ஆயிரத்து ஒண்ணாவது காதல்
இந்த இரவு விடியாமலே நீண்டுவிட்டால்
இவன் இப்படியே என்னை
அணைத்துக் கொண்டு
என் மார்பில் உமிழ் சிந்தி நீந்துவான்
ஏதும் துளைக்கப்படாத தூண்டிலில்
ஆயிரம் காதல் மாட்டும்
பாலைவன உடலில்
தரையிறங்கும் பனி
உடற்சூடு தாளாது
நீராவியாகிக் கரைந்துபோன கதையை
சுடச்சுட மெத்தைக் காஃபி பருகும் சமயத்தில்
வாசிக்க இவனிடம் கொடுப்பேன்
அதைக் கவிதையென
இவன் ஒப்புக்கொண்டால்
மிச்சத்தையும் கொடுத்துவிடுவேன்
இரவு முழுக்க என் கைகளால்
சமைத்த ஏதும் துளைக்கப்படாத
தூண்டிலில் மாட்டிய ஆயிரம் காதலில்
மேலே என் காதலையும் லேசாகத் தூவி
****
அந்திமத்தில் எரிந்த வயிறு
அவன் இந்தத் திசையில்தான் பயணப்பட்டிருப்பான்
அவனது கால்தட மண்ணைக் கொத்தி
தாகம் தணிக்கின்றன பறவைகள்
போயொழிந்தானென எரிச்சலடைந்தவர்களின்
போலிக் கண்ணீரில் இமாலய நீர்வீழ்ச்சி
அவன் பாக்கி வைத்திருக்கும் கடன்களை
யாரடைப்பாரென்கிற பனிப்போரில்
ஜெயித்தார் இன்னும் யாருமில்லை
அவனது அந்திமத்தில் எரிந்த வயிறுக்கு
முப்பது நாள் நெய் விளக்கேற்றினர்
எறும்பு தின்றது போகச்
செம்பாதியில் அணைந்தது மகாஜோதி.
****
நடந்து கூடடைந்தது கருங்காக்கை
ஒற்றைக்கால் காக்கையிடம்
என் நாவை அடமானம் வைத்து
அதன் அலகை ஒரு பகலுக்கு
இரவல் கேட்டேன்
குஞ்சுகளுக்கு ஊட்ட
அதன் சிறகை அடகு வைத்து
என் கைகளையே கேட்டது
பேசியபடி இருவருக்கும்
வேண்டியது கிடைத்தது
நான் பறந்து கொண்டிருந்தபோது
இன்னொரு காலைத் தைத்துக்கொண்டு
நடந்து கூடடைந்தது கருங்காக்கை.
****
மெய்பாடும் மனசு
மண்ணைக் கொஞ்சம்
அலைநுரையில் குழைத்து
மகாசமுத்திரத்தைக் குயவும்
கைப்பக்குவம் என்
காலுக்கடியில் கிடக்கும்
தண்டசக்கரத்திற்கு உண்டு
அதற்காகவெல்லாம் யாரும்
என்னிடம் வந்து ஒரு
பானையைக் கூட
வடிக்கச் சொல்வதில்லை
இதுகாறும் குயந்தடுக்கிய
அதிசயங்களைத் தூக்கி
கடலில் கொட்டினேன்
கடல் வற்றிய பிறகு
அவை தொல்பாத்திரம் ஆனது
இவ்வாறான மருட்கையால்
வீணாய்ப் போனது
மெய்பாடும் என் மனசு.
*****