியம்’ என்று பெயர் வைத்து நடத்தப்படும் பந்தயம். மெத்தப் படித்தவர்கள் அதனையே ‘கிளவர்’ என்று வேறு பெயரில் குறிப்பிடுகிறார்கள்.
வள்ளிக்கு மனம் படபடத்தது. இந்தப் பந்தயத்தில் தான் ஒவ்வொரு நாளும் பின்னுக்குத் தள்ளப்படுவதாய் உணர்ந்தாள். ‘ச்சீ’ இப்படியும் ஜெயிக்க வேண்டுமா என்ன? சுய ஆத்மாவின் ஒரு சிறு ஓரத்தில் கூட நனைத்து விட முடியாத பொய்யான வெற்றிகளின் களிப்பில் திளைப்பவர்களின் முகங்களை நினைத்துப் பார்க்கையில் அவளுக்கு உமட்டிக் கொண்டு வந்தது.
தலைமாட்டில் சொம்பில் வைத்திருந்த நீரை எடுத்து அண்ணாந்து மடமடவென வாயில் ஊற்றினாள். சிந்திய நீர் கழுத்தோடு வழிந்து, தொண்டைக்குழியைத் தாண்டி அவள் போட்டிருந்த உடுப்பிற்குள் இறங்கியது. நேரம் நடுநிசி இரண்டைத் தொட்டிருந்தது. திரும்பிப் பார்த்தபொழுது, அறை தோழிகள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். எப்படியாவது உறங்கிவிட வேண்டுமென்கிற பிடிவாதத்தோடு நிமிர்ந்து படுத்து, உடலைத் தளர்த்தி இமைகளை இறுக மூடிக்கொண்டாள்.
சிறு வயதிலிருந்தே வள்ளி படிப்பில் படுச்சுட்டி. பாடத்தில் உள்ள சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்பதற்காகவே அவளைச் சுற்றி ஒரு நட்புக் கூட்டம் கல்லூரியில் இருந்தது. அவர்கள் பரீட்சைக்கு முந்தைய நாள் அவளை, அவள் அறைக்கே தேடி வந்து, சந்தேகம் கேட்டு தெளிந்து கொண்டு போகிறவர்களாக மட்டுமே இருந்தார்கள். அவளுக்கு ஒரு தேவை என்றாலோ, உதவி என்றாலோ அவர்கள் காணாமல் போயிருந்தார்கள். பள்ளித் தோழி சுமதியும் இதே கல்லூரியில் படித்திருக்கலாம் என்று வள்ளிக்கு அடிக்கடி ஆசை வந்தடங்கியது. சுமதி அன்பின் அமுத சுரபியாக இருந்தவள். என்ன செய்வது, பிரியமான ஆத்மாக்களோடு சேர்ந்திருக்க எந்நேரமும் வாய்த்து விடுவதில்லையே?
வள்ளி ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் நடந்த காலாண்டு தேர்வு அது. முதல் தேர்வு தமிழ் பாடத்திற்கானது. ஒரு பெஞ்சிற்கு இரண்டு நபர்கள் என்ற எண்ணிக்கையில் அமர வைக்கப்பட்டவர்கள் போக, மீதமான மாண மாணவிகள் வகுப்பிற்கு நடுவில் இருந்த நடப்பதற்கான இடத்தில், இடதில் ஒரு வரிசையாகவும் , வலதில் ஒரு வரிசையாகவும் அமர வைக்கப்பட்டிருந்தார்கள். “பெஞ்ச ஒட்டி உட்காராத… தள்ளி உட்காரு”என்று உரக்கச் சொல்லியபடியே, ஒட்டி உட்கார்ந்திருவர்களை ஒதுக்கி விட்டுக் கொண்டே வந்தாள் சரஸ்வதி டீச்சர். வள்ளிக்கு எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரிந்திருந்தது, அருஞ்சொற்பொருள் என்ற பகுதியின் கீழ் கேட்கப்பட்டிருந்த ஒற்றை வார்த்தையின் விடையைத் தவிர. எல்லாவற்றிக்கும் விடை எழுதி முடித்துவிட்டு, அந்த ஒற்றை வார்த்தையைப் பார்த்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள். ஒரே வார்த்தையில் கண்களை ரொம்ப நேரம் பதிக்க முடியாமல் நிமிர்ந்தாள். இப்பொழுதும் அதே மலங்க விழித்த பார்வை தான். பார்வையின் இடம் மட்டும் சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருந்த கரும்பலகை மேல் இருந்தது. பிறகு அங்கும் அதிக நேரம் நிலை கொள்ள முடியாமல் அங்குமிங்கும் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த கருவிழிகள், சுமதியின் விழிகளோடு மோதி நின்றது. சுமதி கண்ஜாடையிலேயே என்னவென்று விசாரித்தாள். வள்ளி சுற்றும் முற்றும் பார்த்தபடியே மடியில் இருந்த எழுத்து அட்டையை மடியில் இன்னும் கூடுதலாக அழுத்தி உள்தள்ளி, லேசாக இடது வாக்கில் சாய்த்து, விடை தெரியாத அந்தச் சொல்லை விரல்களால் அடிக்கோடிட்டுக் காண்பித்தாள். வள்ளி அடிக்கோடிட்டதை, கொஞ்சம் கூடுதலான சிரத்தையோடு கூர்ந்து பார்த்த சுமதி தன் மடியில் இருந்த எழுத்து அட்டையை மடிக்குள் அமிழ்த்தி, வலப்பக்கமாகச் சரித்து, விடையை அடிக்கோடிட்டுக் காட்ட, வள்ளி தனது விடைத்தாளில் நிரப்பிக் கொண்டாள்.
அந்தப் பரீட்சைக்கான தேர்வு முடிவுகள் வந்த பொழுது வள்ளி வகுப்பில் முதல் மாணவியாகத் தேறியிருந்தாள். ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தான் சுஜித் என்கிற மாணவன். மதிப்பெண் அட்டையை கொடுக்கையில் வகுப்பின் மத்தியில் வள்ளியை நிறுத்தி வைத்து, மற்ற மாணவ மாணவிகளை கைதட்டச் சொன்னாள் ஆசிரியை. அந்த கைதட்டல்கள் தனது கன்னத்தில் விழும் அறைகளாக விரிந்தது வள்ளிக்கு. அந்த அருச்சொற்பொருளிற்கு தவறான விடையை எழுதியிருந்தால், ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் சுஜித் முதல் இடத்திற்கு முன்னேறியிருந்திருப்பான் என்ற உண்மை அடுத்த தேர்வுகளில் நேர்மையாக எழுதி முதல் மதிப்பெண் வாங்குகிற வரையிலும் வள்ளியை உறுத்திக் கொண்டே இருந்தது. அதன் பிறகு வந்த நாட்களில், எது நடந்தாலும், குறுக்கு வழியில் மட்டும் பயணிக்கப் போவதில்லை என்பதில் வள்ளி மிகவும் உறுதியாக இருந்தாள்.
வேலையில் சேர்ந்திருந்த பொழுது, பயிற்சிக் காலத்தில் சில தேர்வுகள் இருந்தது. அவற்றில் தேர்ச்சி பெறவில்லை என்றால் வேலையில் இருந்து வெளியேற்றந்தான் என்கிற விதியும் கூடவே இருந்தது. சில கடினமான தேர்வுகள் வந்த பொழுது வள்ளியின் கூட இருந்தவர்கள், தேர்வறை கண்காணிப்பாளரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, கைபேசியை தேர்வறைக்கு எடுத்துச் சென்று, தகிடுதத்தங்கள் பல செய்து, தேர்ச்சி பெரும் வகையில் தேர்வெழுதி முடித்திருந்தார்கள். வள்ளி மட்டும் தன்மீது கொண்டிருந்த நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாய் வைத்து, முடிந்த அளவு முயற்சியைக் கொடுத்து தேர்வை முடித்திருந்தாள்.
“பாஸ் ஆயிருவனான்னு பயமா இருக்கு”- விடுதிக்கு நடக்கிற வழியில் தோழி சத்யாவிடம் புலம்பிய பொழுது, “உனக்கு பொழைக்கத் தெரியலடி”என்றாள் அவள். பதில் சொல்லாமல் தரையை பார்த்தபடியே தார் ரோட்டில் இருந்து பெயர்ந்து அனாதையாய் மேலெழும்பி நின்ற ஒற்றைச் சல்லியை காலால் உதைத்தபடியே நடந்து கொண்டிருந்தாள் வள்ளி. ஒற்றையாய் பெயர்ந்து விட்டால் காலால் உதைபட்டு தான் ஆகவேண்டும் என்று மனதிற்குள் அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாள்.
ஒருவழியாக பயிற்சி காலம் முடிந்து அவரவருக்கான ப்ராஜெக்ட் ஒதுக்கப்பட்டிருந்தது. சத்யாவும் வள்ளியும் ஒரே ப்ராஜெக்டின் கீழ் வந்திருந்தார்கள். சத்யாவை லதா என்கிற சீனியரின் கீழும், வள்ளியை நந்தா என்கிற சீனியரின் கீழும் நியமித்து விட்டிருந்தார்கள்.
“நல்லா கத்துக்கோங்க… லதா, நந்தா இரண்டு பேருமே இதே ப்ராஜெட்டில அஞ்சு வருஷமா இருக்காங்க. அவங்ககிட்ட இருந்து நீங்க நல்லாக் கத்துக்கலாம். உபயோகப்படுத்திக்கங்க”மேலாளர் வள்ளியையும், சத்யாவையும் நிறுத்தி வைத்து, சுழல் நாற்காலியில் சப்பென சாய்ந்து அமர்ந்தபடி, உடலால் லேசாக நாற்காலியை அசைத்தபடியே ஆங்கிலத்தில் சொன்னார். அவர் மணிக்கட்டில் இருந்த கைக்கடிகாரம் அவரின் சில கை அசைவுகளின் பொழுது தங்க நிறத்தில் வெட்டி வெட்டி அடங்கிக் கொண்டிருந்தது.
முதல் நாள் லதாவின் முன் போய், சத்யா நின்ற பொழுது, நாளையிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று திரும்ப அனுப்பி வைத்தாள். அடுத்தடுத்த நாட்கள் போன பொழுது, “கொஞ்சம் பிஸியாக இருக்கேன். முடிச்சிட்டு கூப்பிடுறேன்”என்று இரண்டு மூன்று நாட்களைக் கடத்தினாள்.
இதற்கிடையில், “என்னம்மா ரெண்டு பேரும் கத்துக்க ஆரம்பிச்சிட்டீங்களா?”என்று விசாரிக்க ஆரம்பித்திருந்தார் மேலாளர்.
வள்ளி, நந்தா அவளிடம் பகிர்ந்திருந்த கோப்புகள் பற்றியும், அதில் புரிந்தது பற்றியும், அவளுக்குப் புரிந்திருந்த அடிப்படையில் ஒன்றிரண்டு வரிகள் திக்கித் திணறி சொல்லி முடித்தாள். சத்யாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. லதா இப்படி தன்னை தினமும் திருப்பி அனுப்புவது பற்றி சொல்லலாம். ஆனால், அதை சொல்வதால் வேறு பிரச்சனைகள் வருமோ என்ற பயம் இருந்தது. இன்றுதான் சில கோப்புகள் லதா பகிர்ந்து இருப்பதாகவும், அவற்றை படித்துப் பார்க்க இருப்பதாகவும் பொய்யாக பதில் சொல்லி சமாளித்தாள்.
அடுத்த நாள் சத்யா, லதாவிடம் போய் நின்ற பொழுது, லதா இன்னொரு சுழல் நாற்காலியை அவள் அருகில் இழுத்துப் போட்டு சத்யாவை அமர சொன்னாள். கணினி திரையில் ஒர் கோப்பினை ஓட விட்டு, வேகமான நடையில் விளக்கிக் கொண்டே போனாள். சத்யாவிற்கு விழி பிதுங்கி வெளி வராத குறைதான். இடையில் நிறுத்தி சத்யா சந்தேகம் கேட்க, இனி அடுத்து, சந்தேகம் கேட்பதற்கு அவளுக்குத் துணிவு வராதபடிக்கு, அனலாக லதாவிடமிருந்து பதில் வந்தது.
இப்படியே நாட்கள் ஓடின. ஒரு மாதம் முடிந்திருந்தது. லதா மேலாளரிடம் சமர்ப்பித்திருந்த அறிக்கைப்படி சத்யாவிற்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்து முடித்தாயிற்று. மேலாளர் சத்யாவிடம் குறுக்குச் சோதனை செய்த பொழுது, அவளுக்கு நிறையக் கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது. சத்யா மக்கு என்ற பேச்சு, ப்ராஜெக்டில் அரசல் புரசலாக பரவ ஆரம்பித்தது. அவளுக்கு மேலாளரிடம் இருந்து அழுத்தங்கள் அதிகமானது. தன்னை நிரூபிக்க, சத்யா செய்த முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியில் முடிந்து கொண்டிருந்தன. சத்யாவின் தோல்விகளில் லதாவின் சம்மந்தம் நேரடியாக இல்லை.
வள்ளிக்கு நந்தா ஓரளவு எல்லாவற்றையும் சரியாக சொல்லிக் கொடுத்திருந்தார். ஆனால், அவளுக்கென்று தனியாக எந்த வேலைகளும் ஒதுக்கப்படாமல் இருந்தது. ‘பில்லிங் வரவில்லை’, ‘கிளையண்டைப் பேசி சமாளிக்கனும்’ இப்படி துண்டுத் துண்டாக மேலாளரும், குழுத் தலைவரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டது மட்டும் வள்ளி காதில் விழுந்தது. தன்னைப் பற்றிதான் என்று தெரிந்ததே தவிர, அவளால் வேறெதுவும் பெரிதாகப் புரிந்துக்கொள்ள முடியவில்லை. சும்மா பெயருக்கென்று, ஒரு சில வேலைகள் வள்ளிக்கு ஒதுக்கப்பட்டது. அதுவுமே கூட அவளது அறிவிற்கு தீனி போட முடியாதபடி இருந்தது. வள்ளி கூடவே பயிற்சி முடித்து வேறு வேறு ப்ராஜெக்டுகளுக்கு போயிருந்தவர்களில் சிலர், அவர்களின் வேலை பிடித்திருப்பதாக சொன்னார்கள். நிறைய கற்றுக்கொள்ள முடிகிறதென்றார்கள். ஏன் தனக்கும் சத்யாவிற்கும் மட்டும் இப்படி நடக்கிறது என்று வள்ளி மனதிற்குள் குமுறினாள்.
இங்கு தாக்குப் பிடிக்க முடியாதென்றும், ஊருக்குச் சென்று வங்கித் தேர்வுகள் எழுதும் பயிற்சி வகுப்புகளுக்கு போகப் போவதாக முடிவெடுத்து, சத்யா வேலையில் இருந்து விலகிச் சென்றிருந்தாள். வள்ளிக்குத் தானும் அப்படி கிளம்பிப் போய்விடலாமா என்ற எண்ணம் துளிர்த்தது. எதை எதையோ மனதில் அசைபோட்டபடி கேண்டினில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தாள்.
“நான் இந்த ப்ராஜெக்டுக்காக எவ்ளோ வொர்க் போட்டிருக்கேன். நம்ம மேனேஜர் புதுசா வந்த பிள்ளைங்கள வச்சு என்ன ரீப்ளேஸ் பண்ணலாம்னு பிளான் போட்டா, அப்படி விட்ற முடியுமா. இப்ப என்னோட வொர்க்க பண்ண நான்தான் வொர்த்துன்னு புரிஞ்சிருக்கும்ல, வந்த பொண்ணு முடியாதுனு ஓடிட்டாள்ல?,”குரல் கேட்டு வள்ளி திரும்பி பார்த்தபொழுது, கருப்பு நிற பீங்கான் கோப்பையில் இருந்து தனது உஷ்ணத்தை வெளியேற்றிக் கொண்டிருந்த, தேநீரின் ஆவியை உள்வாங்கியபடி ஆசுவாசமாக தேநீரை உள்ளிறக்கிக் கொண்டிருந்தாள் லதா. லதாவோடு தேநீர் அருந்திக் கொண்டிருந்த இரண்டு மூன்று பேர்களில், ஒருத்தர்கூட அவள் சொன்னதைப் பற்றி சரியென்றோ தவறென்றோ வாய் திறந்து பதில் சொல்லவில்லை. மெளன ஆமோதிப்போடு அவர்களது தேநீரை உள் இறக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வள்ளி இருந்த இருக்கையை கவனித்திருக்கவில்லை.
இது மோசமான இடம், இங்கிருந்து தப்பித்தாக வேண்டும் என்று தோன்றியது வள்ளிக்கு. பேசாமல் சத்யாவைப் போல தானும் அரசாங்க வேலைக்குத் தயாராகலாம் என்ற எண்ணம் மனதில் ஓட ஆரம்பித்தது. அடுத்த நொடி, ‘அரசாங்க வேலைனாலும், அங்கேயும் இப்படிப்பட்ட மனுசங்க இருக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?’ என்று அடுத்த கேள்வி மூளைக்குள் வந்து நின்றது.
குழம்பிக் குழம்பித் தெளிந்து ‘வேலையை விடுவதென்று’ முடிவிற்கு வந்திருந்தாள். தலை பாரமாக இருந்தது. விடுதிக்குத் திரும்புகிற வழியில் இருக்கும் மருந்துக் கடையில் தலைவலி மாத்திரை கேட்டு நின்றாள். கடைக்காரர் மூன்று மாத்திரைகள் இருந்த அட்டியில் இருந்து ஒற்றை மாத்திரையை கத்தரித்துக் கொண்டிருந்தார். வள்ளியின் கண்கள் அனிச்சையாக அந்த கடையில் ஒட்டப்பட்டிருந்த வாசகத்தில் சென்றது.
‘ஏமாற்றக் கற்றுக் கொள்ள முடியவில்லையெனில், குறைந்தபட்சம் ஏமாற்றுக்காரர்களை சமாளிக்கக் கற்றுக் கொள். இல்லையெனில் புதைந்துப் போவாய்’
“எம்மா, இந்தாம்மா. எந்த உலகத்தில இருக்க?”கடைக்காரரின் அதட்டல் சத்தம் வள்ளியை மீட்டது.
கடைக்காரர் நீட்டிய மாத்திரையை கையில் வாங்கிக் கொண்டு, வழி நெடுக எதையோ யோசித்துக் கொண்டே வந்தாள். அவளின் தீர்மானம் மாறிப் போயிருந்தது.
வள்ளி சமாளிக்க ஆரம்பித்து இப்பொழுது நான்கு வருடங்கள் ஓடி விட்டது. சத்யா ஓர் அரசாங்க வங்கியில் வேலையில் இருக்கிறாள். இந்நேரத்திற்கு அவளும் ஏமாற்றவோ, இல்லை ஏமாற்றுக்காரர்களை சமாளித்து முன்னேறவோ கண்டிப்பாகக் கற்றிருக்க வேண்டும். வள்ளியின் நடப்பு வருடத்திற்கான செயல்திறன் மதிப்பீட்டைப் பற்றி கலந்துரையாட மேலாளர் அழைத்திருந்தார். வள்ளியின் வேலையில் இருந்த நிறைகளை விழுங்கி விட்டு, குறைகளை பூதாகரமாக்கிக் காட்டி அவளுக்கு குறைந்த மதிப்பீட்டை வழங்கியிருந்ததற்கு நியாயம் செய்து முடித்தார். வள்ளியின் ப்ராஜெக்டிலேயே அவளுக்கு இணையான பதவியில் இருக்கும் ஒருத்திக்கு, அவள் செய்யும் வேலையின் தரத்திற்கு அதிகப்படியாகவே வருட மதிப்பீட்டை வழங்கியிருந்தார். யோசித்துப் பார்க்கையில் அந்தப் பெண்ணிற்கு வேலை பார்ப்பதை விட பார்த்த வேலையை எப்படி பெரிதுபடுத்திக் காட்ட வேண்டும் என்று தெரிந்திருக்கிறது என்பது வள்ளிக்குப் பிடிபட்டது. மேலாளரிடம் கேட்க வள்ளியிடம் கேள்விகள் இருந்தன. அந்த கேள்விகளால் பத்து பைசாக்குக் கூட பிரயோசனமில்லை என்று அவளுக்குத் தெரியும். அதற்கு நியாயமான பதிலும் கண்டிப்பாக வரபோவதில்லை. அதனால் அமைதியாக நகர்ந்து வந்துவிட்டாள். ஆனாலும் மனம் ஆறவேயில்லை.
வேகமாக குதிரைகள் ஓடி வந்து கொண்டிருந்தன. ஒரு குதிரையை மற்ற குதிரை முந்துவதும் பிந்துவதுமாக, புழுதி கிளப்பப் பாய்ந்து வந்து கொண்டிருந்தன. இலக்குக் கோட்டினை இரண்டு குதிரைகள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நெருங்கி வந்து கொண்டிருந்தன. இரண்டிற்கும் மீச்சிறு அடி வித்தியாசமே இருந்தது. முன்னால் இருந்த குதிரையின் பின்னங்காலை பின்னால் வந்து கொண்டிருந்த குதிரை முன்னங்காலால் லேசாக இடறி விட, முன்னால் சென்று கொண்டிருந்த குதிரை கனைத்தபடியே தரையில் சாய்ந்தது. இப்பொழுது பின்னால் வந்து கொண்டிருந்த குதிரையின் முகம் மனித முகமாக மாறியிருக்க, அந்த குதிரை இலக்கு கோட்டினை தொட்டிருந்தது. இடறி விழுந்த குதிரையின் கால்கள் கிளப்பிய மண் புகை மைதானத்தை முழுவதுமாக பீடித்திருந்தது.
வள்ளி திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். நீட்டிய மேனிக்கு இருந்த கால்களை மடக்கி சம்மணம் போட்டுக் கொண்டே பெருமூச்சிழுத்து வெளி விட்டாள். கழுத்து வியர்த்து நனைந்திருந்தது. உள்ளங்கையால் கழுத்தை திரும்ப திரும்ப அழுந்த துடைத்துக் கொண்டிருந்தாள். துடைக்கத் துடைக்க மறுபடியும் மறுபடியும் கழுத்தில் புழுதி வந்து ஒட்டிக் கொள்வது போல் இருந்தது அவளுக்கு.
******