பானையைத் தாண்டிய மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வியல் – பிரேம் முருகன்
கட்டுரை | வாசகசாலை
வருடந்தோறும் பொங்கல் தொகுப்பில் ‘மண் பானை’ வழங்கி அதன் மூலம், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஊக்கமளித்தும் பொருளீட்டவும் வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் போராட்டங்களும் குறித்த செய்திகள் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. மறுபுறம், மண்பாண்டங்களை வைத்து தொழில்நுட்ப ரீதியாக தொல்லியல் ஆய்வுகளும் வரலாற்றுத் தேடல்களும் இந்த நூற்றாண்டில் கோலோச்சி உள்ளது என்றால் மிகையாகாது. பானை ஓட்டுக் கீறல்களை வைத்து வைகை நதிக்கரை துவங்கி சிந்து நதிக்கரை வரை வாழ்ந்தவர்கள் ‘ஒரு இனத்தவர்’ என்பதை வரலாற்றுச் சான்றுடன் ‘பானை வழித்தடம்’ என்ற ஆய்வறிக்கையினை சிந்துவெளி நாகரிக ஆய்வாளரும் முன்னாள் குடிமைப் பணி ஆட்சியாளருமான திரு பாலகிருஷ்ணன் இ.ஆ.ப வெளியிட்டார்.
எந்த தொழில்நுட்பம் மண் சார்ந்த பொருட்களை முதன்மை படுத்தியுள்ளதோ, அதே தொழில்நுட்பம்தான் இன்றைய மண்பாண்ட கலைகளையும் தொழிலாளர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏரியில் இருந்து களிமண் எடுக்கும் பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும், பத்து வருடத்திற்கு முன் வியாபாரமான களிமண் பொருட்கள் இப்போது புழக்கத்தில்கூட இல்லை என்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும் பொருட்களை பற்றியது தான் இந்த தொகுப்பு. அழிந்து வரும் கலையில் ஒடுங்கி விடும் பொருளாதாரம்..!
ஒரு தொழில், தேர்தல், திருவிழா, பண்டிகை, விசேசம் என எந்த நிகழ்ச்சி என்றாலும் பொருளாதாரத்தை மறைமுகமாக பலருக்கு ஊக்குவிக்கும்.
தீபாவளிப் பண்டிகைகளில் அனைவரும் நிலப்புரஸ் (flower pot) என்ற அலங்காரச் சொல்லாடல்களில் சொல்லும் இரவு வெடி ஒரு காலத்தில் மண்ணால் செய்யப்பட்ட அடைப்பான்களில் மருந்தினை நிரப்பு வைத்து, அதனை பயன்படுத்துவார்கள். அதற்குப் பெயர் ‘வானக் குழல்’ (சேலம் பகுதியில் பயன்படுத்தும் சொல்லாடல்). குழந்தைகள் விளையாடும் சொப்பு சாமான்களில் இருக்கும் பொருள் போல சின்ன சொம்பு மாதிரியான உருவம், மேற்பகுதியில் நெருப்பு வைக்க ஒரு சிறு துளை இருக்கும். இந்த மண்ணால் செய்யப்பட்ட ‘வானக் குழல்’ மறுசுழற்சி முறையில் பயன்படுத்தக் கூடியது. காகித அட்டையில் நிரப்பிய மருந்துகள் அளவு வாரியாக விற்பதும் வாங்குவதுமே பெரும் வணிகம் ஆகிவிட்ட நிலையில், பயன்பாட்டிற்குப் பிறகு மண்ணில் நச்சுப்போகி மறுசுழற்சி செய்யமுடியாமல் மண்ணிற்கு பாரமாகத்தான் இருக்க முடியும். சிவகாசி பட்டாசு தொழிற்சாலை ஊழியர்களுக்காக கருணை காட்டும் சமூக வலைதளம், தமிழகமெங்கும் இருக்கும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வருத்தம் கூட காட்டுவதில்லை.
அனைத்து கிராமங்களிலும் மாரியம்மன் கோவில் இருப்பது என்பது இன்றியமையாதது. அத்துடன் ஊரின் சிறப்புக்காக நாட்டார் தெய்வ வழிபாடுடன் அமைந்திருக்கும் காவல் தெய்வ, குல தெய்வ கோவில்கள் இருக்கும். மேல் குறிப்பிட்ட கோவில்களின் திருவிழாக்களில், களிமண் சார்ந்த பொருட்களின் உபயோகம் என்பது இன்றியமையாததாக இருக்கும். மூடநம்பிக்கைகள் என ஒருபுறம் கூறினாலும், அந்தப் பகுதியின் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வியலில் அந்த இரண்டு அல்லது மூன்று மாத பண்டிகைக்காலத்தில் இருக்கும். களிமண்ணால் செய்யப்பட்ட நாய், யானை, குதிரை, மாடு, ஆண், பெண் உருவ பொம்மைகள், பூக்களால் அலங்கரிக்கும் பூங்கரகம், நெருப்பை மூட்டி வரும் அக்னி கரகம் போன்றவை களிமண்ணால் செய்யப்பட்டு நேர்த்திக்கடனாக செலுத்தப்படும். பல மாரியம்மன் கோவில்களில், சாமியை பார்த்த மாதிரி இருக்கும் இரட்டைக் குதிரைகள் என்பது ஊர் ஏரிகளில் களிமண் எடுத்து, உருவம் செய்து, சூளை வைத்து, கோவில்களில் வைத்து பராமரிக்கப்படும் வழக்கம் உடைய பெரும் குதிரைகளை ‘புரவி’ என்றும், நிகழ்வினை ‘புரவி எடுத்தல்’ என்ற பெயரும் உண்டு. ஆனால் இன்றைய காலத்தில் சூளையில் சுட்டு வைக்கும் புரவிகள் எல்லாம், சிமெண்ட் புரவிகளாக மாற்றம் பெற்று ஆடம்பரத்தின் அடையாளமாக அதில் பூசப்படும் வண்ண வண்ண பெயிண்ட்கள் இருக்கிறது. சமீபத்தில் சிவகங்கையில் நடந்த விழாவின் தொகுப்பை முகநூலில் மட்டும் பார்த்து மனதை தேற்றிக் கொண்டேன். கோவிலுக்கான பிரதான குதிரைகளே ஆடம்பரமாக மாறும் தருவாயில், மீதம் அதைச் சுற்றி விளங்கும் மண் பொருட்களின் விற்பனை கேள்விக்குறியாக உள்ளது.
தொழில்நுட்ப வளர்சியில் விரைவாக பணி செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் அனைத்து துறைகளிலும் புத்தம்புது முன்னெடுப்புகள், நாளுக்கு நாள் புதுமையான விசயங்கள் வந்துகொண்டே இருக்கிறது. அந்த வகையில் பொற்கொல்லர் பட்டறையில் பிரதானமாக விளங்கும் அடுப்புகள், இன்றைய காலத்தில் கேஸ் ப்ளேம் (Gas Flame) வைத்து செய்து முடித்து விடுகின்றனர். ‘ஆசாரி அடுப்பு’ எனச்சொல்லும் அடுப்புகளில் மணலை நிறைத்து, அதன் மேல் தவிடு கொட்டி நெருப்பு மூட்டி உலோகங்களை உருக்கி ஆபரணங்களை வடிவமைப்பார்கள். அவர்களுக்கு ஏதுவாகவும் எளிமையானதாகவும் கேஸ் அடுப்புகள் இருந்தாலும் இந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மருவிச் சென்றது மண்பாண்ட பொருட்களில் ஒன்றான ‘ஆசாரி அடுப்பு’ அல்லது ‘பொற்கொல்லர் அடுப்பு’ என்ற பொருள்.
நான் முன்னர் கூறியது போல், திருவிழாக்கள் ஒரு பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு விளங்கும். அதுபோல ஒன்றின் மீதான தடை என்பதும் மறைமுக பொருளாதாரத்திற்கு பாதிப்பும் தரக்கூடியது. உதாரணமாக, ஜல்லிக்கட்டு தடை என்பது மாடுகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் என்பதைத் தாண்டி, அங்கு வழங்கப்படும் பரிசுகளின் கடைகாரர்கள், மாட்டிற்கு கயிறு விற்பவர்கள், அந்த குறிப்பிட்ட ஊரில் கடைகள் வைத்து வணிகம் செய்பவர்கள் என பலரது பொருளாதாரத் தாக்கத்தை வழங்கக்கூடிய நிகழ்வு. பனைமரத்தில் இருந்து இறக்கப்படும் பானமான கள்ளிற்கு தடை விதித்ததன் விளைவாக அந்த கள் மற்றும் தெழுவு சேகரிக்க கட்டப்படும் முட்டி என்கிற பானைகள் செய்வது என்பது விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையில் தான் உள்ளனர். ஆகவே கள் தடை என்பது பனை மரம் ஏறுபவர்களுக்கு எவ்வளவு பொருளாதார பாதிப்போ அதில் ஒரு பங்கு, மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் உண்டு.
அன்றாடம் பயன்படுத்தும் விளக்குகள், களிமண்ணால் வினைந்த அகல் விளக்குகளில் இருந்து பித்தளை, வெள்ளி, பீங்கான் விளக்குகளாக மாறிவிட்டது. அதுபோல, சிமெண்ட், பிளாஸ்டிக், கண்ணாடி, பீங்கான் என மாற்றம் பெற்ற பூந்தொட்டிகள் நர்சரி வாசல்களிலும் விற்பனை அங்காடிகளிலும் வண்ணமயமாக இருக்கின்றன. சில்லறை வாணிபம், விற்பனைகள் பெருகிவிட்ட காலகட்டத்தில், நிலத்தில் விளைந்த பொருட்களை பாதுகாப்பதற்கும், தானியங்களை நிரப்பி வைக்கும் ‘குதிர்’ பழக்கவழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. கட்டுத்தரைகளில் கால்நடைகளுக்கு உணவு வைக்கப் பயன்படும் ‘மண் தாளி’ சிமெண்ட் தாளிகளாக உருவம் பெற்றுவிட்டது. நகரமயமாக்கலின் ஒரு பகுதியில், நகரத்தில் இருந்து கிராமத்திற்கு வந்த பல பழக்கங்களில் நவீனத்துவம் கலந்துவிட்டதை பண்டிகைகள் துவங்கி கல்யாணம், காதுகுத்து போன்ற தனிப்பட்ட தேவைகள் வரை உணர முடிகிறது. அந்த வகையில் திருமணங்களில் பயன்படுத்தப்படும் மண்களங்கள் எல்லாம் தவிர்த்துவிட்டு அரங்கேறும் திருமணங்கள் தான் அதுகமாக இருக்கின்றது,.
கடந்த காலங்களில் நடக்கும் பொங்கல் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக விளங்கும், பட்டிமன்றங்களில் பெரும்பாலும் ‘அன்றைய பொங்கல்..? இன்றைய பொங்கல்..?’ என்ற தலைப்பு நிச்சயம் இருக்கின்றது. அதில் பானை வைத்து வரும் வாதங்களும், குக்கர் பொங்கல் என்ற விவாதமும் கட்டாயம் நிறைந்த பட்டிமன்றங்கள்தான் அதிகம். இவையெல்லாம் மேடைக்காக இருப்பதுதானே தவிர, நிஜத்தில் கேள்விக்குறியானதுதான். அரசின் பார்வையில், பொங்கல் தொகுப்பில் பானை தருவது என்பது Macro level ல் சேதாரங்களை கணக்கிட்டு பொருளாதார ரீதியாக ஏற்படும் நஷ்டங்களையும் பாதிப்புகளையும் கணக்கிட வேண்டிய கட்டாயம் உள்ளது. எடுத்துக்காட்டிற்கு 1000 பானைகள் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்றால், அரசாங்கம் தோராயமாக 1050 பானைகளை வாங்க வேண்டிய தேவை ஏற்படும். அதிகமாக வாங்கப்படும் 50 பானைகள், பெருமளவில் பார்க்கும்போது லட்சங்களில் இருக்கலாம். அதன் மூலம் ஏற்படும் பொருளாதார நஷ்டத்தை அரசு பரிசீக்கத்தான் செய்யும். பரிசீலனையும் இறுதியில் மண்பாண்ட தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் வழிவகை செய்யும் என நம்புகிறோம். முதற்கட்டமாக அரசாங்கமும், நிறுவனங்கள் நடத்தும் சமத்துவ பொங்கல்களில் மண்பானைகளில் மட்டுமே பொங்கல் வைக்கும் நடைமுறையை அமல்படுத்துவது குறைந்தபட்ச மண்பாண்ட தொழிலாளர் நலனில் பங்கெடுக்கும் செயலாக இருக்கக் கூடும்.
அரசின் தலையீடுகள் எல்லாம் தாண்டி, தனிமனித விருப்புகள் மற்றும் கடமையின் பேரில்தான் பொங்கல் பானை விநியோகமும் விற்பனையும் நடைபெறும். ஒவ்வொரு மக்களுக்கும் தங்களது வீடுகளில் மண்பானையில் பொங்கல் வைக்க வேண்டும் என்ற எண்ணம் உளமாற உதய வேண்டும். அதுமட்டுமல்லாது, அதன்பின் ஒரு தொழிலாளியின் பொங்கல் சிறப்புற கொண்டாட வழிவகுக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். பித்தளை, செம்பு, சில்வர், வெங்கல பாத்திரங்களில் ஊர் திருவிழா போன்ற நாட்களில் வைத்துக் கொள்ளலாம். புதுமணத் தம்பதிகளுக்கு அளிக்கு ‘பொங்கல் சீர்’ துவங்கி பெற்றோர்கள் மண்பானையை அளிப்பதில் ஆர்வம் காட்ட முயற்சிக்க வேண்டும்.
பழையன இப்படியெல்லாம் மாறும் சூழலில் பழைமையை புதுமையாக்கும் முயற்சியாக பல பயிற்சிகள் அரசாங்கமும் தனியார் நிறுவங்களும் “களிமண் மூலம் கைவினைப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சியினை வழங்குகின்றனர்”. பொதுமக்கள் மத்தியிலும், களிமண்ணால் செய்யப்பட்ட ‘டெரக்கோட்டா அணிகலன்’ கலையின் உருவம் என்றும் அது சமூகத்தின் அடையாளம் இல்லை என்ற புரிதலும் வரத் துவங்கிவிட்டது. அதன் வெளிப்பாடாக டெரக்கோட்டா அணிகலங்கள், சமையல் பாத்திரங்கள், அலங்காரத் தோரணங்கள், பொம்மைகள் என விற்பனைப் பொருட்களும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் புதுமையின் வெளிப்பாடும் கூட.
இதற்கு முன் சொன்ன களிமண் பொருட்கள் எல்லாம் புழக்கத்தில் இருந்தாலும் சமகாலத்தில் அருகிவரும் பொருட்கள். புதுமைகளுக்கு நகரத்தில் வரவேற்பு இருந்தாலும் ஊரக பகுதிகளில் இருப்பதில்லை. பெரும்பாலும் மண்பாண்டத் தொழிலாளர்கள், ஊரக பகுதிகளில் தான் வாழ்கின்றனர். மேலும் மண்பாண்டத் தொழில் என்பது குறிப்பிட்ட ஊர்களில் தயாராகும் பொருட்களை, வணிகத்திற்காக பல நகரங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை அங்காடிகளில் வைத்துவிடுகின்றனர்.
“களம் செய்யும் கோவே..!” என்றார் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்கள். ஆனால் வரலாற்று ரீதியாக மண்பாண்ட தொழிலாளர் அரசனாக இருந்து, அன்றாட கால வாழ்வியலிலும் தொழில்முறையிலும் நலிவடைந்து கொண்டே உள்ளனர். அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் தரும் வகையில் தொழிற்பயிற்சிகள் டெரகோட்டா அணிகலன்களுக்கு தருவதைப் போல், இந்த மண் களங்களுக்கு மதிப்புக்கூட்டல் செய்து அணிகலன்கள் மற்றும் மண் களங்களுடன் சிறப்புற தங்கள் வாழ்வாதாரம் அமைய வழிவகை செய்வது தொழில்நுட்பத்தில் பழங்கும் அனைவரின் கடமையாகும். திருவிழா, தீபாவளி, பொங்கல் போன்ற அனைத்து விசேஷங்களிலும் மண்பாண்ட தொழிலாளியின் பங்கு விலகிச்செல்வதைத் தவிர்த்து, அவர்களின் கலையை வாழ வைக்க இருக்கும் வழிகளைக் கண்டறிந்து செவ்வனே வாழச் செய்வது இந்த சமுதாயத்தின் கடமையாகும்.
*******