
இப்படித் தெரு வழியாக நடந்து போவது ஆசினாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. சின்ன வயதில் வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்குப் போவது போல இருந்தது.
பஸ்ஸிலிருந்து இறங்கி ஆட்டோவில்தான் போகலாம் என்றிருந்தாள், ஆனால், வேலாயுதம் சொன்னது ஞாபகம் வந்தது, பஸ் ஸ்டாண்டிலிருந்து பக்கம், வெளியே வந்து வலது பக்கம் திரும்பி நடந்தால் சகாயம் காபிக் கடையை ஒட்டி இருக்கிற தெருதான், காம்பவுண்ட் சுவற்றில் கதவு எண் பெரிதாக எழுதியிருக்கும் என்று, அதனால் நடக்கத் தொடங்கினாள்.
ஆசினாவுக்கு அந்த ஊர் புதியதாக இருந்தாலும் . பஸ் ஸ்டாண்ட் ஒரு மூத்திர வாடையுடன், ஏகப்பட்ட இரைச்சலும், ஆங்காங்கே கடைகள், நாய்கள் எனவும், வெளியே வந்தால் சுவரெங்கும் ஒட்டபட்டிருக்கிற அரசியல், சினிமா போஸ்டர்கள் என எல்லா ஊர்களையும் போலத்தான் இருந்தது. வலது கையிலிருந்த பை கொஞ்சம் கனக்க இடது கைக்கு மாற்றிக் கொண்டாள்.
தூரத்திலேயே சகாயம் காபிக்கடை தென்பட, வேகமாக நடந்து, பக்கத்துத் தெருவுக்குள் நுழைந்து வேலாயுதத்தின் வீட்டு எண்ணை தேடிப்பிடித்து வீட்டின் முன் நிற்பதற்கும் மழை லேசாக தூறத் தொடங்கவும் சரியாக இருந்தது. வாசலில் நின்று கொண்டிருந்த பூவரச மரத்தின் மணம் மழைத் துளி பட்டதும் வேறு மாதிரித் தோன்றியது. தூறலில் கிளம்பிய மண்வாசனையை நன்றாக இழுத்து மனதுக்குள் வாங்கிக் கொண்டாள்.
கதவு திறக்கிற சத்தம் கேட்டது. முகத்தில் ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு தயாரானாள். கதவைத் திறந்த பெண், ஒல்லியாக, உயரமாக, சிவப்பாக வெளிர் நீலப் புடவையில் இருந்தாள். இதுதான் வேலாயுதத்தின் மனைவி ஈஸ்வரியாக இருக்கும். ஈஸ்வரிதானே இவள் பெயர், அப்படித்தானே கல்யாணப் பத்திரிக்கையில் பார்த்த ஞாபகம், ஆசினா யோசித்துக் கொண்டிருந்தாள்.
”வாங்க வாங்க. நீங்க வருவீங்கன்னு சொல்லிக்கிட்டுதான் இருந்தாங்க”
ஆசினா அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தாள்.
“என்ன அப்படியே நின்னுட்டீங்க, வாங்க இது வேலாயுதம் சார் வீடுதான்”
உள்ளே வந்தும் வராமலும் தயங்கி நின்றுகொண்டிருந்த ஆசினா படியேறி வீட்டுக்குள் வந்தாள். “அப்படியே சோபாவில உக்காருங்க” என்று ஈஸ்வரி சொல்ல, ஆசினா சோபாவின் நுனியில் அமர்ந்து பையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டாள்.
“நல்லா உட்காருங்க இது உங்க வீடு மாதிரி, அவங்க இப்பத்தான் வெளியே போனாங்க, கொஞ்ச நேரத்தில வந்துருவாங்க,” ஈஸ்வரி விபரம் சொன்னாள்.
ஆசினா நினைத்துக் கொண்டாள் இன்னேரம் வேலாயுதம் இருந்திருந்தால் பையை அவனே வாங்கிக் கொண்டுதான் வீட்டுக்குள்ளே அழைத்திருப்பான் அல்லது அவளே பையை அவனிடம் கொடுத்திருப்பாள்.
சுமையோ சுமை இல்லையோ யாராவது நம்மிடமிருந்து வாங்கிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றுதானே மனம் நினைக்கிறது.
உள்ளே போயிருந்த ஈஸ்வரி கையில் டம்ளருடன் வந்து, “இந்தாங்க காபி. வரும்போதே மழையையும் கூடவே கூட்டிட்டுல்ல வந்திருக்கீங்க, சூடா சாப்பிடுங்க. மழைக்கு நல்லா இருக்கும். காப்பியைக் குடிச்சுக்கிட்டே கொஞ்ச நேரம் மழையைப் பார்த்துக்கிட்டு இருங்க. எனக்கு கொஞ்சம் அடுப்படில வேலை இருக்கு, வந்துர்றேன்.” என்றபடி உள்ளே செல்லத் திரும்பினாள்.
”நீங்க உங்க வேலையைப் பாருங்க நான் உட்கார்ந்திருக்கேன்”
“எவ்வளவு நேரம் சும்மா உக்காந்திருப்பீங்க, அங்கன மாட்டியிருக்கிற போட்டோல்லாம் பாருங்க, அதுல ஒண்ணு ரெண்டுல நீங்களும் இருக்கீங்க, அதுக்குள்ளே அவங்களும் வந்திருவாங்க”
ஆசினாவுக்கு போட்டோக்களை பார்க்க விருப்பமில்லெயென்றாலும், தான் இருக்கிற போட்டோவைப் பார்க்கணும் போல இருந்தது. காபி டம்ளரை சோபாவுக்குப் பக்கத்தில் தரையில் வைத்துவிட்டு, போட்டோக்களைப் பார்க்க எழுந்தாள்.
மூன்றாவது போட்டோவிலேயே தன்னை அடையாளம் கண்டுகொண்டாள், அது பழனியில் வேலை பார்க்கும்பொழுது தங்களது உயர் அதிகாரி மாற்றலாகிப்போகும் சமயம், பிரிவு உபசார விழாவையொட்டி அலுவலகத்தில் எடுத்தது. நால்வர் முன் வரிசையில் அமர்ந்திருக்க, பின் வரிசையில் அறுவர் நிற்க, கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஆசினா புளு கலர் புடவையில் நிற்க, அவளது தோளை உரசியபடி நின்று கொண்டிருந்த வேலாயுதம், புளு கலர் பேண்டுடனும், வெளிர் மஞ்சள் நிறத்தில் முழுக்கை சட்டையும் அணிந்திருந்தான். போட்டோ கறுப்பு வெள்ளையென்றாலும் கட்டியிருந்த புடவையின் நிறமும் வேலாயுதத்தின் ஆடைகளின் நிறமும் இன்னும் ஆசினாவின் ஞாபகத்தில் அப்படியே இருந்தது.
கருப்புக்கும் ஊதாவுக்கும் என்ன ரொம்ப தூரமா? ஞாபகங்களுக்குக் கருப்பு வெள்ளை எல்லாம் கிடையாதே.
எதையெல்லாம் மறக்க, நினைத்தாலும் மறக்க முடியாத நினைவுகளை எப்படி புறந்தள்ள? யாராவது சொல்லிக் கொடுத்தால் தேவலை. இந்த மனம் இப்படித்தான். நினைத்ததை மறக்கடிக்கச் சொல்லும். அப்புறம் அடுத்த நொடி, மறக்கடித்ததை நினைக்க வைக்கத் தவிக்கும்.
”என்ன மேடம் இன்னைக்கு ஷாம்பு குளியலா?”
“என்ன சார் பாண்டிய மன்னன் மாதிரி கூந்தல் ஆராய்ச்சியெல்லாம் பண்ண ஆரம்பிச்சீட்டீங்க”
“இல்ல, கேட்கணும்ன்னு தோணுச்சு, கேட்டேன்”
ஆசினா தலைகுனிந்து தன் வேலையை பார்க்கத் தொடங்கினாள்.
“பதிலே சொல்ல மாட்டீங்கிறீங்க”
“இப்ப சிவபெருமான் வருவாரு அவர் பதில் சொல்லுவாரு”
இருவரும் பலமாகச் சிரித்துக்கொண்டார்கள். எப்போதோ சிரித்தது இந்த அறைவரை இப்பொழுது கேட்டது.
வரிசையாக போட்டோக்களைப் பார்த்துக்கொண்டே வந்த ஆசினா நடுவில் மாட்டப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்ததும், ஒரு நிமிடம் தன் முகத்தைப் பார்த்துத் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டாள்.
மீண்டும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். காதோரம் நரை தொடங்கி காதுகளுக்குப் பின்னால் வழிந்து இறங்கிக் கொண்டிருந்தது. உச்சந் தலையில் ஓரிரண்டு நரை முடிகள் தெரியத் தொடங்கியிருந்தன. கழுத்தில் ஒரு சின்ன சுருக்கம்.
கதவு திறக்கப்படுகிற சத்தம் கேட்க, ஆசினா திரும்பிப் பார்த்தாள், வேலாயுதம் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான். சிறு தகடு போல ஒரு மங்கலான நிழல் சுவரில் மடங்கி இவள் பக்கம் வந்து நின்றது.
“வாங்க ஆசினா, எப்படி இருக்கீங்க, போட்டோ எல்லாம் பார்த்து முடிச்சாச்சா?”
‘எல்லாம் கருப்பு வெள்ளையாகிவிட்டன’ என்று ஆசினாவுக்குச் சொல்லத் தோன்றியது, சொல்லவில்லை.
ஆசினா சிரித்துக்கொண்டே போட்டோக்களிலிருந்து மீண்டு வந்து சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
“வந்து நேரமாச்சா?”
“இல்ல இப்பத்தான் ஒரு அரை மணி நேரம் இருக்கும்.”
“வீட்டை ஈஸியா கண்டு பிடிச்சீட்டீங்களா?”
ஆசினா தலையை மட்டும் ஆட்டினாள்.
வேலாயுதம் அமைதியாக ஆசினாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். பருத்தி வெளிர் நிறப்புடவை. சற்று திரும்பிய வாக்கில் உட்கார்ந்து சோபாவின் கைப்பிடியில் ஒரு கையை ஊன்றிக்கொண்டு, அடர்த்தியான கூந்தல் முதுகில் படர உட்கார்ந்திருந்த ஆசினாவின் தோற்றம் வேலாயுதத்திற்கு மிகவும் பிடித்திருந்தது.
அடுக்களையிலிருந்து ஜன்னல் வழியாக வந்த அதிகப்படியான வெளிச்சம் ஆசினாவின் மேல் விழுந்து நீண்டது. அந்த நீட்சி விவரிக்க முடியாததாக இருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள ஒரு சரியான தருணமாக அது அமைந்தது.
ஆசினாவின் மெளனம் வேலாயுதத்திற்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அடுக்களை உள்ளிலிருந்து குழம்பு கொதிக்கிற வாசமும், தாளிக்கிற சத்தமும் கேட்டது. ஆசினாவின் மெளனத்திற்கு அது ஒரு புளிப்பான இசையைப்போல அடர்த்தியை வழங்கிக் கொண்டிருந்தது.
ஆசினா வெறும் அலுவலகத்தின் சக ஊழியர் மட்டுமில்லை, அதற்கும் மேலான ஒருவர். மேலும் இல்லை கீழும் இல்லை. அவ்வளவு சமம். அவ்வளவு நெருக்கம். இப்பொழுது நல்ல தோழி.
சமையல் பண்ணுகிற அவசரத்தில் கையில் கரண்டியுடன் வந்த ஈஸ்வரி, “ஏன் ரெண்டு பேரும் டிவியை மியூட்டில போட்டமாதிரி அமைதியா இருக்கீங்க, எதுவும் பேசிக்கலையா, பழைய கதை எவ்வளவோ இருக்குமே, ஒரே கதையை ரெண்டு பேரும் சொன்னா, ரெண்டு வேறு வேறு கதையா மாறுகிறது ஒரு மேஜிக் இல்லையா. அது மாதிரி. எனக்கு மேஜிக் பிடிக்கும். ஆனா, இப்போ மேஜிக் பார்க்க முடியாது. எனக்கு இன்னும் கொஞ்ச நேரத்துக்கு கிச்சன்ல வேலை இருக்கு, வந்திர்றேன்” – ஈஸ்வரி சிரித்துக்கொண்டே, ஆசினா காப்பி குடித்துவிட்டு வைத்திருந்த டம்ளரை எடுத்துக்கொண்டாள்.
“ஈசு, இது ஆசினா, நாங்க ரெண்டு பேரும்..” வேலாயுதம் முடிக்கவில்லை
“எனக்குத்தான் எல்லாம் தெரியுமே, வீட்டுக்குள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே எல்லா அறிமுகமும் எங்களுக்குள்ள ஆயிருச்சு, அறிமுகம் என்ன அறிமுகம். ஒருத்தர் முகத்தை ஒருத்தர், ஒருத்தர் கண்ணை ஒருத்தர் பார்த்தால் போதாதா. சரி, ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க இப்ப வந்திர்றேன்”
ஆசினா தனக்குள் சிரித்துக்கொண்டாள். வேலாயுதம் பார்க்கிறான் என்று அறிந்தவுடன் சிரிப்பு சட்டென்று பரவி அடங்கியது.
“ஈஸ்வரியைப் பாத்தா எனக்குக் கொஞ்சம் பொறாமையாக இருக்கு வேலாயுதம்”
“ஏன்?”
“எல்லாம் தெரியும்கிறாங்க, ஆனா, எதையும் காட்டிக்கிறாம, நான் வந்ததிலிருந்து சிரித்த முகத்தோட உற்சாகமாக இருக்காங்க, பொறாமையா இருக்காதா?”
”எல்லாம் தெரியும்ன்னு சொன்னது நாம ஒண்ணா வேலை பார்த்தது மட்டும்தான்”
ஆசினா தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள். வேலாயுதம் ஆசினாவின் கால் பாதங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆசினா தன் கால்களை புடவைக்குள் இழுத்துக் கொண்டாள்., அந்தச் சிறு அசைவு வேலாயுதத்திற்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்க, அதை மறந்து விடும்படியான நோக்கத்தில், ‘இருங்க ஒரு நிமிஷம் ஈஸ்வரியைப் பாத்துட்டு வந்திர்றேன்’ என்று விட்டு அடுக்களையை நோக்கி நகர்ந்தான்.
”ஆசினா, நீங்க நல்லாப் பாடுவீங்களாமே?”
“யார் சொன்னது?”
“இல்லை, நான் லீவில் இருக்கும் பொழுது நடந்த பிரிவு உபசார விழாவில் நீங்கள் பாடியதைப் பற்றி எல்லோரும் சொன்னாங்க, எனக்குத்தான் கேக்க முடியாமப் போச்சு”
“கேட்காமலா இருக்கப் போறீங்க?”
வேலாயுதம், ஆசினாவை அப்படியே பார்த்தான், ஆசினா தலை குனிந்து கொண்டாள். வேலாயுதம் தன் எதிரே ஆசினாவுக்குப் பிடித்த வெளிர் நிற சில்க் காட்டன் புடவையில் தனக்காக நின்று பாடிக் கொண்டிருப்பது போல, தோற்ற மயக்கத்தில் இருந்தான். தலை நிமிர்ந்து பார்த்த ஆசினா ‘என்ன?’ என்பது போல தலையசைத்துக் கேட்க, வேலாயுதம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் லேசாக சிரித்துக்கொண்டான், நெருக்கமும் ஆழமுமாக இருவர் கண்களும் நிரம்பித் தவித்துக்கொண்டிருந்தன.
வானம் சலனமற்றுக் கிடந்த ஒரு மாலை நேரத்தில், வேலாயுதம் அலுவலகத்தில் தனக்கென பிரத்தியேகமாக கொடுக்கப்பட்ட வேலையை தனியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
தனக்கு எதிரே நிழலாட, நிமிர்ந்து பார்த்த வேலாயுதத்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. “வாங்க உக்காருங்க” என்றான். அது ஆசினாவின் அப்பா என்பது அவனுக்குத் தெரியும். கண்கள் அவரைப் பார்க்கிறதை தவிர்த்தாலும் மனம் ஒரு அசையாச் சுடர் போல பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர் அமைதியாக இருந்தது வேலாயுதத்திற்கு ஆவலைத் தூண்டியது..
“எப்படி வந்தீங்க? நடந்தா இல்லை டூ வீலரா?”
”எப்படியோ வந்தேன், வந்தே தீரணும்னு ஆகிப்போச்சுண்ணா எப்படியாவது வந்து சேர்ந்திருவோம் இல்லையா?’ அவர் வேலாயுதத்தின் முகத்தைப் பார்க்கவில்லை. சற்று அமைதியாக இருந்தார். அந்த அறைக்கு நான்கு சுவர்கள்தானா, கூடுதலா என்பது போலச் சுற்றிலும் பார்த்தார், பேச ஆரம்பித்தார்.
“தம்பி, சுருக்கமாவே சொல்லீர்றேன். எனக்கு எல்லாம் தெரியும் ஆசினா என்னிடம் எதையும் மறைக்கல. நாங்க ஒரு முஸ்லீம் குடும்பம். ஐந்து நேரம் தொழுகிற குடும்பம், அல்லாவுக்கு இதெல்லாம் அடுக்காது, நாங்க பாட்டுக்கு எங்க வழியில போயிக்கிட்டு இருக்கோம். இப்படியே முடிந்த வரைக்கும் போயிரணும். நீங்க விலகி எங்களுக்கு வழிவிடுங்க, ஆசினா வேலைக்கு வந்ததே தப்புன்னு எங்களை நினைக்க வச்சிறாதீங்க”
“சார்..” வேலாயுதம் அவர் கையைப் பிடிப்பது போல நீட்டிவிட்டு, தயங்கி மடக்கி மேசையில் வைத்துக்கொண்டான்.
“நீங்க என்ன சொன்னாலும், நீங்க ஒரு மதம்.. நாங்க ஒரு மதம்கிறத மறைக்கவும் முடியாது, எங்களால ஏத்துக்கவும் முடியாது, இதோட போதும்”
இதைச் சொல்லும்பொழுது, அவரின் குரல் சற்று உயர்ந்து வடிந்தது, அவரது கைகள் பக்கத்திலிருந்த நாற்காலியின் கையை இறுகப்பற்றி இருந்தது. அவரது அந்த சின்னக் கோபமும் ஆனால், ஆணித்தரமான வெளிப்பாடுகளும் அந்த அலுவலகம் முழுவதும் நிறைந்து எதிரொலித்துக்கொண்டிருந்தது.
வேலாயுதம் எந்த அசைவுமற்று அப்படியே உட்கார்ந்திருந்தான். ஒரு பனி உருகி மீண்டும் உறைந்தது போலிருந்தது. எதிர் சுவற்றில் மாட்டியிருந்த தினசரி காலண்டர் தாள்கள் பேன் காற்றுக்குப் புரண்டு எழுப்பிக் கொண்டிருந்த ஓசை அலுவலகம் எங்கும் பூதாகரமாக கேட்பதுபோல் இருக்க, வேலாயுதம் தனக்கு ஏற்பட்ட துக்கத்தை உதறி எடுத்துப் போட்டுவிட்டு அவருடன் கொஞ்சம் பேசலாமென நினைத்தான்.
“சார்..” வேலாயுதம் பேச ஆரம்பித்ததைத் தடுத்தார். அவரால் உடனுக்குடன் பெரிய பெரிய மதில்களை எழுப்ப முடிந்தது.
“இங்க பாருங்க தம்பி, நான் சொல்றத சொல்லிட்டேன், இந்தாங்க நீங்க ஆசினாவுக்கு எடுத்துக் கொடுத்த புடவை, ரெண்டு மூணு புஸ்தகம் எல்லாம். இதோட மறந்திருங்க, ஆசினா கொஞ்ச நாள் ஆபீஸுக்கு வரமாட்டா. நாளையிலிருந்து மெடிக்கல் லீவு”
பிளாஸ்டிக் பையை புடவையுடன் தூக்கி எறிவது போல ஆனால், கொஞ்சம் நிதானமாக வேலாயுதத்திற்கு முன்னால் வேகமாக வீசிவிட்டு, வேலாயுதத்தின் பதிலை எதிர்பார்க்காமல், எழுந்து அலுவலக வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
வேலாயுதம் அந்த பிளாஸ்டிக் பையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அந்த பிளாஸ்டிக் பை எழுப்பிய ஓசை வேலாயுதத்தின் உள்ளே எல்லாம் தரை மட்டமாக நொறுங்கி விழுகிற ஓசையைப் போல இருந்தது. அவனை சமாதானப்படுத்த யாருமில்லாத அந்தத் தருணத்தில் அது அவனை மேலும் இம்சைப்படுத்தியது, அவன் மேல் சரிந்து விழுந்து அவனை மூடி நசுக்கிக்கொண்டிருந்தது.
இன்னும் இடிபாட்டுக்குள் கிடப்பது போல வேலாயுதம் சோபாவில் உட்கார்ந்திருக்கும் ஆசினாவைப் பார்த்தான்
”வேர்க்குதில்ல” வேலாயுதம் தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த காற்றாடியின் வேகத்தைக்கூட்டினான்.
“ஆசினா, நீங்க ஏன் கல்யாணமே பண்ணிக்கல?”
“தோணல, அவ்வளவுதான்” ஆசினா அவனை ஈரமாகப் பார்த்தாள். அவள் குரல் உலர்ந்திருந்தது.
“உங்க அப்பா, அம்மா எல்லாம்?”
“இப்போதைக்கு நான் மட்டுதான், எல்லாரும் போய்ச் சேர்ந்தாச்சு” இதைச் சொல்லும் பொழுது ஆசினாவின் கண்கள் கலங்கியதும் தெளிந்ததும் உடனுக்குடன் நிகழ்ந்தது. ஃப்பேன் காற்றின் வேகத்தில் பறந்து கொண்டிருந்த சேலைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்ட ஆசினா தலை முடியையும் ஒதுக்கிக்கொண்டாள்.
“என்னைப் பார்க்கணும்ன்னு எப்படித் தோணுச்சு?”
“தெரியல, ஆனா தோணுச்சு” குரலில் மறுபடி சுனை ஊறிவந்தது.
“உங்களுக்கு இன்னும் வயசாகலயே”
ஆசினா சிரித்துக்கொண்டே தன் காதோரம் நரைத்து கன்னத்தில் புரண்டு கொண்டிருந்த முடிகளை ஒதுக்கி காதுகளுக்குப் பின்னால் விட்டுக் கொண்டாள். ஆசினா இப்ப சிரித்த சிரிப்பு சாணை பிடிக்கப்பட்ட வசீகரமாக இருந்தது, முகம் தெளிவாகவும் கலங்கிய கண்கள் முற்றிலும் பள பளப்பாகவும் இருக்க வேலாயுதம் இப்பொழுது தலை குனிந்து அமர்ந்து கொண்டிருந்தான்.
வேலாயுதம் உட்பக்கமாகத் திரும்பி ஈஸ்வரியைக் கூப்பிட நினைத்தான். ஆசினாவுக்கும் இப்போது ஈஸ்வரி வந்துவிட்டால் தேவலை என்று இருந்தது. இரண்டு பேர் மட்டும் போதும் என்று ஒருகட்டத்திலும், மூன்றாவது ஒருவர் இருப்பது நல்லது, ஆசுவாசம் தருவது என்று எப்படி ஒரே சமயத்தில் தோன்றி விடுகிறது?!
ஈஸ்வரி அவளாகவே உள்ளிருந்து வந்து கொண்டே, “என்ன பழைய கதையெல்லாம் பேசியாச்சா, நான் சொன்ன மாதிரி, ஒரே கதை வேறு வேறு கதையாக மாறும் மேஜிக் நடந்துச்சா? – ஈஸ்வரி சிரித்தாள். ஆசினா பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டாள். எட்டினாற் போல ஆசினாவின் ஒரு கையை எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டாள். “சாப்பாடு ரெடி, சாப்பிடலாமா இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டுமா?’” என்றாள்.
வேலாயுதம் ஈஸ்வரியையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவள் இப்பொழுது புதிய புடவைக்கு மாறியிருந்தாள், முகம் துப்புரவாக இருந்தது. துப்புரவு என்றால் அப்படி ஒரு துப்புரவு.
ஆசினா மெல்லிசாக சிரித்தாள். ஈஸ்வரியைப் பார்த்துக்கொண்டே வேலாயதத்திடம் சொன்னாள், ‘முந்தின பீரியடுக்கு வந்த சயன்ஸ் சார் எழுதிப் போட்டதை, ஒண்ணுமில்லாம சுத்தமா அழிசசுட்டு போர்டுக்கு முன்னால நின்று சோசியல் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிற பியூலா டீச்சர் மாதிரி இருக்காங்க ஈஸ்வரி’ என்றாள்.
வேலாயுதம் ஈஸ்வரியும் ஆசினாவும் சோபாவில் ஒன்றாக இருக்கிற திசையையே பார்த்தான்
அவர்களுக்குப் பின்னால் சுத்தமாக அழிக்கப்பட்ட ஒரு கரும்பலகை தொங்கிக்கொண்டு இருப்பது போல இருந்தது அவனுக்கு.
******