
சாக்பீஸ் எனும் சக உயிரி
கரும்பலகை எழுத்துகள்
மென்மை போர்த்திய துடைப்பங்களால் அழிக்கப்படுவது
உடல் தேயத் தேய எழுதிய
சாக்பீஸ்களின் தியாகம் போற்றியே.
****
சாக்பீஸ்
எத்தனை முறை
ஒடிந்து விழுந்தாலும்
எழுத்து நடையை மறப்பதேயில்லை.
****
சாக்பீஸ்களில் உடல்
எழுத்தெலும்புகளால்
ஆனது.
****
சாக்பீஸ் மாவு
சன்னமாய் அப்பிய
ஆசிரியரின்
ஆடை கண்டால்
சிறகு முளைத்துவிடுகிறது சூழலுக்கு.
****
சாக்பீஸ்
ஆசிரியரின்
ஆறாம் விரல்.
****
எழுத எழுத
கூர்மையாகிறது சாக்பீஸ்
எழுத்தும் கூட.
****
சாக்பீஸ்கள்
பெட்டிக்குள்
சிறை வைக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள்.
****
வண்ண வண்ணமாய் எழுதினாலும்
எழுத்தில் இல்லை
எந்த ஏற்றத்தாழ்வும்.
****
சாக்பீஸ்கள்
எழுத்துப் பூக்களை
மலரச் செய்கின்றன
மகரந்தங்களாய் உதிர்கின்றன
அதன். துகள்கள்.
****
சாக்பீஸ்கள்
எழுதித் தீரும்
வாழ்வு வாய்த்த
வால் விண்மீன்கள்.
****
சாக்பீஸ்கள்
எழுதுகையில்
எடுத்து வைக்கும் நடைகளில்
வெண்குதிரைகளின் நடனங்கள்.
********