
வாயில் வைத்திருந்த சிகார் புகைந்து கொண்டிருந்தது. தீர்ந்து போன ஒயின் பாட்டில்கள் அந்த அறையில் இங்குமங்குமாகக் கிடந்தன. மெல்லிய செக்காவ்ஸ்கியின் இசை அங்கு ஒலித்துக் கொண்டிருந்தது. இன்னும் அவன் எதுவும் வரையப்படாத பிரமாண்ட கேன்வாஸை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். கேன்வாஸின் அளவை சரியாகச் சொல்ல முடியவில்லை ஆனால் பெரிய கேன்வாஸ். அவன் இருந்த பெரிய அறையின் ஒரு சுவற்றை மறைத்து சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. திடீரென ஏதோ ஞாபகம் வந்தவனாக எழுந்து அடுத்த அறைக்குச் சென்றவன் அங்கிருந்த ஏற்கனவே பாதி சாப்பிட்டு வைத்திருந்த வாழைப்பழத்தை எடுத்து அதில் மொய்த்துக் கொண்டிருந்த சிறிய ஈக்களை விரட்டி விட்டு சாப்பிட்டான். பின் ஏதோ ஒரு நாற்றத்தை முகர்ந்து இங்குமங்கும் தேடி பிளாஸ்டிக் பை ஒன்றில் கிடந்த அழுகல் தக்காளி ஒன்றை எந்த வித முகச்சுளிப்பும் இல்லாமல் சாப்பிட்டுத் தீர்த்தான். மீண்டும் அந்தக் கேன்வாஸ் இருந்த அறைக்கு வந்து பாதி புகைந்திருந்த சிகாரை மீண்டும் வாயில் வைத்துக் கொண்டு கேன்வாஸை பார்த்தவண்ணம் உட்காந்திருந்தான். அழுகிப் போயிருந்த பழங்கள் ஏற்படுத்திய வாடையுடன் சிகார் புகையும் சேர்ந்து ஓர் அமானுஷ்ய மணத்தை அங்கு ஏற்படுத்தியிருந்தது. அதனோடு அங்கிருந்த விதவிதமான பெயின்ட் வாடை சேர்ந்து கொண்டு ஒரு போதையை ஏற்படுத்தியது.
உடலைச் சற்று முறுக்கி எழுந்த அவன், பென்சில் ஒன்றைக் கொண்டு லேசாக அந்த பிரம்மாண்ட கேன்வாஸில் ஏதோ வரையத் துவங்கினான். வரைய வரைய அவன் கண்கள் விரிந்தன. பின் கொஞ்ச நேரத்தில் தன்னிச்சையாக அவன் கைகள் கேன்வாஸ் எங்கும் போய் வந்து கொண்டிருந்தன. இப்போது அவன் பெயின்ட் பெலட்டாக இருந்த தகரத் தகடுகளை எடுத்து கேன்வாஸில் தீட்டினான். ஒவ்வொரு பிரஷ் மாற்றும் போதும் வித்தியாசமாக ஏதோ சப்தமிட்டான். அல்லது ஒலித்துக் கொண்டிருந்த செக்காவ்ஸ்கியின் இசையை முணுமுனுத்துக் கொண்டு வண்ணங்களைக் கையாண்டான். தீர்க்கமாகச் சில நேரம் ஒரு கோட்டை கருப்பு வண்ணத்தில் தீட்டி விட்டு, சிங்கத்தைப் போல் இங்குமங்குமாக நடந்து அந்த ஓவியத்தை நோட்டமிட்டான். அவன் வண்ணங்களோடு தன் உணர்வுகளையும் கலந்து அந்த ஓவியத்தை உருவாக்கினான். சில சமயம் அவன் கண்கள் விரிந்து வெறி பிடித்தவனைப் போல் வேகவேகமாக வண்ணமடித்தான். சில சமயம் காதலியைக் கொஞ்சும் காதலனை ஒத்த அன்போடு வரைந்து கொண்டிருந்தான். இப்படியாகக் களைத்து அங்கேயே உறங்கி விடுவான். பின் எப்போது அவனுக்கு விழிப்பு வருகிறதோ அப்போது எழுந்து மீண்டுமாக வரைவான். சில நாட்களில் எதுவும் வரையாமல் வெறுமனே பார்த்துக் கொண்டு மட்டும் இருப்பான். சில நாட்களில் பேய்பிடித்தவனைப் போல் எதுவும் செய்யாமல் வரைந்து கொண்டு இருந்தான். அவன் அந்த ஓவியத்தை வரைந்த நாட்களில் மது, இசை, புகை மட்டுமே அவனோடு இருந்தது.
அன்றோடு அவன் வரைய ஆரம்பித்து ஒரு வாரமாகியிருந்தது. அணில் முடியில் செய்த ஒரு மெல்லிய பிரஷை கருப்பு நிறத்தில் நனைத்து ஓவியத்தின் இடது பக்கமிருந்த இடத்தில் ஒரு புள்ளியை வைத்த போது அந்த ஓவியம் முற்றுப் பெற்றது. பெருமூச்சுடன் அவனுக்கு அழுகையும் சேர்ந்து வந்தது. ஓடிச் சென்று கத்தி அழ ஆரம்பித்தான். பெரும் கதறல்களுடன் வீட்டில் பல இடங்களில் நின்று அழுதான். அழுது கொண்டிருக்கும் போதே அவனுக்குப் பசித்தது. ஓடிச் சென்று பார்த்த போது வாழைப் பழங்களின் தோல் மட்டும் அங்குக் கருகிப் போய்க் கிடந்தது. சாப்பிடுவதற்கென்று ஒன்றுமில்லை. அங்கிருந்த பைப்பை திறந்து வயிறு முட்ட தண்ணீர் குடித்தான். குடித்துக் கொண்டிருக்கும் போதே விம்மல் வந்தது. அந்த நிலையில் அவனை யார் பார்த்திருந்தாலும் அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதென்று நினைத்திருப்பார்கள். அவன் மூச்சை நன்றாக உள்ளிழுத்து சற்று அமைதியாகி மீண்டும் அந்த ஓவிய அறைக்கு வந்தான். அங்கு அந்த பிரம்மாண்ட ஓவியம் தனித்து நின்று கொண்டிருந்தது.
அந்த ஓவியத்தை முழுவதுமாகப் பார்க்க ஒருவர் அந்த ஓவியத்திலிருந்து சில மீட்டர்கள் தள்ளி நிற்க வேண்டும். எப்படி இருந்தாலும் அந்த ஓவியம் பார்ப்பவரின் மூச்சை சற்றே நிறுத்தி ஆச்சரியப்பட வைத்து மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும். அந்த ஓவியத்தில் சிறப்பாக அவன் எதையும் வரைந்து விடவில்லை. ஒரு சாப்பாட்டு மேஜை, அதில் பல்வேறு சாப்பாட்டு வகைகள், பழங்கள், தட்டு, கரண்டி, கத்தி ஆகியவை இருக்கின்றன. அந்த மேஜையைச் சுற்றி விசாலமான இடம், இடது புறம் அந்த அறையை விட்டு வெளியே செல்லும் கதவு திறந்திருக்கிறது. வலதுபுறம் மேலே ஒரு ஜன்னல் அதிலிருந்து ஆரஞ்சு நிறத்தில் சூரிய ஒளி அந்த அறையில் படுகிறது. இவ்வளவுதான். ஆனால் கொஞ்சம் நெருங்கி பார்த்தால் அந்த மேஜையில் உள்ள பொருள்களில் உள்ள நேர்த்தி புரியும். உதாரணமாகப் பாதித் தோல் நீக்கப்பட்ட ஆரஞ்சு பழம், உடைக்கப்பட்ட மாதுளை முத்துகளில் தெரியும் வெளிச்சம், வெள்ளி தட்டுகளில் செய்யப்பட்டிருக்கும் வேலைபாடுகள், யாரோ சாப்பிட்டு மீதம் வைத்திருக்கும் கறித்துண்டு, மேஜையின் மீது சிந்தியிருக்கும் ஒயின் ஏற்படுத்திய கறை, பழம் நறுக்க வைத்திருக்கும் கத்தியில் ஜன்னல் வழியாக வரும் சூரிய ஒளிபட்டு தெறித்து ஏற்படுத்திய ஒளி, இப்படியாக இன்னும் அந்த அறையைப் பணக்காரத்தனத்துடன் வைத்திருக்கும் சின்னச் சின்னப் பொருட்கள் என நெஞ்சைக் கவர்ந்தது. இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் அந்தக் கதவின் வழியாக வெளியே தெரியும் காட்சி, இரண்டு நாய்கள் எதையோ நோக்கி ஓடுகின்றன… அதைத் தொடர்ந்து சென்றால் அவன் கடைசியாக வைத்த கரும்புள்ளி இருக்கும். அந்தப் புள்ளியை சில மீட்டர் தூரத்திலிருந்து பார்த்தால் தெரியாது. மாலை நேரத்தைக் குறிக்கும் ரம்யமான ஒரு மஞ்சள் பச்சை பின் ஏதேதோ வண்ண அடுக்குகளால் ஆன அந்தக் காட்சியில் இருக்கும் கரும்புள்ளியைக் காண நெருங்கி வர வேண்டும். அந்தக் கரும்புள்ளி ஒட்டு மொத்த ஓவியத்தின் இதயத்தைப் போல் துடித்துக் கொண்டிருந்தது.
அந்த ஓவியத்தை அதே ஊரில் இருந்த ஒரு செல்வந்தன் வாங்கிச் சென்றான். ஓவியனின் வீட்டிற்குள் நுழைந்து அந்த ஓவியத்தைப் பார்த்தவுடன் அது இருக்க வேண்டிய இடம் இதுவல்ல என்று செல்வந்தன் சொல்லிக் கொண்டான். பேரம் பேசி அந்த ஓவியத்திற்கான தொகையைக் கொடுத்து விட்டு அந்த ஓவியத்தின் பெயர் என்ன என்று வினவினான். ஓவியன் ஒரு மந்திரப் புன்னகையுடன், “செல்வந்தனும் லாசரும்” என்றான். அந்த ஓவியத்திலோ அந்த இரு நபர்களும் இல்லை என்பதைச் செல்வந்தன் உறுதிப்படுத்திக் கொண்டான் பின் சந்தேகமாக ஓவியனைப் பார்த்தான். ஓவியத்தின் பிரம்மாண்டமும் நுணுக்கமும் செல்வந்தனை ஈர்த்ததேயன்றி ஓவியன் சொல்வது போலத் தனக்கு அந்த ஓவியத்தை அணுகத் தெரியவில்லை என்று அவனுக்குக் குறுகுறுத்தது. பணியாளர்கள் நால்வரின் உதவியுடன் அந்த ஓவியம் பத்திரமாகச் செல்வந்தனின் வீட்டை வந்தடைந்தது.
பெரிய நாற்காலி ஒன்றில் ஓவியத்திற்கு எதிரே அமர்ந்து விஸ்கி அருந்திக் கொண்டிருந்தான் செல்வந்தன். ஓவியன் சொன்ன ‘செல்வந்தனும் லாசரும்’ அவன் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. எங்கே அந்த இருவரும் என்று எப்படி எப்படியோ பார்த்துக் கொண்டிருந்தான். போதையில் கண்கள் சிவந்து போனது. வேகமாக அலமாரி ஒன்றிலிருந்து தேடி அதிலிருந்த பைபிளை திறந்து மிக நீண்ட தேடுதலுக்குப் பிறகு இயேசு கூறிய ‘செல்வந்தனும் லாசரும்’ என்ற உவமையைப் படித்தான். சின்ன வயதிலிருந்து அந்தக் கதையை அவன் பல்வேறு நிகழ்வுகளில் வாசிக்கக் கேட்டிருக்கிறான். ஆனால் இப்போது, அந்தக் கதையை வாசித்தாலாவது அதிலிருந்து அந்த இருவரும் இந்த ஓவியத்தில் வந்து தங்க மாட்டார்களா என்பதனாலே வாசித்தான். வழக்கம்போல் கதையில் வரும் செல்வந்தன் ஏழையான லாசரைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறான். இருவரும் இறக்கிறார்கள். செல்வந்தன் நரகத்திற்கும் லாசர் சொர்க்கத்திற்கும் போகிறார்கள். அவ்வளவுதான். இப்போது மறுபடியும் அந்த ஓவியத்தைப் பார்த்தான் இப்போதும் அவனுக்கு அங்குச் செல்வந்தனையோ லாசரையோ பார்க்க முடியவில்லை. போதையில் அப்படியே உறங்கச் சென்று விட்டான். கனவில் ஆப்ரஹாம் மடியில் லாசரும் எரியும் நெருப்பில் செல்வந்தனையும் இவன் பார்க்கிறான். “ஆப்ரஹாமே உமக்குச் சித்தமானால் லாசரை தன் விரலை நனைத்து என் நாவை குளிர வைக்கச் சொல்லும். பற்றி எரியும் நெருப்பின் அனல் என்னால் தாங்க முடியவில்லை” என்று செல்வந்தன் கதறுவது இவனுக்குக் கேட்கிறது. ஆப்ரஹாமும் லாசரும் சிரித்துக் கொண்டு இவன் பக்கமாகத் திரும்புகிறார்கள். இவனுக்குப் பதற்றமாக இருக்கிறது. அவர்கள் பார்வையிலிருந்து ஒரு தீப்பொறி இவனை நோக்கி வந்து இவனைச் சுட்டெரிக்கிறது. பதறிப் போய்க் கத்திக் கொண்டு தூக்கத்திலிருந்து எழுகிறான். ஓவியத்தின் நினைவு வருகிறது. திடீரென எல்லாம் அவனுக்குத் தெளிவாகிறது. வேகமாக ஓவியத்தை நோக்கி ஓடுகிறான். அமைதியாக அந்த ஓவியம் ஒரு மஞ்சள் நிற மின்விளக்குடன் இருக்கிறது. இப்போது வெவ்வேறு கோணத்திலிருந்து அந்த ஓவியத்தைப் பார்த்தான். இன்னும் தேடிக் கொண்டுதானிருந்தான். ஆனால், இம்முறை லாசரை மட்டும் தேடினான். அந்த ஓவியத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும்தான் செல்வந்தன். அவர்கள் லாசரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ரகசியம் அவனுக்கு இப்போது புரியத் தொடங்கியதால் லாசரை தேடிக் கொண்டிருந்தான்.
அன்று இரவு முழுவதும் தேடியும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்கள் கருவளையமிட்டுப் பித்தேறிக் கிடந்தான். அந்த ஓவியனை அழைத்து “எங்கே இதில் லாசர்?” எனக் கேட்டான். ஆனால் எதுவும் சொல்லாமல் அதே மந்திர புன்னகையுடன் அவன் சென்று விட்டான். கத்தி எடுத்துக்கொண்டு அந்த ஓவியத்தின் முன் வந்தான். கிழித்தெறிந்து விடலாம் என்ற வெறியை எப்படியோ சமாளித்துக் கொண்டு, ஓவியத்தைத் தாங்கியிருந்த மரச்சட்டத்தில், “எங்கே லாசர்?” என்று எழுதினான். பிறகு மீண்டுமாக பைபிளைத் திறந்து அதே கதையைக் கவனமுடன் படித்தான். இப்போது அதில் அந்தச் செல்வந்தன் செய்த தவறு அவனுக்குப் புரிந்தது. தன் வீட்டின் முன் லாசர் இருந்தும் அவனைக் கண்டுகொள்ளாமல் உல்லாசமாக இருந்ததுதான் அவனது பிழை. அவனால் அன்றும் தூங்க முடியவில்லை. அடுத்தநாள் ஒரு பெரும் தொகையுடன் ஓவியனின் வீட்டிற்குச் சென்றான். கூடவே நிறைய சாப்பிடும் பொருட்களும் ஓவியனுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் எடுத்துச் சென்றான். இந்த முறை செல்வந்தன் எதுவும் பேசவில்லை ஓவியனும் பேசவில்லை எல்லாவற்றையும் அவனிடம் வைத்து விட்டு சற்று நேரம் அங்கு அமர்ந்திருந்துவிட்டு வீட்டுக்கு வந்தான். செல்வந்தனின் இதயம் இதமாய்த் துடித்துக் கொண்டிருந்தது. அது துடிப்பது அவன் காதுக்குக் கேட்டது. இப்போது மெதுவாக அந்த ஓவியத்தை நோக்கிச் சென்றான். செல்லச் செல்ல இதயத் துடிப்பு அதிகமானது. இன்னும் நெருங்கி ஓவியத்திலிருந்த கதவின் வழியாக வெளியே பார்த்தபோது அந்தக் கரும்புள்ளி அவன் கண்களில் தெரிந்தது. இவன் இதயத் துடிப்புக்கு ஏற்றார் போல் அதுவும் துடித்துக் கொண்டிருந்தது. இவன் கண்களில் நீர் கசியத் துவங்கி பெரும் வெள்ளமாக மாறியது. கத்தி அழத் தொடங்கினான். மூச்சிறைக்க அழுதான். கீழே உருண்டு அழுதான். அந்த வீட்டிலிருந்தவர்கள் ஓடி வந்து இவனை நெருங்கிய போது யாரையும் நெருங்க விடாமல் அடிபட்ட ஒரு மிருகத்தைப் போல் கதறினான். பின் அவனே அமைதியாகி மீண்டும் அந்தப் புள்ளியைப் பார்த்தான். வெற்றிக் களிப்பில், “உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன் லாசர்” என்று தன்னை மறந்து சிரித்தான்.
ஆனால், பிரச்சனைகள் இதன் பிறகுதான் ஆரம்பித்தன. ஒவ்வொருமுறை இவன் ஓவியத்தைக் கடக்கும் போதும் புள்ளியாக இருந்த லாசர் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தான். லாசரை எப்படியாவது கூட்டி வந்து நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற பதற்றம் இவனுக்குள் கடத்தப்பட்டது. அந்த ஊரில் இருந்த பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆரம்பித்தான். ஆனால் எவ்வளவு செய்தாலும் தூரத்தில் புள்ளியாகத் தெரிந்த லாசரை வீட்டிற்கு அவனால் அழைத்து வர முடியவில்லை. இதனால் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் உருவானது. இவனுடன் வியாபாரம் செய்த செல்வந்தர்கள் இவனை விட்டு விலகினார்கள். ஆனாலும் இவனால் தானம் தருமம் செய்வதை நிறுத்த முடியவில்லை. இப்படியாக நோயுற்று அந்தச் செல்வந்தன் இறந்து போனான். அந்த ஓவியனும் இறந்து போனான். ஆனால் அந்த ஓவியம் பலரிடம் கை மாறியது. மரச்சட்டத்தில் எழுதியிருந்த “எங்கே லாசர்?” என்ற கேள்வியே ஓவியத்தின் பெயராக நிலைத்தது. சொல்லி வைத்தாற்போல் இந்த ஓவியம் சென்ற வீடுகளில் எல்லாம் தானம் தருமம் செய்து அவர்கள் புகழ் பெற்றார்கள். ஆனால், தரித்திரியத்தில் அவர்கள் வாழ்வு முடிந்தது. பின் எப்படியோ ஓவியம் அந்த நகரத்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்த ஓவியத்தைப் பார்வையிட்டவர்களுக்கும் லாசரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற பதற்றம் பீடித்தது. அந்நகரில் நடந்த கலவரம் ஒன்றில் அருங்காட்சியகம் தாக்கப்பட்டுக் கொள்ளையிடப்பட்டது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்த ஓவியம் என்னவானது என்று யாருக்கும் தெரியவில்லை. பெயர் தெரியாத அந்த ஓவியன் வராலாற்றில் இருந்து மறக்கப்பட்டது போலவே அந்த ஓவியமும் மறைந்துபோனது.
Nice detailing brother