இணைய இதழ் 107கவிதைகள்

ப.மதியழகன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

எனக்கு என்னைக் கொடுத்துவிடு

1

பிறகென்றாவது ஒருநாள்
என்னைப் பற்றி நினைத்துப் பார்ப்பாய்
வாக்குறுதிகள் அப்படியேதான்
இருக்கின்றன
செல்லரித்துப் போன
காகிதங்கள் போல
வார்த்தைகளுக்கும் மௌனத்திற்குமான
இடைவெளியை நிரப்பிவிடுகிறது இந்த மது
ஒவ்வொரு நாளும் வாழ்க்கை நதியில்
பலவந்தமாகப் பிடித்துத் தள்ளப்படுகிறோம்
இரவின் மங்கிய வெளிச்சத்தில்
நட்சத்திரங்களும் மின்மினியும்
ஒன்றுபோலவே தெரிகின்றன
எனது பிடிமானங்கள் வலுவற்றவை
எப்போது வேண்டுமானாலும் நழுவலாம்
சந்தேகங்கள் கூட சாட்சி சொல்கின்றன
அன்பை முறிக்கும் விதமாக
நிரந்தரமின்மை என்னைத் தாக்கும்போது
ஆதியின் சுவடுகளை என்னுள் காண்கிறேன்
மிகுந்த குழப்பங்களுக்கு மத்தியில்தான்
எனது ஒவ்வொரு முடிவுகளையும் எடுக்கிறேன்
நிகழ்வுகளின் எச்சமாக என்னிடத்தில்
எஞ்சியிருப்பது உன் ஞாபகம் மட்டும்தான்
தயக்கத்துடன் உனது கண்களை
நோக்குகிறேன்
அதில் சிறிதும் கருணை எஞ்சியிருக்கவில்லை
மழை எப்போதும் பெய்வதுதான்
இன்று ஏனோ என்னை நனைக்கவில்லை
எனது விடியல்கள் துயரத்துடன்
தொடங்கி துயரத்துடன் முடிகிறது
எதிரெதிர் திசையில் பயணிக்கிறோம்
சொல்லிக் கொள்ள ஆயிரம்
உறவுகள் இருந்தும்
அனாதைகளாய்….

2

இந்த இரவின் நிழல்கள்
இருட்டை இன்னும்
கறுப்பாக்குகின்றன
உறவுகள் எப்பொழுதும்
நிச்சயப்படுத்திக் கொள்ள
முடியாததாக இருக்கின்றன
இந்த நாடகம்
என்றோ எழுதப்பட்ட ஒன்று
பிரிவு ஒரு இடைவெளிதான்
அது நிரந்தரமின்மையை
வெட்ட வெளிச்சமாக்குகிறது
உனக்கு வேண்டுமானால்
இது சாதாரண பாசிமணியாக
இருக்கலாம்
எனக்கு நினைவுகளின் பொக்கிஷம்
உணர்ச்சிகள் அறிவினை
ஊமையாக்கிவிடுகின்றன
ஒரு அப்பமோ பிரார்த்தனையோ
என்னை பரிசுத்தமாக்காது
ஒவ்வொரு முறையும்
பூதத்திடம் சொல்கிறேன்
என்னைத் தின்றுவிடு என்று
ஒரு காதல் எனக்குள்
எல்லாவற்றையும் கொண்டுவந்துவிடுகிறது
எனது தரப்பை நியாயப்படுத்த
வேண்டிய நிலையில்
நான் இருக்கிறேன்
உனது கண்ணீர்த்துளி
என் துயரங்கள் அனைத்தையும்
கரைத்துவிடும்
தான் படைத்த உலகில்
சாத்தானின் பாத்திரத்தையும்
கடவுளே ஏற்றுக் கொண்டுவிட்டார்
நிகழ்வின் சூட்சுமங்களைப் பற்றிய
அறிவு புத்திக்கு புலப்படாதது
என்னை சித்ரவதை செய்து கொள்ளுங்கள்
ஆனால் காற்றில் ஈரம் பரவிக் கொண்டிருக்கும்
ஒரு மழைநாளில் தான்
என்னைக் கொலை செய்ய வேண்டும்.

3
ஒரு ரோஜாப்பூவும் சிவப்பு
நிறத்தில் இல்லை
நான் பார்த்துக் கொண்டிருப்பதை
பொருட்படுத்தவில்லை
அந்த மேகங்கள்
சிறு புல்லுக்குக் கூட பிரபஞ்சத்தில்
பெரும் பங்களிப்பு இருக்கின்றது
பார்வை தீண்டியதும் பற்றிக் கொள்கிறது
உள்ளே ஒரு நெருப்பு
எனது தாகம் தண்ணீரால் தீராதது
எனது கிளைகளுக்குத் தென்படாததை
வேர்கள் துழாவுகிறது
ஒரு ஆயுள்காலத்தில் வாழ்க்கையை
யாரும் முழுமையாக வாழ்ந்துவிட
முடியாதுதான்
ஆச்சரியமாகத்தான் உள்ளது
தாமரை தடாகத்தில் வெளிர்நீல வானம்
என்னைத் தவிர எனக்கு யார் இருக்கிறார்கள்
நான் சிரித்தால் சிரிக்கவும்
அழுதால் அழவும்
எனது காயங்களுக்கு மருந்திட
கடவுள் தேவதைகளை
அனுப்பி வைப்பாரா
இல்லாது போவதில் இருக்கும் சுகம்
இருப்பதில் இல்லை
இவ்வளவு தான் அள்ள முடிந்தது
எனது கைகளால் கடலை
கைவிடப்பட்டதாக உணரும் போதெல்லாம்
எனக்கு ஆறுதல் தேவையாய் இருக்கிறது
எனக்கானதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு
எனக்கு அமைந்ததே இல்லை
எனது வெற்றிகளை கொண்டாடவும்
தோல்வியின் போது சாய்ந்து கொள்ளவும்
எனக்கொரு தோள் வேண்டும்
என்னைத் திறந்து காட்ட
எனக்கொரு தேவதை தேவைப்படுகிறாள்
ஆகச்சிறந்த பரிசாக என்னால் எதைக்
கொடுக்க முடியும் அவளுக்கு
எனது பயணத்தை முடிவுசெய்வதென்னவோ
பாதைகள் தான்
தேடலில் எல்லாவற்றையும்
தொலைத்துவிடுகிறேன் நான்
எனது கனவுகளும், ஏக்கங்களும் உன் முன்பு
மண்டியிட்டு நிற்கின்றன
அந்த ஒற்றை வார்த்தைக்காக…

*

mathi2134@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button